மூலக்கதை: ரெமி ங்யாமிஜ் ( நமீபிய எழுத்தாளர்)
தமிழாக்கம்: லதா அருணாச்சலம்
என் பாட்டி, டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பான The Little Mermaid படத்தின் கதாபாத்திரமான உருஸுலாவை எப்போதும் நினைவுறுத்துவார். எனது மகன்கள் அதன் வீடியோ கேஸட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்- கடற் கன்னி ஏரியலின் குரலையும் குழந்தைத் தன்மையையும் அபகரிக்கச் சூழ்ச்சி செய்யும் அந்தக் கடல் சூனியக்காரியின் அதிரும் பிருஷ்டங்கள், தொங்கும் ஊதா வண்ணக் கழுத்து மடிப்புகள் மற்றும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவள் ஆடும் ஆட்டம் யாவும் திரையை நிறைத்துக் கொண்டிருந்தன. எனக்கோ அந்தச் சூனியக்காரியின் மாயங்களனைத்தும் ஆண்களின் தொண்டையிலிருந்து அவர்களது குரலையும் அறியாமையையும் பறித்த ஒரு பெண்மணியின் வாஞ்சையான நினைவுகளைக் கிளறின. அவரும், இப்படித்தான் கருப்பு வண்ண ஆடை அணிந்து,பளபளக்கும் சிவப்பு உதட்டுச் சாயம் பூசி, குட்டையான கேசம் வைத்திருப்பார். அவருடைய அதிகார தோரணை கொண்ட உடலமைப்பும், ரத்தச் சிவப்பு உதடுகளும் அடர்வண்ண ஆடையும் காண்போரை அச்சுறுத்தும். ஆனால் முட்டாளாக, அசட்டையானவனாக, படுக்கைக்கு லாயக்கற்றவனாக அவர் கருதக் கூடிய பாவப் பட்ட ஜீவன்களுள் ஒருவராக நீங்கள் இல்லாத பட்சத்தில் மிக அன்பாக நடந்து கொள்வார்.
ஏரியல் தன் குரலை ஒப்படைத்த பின் உருஸுலா வெற்றிக் களிப்பில் கொக்கரிப்பதைத் திரையில் பார்த்தேன்.அந்தக் காட்சி எனது மகன்களுக்கு அச்சமூட்டியது. ஆனால் அந்தச் சித்திரத்தில் தெரியும் பெண் , எட்டுக் குழந்தைகளை எட்டு வெவ்வேறு ஆண்ளுக்குப் பெற்றெடுத்த என் பாட்டியை நினைவுறுத்தியதில் என் உதட்டில் புன்னகை நெளிந்தது.
***
முட்டாள்கள்
அசட்டையானவர்கள்
படுக்கைக்கு லாயக்கற்றவர்கள்
-அந்த முட்டாள் மனிதனைப் பார்
-அசட்டைப் போக்கும் சிறுபிள்ளைத்தனமும் கொண்டவன் -எதற்கும் லாயக்கற்றவன்
-அவன் உண்மையிலேயே படுக்கையைப் பகிர்ந்து கொள்ள லாயக்கற்றவன் – நான் அந்தப் பெண்ணின் இடத்திலிருந்தால் அவனை விட்டு விலகியிருப்பேன்.
என்னுடைய பாட்டி சற்றும் கூச்சமில்லாமல் அப்பட்டமாகப் பேசுபவர்.அவர் நீண்ட காலம் வாழ்ந்தவர்:அந்தப் பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் பெண்களுக்குரிய தகுதியென்று வரையறுத்து வைத்திருக்கும் அடக்கமும் மரியாதையும் அற்ற நாகரிகம் குறைந்த பெண்மணியாக அவர் இருந்தார். மிகவும் முரட்டுப் பெண் என்ற பெயரைப் பெற்றிருந்தார். பல வருடங்கள் கழித்து அவரது குணங்களைப் பற்றி என் மூத்த மகனுக்கு விவரிக்கையில் ,’அம்மா ,அவர் ஒரு சண்டைக்காரச் சிடு சிடு கிழவி’ என்று முடித்து விட்டான்.
நான் அந்த வார்த்தைகளை மனதில் அசை போட்டேன் ‘கண்டிப்பு நிறைந்த அல்லது போராடும் முதிய பெண்மணி.’
அவர் அப்படிப்பட்டவர் அல்ல. தீராத வேலைகளும் முடிக்க வேண்டிய கடமைகளும் குவிந்து கிடக்கும் பண்ணை நிலத்தில் நாங்கள் வசித்த போதும் சூரியனின் வெப்பம் சுட்டுக் கொல்கையில் கனிவுடனும், திட்டமிட்டு வைத்திருக்கும் பணிகளனைத்தையும் மழை வந்து அடித்துக் கொண்டு செல்கையில் மிகவும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராகவும் இருப்பார்.
அவருக்கு ஒரே சட்டம்தான்: என் குழந்தைகள், என் குடும்பம், என் வீடு,என் பண்ணை, என் நிலம்,எனது உடல், எனது மனம்,எனது ஆன்மா, எனது நெறிமுறைகள். இவையனைத்தையும் கடும் தீவிரத்துடன் பற்றிக் கொண்டிருந்ததும், எதற்கும் பணிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து வந்ததும் தான் அவரை கர்வம் கொண்ட முசுடாகக் காட்டியது. தனக்குச் சொந்தமானவற்றிற்கு மற்றவர்கள் இடையூறு விளைவிக்காதவரை அவர்கள் வழிக்கே போக மாட்டார். தான் தாக்கப்பட்டதாக உணர்கையில்தான் அவர் வெகுண்டெழுவார். ஓப்ரா சபையில் பாடும் பாடகியே பொறாமை கொள்ளுமளவு கன்னங்கள் உப்ப தன்னைத் தாக்குபவரை நோக்கிக் கொடும் சாபங்களை வீசுவார்-ஆண்,பெண், குழந்தை, பக்கத்து வீட்டு நாய்,நேர்மையற்ற வணிகன் அல்லது பண்ணையில் திருடும் பணியாள், என யாராக இருந்தாலும் தப்ப முடியாது. ஒருமுறை தன் சாபத்தை அவர் தெளித்து விட்டால் பிரம்படியி ன் வடுக்கள் போல அவமானம் படிந்து விடும். மீண்டும் நம்மை வாழ்க்கைக்குத் திருப்பி விடும் மாயச் சொற்கள் அவரிடம் மட்டுமே உள்ளன. அதைச் செய்வதில் எப்போதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் இருப்பார். பாய்ந்து வந்து , இழுத்து , மேடு பள்ளங்கள் மேவிய தனது மார்பின் குகைகளுக்குள் மூச்சுத் திணறும் வரை நம்மை இறுக அணைத்துக் கொள்வார்.
என் பாட்டிக்கு யாரும் ஆணையிட முடியாது. அவரிடம் ஏதாவது சலுகைக்காகக் கெஞ்சி நிற்கும் போதோ அல்லது அவரது மரியாதைக் கோட்டின் எல்லையைத் தாண்டி வந்து அவரை மிரட்டும் போதோ முட்டாளென்று முத்திரை குத்தி விடுவார். நான் அவரிடம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் அந்த நகரத்தின் மேயருக்கு அதுதான் நடந்தது.
அவர் ஒரு முட்டாள்.
அந்தப் பள்ளத்தாக்கிலிருந்து சுரங்கத் தொழிற்சாலை வரை பரவியிருந்த பாட்டியின் விளைநிலங்களை விற்கச் சொல்லி மூன்று முறை முயற்சி செய்து விட்டார். முதல் முறை வருகை தந்த போது வாசலிலிருந்தே திருப்பி அனுப்பப்பட்டார். இரண்டாம் முறை சமையலறைக் கதவு வரை வந்து விட்டவரை சற்றே கண்ணியத்துடன் விரட்டியடித்தார். அதாவது ஒரே ஒரு வசை மட்டும் அவருக்குக் கிடைத்தது.
அவருடைய இறுதி முயற்சியின் போதுதான் என் பாட்டி அவருடைய மொத்தச் சுற்றத்தாரையும் அழைத்திருந்தார். நகரத்தில் வேலை செய்யும் என் பெரியப்பா சித்தப்பாமார்கள் அனைவரும் தங்கள் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு நீண்ட பயணம் செய்து வந்து சேர்ந்தார்கள். நான் பல ஆண்டுகளாகப் பார்க்காத என் அப்பா கூட இந்தக் குடும்பப் புனிதப் பயணத்தில் இணைந்திருந்தார். பெரியப்பா, சித்தப்பாக்களின் மனைவிகள், எனக்கு நேர்ந்தது போலவே காணாமல் போய் விட்ட அப்பா அல்லது கணவன்மார்கள் என ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட எனது ஒன்று விட்ட உன்பிறப்புகள் அனைவரும் கூட வந்திருந்தனர். அது எனக்கு எப்போதும் ஆர்வமூட்டக்கூடிய விஷயம். பாட்டி மட்டும் அவருடைய மகன்கள் எங்கிருக்கிறார்களென்று மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருப்பார். அவர்களுடைய மனைவிமார்களுக்குக் கூட அந்த விவரங்கள் தெரிந்திருக்காது.
திருமணத்திற்கோ, இறுதி ஊர்வலத்துக்கோ இல்லாத அளவுக்கு அந்தக் கூடுகைக்கு அனைவரும் வர வேண்டிய அவசியமிருந்தது. அதைப் பற்றிய செய்தி எல்லோருக்கும் அனுப்பப்பட்டது.’ நிலத்தைப் பற்றி ஒரு முடிவு செய்ய வேண்டும்’ ஒவ்வொருவரின் பரம்பரைச் சொத்தும் அதில் பாத்தியப்பட்டிருக்க அனைவரும் அந்த அழைப்புக்கு இசைந்து வந்தார்கள்.
பாட்டி வீட்டின் முன்னாலிருந்த திறந்தவெளி சதுக்கத்தில் அனைவரும் அமர்ந்திருந்தோம். அதன் நடுவே ஒரு ராட்சத மரம் ஓங்கி வளர்ந்து நின்றது; அதன் பருத்த அடி ஒரு பக்கமாக வளைந்து சாய்ந்திருக்க, அதன் கிளைகள் அனைவருக்கும் நிழல் தரக் கூடிய அளவுக்கு பரந்து விரிந்திருந்ததன. பாட்டி, பெரியப்பா, சித்தப்பாக்கள், அவர்கள் மனைவிமார்கள் அனைவரும் வீட்டுக்குள்ளிருந்து எடுத்து வந்த மர இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். பாட்டிக்குச் சொந்தமான பிரதேசத்தின் வரைபடத்தோடு மேயர் சப்பணமிட்டு அமர்ந்திருக்க அவர் முன் திறந்த வெளித் திரையரங்குக்கான அமைப்பில் வட்டவடிவ வரிசையில் அங்கு போடப்பட்டிருந்த மரத்துண்டுகளின் மீது மற்றவர்கள் அமர்ந்திருந்தனர். அந்தக் கூடுகையை மிக முக்கியம் வாய்ந்ததாக மேயர் கருதினார்: மொத்தக் குடும்பமும் ஒன்று கூடித் தங்கள் நிலத்திலிருந்து அவர்கள் விடுபடப் போவதை அறிவிப்பார்கள் என எண்ணினார். சற்றே துணிவைக் கூட்டி, அதனால் விளையப் போகும் நன்மைகளுக்கான அறிகுறிகளைக் காட்டினார். அளவைகளைக் குறுகத் தரித்துக் காட்டிய அந்த வரைபடம் பாட்டிக்குச் சொந்தமான விளைநிலத்தின் உண்மையான மதிப்பை விளக்கிச் சொல்ல உதவவில்லை. கைப்பிடியளவு ஹெக்டேர்களை விற்றாலும் கூட அதற்குச் சுரங்கக் கம்பெனிகள் கொடுக்கும் மதிப்பீட்டுத் தொகையில் குடும்பத்தின் மிக இளைய வாரிசு கூடச் செல்வந்தராகி விட முடியும். எனது ஒன்று விட்ட சகோதரர்களுக்கு ஆச்சரியத்தில் மூச்சடைத்துப் போனது. அவர்களைக் கவர்ந்து விட்ட மகிழ்ச்சியில் மேயர் புன்னகைத்தார்.அவர் தன்னுடைய உரையை முடித்துக் கொண்டதும் அவர்கள் கைதட்டினார்கள்.என் சித்தப்பாக்களும் அவர்கள் மனைவியரும் மௌனமாக இருந்தனர்.
பாட்டியின் பக்கமாகத் திரும்பினோம். விண்ணப்பங்களைக் கேட்கும் உச்ச பட்ச தெய்வீக நீதியரசி போல அமர்ந்திருந்த அவர் மேயரின் வாதங்களையும் அவர் முன் வைத்த மதிப்பீடுகளையும் கவனமாகக் கேட்ட பின்னும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.அவருடைய வார்த்தைக்கு மட்டுமே மதிப்பிருந்தது. தன் பெயரிலேயே நிலத்தை வைத்துக் கொண்டிருப்பவர் அதை என்ன செய்வதென்று எவரிடமும் ஆலோசனை கேட்டவரில்லை.
-வேண்டாம்.
என் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
–வேண்டாம்?
தனது நெற்றியைத் துடைத்துக் கொண்ட மேயர் என்னுடைய சில சித்தப்பாக்களை நோக்கினார்.
-வேண்டாம்.
-ஆனால் அவர்கள் நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்
-அது போதாது
-எவ்வளவு கொடுத்தால் போதுமானதாக இருக்கும்?
–அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் போதாதென்பதே மறுமொழியாக இருந்தது.
மேயர் கோபமடைந்தார்.
-நிலங்கள் முழு விளைச்சலுக்கேற்றபடி சரியாக உபயோகிக்கப் படவில்லை.இந்தப் பள்ளத்தாக்கில் உங்கள் குடும்பம் வசிப்பதில்லை.உங்கள் மகன்கள் விவசாயம் செய்வதே இல்லை.மழைக்காலத்திற்கும் வறட்சியான பருவத்துக்கும் அவர்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுமா ? இந்த நிலத்தை விற்பது பள்ளத்தாக்கில் தொழிலைப் பெருக்கி வர்த்தக மயமாக்கும்.
-எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அளவு வர்த்தகம் ஏற்கெனவே எங்களிடம் உள்ளது.
மேயர் தளர்ந்து விட்டார் பாட்டி தொடர்ந்தார்,
–அப்படியே எடுத்துக் கொடுத்து விட இந்த நிலம் எனக்குச் சொந்தமானதல்ல.என் தந்தை எனக்கு அளித்தது, அவருக்கு அவருடைய தந்தை அளித்தது. என் பிள்ளைகளுக்காகவும் அவர்களுடைய குழந்தைகளுக்காகவும் இதைப் பிடித்து வைத்திருக்கிறேன். என்னுடைய மறுமையில் பெற்றோர்களைச் சந்திக்கையில் அவர்கள் வாழ்நாள் உழைப்பையும் புதைநிலத்தையும் பணத்துக்காக நான் விற்று விட்டேனென்று சொன்னால் அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்களும் இந்த நிலத்தில் இருக்கிறார்கள், அதனால் எங்களுக்கும் இதில் ஒரு பகுதியிருக்கிறது. இதை விற்பதென்பது எங்களையே விற்பது போல. அதன்பின் எங்களுக்கு நாங்கள் எதைத் தர முடியும்?
பரிசுத்த ஆவியின்பால் மிகுந்த நம்பிக்கையும் சுவிசேஷத்தில் மூழ்கிக் கிடப்பவனுமான என் சகோதரன் ஒருவன் எழுந்தான்.
-இறைவனில் விசுவாசம் வையுங்கள் பாட்டி
அவன் பக்கமாகத் திரும்பினார்;
உன் தாத்தா இந்த நிலத்துக்காக உன்னுடைய இயேசுவை விட அதிகம் துன்பப்பட்டார். உன்னுடைய நகரத்துக்குத் திரும்பிப் போகையில் உன்னுடைய பிரார்த்தனையையும் உன்னோடு எடுத்துக் கொண்டு போய்விடு.
சிலர் சிரித்தார்கள். பாட்டியின் நாவிலிருந்து வரும் சாட்டையடிக்கு இணையேதுமில்லை.
மீண்டும் மேயர் பக்கமாகத் திரும்பினார்.
–என் பதில் அப்போதும் இல்லைதான். இப்போதும் இல்லை. நாளையும் என் பதில் இல்லையென்பதே. மீண்டும் என்னிடம் வரும் முயற்சியாக என் மகன்களிடமும் இனிமேல் நீ பேசக் கூடாது. நீ அவர்களைப் பார்ப்பதை நான் அறிவேன். பாகப் பிரிவினை என்பதே எங்கள் வரலாற்றில் இல்லை. நான் உயிரோடு இருக்கும் வரை அதற்கு இடமில்லை.இந்த விஷயத்தில் நான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தாயிற்று.
சில சித்தப்பாமார்கள் தலையைக் குனிந்து கொண்டார்கள்.பாட்டி தூரத்தில் எங்கோ வெறித்துப் பார்த்தார்.மேயரின் நேர்முக சந்திப்பு முடிந்து விட்டது.
பாட்டி தொல்குடி அரசியல்ல. கிராமத்தின் மூத்த ஆளுமையுமல்ல. சுரங்கத் தொழிற்சாலை கண் வைத்திருக்கும் நிலத்துக்குச் சொந்தமான , எட்டு வெவ்வேறு ஆண்களுக்கு எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற ஒரு சாதாரணப் பெண்மணி. ஆனால் அவர் தனது தீர்ப்பைக் கூறுகையில் மேலுலகத்திலிருந்து பிறப்பிக்கப் பட்ட அரசாணை போல இருக்கும்.நாங்கள் அனைவரும் அதை உணர்ந்தோம் : ஏதோ ஒரு சக்தி அவருள் பெருகி ஓடுகிறது-பள்ளத்தாக்கின் முதல் குடிமக்கள், அதைப் பாதுகாப்பதற்காக நிகழ்ந்த தொல்குடிப் போர்கள், வளமான எல்லைகளை விரிவுபடுத்திய திருமண பந்தங்கள்-யாவும் அவருள் ஊடுருவி எங்களைத் தீர்மானமாகப் பிணைத்து வைத்திருக்கின்றன.
-உங்கள் மகன்கள் என்ன சொல்கிறார்கள்?
அது அவமானம் ! சினத்தின் அடர்த்தியுடன் வெகுண்டெழுந்தார் பாட்டி
–இங்குள்ள ஆண்களுக்கு நான் தந்த வாய் போகத் தனியாக ஏதாவது உள்ளதா? அப்படி ஏதாவது இருந்தால் வந்து பேசட்டும் பார்க்கலாம்.
யாரும் வாயைத் திறக்கவில்லை. மேயரை நோக்கிக் கவனத்தைத் திருப்பினார்.
-முட்டாள் மனிதன். என் குழந்தைகள்,என் குடும்பம்,என் வீடு,என் விளைநிலம்,எனது உடல், எனது மனம், எனது ஆன்மா, எனது நெறிமுறைகள்!
***
அசட்டையானவன்
இப்படித்தான் அப்பாவின் உடன் பிறந்தவர்களில் சிலரைக் குறிப்பிடுவார் பாட்டி. அவர்கள் இளமையாக இருக்கும் போதும் அசட்டையானவர்கள், வளர்ந்த பின்னும் அப்படித்தான் இருப்பார்கள்; அவர்களுடைய மனைவியைத் தேர்ந்தெடுப்பதிலும், என்ன பயிர் விளைவிக்க வேண்டுமென்பதிலும் கூடக் கவனமின்றி இருப்பார்கள்.
‘உன்னுடைய அப்பா’ பாட்டி தன் இரண்டாவது மகனான அவரைப் பற்றி ‘மிகவும் அசட்டையானவன்’என்று கூறுவார். அவரும் அம்மாவும் இளவயதாக இருக்கும் போதே அம்மாவைக் கர்ப்பிணியாக்கி அவரின் கல்லூரிப் படிப்போடு ஊரில் அவருக்கிருந்த மதிப்பையும் சேர்த்துக் குலைத்தவர்.இருவரின் காதல் களியாட்டத்தின் பலனாக நான் கருவாக உருவெடுத்ததும் அவருடைய குற்றம் வெளியே அறிய வர உடனே ஊரை விட்டு ஓடி விட்டார். கணவன் இல்லாமலும் அதே வேளை வயிற்றில் குழந்தையுடன் இருப்பதும் ஆகக் கொடுமையான அவமானம்: என் அம்மாவின் தாய்வீட்டில் அவரை விலக்கி வைத்து விட பாட்டிதான் அவரை அழைத்துச் சென்றார்.எந்த ஆணும் விரும்பாத ஒரு குழந்தையைச் சுமப்பதென்பது எப்படி இருக்குமென்பதை பாட்டி அறிவார்.ஏனென்றால் என் அப்பாவும் அது போன்ற சூழலில்தான் பிறந்தார்.அவராவது சற்று மாறுபட்டு இருக்க வேண்டுமென்று நான் எப்போதும் ஆசைப் பட்டேன். தன் வாலைத் தானே கொத்தும் பாம்பாக அவர் இல்லாதிருந்திருக்கலாம்.
நான் பிறந்து என் அப்பாவின் அம்மாவைப் பாட்டியாக்கினேன். அவர் கணவன் இல்லாமல் மூன்றாவது குழந்தையைச் சுமந்து கொண்டிருந்த போது அவரை நோக்கி எய்யப்பட்ட பள்ளத்தாக்கின் சொலவடையை நிரூபித்து விட்டேன் என வேடிக்கையாகச் சொல்வார்,’
‘அவள் இளவயதுப் பாட்டியாவாள், அல்லது வயதான விபச்சாரியாவாள்’
-நான் அவமானமடையவில்லை. எல்லோரிடமும் சொல்வேன், அந்த இரண்டாகவுமே இருப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை
அவருடைய நிலையை மாற்றும் பிறப்பாக நான் இருந்த போதும் எனக்கு அழகான பெயர் சூட்டினார், ‘உயரிய பரிசுகளையும் பட்டங்களையும் அருள்பவள்’
அம்மா என்னதான் என்னைச் செல்லம் கொஞ்சினாலும் பாட்டியின் அன்பின் முன் அவருடையது ஒரு மெல்லிய கோட்டில் தோற்று விடும்.அதன்பின் அப்பா மீண்டும் திருமணம் புரிந்து என் மாற்றாந்தாய்க்குப் பிறந்த சகோதர சகோதரிகளைப் பெயர் வைக்கத் தூக்கிக் கொண்டு வரும் போது நான் மட்டுமே பாட்டியின் மேலதிகப் பிரியத்துக்குரியவள் எனத் தெளிவாகப் புரியும்.அவர்களுக்கு, முகில், நதி,மண், அல்லது எங்கள் காலத்தின் சிறிய நிகழ்வுகள் போன்றவற்றைப் பெயர்களாகச் சூட்டுவார். ஆனால் எனக்குத்தான் புதிய அன்பளிப்புகள் வழங்குவார்; கைவிட்டுப் போன முடியரசுக்கு நான்தான் புதிய மகுடங்களைச் சூட்டினேன்.அவரை ராஜ மாதாவாக நான் மாற்றும்வரை அவர் எனக்குத் தாயாகவே இருந்தார்.
தலைமுறைகள் பெருகப் பெருக எங்கள் வம்சத்தின் தரு மெல்ல மெல்லச் சுருங்கி ஒரே ஒரு புள்ளி மட்டும் எஞ்சி நின்றது: எனது பாட்டி. மணற்கடிகையின் விரற்கடை மணல் போல அல்லது இளவயதில் அவரது ஆடையை இடுப்பில் இறுக்கிக் கட்டும் பட்டையைப் போல அமர்ந்திருந்தார். அவருடைய குடை நிழலில் , காலத்தின் ஓட்டத்திலும் எங்கள் குடும்பம் பல்கிப் பெருகியது.
****
படுக்கைக்கு லாயக்கற்றவன்
என்னுடைய முதல் காதலனைப் பற்றி அப்படித்தான் நினைத்தார் பாட்டி.
-அவன் குள்ளமானவன். படுக்கைக்கு லாயக்கற்றவன்.
-அதற்கும் மற்ற விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம்?
-குள்ளமான ஆண்கள் குள்ள-ஆண்களுக்குரிய பிரச்சினையைத் தருவார்கள்.உன் தாத்தா உயரம் தரும் அனைத்து அனுகூலங்களையும் பெற்ற உயரமான மனிதர்.
-ஆனால் அவர் ஓடிப் போய் விட்டார்.
-அவருடைய நீண்ட முழங்கால் எலும்புகளைத்தான் நீ கொண்டிருக்கிறாய்.உன்னைப் பார், அழகும் உயரமும் உடையவள். உன் குதிங்காலால் உந்தி முத்தமிடும் ஆணை நீ விரும்பவில்லையா?
இது போன்ற உரையாடல்கள் எங்களுக்குள் மிகவும் சாதாரணம். அவரைத் திருப்திப் படுத்தாத எதன் மீதும் எள்ளல்களை அள்ளித் தெளிக்கும் நிறைய சிறப்பான சொல்லாடல்கள் அவர் கைவசம் உண்டு.
-அகற்றப்பட்ட மேற்புறத் தோலைப் போல நீ ஒரு உதவாக்கரை
– உணர்வற்ற புணர்ச்சியைப் போலக் குள்ளமானவன்
-குளிர்காலத்தில் குறியின் விறைப்புத்தன்மையை விட மெதுவாக இருக்கிறாய்.
இந்த வார்த்தைகளெல்லாம் பால்யத்தில் சில கடுமையான மன உளைச்சல்களை ஏற்படுத்தியிருந்தாலும் நான் கண்ட பாட்டியின் அன்பும் ஆரவாரமான குணமும் அவற்றையெல்லாம் அழித்து விட்டன. என்னுடைய சித்தப்பாக்களினால் கர்ப்பிணிகளாகி விட்ட பிறழ்வுறவுப் பெண்களுக்கும் அவரது கதவுகள் திறந்தே இருந்தன. அந்தக் கருவின் தந்தை பற்றிய சந்தேகங்கள் இருந்த போதும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைத் தன் வாழ்நாளின் முடிவில் அவர் சொல்லியிருந்தார். தங்கள் வருமானத்திற்காக எங்கள் இனத்திற்கு பயிர்த் தொழிலில் உதவி செய்ய வந்த இணைக்குடும்பங்களுக்கு வாடகையின்றி வீடும் கொடுத்தும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக விளைச்சலின் கணிசமான பகுதியை விற்கவும் அனுமதித்தார். அவர்களின் மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்தார், திருமணங்களுக்குச் சென்றார்,இறுதி ஊர்வலங்களில் மனதார அழுதார். பள்ளத்தாக்கின் பல பெண்கள் பாட்டியின் முதற்பெயரை தங்கள் ஞானப் பெயராக இணைத்துக் கொண்டார்கள். என்னுடைய தாய் மேலும் படிக்க விரும்பிய போது அவரது உயர்கல்வி நிறைவுறும்வரை பள்ளத்தாக்கிலிருந்து அவரை வெளியே அனுப்பி விட்டு என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவர் மேற்கொண்டார்.
படுக்கையைத் தூசி தட்டுதலுக்கும், தரையை,ஜன்னல்களை,அலமாரிகளை சுத்தம் செய்வதற்கும்,நீர் எடுத்து வருவதற்கும் அடுப்பில் நெருப்பு மூட்டுவதற்கும், கிடைக்கும் பொருட்களை வைத்து அவசியமானவற்றைச் சமைப்பதற்கும், மழையின் தாளங்களுக்கேற்ப வாழ்ந்து பழகுவதற்குமிடையே எனக்குத் தேவைகளென்பதே இல்லாமல் போயிற்று. பாட்டியின் பண்ணையில்தான் என் குடும்ப வரலாறிலிருந்த புணரத் தகுதியான மற்றும் தகுதியற்ற ஆண்களைப் பற்றி அவர் கூற நான் அறிந்து கொண்டேன்.
முதல் ஆண்: ‘இசைக் கலைஞன்,குடிகார வசீகரன்.தான் தோன்றியாக அலைபவன்.அழகானவன். படுக்கைக்குத் தகுதியானவன்.நான் கர்ப்பமாக இருப்பதைப் பற்றி அவனிடம் கூறவே இல்லை.தனது கிடார்களுள் ஒன்றைத் தேர்வு செய்ய முடியாதவன் எப்படி எங்களைக் காப்பாற்ற முடியும்? முடியாது, அவன் தன் இசையை அதீதமாக நேசித்தான். ஒரு தந்தைக்குரிய குணங்களோடு வாழ்வதற்குப் பொருத்தமில்லாதவன்.ஆனால் நான் ஒரு தாயாக இருக்க முடியுமென்று எனக்குத் தெரியும்.தாயாக வேண்டுமென்று விரும்பினேன். அவனிடம் எனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டதற்கு மாற்றாக என்னுடைய ஒவ்வொரு தந்திக் கம்பிகளையும் அவனை மீட்ட அனுமதித்தேன்-நேர்மையான பண்டமாற்று.அவனிடமிருந்து வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.என்னுடைய அப்பா இந்த நிலத்தை எனக்கு வைத்து விட்டு இறந்து போனார்.எனக்குப் பயிரிட ஒரு விளைநிலம் இருந்தது.நான் ஆசைப்படும் வாழ்க்கைக்கு அந்த இசைக் கலைஞன் பொருந்திப் போக மாட்டான். இப்படிச் சொல்கிறேன்: ஒரு மனிதனின் கலைக்கு அடுத்த இரண்டாம் நிலையில் நீ எப்போதும் இருக்கக் கூடாது. ஒரு வகையில் பார்த்தால் அது புறக்கணிப்பைக் கேட்டு வாங்குவது’.
இரண்டாவது ஆண், எனது தாத்தா: ’சிலையைப் போன்ற உடலமைப்பும் அதைப் போலவே எப்போதும் இறுக்கமானவன்.ஆனால் தான் எப்படிப்பட்டவன் என்பதை நன்கு அறிந்தவன்.அந்த இயல்பை நான் ரசித்தேன். தன்னால் எதைச் செய்யமுடியும் என்னும் எல்லையை அறிந்தவன், அதற்கப்பால் அவன் கொடூரமானவன். என்ன?அவன் எங்கு போய் விட்டான் என்று எனக்குத் தெரியாது- அவனை நான் தேடவுமில்லை. ஆமாம், நான் கருவுற்றிருந்தேன் என்பதை அவன் அறிவான்.ஆனால் என்னை மோசமாக நடத்த முடியாது.அந்தக் காலகட்டத்தில் நான் உன்னைப் போல இருந்தேன்.குறைந்தபட்சம் தோற்றத்தில்,அதாவது பெண்ணின் உடலமைப்பில்.இது பாராட்டல்ல-எந்த யுவதியும் பெண்ணுக்குரிய உடலமைப்பைப் பெறலாம்.உன் வயதில் நான் பெண்ணுக்குரிய மனதைப் பெற்றிருந்தேன்.கோபப் படாதே, உன் முலைகள் சுண்டி இழுக்கக் கூடியவை,உன்னுடைய இடை கன கச்சிதமானது.உன்னுடைய பிருஷ்டங்கள் உனது பலம்.ஆனால் அறிவுதான் முக்கியம்; அதுதான் மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஓர் ஆண் உன்னுடைய எந்தப் பாகத்தின் மீது ஆசை வைத்திருக்கிறான் என்பதை நீ தெரிந்து கொண்டால், அவன் எதை மாற்றாகக் கொண்டு வரப் போகிறான் என்பதும் தெரிந்து விடும்.அவன் உனது முலைகளை விரும்பினானென்றால் அவை தொய்வடையத் தொடங்கியதும் அதற்கு மாற்றாக உன்னை விட இளமையாவளைத் தேடிப் போவான். எனது அறிவைத் தவிர மற்ற அனைத்துப் பாகங்களையும் உன் தாத்தா விரும்பினார்.அறிவு அவருக்கு அச்சமூட்டியது.அதனால்தான் அவர் பின்னால் நான் தேடி ஓடவில்லை.ஆண்களைத் துரத்திச் செல்லும் பழக்கத்திலெல்லாம் நீ இறங்கி விடாதே. அறிவற்ற பெண்கள்தான் அந்தச் செயலைச் செய்வார்கள். நீ அமைதியாக உன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாலே விரைவில் ஓர் ஆண் உன்னைத் தேடி வருவான்.உன்னுடைய கவனத்தைச் சிதறடிக்க அல்லது உன் செயல்களில் உதவியாக இருக்க வருவான்.காலம்தான் அதைச் சொல்லும், அறிவு மட்டுமே அதைக் கேட்க முடியும்.உன் தாத்தா, அவரது அத்தனை நற்குணங்களுடன் இருந்தாலும் அவர் எனக்கு ஒரு கவனச் சிதறல் மட்டுமே. நாங்கள் ஒன்றாகச் சில காலம் கூடி இருந்தோம்.அவ்வளவு மட்டுமே அது’
மூன்றாவது ஆண்: உழவரின் மகன்.’அதிக உயரமில்லை, ஆனால் கவனம் ஈர்க்கக் கூடிய அளவு உயரமானவன்.இரண்டு குழந்தைகளுடன் கணவன் இல்லாமல் இருப்பது கடினமான நிலை.எனக்கு அழகான ஆண்களைப் பிடிக்கும் ஆனால் என் மீது வாஞ்சையாக இருந்ததால்தான் இவனைப் பிடித்தது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.அப்படி ஒருவரைக் காண்பது அரிது. ஆண்மகன் அன்பாக இருப்பது, குறிப்பாக தனக்குப் பிறக்காத குழந்தைகளுடன் வாழும் ஒரு பெண்ணிடம் . அன்பு-துணையற்ற தனித்திருக்கும் அன்னையர்கள் மட்டுமே அந்த வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியும்.அவன்? அவன் நோயில் இறந்து விட்டான்.நாங்கள் திருமணம் புரிந்து கொள்வதாக இருந்தோம்.அவனுடன் ஒரு நல்ல வாழ்க்கையை நான் எதிர்நோக்கியிருந்தேன்.அது வேறு உணர்வு. வானத்தில் மேகங்களைப் பார்ப்பதென்பது மழையில் பயிர்கள் வளர்வதைப் பார்ப்பதைப் போலல்ல.அந்த மனிதனின் இழப்பு என்னைத் துக்கத்திலிருந்து புறக்கணிப்புக்குத் தள்ளி விட்டது.உன்னுடைய சித்தப்பாவைப் பிரசவிப்பது வரை உயிருடன் இருந்து விட்டு அதன் பின் உதிர்ந்து குழந்தையின் தந்தையுடன் மறுமையில் இணைந்து கொள்ள நினைத்தேன்.ஆனால் எனது மூதாதையர்களை சந்திக்க நான் தயாராகவில்லை.இந்த உலகத்தில் முக்கியத்துவமற்றவளாகவும் மறு உலகத்தில் தேவையற்றவளாகவும் இருக்க நான் விரும்பவில்லை. என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி நானும் எனக்காக ஏதேனும் ஒரு வகையில் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்று நினைத்தேன். மறுமைக்குச் சென்றால் அந்த ஆன்ம உலகத்தை நான் ஆட்கொள்ள வேண்டும்.அதனால், உன் சித்தப்பா பிறந்த பின்னும் நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்’
நான்காவது ஆண் : ’பல சரக்குக்கடை முதலாளி. நான் அப்போதும் துக்கம் பாவித்துக் கொண்டிருந்தேன் தெரியுமா? இவன் என் வயல்களின் மீது கண் வைத்து, அதில் எத்தனை பேர் பணி புரிகிறார்கள், அதனால் சந்தையில் கிடைக்கும் லாபம் என்னவென்பதையெல்லாம் கேட்டான்.உடனடியாக திருமணம் செய்ய முன்வந்தான். அந்த சமயத்தில் நானும் ஒருவருடைய மனைவியாக வேண்டுமென்ற பிரயாசைப் பட்டதால் ஏறத்தாழ அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் இருந்தேன்.ஏற்கெனவே அவன் குழந்தையை வேறு சுமந்து கொண்டிருந்தேன். ஆனாலும் மறுத்து விட்டேன். அவனுக்குக் கோபம் வந்து என்னை அடித்தான். ஒன்று சொல்கிறேன்,கேட்டுக் கொள்: உன் மீது கைவைக்கும் எந்த ஆண்மகனும் நீ திருப்பித் தாக்கும் வாணலியில் உள்ள கொதிக்கும் பனை எண்ணெய் தன் மீது படுவது எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டும்.நாங்கள் சண்டையிட்டோம்.காட்டு நாய்கள் எங்களைக் கடித்துக் குதறி விட்டதோ என்று அஞ்சி அண்டை வீட்டுக்காரர்கள் வீட்டுக்குள் ஓடி வந்தனர்.அவனிடமிருந்து என்னைப் பிரித்து இழுத்தார்கள்.ஹா! அங்கு வாழ அவமானப் பட்டு கடையை மூடிக் கொண்டு எங்கோ போய் விட்டான்.இன்னொன்றும் சொல்கிறேன் கேள்: தங்களுக்கு ஏதாவது லாபம் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை யாரையும் ஒரு நாயகன் போல அனைவரும் நடத்துவார்கள். ஒவ்வொரு இரவும் அந்த மனிதனிடம் நான் அடிபடுவதற்கு மாற்றாக இலவசமாக ஒரு சோப்பு மக்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்திருந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். கடைக்காரன் ஓடிப் போன போது எனக்கு நிறைய எதிரிகள் முளைத்திருந்தார்கள். நான் சரியான காரியத்தைத்தான் செய்திருக்கிறேன் என்று மதகுரு கூறினார்.அதன் பின் ஒரு பெருமூச்சுடன் அவருக்குப் பிடித்தமான பிரத்தியேகத் தேநீர் ரகம் கடந்த ஒரு வாரமாகக் கிடைக்கவில்லை என்றும் கூறினார். என்ன அபத்தம் இது? முட்டாள் மனிதன்.அவரும் அவர் மதமும் அசட்டையான அற்ப மனிதர்களின் வழியிலேயே செல்லட்டும்: நரகத்திற்கு !’.
ஐந்தாம் ஆண்: ’ஒரு ஆசிரியர். புத்திசாலி, சூட்டிகையானவன், படுக்கைக்கு மிக உகந்தவன். கிராமத்துப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவன் தனது மயக்குறும் வசீகரத்தைக் கொண்டே பசுவிடமிருந்து பால் கறந்து விடுவான்.அந்த நாட்களில் என் உடலுக்கு ஆண்களை மறுக்கும் எதிர்ப்பு சக்தி இயல்பாக வந்து விட்டது என்றே நினைத்தேன்.ஆணின் இடுப்பெலும்பிலிருந்து பெண்ணைப் படைத்தது அந்த மாற்றுக் கடவுளின் சாதுர்யம் .ஏன்?சொர்க்கத்தின் தோட்டத்தில் எந்தப் பெண் தனிமையை உணர்வாள்? எப்படியோ, நான் தனிமையை உணர்ந்தேன்.நான் சொல்வதைக் கேள்: மிகக் கவனமாக இரு-தனிமை உணர்வெனும் சிறுத்தை நீ உன் மகன்களுக்குத் தயாரிக்கும் காலை உணவிலும் அவர்கள் பள்ளியில் இருக்கும் நிசப்தமான பகல் பொழுதுகளிலும் ஒரு பெண்ணாக இருப்பதாலேயே அவள் செய்ய அனுமதிக்காத செயல்களை தன்னந்தனியாக உன் தோள் மீது நீ தாங்குகையிலும் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கும். இரவில் நீ படுக்கையில் இருக்கையில் யாராவது தீண்ட மாட்டார்களா என முலைகளை ஏங்க வைக்கும். முட்டாள்தனத்திற்கும் அசட்டுத்தனத்திற்கும் ஆளாகிறோம் என்று அறிந்து கொள்ளும் முன்னரே அது கிராமத்தின் இருள் பாதைகளில் மகன்களின் ஆசிரியரைத் துரத்திச் செல்ல வைக்கும். நான் முன்பு என்ன சொன்னேன் என்று தெரிகிறது. ஆனால் நான் தனிமையிலிருந்தேன், இருந்தும் தவறிலிருந்து விடுபடவில்லை. தனிமை தன் வேலையை முடித்துக் கொண்டதும் அந்த இரவை நினைத்து, அதன் இருட்குகைக்குள் மூழ்கியதை எண்ணி வெட்கித் தலை குனிய வைக்கும். இல்லை, அவனிடம் எதுவும் சொல்லவில்லை. நான் ஒரு தரங்கெட்டவள் என்ற பெயர் எனக்கு ஏற்கெனவே இருந்தது.அது அவனுடையதல்ல என்று அவனால் சொல்ல முடியும்.எதுவாக இருந்தாலும் அவன் யுத்தத்திற்குச் சென்று விட்டான். புதுமையாக இருக்கிறதல்லவா?ஆசிரியர்கள் போருக்குச் செல்வது. இறப்பதில் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது? உண்மையான பாடங்கள் வாழ்வதில்தான் உள்ளது.
ஆறாவது ஆண்: போர் வீரன். நான் அவனுடன் விருப்பத்துடனேயே இணைந்திருப்பேன், ஆனால் அவன் விடாப்பிடியாகத் தன் வலிமையைப் பயன்படுத்தினான்.அது ஒரு இருண்ட காலம்.ஏறத்தாழ அனைத்து ஆண்களும் போருக்குச் சென்று விட்டார்கள். இளம் தாய்மார்களாகிய நாங்கள் மட்டும் சிறு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டோம்.நினைத்து ஏங்குவதற்கென்று எந்த ஆணும் எனக்கு இல்லாததால் மற்ற பெண்கள் மனம் தளராமல் வாழ்க்கையில் சுயசார்பாக இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். பெண்களால் வரவேற்கப்படுவதும் ஒரு மாற்றமாகவே இருந்தது-சட்டென்று நாங்கள் கணவனற்றவர்களாகவும் தந்தையற்றவர்களாகவும் ஆகி விட்டோம்.பசுக்களிடமிருந்து பால் கறந்தோம்,ஆடுகள் மேய்த்தோம்,விதைத்து அறுவடை செய்தோம்.ஆண்கள் இருந்து எங்களுக்குச் செய்ய வேண்டியதை பெண்களே ஒருவருக்கொருவர் செய்து கொண்டோம்.என்னை ஏன் அப்படிப் பார்க்கிறாய்? அங்கு ஆண்கள் இல்லை, பெண்களோ மற்ற இன்பங்களையும் அறிவார்கள்.இதையெல்லாம் கேட்குமளவுக்கு உனக்கும் வயதாகி விட்டது.ஒரு ஆணைத் தேர்ந்தெடுக்கும் போது நீ எதை விட்டுக் கொடுக்கிறாய் என்பதை அறிந்து கொள்வது சாலச் சிறந்தது.எனக்குத் தெரியும்.சில பெண்களுக்குத் தெரிவதில்லை. ஆங், என்ன சொல்லிக் கொண்டிருந்தேன். போர் நாங்கள் இருக்கும் இடம் வரை அது வராது என நம்பினோம்.ஆனால் அது நிகழ்ந்தது.உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதால் போர் வீரர்கள் எங்கள் நிலத்தைச் சூறையாட வந்தார்கள்.எதிர்த்துப் போராட வழியில்லாதவர்களாக நாங்கள் இருந்தோம். உணவுப் பொருட்கள் எடுக்க வந்தவர்கள் என்பதையே மறந்து எங்களை அடித்தார்கள், வன்புணர்வு செய்தார்கள். இல்லை, எனக்கு அவமானமாக இல்லை.ஏனென்றால் எனக்கு நிகழ்ந்ததை நான் தேர்ந்தெடுக்கவில்லை.அவன் புணர லாயக்கற்றவன். அவனுக்குத் தன் பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.எங்கள் ஆண்கள் திரும்பி வந்த போது போர் வீரர்கள் நிகழ்த்திச் சென்றது அதிக சேதத்தை ஏற்படுத்தியது. அத்தனை குழந்தைகளுக்கும் என்ன விளக்கம் சொல்வது? இறந்து போகாமல் வன்புணர்வுக்கு உடன்பட்டதாகப் பழி கூறி சில பெண்கள் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப் பட்டார்கள்.பலர் என் நிலத்தில் வந்து வாழத் தொடங்கினார்கள்.நீ கூட அவர்களைச் சந்தித்திருக்கலாமோ என்னவோ..அதைப் பற்றி என்ன? இல்லை, உன் சித்தப்பாவுக்குத் தெரியாது.அவனுக்குத் தன் தாயின் அன்பு மட்டுமே தெரியும், தந்தையின் வெறுப்பு தெரியாது.அது போதும்’.
ஏழாவது ஆண்: கணவன்.’நீ ஆச்சரியப்படுகிறாய் போலிருக்கிறது, நான் ஒரு முறை திருமணம் புரிந்து கொண்டேன்.போருக்குப் பின்.திரும்பி வந்த அனைத்து ஆண்களும் கெட்டவர்களல்ல, சிலர் நல்லவர்கள். ஆனால் அவர்களுக்கும் கூட எங்கள் வாழ்வில் எப்படிப் பொருந்திப் போவதென்று தெரியவில்லை. எங்கள் வாழ்வாதாரத்திற்காக நாங்களே உழைக்கப் பழக்கப்பட்டு விட்டோம், அவர்களோ நாங்கள் வேலைக்காரர்கள் போல இருக்க வேண்டுமென்று நினைத்தார்கள். நாங்களும் எங்களைப் போர் வீரர்களாகவே எண்ணிக் கொண்டோம், ஏனென்றால் அனைவரும் ஒரு போரை எதிர்கொண்டு மீண்டிருக்கிறோம்.சில ஆண்கள் மீளவேயில்லை. உன்னை ஒன்று கேட்கிறேன். எல்லாமே மாறி விட்ட பின்பு கூட பழைய நடைமுறைகளின்படியே இருக்க வேண்டுமென வலியுறுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பண்ணைகளில் கணவன் மனைவிக்கிடையே சரியான பயிரைப் பயிரிடுவதைப் பற்றிய விவாதங்களும் , யார் சரியாக உழுகிறார்கள் என்பது பற்றிய சர்ச்சைகளும் எழுந்தன.மீண்டு வந்தவர்களில் என் கணவரும் ஒருவர்.அவர் ஒரு போதும் என் குழந்தைகளிடம் குரலை உயர்த்தியதோ, என்னை அடித்ததோ இல்லை.என் பேறு காலத்தில் உடனிருந்த ஒரே ஆண்மகன் அவர் மட்டுமே, தன் குழந்தைக்குப் பெயர் சூட்ட நான் அனுமதித்த ஒரே ஆண்மகனும் கூட அவர்தான்.நாங்கள் நன்றாகவே இருந்தோம். காதல்? அது காதலா என்று எனக்குத் தெரியவில்லை.அவர் அமைதியான சுபாவம் கொண்டவர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.நான் தனியாக இருக்க விரும்பிய போது என்னை விட்டுச் அகன்று விட்டார்.அவர் என்னுடைய மற்ற ஆறு பிள்ளைகளைப் பற்றிக் கவலைப் படவேயில்லை.ஏழு என்பது அதிர்ஷ்ட எண் என்று கூறியவர் அதைச் செயலாக்கும் விஷயத்தில் உடனே ஈடுபட்டார்.உனக்குச் சொல்கிறேன் கேள். பெண்ணின் சார்புத் தன்மையின் எல்லையை என் கணவர் அறிந்து கொண்டார். எப்படி என்று நான் விளக்க மாட்டேன்.அவர்? நாங்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்த போதும் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆம், அது ஒரு விதத் தப்பித்தல்தான்.ஆனால் நான் போரைத்தான் காரணம் சொல்வேன்.அதுதான் குற்றம்.இறந்தவர்களுக்காக அனைவரும் துக்கம் பாவிக்கிறோம் ஆனால் மீண்டு வந்தவர்களிடம் மன்னிப்புக் கோருவதேயில்லை.அவர் இறந்தவுடன் அவருடைய நிலமும் எனக்குக் கிடைத்தது. பெரிது? என் நிலம் பெரியது என்று நீ நினைக்கிறாயா? எதிர்காலத்தில் அனைத்துமே சிறியதாகி விடும். பெரிதென்பது நமது இறந்த காலம் மட்டுமே.சில சமயங்களில் உள்ளங்கைகளில் நீரை அள்ளித் தேக்க முயற்சி செய்வது போல இவற்றையெல்லாம் பற்றிக் கொண்டிருப்பது என்னுடைய முட்டாள்தனம் என்று நினைப்பேன். ஆனால் ஏதோ ஒரு நேரத்தில் அனைத்தும் போய் விடும்.விற்கப் பட்டு விடுமோ அல்லது இழந்து விடுவோமோ எனக்குத் தெரியாது. இந்த நிலம் கைவிட்டுச் செல்ல ஒரு போதும் நீ அனுமதிக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் உனக்கும் முன்பு பலர் இருக்கிறார்கள். என்னுடைய முறை வந்த போது எனக்குச் சொல்ல ஏதோ இருந்தது போல மற்றவர்களுடைய முறை வருகையில் அவர்களுக்கும் சொல்ல உரிமை உள்ளது அல்லவா.
எட்டாவது ஆண்: பொறியியல் வல்லுநர்.’போருக்குப் பின் புனரமைப்புப் பணி நடந்தது.இந்த ஆண்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியுமா? அவர்களே அழித்து விட்டுப் பின் அதை மீள் கட்டுமானம் செய்வதற்கான கீர்த்தியையும் கோருவார்கள்.கவனத்தில் கொள்: ஓர் ஆண் உன்னை நிலைகுலையச் செய்துவிட்டால் அதைச் சீர் செய்வதற்கு மற்றொரு ஆணை அனுமதிக்க வேண்டாம். அவன் உன்னை முழுமையாகக் கட்டுப்படுத்தி விடுவான்.இதுதான் உண்மை.நீ உடைந்து போனால் உன்னை நீயே சரி செய்து கொள்.எந்த ஆண்மகனையும் அதைச் செய்ய விடாமல் பார்த்துக் கொள்.அவர்கள் அதில் எவ்வளவு மோசமான வேலையைச் செய்திருப்பார்கள் என்று காலங்கடந்துதான் புரியும்.இந்த மனிதனுக்குப் பொருட்களை மீட்டெடுக்கப் பிடித்திருந்தது.இந்தப் பள்ளத்தாக்கையும் என்னையும் மீட்டெடுக்கலாம் என நினைத்தான்.ஆட்களைக் கூட்டமாகக் கூட்டிக் கொண்டு வந்து தோரணையுடன் நிலத்தை அளந்தும், என்ன காரணத்துக்காகவோ இந்த மண்ணையும் பரிசோதனை செய்தான். அங்குதான் புதிய மருத்துவமனையும் பள்ளியும் வரவிருந்தன. ஆனால் அதற்கெல்லாம் நிதி இல்லை.அப்படித்தான் சுரங்கத் தொழிற்சாலைகளும் மரத் தொழிற்சாலைகளும் நுழைந்தன.நிலத்தைக் கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்குவதாகவும், அனைவருக்கும் தேவையானவற்றையெல்லாம் கட்டுமானம் செய்வதாகவும் கூறினார்கள். ஆனால் எங்களுக்கு நிலம் மட்டுமே தேவையாக இருந்தது.ஹா! வயதான உழவர்களை என்ன செய்வார்கள்? எங்கள் நதிகளெல்லாம் பயன்படுத்தவே முடியாத அளவு நஞ்சாக மாறிப் போனால் என்ன நடக்கும்?நான் விற்க மறுத்து விட்டேன். தூய்மையான அந்த வானத்தை நீ பார்த்தாயா? இங்கிருக்கும் பசுமையான வயல்களை? பச்சைப் பாம்பைப் போல் நெளிந்தோடிக் கொண்டிருக்கும் நதியை? அவையெல்லாமே என்னால்தான்.நான் நிலத்தை விற்று விட்டால் அனைத்தும் மாசடைந்து விடும்.என்னுடைய எட்டாவது ஆளுக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னேன்.அவன் வர்த்தகம், தொழிற்சாலை, தொழிற்நுட்பம் எனத் தன் வாதங்களை எடுத்து வைத்தான்- நகரத்து இல்லங்களின் குளிர்மையான காங்கிரீட் தளங்களில் படாதவாறு தங்கள் பாதங்களை விலையுயர்ந்த காலணிகளால் பாதுகாத்து வைத்திருக்கும் மனிதர்கள் கூறும் விஷயங்கள் போல அவை இருந்தன.ஆனால்,இந்த நிலத்தில் வெறுங்கால்களுடன் நடக்கும் எங்களுக்கு அவற்றுக்கெல்லாம் ஒரு விலை கொடுக்க வேண்டுமெனத் தெரிந்திருந்தது.என்னுடைய கருத்துகளை அபத்தம் எனக் கூறிய போதும் நான் அவனுடன் வாதாடியது அவனுக்குப் பிடித்திருந்தது.அவனுடைய நகரத்து மனைவி அப்படிச் செய்ததே இல்லை.ஹோ, விருப்பத்திற்கேற்ற ஆண்கள் நம்மிடம் வர மாட்டார்கள். நான் பொருட்படுத்தவில்லை.நான் இங்கிருக்கிறேன், அவள் அங்கே இருக்கிறாள். நான் சொல்வதைக் கேள்,சில ஆண்கள் உன்னை நீயே இரு கூறாகப் பிரித்துக் கொள்ள வைப்பார்கள். உண்மையென்றும் சரியென்றும் நீ நம்புவதிலிருந்து உன்னையே பிரித்துக் கொள்வது அது.அவன் அப்படிப்பட்ட மனிதன்.இப்படி உன் பாட்டி பேசுவதை கேட்பது உனக்கு சங்கடத்தைத் தரக் கூடும் அல்லவா? இதையும் கேள் குழந்தையே, புதிய பரிசுகளையும் பட்டங்களையும் அருளுபவளே, இந்த எட்டாவது ஆணை இந்த உலகம் தவிர்த்து வேறொரு உலகத்தில் நான் சந்திக்க வேண்டும், நான் இப்போது மரணத்தை விரும்பா விட்டாலும் கூட. அது எனக்கு அச்சமூட்டுகிறது.வாழும் காலத்தில் குடும்பத்தைக் காப்பாற்றக் கடுமையாக உழைத்து இறந்த பின் மறுமை உலகிலும் மிகைநேரம் உழைப்பதற்கு நான் விரும்பவில்லை. நல்ல மழைக்காகவும்,அறுவடைக்காகவும், ஆரோக்கியமான பேறு காலத்திற்காகவும் பிரார்த்தனை செய்வதைப் பற்றிக் கற்பனை செய்திருக்கிறாயா? நம்முடைய மூதாதையர்கள் பணி நேரத்துக்கு அப்பாலும், வாழும் காலத்திற்கு அப்பால் மறுமையிலும் உழைத்திருக்கிறார்கள்.அந்தக் கடினமான செயல்கள் எல்லாம் எனக்கு ஏறக்குறைய வெள்ளைக்காரர்களின் சொர்க்கத்திற்குச் செல்லும் விழைவை ஏற்படுத்தியுள்ளது.நான் ஏன் அங்கு செல்ல விரும்பவில்லை?அவர்களில் படுக்கைக்கு ஏற்ற ஆண் இருக்கிறானா என்று அவர்கள் குறிப்பிடவேயில்லை.ஆம், எனக்குத் தெரியும், நான் நரகத்துக்குக் கூட போகலாம்.அந்த எட்டாவது ஆண்? இங்கே அவனுடைய பணி முடிந்ததும் கிளம்பி விட்டான்.பள்ளத்தாக்கிலிருந்து வெளியே செல்லும் புறவழிச் சாலைக் கட்டுமானப் பணியில் இருந்தான்.அந்த மீள் கட்டுமானம் எனக்குத் தேவையற்றதாக இருந்ததால் அவனுடைய குணம் என் இயல்புடன் அதிக நாட்கள் நிறைவுடன் இருக்க இயலவில்லை.அவன் தொடர்பிலிருக்க முயற்சி செய்த போதிலும் நான் விலகி விட்டேன். இன்னொரு பெண்ணின் இருப்பை நாம் மதிக்க வேண்டும்.எனக்குள் அவனுடைய குழந்தை இருந்தது. நான் அவனிடம் கூறியிருந்தால் அவன் மனைவியை விட்டு நீங்கி என்னிடம் வந்திருப்பானென்று உறுதியாக எனக்குத் தெரியும்.ஆனால் எனக்கு போதுமானவை இருந்தன; என் நிலம், என்னுடைய ஏழு ஆரோக்கியமான பிள்ளைகள், பிறக்கவிருக்கும் மற்றொரு குழந்தை, என்னுடைய நட்புக் கூட்டம்,என் பணி,என் கடமைகள்; அவனைப் போக அனுமதித்து விட்டேன். வயதாவதற்கு நான் தயாராகி விட்டேன். இப்போது எனக்கு வயதாகி விட்ட து. அப்படித் தோற்றமளிக்கா விட்டாலும் அதுதான் உண்மை. கிராமத்துச் சொலவடையின் இரண்டாம் பாகத்திற்கு நான் தயாராகி விட்டேன். பல வருடங்களுக்கு முன்பே உன்னுடைய வரவால் நான் இளம் பாட்டியாகி விட்டேன்.இப்போது வயதான விபச்சாரியாவதில் எனக்குக் கவலையில்லை. குழந்தையே,எனக்கு வயதாகி விட்டது என்றுதான் சொன்னேன், இறந்து விட்டேனென்று சொல்லவில்லை. நான் பெற்ற எட்டுக் குழந்தைகள் இன்று ஆண்மகன்களாக இருக்கிறார்கள், ஆனால் யார் மூலம் பெற்றேனோ அவர்கள் எல்லா நேரத்திலும் ஆண்மகன்களாக இருக்கவில்லை.என்னிடம் அவமானத்திற்கு இடமே இல்லை.நான் சொல்கிறேன்,ஆண்மகன் உன்னை எப்படிக் கட்டுப்படுத்துவான் என்பதுதான் அவமானம்.நீ கட்டுப்படுத்தப்படவே கூடாது.குறிப்பாகச் சொல்லப் போனால் படுக்கைக்கு லாயக்கற்ற ஆண்களால்.உன்னுடைய காதலன் பார்க்க முட்டாள் போலவும் அசட்டையானவன் போலவும் தெரிகிறான்.நீ அவனை விட்டு விட வேண்டும்.’
இப்படியாக நான் எனது குடும்ப வரலாறையும் அதில் என் பாட்டியின் பங்கைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.அவருடைய கதையை விவரிக்கும் பொழுது அவர் மிகுந்த உற்சாகமாக இருந்தார்.குரலை உயர்த்தியும், குறைத்தும்,இடுப்பசைவை பல்குரலில் நடித்தும் ஒலியெழுப்பியும் காட்டினார்.என்னுடைய இடுப்பைப் பிடித்துக் கொண்டு அதை எப்படி திருப்புவதென்று செய்து காட்டியவர் அவை ஆண்களிடம் வெளிப்படுத்துவதற்கல்லாமல் தன்னைத் தானே கண்டுணரத் தேவை என்று கூறினார்
அவருடைய இறுதிக் காலத்தில், நடப்பதற்கே இயலாத நிலையில்,சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்கையில் எங்கே செல்வது என்று அவர் திக்கித் திக்கிக் கூறுவார், வயது மெல்ல மெல்ல அவருடைய பூவுலக வாழ்வின் குடியுரிமையை அபகரிக்கையிலும்,கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய பாகங்கள் , காலத்தால் எடுத்துக் கொள்ளப் படுவதாலும் எரிச்சலடைந்தார் -சுறுசுறுப்பு,செவித்திறன்,பார்வை-மற்றும் இடுப்பினுள் பொதிந்திருக்கும் நெருப்பு .செல்லமே, நான் சொல்கிறேன். வெம்மையை உணர்ந்தாலொழிய உன்னால் குளிர் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது.’
புராதன மரத்தின் அடியில் அமர்ந்திருப்பது அவருக்குப் பிடிக்கும்.அங்கிருந்து, அதன் பரந்த கிளைகளின் நிழலுக்கடியிலிருந்த தனது விளைநிலங்களை அவரால் பார்க்க முடியும்.எப்போது அவரைப் பார்க்க மலையேறிச் சென்றாலும், அவரது சுருக்கங்கள் புன்னகையில் முறுக்கேற அவரை நோக்கி நான் நடந்து வருவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்.
***
உருஸுலா தன் உருவைப் பெரிதாக்கி இளவரசனின் கப்பலைத் தாக்கினாள். அவள் குத்திக் கிழித்துக், கொல்லப்பட்டு அவள் உடல் அலைகளில் மறைந்து போனது.என்னுடைய மகன்கள் உற்சாகக் குரலெழுப்பினார்கள், பாட்டியை நினைவுறுத்தும் எனது மூத்த மகன்,குறிப்பாக எனது நெறிமுறைகளுக்கெதிராக அவன் விருப்பங்கள் மோதுகையில்…என்னை அவன் பார்த்தான், அந்த விழிகள் அவன் அனுமதிப்பதை விட அதிகம் அறிந்திருக்கும்,அவன் மறைத்து வைத்தால் கூட அந்த விழிகள் என்னைக் காணும்.இந்தத் தூர தேசத்தில் , எனது தாயகமான பள்ளத்தாக்குக்கு வெகு தொலைவில் இருந்தாலும் கூட ,அவன் சற்றும் அறிந்திராத நிலமாக அது இருந்த போதும் தன் வார்த்தைகளால் காயப்படுத்தும் அவனுடைய திறனில் பாட்டியை நான் காண்பேன்.அவருடைய கருணை அவனுக்கு வரும் நேரம் இன்னும் அமையவில்லை.
என் பாட்டி சொன்னது மிகவும் சரி:எதிர்காலத்தில் அனைத்துமே சிறுத்துப் போனது. அவருடைய இறப்புக்குப் பின் என் அப்பாவாலும் அவருடைய உடன்பிறப்புகளாலும் எங்கள் நிலம் விற்கப்பட்டு விட்டது.கிடைத்த தொகை அவர்கள் நினைத்த அளவு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.
எனது மூத்த மகனைக் கருவுற்றிருந்த போது பாட்டியின் சக்தியின் எச்சங்களை,கண்ணுக்குப் புலப்படாத உணர்கொடுக்குகளை என்னுள் நான் உணர்ந்தேன்.அவன் பிறந்த பின் அவருடைய இறுதி அறிவுரையின்படி அவனுக்குப் பெயர் சூட்டினேன். கடந்த காலத்தை வஞ்சம் தீர்க்க வேண்டுமென்று என் வாழ்க்கையை நீ வாழாதே’
‘இறந்த காலம் எப்போதும் வெற்றி பெறும்’அவர் கூறினார்,
என்னால் இயன்ற வரை ,அவர் எப்படி சிந்திப்பாரோ அதைப் போலவே சிந்தித்து எனது மகனுக்கு எதிர்காலப் பெயரொன்றைச் சூட்டினேன்.இந்தப் பிரபஞ்சத்தின் பாதையும் நோக்கமும் இலக்கும் அவனே.
மற்றும் நான் அக்டோபஸின் பேத்தி, புதிய பரிசுகளையும் பட்டங்களையும் அருளுபவள்.
***
ரெமி ங்யாமிஜ் : ( Remy Ngamije)
இவர் ருவாண்டாவில் பிறந்த நமீபிய எழுத்தாளர், புகைப்படக் கலைஞர். Doek எனப்படும் சுயாதீன இலக்கிய கலை மேம்பாட்டு அமைப்பைத் தோற்றுவித்தவரும் அதன் தலைவரும் ஆவார். அதே பெயரில் வெளியாகும் நமீபியாவின் ஒரே இலக்கிய சஞ்சிகையின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.இவரது நாவல் “The Eternal Audience of One” விரைவில் வெளிவர உள்ளது.இவருடைய எழுத்தாக்கங்கள் பல சர்வதேச சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. மற்றும் 2020 ம் ஆண்டுக்கான AKO Caine பரிசுக்காக இவரது சிறுகதை குறும்பட்டியலில் இடம் பெற்றது. “Grand Daughter of the Octopus’ என்னும் சிறுகதை Commonwealth 2021 சிறந்த சிறுகதைக்கான ஆப்பிரிக்கப் பிராந்தியத்தின் முதல் பரிசை வென்றுள்ளது.
-லதா அருணாச்சலம்
Super
அக்டோபஸின் பேத்தி நான் சமீபத்தில் ரசித்து படித்த மிக நல்ல கதை
மொழி பெயர்ப்பு என்றே தோன்றவில்லை
கதையின் உயிரோட்டத்தை மொழி பெயர்ப்பில் கொண்டு வருவது பெரிய சாதனை
வாழ்த்துக்களும் நன்றிகளும்
Interest to read this
Ilavanji இளவஞ்சி நீங்கள் கொண்டாடிய வாசிப்பை எங்களுக்கும் தந்ததற்கு மிக்க நன்றி முதலில் .
மொழிபெயர்ப்பாளருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் . நெருடாத நடைக்காக சுகமான வாசிப்பைத் தந்ததற்காக .
எனக்கு முக்கியமாகத் தோன்றுவது , அந்தப் பாட்டியின் இத்தனை கம்பீரத்துக்கும் தலைநிமிர்ந்து வாழ்ந்ததற்கும் அவரின் உள்ளார்ந்த தலைமைப் பண்புகள் வெளிப்படக் காரணமாயிருந்ததற்கும் உதவியது அல்லது மூலமானது அவர் வசம் இருந்த அவருக்கே சொந்தமான அவர் பெயரிலேயே ஆன அந்த நிலம்தான் . அதுதான் எட்டு ஆண்களையும் தன் தோளோடோ அல்லது அதற்கும் கீழேயோ வைக்கத் துணையிருந்தது . காலூன்றவும் பிழைக்கவும் நிலமற்ற நிலையில் இருக்கும் ஏராளமான பெண்களில் ஒருத்தியாய் அந்தப் பாட்டியும் இருந்திருப்பாரேயானால் அவரும் அவர் வாழ்வின் ஏதோ ஒரு ஆணிடம் அடங்கிவிட்ட இந்தக் கதை பிறந்திட வழியில்லாத பத்தோடு பதினொன்றாம் பாட்டியாக முடிந்திருப்பார் . ??