(“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்)

சுந்தரம் கொல்லையை அடைந்ததும் கட்டிலில் சாய்ந்தார். வீட்டிலிருந்து தெருக்கள், ஆறு, கானாற்றைத் தாண்டி வெயிலில் வந்தது அலுப்பாயிருந்தது. எண்ணற்ற முறை அவற்றைக் கடந்திருக்கிறார். தொய்ந்த கயிற்றுக் கட்டில் அவரை உள் வாங்கிக்கொண்டு தொட்டிலைப்போல் ஆடியது. அப்படியே கிடக்க வேண்டுமெனத் தோன்றியது. ஒருக்களித்துப் படுத்து எதிரிலுள்ள தேசிய நெடுஞ்சாலையை வேடிக்கைப் பார்த்தார். அது சுவாரசியமான நாடகக் காட்சியைப்போன்றது. நாலு வழிகளையும் வாகனங்கள் அடைத்துச் சென்றன. ஒன்றையொன்று முந்த முயன்றன. சாலை கறுத்த கம்பளம்போலிருந்தது. அதற்குக் கீழ் விவசாய நிலங்களிருப்பதை நம்ப முடியாது. அவருக்குத் தன் கொல்லையின் சுவடு சிறிதும் தெரியவில்லை. முன்பு நெல் விதைத்து நாற்று வளர்ந்த வயல்போலத் தோன்றவில்லை. அங்கு நீர் கட்டிய தடயம் கொஞ்சமுமில்லை. கொல்லைக்கு முன்னாலுள்ள சாலை தனக்குச் சொந்தமென கற்பனை செய்தார். அங்கு போய் நிற்க முடியாது. வாகனங்கள் அடையாளம் தெரியாமல் அழித்துவிடும்.

காவலாள் பெரிய முருகன் பின்னால் வந்து நின்றார். அதை சுந்தரம் திரும்பிப் பார்க்காமலே உணர்ந்தார். பெரிய முருகன் தயங்கிய குரலில் “தபால்காரு வந்து போனாருண்ணா. அத உங் கிட்டதா தரணுமாம். வரச் சொன்னாரு” என்றார். சுந்தரம் எழுந்து உட்கார்ந்தார். பெரிய முருகன் தலை சொறிந்தபடி நின்றிருந்தார். பதிவுத் தபாலில் நாலு வழிச் சாலைக்கு இழந்த நிலத்துக்கு நஷ்டஈடு கிடைக்கப்போகிறது. காசோலையாகவே வந்துவிட்டிருக்குமென எண்ணினார். தூரத்து கொல்லைக்காரர் கோபாலும் முன்பே சொல்லியிருந்தார். அப்போது அவர்களிருவரும் ஆற்றில் நடந்துகொண்டிருந்தார்கள். “உனக்கென்னப்பா, நெலம் எடுத்ததுக்கு பணம் வரப்போவுதாம். உங் கொல்லைக்கி நல்ல வெல போட்டிருக்குதாம். சந்தையில விக்கறத விடக் கூடவாம்” என்றார் கோபால். அவர் குரலில் காய்ந்த ஆற்று வெக்கை கலந்தாற்போலிருந்தது. “எனத எடுத்துகிட்டு ஏதோ தரப் போறாங்க. அதப் போயி ரொம்பப் பெரிசுன்ற?” என்றார் சுந்தரம் மணலில் நடப்பதால் மூச்சிரைக்க. ஆறு முடிகையில் கோபால் தன் கொல்லைக்குப் பேசாமலேப் பிரிந்தார். பணம் கிடைத்தால் ஓருவருக்கும் சொல்லக் கூடாதென சுந்தரம் உறுதி செய்துகொண்டார். நிலம் பறிக்கப்பட்டு நெடுங் காலமாகி விட்டிருந்தது. அதற்கான இழப்பீடு கிடைக்காதெனவே எண்ணியிருந்தார். கொல்லையை இழந்த துக்கமும் ஏறக்குறைய மறந்திருந்தது.

சுந்தரம் பக்கத்து ஊர் தபால் நிலையத்தை அடைந்தார். அஞ்சல் அலுவலர் வீட்டுத் திண்ணையில் அலுவலகம் திறந்திருந்தது. இருக்கையில் ஒரு தகரப்பெட்டி உட்கார்ந்திருந்தது. சுந்தரம் தெருவில் காத்திருந்தார். கொல்லைக்கு வரும் பெண்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். தெருவில் சென்ற கூலி ஏரோட்டும் கிருஷ்ணன் “இதோ வருவாரு. வீ்ட்டுக்குள்ள சாப்பிடப் போயிருப்பாரு” என்று சொல்லிவிட்டுப் போனார். வீட்டினுள் கைக்குழந்தை அழும் சப்தம் கேட்டது. அலுவலர் வாயைத் துடைத்தபடி வெளியில் வந்தார். “இங்கதாயிருந்தது…” என்று தகரப் பெட்டியிலும் மேசையிலும் எரவாண இடுக்கிலும் தேடினார். சற்று நேரத்தில் தபால்காரர் சைக்கிளில் வந்தார். “அது இங்கிருக்குது” என்று தகரப் பெட்டியின் அடியிலிருந்து கடிதத்தை எடுத்து நீட்டினார். அட்டையிலும் தாளிலும் ஒப்புதல் வாங்கிக்கொண்டார். சுந்தரம் வழக்கம்போல் ஆங்கிலத்தில் சேர்த்தெழுதிக் கையெழுத்திட்டார். அஞ்சல் அலுவலர் புன்னகையுடன் பார்த்தார். அங்கேயே கடிதத்தை பிரிக்கலாமென சுந்தரம் யோசித்தார். பிறகு எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

சுந்தரம் மீண்டும் கொல்லைக் கயிற்றுக் கட்டிலில் வந்து அமர்ந்தார். கடித உறையை கவனமாகப் பிரித்தார். எதிர்பார்ப்பில் கைகள் நடுங்கின. உள்ளே காசோலையில்லை. பல பக்க வழக்கமான பட்டியலுமில்லை. அவர் பெயரும் நில எண்ணும் இழப்பீட்டுத் தொகையும் மட்டுமிருந்தன. பழைய உணவு விடுதிக் கட்டடத்துக்கான இழப்பீடு கணிசமாகப் போட்டிருந்தது. காலி நிலத்துக்கு சொற்ப விலை. இரண்டையும் சேர்த்தால் பெருந்தொகையாகத் தோன்றியது. அவர் இதுவரை பார்த்திராதது. ஒரு கரும்பு வெட்டுக்கு கிடைப்பதைவிட பல மடங்கு. அதைக் கொடுப்பதற்கான நாளும் இடமும் கடிதத்தில் தனியாகக் குறிப்பிட்டிருந்தன. அடுத்த மாத முதலாம் சனியும், நாலு வழி நெடுஞ்சாலையின் ஊர் பேருந்து நிறுத்தமும். அவருடைய கண்களில் அதற்கேற்ற செலவுப் பட்டியல் நீண்டது. முதலில் சில்லறைக் கடன்களை அடைத்தாக வேண்டும். தனக்கு இரு ஜோடி கதர் வேட்டி, சட்டை வாங்க வேண்டும். கதரிலேயே உள்ளாடைகள், கொல்லைக்குப் போட்டு வர கதர் தோள் துண்டு. வெளியூருக்குப் போக கதரில்லாமல் பாப்லினில் சட்டை ஒன்று கூட எடுக்கலாம். பொன்னம்மாவைக் கூட்டிப்போய் பட்டுச் சேலை வாங்கித் தரலாம். அந்த இழப்பீடு இலவசம் போலிருந்தது. நிலத்தை பிடுங்கிக்கொண்டு உரிய விலை தர மாட்டார்களென முதலில் நினைத்திருந்தார்.

சுந்தரம் அவசரமாக வீடு திரும்பினார். பெரிய முருகனிடம் கூட சொல்லிக்கொள்ளவில்லை. வீட்டில் நஷ்ட ஈடு கிடைக்கப்போவதை தன்பாட்டில் சொல்லிக்கொண்டிருந்தார். மனைவி பொன்னம்மா நம்பவில்லை. அவர் கடிதத்தில் அச்சிட்டிருந்ததைக் காட்டினார். அவள் எண்களை மட்டும் உற்றுப் பார்த்துவிட்டு தலையாட்டினாள். “என் மூக்குத்தி ரொம்பப் பழசாயிடுச்சு. வேற வாங்கணும். எவ்வள நகைங்க கொல்லைக்கு தந்திருப்பேன்” என்றாள். தகவலறிந்ததும் மூத்த மகன் கார்த்தி தலை நகரிலிருந்து மூலைக் கடை தொலைபேசியில் கூப்பிட்டான். பொன்னம்மா சென்று பேசினாள். “எவ்வள பணம்?” என்றான். அவள் குரலைத் தாழ்த்தி சொன்னாள். “எனக்கு எல்லாம் வேணும். புதுக் கடைக்கு முன் பணம் கட்டணும். அதுவே பத்தாது” என்றான். இரண்டாவது மகன் மோகன் வீட்டுக்கு வந்திருக்கையில் பொன்னம்மா சொன்னாள். அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தேங்காய் வெட்டைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். அதை அற்பத் தொகையென்று நினைத்திருப்பான்.

முன்பு பல அறிவிப்புக் கடிதங்கள் வந்திருந்தன. அவற்றை சுந்தரம் வீட்டின் பல இடங்களில் போட்டு வைத்திருந்தார். தொலைக்காட்சி மரப் பெட்டி அடியில், அலமாரியில், இரும்புப் பெட்டியில், சாய்வான சாமிப் படங்களின் பின்னால். ஒவ்வொன்றையும் தேடி எடுக்கத் தொடங்கினார். பொடியான ஆங்கில எழுத்துகள் மேலும் மங்கியிருந்தன. சிலவற்றை பூச்சிகள் அரித்திருந்தன. அவர் மீண்டும் முடிந்தளவு படித்துப் பார்த்தார். நெடுங்காலம் முன்னால் வந்த முதல் அறிவிப்புக் கடிதம் கிடைத்தது. அப்போது அவர் அதை நம்பியிருக்கவில்லை. பிறகுதான் எங்கிருந்தோ நாலுவழிச் சாலைக்கான வேலைகள் துவங்கப்பட்டன. பழைய சாலையின் நீள அகலங்களைக் கணக்கிட்டார்கள். இரும்புச் சங்கிலிகளாலும், அளவுப் பட்டைகளாலும் இருபுறங்களிலுமுள்ள நிலங்களை பல முறை அளந்தார்கள். பிறகு மஞ்சள் நிற அடையாளக் கற்களை நட்டார்கள். நீண்ட நாட்களாக அவை அப்படியே கிடந்தன. வயல்கள் நடுவிலும் நாற்றுகளிலும் கண்ணில்பட்டு உறுத்தின. சில விவசாயிகள் பிடுங்கியும் கூட எறிந்திருந்தார்கள். சிலர் மண்ணில் புதைத்தும்விட்டார்கள். சாலைக்கான வேலைகள் அங்கங்கு நடந்துதான்கொண்டிருந்தன. சாலை சந்திப்பு, தூரத்து நகரம், முந்தின ஊர், பக்கத்து ஊர் எல்லாவற்றையும் தாண்டி வந்தன.

கடைசியாக ஒரு மதிய வேளையில் கண்ணுக்கெட்டிய தொலைவில் புல்டோசர் இயந்திரம் தென்பட்டது. கானல் நீர் நடுவில் கப்பலைப்போலிருந்தது. சுந்தரம் முன்பு பார்த்திருந்த அதே இயந்திரம். அது விடாமல் பிடிவாதமாக இயங்கிக்கொண்டிருந்தது. சர்வ சாதாரணமாக இடித்தும் தள்ளியும் நிரவியும் கொண்டிருந்தது. அதிலிருந்து கொடூரமான ஓசைகள் எழுந்தன. அவர் திரும்பி கயிற்றுக் கட்டிலில் படுத்தார். இறங்கப் போர்த்தியிருந்தாலும் சப்தம் காதில் விழுந்தது. தலைக்குள் மோதி எதிரொலித்தது. மதியத்தின் குட்டித் தூக்கம் பிடிக்காமல் புரண்டார். மீண்டும் எழுந்து சாலை மேட்டிலேறிப் பார்த்தார். தூரத்தில் புல்டோசர் சிறிதாகத் தெரிந்தது. ஒரு கணமும் ஓயவில்லை. அவரை மெல்ல நெருங்கி வந்துகொண்டிருந்தது. வீட்டுக்கு சாப்பிடவும் போகாமல் நின்றிருந்தார். பெரிய முருகன் பின்னால் வந்து கூப்பிட்டார். சுந்தரத்துக்கு கேட்கவில்லை. தொடர்ந்து சாலை வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார். பெரிய முருகன் முன்பே இயந்திரத்துக்குப் பக்கத்தில் போய் பார்த்துவிட்டு வந்திருந்தார். அவருக்கு வெறும் வேடிக்கைகள் பிடிப்பதில்லை. நீண்ட நேரம் வேலை செய்து பழக்கம். அவருக்கு நாலு வழிச் சாலை வருவதும் வராததும் ஒன்று. திரும்பி தென்னை செடிகளுக்கு  தண்ணீர் கட்ட உள்ளே புகுந்தார்.

சுந்தரம் நீண்ட நாட்கள் கழித்துதான் கொல்லையில் சாலை போடுவார்களென நினைத்திருந்தார். அப்போதுதான் புல்டோசர் வரும். அது வராமலும் போகும் என்று நம்பினார். ஆட்சி மாற்றம், நீதி மன்றத் தடை, வேறு வழியை தேர்ந்தெடுப்பது போன்ற அதிசயங்கள் நிகழும். அல்லது சாலைத் திட்டம் ஒரேயடியாகக் கைவிடப்படலாம். மற்றொரு வெப்ப பிற்பகலில் சாலை மேட்டில் புல்டோசர் ஏறியது. அவர் மேல் மோதிவிடுமென பயமாயிருந்தது. மேலே உட்கார்ந்திருந்த ஓட்டுநர் பழைய ஆள்தான். அருகில் இயந்திரம் பூதாகரமாகத் தோன்றியது. அதற்கு அழுத்தமான மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்தது. அங்கங்கே வண்ணம் உதிர்ந்து உள்ளே கறுப்பு இரும்பு தெரிந்தது. மேலே கனத்த தகடும் உறுப்புகளும் காயம்பட்டவைபோல் நசுங்கியிருந்தன. பெரும் கட்டடங்களையும் குடிசைகளையும் சரித்து மிகவும் களைத்துக் காணப்பட்டது. முன் துதிக்கை நுனி நீண்ட உபயோகத்தால் தேய்ந்து மெருகேறியதுபோல் பளபளத்தது. புல்டோசர் நெருங்குகையில் அது மேலும் பெரிதானது. இரும்புக் கை நீண்டு வளர்ந்தது. நூற்றாண்டுகளுக்கு முன் அழிந்த ஓர் உயிரினம் போலிருந்தது. அதன் பிரம்மாண்ட பின் சக்கரங்களின் பற்கள் தரையில் ஆழத்தடம் பதித்தன. முன் சக்கரங்கள் பொருத்தமில்லாமல் சூம்பியிருந்தன. இயந்திரம் முழு மூச்சாக இயங்குகையில் அவை அந்தரத்தில் மேலெழுந்தன. பின்புற இரும்புத் தட்டால் ஒரு முழு கட்டடத்தையும் அள்ளிவிடலாம். புல்டோசரின் தலையும் வாலும் ஒன்றுபோல் நீட்டியிருந்தன. மண்ணுளிப் பாம்புபோல் இருபக்கமும் நகர்ந்தது. கரம் லாகவமாக இயங்குவது வினோதக் காட்சி. பல பேர்களின் கடும் வேலையை தனியாக செய்தது. சிறுவர்கள் குதூகலத்துடன் கத்தியபடி அதைப் பின்தொடர்ந்தார்கள். பெரியவர்களுக்கும் பார்த்துக்கொண்டிருக்கலாம் போலிருந்தது. அவர்களுக்கு அழிவற்றதாகத் தோன்றிய கட்டடங்கள் சுலபமாக வீழ்வதைக் காணும் ஆசை. பிள்ளைகளைப் பயம்காட்டி விரட்ட முயன்றார்கள். “இத சின்ன பசங்க பாக்கறது தப்பு. வீணா கெட்டுப் போவீங்க. ஒழுங்கா வீட்டுக்குப் போயி படிங்க.”

சுந்தரத்தின் கொல்லையில் உணவு விடுதி பாழடைந்திருந்தது. சுவர்கள் இற்று சிதைந்திருந்தன. கூரை பாதிக்கு மேல் பிய்ந்திருந்தது. தீயில் கருகியது போல் கட்டடம் முழுவதும் புகை படிந்திருந்தது. இறுதி மூச்சைவிட தயாராயிருந்தது. ஊரில் இதை விட உறுதியான கான்க்ரீட் வீடுகளிருந்தன. ஆனால் சிறியவை. பெரும்பாலும் குடிசைகள்தான் நிறைந்திருந்தன. அவற்றின் மென்மையான மரணத்தில் சுவாரசியமில்லை. அனைவரும் பழைய உணவு விடுதியின் வீழ்ச்சியைப் பார்க்க ஆவலுடன் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து நின்று சுந்தரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் நிலத்தில் புல்டோசர் நுழைய அனுமதி தேவையில்லை. ஏற்கெனவே அரசாங்கத்தால் ஒரு பகுதி சட்டபூர்வமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அதில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். புல்டோசர் கண்ணெதிரில் வேகமாக நகர்ந்து வந்தது. பலமுறை கனவிலும் நனவிலும் கண்டதுதான். நீண்ட காலமாக வளர்ந்திருந்த உயிர் வேலியில் புகுந்தது. செறிந்த நொச்சி, ஊமத்தை, உண்ணி, கருவேலம் புதர்கள் நசுங்கின. அவற்றின் முட்கள் சிதைந்தன. உறுதியான ஓணான் கொடிகள் அறுந்தன. சுற்றி தாவர மணம் எழுந்தது. புல்டோசர் பழைய உணவு விடுதி எதிரில் நின்றது. தூரத்திலிருந்த கீழ் நிலை அதிகாரி ஒரு தரம் கோப்பைப் பார்த்துத் தலையாட்டினார். புல்டோசர் அடிபணிந்தது.

அதன் இரும்புக் கை நீண்டு கட்டடத்தைத் தொட்டது. உடனே சுற்றுச் சுவர் யானையைப்போல் கீழே சரிந்தது. மேற் கூரை ஒரு கணம் அந்தரத்தில் நின்றது. பின் குப்புற விழுந்தது. உத்திரங்களும் ஓலைகளும் ஒன்றாகக் கலந்தன. சுவர்கள் பல துண்டுகளாக உடைந்தன. பின்புற சுவர் மட்டும் விடுபட்டு தனித்து நின்றது. அதை நோக்கி புல்டோசர் நகர்ந்தது. கீழே செங்கற்களும் ஓலைகளும் மூங்கில்களும் மிதிபட்டன. புல்டோசரின் கரம் பட்டதும் பின் சுவரும் தகர்ந்தது. பிறகு விடுதிக்குப் பக்கத்திலிருந்த சிறிய வட்டக் குடில்கள் மூட்டைப் பூச்சிகளைபோல் நசுக்கப்பட்டன. புல்டோசர் மீண்டும் துவங்கிய இடத்துக்கு வந்தது. மறுபடியும் நகர்ந்து விடுதியை முழுமையாக அழித்தது. இடிபாடுகளை ஓரமாக ஒதுக்கியது. மேடும் பள்ளமுமான தரையை சமமாக்கியது. அங்கு கட்டடம் நின்றிருந்ததற்கான சிறிய தடயமுமில்லை. புல்டோசர் திருப்தியுடன் நிலத்தின் பக்கம் திரும்பியது. அடையாளக் கற்கள் நட்ட இடத்துக்குள் மண்ணையும் வரப்புகளையும் பயிரையும் ஒன்றாகத் தள்ளியது. சுந்தரம் கடைசியாக எள் பயிரிட்டிருந்தார். செடிகள் முளைத்து இயந்திர சக்கரங்களை எதிர்க்கும் என்று எண்ணியிருந்தார். எள்ளின் சிறிய பூக்கள் மலர்ந்து காய்கள் அரும்பியிருந்தன. இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யலாம். இயந்திரத்துக்கு முன்னால் எல்லாம் ஒன்றுதான். வேரடி மண்ணோடு செடிகள் அகற்றப்பட்டன. சுற்று நேரத்தில் எள் பயிரிட்ட இடம் மறைந்தது. எங்கும் மண்ணாக மாறியது.

அந்தப் பகுதி நீண்ட நாட்களாக மாற்றமில்லாமல் கிடந்தது. மீண்டும் குறுகிய காலப் பயிராக காய்கறித் தோட்டம் போடலாம் என்று சுந்தரம் யோசித்தார். தன் நிலத்தில் கீரையை நட்டு அறுவடை செய்திருந்தார் கோபால். மற்றொரு கொல்லைக்காரர் பயிரிடுவதற்குத் தயாராக ஏரோட்டியிருந்தார். இன்னொரு கொல்லைக்காரர் துணிந்து நிலக்கடலை விதைத்திருந்தார். வாகனங்கள் பழைய இரு வழிச் சாலையில் நெரிசலாக போய் வந்துகொண்டிருந்தன. சுற்றிலும் இடங்கள் வெட்டவெளியாயிருந்தன. நிழலுக்கு ஒதுங்கவும் மரமில்லை. ஊர்கள் தம் புராதன அடையாளங்களை இழந்திருந்தன. பேருந்து நிறுத்தங்கள் ஒன்றுபோலிருந்தன. பழைய ஞாபகத்தில் சில ஓட்டுநர்கள் நிறுத்தங்களை தவற விட்டார்கள். அவர்களுக்குப் பயணிகள் இடங்களைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். அப்போதும் சாலைத் திட்டம் கைவிடப்படும் என்று சுந்தரம் எண்ணினார்.

மீண்டும் சாலை வேலைகள் தொடங்கின. புல்டோசர் மறுபடியும் வலம் வந்தது. கைப்பற்றிய நிலம் மேலும் சமப்படுத்தப்பட்டது. மேலே செம்மண்ணும் கற்களும் கொட்டி உறுதியாக்கப்பட்டது. இப்போது யார் கொல்லை என்று கூற முடியாது. அனைத்து அடையாளங்களும் அழிந்துவிட்டன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காலி நிலம். சிறு செடி, கொடிகளும் முளைக்கவில்லை. தார்ச்சாலை வரும் அறிகுறிகளில்லை. அங்கு பழுதான வாகனங்கள் முதலில் ஒதுங்கின. பிறகு வரிசையாக நின்று ஓய்வெடுத்தன. “காலியாக் கெடக்கற நெலத்தப் பாக்கறதுக்கு சுடுகாடு மாதிரியிருக்குது” என்று பெரிய முருகனிடம் அலுத்துக்கொண்டார் சுந்தரம். பெரிய முருகனும் ஏக்கப் பெருமூச்சுவிட்டார்.

கடைசியாக நாலு வழிச் சாலை வந்தது. “ஆளில்லாத ரயில்வே கேட்டுக்குப் பக்கத்துல தார் போடறாங்க” என்று தொட்டியில் தண்ணீர் பருக வந்த மாடுகளுடனிருந்த கலாசி தங்கவேலு சொன்னார். “திரும்பவும் ரவுண்டானாவில, பாலத்துல வேல நடக்குதுண்ணா” என்றார் கூலியாள் காக்கா முருகன். “வேத்தூருலேயிருந்து வந்தவங்க ராத்திரி பகலா பேய் மாதிரி வேல செய்றாங்க. அவங்க மனுசங்களேயில்ல.” கிருஷ்ணன் வியந்தார். தார்ச்சாலை திடீரென எதிர்திசையில் போடப்பட்டது. இடைப்பட்ட இடம் மண் சாலையாயிருந்தது. சுந்தரத்தின் கொல்லைக்கு முன்னால் தார் போடும் பிரம்மாண்ட கறுத்த இயந்திரம் நின்றது. லாரிகள் வரிசையாக ஜல்லி, தார் கலவைகளுடன் வந்தன. இயந்திரத்தில் கொட்டின. அது கனத்த விரிப்பைப்போல் கீழே தாரைப் பரப்பியது. பின்னால் ரோடுரோலர் அழுத்தியது. கொஞ்ச நேரத்தில் மாயாஜாலம்போல் சாலை உருவானது. வெயிலில் கறுப்பு பளிங்கு போல் மின்னியது. மேலே சிறு தூசியும் ஒட்டாது.

சுந்தரத்தின் நிலத்தில் தார்ச்சாலை நீண்டு சென்றது. சற்று தூரத்தில் மண் சாலை. தொலைவில் மீண்டும் தார்ச்சாலை. அவருக்கு மிகவும் குழப்பமாயிருந்தது. அங்கங்கே துண்டு துண்டாக தார்ச் சாலை. அவற்றை அப்படியே கைவிட்டுச் சென்றார்கள். சில நாட்கள் கழித்து மீண்டும் இயந்திரம் வந்தது. விடுபட்ட பகுதிகளில் தார் போட்டது. மறுபடியும் அதே காட்சி. கடைசியில் ஒருபக்கம் அகன்ற தார்ச்சாலை காலியாக நீண்டது. மறுபக்கத்தில் பழைய சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் நெரிசலுடன் சென்றன. அதிலும் அவசரமாக தார் போடும் வேலை நடந்தது. தங்க நாற்கரச் சாலை எங்கோ தொடங்கி வைக்கப்பட்டதை சுந்தரம் தொலைக்காட்சியில் பார்த்து ஆச்சரியப்பட்டார். நாட்டுக்கு அர்ப்பணித்து நாடாளுபவர் பெருமிதத்தோடு “இதன் மூலம் நாடு பெரும் வளர்ச்சியடையும்” என்றார். எதிரிலிருந்தவர்கள் பலமாகக் கைதட்டினார்கள்.

அனைத்து அறிவிப்புக் கடிதங்களையும் சுந்தரம் தேடி வைத்திருந்தார். அவை தேவைப்படலாமென்று பையில் எடுத்துப் போட்டுக்கொண்டார். அவர் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து தயாராகியிருந்தார். முன்கூட்டி சமையல் செய்ய வேண்டியிருப்பதில் பொன்னம்மா சலித்தாள். “இவ்வள சீக்கிரம் யாரும் வர மாட்டாங்க. போயிக் காத்திருக்கதுக்கு அவசரம்” என்றாள். அவர் சாப்பிட்டதும் கிளம்பினார். ஒரு கையில் அறிவிப்புக் கடிதங்கள் வைத்திருந்த பெரிய பை. மற்றொரு கையில் பணம் எடுத்து வர மஞ்சள் பை. அது நகரில் எப்போதோ துணி எடுத்ததின் ஞாபகச் சின்னமாக எஞ்சியிருந்தது. அவர் வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடந்தார். பின்னால் முதுகில் பொன்னம்மாவின் பார்வையை உணர்ந்தார். அவள் நிறையப் பணம் கிடைக்க வேண்டுமென விரும்புவாள். அதனால் கடன்கள் கொடுத்ததுபோக தனக்கும் மிஞ்சும் என்று நினைப்பாள். ஞாபகார்த்தமாக சிறிய நகையாவது வாங்க ஆசைப்படுவாள். அவருக்குக் கால்கள் மிகவும் வலியெடுத்தன. நீண்ட காலம் வீட்டுக்கும் கொல்லைக்கும் நடந்த பழைய நோவு தோன்றியிருந்தது. இம்முறை கொல்லையை அடைய வழக்கத்தைவிட நீண்ட நேரமானது.

கொல்லையில் பெரிய முருகனைக் காணவில்லை. எங்காவது தென்னை மரத்தடியில் மறைந்திருப்பார். அவர் கட்டிலில் உட்காரவுமில்லை. தொடர்ந்து நடந்தார். நாலு வழி நெடுஞ்சாலை மேலும் உயர்ந்திருந்தது. குன்றில் ஏறுவது போலிருந்தது. காலி மாட்டு வண்டிகள் கூட ஏறியிறங்க முடியாது. பக்கச் சாலை போடப்படவில்லை. நாலு வழிகளிலும் வாகனங்கள் போய் வந்துகொண்டிருந்தன. எதிர்காலத்தில் மேலும் பல வழிகள் தேவைப்படும். கருங்கல் போன்ற சாலை சப்தத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. அவர் சாலையிலிருந்து மண் பாதையில் சென்றார். தனியாக நடப்பதை உணர்ந்தார். வேறு பாதசாரிகள் இல்லை. அவரை வாகனங்கள் உரசுவதுபோல் ஓடின. ஆடைகள் கிழிந்துவிடும்போல் பறந்தன. அவ்வப்போது கனத்த சரக்கு லாரிகள் ஊர்ந்தன. நிறைய சக்கரங்களுடன் ஒரு லாரி நீண்ட சிறகு போன்ற பொருளை சுமந்து சென்றது. அவரைக் கடக்க நெடுநேரமானது. ஊருக்கு எதிரில் சிலர் நின்றிருந்தார்கள். அவர்கள் அந்தப் பெரிய லாரியை திரும்பியும் பார்க்கவில்லை.

சுந்தரத்துக்கு எதிரில் கால்நடையாக ஒருவன் வந்துகொண்டிருந்தான். தூரத்தில் சாதாரண ஆள் போலிருந்தான். அவரை வேகமாக நெருங்கியும்விட்டான். செம்பட்டைத் தலை, திரிகளாகத் தொங்கும் தாடி, இடுப்பில் சிறிய துண்டு கட்டியிருப்பது தெரிந்தது. தலையில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் மகுடம்போல் அசையாது வீற்றிருந்தது. நேராகப் பார்த்து, கைகளை வீசி விரைந்து கொண்டிருந்தான். ஒரு வீட்டருகில் நின்றிருந்த பெண் ஓடோடி சாலைக்கு வந்து கும்பிட்டாள். அவன் திரும்பிப் பாராமல் சென்றான். அவன் கை, வைத்திருந்த இரு வாழைப்பழங்களை பின்னால் எறிந்தது. அவள் பரவசத்துடன் எடுத்துக்கொண்டாள். சுந்தரம் திரும்பிப் பார்த்தார். சித்தன் தன்பாட்டில் தொலைவில் நடந்துகொண்டிருந்தான்.

சுந்தரம் இழப்பீடு வழங்கும் இடத்தை அடைந்தார். எதிர்ப்புறம் சிலர் கூடியிருந்தார்கள். சாலையைக் கடக்க முடியாது என்றுபட்டது. வாகனங்கள் தொடர்ந்து போய் வந்துகொண்டிருந்தன. சிறிய மகன் மோகனை வற்புறுத்தி துணைக்குக் கூப்பிட்டு வந்திருக்கலாம். பேருந்து நிறுத்தத்திலிருந்த இளைஞன் கையைப் பிடித்து கிடைத்த இடைவெளியில் மறுபக்கம் அழைத்துச் சென்றான். அவன் பெயர் ஞாபகம் வரவில்லை. கொல்லையில் கூலி வேலை செய்த ஒருவரின் மகனாயிருக்கலாம். பேருந்து நிறுத்தத்தையொட்டி பலர் கூட்டமாக நின்றிருந்தார்கள். பேச்சுக் குரல்கள் இரைச்சலாகக் கேட்டன. இரு அரசு ஊழியர்கள் பேருந்து நிறுத்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். தப்பும் தவறுமாக பெயர்களைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இழப்பீட்டுக் கணக்கு தெரிந்திருக்கவில்லை. அவற்றைப் பெறுகிறவர்கள் மிகவும் ஆத்திரத்திலிருந்தார்கள். ஊழியர்களை அடிக்கத் தயாராயிருந்தார்கள். அவர்களுக்கு சிறிதும் திருப்தியில்லை. “எனது நூறு சென்ட்டு நெலம். கூடவே அம்பது தென்ன மரங்க போச்சு. ஆனா மரங்கள விட நெலத்து வெலை கம்மியாயிருக்குது எப்பிடி?” என்றார் ஒருவர். குமாஸ்தா நிதானமாக “அப்பிடியா, எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. போட்டிருக்கத தர்றோம்” என்றார். இன்னொருவர் “இதெல்லாம் எங் கொல்லைக்கு ஒரு மதிப்பா?” என்று கத்தினார். வேறொருவர் காசோலையை ஊழியர்களின் மேல் திருப்பி எறிந்தார். “எனக்கு இந்தப் பணம் வேணாம். இனாமா கொல்லயக் கொடுத்ததா வச்சுக்குங்க.” கலவரம் வெடிக்கும் சூழல் நிலவியது. சுந்தரம் தன் முறைக்குக் காத்திருந்தார். திட்டமிட்டு கடைநிலை ஊழியர்கள் அனுப்பப்பட்டிருக்கலாமெனத் தோன்றியது. வெறும் காசோலைகளை வழங்க அவர்கள் போதும்.

அப்போது ஒருவர் அவசரமாக பேருந்திலிருந்து இறங்கினார். அவரை சுந்தரத்துக்கு நன்கு தெரியும். சாலைக்கு நிலம் இழந்தவர்கள் சங்கத் தலைவர். நீண்ட நாட்களுக்கு முன்பே நாலு வழிச் சாலையை எதிர்த்து கையெழுத்துகள் வாங்கியவர். அனைவர் சார்பிலும் உரிய இழப்பீடு கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர். அவரிடம் பிரச்சினைகளை தெரிவித்தார்கள். “இப்ப வாங்கிக்குங்க. பின்னால வட்டியோட கூடுதல் வெலை கேட்கலாம். நிச்சயமா கெடைக்கும்” என்றார். அவர் குரல் உறுதியோடிருந்தது. “அதெப்படிங்க?” என்றார் ஒருவர். இன்னொருவர் “எல்லாரும் செத்த பின்னாலதா கெடைக்குமா?” என்றார். “சும்மா சொல்றாரு” என்றது ஒரு குரல். அனைவரும் அவரை சூழ்ந்தார்கள். தன் பெயரை ஊழியர் கூப்பிட்டதும் சுந்தரம் அருகில் சென்றார். கடைசியாக வந்த கடிதத்தை எடுத்துத் தந்தார். அவரிடம் கையெழுத்தைப் பெற்றார்கள். கத்தைக் காகிதங்களும் காசோலையும் தரப்பட்டன. சுந்தரம் காசோலையைப் பார்த்தார். ஏற்கெனவே கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தொகைதான். அது கடைசியில் கிடைத்துவிட்டதை நம்ப முடியவில்லை. “இதுவே வழக்காடியதால வந்தது. அதனாலாதா இவ்வள நாளு. இல்லைன்னா இன்னும் குறைவாயிருக்கும்” என்றார் குமாஸ்தா.

சுந்தரம் காசோலையை சங்கத் தலைவரிடம் பதிவு செய்த பிறகு கடிதப் பையிலேயே வைத்துக்கொண்டார். தலைவர் “இது ரொம்பக் கொஞ்சந்தான். இன்னும் கேட்டுப் பாக்கலாம். பத்திரமா போய் வாங்க” என்றார். பலர் குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் சூழ வந்திருந்தார்கள். சுந்தரம் தனியாக நடந்தார். இழப்பீடு வாங்கியதில் பரவசமாயிருந்தது. இவ்வளவு பெருந்தொகையை வாழ்நாளில் அடைந்ததில்லை. மீண்டும் காசோலையை எடுத்துப் பார்த்தார். அதை மகன்களும் மனைவியும் அற்பமென சொல்லியிருந்தார்கள். “அவருக்குப் புத்தி பேதலிச்சுடுச்சு. ஒண்ணுமில்லாதது பெரிசாத் தெரியுது. வெளில தெரிஞ்சா அவமானம்” என்று பொன்னம்மா கடைசியாகத் திட்டியிருந்தாள். அது சொற்பத் தொகையானாலும் சொந்த மண்ணை இழந்ததால் கிடைத்தது. இதுவரை கொல்லையில் விவசாயம் செய்து பெற்றதை விடப் பெரியது. அந்த இழப்பீடு தன் அந்திமக் காலத்தில் வந்ததில் மேலும் மதிப்புள்ளது. தனக்கு மட்டும் உரிமையானது என்று நினைத்தார். தான் விரும்பியபடி செலவழிக்கலாம். அவர் சாலையில் நடந்தவாறு அடிக்கடி காசோலையை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் வாகனங்கள் வேகமாக போய்க்கொண்டிருந்தன.  

**

-மு.குலசேகரன்

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *