-ஜிஃப்ரி ஹாசன்

சிவத்தம்பியும் தமிழ் இலக்கியத்தை இந்துமயப்படுத்தலும்

மொழியும் மதமும் ஒன்றிலிருந்து ஒன்று உருவானதல்ல. இரண்டும் வெவ்வேறானவை. ஆனால் மொழியின் வழியே மதமும், மதத்தின் வழியே மொழியும் பரவலடைந்திருக்கிறது. தமிழ்ச் சூழலில் குறிப்பாக ஈழத் தமிழர்களிடையே தமிழ்மொழியை சைவ மதப் பாரம்பரியத்தோடு பிணைத்துப் புரிந்துகொள்ளும் போக்கு நிலவுகிறது. தமிழ் என்பதே சைவத்துக்குரியதாகவும், தமிழ் இலக்கியம் சைவப் பாரம்பரியத்திலிருந்து உருவானதாகவும் அவர்கள் எண்ணுகின்றனர். தமிழ் ஒரு மொழி என்ற வகையில் அதன் தோற்றமும், இயக்கமும் சைவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இரண்டும் தோன்றிய காலமும், சூழலும், இடமும் கூட வேறுபட்டவைதான். இடைக்காலத்தில் தமிழ்நாட்டு அரசர்களால் தங்களது அரசியல் தேவைகளுக்காகவே தமிழின் பாரம்பரியமாக சைவம் கொண்டுவரப்பட்டது.  இந்த நிலைமை திட்டமிட்டே தோற்றுவிக்கப்பட்டது. சமணம், பௌத்தம், கிறஸ்தவம், இஸ்லாம் என மற்ற மதங்களும் தமிழைப் பயன்படுத்தி, தமிழ்மொழி வழி தங்களது பண்பாட்டு இலக்கியப் பாரம்பரியத்தைப் பேணி வளர்த்தெடுத்தது போன்றே சைவமும், வைஷ்ணவமும் தமிழ் வழியே தங்களை வெளிப்படுத்தின. அதனால் தமிழ் மொழியை தனியே எந்த மதமும் உரிமை கொண்டாட முடியாது. மாறாக உலகத் தமிழர்களின் (அவர்கள் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிற போதிலும்) பாரம்பரியமும் அடையாளமுமாக தமிழே இருந்து வருகிறது. மதத்துக்கு இதில் இரண்டாம் இடம்தான்.

தமிழை இந்துமயப்படுத்தலின் விளைவால், இந்துக்கள் அல்லாத தமிழர்கள் தமிழை தங்களின் உணர்வுபூர்வமான மொழி என்று உணரத் தவறுகின்றனர். இது உண்மையில் பாமரத்தனமானதாகும். தமிழ் மொழியும், அதன் இலக்கியங்களும் ஒரு மதத்துக்குரியதோ, அல்லது ஒரு மத அடித்தளத்தைக் கொண்டதோ அல்ல. தமிழ் எந்த மதத்வராக இருந்தாலும் அதனைப் பாரம்பரியமாக தங்களின் தாய்மொழியாகக் கொண்ட இனங்களின் மொழியாகும். இன்று இனங்களுக்கு வேறு பெயர்கள் வழங்கப்பட்டாலும் அடிப்படையில் தமிழ் பேசுவோர் தமிழ் மூலத்திலிருந்து வந்த தமிழர்கள்தான். தமிழர்கள் யாரும் வெள்ளையர்களோ, நீக்ரோக்களோ, சீனர்களோ, அரபிகளோ, பாரசீகர்களோ அல்ல. மூத்த தமிழின் வாரிசுகள்தான். அதன் வளர்ச்சிக்கு பங்காற்றுபவர்கள் தான் என்ற உண்மை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

வரலாற்றில் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் இந்துமயப்படுத்தப்பட்டதன் அரசியல் பின்னணியை சிவத்தம்பி தெளிவாக முன்வைக்கிறார். தமிழ் இலக்கிய வரலாறு எவ்வாறு தமிழ்ச் சமூக வரலாறாக உருக்கொள்கிறது என்பதையும் தெளிவுபடுத்தும் அவர் தமிழ் இலக்கிய வரலாற்றெழுத்தியலை (Historiography) அதன் சமூகப் பண்பாட்டுத்தளத்தில் பொருத்தி வைத்து விளக்குகிறார். தமிழ் இலக்கியம் என்பது பல்வேறு பண்பாடுகளின் கலவையாக, பல்வேறு பண்பாடுகள் இடைவெட்டும் களமாக தன்னை விரித்துக்கொண்டு ஒரு சமூக பண்பாட்டு பதிவாக வரலாற்றில் வளர்ந்து வந்திருக்கிறது. இந்த உண்மையை மறைக்கும் உள்நோக்குடன் வரலாற்றின் ஒரு கட்டத்தில் சில சக்திகள் முயன்றன. தமிழ் இலக்கியத் தொகுப்பின் வரலாற்றுக்குப் பின்னால் எத்தகைய அரசியல் தொழிற்பட்டது? யாரெல்லாம் ஒதுக்கப்பட்டனர், யாரெல்லாம் மய்யத்துக்கு கொண்டு வரப்பட்டனர் என்ற பார்வையை ஆய்வுரீதியாக சிவத்தம்பி வெளிப்படுத்துகிறார். ஒரு புதிய தமிழ் இலக்கிய வாசகனுக்கு இந்தப் பார்வை புதிதானது. புதிய சாளரங்களைத் திறக்கக்கூடியது. அவர் எழுதுகிறார்-

“இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையானது இன்றியமையாத வகையில், அவ்விலக்கியத்தைத் தோற்றுவித்த குழுமத்தின் கடந்தகால நடவடிக்கை பற்றிய பிரக்ஞையேயாகும். அந்த இலக்கியப் பழமை பற்றிய சிரத்தை, அக்குழுமத்தின் வரலாறோடு சம்பந்தப்பட்ட ஒரு முயற்சியாகவே கொள்ளப்படல் வேண்டும்” (தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி. பக்.67)

சங்க காலத்திலிருந்து சமகாலம் வரைக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றெழுத்தியலின் மீது கவனஞ் செலுத்தும் சிவத்தம்பி அவற்றின் பலம், பலவீனம் குறித்தும் விரிவாக உரையாடுகிறார். பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தொகுத்ததில் தமிழ்நாட்டு மன்னர்களின் அரசியலுக்கும், அரசியல் நிலைப்பாடுகளுக்கும் ஒரு பங்கிருந்தது. அதனை சங்க கால பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களின் உள்ளடக்கத்திலும், தொகுப்பாக்கத்திலும் காண முடிகிறது. இத்தொகுப்பு நடவடிக்கைகளில் மன்னர்கள் காட்டியுள்ள ஆர்வமானது, இதற்கு ஒரு சமூக- அரசியல் இயைபு, அன்றேல் தேவை இருந்தது என்பதைக் காட்டுகின்றது. எழுத்தறிவு பரவாத அரசு நிறுவனம் முளைவிடும் காலகட்டங்களில் (வீரயுகம் என்பது இத்தகையதொரு காலகட்டமேயாகும்) பாடுநர் (பாணர்) பாடல்கள் அரச வம்சாவழியை நிலைநிறுத்துவதற்கும், மன்னனின் ஆட்சியை சட்ட அதிகார வன்மையுடையதாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது. (தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி)

சங்க கால இலக்கியத்தின் தொகுப்பு முயற்சிகள் கூட சங்க காலத்தின் இறுதிக் காலப்பகுதியிலேயே, நீலகண்ட சாஸ்திரியின் உத்தேசப்படி கி.பி. 250 லேயே தொகுக்கப்பட்டிருக்கும். பாடுநர் காலத்துக்குரிய இப்பாடல்களைத் தொகுத்தது அதற்கு முன்னிருந்த காலத்து இலக்கியத் தேட்டத்தை நிலைபேறுயடைதாக்கி, அதன் மூலம் மன்னர் பரம்பரைகளின் தொடர்ச்சியை நிச்சயப்படுத்துவதற்காக இருக்கலாம். புறத்தினைக்குரியவற்றுள் மூவேந்தருக்குரிய பாடல்களே முதனிலைப்பட தொகுக்கப்பட்டிருப்பதனை புறநானூற்றின் அமைப்பிலிருந்தும், பதிற்றுப்பத்திலிருந்தும் கண்டு கொள்ளலாம் என்கிறார் சிவத்தம்பி. எனவே இந்தத் தொகுப்பு குறித்து மிக அடிப்படையான கேள்விகளை எழுப்பும் அவர் அதன் முழுமையான அரசியல் பரிமாணத்தை இந்த ஆய்வில் ஆழமாகத் தொடுகிறார். “எந்த மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தொகுப்பினைச் செய்தனர்?“ என்ற அவரது கேள்வி இந்தத் தொகுப்பின் அரசியல் அடிப்படையை தெளிவாகச் சொல்கிறது.

தமிழ் இலக்கியத்தின் பன்முகத்தன்மை நீக்கம் செய்யப்பட்டு ஒற்றை அடையாளத்துக்குள் அதனைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடக்க காலத்தில் அரசியல் மற்றும் மத நோக்கம் கருதி செய்யப்பட்டது. இந்து சமயத்தின் செல்வாக்குடன் தமிழ் இலக்கியத்தை ஒற்றைப் பரிமாணமாக நிறுவுவதற்கான முயற்சிகள் அவை. பாண்டிய, பல்லவ மன்னர்களால் தங்களது அரசியல் இருப்பின் தேவை கருதி அவை சாதிக்கப்பட்டன. தமிழ் இலக்கியத்தில் சமணத்தின் இருப்பை கேளவிக்குள்ளாக்குதல் அல்லது மறுப்பதற்கான செயல்பாடாக அப்போது அது தொடங்கப்பட்டது.

அடுத்து தமிழ் இலக்கியத்தை இந்துமயப்படுத்துவதன் ஒரு முயற்சியாகவே சிவத்தம்பி முச்சங்கங்கள் பற்றிய கட்டுக்கதையைக் கருதுகிறார். முச்சங்கம் பற்றிய ஐதீகத்தை ஆராயும் அவர் அது தொடர்பான தனது ஐயங்களையும், ஆய்வுப் பார்வைகளையும் தமிழ்ச் சூழலில் நேர்மையாகப் பதிவுசெய்கிறார். முச்சங்கங்கள் மூன்றுமே மதுரையிலேயே காணப்பட்டன. பின்னர் மதுரை இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்றாக ஆகியதை நாம் அறிவோம். முதற் சங்கத்தில் பங்குகொண்டோர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் புலவர்களின் பெயர்களும் கூட இந்துத் தெய்வங்கள் சிலவற்றின் பெயர்களாக இருப்பதாக சிவத்தம்பி சொல்கிறார். இதிலிருந்தே வரலாற்றின் சார்பியத்தன்மையை அறிய முடியும். இந்த ஐதீகக் கதைகளில் வரும் அகத்தியர் பற்றிய கருத்துகள் சமண நோக்குடைய அற இலக்கியங்கள் தமிழில் ஆழமான செல்வாக்கைப் பெற்ற பின்னரே எழுப்பி விடப்பட்டவை என்றே சிவத்தம்பி கருதுகிறார்.

“பக்தி இயக்கத்தின் முன்னணியில் நின்ற சைவர்கள், வைஷ்ணவர்கள் ஆகிய இரு பகுதியினருமே தமிழ் என்பது சைவத்துக்கு அல்லது வைஷ்ணவத்துக்குத்தான் உரியது எனக்கொண்டிருந்தனர் என்பதனையும், திருஞான சம்பந்தர், திருமங்கை ஆழ்வார் போன்றவர்கள் சமணத்தை குரோதத்துடன் எதிர்த்தனர் என்பதனையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும்” (தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவதம்பி)

இப்பின்னணியிலேயே இறையனார் அகப்பொருள் உரையாசிரியரின் தெளிநிலையான இந்துச்சார்பினை எடுத்துக்காட்டுகிறார். இறையனார் களவியலுரையிலே தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை தமிழை இந்துமயப்படுத்துவதற்கான, முக்கியமாக அதனைச் சைவ மரபின் ஓரங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியேயாகும்.

வெளிப்படையாகச் சமண, பௌத்தச் சார்புள்ள ஒரு நிறுவனத்தினை (‘சங்க’த்தினை) எடுத்துக் கொண்டு அதற்கு ஓர் இந்து உருவும் பொருளும் கொடுக்கும் முயற்சியாக இதனைக் காண்கிறார். இந்துமயப்படுத்தலுக்கு அப்பால் அதன் அரசியல்மயப்படுத்தலையும் தெளிவாக்குகிறார். (இவ் ஐதீகக்) கதையின் அமைப்பை நோக்கும்போது, அவ்வச் சங்கங்களின் காலத்திலே ஆண்ட அரசர்களின் தொகையும் இலக்கிய நடவடிக்கைகளில் (பாட்டுக்கட்டுவதில்) ஈடுபட்ட அரசர்களின் தொகையும் கதையோட்டத்துக்கு அத்துணை முக்கியமானவையல்ல. ஆனால் அதுவே கதையின் ஜீவாதாரமான பகுதியாக்கப்பட்டுள்ளதை சிவத்தம்பி எடுத்துக்காட்டுகிறார்.  

சங்கம் பற்றிய கதை இப்படித் தொடங்குகிறது-

“தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்

என மூன்று சங்கம் இரீஇயனார் பாண்டியர்” (தமிழில் இலக்கிய வரலாறு. கா. சிவத்தம்பி)

கடவுள்கள் பங்குகொள்ளும் சங்கத்திற்கு ஓர் அரச தளத்தைக் கற்பிப்பதன் மூலம் அப்போது மேற்கிளம்பிய பாண்டிய ஆட்சியை உயர்நிலைப்படுத்துவதற்கான முயற்சியாக சிவத்தம்பி இதனைக் கருதுகிறார். இந்த முச்சங்கம் பற்றிய கதையே தமிழ் இலக்கியத்தை சைவத்தின் வரலாற்றுடன் இணைக்கும் முதல் முயற்சி என்கிறார். இதன் தொடர்ச்சியாக நாயன்மார்கள் தமிழுக்கு சைவச் சித்திரத்தையளித்தனர். இந்த நிலைமைக்கு எதிராக தமிழ் இலக்கியத்தில் தங்களது பாரம்பரியத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவைக்கு பௌத்தமும் சமணமும் தள்ளப்பட்டன. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றிய மரபும் தமிழ் இலக்கியத்தின் பௌத்த சமணக்கூறுகளை முதன்மைப்படுத்துவதற்கான முயற்சிகளாக சிவத்தம்பி கருதுகிறார். எந்தவொரு மதமும் தனது இலக்கியப் படைப்புக்கள் வெளிவரும் மொழி மீது தனக்குள்ள உரிமையினை முன்வைக்க வேண்டிய தேவை இருப்பதையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். சிவத்தம்பியின் இந்த ஏற்பு பல்வேறு தரப்பாரின் கூட்டு முயற்சியால் உருவான ஒரு பண்பாட்டு இயக்கத்துக்கு ஒரு மதம் மட்டுமே தனித்து உரிமை அபத்தத்துக்கான மறுப்பாகவும் இருக்கிறது.

18ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் இலக்கிய வரலாற்றெழுத்தியலை சமூக, பண்பாட்டு, மத, அரசியல் தேவைகளுக்கு இயைபுபடுத்தும் அடுத்த கட்ட நிகழ்ச்சியாக பக்தி இயக்கம் அமைந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் தமிழ்நாட்டில் தோன்றிய இராச்சியங்களின் உருவாக்கத்தில் பக்தி இயக்கங்கள் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. கி.பி. 7ம் நூற்றாண்டுக்குப் பின் அமையப்பெற்ற பல்லவ, பாண்டிய இராச்சியங்கள் இதனால் மிகவும் ஊட்டம் பெற்றிருந்தன. தனித்துவமான பண்பாட்டு இலக்கிய மரபைக் கொண்டிருந்த சமண பௌத்த சிந்தனைப் பள்ளிகளின் எழுச்சியையும், இருப்புக்கும் இடையூறு செய்த பக்தி இயக்கம் சைவத்துக்கும், வைஷ்ணவத்துக்குமிடையே நல்லுறவைப் பேணுவதிலும் அக்கறை காட்டியது. காலப்போக்கில் பக்தி இயக்கம் வழிபாட்டிடங்களை கற்களால் நிறுவி கோயில்களைத் தோற்றுவித்தது. சமண, பௌத்த துறவிகள் குகைப் பாறைகளையே தங்கள் படுக்கையிடமாகப் பயன்படுத்தி வந்தனர். அதுக்கு மாற்றாகவே இந்த நிலையான வழிபாட்டிடங்களாக கோயில்கள் கட்டப்படன. சோழர்களின் சமூகப்-பொருளாதார அமைப்பின் தொழிற்பாட்டில் கோயில்கள் முக்கிய இடத்தை வகித்தன எனும் நீலகண்ட சாஸ்திரியின் கூற்று இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது. இதனை வைத்துப் பார்க்கும் போது தமிழ் இலக்கிய வரலாற்றில் சைவமும் வைஷ்ணவமும் மறுபக்கம் சமணமும் பௌத்தமும் தத்தம் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட பண்பாட்டு மோதுகை தமிழ் நாட்டு மன்னர்களின் அரசியல் அனுசரனை கிடைத்த தரப்பாரின் குரல் ஓங்கவே வழிசெய்து கொடுத்திருக்கிறது. அதனையே தமிழ் இலக்கிய வரலாற்று எழுத்தியலும் பிரதிபலிக்கிறது. இந்தப் பின்னணியிலேயே நாயன்மார்களினதும், ஆழ்வார்களினதும் பாடல்களைக் கோவைப்படுத்தவதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பதை இந்தப் புலத்திலிருந்தே நோக்க வேண்டியுள்ளது.

பத்தாம் நூற்றாண்டளவில் கோயில்களை சீராக முன்னெடுப்பதற்கு தேவார முதலிகளின் தேவாரங்களை கோயில்களில் ஓதுவதும் அதன் கிரியைகளுள் ஒன்றாக மாறியது. அதேபோன்று கோயில்களில் திருப்பதிகம் பாடும் முறையும் அறிமுகமாயிற்று. இதனால் அவை தெய்வீக இலக்கியம் எனக் கொள்ளப்படலாயிற்று. எனவே இந்தத் தொகுப்பு முயற்சிகள் அரசின் தேவை கருதியே மேற்கொள்ளப்டடிருக்கிறது என்பதை சிவத்தம்பி ஆதாரபூர்வமாக நிறுவுகிறார். சைவ, வைணவ அருட்பாக்களும் அரச உதவியுட தொகுக்கப்படதாக சிவத்தம்பி சொல்கிறார். அதிலும் வைணத்தைவிட சைவத்துக்கு அரச உதவி அதிகம்கிடைத்ததாக சொல்கிறார்.

தமிழ் இலக்கிய வரலாற்றின் மற்றொரு மிக முக்கிய நிகழ்ச்சியாக சைவ சித்தாந்த நூல்கள் தொகுக்கப்பட்டமையை சிவத்தம்பி சொல்கிறார். இவை படைப்பிலக்கியமாகவன்றி கொள்கை விளக்க ஆக்கங்களாக விளங்கின. இந்து சமயத்தின் மெய்யியல் பகுதியாக இதனை நோக்க முடியும். இச்சாத்திரங்களே பிராமணரல்லாத சைவ மடங்களின் மெய்யியல் அடித்தளமாக விளங்கின என்பது சிவத்தம்பியின் நிலைப்பாடாகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்து முக்கியத்துவம் பெறும் காலகட்டமாக சிவத்தம்பி 18ம் நூற்றாண்டு முதல் 1835 வரையான காலகட்டத்தைக் கருதுகிறார். இது தமிழில் கிறிஸ்தவ இலக்கியம் எழுச்சி கொண்ட காலமாகும். இதற்கு முன்னரே இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் தோற்றம் பெற்று விட்டன. இது தமிழ் இலக்கிய வெளி என்பது ஒரு பன்முகப் பண்பாட்டுத் தளத்தைக் கொண்டிருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது. தமிழின் மத அடையாளம் என்பதும் ஒற்றைத் தன்மையானதல்ல என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது. இதனையே சிவத்தம்பி தன் தமிழில் இலக்கி வரலாற்றில் அழுத்திக் கூறி வந்த உண்மையாக இருக்கிறது.

***

-ஜிஃப்ரி ஹாசன்

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *