வருமானவரித்துறையிலிருந்து மின்னஞ்சலில் ஒரு நோட்டீஸ் வந்திருந்த நாளில் பெப்டிக் அல்சரால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன்.  அதிகப்படியான தொகையை ரீஃபண்டாகக் கோரியிருப்பதை சரிபார்க்கச் சொல்ல வந்த நோட்டீஸ்.  இவை இரண்டும் போதாதென்று, பதிமூன்றாம் நூற்றாண்டு ஈராக்கைச் சேர்ந்த, மதரஸாவில் அரிஸ்டாட்டிலைப் போதிப்பவரும், மஜ்லிசில் வழக்குகளைத் தீர்த்து வைப்பவருமான கஸ்வினி ஓராண்டுக்கும் மேலாக அனுபவித்து வந்த ‘எழுத்தாளர்களின் முடக்கத்’திலிருந்து அவரை விடுவிக்கும் பொறுப்பையும் எனக்கு நானே ஏற்றிருந்தேன்.  

நான் என் நண்பர்களைப் போல அல்ல.  கல்லூரியில் சேரும் வயதை எட்டிய மகன்களின், மகள்களின் தந்தைகளாகவும்,  ஒவ்வொரு சந்திப்பின் போதும் நிலம், பரஸ்பர நிதி, தங்கம், பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடுகள் செய்திருக்கிறார்கள் என்பதை விவாதிப்பவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  என் நண்பர்களின் மனைவிகளைச் சந்திப்பதை நான் முற்றிலும் தவிர்த்தே வந்தேன்.  அவர்களது அலுவலகங்களில் உடன் பணிபுரியும் விவாகரத்துப் பெற்ற பெண்களின் விவரங்களைச் சொல்லி திருமணத்திற்குப் பேசலாமா எனக் கேட்பார்கள்.  திருமணத்தைத் தவிர்ப்பதற்கு எனக்குப் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. வாழ்வைக் குறித்த எனது பார்வைகளே போதுமானவையாக இருந்தன.  

பதினேழாம் நூற்றாண்டு மெய்யியலாளரான தியோடர் ராவுல் ஹஸ்க்கின் முக்கியமான கூற்று ஒன்றை திருமணத்தைப் பற்றி என்னுடைய நண்பர்கள் பேசும் போது நினைத்துக் கொள்வேன்.

’பரிநிர்வாணத்தை அடைந்தவர்களாலும் கூட வாழ்வின் சலிப்பிலிருந்து தப்ப முடியாது’.   அவர்களுக்கே இந்த நிலை என்றால் குடும்பம் நடத்துகின்றவர்களின் நிலையைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

இப்போது கஸ்வீனீயின் கதைக்கு வருவோம்.   

மத்தியகாலத்தில் ஓர் இரவில் கஸ்வீனீ நட்சத்திரங்களுக்குக் கீழே நின்றிருந்தார்.  முன்பைப் போல அவை அவருக்கு வியப்பளிப்பவையாக இல்லை.  தெருவிளக்குகளில் எண்ணையை ஊற்றி பந்தத்தால் நெருப்பு வைத்துப் போகிறான் வசிட் நகரத்தின் விளக்கேற்றி.  இந்த நகரத்தில் எல்லோரும் அவரை கரீப் (அந்நியர்) என்றே கருதுகிறார்கள்.  அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர் அல்ல.  அவரது ஊர் ஈரானிலிருக்கும் கஸ்வின்.  செங்கிஸ்கானின் படைகள் நாற்பதாயிரம் பேரைக் கொன்று அந்நகரைக் கைப்பற்றுவதற்கு முன்பே அவர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.   முய்ன் அல்-தின் ஹசன்வாய்ஹ் அவர்களிடம் கல்வி கற்றுப் பெற்ற இஜாசா (கல்வி கற்பிக்கும் அனுமதி) கையில் இருந்தது.  

முய்ன் அல்-தின்னைப் பற்றி ஒன்றைச் சொல்கிறேன்.  பல்வேறு விதமான கட்டுப்பாடுகளின் வழியாக உடலின் தேவையை ஒடுக்கியவர் மட்டுமல்ல அவரால் ஜின்னுகளோடு நேரடியாகப் பேச முடியும்.  

கஸ்வினியின் காலத்தைப் புரிந்து கொள்ள மேலும் ஒன்றைச் சொல்கிறேன்.  காஷ்மீரின் உயர்ந்த மலைகளில் ஜின்னுகளை வாங்கும் விற்கும் சந்தை ஒன்று இருப்பதாகவும், அங்கே சென்றால் பேரம் பேசும் குரல்களை மட்டுமே கேட்க முடியுமே அல்லாமல் யாரையும் பார்க்க முடியாது என்பதை நம்பியவர்கள். யானைகளைச் சுமந்து செல்லும் பறவைகளும், பெண்களை கர்ப்பமடையச் செய்யும் சீனக் கற்களும், தரைதட்டி நிற்கும் கப்பலில் இருப்பவர்களை சிறை பிடித்துச் செல்லும் நாய்த் தலையும் மனித உடலும் உடையவர்கள் வசிக்கும் தீவுகளும் இருப்பதாகவும் சொல்லப்படுவதை நம்மைப் போல மறுக்க மாட்டார்கள்.  இவை போன்ற எல்லாவற்றையும் நாம் திரைப்படங்களில், நாடகத் தொடர்களில் பார்த்து விடுகிறோம்.  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில அகராதியில் ‘ஃபான்டஸி’ எனும் சொல்லிற்கான பொருளை ஒருமுறை வாசித்து விடுங்கள்.  இது போன்ற கற்பனைகளை நாம் நம்பிக்கையிலிருந்து சற்றே இடம் மாற்றி திரைகளில் வைத்திருக்கிறோம்.

மாடியில் நின்றிருந்த கஸ்வீனீ தூரத்தில் டைக்ரிஸ் ஆற்றில் விளக்குகள் ஏற்றி நகரும் படகுகளைப் பார்த்தார்.   விளக்குகள் மட்டுமே நகர்ந்தன.  படகுகள் கண்ணுக்குத் தெரியவில்லை.  ஆனால் அவருக்கு நன்றாகத் தெரியும் அவை படகுகளில் ஒளிரும் விளக்குகள் என்று.  

மாலை நேரங்களில் அடிவானத்தின் பொய்யான எல்லைக் கோடுகளைக் கண்டு நிற்பது, குளியல் அறையில் நீர்த்தொட்டியில் தன் முகம் கண்டு நிற்பது, உடை அணியும் முன் கண்ணாடியில் மார்பில் நரைத்திருக்கும் முடியில் விரல்களை ஓட்டிப் பார்ப்பது,  வழக்குகளைத் தீர்த்து விட்டு வீடு திரும்பும் போது எதிரே வரும் நபர்கள் வைக்கும் சலாமிற்கு பதில் சொல்லாமல் வருவதென்று அவரிடம் இல்லாத வழக்கங்கள் புதிதாகச் சேர்ந்திருந்தன.  

எப்போதிலிருந்து அவருக்கு இந்த விநோத வழக்கம் வந்ததென்று சொல்கிறேன்.  ஒருநாள் தாடிக்கு சாயம் பூசும் பணியாள் ஹிந்துஸ்தானத்திலிருந்து தருவிக்கப்படும் அவுரியோடு வேறு சில தாவரங்களின் இலைகளைச் சேர்த்து அரைத்த சாந்தை ஒரு கிண்ணத்தில் ஏந்தியிருந்தான்.   கஸ்வினியின் கையில் இஸ் அல்-தின் பின் அல்-அதீரால் தொகுக்கப்பட்ட மங்கோலியப் படையெடுப்பில் இறந்தவர்களுடைய விவரங்களின் தொகுப்பேடு இருந்தது.  பணியாள் சாந்தைக் குழைக்கும் வரை அதைத்தான் அவர் புரட்டிக் கொண்டிருந்தார்.    

மொசூலில் இருக்கும் அல்-அதீரின் மாளிகையில்தான் அவர் அப்படியொரு பதிவேட்டை முதன்முதலாகப் பார்த்தார்.  லாகூர், சாமர்கண்ட், மெர்வ், நிஷாபூர், மொசூல், பாக்தாத், விளாதிமிர் என மங்கோலியர்கள் சூறையாடாத நகரங்கள் இஸ்லாமிய நிலத்திலும் அதற்கு அப்பாலும் இல்லை என்று சொல்லுமளவிற்கு பருவகாலம் விடைபெறுவதைப் போல அவர்களது வெற்றி தடுக்கப்பட முடியாததாக இருந்தது.

மொசூலும், பாக்தாத்தும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.  ஜார்ஜ் புஷ்சின் அமெரிக்கப் படைகளால் மங்கோலியப் படையெடுப்பிற்கு ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகள் கழித்து ஆக்கிரமிக்கப்பட்டவை.  ஆனால் மங்கோலியப் படைகள் போல அமெரிக்கப் படைகள் பெண்களை வன்புணர்வு செய்வதில் ஈடுபடவில்லை.  அது ஒன்றுதான்  பெரிய வேறுபாடு.  

போரைப் பற்றி அதுவும் இப்போது இரஷ்யாவும், யுக்ரைனும் போரிடும் சமயத்தில் ஒன்றைச் சொல்கிறேன், வரலாறு முழுக்க ஆண்களுக்கு போர் வாளின் வடிவத்தில் அல்லது துப்பாக்கியின் வடிவத்தில் தெரிந்தால், பெண்களுக்கு அது அன்றும் இன்றும் ஆண்குறிகளின் வடிவத்தில் மட்டுமே தெரியும்.  பாக்தாத்தின் தெருக்களில் வெட்டி வீழ்த்தப்பட்ட உடல்களின் நடுவே, பெண்கள் மங்கோலியர்களால் வன்புணர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் கதறுவதைக் கேட்டு மங்கோலியக் குதிரைகளின் குறிகளும் விரைத்திருக்குமென்று நினைக்கிறேன்.  இன்பமும் சித்ரவதையும் இணைவதைப் பற்றி என்னால் அதிகமாக விளக்க முடியாததின் காரணத்தை நீங்கள் இக்கதையின் இரண்டாம் பத்தியை கவனமாக வாசித்தவராக இருந்தால் எளிதாக யூகிக்கலாம்.

மையைப் பூசுவதற்கு முன்பு பணியாள் சொன்னான், ‘ஐயா, அந்தப் புத்தகத்தை அப்பாலே வையுங்கள்.  மை அதன் மீது கொட்டிவிடப் போகிறது.   இல்லை என்றால் பின்னொரு நாளில் இந்தப் புத்தகத்தைப் புரட்டும் போது கரும்புள்ளிகள் எப்படி தோன்றினவென்று இரவு முழுக்க நீங்கள் யோசிப்பீர்கள்’.

’எதன் மீதும் நம்முடைய தொடர்பு முதலில் அதன் பெயரில் இருந்துதான் தொடங்குகிறது இல்லையா?’

’இல்லை ஐயா, மன்னிக்கவும் நாம் என்னவென்றே தெரியாமல்தான் சரியான இடத்தைக் கண்டுபிடித்து முலைப்பாலை அருந்தினோம்.  அப்போது நாம் பெயரற்றவர்களாகவும், நாம் அருந்துவதின் பெயரையும் அறியாதவர்களாகவே இருந்தோம்’.

மை காயும் வரை அவன் சொன்னதை யோசித்தார் கஸ்வீனீ.  அவுரியை நாம் அல்-நிலியு என்கிறோம், சமஸ்கிருதத்தில் நீலி என்று சொல்கிறார்கள்.  இன்னும் அவருக்குத் தெரியாத மொழியில் எத்தனை பெயர்களால் அது அழைக்கப்படும் என்றும் யோசித்தார்.  குளியல் தொட்டியில் அமிழ்ந்திருந்த போது ஒரு பதிவேட்டில் வெறும் பெயர்களாக எஞ்சியிருப்பவர்களின் பரிதாபமான வாழ்வை நினைத்தார்.

கல்விமானும், வழக்குத் தீர்ப்பவருமான கஸ்வீனீயைக் காட்டிலும் பணியாள் சரியாகச் சிந்திப்பதாக நீங்கள் கருதிவிடக் கூடாது.   கஸ்வினிலிருந்து இடம்பெயர்ந்த பிறகு, மொசூலில் அவர் கல்வியைத் தொடர்ந்த காலகட்டத்தைப் பற்றிச் சொன்னால் நீங்கள் அவரைக் குறைவாக மதிப்பிட மாட்டீர்கள்.

பாக்தாத்தின் புகழ்பெற்ற நிசாமியா மதரஸாவில் போதித்தவரான கமால் அல்-தீன் குரானிலும், ஹதீத்திலும் தேர்ந்தவர் மட்டுமல்ல, தர்க்கம், இயற்பியல், மீஇயற்பியல், யுக்லிடின் ஜியோமிதி, தாலமியின் வானியல், அரபு இலக்கணம், கவிதை, வரலாறு இவற்றைத் தானாகவே கற்றவர்.   அது போக கிறித்தவர்களின் காஸ்பெல்களில், யூதர்களின் டோராவிலும் சந்தேகங்களைத் தீர்ப்பவராகவும் இருந்தார்.

கமால் அல்-தீனின் கணித அறிவைச் சோதிக்கும் வண்ணம் ஒரு நிகழ்வு நடந்தது.  இரண்டாம் ஃப்ரெட்ரிக் டாமஸ்கஸ் சுல்தானாக இருந்த நாஸிர் அல்-தீனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  கணிதத்தின் அடிப்படையில் வட்டத்தை எவ்வாறு சதுரமாக்குவது என்று அதில் கேட்டிருந்தார்.  டாமஸ்கஸில் இருந்து சிரியாவின் கல்வியாளர்களிடம் அந்தக் கேள்வி வந்தது.  அவர்களால் வட்டத்தைச் சதுரமாக்கும்  கணிதக் கோட்பாட்டை எழுத முடியவில்லை.  அந்தக் கடிதம் சிரியாவிலிருந்து, மொசூலில் இருந்த கமால் அல்-தீனின் கைகளை அடைந்தது. அவர் அளித்த கணித விளக்கத்தைக் கண்டு டாமஸ்கஸில் சுல்தான் கண் விரிந்தார்.  

 

வாசனைத் திரவியம் பூசிய ஆடையை அணிந்து மாடிக்கு வந்த கஸ்வீனீ டைக்ரிஸ் ஆற்றில் தெரிந்த நகரும் ஒளிப்புள்ளிகள் முற்றிலும் பார்வையிலிருந்து மறைந்த பின்பு, கீழே இறங்குவதற்காகத் திரும்பினார்.

’ஐயா, ஐயா இங்கே பாருங்கள்’

கையில் பொதி ஒன்றை வைத்திருந்த காஸிம், அதைத் தொட்டுக் காட்டி, அவரிடம் அதனை ஒப்படைக்கும்படி நகரத் தலைமை நீதிபதி அவனை அனுப்பியதாகச் சொன்னான்.  அந்தப் பொதியில் இருந்தவை வேறு ஒன்றுமல்ல, புத்தகங்கள்.  கூடவே நீதிபதி ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

’நீங்கள் கேட்டபடி இபின்- சினாவின் அனைத்து நூல்களையும் அபாஹ்ரீயின் ஹிதாயத் அல்-ஹிக்மாவையும் (மெய்யியலுக்கான வழிகாட்டி), அல்-காஸிலியின் கிமியே சாதத்தும் (மகிழ்ச்சியின் இரசவாதம்), அல்-பெருனி மொழிபெயர்த்த ‘பதஞ்சலி யோக சூத்திர’த்தையும் அனுப்பியிருக்கிறேன்.  என்னிடம் இருப்பவை மிகத் தெளிவாகவும், அழகாகவும் எழுத்துக்களைத் தீட்டக் கூடிய, அதிகக் கூலி வாங்கும் சித்திரவேலை எழுத்துக்காரர்களால் நகலெடுக்கப்பட்டவை.  ஆகவே வாசித்து முடித்ததும், மறக்காமல் திருப்பிக் கொடுத்து விடவும்’

அந்தக் கடிதத்தின் பின்பகுதியில் அவர் இவ்வாறு எழுதிக் கையொப்பமிட்டார் ;

’என்னிடமிருந்து பெறப்பட்டவை திரும்ப ஒப்படைக்கப்படும் போது’.  காஸிமின் கையில் கடிதத்தையும், இரண்டு நாணயங்களையும் திணித்து அவனுக்கு விடைகொடுத்தார்.

புத்தகங்களைப் பார்க்கையில் அவர் மலைப்பாக உணர்ந்தார்.  அவருடைய காலம் எவ்வளவு குறுகியதென்று அவருக்கு காட்டும் வண்ணம் கையில் வந்திருக்கும் புத்தகங்கள்.  மனித மூளையின் கொள்ளளவை இபின்-சினாவைக் கொண்டே அளவிட முடியும்.  எதைத்தான் அவர் எழுதாமல் விட்டிருக்கிறார்.  உளவியல், அரசியல், ஒழுக்கவியல், அன்பு, மருத்துவம் என அவர் மனதிலிருந்து வழிந்த புத்தகங்களில் நிறைந்திருப்பவை கஸ்வீனீயைத் திகைப்படையச் செய்தன.  அவர் எழுத முனைந்திருக்கும் நூலின் முதல் பகுதியை சில வாரங்களுக்கு முன்புதான் தொடங்கியிருந்தார்.  விண்ணுலகைப் பற்றிய பகுதி பாதியில் நிற்கிறது.  மேலும் அதைத் தொடரவே அவர் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களோடு இவற்றையும் நீதிபதியிடம் கோரிப் பெற்றிருந்தார்.

இரவுத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக நீதிபதி அவருக்குக் கொடுத்திருந்த புத்தகங்களை பத்திரமாக, அவருடைய பேரக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்தார்.  தொழுகை முடிந்து வீடு திரும்பியதும் இபின்-சினாவின் நூல் ஒன்றை அவர் வாசிக்கத் துவங்கினார்.  அலுவலகம் முடிந்து வழியிலேயே இரவு உணவை சாப்பிட்டுவிட்டு என்னுடைய வீட்டிற்குத் திரும்பி உறக்கம் வரும் வரையிலும் அவரைப் போலத்தான் நானும் புத்தகங்கள் வாசிப்பேன்.

அவர் எழுதி வந்த நூலின் பெயர் ‘அஜாயிப் அல்-முக்லுகட் வா கராயிப் அல்-மவ்ஜூதாத்’ (வியப்பிற்கு உரியவையும், அரிதானவையும்).  கற்பனையிலிருந்து அதை அவர் எழுதவில்லை.  அவர் கேட்டவை, சேகரித்தவை, வாசித்தவை, அவருடைய இடப்பெயர்வில், பயணங்களில் பார்த்தவற்றையே எழுதினார்.  

முதல் பகுதி : விண்ணுலகின் அங்கங்களான கோள்களின் சுழற்சி, நட்சத்திரங்கள், இராசி மண்டலங்கள், சூரிய சந்திர வலம், வால்நட்சத்திரங்கள்

இரண்டாம் பகுதி : குவாஃப் மலையால் சூழப்பட்டிருக்கும் இந்த நிலத்தில் வசிக்கும் விநோத மனிதர்கள், மருத்துவத் தாவரங்கள், உயிரினங்கள், தீவுகளை விவரிப்பவை.  

மூன்றாவது பகுதி : நிலத்தினடியே இருக்கும் உலோகங்கள், அவற்றின் பயன்கள்

அந்த இரவிலிருந்துதான் கஸ்வீனீ ‘எழுத்தாளர்களின் முடக்கத்திற்கு’ ஆளானார்.  

 

 

மேஷ இராசியில் படையெடுத்தால் வெற்றி நிச்சயமென்று ஹுலேகுவிற்கு (செங்கிஸ்கானின் பேரன்) அறிவுறுத்தியவர்கள் இஸ்லாமிய சோதிடர்கள்தான்.  பதிமூன்று நாட்கள் பாக்தாத்தை முற்றுகையிட்டு அந்த நகரத்தை அவனுடைய படைகளால் முடிந்த அளவு சிதைத்தான்.  அந்த நகரத்திலிருந்த முப்பது நூலகங்களில் நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட நூல்களை மங்கோலியர்கள் தீயிட்டுக் கொழுத்தினார், டைக்ரிஸ் ஆற்றில் தூக்கி எறிந்தனர்.  

பாக்தாத்தைத் தொடர்ந்து வசிட் நகரத்தையும் அவர்கள் முற்றுகையிட்டார்கள்.  இரண்டாம் முறையாக அவர் போரின் கொடுமைகளில் இருந்து தப்பினார்.  சில நாட்கள் நகரத்திற்கு வெளியே தங்கியிருந்து அங்கு திரும்பியதும் வேகவேமாக அவருடைய புத்தகத்தை எழுத முனைந்தார்.  கவனக் குறைவாக வாசிக்கும் வாசகர்களுக்கு மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்.  கஸ்வீனீ இளைஞனாக இருந்த போது செங்கிஸ்கானுக்குத் தப்பினார், நடுவயதைக் கடக்கும் போது அவனுடைய பேரனிடமிருந்து தப்பினார்.  அவர் வாழ்ந்த நகரங்கள் மட்டுமே மாறியிருந்தன.  

இபின்-சினாவின் நூல்களைத் தொட்ட அந்த நாளில் இருந்து அவரால் எழுத முடியாமல் போனது. அப்பாசித்துகள், உம்மாயித்துகள், சுல்தான்களின் ஆளுகைக்கு உட்பட்டும், பாரசீகப் பேரரசின் கிழக்கு எல்லை வரையிலும் பரவியிருக்கும் பிலாத் இஸ்லாமில் (இஸ்லாமிய நிலங்கள்) மதரஸாக்கள் பெருகி நூல்களுக்கான தேவை மிகுந்திருக்கிறது.  காகிதம் தயாரிப்பவர்கள், படியெடுப்பவர்கள், விளக்கம் சொல்பவர்கள், மைக்கூடுகள், எழுதுகோல்களை விற்பவர்களும் விற்பனையை மனதில் கொண்டு மதரஸாக்களைச் சுற்றிக் குடியேறினர்.  அதிகாரிகளும், வியாபாரிகளும், சுல்தான்களும் கூட அதிகளவில் நூல்களில் ஆர்வம் செலுத்தினர்.  

கஸ்வீனீ யோசித்தார்;

இறைக் கோட்பாடுகளை விளக்குபவர்கள், இலக்கணங்களைக் கற்றவர்கள், மருத்துவர்கள், மெய்யியலாளர்கள், கவிஞர்கள், வியாபாரிகள், நாடோடிக் கதை சொல்லிகள், சோதிடர்கள், சூஃபி ஞானிகள், வானியலாளர்கள், கணித மேதைகள் இவர்கள் எல்லாவற்றையும் கற்களைப் போல உறுதியாக விளக்கிய பிறகு, நான் சந்தேகம் அடையவும், தெளிவைப் பெறவும் என்ன இருக்கிறது. உலகின் மர்மம் இன்னும் நீங்காதிருப்பதைப் போலவும் அதை அவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் போலவும் புதிதாக எழுத வரும் ஒவ்வொரு எழுத்தாளரும் கருதிக் கொள்கிறார்.  நான் செய்ய நினைத்திருக்கும் பணியின் மதிப்பும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.  இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து யாருடைய மேசையிலாவது அது அமர்ந்திருக்குமா? அல்லது இன்னொரு போர் வந்து எல்லா நூல்களையும் எரித்தும், ஆறுகளிலும் வீசிவிடுமா?

கலங்கிய குட்டையைப் போல என் மனம் மாறாது ஜிப்ரயீல் காப்பாராக.  

 

ஒவ்வொரு நாளும் இந்த சந்தேகம் எழுகையில்தான் அவர் கண்ணாடியின் முன்னும், குளியல் தொட்டியில் தன் முகம் கண்டும் உறைபவராகவும், எதிரே வருபவர்கள் வைக்கும் சலாமிற்கு பதில் சலாம் வைக்காமல் வருபவராகவும் மாறினார்.

இந்தக் கேள்வி எனக்கே இருக்கிறது.  

 

 

ஜுவாதானோ புரூனோவின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது, தான் உண்மையென்று நம்பும் ஒரு கருதுகோளுக்காக ஒரு மனிதர் தீயிட்டுக் கொளுத்தப்படவும் தயாராக இருப்பாரா? என்று ஒரு கேள்வி தோன்றியது.  நிலம், பெண், செல்வம் இவைகளுக்காக போரிட்டு இறப்பவர்களை என்னால் எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் உண்மைக்காகவும், அறிவுக்காகவும் உயிரை விடுபவர்கள் தீர்க்க முடியாத புதிர்தான்.  இவை இரண்டும் உயிரைவிட மேலானவையா? கண்ணுக்கே தெரியாத அணுக்களைப் பற்றிய அவருடைய கோட்பாடுகளுக்காக கிறித்தவர்களால் எரிக்கப்பட்டவர் அவர்.   அவரைக் கொன்றவர்கள், ஆயிரத்து அறநூறு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கருத்துகளுக்காகத்தான் ஒரு பகல்வேளையில் இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டார் என யோசித்திருந்தால் அவரைக் கொல்வதற்கு முயன்றிருப்பார்களா?. (கணிதக் குறிகளில் கூட்டல் குறியிலிருந்து மட்டுமே மனிதர்களைத் தண்டிப்பதற்கான சிலுவையின் அமைப்பை உருவாக்க முடியும்.  வேறு எந்தக் கணிதக் குறிகளின் வடிவத்திலும் மனிதர்களைக் கொல்லும் அமைப்பை அமைக்க முடியாது). தொடர் கேள்விகளால் குழம்பிப் போய், எரியும் குழல்விளக்கை அணைக்காமல் வெளிச்சத்திலேயே தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் வாகனக் கடல், மனிதக் கடல் இரண்டையும் கடந்து என்னுடைய பட்டயக் கணக்காளர் நண்பனைச் சந்தித்தேன்.  அவன் வருமான வரி அறிக்கையை திருத்திப் பதிவேற்றினான்.  பின்பு குடல்நோய்களுக்கான மருத்துவரையும் பார்த்தேன்.  சில மருந்துகளைப் பரிந்துரைத்து, உணவகங்களில் சாப்பிடுவதை குறைக்கும்படி சொன்னார்.  கிளினிக்கில் டோக்கன் கொடுக்கும் பெண் கனகாம்பரம் சூடியிருந்தாள்.  தமிழ்நாட்டில் இப்போது இந்த வழக்கம் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது.  கனகாம்பரச் செடிகளை வீடுகளில் வளர்ப்பவர்களும் கிடையாது.   மீண்டும் வாகனக் கடல், மனிதக் கடல் இரண்டையும் கடந்து வீடு வந்தேன்.

என்னுடைய வீடு அமைதியாக இருந்தது.  எப்படிப்பட்ட அமைதி என்றால் ஒரு பொருளைப் போல அதைக் கையில் எடுத்து வேண்டுகிற இடத்தில் வைத்து விடுகிற அளவிற்கு.  மின்விளக்குகளைப் போட்டேன்.  வரவேற்பறை, உணவருந்தும் மேசை, துணிகள் வைக்கும் வார்ட்ரோப்பின் கீழடுக்கு, படுக்கை என எங்கேயும் புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.  எனது வீட்டின் அமைதி வாசிப்பினால் உருவாகும் அமைதியினால் ஆனது.  சில நேரங்களில் வசீகரமாக இருக்கும்.  மீதி நேரங்களில் கதவைத் திறந்ததும், ஒற்றைத் தலைவலி அதிகமாகும் போது கண்ணுக்கு அருகே தெரியும் வெள்ளிப் புழுக்களைப் போல புத்தங்களிலிருந்து வழியும் சொற்கள் குழப்பமாக நெளியும்.

 

கஸ்வீனீயின் முடக்கத்தையும், என்னுடைய வீட்டின் நிலைமையையும் சற்றே தள்ளி வைத்துவிட்டு நாம் அறிவின் கேள்விக்கு வருவோம்.   கதையை விட்டு வெளியே ஒரு சில வரிகளை வாசிக்குமளவிற்கான பொறுமையுடையவர் நீங்கள் என்பதை இவ்வளவு தூரம் நீங்கள் இக்கதையை வாசித்ததிலிருந்து நம்புகிறேன்.  பெரும்பாலும் நள்ளிரவில், அதிலும் குறிப்பாக என் அண்டை வீட்டிலிருக்கும் ஒரு பெண்மணி பாத்திரங்களை கழுவி முடித்ததும் (சில நாட்களில் இரவு பதினோரு மணிக்குக் கூட அவள் வீட்டிலிருந்து குக்கர் அல்லது மிக்சி சத்தம் கேட்கும்.  எனினும் நான் அவளைப் பார்த்ததேயில்லை), காத்திருந்ததைப் போல எழும் அமைதியில் எதையாவது என்னுடைய மனம் சிந்திக்கும்.  நான் சிந்தனையின் கட்டுப்பாட்டில் இருப்பேன்.  

எனது இரவும் கூட.

லூயி கரோல், இவ்வாறு இரவில் படுக்கையில் படுத்தவாறு சிந்திப்பவர்கள் எளிமையாக குறிப்புகளைப் பதிவு செய்ய ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்.  தவற விடக் கூடாதென நான் கருதுபவற்றை சிரமம் கருதாது எனது செல்பேசியில் இருக்கும் குரல் பதிவு செயலில் பதிவு செய்வேன்.  அதிலிருந்த ஒரு குரல் பதிவில் இருந்துதான், அறிவை நான் எவ்வாறு பார்க்கிறேன் எனச் சொல்லப் போகிறேன். வெறும் இரண்டே வரிகள்.

ஃபிரான்ஸிஸ் பேகன் சொன்னார்;

’அறிவே அதிகாரம்’.

என்னைப் பொறுத்தவரையில் ‘அறிவு, நினைவுகள் சொல்லும் ஒரு கதை’.  

நீங்கள் இதை விளக்கச் சொன்னால் என்னால் முடியாது.  அதற்கான விளக்கத்தைப் பதிவு செய்வதற்குள்ளாக, ஃபிரானிஸிஸ் பேகனோடு ஓர் உரையாடலை நிகழ்த்தி விட்ட மகிழ்ச்சியில் உறங்கி விட்டேன்.

தலைமுடி உதிர்வதைப் போல நாட்கள் நகர்ந்தன.   கஸ்வினியை விடுவிக்கும் எண்ணம் எனக்கு எழவில்லை.  ஏறக்குறைய வாசிப்பதையும் நிறுத்திவிட்டேன். எவ்வளவு வீணான வாழ்க்கை வாழ்கிறேன் என்று நினைத்தேன்.  மத்திம வயதில் ஏதோவொரு தருணத்தில் இனியும் வாழ்வைப் புதிதாகத் தொடங்க முடியாது என்கிற கட்டத்தை அடைகிறோம்.  அன்றிலிருந்து நமக்கு முன்பு பிறந்தவர்களின் மீதும், பின்பு பிறக்கப் போகின்றவர்களின் மீதும் எரிச்சல் உண்டாகத் துவங்குகிறது.   கஸ்வீனீயைப் போலவே நானும் கண்ணாடியின் முன் உறைபவனாக மாறியிருந்தேன்.  உலகின் கண்ணாடிகளில் சற்று நேரம் தெரியும் வெற்றுப் பிம்பமே அது. பல நாட்களுக்கு (அல்லது எட்டு நூற்றாண்டுகளாக?) வெறுமனே அலுவலகம் சென்று வரும் ஒரு ஹுமானய்டைப் போலவே இருந்தேன்.  ஒரு சில நாட்களில் சித்திர எழுத்து வேலையை நானாகவே பயில முயன்றேன்.  அதற்கெனவே தயாரிக்கப்படும் காகிதங்கள், பேனாக்கள், மைக்கூடு, பிரஷ்கள், வர்ணங்கள் என தேவைப்படும் அனைத்தையும் வாங்கினேன்.  ஓரளவு பயின்ற பிறகு நூற்றி அறுபத்தைந்து ஜிஎஸ்எம் காகிதத்தில் சீமுர்க் பறவையை வரைய முனைந்தேன்.  மெச்சத்தக்க அளவிற்கு இல்லை என்றாலும், மோசமானதாக வரைந்திருக்கவில்லை.  சீமூர்க் தலையை உயர்த்தி நின்றது.

என்று அந்தக் கனவை கண்டேன் என்பது என் நினைவில் இல்லை.

கஸ்வீனீ வசிட் நகரின் கடைத்தெருவில் நின்றிருந்தார்.  அவருடைய தாடி நன்கு வெளுத்திருந்தது.  அடிமைகளை, தானியங்களை, பழங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே மாதுளம் பழம் விற்கும் கடைக்கு வந்தார் (பேரம் பேசுகிறவர்கள், சிறுசிறு சண்டையில் ஈடுபடுபவர்களின் சத்தத்தால் சந்தை களைகட்டியிருப்பது கஸ்வினிக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம்).  

‘கஸ்வீனீ ஐயா ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்?’

        ‘ஓ வாசிம் நலமா? அது வேறு ஒன்றுமில்லை.  களைப்பு. கூடையில் இருப்பவை எங்கேயிருந்து தருவிக்கப்பட்டவை?’

      ’அது கிடக்கட்டும் நீங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.  உங்கள் முகத்தில் இவ்வளவு சோர்வை நான் ஒருநாளும் கண்டதில்லையே’

(யாராவது அப்படிக் கேட்கமாட்டார்களா எனக் காத்திருந்தவரைப் போல), இபின்-சினாவின் புத்தகத்தைத் தொட்ட நாளில் இருந்து தனக்கு ஏற்பட்ட முடக்கத்தையும், அதனால் எழுந்த சோர்வையும் அவனிடம் விளக்கினார்.

‘ஐயா, விதைகளை விழுங்கிய ஞானி ஒருவரின் கதையைச் சொல்கிறேன். உங்களின் மனதிற்கு அது ஆறுதலாக இருக்கலாம்’.

 

அவன் சொன்ன கதை:

 

எந்த ஒட்டகத்தாலும் அதன் முதுகில் அமர்ந்து பயணிப்பவர்களின் பெயரைத் தெரிந்துகொள்ள முடியாது. தன்னையும் ஒட்டகத்தைப் போலவே கருதிக் கொள்ளும் ஞானியொருவர், அவரும் தனக்குப் பெயர் வைத்துக் கொள்ளவில்லை, அவருக்குப் பெற்றோர் வைத்த பெயரையும்

வெளியே சொன்னதில்லை.  தான் ஓர் ஒட்டகமென்றும், இந்த உலகுதான் அவர் முதுகில் அமர்ந்திருக்கும் பயணி என்றும் சொல்வார். ஒரு நெடும்பயணத்தின் இடையே தன்னையும் அறியாமல் அந்த ஞானி ஒட்டகத்தின் மீது அமர்ந்த வண்ணமே தூங்கிவிட்டார்.  அந்த ஒட்டகம் பகலென்றும் இரவென்றும் குளிரென்றும் கோடையென்றும் பாராமல் நடந்து நடந்து எல்லாப் பருவகாலங்களையும் கடந்து சோர்ந்து போய் ஓர் ஆழமான குளத்தின் அருகே நின்றது. தன் முதுகில் அமர்ந்திருப்பவரைக் கவனத்தில் கொள்ளாமல், குளத்தருகே சென்று தண்ணீர் அருந்துவதற்காக முன்னங்கால்களை மடித்துக் குனியவும், அந்த ஞானி குளத்திலே விழுந்து விட்டார். குளத்திலே விழுந்து தூக்கம் தெளிந்த ஞானி தான் எப்படி குளத்திலே விழுந்தோமென்று தெரியாமல் அவசர அவசரமாக நீந்தி குளத்திலிருந்து வெளியேறினார்.  தான் நீரில் மூழ்கியதைப் போலவே இந்த உலகும் ஒரு நாள் நீரில் மூழ்குமென்று சிந்தித்த அந்த ஞானி, எப்படியாவது இந்த உலகைக் காப்பதென்று முடிவு செய்தார்.  தான் நீந்தி வெளியே வந்ததைப் போலவே இந்த உலகும் மூழ்கிய பின்னும் வெளியே வரும் என்று நம்பினார். அப்படித் திரும்ப வரும் உலகில் தாவரங்கள் எங்கேயிருந்து முளைக்கும் என்று யோசித்தார்.  வயிறுமுட்ட நீரைக் குடித்த ஒட்டகத்தில் மீண்டும் ஏறி எட்டுத் திசைகளுக்கும் சென்று கண்ணிற்குத் தென்படும் தாவரங்களின் விதைகளைச் சேகரித்தார்.  நாம் தற்போது தனித்தனியாகப் பெயரிட்டு அழைப்பதைப் போல அல்லாமல், அவர் விதைகளை இன்னதென்று அழைக்காமல் ஒவ்வொன்றையும் சேகரித்தார். சேகரித்த விதைகளை சிறுசிறு துளைகளிட்டு அவர் உடலெங்கும் சேமித்தார்.  அவரிடம் பை கூடக் கிடையாது.  ஆடைகளும் இல்லை.  மேலே ஒரு தாடி, கீழே ஒரு தாடி.  அவருடைய உடலில் இடமில்லாது போனதும், ஒட்டகத்தின் உடலில் அதன் தடித்த தோலினடியே சேமிக்க ஆரம்பித்தார்.   அவர் எதிர்பார்த்ததைப் போல உலகே மூழ்குமளவிற்கு மழை பெய்யவும், மீதமிருக்கும் விதைகளை தனது வயிற்றிலும், ஒட்டகத்தின் வயிற்றிலும் நிரப்பிய பின் அமைதியாக ஒரு பாறையின் மேல் அமர்ந்தார்.  நீர் உயர, ஒட்டகம் நீந்தி வெளியே வர முனைந்தது. ஆனால் அதனால் காற்றைச் சுவாசிக்கும் அளவிற்கு நீருக்கு வெளியே தலைநீட்ட முடியவில்லை. ஒட்டகம் இறப்பதற்கு முன்பாகவே அவரும் இறந்தார்.  பறவைகள் மட்டுமே தப்பின. அவற்றிலும் பல தொடர்ந்து பறக்க முடியாமல் சோர்ந்து இறந்தன. வெள்ளம் வடிந்து, எஞ்சியிருந்த பறவைகளுக்கு சேறும் சகதியுமாகக் காட்சியளித்த நிலம் தெரிந்தது.  கூடவே உடல் வெடித்து இறந்து போயிருந்த ஒட்டகமும் ஞானியும் தெரிந்தார்கள். அவர்களது உடலில் சேகரித்து வைத்திருந்த விதைகள் ஒவ்வொன்றாக முளைக்கத் துவங்கின. நெடுங்காலத்திற்கு பறவைகள் கனிகளைத் தின்று விதைகளை நிலமெங்கும் விழச் செய்து காடுகளை முளைக்க வைத்தன. இங்கே முளைத்திருக்கும் செடிகளும், மரங்களும் கூட அவருடைய வயிற்றிலிருந்தோ அல்லது ஒட்டகத்தின் வயிற்றிலிருந்தோ முளைத்த விதையின் சந்ததிகளாக இருக்கலாம்.

 

கதையைச் சொல்லி முடித்ததும் கஸ்வீனீ கேட்டார் (என் நினைவு சரியாக இருக்குமானால் அவர் முகத்தில் சோர்வு அகன்றிருந்தது)

’இந்தக் கதை உனக்கு யார் சொன்னது? எங்கு கிடைத்தது?’.

’கடைத்தெருவில், வியாபாரம் இல்லாத நேரங்களில் நாங்கள் சொல்லிக் கொள்ளும் கதைகளில் ஒன்றே இது’.

’ஐயா, ஒருவேளை இந்தக் கதையை நீங்கள் எழுதி யாராவது படியெடுத்தால் பிழை எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா.  விதைகளை விழுங்கிய ஞானியின் கதை என்பதற்குப் பதிலாக விரைகளைத் தின்ற ஞானி என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டு விடப் போகிறார்கள்.  என்னதான் இந்த இரண்டிலிருந்தே உலகம் பெருகியிருந்தாலும் பொருள் மாறிவிடுமல்லவா’.

 

அவனிடமிருந்து அவசரமாக விடைபெற்று வீடு நோக்கி நடந்தார்.  வீடு திரும்பி இபின்-சினாவின் நூல்களை வாசிக்கத் துவங்கினார்.   அவருடைய புத்தகம் எழுதி முடிக்கப்படும் வரை அவர் ஒருநாளும் சோர்வாகவும், பொருளற்றும் உணரவில்லை.  

 

 

 

அண்டை வீட்டுப் பெண் மிக்ஸி அரைக்கும் சத்தம் கேட்டு நான் கனவிலிருந்து கண் திறந்தேன்.   ஒருவழியாக கஸ்வீனீயின் முடக்கத்தை தீர்ப்பதற்கான யோசனை கிடைக்கவும், மத்தியகாலத்தில் ஓர் இரவில் எனத் தொடங்கி பாதியில் நிறுத்தியிருந்த கதையை எழுதி முடித்தேன்.  

 

இதை அசட்டுத்தனமாகக் கூட நீங்கள் கருதலாம், எனக்கென்னவோ தோன்றுகிறது, நான் வரைந்திருந்த சீமூர்க் பறவைதான் நான் கண்ட கனவை தன் அலகில் கவ்விக் கொண்டு எட்டு நூற்றாண்டுகளைக் கடந்து, வசிட் நகரில் ஒரு கடைக்காரனுக்கும், கஸ்வீனீக்குமான உரையாடலாக மாற்றியிருக்குமென்று.

***

– பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

Please follow and like us:

1 thought on “சீமுர்க் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

  1. வணக்கம்
    மிக நெடிய காலம் கடந்து நான் படிக்கும் சிறுகதை. லியோ படத்தின் முன் விளம்பர நேரத்தில் படித்ததன் ஈர்ப்பு இப்பொழுது நினைவுக்கு வந்து படித்து முடித்தேன்.

    என் பால்ய காலத்தில் பார்ட்டி ஆபீஸில் முன்னேற்ற பதிப்பகத்தின் நூல்கள் அநேகம் கிடக்கும். கேட்பாரற்று கிடக்கும் அவைகளை நேசித்து வாசித்த நாட்கள் அவை. அதை விடுங்கள்.

    தங்களின் கதையின் போக்கும் அதில் உங்களின் நோக்கும் என்னை அடுத்த வேலைக்கு செல்லவிடாமல் ஈர்த்தது பொய்யில்லை.

    மேலும் உங்களின் வேறு படைப்புகளை தேடிவேண்டிய மனோபாவத்திற்கு தள்ளிய பாங்கு தங்களின் தனித்துவத்துவத்திற்கான.
    வெற்றி.

    ஒட்டகம் மற்றும் ஞாநியின் விதை சேகரித்தல் நூஹ் நபி அல்லது நோவா கப்பலை நினைவூட்டும் எனக்கு எப்போதும் அவைகளை இனி கடக்கும்பொழுது உங்களையும்.

    சீமூர்க்க்கும்,
    பாலசுப்பிரமணியன் பொன்ராஜூம் மறக்கவியலாத பெயராகிப் போனதில் வியப்பில்லை படைப்பின் வசீகரிப்பு வாசிப்பாளனை மிகைத்துவிடுவதால்.

    மஹ்ரீப்புக்கு முன்பாக அலுவலக விசிட், சர்வீஸ்விட்ட வண்டியை எடுக்கவேண்டியது. மகளுக்கு மருதாணி போடும் நபரை தேடவேண்டியது என இன்னும் சில வேலைகளை முடிக்கவேண்டியவைகளுக்கு இடையில் இதையும் வாசிக்க விதியாக்கிய இறைவனுக்கு நன்றி.
    வாழ்த்துகள்
    வாழிய நலம்
    சூழ.

    பேரன்புடன்
    -ரவி அல்லது.
    21/10/23.
    04:34 மா.

    பிகு:
    எத்தனை முறை டிக்லைன்ட் கொடுப்பது படித்து முடிப்பதற்குள்ளும் இதை எழுதி முடிப்பதற்குள்ளும் இந்த கைபேசியில்.
    இனி அவர்கள் வாசிப்பார்கள் என்னை அல்லது என்னிடம் .
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *