Psychology of Man’s possible evolution

 

உளவியலை பற்றி பேசவேண்டும். ஆனால், நான் சொல்லும் உளவியல், நீங்கள் இந்த பெயரில் அறிந்து வைத்திருப்பதற்கு முற்றிலும் வேறுபட்டது என்பதை முன்னதாகவே எச்சரித்து விடுகிறேன்.

தொடங்குவதற்கு முன்னால், கிட்டதட்ட வரலாற்றில் இப்போதுள்ள அளவிற்கு உளவியலானது இவ்வளவு கீழ்நிலையில் இருந்ததில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். உளவியல், அதன் தொடக்க கால தொடர்பு அறுந்து, அதன் அர்த்தங்களை இழந்துவிட்டது. இதனால், உளவியல் என்பது என்ன? அவை கற்றுணர்த்துவது என்ன? என்பதை வரையறை செய்யக்கூட முடியாத நிலை இப்போதுள்ளது.

உளவியல் சில சமயங்களில் “புதுமையான அறிவியல்” என்றழைக்கப்படுகிறது. இது தவறு. உளவியல் மிகத்தொன்மையான அறிவியல். துரதிர்ஷ்டவசமாக, அதன் மிக முக்கியமான அம்சங்களில் அது ஒரு மறக்கப்பட்ட அறிவியல்.

உளவியலை எவ்வாறு நாம் வரையறுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள, நவீன காலம் தவிர்த்து உளவியல் எவ்வாறாக இருந்து வந்துள்ளது என்பதை அவசியம் உணர வேண்டும். உளவியல் எப்போதும் அதன் அசலான பெயரில் இருந்ததில்லை. ஒன்று அல்லது பல காரணத்திற்காக உளவியல் எப்போதுமே தவறான அல்லது இரகசிய போக்குடனே இருந்து வந்துள்ளது. அதாவது, மதம், அரசியல் அல்லது ஒழுக்க நன்னெறி சார்ந்த வெவ்வேறு அடையாளங்களோடு, எளிதில் அடையாளம் காணமுடியாதபடி பயன்படுத்தப்பட்டது.

 

பல்லாயிரம் வருடங்களாக உளவியல், தத்துவத்தின் கீழ் இருந்தது. இந்தியாவில் அனைத்து விதமான யோகங்களின் சாரம் உளவியல் தான். அவை ஆறு தத்துவ தரிசனங்களாக விவரிக்கப்படுகிறது. சூஃபி போதனைகளும் உளவியல் ரீதியானைவை தான். ஒருவிதத்தில் ஓரளவிற்கு மதம் சார்ந்ததாகவும் ஓரளவு மீபொருண்மையானதாகவும் கருதப்படுகிறது. ஐரோப்பாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலகட்டங்களில் கூட, உளவியல் தொடர்பான பல படைப்புகள் தத்துவம் என்று குறிப்பிடப்படுகின்றன.  தத்துவத்தின் உட்பிரிவுகளான தர்க்கம், அறம், அறிதிறன், அழகியல், மனித மனத்தின் அல்லது புலன்களின் செயல்பாடுகளை குறித்தபோதிலும், உளவியல் தத்துவங்களை விட தாழ்ந்ததாகவும் மற்றும்  மனித இயல்பிற்கு அதிக முக்கியத்துவமில்லாத பக்கங்களோடு, கீழான நிலைகளோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது.

 

தத்துவம் என்ற பெயரில் அதன் இருப்புக்கு இணையாக, மதத்தோடு நீண்ட காலமாக இணைப்பிலுள்ளது. இதனால், மதமும் உளவியலும் ஒரே மாதிரியானவை அல்லது மதத்திற்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பின் உண்மைநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்று அர்த்தமில்லை. ஆனால், நாமறிந்த ஒவ்வொரு மதமும் நிச்சயமாக உளவியல் போதனைகளாகவும் பல பயிற்சிகளுடன் இணைக்கப்பட்டதாகவே வளர்ந்திருக்கிறது. எனவே மதத்தின் ஆய்வுகள் பெரும்பாலும்  உளவியல் ஆய்வுகளை அதனுள் உள்ளடக்கம் கொண்டவையாக இருக்கின்றன.

 

பல்வேறு நாடுகளின் மரபுவழி மத இலக்கியங்களில் உளவியல் பற்றிய சிறந்த படைப்புகளும் உள்ளன. தொடக்ககால கிருத்தவத்தில் “ஃபிலோகாலியா” என்ற பொதுப் பெயரில் வெவ்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களின் தொகுப்புகள் இருந்தன. கிழக்கு தேவாலயத்தில், குறிப்பாக துறவிகளின் பயன்பாட்டிற்காக, நம் காலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

 

உளவியல், தத்துவம் மற்றும் மதத்துடன் இணைக்கப்பட்ட காலத்தில், அது கலை வடிவத்திலும் இருந்தன. கவிதை, நாடகம், சிற்பம், நடனம், கட்டிடக்கலை கூட உளவியல் அறிவைப் பரப்புவதற்கான வழிமுறையாக இருந்தன. உதாரணமாக, கோதிக் கதீட்ரல்கள்(Gothic Cathedrals) உளவியல் தொடர்பில் அதன் முக்கிய பொருளில் இருந்தன.

தத்துவத்திற்கு முந்தைய பழங்காலங்களில், இப்போது நாம் அறிந்திருக்கும் மதமும் கலையும் தனி வடிவம் பெற்றிருந்தது, உளவியல், எகிப்து மற்றும் பண்டைய கிரேக்கத்தின் மர்மங்களும் அதன் புதிர் சார்ந்த வடிவமாக இருந்தன.

 

பின்னர், மர்மங்கள் மறைந்த காலத்திற்கு பின், உளவியல் என்பது குறியீட்டு போதனைகளின் வடிவத்தில் இருந்தது. அவற்றில் சில மதங்களுடன் இணைக்கப்பட்டன. சில இணைக்கப்படாதவைகளான, ஜோதிடம், ரசவாதம், மாந்திரீகம் மற்றும் நவீனமான மேசன்ரி, அக்கல்ட், ப்ரம்மஞானம் போன்ற துறைகளோடு உளவியல் இணைப்பிலிருந்தது.

 

இங்கு அவசியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில், இவ்வாறு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இருக்கும் உளவியல் அமைப்பை, அதன் கோட்பாடுகளை இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம்.

 

  1. முதலாவதாக, மனிதனின் உத்தேசிப்பில் அல்லது தன் கற்பனையால் மனிதனை கண்டுக்கொள்ளும் உளவியல் அமைப்பு. அதாவது, விஞ்ஞான உளவியல்.

 

  1. இரண்டாவது, மனிதன் என்னவாக இருக்கிறானோ, எவ்வாறாக பார்க்கப்படுகிறானோ அந்தப்பார்வையில் அல்லாமல், மனிதன் என்னவாக “ஆக” முடியும் என்கிற பார்வையில் அறிய முற்படும் அமைப்பாகும். அதாவது, அவனால்  சாத்தியப்படும் உளபரிணாமத்தின் பார்வையில் ஆக முடிகிற உளவியல்.

 

யதார்த்தத்தில் மேற்சொன்ன இரண்டாவது அமைப்பே அசலானவை. இதுவே பழைமையானதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறக்கப்பட்ட உளவியலின் தொடக்கத்தை விளக்கவும் முடியும்.

 

“மனிதனின் கற்றுணர்தலை” தன்னால் சாத்தியப்படும் உளப்பரிணாமத்தின் பார்வையில் புரிந்துகொள்ளும்போது தான் உளவியல் என்றால் என்ன? எனும் கேள்விக்கான பதிலை புரிந்துகொள்ள முடியும். உளவியல் என்பது மனிதனுக்கு சாத்தியமான உளப்பரிணாமத்தின் கொள்கைகளும், விதிகளும், உண்மைகளுமாகும்.

இங்கு, இந்த விரிவுரையில், மேற்சொன்ன கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே பேசுவேன். நம்முடைய முதல் கேள்வியென்னவென்றால், “மனிதனின் உளப்பரிணாமம்” என்றால் என்ன? இரண்டாவது, அதற்கென சிறப்பு நிலைகள் அவசியமா?

 

மனிதனின் மூலத்தை பற்றியும் அவனது முந்தைய பரிணாமத்தை பற்றியும் உள்ள நவீன பார்வைகளை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில், நமக்கு மனிதனின் மூலத்தை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. இதை முதலில் நாம் உணர வேண்டும். மனிதனின் பௌதீகமான அல்லது மனரீதியிலான மெய்யான பரிணாமச் சான்று  என எதுவுமில்லை.

 

இதற்கு மாறாக, மனிதகுலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதாவது, பத்து அல்லது பதிணைந்தாரயிரம் ஆண்டுகளாக, “ஒரு உயர்ந்த வகையான மனிதனின் குறியீடுகளை நாம் கண்டுகொள்ள முடிகிறது. அவற்றின் இருப்பை பழங்கால சிலைகளின்,  நினைவுச்சின்ன ஆதாரத்தின் அடிப்படையில் நிலை நாட்டமுடிகிறது. அவற்றை இப்போதுள்ள மனிதனால் பின்பற்றவோ, திரும்ப செய்யவோ முடியாது.

நமது அடிப்படை கருத்து என்னவென்றால், நாமறிந்த மனிதன் என்பவன் முழுமையடைந்த இருப்பை கொண்டவன்( a completed being) அல்ல. இயற்கை அவனை ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை வளர்க்கிறது. அதன் பின் அவனை விட்டு விலகிவிடுகிறது. பிறகு தன் சொந்த முயற்சியால் வளரலாம், அல்லது அவன் எப்படி பிறந்தானோ அது போலவே வாழலாம், இறக்கலாம். மேலும் வளர்ச்சிக்கான திறனையும் இழக்கலாம்.

 

இந்த விஷயத்தை பொருத்தவரை மனிதனின் உளபரிணாமம் என்பது குறிப்பிட்ட சில உள்ளார்ந்த அம்சங்கள் மற்றும் குணங்களின் அடிப்படையில் இன்னும் விருத்தியடையாமல் இருக்கிறது, அது தண்ணியல்பாகவும் வளராது என்று அர்த்தப்படுகிறது.

 

அனுபவமும் அவதானிப்பும் எதை காட்டுகிறது என்றால், இவ்வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட நிலைகளில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்றாகிறது. அதாவது, மனிதன் தன்னளவிலான கடும் முயற்சியினாலும், ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிநிலையை எட்டியவரின் உதவியினாலும், குறைந்தபட்சமாக இது சம்மந்தமான முறை சார்ந்த அறிவாவது கொண்டிருக்க வேண்டும்.

ஆக, முயற்சியில்லாமல் இவ்வுள பரிணாமம் என்பது சாத்தியமில்லை. பிறகு, எட்டியவரின் உதவியின்றியும் இது சாத்தியமில்லை.

 

இவ்வளர்ச்சி பாதையில் மனிதனானவன் “வேறுபட்ட இருப்பில்”(different being) ஆக வேண்டும். அதே சமயம் நாம் எந்த நோக்கத்தில், எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா மனிதராலும், இந்த வகையான வளர்ச்சி நிலையை பெறவோ வேறுபட்ட இருப்பாக ஆகவோ முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இது தனிப்பட்ட ஒரு மனிதனின் விசாரமாவதால் ஒட்டுமொத்த மனித குலத்தின் உளபரிணாமத்திற்கு அரிதான ஒன்றாகிறது. இதை சொல்லும் போது விசித்திரமாக தோன்றலாம். உண்மையில் மேலும் மேலும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது.

 

இதனை தொடர்ந்து நமக்கு இயல்பாக பல கேள்விகள் எழலாம்.

 

வேறுபட்ட இருப்பு நிலை என்றால் என்ன?

 

இப்பரிணாம வளர்ச்சியின் வழியில் மனிதன் ஒரு வேறுபட்ட இருப்பாக ஆவது என்றால் என்ன?

 

என்ன விதமான உள்ளார்ந்த அம்சங்களை, குணங்களை மனிதன் வளர்த்துக் கொள்ள முடியும்? இதனை எப்படி செய்ய முடியும்?

 

ஏன் எல்லா மனிதராலும் வளரவோ, வேறுபட்ட இருப்பை நோக்கி தன்னால் ஆகவோ முடியாது?

இது என்ன அநீதி?

 

இந்த கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் கூற முயற்சிக்கிறேன். முதலில் கடைசி கேள்வியிலிருந்து தொடங்குகிறேன்.

 

ஏன் எல்லா மனிதராலும் வளரவோ, வேறுபட்ட இருப்பை நோக்கி தன்னால் ஆகவோ முடியாது?

 

பதில் மிக சுலபமானது. ஏனெனில், அவர்களுக்கு அது தேவைப்படவில்லை.

ஏனென்றால், அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது மற்றும் அதைப் பற்றிய நீண்டகால ஆயத்தமில்லாமல் அதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது.

 

இதில் முக்கியமானது என்னவென்றால், ஒரு மனிதன் வேறுபட்ட இருப்பாக மாற, அவன் அதை மிக நீண்ட காலமாக விரும்ப வேண்டும். புற சூழ்நிலையின் அதிருப்தி காரணமாக எளிதில் கடந்துவிடும் மந்தமான ஆசைகள் போதுமான தூண்டுதலை உருவாக்காது.

 

மனிதனின் இப்பரிணாமமானது அவன் எதை பெறப் போகிறான்; அதற்காக அவன் என்ன  கொடுக்க வேண்டும் என்பது பற்றிய அவனது புரிதலை பொறுத்தது.

 

ஒரு மனிதனுக்கு இவ்வுளப்பரிமாணம் தேவையில்லையெனில், அதற்கு அவசியமான எந்த முயற்சியும் செய்யவில்லையெனில், அவன் ஒருபோதும் வளர்ச்சியடையப் போவதில்லை. ஆக, இதில் எந்த அநீதியும் இல்லை. மனிதன் தான் வேண்டாததை ஏன் பெற வேண்டும்? தான் என்னவாக இருக்கிறானோ அதில் திருப்தியடைந்த மனிதனை வேறுபட்ட இருப்பிற்கு கட்டாயப்படுத்துவது தான் அநீதியாகும்.

 

இப்போது வேறுபட்ட இருப்பின் பொருள் என்ன என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த கேள்வியை குறித்து உள்ள தரவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டால், மனிதன் தான் வேறுபட்ட இருப்பாக மாறும்பட்சத்தில் இப்போதிருந்திராத பல புது குணங்களையும், ஆற்றலையும் பெறுகிறான் என்ற கூற்றை காணமுடியும். இது மனிதனுக்கு  உள்ளார்ந்த வளர்ச்சியொன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் அமைப்புகளில் காணக்கிடைக்கும் பொதுவான தரவுகளாகும்.

 

ஆனால், இவை போதுமானதல்ல. இந்த புதுவிதமான ஆற்றல் குறித்த மிக விரிவான விளக்கங்களும் அவை எப்படி தோன்றுகின்றன, எங்கிருந்து வருகின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு எந்த வகையிலும் உதவாது.

நாமறிந்த சாதாரண கோட்பாடுகள் தவறவிட்ட இணைப்பு ஒன்றுண்டு.  அதாவது, மனிதனுக்கு தெரியாத மற்றும் தன்வசமில்லாத எந்தவொரு புது அதிகாரத்தையும் அல்லது ஆற்றலையும் பெறுவதற்கு முன்னதாகவே தனக்கு அது பற்றி தெரிந்ததாகவும், அது தன் வசமுள்ளதாகவும், அதனை உபயோகபடுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்று நினைப்பது தான்.

இதுவே தவறவிட்ட இணைப்பும், மிக முக்கியமான புள்ளியுமாகும்.

பரிணாமத்தின் வழியில், முன்னர் விளக்கியது போல, கடும் முயற்சியினாலும், உதவியினாலும் ஏற்கனவே தன் வசமிருப்பதாக எண்ணும் தன்மைகளை மனிதன்  அதனை பெற வேண்டும். ஆனால், அவன் இது பற்றி தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.

மனிதன் ஏற்கனவே தன்வசமிருப்பதாக கற்பனை செய்கிற, புதிய மற்றும் எதிர்பாராததுமான சக்தியையும், அதிகாரத்தையும் பெற முடிவதை  என்னவென்று தெளிவாக புரிந்து கொள்ள, மனிதன் அவனைப்பற்றிய பொதுவான அறிவிலிருந்து தொடங்க வேண்டும்.

இங்கு நாம் ஒரு முக்கியமான உண்மையை நோக்கி வருகிறோம்.

மனிதன், அவனுக்கு தன்னை தெரியாது. அவனுடைய வரம்புகள் என்ன என்பது பற்றி அவனுக்கு தெரியாது. அவனுடைய சாத்தியங்கள் பற்றி தெரியாது. உண்மையில், அவனுக்கு எந்த அளவிற்கு தன்னை தெரியாது என்பதும் அவனுக்கு தெரியாது.

மனிதன் எத்தனையோ இயந்திரங்களை கண்டுபிடித்திருக்கிறான். அதில் ஒரு சிக்கலான இயந்திரத்தை பயன்படுத்த, அதை கட்டுப்படுத்த சில காலம் மிக கவனமாக அதை ப்பற்றி தெரிந்துகொள்ளாமல் அந்த இயந்திரத்தை கட்டுப்படுத்தவோ, பயன்படுத்தவோ முடியாது என்பதையும் மனிதன் அறிவான். ஆனால், இந்த அறிவை அவன் தனக்கு பயன்படுத்துவதில்லை. ஏனெனில், மனிதன் கண்டுபிடித்த எந்த இயந்திரத்தையும் விட அவனே மிகவும் சிக்கலான இயந்திரமாவான்.

 

அவன் தன்னைப்பற்றி எல்லாவிதமான தவறான முடிவுகளை அபிப்பிராயங்களை கொண்டுள்ளான். முதலில் உண்மையிலேயே அவன் ஒரு இயந்திரம் என்பதை உணரவில்லை.

 

மனிதன் ஒரு இயந்திரம் என்று சொல்வதற்கான பொருள் என்ன?

 

அதாவது, தனக்குள்ளும் புறமும் சுதந்திரமான செயல்பாடு என எதுவும் அவனுக்கில்லை. புறநிலையின் தாக்கங்களால் இயக்கத்திற்கு கொண்டுவரப்படும் ஒரு இயந்திரம் அவன். அவனுடைய சிறு சிறு அசைவுகளும், செயல்களும், வார்த்தைகளும், கருத்துக்களும், உணர்ச்சிகளும், மனநிலையும் என எல்லாமும் புறநிலையின் தாக்கங்களாலேயே உருவாக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், கடந்தகால அனுபவங்களின் குறிப்பிட்ட சில நினைவுகளை தன்னளவில் கொண்டுள்ள, குறிப்பிட்ட ஆற்றல் இருப்பைக் கொண்டுள்ள மனிதன் போல் செயல்படும் ஒரு தானியங்கி.

 

இதிலிருந்து மனிதனால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், இதை அவன் உணர்வதில்லை. மேலும், எதையும் செய்யக்கூடிய திறன் இருப்பதாக தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறான். இப்படி சொல்லிக்கொள்வது தான் முதல் தவறாகும்.

 

மனிதனால் எதுவும் செய்ய முடியாது. அதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தும் அவன் செய்வதால் தான்  நடக்கிறது என்று மனிதன் நினைக்கிறான். ஆனால், மழை, குளிர் எப்படி நிகழ்கிறதோ அதுபோலத் தான் நிகழ்கிறது.

ஆங்கில மொழியில் மனிதனின் தனிப்பட்ட செயல்கள் தொடர்புடைய வாய்மொழி வடிவங்கள் இல்லை. இருப்பினும், மனிதன் சிந்திக்கிறான், படிக்கிறான், மனிதன் எழுதுகிறான் நேசிக்கிறான், வெறுக்கிறான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், அவை தானாக நிகழ்கின்றன.

மனிதனால் தன் சொந்த சித்தத்தில், சிந்திக்கவோ, பேசவோ, அசையவோ கூட முடியாது. பொம்மலாட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இழுக்கப்படுவது போல இங்கும் அங்கும் இழுக்கப்படுகிறான். அவன் இதை புரிந்துக்கொள்வானெனில், தன்னைப்பற்றி மேலதிகமாக கற்றுக்கொள்ளலாம். அதனூடாக, அவனுக்காக அனைத்தும் மாறத்தொடங்கலாம். இதை அவன் உணர்ந்துகொள்ளவோ, தன்னுடைய மொத்தமான இயந்திரத்தனத்தின் உண்மையை புரிந்துகொள்ளவோ முடியவில்லை எனில், இந்த உண்மையை ஏற்க விரும்பவில்லை எனில், அவனால் தன்னைப்பற்றி எதுவும் கற்றுக்கொள்ளவோ தெரிந்துகொள்ளவோ முடியாது. எதுவும் அவனுக்காக மாறப்போவதில்லை.

 

மனிதன் ஒரு இயந்திரம். ஒரு விசித்திரமான இயந்திரம். தான் ஒரு இயந்திரம் என்பதை சரியான சூழ்நிலையில், சரியாக கையாளுகிற முறையில் அறிந்து கொள்ள முடியும். இதை முழுமையாக உணர்ந்துவிட்டால், தான் இயந்திரமாக இருப்பதை முடிவிற்கு கொண்டு வரலாம்.

 

முதலில், மனிதன் என்பவன் ஒன்றல்ல. அவன் “பல”வாக இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவனிடம் நிரந்தரமான அல்லது மாற்றமுடியாத “நான்” என்ற ஒன்று இல்லை. ஒவ்வொரு கணமும் வெவ்வேறாக இருக்கிறான். ஒரு கணத்தில் ஒருவனாகவும், மற்றொரு கணத்தில் இன்னொன்றாகவும், மூன்றாவதில் மூன்றாக, கிட்டதட்ட முடிவேயில்லாமல் வெவ்வேறானவனாக இருக்கிறான்.

இந்த ஓர்மை அல்லது “அவன் ஒருவன் தான்” எனும் மாயை முதலில் அவன் ஓர் உடலாக இருப்பதாலும், பிறகு அவனது பெயராலும், மூன்றாவதாக புகுத்தப்பட்ட இயந்திரத்தனமான பழக்க வழக்கங்களினாலும், பிறகு கல்வியினால் பெறும் போலச் செய்தலினாலும் இம்மாயை உருவாகிறது. மேலும், ஒரேமாதிரியான உடல் உணர்ச்சிகளை கொண்டிருப்பது, ஒரே பெயரை கேட்பதும், அதேபோல முன்பிருந்த பழக்கங்களும், மனப்போக்கும் தன்னை கவனிக்கும்போது மாறாமல் இருப்பதனால், தான் “ஒன்றாக” எப்போதும் மாறாமல் இருப்பதாக நம்புகிறான்.

உண்மையில், மனிதனுக்கு “ஓர்மை” இல்லை. கட்டுப்படுத்தும் நிரந்தர “நான்” என்றவொன்று இல்லை.

 

ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு உணர்ச்சியும், ஒவ்வொரு ஆசையும், ஒவ்வொரு விருப்பும், வெறுப்பும் தனித்தனியே ஒருவொரு ‘நான்’. இந்த “நான்”கள் எந்த வகையிலும் ஒன்றோடொன்று இணைந்தவைகளாக இல்லை. ஒருங்கிணைவதும் இல்லை. அவை ஒவ்வொன்றும் புறசூழ்நிலையின் மாற்றங்களை பொறுத்திருக்கிறது.

 

அவற்றில் சில “நான்”கள் இயந்திரத்தனமாக சில “நான்”களை பின் தொடர்கின்றன. மேலும் சில “நான்”கள்  மற்ற “நான்” களால் தோன்றுகின்றன. ஆக, மொத்தமாக ஒரு ஒழுங்கோ, அமைப்போ இதில் இல்லை.

சில “நான்”கள் ஒரு குழுவாக இயல்பாகவே இணைந்தவைகளாக இருக்கின்றன. இதைப் பற்றி பின்னர் பேசுவோம். இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், ஒரு குழுவாக இணைகிற “நான்” களெல்லாம் தற்செயலான தொடர்புகளின் மூலமாகவும், தற்செயல் நினைவுகளின் மூலமாகவும் அல்லது கற்பனையான ஒற்றுமைகளின் மூலமாக மட்டுமே இணைகின்றன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இந்த “நான்”கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்தில் நமது மூளையின், மனதின் அல்லது அறிவுத்திறனின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே குறிக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் மொத்தமான பிரதிநிதித்துவதாய் ஆகிறது.

 

ஒரு மனிதன் ‘நான்’ என்று சொல்லும் போது மொத்தமான ‘தன்னை’ சொல்வதாக அர்த்தப்படுத்துகிறது. ஆனால், உண்மையில் அவன் இப்படியே அர்த்தப்படுத்தி நினைத்தால் கூட அது கடந்து விடும் எண்ணம், கடந்துவிடும் மனநிலை, கடந்துவிடும் ஆசை மட்டுமே. ஒருமணி நேரத்தில்  தான் இது தான் என்று சொன்னதையே முற்றிலும் மறந்துவிடுவான். அதே முடிவில், எதிர்க்கருத்தை, எதிர்பார்வையை வெளிப்படுத்துவான்.

மிக மோசமான விஷயம் என்னவென்றால், மனிதன் தன்னை நினைவு வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான சமயங்களில், தானாக வெளிப்பட்ட கடைசி “நானை”யே “தான்” என நம்புகிறான். அதாவது, அடுத்த நான் வெளிப்படும் வரை, கடைசி “நான்” நீட்டிக்கும் வரை. ஒவ்வொரு சமயத்தில் வெளிப்படும் “நானை” தான் என நம்புகிறான். சில சமயங்களில் முந்தைய நானிற்கும் பிந்தைய நானிற்கும் தொடர்பில்லாத போது முந்தையதின் விருப்பங்களை பிந்தைய “நான்” முந்தையதின் கருத்தை அல்லது விருப்பத்தை வெளிப்படுத்தாது.****

 

இப்போது இரண்டு கேள்விகளின் பக்கம் வருவோம்.

வளர்ச்சி என்றால் என்ன? மனிதன் வேறுபட்ட இருப்பில் ஆக முடிவது என்றால் என்ன? அல்லது என்ன விதமான மாற்றம் மனிதனில் சாத்தியமாகும்? மற்றும் எப்படி, எப்போது இந்த மாற்றம் தொடங்கும்?

தற்போது தன்வசமில்லாத, ஆனால் தன்னிடம் இருப்பதாக மனிதன் எண்ணும் சக்தியாலும், திறனாலும் மாறத்தொடங்கும் என்று ஏற்கனவே சொல்லபட்டது.

அப்படியென்றால், சக்திகளையும் திறன்களையும் பெறுவதற்கு முன், தன்னிடம் இருப்பதாக எண்ணும் சக்திகளுக்கான திறன்களுக்கான பண்புகளை மனிதன் தன்னில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பொருள்.

வளர்ச்சியானது தன்னை பொய்ப்பிப்பதின் அல்லது தன்னை ஏமாற்றிக் கொள்வதின் அடிப்படையில் துவங்குவதில்லை. மனிதன்  தன்னிடம் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது தெரிய வேண்டும். ஏற்கனவே விளக்கியது போல எந்த சிறப்பம்சமும், பண்புகளும் தன்வசமில்லை என்பதை அவன் உணர வேண்டும். அதாவது, தன்னிடம் இருப்பதாக எண்ணும் தனித்தன்மை, ஓர்மை, நிரந்தர “நான்” மற்றும் இன்னும் கூடுதலாக பிரக்ஞையும், சொந்த சித்தமும்.

இது மனிதனுக்கு அவசியம் தெரிய வேண்டும், ஏனெனில் தன்னிடம் சிறப்பம்சங்கள் வசமிருப்பதாக அவன் நம்பும் வரை, அதனை பெறுவதற்கு சரியான முயற்சியை, உழைப்பை செலுத்த மாட்டான். எப்படியென்றால், தன்னிடம் ஏற்கனவே இருப்பதாக ஒரு மனிதன் எண்ணிவிட்டால், ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கவோ, அதற்காக பெரிய விலை கொடுக்கவோ மாட்டான். அது போல.

இந்த தன்மைகளில் மிக முக்கியமானதும், மிகவும் தவறாக வழிநடத்துவதானது “பிரக்ஞை”(consciousness) என்பதாகும். பிரக்ஞை என்பதின் அர்த்தம் குறித்த  மனிதனது புரிதல் மாறும் போது தான் அவனில் மாற்றம் தொடங்கும்.

பிரக்ஞை என்றால் என்ன?

பெரும்பாலான சமயம், சாதாரண மொழியில் பிரக்ஞை என்பது சிந்தனைத்திறனுக்கு இணையாக மன செயல்பாடுகள் என்ற அர்த்தத்தில் உபயோகபடுத்தப்படுகிறது.

உண்மையில் பிரக்ஞை என்பது குறிபிட்ட வகையான மனிதனின் “விழிப்புணர்வு”, மன செயல்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டது. அதாவது, தன்னைப்பற்றிய விழிப்புணர்வு, தான் யார், எங்கிருக்கிறான் என்ற விழிப்புணர்வு, மேலும் தனக்கு என்ன தெரியும், தனக்கு என்ன தெரியாது என்ற விழிப்புணர்வு, இன்னும் பல.

ஒரு மனிதன் கொடுக்கப்பட்ட தருணத்தில் பிரக்ஞையோடு இருக்கிறானா இல்லையா என்பதை அவன் மட்டும் தான் அறிய முடியும். இது நீண்ட காலத்திற்கு முன்பே ஐரோப்பிய உளவியலின் ஒரு குறிப்பிட்ட சிந்தனையில் நிரூபிக்கப்பட்டது, அதாவது, தன்னோடு தொடர்புடைய குறிப்பிட்ட சில விஷயங்களை மனிதன் தன்னால் மட்டும் தெரிந்து கொள்ள முடியும்.

பிரக்ஞை குறித்த கேள்வியோடு பார்க்கும்போது, அதன் அர்த்தமாவது ஒரு மனிதன் தான் ஒரு தருணத்தில் தன் பிரக்ஞை இருக்கிறதா இல்லையா என்பதை அவன் மட்டும் தான் அறிய முடியும். அப்படியென்றால், மனிதனுடைய பிரக்ஞையின் இருப்பையும் இல்லாமையையும் புறவயமான செயல்பாடுகளின் அவதானிப்புகளை கொண்டு நிரூபிக்க முடியாது.

இந்த உண்மையை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால், இதனுடைய முக்கியத்துவம் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை. ஏனென்றால்,  பிரக்ஞையை மனதின் செயல்பாடுகளாக, மனதின் செயற்தொடர்ச்சியாக இணைத்தே எப்போதும் புரிந்து கொள்ளப்படுகிறது. மனிதன், தான் பிரக்ஞையில் இல்லை என்பது வரையுள்ள தருணத்தின்  இந்த புரிந்துணர்வை உணர்கிறான் எனில், அதன் பிறகு இந்த உணர்வை மறந்துவிடுவான் அல்லது பிறகு இந்த உணர்வை ஞாபகப்படுத்துவான். இதற்கு பெயர் பிரக்ஞை அல்ல. இது ஒரு உறுதியான புரிந்துணர்வின் ஞாபகம் மட்டுமே.

இப்போது அனைத்து நவீன உளவியல் சிந்தனைப்பள்ளிகளும் தவறவிட்ட மற்றுமொரு உண்மையின் பக்கம் இங்கே உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

அதாவது, மனிதனின் “பிரக்ஞை” அதன் பொருள் என்னவாகினும், அது எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. பிரக்ஞை இருந்தாலும் இல்லாவிட்டாலும். பிரக்ஞையையின் உச்ச தருணங்கள் நினைவுகளை தோற்றுவிக்கின்றன. மற்ற தருணங்களை மனிதன் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் விட மனிதனின் பிரக்ஞையானது தொடர்ச்சியான விழிப்புநிலை கொண்டது எனும் மாயையை உருவாக்குகிறது.

 

சில நவீன உளவியல் பள்ளிகள் பிரக்ஞையை முற்றிலுமாக மறுக்கின்றன. அத்தகைய சொல்லாடலின் அவசியத்தையும் மறுக்கின்றன. ஆனால் இது வெறுமென தவறான புரிதலின் தான்தோன்றித்தனமாகும்.

மற்ற சிந்தனைப்பள்ளிகளில் பிரக்ஞை என்ற பெயரில் அழைப்பார்கள் எனில், பிரக்ஞையின் நிலைகள் குறித்து பேசுவார்கள் எனில், அவற்றை எண்ணங்கள், உணர்வுகள், திடீர் உந்துதலாக, உணர்ச்சிநிலைகள் அர்த்தப்படுகின்றன. இவையெல்லாம் மனசெயல்பாடுகளுடன் பிரக்ஞையையை கலக்கும் தவறை அடிப்படையாகக் கொண்டது. அது பற்றி பிறகு பேசுவோம்.

உண்மையில், நவீன சிந்தனைக்கு பெரும்பாலான விஷயத்தில் இன்னும் இந்த பழைய முறையையே கையாளுகின்றன, அதாவது, பிரக்ஞைகளுக்கென தனி நிலைகள் இல்லை என.

உண்மை என்னவெனில், பிரக்ஞை புலப்படக் கூடிய, அவதானிக்க முடிகிற அளவில் தான் உள்ளது. நிச்சயமாக புலப்படுகிற, ஒருவர் தன்னை கவனிக்கிற முடிகிற ஒன்று தான்.

 

முதலாவது, அதற்கான கால அளவு: எவ்வளவு நேரம் பிரக்ஞையோடு இருந்தார் என்பதற்கான கால அளவு.

 

இரண்டவது, தோன்றுதலின் நிகழ்வு என்னிக்கை: எத்தனை முறை ஒருவர் பிரஞையோடு இருக்க முடிந்தது.

 

மூன்றாவது, அதன் எல்லையும், ஊடுருவலும்:  ஒருவன் என்ன அல்லது எதைப்பற்றிய பிரக்ஞையில் இருந்தான். இது மனிதனின் வளர்ச்சியோடு மிகவும் மாறுபடுகிற ஒன்று.

 

மேற்சொன்னதில் முதல் இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டால், பிரக்ஞையின் சாத்தியமான பரிணாமத்தின் கருத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

 

மிக முக்கிய உண்மையுள்ள இந்த கருத்து பழைய உளவியல் பள்ளிகள் நன்கு தெரிந்தே வைத்திருந்தன. உதாரணமாக, பிலோகாலியா(Philokalia) போன்ற உளவியல் பள்ளி. ஆனால், ஐரோப்பிய தத்துவமும், கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாக உள்ள உளவியலும் இதனை முற்றிலுமாக தவறவிட்டிருக்ருகிறது.

 

பிரக்ஞையை பிரத்யேக முயற்சியின் மூலம், பிரத்யேக கற்றலின் மூலம்  தொடர்ச்சியானதாகவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பது உண்மை.

 

பிரக்ஞையை எப்படி பயில முடியும் என்பதை நான் விளக்க முயற்சிக்கிறேன்.

 

ஒரு கை கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்கள் கவனிக்க முயற்சித்து, ‘நான் மீரான்’ ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்ற எண்ணத்தில் கவனம் செலுத்துங்கள். வேறெதைப்பற்றியும் எண்ணாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். வெறுமென கைகடிகாரத்தை ஓட்டத்தையும், உங்களையும் கவனியுங்கள். உங்கள் பெயர், உங்கள் இருப்பு மற்றும் நீங்கள் இருக்கும் இடம் ஆகியவற்றை கவனியுங்கள். மற்ற எண்ணங்களை சற்று ஒதுக்கி வையுங்கள்.

 

நீங்கள் இந்த சோதனையில் விடாப்பிடியாக இருப்பீர்களானால், இதை இரண்டு நிமிடங்களுக்கு செய்ய முடியும். இதுவே நீங்கள் பிரக்ஞையுடன் இருக்க அதிகபட்ச வரம்பு. இதே சோதனையை மீண்டும் நீங்கள் முயற்சித்தால் முதல்முறை செய்ததை விட கடினமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

ஒரு மனிதன் தன் இயல்பு நிலையில் பெரும் முயற்சியுடன் “தன்னிலை” பற்றி இரண்டு நிமிடத்திற்கும் குறைவாகவே பிரக்ஞையில் இருக்க முடியும் என்பதை இச்சோதனை காட்டுகிறது.

 

இச்சோதனையை சரியாக செய்யும்பட்சத்தில் “மனிதன் தன்னைப்பற்றிய பிரஞையில் இல்லை.” என்ற முக்கிய முடிவிற்கு ஒருவர் வருவார்.

 

தான் பிரக்ஞையில் இருப்பதான மாயையை நினைவுகளும், எண்ணங்களின் செயல்பாடுகளும் உருவாக்குகின்றன.

 

உதாரணத்திற்கு, ஒரு மனிதர் திரையரங்கிற்கு செல்கிறார். அது அவருக்கு பழக்கமானது எனில், அவர் அங்கு இருக்கும் போது குறிப்பிட்ட ஒரு  பிரக்ஜையோடு இருப்பதில்லை. இருப்பினும், அவர் அங்கு நடக்கும் விஷயங்களை பார்க்க முடியும், அவதானிக்க முடியும், அல்லது அங்கு நடக்கும் நிகழ்ச்சியை விரும்பி கண்டுகளிக்கவோ, விரும்பாமலோ இருக்க முடியும. மேலும், அங்கு சந்தித்த மக்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியும், இன்னும் பல.

 

அவர் வீடு திரும்பிய பிறகு, தான்  திரையரங்கில் இருந்ததை நினைவுபடுத்தி பார்க்கிறார். நிச்சயமாக, தான் பிரக்ஞையோடு  இருந்ததாக நினைக்கிறார். ஆக, அவருடைய பிரக்ஞை குறித்து எந்த சந்தேகமும் இருக்கவில்லை. இன்னும் அவர் உண்மையாக, சிந்தித்து, அவதானித்து செயலாற்ற முடியும் போது அவரது பிரஞை முற்றிலுமாக இல்லாமலிருக்கும் என்பதை அவர் உணர்வதில்லை.

 

பொது விளக்கத்தில், மனிதனுக்கு சாத்தியமாகும் பிரக்ஞை நிலைகள் நான்கு. அவையாவன, உறக்க நிலை(sleep), விழிப்பு நிலை(waking state), சுய-பிரக்ஞை நிலை(self-consciousness), புறப்பிரஞை நிலை(Objective Consciousness) ஆகும்.

 

ஆனால், இந்த நான்கு பிரஞை நிலைகளும் அவனுக்கு சாத்தியமாயினும் உண்மையில் மனிதன் இரண்டு நிலைகளில் மட்டுமே வாழ்கிறான். வாழ்க்கையில் அவனது ஒரு பகுதி உறக்கத்தில் கடந்து விடுகிறது, மற்றொரு பகுதியை விழிப்பு நிலை என்றழைக்கலாம். இருந்தாலும், யதார்த்தத்தில் அவனது விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் சிறிதளவிலான வித்தியாசம் தான் உள்ளது.

 

சாதாரண வாழ்க்கையில், மனிதனுக்கு objective consciousness பற்றி ஒன்றும் தெரியாது, மற்றும் இந்த பாதையில் எந்தவொரு பயிற்சியோ சோதனைகளோ சாத்தியமில்லை.

 

மூன்றாவது நிலையான, சுயப்பிரக்ஞை நிலை. இது தன்வசம் உள்ளதாக நம்புகிறான். மனிதன் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான். இருப்பினும், உண்மையில் மிக அரிதான தருணங்களில் மட்டும் தான் அவனால் பிரக்ஞையோடு இருக்க முடியும். இருந்த போதிலும் அவனால் அதை இனங்காண முடியாது. ஏனெனில், அதன் அர்த்தமென்ன என்பது பற்றி அவனுக்கு தெரியாது.

 

பிரக்ஞையின் சில துண்டு அனுபவங்கள் விதிவிலக்கான சில தருணங்களில் வரும். உச்சமான உணர்ச்சி வசப்படும் நிலைகளில், ஆபத்தான தருணங்களில், புதிய அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளில் அல்லது சில சமயம் சாதாரணமான தருணங்களில் குறிப்பிட்டு எந்த நிகழ்வும் நடக்காத போது வரும்.

 

ஆனால், அவனது சாதாரண நிலையில் மனிதனுக்கு அதன் மீது எந்த அதிகாரமும் இல்லை.

 

 

வழக்கமான நினைவு அல்லது நினைவின் தருணங்களை பொருத்தவரை, உண்மையில் நாம் பிரக்ஞையிலிருந்த தருணங்களை மட்டுமே நினைவாகக் கொள்கிறோம். இவ்வாறு இருப்பதை நாம் உணர்வதில்லை.

 

நினைவு என்றால் என்ன, நாம் கொண்டுள்ள வெவ்வேறு வகையான நினைவுகள் பற்றியும் பிறகு விளக்குகிறேன்.

 

இப்போது உங்கள் கவனத்தை, உங்கள் நினைவு பற்றி உங்கள் சொந்த அவதானிப்பின் பக்கம் திருப்ப விரும்புகிறேன்.

 

அப்போது உங்கள் விஷயங்களை நீங்கள் வெவ்வேறு விதங்களில்  நினைவில் கொண்டுள்ளீர்கள் என்பதை கவணிப்பீர்கள்.

 

சிலவற்றை நீங்கள் தெளிவாக நினைவில் வைத்திருப்பீர்கள், சில மிக தெளிவில்லாத மங்கலான நினைவாக இருக்கும். சில உங்கள் நினைவிலேயே இருக்காது. அவை நடந்தது என்பது மட்டும் தெரியும்.

 

உண்மையில் எவ்வளவு குறைவாக நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரும் போது வியப்படைவீர்கள். ஏனெனில், நீங்கள் பிரக்ஞையோடு இருந்த தருணங்கள் மட்டும் ஞாபகத்தில் இருப்பதால் இது இவ்வாறு நடக்கிறது.

 

ஆக, மூன்றாவது நிலை பற்றி சொல்லும் போது, மனிதனுக்கு அவ்வப்போது நிகழ்கிற சுயப்பிரஞையின் தருணங்கள், அதனோடு வரும் சூழ்நிலைகளின் தெளிவான நினைவுகளை விட்டு செல்கிறது என்று சொல்லலாம். ஆனால், அவனுக்கு அதன் மீது எந்த ஆதிக்கமும் இல்லை.

 

புறசூழ்நிலையின் கட்டுப்பாடாலும், உணர்ச்சி நிலைகளின் நினைவுகளாலும் தானாக வந்து தானாக செல்கிறது.

 

ஒரு கேள்வியெழுகிறது. அதாவது இந்த சன நேர பிரக்ஞை தருணங்களின் மீது அதிகாரத்தை பெறுவது சாத்தியமா? அதாவது, அடிக்கடி தூண்டுவதும் அல்லது அதை நீட்டிக்க செய்வதும் அல்லது நிரந்தரமாக்குவதற்கான அதிகாரத்தை பெறுவது சாத்தியமா?

 

இன்னொரு வார்த்தையில் சொன்னால் பிரக்ஞையிலேயே இருப்பதற்கு சாத்தியமா?

 

இது முக்கியமான புள்ளியாகும்.  இந்த புள்ளியையே கோட்பாட்டினளவில் கூட விதிவிலக்கின்றி நவீன உளவியல் பள்ளிகளால் முற்றிலுமாக தவறவிடப்பட்ட புள்ளியாகும். இதனை நம் பயில்தலின் தொடக்கத்திலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

 

சரியான முறைகளின் மூலமும், சரியான உழைப்பின் மூலமும், அவை உணர்த்தும் அனைத்தையும் கொண்டு மனிதனால் தன் பிரக்ஞையின் மீதான அதிகாரத்தை பெற முடியும். பிரக்ஞையில் இருக்கவும் முடியும். தற்போதைய நிலையில் அவை எதை உணர்த்தும் என்பதை நாம் கற்பனை கூட செய்யவில்லை.

 

இம்முக்கியமான கருத்தை புரிந்து கொண்ட பிறகே உளவியலைப் பற்றி தீவிரமாக பயில்வதற்கு சாத்தியமாகும்.

 

இப்பயில்தலை நம் பிரக்ஞை நிலைக்கான தடைகள் பற்றிய விசாரணையிலிருந்து தொடங்க வேண்டும். ஏனெனில், குறைந்தபட்சமாக சில தடைகளை நீக்குவதன் மூலமாக மட்டுமே நம் பிரக்ஞை வளரத்தொடங்கும்.

 

பின்வரும் உரைகளில் இந்த தடைகள் பற்றி பேசுவேன். மிகப்பெரும் தடையாக இருப்பது நம்மை பற்றியுள்ள நம் அறியாமையும், நமக்கு நம்மைப் பற்றி குறிப்பிட்ட எல்லைவரை ஓரளவிற்காவது தெரியும் என்பதும், நாம் நம்மை குறித்து உறுதியாக இருக்க முடிகிறதும் ஆகும்.  உண்மையில் நம்மைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது மற்றும் சிறு விஷயங்களில் கூட நாம் நம்மை  குறித்து உறுதியாக இருக்க முடிவதில்லை.

இப்போது நாம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது உளவியல் என்பது “தன்னைப் பயிலுதல்”(self-study) என்பதாகும். இது உளவியலின் இரண்டாவது வரையறை.

 

ஒருவர் விண்ணியலைப் பயில்வது போல, ஒருவர் உலவியலைப் பயில முடியாது. அதாவது, தண்ணிலிருந்து வேறுபட்ட ஒன்றாக பயில முடியாது.

 

அதே சமயம், ஒரு புதிய மற்றும் சிக்கலான இயந்திரத்தை பயில்வது போல் “தன்னை பயில வேண்டும்.

 

இந்த இயந்திரத்தின் பாகங்கள்  தெரிந்திருக்க வேண்டும், அதன் மைய செயலப்பாடுகளையும், சரியாக இயங்குவதின் நிலைகள் குறித்தும், தவறாக இயங்கும் காரணத்தையும், இன்னும் தனித்துவமான மொழிபயன்பாடுகளின் துணையில்லாமல் விளக்க முடியாத பல விஷயங்களும் இந்த இயந்திரத்தை பயில்வதற்கு அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

 

மனித இயந்திரமானது ஏழு விதமான வெவ்வேறு செயல்பாடுகளை கொண்டது.

 

  1. சிந்தனை செயல்பாடு(Thinking function).
  2. உணர்ச்சி செயல்பாடு(emotional function).
  3. உந்துணர்வு செயல்பாடு( instinct function)(உடலின் அனைத்து உள்ளார்ந்த செயல்பாடுகளும்).
  4. நகர்வு செயல்பாடு(moving function)(அனைத்து புறச்செயல்பாடுகள், அசைதல், நகர்தல், இன்னும் பல).  
  5. பாலுணர்வு செயல்பாடு(Sex Function)(ஆண், பெண்ணுடைய அனைத்து வெளிப்பாடுகளும்).

 

இந்த ஐந்தைத் தவிர இன்னும் இரண்டு செயல்பாடுகள் உள்ளன. இந்த செயல்பாட்டிற்கு சாதாரண மொழியில் சொற்கள் இல்லை. அது உயர்நிலை பிரக்ஞையில் மட்டும் தோன்றக்கூடிய தாகும்.

 

ஒன்று, உயர்நிலை உணர்ச்சி செயல்பாடு. இது சுயப்பிரக்ஞை(self-consciousness) நிலையில் தோன்றக்கூடியது.

மற்றொன்று உயர் மன செயல்பாடு. இது  புறப்பிரக்ஞை(Objective Consciousness) நிலையில் தோன்றக்கூடியது.

 

இந்த நிலை பிரக்ஞையில் நாம் இல்லாததால் இதன் செயல்பாடுகளை பயிலவோ, சோதனை செய்யவோ முடியாது, மற்றும் இதை எவர் அடைந்துள்ளாரோ, எவர் அனுபவித்துள்ளாரோ அவரிடமிருந்து நேரடியற்ற முறையில் மட்டுமே அது பற்றி கற்றுக்கொள்ள முடியும். வெவ்வேறு நாடுகளின் மதங்களில் தொடக்க கால தத்துவ இலக்கியத்தில் பிரக்ஞையின் உயர்நிலைகளுக்கும் உயர் செயல்பாடுகளுக்கும் பல குறிப்புகள் உள்ளன.

 

இக்குறிப்புகளை புரிந்து கொள்வதில் கூடுதல் சிக்கலுள்ளது. இந்த குறிப்புகளில் பிரக்ஞையின் உயர்நிலைகளை பிரித்தறிவதில் குறைபாடுகள் உள்ளன.

 

சமாதி நிலை அல்லது ஆனந்த நிலை அல்லது உள்ளார்ந்த ஒளிர்வு நிலை அல்லது சமகால எழுத்துக்களில் பிரபஞ்சப் பிரக்ஞை(cosmic consciousness) என்றழைக்கப்படும் நிலைகள் மேற்சொன்ன இரண்டு நிலைகளில் ஒன்று அல்லது மற்றொன்றை குறிக்கிறது. சில சமயம் சுயப் பிரக்ஞையின் அனுபவத்தை குறிக்கிறது. சில சமயம் புறப்பிரக்ஞையை குறிக்கிறது.

 

இடைநிலையான சுயப் பிரக்ஞையை விட புறப்பிரக்ஞை நிலை பற்றி முடிவு செய்கிற தரவுகள் அதிகமுள்ளன. இது விசித்திரமாக தோன்றலாம். இருப்பினும், முந்தையது வந்த பிறகு தான் பிந்தியது வரும்.

 

தன்னைப்பயில்தலை முதல் நான்கு செயல்பாடுகளான சிந்தனை(Thinking), உணர்ச்சி(Emotional), உந்துணர்வு(Instintive), நகர்வு(Moving) செயல்பாடுகளிலிருந்து தொடங்க வேண்டும்.

 

பாலுணர்வு செயல்பாடுகளை பின்னதாகத் தான் பயில முடியும். மேற்சொல்லப்பட்ட நான்கு செயல்பாடுகளை போதுமான அளவு புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் தான் முடியும். சில நவீன கோட்பாடுகளுக்கு மாறாக, பாலின செயல்பாடுகளை உண்மையில் பின்னறிய வேண்டியதாகவே உள்ளது. அதாவது, முதல் நான்கு செயல்பாடுகள் முன்னதாக முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு அவற்றால் நெறிப்படும் போது பிற்காலத்தில் தோன்றுவதாகும்.

 

அதே சமயம், பாலுணர்வு செயல்பாடுகளில் ஒழுங்கின்மையோ, வழக்கத்திற்கு மாறான தீவிர சிக்கல்களிருந்தால், சுய-விருத்தியை, ஏன் தன்னைப்பயில்தலையும் சாத்தியப்படாமல் ஆக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, இப்போது நான்கு முக்கிய செயல்பாடுகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சிந்தனை செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு ஒரு தெளிவிருப்பதாகவே எடுத்துக்கொள்கிறேன். இங்கே அனைத்து செயல்பாடுகளும் இங்கே சேர்க்கப்படுகின்றன: மனப்பதிவுகளை உணர்தல், கருத்துக்கள் மற்றும் சித்தரிப்பின் உருவாக்கம், காரண காரிய அறிவு, ஒப்பிடுதல், ஏற்பது, புறக்கணிப்பது, சொற்கள், பேச்சு, கற்பனையின் உருவாக்கம் இன்னும் பல.

 

இரண்டாவது செயல்பாடு/உணர்ச்சிகள்: மகிழ்ச்சி, துன்பம், பயம், வியப்பு, இன்னும் பல. உணர்ச்சிகள் எண்ணங்களிலிருந்து எந்த வகையில் வேறுபட்டது என்பது குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தாலும், இது குறித்த உங்கள் அனைத்து கோணங்களையும் சரிபார்த்துக் கொள்ள உங்களுக்கு இந்த அறிவுரையை நான் வழங்கத்தான் வேண்டும்.

 

சாதாரணமான நம் பேச்சுக்களிலும் சிந்தனையிலும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கலக்கிறோம். ஆனால், “தன்னை பயில்வதற்கான” தொடக்கத்திற்கு எது எது எதனோடு தொடர்புடையது  என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்.

இவ்விரண்டு செயல்பாடுகளை தொடர்ந்து அடுத்ததான உந்துணர்வு மற்றும் நகர்வு செயல்பாடுகள். இதை புரிந்து கொள்வது நீண்ட காலம் பிடிக்கும். ஏனெனில், எந்தவொரு உளவியல் அமைப்பிலும் இந்த செயல்பாடுகளை சரியான விதத்தில் விளக்கப்படவோ, பிரிக்கவோ இல்லை.

இந்த “உந்துணர்வு” என்னும் சொல், பொதுவாக தவறான அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் எந்த அர்த்தமுமில்லாமல்  உபயோகத்திலுள்ளது. குறிப்பாக,  உந்துணர்வை பொதுவாக புறவயமான செயல்பாடுகளாக சொல்லப்படுகிறது.  உண்மையில், அவை, சில சமயம் உணர்ச்சி செயல்பாடுகளாகவும், நகர்வு செயல்படுகளாகவும் உள்ளது.

 

மனிதனின் உந்துணர்வு செயல்பாடுகள் அதனுள்ளாகவே நான்கு வெவ்வேறு பிரிவுகளாக உள்ளன.

 

முதலாவது அனைத்து உள்ளார்ந்த இயக்கம், அனைத்து உடல் சார்ந்த செரிமானம், உணவு உட்கொள்ளல், சுவாசம், இரத்த ஓட்டம், அனைத்து உள்ளுறுப்புகளின் இயக்கம், புது செல்களின் உருவாக்கம், கழிவு நீக்கம், சுரப்பிகளின் இயக்கம் இன்னும் பல.

இரண்டாவது, ஐம்புலன்களின் உணர்வுகளான  பார்த்தல்,கேட்டல்,முகர்தல்,சுவைத்தல், தொடுதல்,மற்றும் சுமை உணர்வு, வெப்ப உணர்வு, வறட்சி அல்லது குளிர் உணர்வு, இன்னும் பல. மகிழ்ச்சியான அல்லது வெறுப்பூட்டுகின்ற அணைத்து சாதாரண உணர்வுகளும்.

 

மூன்றாவது, அனைத்து உடல் சார்ந்த உணர்சிகள், அதாவது, அனைத்து உடல் சார் உணர்வுகள் ஒன்று மகிழ்ச்சியாகவோ, வெறுப்பாகவோ இருக்கும். அணைத்து விதமான வலிகள், பிடிக்காத சுவை, பிடிக்காத மனம்,மற்றும் மகிழ்வூட்டுகிற உடல் சார்ந்த உணர்வுகளான பிடிக்கின்ற சுவை, மனம் இன்னும் பல.

 

நான்காவது, தன்னியல்பான செய்கைகள், இன்னும் சிக்கலான, சிரிப்பு, கொட்டாவி, மற்றும் அனைத்து விதமான உடல் சார்ந்த நினைவுகளான, சுவை, மனம், வலி,முதலியவை உண்மையில் உள்ளார்ந்த தன்னியல்பு செய்கைகள்.

நகர்வு செயல்பாடுகள், அணைத்து வெளிப்புற இயக்கங்களான, பேசுதல் நடத்தல், உண்ணுதல் மற்றும் அது சார்ந்த நினைவுகள். கீழே விழும் பொருளை எந்த யோசனையுமின்றி பிடிப்பது போன்றவை சராசரி மொழி பயன்பாட்டில் உந்துணர்வு செயல்பாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவை நகர்வு செயல்பாடுகள் சார்ந்தவையாகும்

நகர்வு செயல்பாடுகளுக்கும் உந்துணர்வு செயல்பாடுகளுக்குமான வேறுபாடுகள் மிகத்தெளிவாகவும் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளது. அதாவது, அணைத்து உந்துணர்வு செயல்பாடுகளும் விதிவிலக்கின்றி இயல்பானதும், அதனை உபயோகப்படுத்த அல்லது கற்றுக்கொள்வதற்கு எந்த அவசியம்மும் இல்லை என்பதையும்

இன்னொரு புறம், எந்த நகர்வு செயல்பாடுகளும் இயல்பானது அல்ல. அதை ஒரு குழந்தை நடக்கப்பழகுவதை போல அல்லது ஒருவர் எழுத, வரைய பழகுவதைப் போல அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவர் நினைவிற் கொள்ள வேண்டும்.

இந்த சாதாரண நகர்வு செயல்பாடுகள் தவிர சில விசித்திரமான நகர்வு செயல்பாடுகளும் உள்ளன. அவை மைந்த இயந்திரத்தின் உபயோகமற்ற வேலைகளை குறிக்கின்றன. மேலும், இயற்கையின் அல்லது இயல்பின் நோக்கமும் அல்ல. ஆனால், மனிதனின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. மற்றும் பெருமளவிலான அவனது ஆற்றலை உபயோகிக்கிறது. அதாவது, கனவுகளின் உருவாக்கம், கற்பனை, பகற்கனவு, தனக்குத்தானே பேசுதல், பேச வேண்டும் என்பதற்காகவே பேசுவது மற்றும் கட்டுக்கு உட்படாத, கட்டுப்படுத்த முடியாத  அனைத்து பொதுவான வெளிப்பாடுகளும் இதில் அடங்கும். இந்நான்கு செயல்பாடுகளான, சிந்தனை, உணர்ச்சி, உந்துணர்வு, மற்றும் நகர்வு செயல்பாடுகளின் அணைத்து வெளிப்பாடுகளையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நம்மில் அவதானிக்க வேண்டும். இவ்வகையான சுய-அவதானிப்பு என்பது, அதாவது, பிரக்ஞையின் நிலைகளை, அதன் பலவிதமான செயல்பாடுகளை சரியான முறையில் கையாளும் போது, அவை “தன்னை பயில்தலின்” அடிப்படையாக அமைகிறது. இதுவே, உளவியலின் தொடக்கமாகும்.

 

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது செயல்பாடுகளை அவதானிக்கும் போது, அதே நேரத்தில் செயல்பாடுகளோடு தொடர்புடைய பிரக்ஞை நிலைகளையும் அவதானிப்பது உபயோகமாக இருக்கும்.

முதலில் மூன்று பிரக்ஞை நிலைகளான உறக்கம், விழிப்பு நிலை மற்றும் சுயப்பிரக்ஞை நிலைகளை எடுத்துகொள்வோம். பிறகு, நான்கு செயல்பாடுகளான சிந்தனை, உணர்ச்சி, உந்துணர்வு, நகர்வு செயல்பாடுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வோம்.

நான்கு செய்லபடுகளில் எல்லாமும் உறக்க நிலையில் தாமாக வெளிப்பட்டு விடுகின்றன. ஆனால்,அவற்றின் வெளிப்பாடுகள் ஒழுங்கில்லாத அல்லது நம்பத்தகுதியில்லாததாகவும் இருக்கும். அவற்றை நாம் எந்த வகையிலும், வழியிலும் உபயோகிக்க இயலாது. அவை தாமாக தோன்றி தாமாக மறையும்.

 

விழிப்பு நிலை பிரக்ஞையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நமக்கு தக்கவாறு அவை நமக்கு உதவும். பல பிரமைகளை உருவாக்கக்கூடியதாக இருப்பினும் அதன் முடிவுகள், அவதானிப்புகளை ஒப்பிட்டு சரிபார்த்து, நேர்படுத்த முடியும். நம் சாதாரண நிலைகளில் நம்மிடம் எதுவுமேயில்லை. ஆக, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். நாம் இந்த “நிலை”யில் கண்டுகொண்ட தவறான அவதானிப்புகள், தவறான கோட்பாடுகள், தவறான முடிவுகளின் அளவை அறிந்திருக்கும் பட்சத்தில் நம்மை நாம் நம்புவதை முற்றிலும் நிறுத்தி விட வேண்டும். ஆனால், மனிதன் அவனுடைய அவதானிப்புகள் அவனைப்பற்றிய கோட்பாடுகள் எத்தனை ஏமாற்றுதனமானது என்பதை அவன் உணர்வதில்லை. மேலும், தொடர்ந்து அதனை நம்புபவனாகவும் இருக்கிறான். இந்த ஒன்று தான் மூன்றாம் நிலை பிரக்ஞையான சுய-பிரக்ஞை நிலை அனுபவத்தின் தொடர்போடு தாமாக வெளிப்படும் செயல்பாடுகளை, அதன் அரிதான தருணங்களை அவதானிப்பதிலிருந்து மனிதனை தடுக்கிறது.

இவை எல்லாம் எதை சொல்கிறது என்றால், நான்கு செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மூன்று பிரக்ஞை நிலைகளில் ஒவ்வொன்றிலும் வெளிப்படுகிறது என்பதாகும். ஆனால், பிரக்ஞை நிலைகளோடு தொடர்புறும் நான்கு செயல்பாடுகளின் வேறுபாட்டை கருதுவதற்கு முன், மனிதனின் பிரக்ஞையும், மனிதனின் செயல்பாடுகளும் வேறுபட்ட நிகழ்வு, இயல்பும் வேறுபட்டது, வேறுபட்ட காரணங்களை சார்ந்தது மற்றும் ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்று இருக்கும் என்பதை அவசியமாக புரிந்து கொள்ள வேண்டும். “பிரக்ஞை இல்லாமல் செயல்பாடுகளும் இருக்கும். செயல்பாடுகள் இல்லாமல் பிரக்ஞையும் இருக்கும்.”  

***

(தொடரும்..)

ஹபீப் ஹாதி. A. Y.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *