மூன்று முறை
வாழ்விலிருந்து இறப்புக்கு போகும் போது
இப்படித்தான் சிலுவையை நீட்டுவாயா
எனக் கேட்டார் தாத்தா
அம்மா பதறிப்போய் விட்டாள்
மன்னித்துவிடுங்கள்
மன்னித்துவிடுங்கள்
என மூன்று முறை சொன்னாள்
தாத்தா சிலுவையை பார்த்தார்
அது இடதிலிருந்து வலதுக்கும்
வலதிலிருந்து இடதுக்கும்
போய்க்கொண்டிருந்தது அவரும்
மன்னித்துவிட்டேன்
மன்னித்துவிட்டேன்
என மூன்று முறை சொன்னார்
நான் நிமிர்ந்து சிலுவையை பார்த்தேன்
இடதிலிருந்து வலதுக்குச் சென்ற சிலுவை
மீண்டும் இடதிற்கு வரவேயில்லை.
***
கன்னிக்கடல்
பேச்சு மூச்சற்றுக் கிடந்தாலும்
இரவில் மட்டும் சித்திரம் வரையும்
கன்னியொருவனை நான் அறிவேன்
அவனிடம் நான் பெற்ற கடலென்பது
சொல்லில் மாளாதது
புகழ்பெற்ற தனது இரவுகளின் மேல் அவன்
வரையும் நாகங்கள் ஒரே அளவுள்ளவை
வீடு துறந்து
கடற்கரை தங்கி
உவர்மணல் அருந்தி
பிஞ்சு சம்பைகளை உண்பன.
***
ஒருநாள் முழுக்க
கடற்கரையில் படுத்தெழுந்தவன்
மறுநாள் வீடுவந்து சித்திரமிட்டான்
அதிலே ஒவ்வொரு அந்தியிலும்
ஒரு நாகமொன்று கடலில் இறங்குவதாகவும்
அது நெளிய நெளிய
கடல் நெளிவதாகவும்
அது திமிர திமிர
கடல் திமிருவதாகவும் இருந்தது.
•••
அகல விரிந்த கண்களும்
கூனிக்குறுகிய தோள்களுமாய்
படபடத்தபடியே மருவிக் கிடப்பவன்
ஒவ்வொரு நாளின் இரவிலும்
உஷ்ணம் திளைக்க கத்துவான்
வீட்டு சுவரெல்லாம் அவன் இழுவ இழுவ
அவைகளும் செழித்து சித்திரங்களாகும்
பூத்து பூத்து கடலை நோக்கி ஓடியும்
அலை தொடாத முள்ளிப்புல்கள் நாகங்களாகும்.
••••
கடல் கொதிக்கின்ற இரவென்பது
வெறுமனே கடல் கொதித்தல் அல்ல
கரையோரம் உறங்கும் நாகங்கள்
அந்திக் கடலில் இறங்கிய
அந்த ஒற்றை நாகத்தை புணரும் ஆசுவாசம்
அவை சேர்கையில் எழும் சலசலப்பே சீற்றம்
இதை வரைய முயன்ற இரவுகளில்தான்
அப்படி கத்தினாயா விடலை ஓவியனே!
உனது செந்தாழம்பூ உடல்கள்
விடிந்ததும் எங்கு ஒழிந்து கொள்கின்றன
இந்த அலைகளின் நிழலுக்கடியில் தானா!.
•••••
முற்றத்தில் நாகங்கள் வந்து போன தடமிருக்க
விடிகாலையில் எல்லோருக்கும் பேரதிர்ச்சி
இரவு முழுக்க கன்னியவனின்
உஷ்ண இடைஞ்சலுமில்லை
துளிகூட நித்திரையில் பாதகமுமில்லை
என்னாகிற்று இந்த இரவுக்கு
அவர்களின் மேனி முழுக்க அதிசயம் பூத்தது
கன்னியவனின் அறைக்கு ஓடினார்கள்
நூற்றுக்கணக்கான நாகங்களை
ஒரே இரவில் தின்றவன் கண்களை
திறந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான்.
***
-ச.துரை