‘நூலை ஆராதித்தல்’ , ‘பொதிகை’ எனும் இரு நூல்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்
‘நூலை ஆராதித்தல்- பத்மநாப ஐயர் 75’ என்னும் பத்மநாப ஐயரின் பவளவிழா மலரினை மீண்டும் பல வருடங்களுக்குப் பின்பு புரட்டிப் பார்க்கின்றேன்.மிகவும் கனமான நூல். வழ வழப்பான, பளபளப்பான காகிதங்களுடனும்வண்ண வண்ண புகைப் படங்களுடனும் Crown 1*4என்ற மிகப் பெரிய பேப்பர் சைஸில் 450 இற்கும் அதிகமான பக்கங்களுடன் 21.3கிலோ எடையுடன் கூடிய மிகப் பிரமாண்டமான புத்தகம். ‘தமிழில் இப்படியொரு புத்தகமா!’ என என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது. அந்நூலில் உள்ள பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டி பார்க்கின்றேன்.பல்வேறு நினைவுகளும் எட்டிப் பார்கின்றன.
“மலர் போடுமளவிற்கு இவர் இலக்கியத்தில் அப்படி என்னதான் சாதித்து விட்டார். அல்லது சமூக வாழ்க்கையில்தான் என்ன தியாகங்கள் செய்து விட்டார் ?” – மேற்படி கேள்விகள் என் ஞாபகத்தில் எழுந்தன. இது எனக்குள் எழுந்த கேள்வி அல்ல. இவை 2000ம் ஆண்டளிவில் ‘பொதிகை’ என்னும் பொதியவெற்பன் பொன்விழா மலர் வெளி வந்த போது பொதியவெற்பன் மீது தோழர்கள் அ.ஜ.கான், ஜமாலன் வைத்த கேள்விகள் ஆகும். இப்போது அம்மலரின் ஞாபகம் வெளி வரவே எனது புத்தக அலுமாரியிலிருந்து எங்கோ ஒரு மூலையில் புதையுண்டு கிடந்த ‘பொதிகை – பொதியவெற்பன் பொன்விழா மலர் –2000’ என்ற நூலினை எடுத்துப் புரட்டிப் பார்கின்றேன்.இச்சிறு நூலானது பத்மநாப ஐயரின் பவளவிழா மலரின் முன்பாக ஒரு சிறு துரும்பாக எனக்குத் தோற்றமளிக்கின்றது.வெறும் அழுக்கடைந்த பழுப்பு நிறக் காகிதத் தாளில் எந்தவித நேர்த்தியுமின்றி 206 பக்கங்களே மட்டும் கொண்ட இந்நூலானது ஐயரின் பவளவிழா மலருடன் ஒப்பிடும்போது ஒரு பிரமாண்டமான நவீன பேரங்காடி ஒன்றினையும் அதன் முன்பாக தகரக்கொட்டகையாக அமையப்பட்ட ஒரு சிறு தேநீர் கடையினையும் ஒரு சேரப் பார்க்கும் போது ஏற்படும் தோற்றமாக எனக்குக் காட்சியளித்தது.
உடனடியாக மனதில் தோன்றிய இந்த தோற்ற வேறுபாடுகளுடன், இவ்விரு நூல்கள் குறித்தும் பல்வேறு விதமான ஒப்பீடுகளும் மதிப்பீடுகளும் மனதில் தோன்றியது.இவ்விடத்தில் பொதியவெற்பன், பத்மநாப ஐயர் என்ற இரண்டு மாபெரும் ஆளுமைகள் குறித்ததான ஒப்பீடுகள் அவசியமற்றதாகவே நான் கருதுகின்றேன்.இருவர் குறித்தும் நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பயணித்தவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. இருவரும் நவீன தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் பணியில் தம் வாழக்கையை அர்பணித்து பயணித்தவர்கள். இதழாசிரியர்களாகவும் பதிப்பாளர்களாகவும் அறியப்பட்ட இருவரும், தமது ஆளுமைகளை பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக் அல்லாமல், மற்றவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இலைமறைகாயாக இருந்த பலரையும் வெளிக்கொனர்ந்தவர்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பொதியவெற்பன் ஈழப்போராளிகளுடனும் ஈழ இலக்கியவாதிகளுடனும் மிக நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தது போலவே, ஈழத்தைச் சேர்ந்த பத்மநாப ஐயரும் தமிழகத்தைச் சார்ந்த இலக்கியவாதிகளுடனும் பதிப்பாளர்களுடனும் நெருக்கமான உறவினையும் தொடர்பினையும் கொண்டிருந்தார். இந்த வகையில் இருவரும் ஈழ – தமிழக கலை இலக்கிய பண்பாட்டுத் தளங்களில் பயணித்த பெரும்பாலோருக்கு ஒரு பாலமாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். இதற்குமப்பால் பொதிகை சித்தர் என அழைக்கப்படும் பொதியவெற்பன் குறித்து சில சிறப்பம்சம்களை மேலதிகமாக இணைத்துக்கொள்ளலாம். பொதியவெற்பன் ஒரு முற்போக்கு, இடதுசாரி சிந்தனையாளர், கவிஞர், ஆய்வாளர். பல்வேறு கவிதைத்தொகுப்புக்களுக்கும் பல ஆய்வு நூல்களுக்கும் சொந்தக்காரர். எண்பதுகளில் தொடங்கப்பட்ட புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ்த்தேசிய இடதுசாரிய தளங்களில் தீவிரமாக செயற்பட்டவர். ஈழவிடுதலைப் போராட்டம் மீதான ஆதரவான நிலைப்பாடு கொண்டவராக பல்வேறு ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களிற்கு ஆதரவாக செயற்பட்டவராக இருந்த போதிலும் கவிஞர் செல்வியின் படுகொலையின் பின்பாக விடுதலைப்புலிகளை முன்னிறித்தி ‘நீங்களுமா ?’ என்று கோபாவேசத்துடன் கவிதை எழுதியவர். இந்த இடத்தில்தான் பத்மநாப ஐயர் பொதியவெற்பனில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறார். பத்மநாப ஐயர் எழுத்தாளரோ அல்லது ஆய்வாளரோ இல்லை. ஏன் ஒரு தேர்ந்த வாசகர் கூட இல்லை என்று பேராசிரியர் நுஃமான் அவர்கள் இந்நூலிலேயே குறிப்பிடுகிறார்.
எனவே நான் இங்கு இவ்விரு நூல்கள் குறித்ததுமான ஒப்பீடுகளை மட்டுமே பேச விழைகின்றேன். மேலும் மேலே குறிப்பிட்ட இவ்விரு நூல்களினதும் தோற்றம் குறித்த ஒப்பீடுகளுக்கு அப்பால் இவை இரண்டினதும் உள்ளடக்கங்கள் குறித்தே பெரிதும் பேச விரும்புகின்றேன். இங்குதான் பொதியவெற்பனின் பொன்விழா மலரானது பத்மநாப ஐயரின் பவளவிழா மலரிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றது.
பொதியவெற்பன் பொன்விழா மலர் பத்மநாப ஐயரின் பவளவிழா மலரில் இருந்து வேறுபடுவதற்கு முக்கிய காரணம் இந்நூலிலேயே அவர் மீது வைக்கப்படும் காரசாரமான காட்டமான விமர்சனங்கள். நான் மேலே குறிப்பிட்ட அ.ஜ.கான், ஜமாலன் போன்றவர்களின் வைத்த விமர்சனங்கள் மட்டுமன்றி அவர் குறித்த கறாரான விமர்சனங்கள் பக்கத்துக்கு பக்கம் முன் வைக்கப் படுகின்றன. பொதியவெற்பன் குறித்து இந்தப் பொன்விழா மலரிலேயே ராஜ.முருகபாண்டியன் தனது கட்டுரை ஒன்றில் பொதியவெற்பன் மீது மிகுந்த கோபத்துடன் பின்வருமாறு சீறிச் சினக்கிறார்.
“ திரு.பொதியற்பனுக்கு, மறுபடியும் புதுமைப்பித்தனை வாசிக்கிறபோது அவர் தாழ்த்தப்பட்டோரை எவ்வளவு இழிவானவர்களாகப் பார்த்திருக்கிறார் என்றுதான் உணர முடிகின்றது.எங்கள் நியாயம் உங்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் நீங்கள் தாழ்த்தப்பட்டவர் இல்லை. எங்கள் விமர்சனங்களை நீங்கள் சகித்துக் கொள்ளலாம். கொள்ளாமல் போகலாம். அது உங்கள் உரிமை. ஆனால் நேற்றைய உரையாடலின் போது உங்கள் வார்த்தைகளில் வந்து விழுந்தவை சகிக்க முடியாதபடி இருந்தது. நீ என்னடா பண்ணிக் கிழிச்சிபுட்ட, மசிரப் புடுங்கின, மட்டயப் புடுங்கின, அப்பப்பா, என் வாழ்நாளில் இப்படி ஒரு வசையை நான் யாரிடமும் கேட்டதேயில்லை. —– நீங்கள் மெத்தப் படித்த மேதாவி. சகமனிதனிடம் எப்படிப் பேசவேண்டும் என்ற சனநாயக உணர்வு உங்களிடம் கொடி கட்டிப் பறக்கின்றது. பார்ப்பணியத்தின் ஆணாதிக்கத்தின் சாதிவெறியின் உச்சமாக இருந்தது உங்கள் பேச்சு. —– இனி உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள எதுவுமேயில்லை.”
இப்படியாகமேற்குறித்த பொன்விழா மலர் நாயகன் மீதே வைக்கும் கறாரான பார்வையும் விமர்சனமும் இந்நூல் எங்கும் பல்வேறு கட்டுரைகளிலும் விரவியே காணப்படுகின்றது. ஆனால் இது பத்மநாப ஐயரின் பவளவிழா மலரில் வெறும் பாராட்டுக்களாக மட்டுமே குவிந்து கிடக்கின்றன. அல்லது மிகவும் மெலிதான ஒரு சிறிய விமர்சனம் ஒரு சிலரால் முன் வைக்கப்படுகின்றன. அப்படியானால் ஐயர் மீது ஈழ-புகலிட இலக்கியத் தளத்தில் விமர்சனங்கள் இல்லையா என்ற கேள்வி எம்முன் எழுகின்றது. ஆனால் ஈழ-புகலிட இலக்கியத் தளத்தில் ஐயர்,தமிழகத்தில் பொதியவேற்பனை விட அதிகமான சர்ச்சைக்கு உரிய மனிதராகவே இருந்து வந்திருக்கிறார்.இதனை நாம் பல்வேறு தளங்களிலும் பார்க்க முடிகின்றது.
‘நூலை ஆராதித்தல்’ நூலானது பத்மநாப ஐயரின் பவளவிழா மலராக வெளிவந்திருந்த போதிலும் உண்மையில்இந்நூலின் உருவாக்கம் ஆனது 2004 ம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டம் இவருக்கு இயல் விருதினை வழங்கியபோது அதனைக் கௌரவிக்கும் முகமாகவே உருவாக்கம் பெற்றது. அதற்கான வாழ்த்துரைகள் ஆகவே இம்மலரின் பெரும்பாலான கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. ஆனால் அவருக்கான அவ்விருது அறிவிக்கப்பட்ட போதே அன்றே அது குறித்த சர்ச்சைகளும் ஆரம்பமாகி விட்டிருந்தன. ஆனால் அது குறித்த சிறு குறிப்பெதுவுமே இந்நூலில் இல்லை.
இதில் முக்கியமாக ‘பத்மநாப ஐயர்’ என்ற பெயரில் உள்ள ‘ஐயர்’ என்ற பதம் இன்றுவரை பலருக்கும் உறுத்தலாகவே இருந்து வருகின்றது. ஆனால் ஐயரின் நடைமுறை வாழ்வில் சாதிய வெளிப்பாடுகள் எதனையும் நாம் அவதானித்தது இல்லை.. அவர் எவரிடமும் சாதிப்பாகுபாடு காட்டிப் பழகுவதுமில்லை. அனைவரையும் அரவணைத்தே அவரது இலக்கியச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. ஆனால் தனது பெயரில் உள்ள ‘ஐயர்’ என்ற பெயரினை மட்டும் விட்டு விடுவதற்கு அவர் என்றுமே தயாராக இல்லை. அந்தப் பெயர் நீக்கம் செய்வதற்காக அவரிடம் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களும் இல்லை. பல்வேறு தரப்பினரும் அது குறித்து அவருடன் பேசியுள்ளார்கள். வெளிப்படையாக விமர்சனமாகவும் முன் வைத்துள்ளார்கள்.
முக்கியமாக ‘சனதருமபோதினி’ தொகுப்புநூலில் அதனை தொகுத்தளித்த சுகனும் ஷோபா சக்தியும் தமது முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்கள். “புகலிடத்தில் எல்லோரும் தலித்துக்கலாம். ஆனால் புகலிட இலக்கிய ஆதர்சத்தின் பெயர் பத்மநாப ஐயராம். எம்மால் குண்டியால் மட்டுமே சிரிக்க முடிகின்றது. பார்ப்பனை ஐயரென்ற காலமும் போச்சே.”.
இதேவேளை ‘சனதருமபோதினி’ நூல் குறித்து தனது ‘தலித்திய விமர்சனக் கட்டுரைகள்’ நூலில் எழுதிய பேராசிரியர் ராஜ் கௌதமன் “நூலின் நுழை வாயிலில் பதிப்பாளர்கள் எழுதியுள்ள சண்டமாருதமான முன்னுரையில் பழைய சருகுகள் அடித்துச்செல்லப் படுவதோடு கூட, ஒரு சுமை தாங்கியும் (பத்மநாப ஐயர்) மாசுபடுத்தப் பட்டுள்ளது. அவர்களுடைய வேகம் அப்படி!” என்று ஐயர் மீதான அனுதாபப் பார்வையை பரவ விடுகிறார். இது ஒரு தலித்தியப் போராளியும் எழுத்தாளருமான ராஜ் கௌதமன் ஐயரை அங்கீகரிப்பதுடன் மட்டுமல்லாமல் அவரை ஒரு சுமைதாங்கி என்று கௌரவப் படுத்தவும் செய்கிறார். இது ஐயரை எமக்கு ஒரு சர்ச்சைகளின் நாயகனாகவே பார்க்க வைக்கின்றது.
மேலும் சர்ச்சைகளின் உச்சக்கட்டம் இந்நூல் வெளியீட்டு விழா அன்றே ஆரம்பித்து விடுகின்றது. அது இந்நூலின் தொகுப்பாளர்களாகிய பேராசிரியர் மு.நித்தியானந்தன், ஓவியர் கிருஷ்ணராஜா வடிவில் வருகின்றது. உண்மையில் இந்நூலானது இந்த இருவரினதும் 1௦ வருடங்களுக்கு மேலான உழைப்பின் பின்பே வெளி வருகின்றது. ஆயினும் இந்நூல் வெளிவரும் காலப்பகுதியில் இந்நூலில் உள்ள ‘ஐயர்’ என்ற சாதியக் குறியீட்டினை நீக்கவேண்டுமென்று இருவரும் பலமாத காலமாக ஐயருடன் போராடுகின்றார்கள். ஆனால் ஐயரின் பிடிவாதம் காரணமாக அதில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே இவ்விருவரும் இந்நூலின் வெளியீட்டு விழாவினைப் பகிஷ்கரிக்கின்றனர். இந்த மன உளைச்சலில் இருந்து விடுபட மு. நித்தியானந்தன் விழாவிற்கு முதல் நாளே நோர்வே சென்றுவிடுகிறார். கிருஷ்ணராஜாவும் லண்டனை விட்டு வெளியேறி விடுகின்றார். இதனை இவர்கள் தமது முகநூலில் உள்ள தமது நண்பர்களுடன் அன்று பகிர்ந்திருந்தனர். இதில் முரண் நகையான விடயம் என்னவெனில் ‘ஐயர்’ என்ற வார்த்தையை சாதியக் குறியீடாகக் கருதிய மு.நித்தியானந்தன் இந்நூலிலேயே அவர் குறித்து எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘புத்தகங்களை ஆராதித்தல் அல்லது பத்மநாப ஐயர்’ என்பதாகும். அத்துடன் அவர் பக்கத்திற்கு பக்கம் வார்த்தைக்கு வார்த்தை தான் சாதியக் குறியீடாக கருதிய ‘ஐயர்’ என்ற வார்த்தையினாலேயே அவரை புகழாபிஷேகம் செய்திருகின்றார். மேலும் இவர்கள் இருவரும் இலண்டனில் உள்ள மேட்டுக்குடி தலித்திய வாதிகளுக்கும் பிரான்சில் உள்ள தலித்திய மேம்பாட்டு முன்னணியினருக்கும் அஞ்சியே பத்மநாப ஐயருடன் முரண்டு பிடித்ததாக இங்கு புகலிட இலக்கிய உலகில் அன்று பலரும் பேசிக் கொண்டனர்.
‘ஐயர் என்னும் புத்தகப் பிரதி’ என்னும் கட்டுரையில் எஸ்.வி.ராஜதுரை ஐயர் என்ற பதத்திற்கு சிறந்த விளக்கம் கொடுக்கிறார். அதில் அவர் ஐயர் என்ற சொல் தனக்கும் ஒரு இழிவான சொல்லாக தென்பட்ட போதும் பாரதிதாசன், பாரதியாரை ஐயர் என்று அழைப்பதினையும், தமிழகத்தில் ஐயர் என்றதும் உ.வே.சாமிநாதையர் ஞாபகமே அனைவருக்கும் சட்டென்று ஞாபகத்திற்கு வருவதினையும் குறிப்பிட்டு பத்மநாப ஐயரை ஐயர் என்று அழைப்பதில் தனக்கு ஆட்சேபம் எதுவுமில்லை என்கிறார்.
இனி பொதியவெற்பன் பொன்விழா மலரினைப் பார்ப்போம். பத்மநாப ஐயர் எப்படி தனது பெயரில் துருத்திக் கொண்டு நிற்கும் ‘ஐயர்’ என்ற பத்தத்தினால் மற்றவர்களின் தாக்குதலிற்கு உள்ளாகின்றாரோ அதே போன்றே பொதியவெற்பனும் சில சிக்கல்களிற்குள் உள்ளாகின்றார். புதுமைப்பித்தனை ஆகர்ஷமாகக் கொண்டவர் அவர். புதுமைப்பித்தனின் ஆவி இவரைப் பிடித்து ஆட்டுகின்றதோ என்று சொல்லுமளவிற்கு புதுமைப்பித்தன் மீது ஒரு பித்துக் கொண்டவராக இருப்பவர். இந்த புதுமைப் பித்தனின் மீதான மோகமே இவரையும் பலத்த சிக்கல்களுக்குள் உள்ளாக்குகின்றது. புதுமைபித்தனின் படைப்புகளில் தெரிந்தோ தெரியாமலோ அறியப்படும் சாதியவெளிப்பாடுகள் அனைத்தையும் இவரது சாதிய வெளிப்பாடாக கருதி பலரும் இவர் மீது தாக்குதல்களைத் தொடுக்கின்றனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி அந்தத் தாக்குதல்கள் இந்தப் பொன்விழா மலரிலும் இடம் பிடித்துள்ளது.
இந்தப் போற்றுதல்கள் தூற்றுதல்கள் அனைத்திற்கும் அப்பால்பல்வேறு விதமான படைப்புக்களும், கட்டுரைகளும் அன்றைய காலத்தின் குரலாக பதிவு செய்யப்பட்டுள்ளமை இம்மலரின் சிறப்பாகும்.சிறுகதைகளாக கோபி கிருஷ்ணன், கீரனூர் ஜாகிர்ராஜா போன்றவர்களின் 5 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன. விக்கிரமாதித்யன், பழமலய், கற்சுறா, முதலான 11 கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. புதுமைப்பித்தன், பிரமிள், எஸ்.என்.நாகராஜன், தஞ்சை பிரகாஷ் போன்றவர்களின் கடிதங்கள் பிரசுரமாகியுள்ளன. புதுமைப்பித்தன் குறித்து இரா.வேங்கடாசலபதியும், மேனாட்டு இலாக்கிய விமர்சனம் குறித்து கா.சிவத்தம்பியும், செல்வி,சிவரமணி கவிதைகள் குறித்து த.பார்த்திபனும், ஆபிரஹாம் பண்டிதர் குறித்து தஞ்சை பிரகாஷும் எழுதிய கட்டுரைகளுடன் மொத்தமாக இவ்விதழில் வெளிவந்திருக்கின்ற 19 கட்டுரைகளும் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகள். நவீன தமிழ் இலக்கியத்தளத்தில் அழியாத்தடம் பதித்த பல கட்டுரைகளை தேடித் பிடித்து இங்கு மறுபிரசுரம் செய்துள்ளார்கள். முக்கியமாக சுமார் 60, 70வருடங்களுக்கு முன்னர் ‘எழுத்து’ இதழில் பிரசுரமான ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘நான் என் எழுதுகின்றேன்?’ ‘நான் ஏன் வாசிக்கின்றேன்?’ என்ற இரு சிரஞ்சீவித் தன்மை பெற்ற இரு அற்புதமான கட்டுரைகளை குறிப்பிடலாம். இதில் பொதியவெற்பன் குறித்து வெறும் 1௦ கட்டுரைகளே வெளி வந்திருக்கின்றன. அவற்றிலும் பெரும்பாலானவை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த படி போற்றுதலுடன் மட்டுமன்றி கூடவே தூற்றுதலுடன் அமைந்திருக்கின்றன.
பத்மநாப ஐயரின் பவளவிழா மலரினை மீண்டும் பக்கம் பக்கமாக ஒப்பு நோக்குகிறேன். ஐயர் மீதான புகழாரங்கள், வாழ்த்தோதுதல்கள் மிக அதிகமாக இடம் பிடித்திருக்கின்றன. அல்லது சில மெல்லிய விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மு.நித்தியானந்தன் அவரது அமுக்கலான சாமர்த்தியம் பற்றி குறிப்பிடுகிறார். மு.புஷ்பராஜன் அவரை ஒரு முற்கற்பிதம் உள்ள மனிதராகவும் என்றுமே ஒரு மட்டுப்படுத்தப் பட்ட உறவினையே பேணும் மனிதராகக் குறிப்பிடுகிறார். அவரது விமர்சனங்கள் அற்ற தேசிய உணர்வு குறித்து யமுனா ராஜேந்திரன் அதுவே தான் அவருடன் உடன்பட முடியாத ஒரு விடயம் எனக் குறிப்பிடுகிறார். “அவரது நூல் வெளியீட்டு முயற்சிகளும் தமிழக இலக்கியத் தொடர்புகளும் மார்க்சியத்திலிருந்து விலகிக் கொண்டவர்களையும் மார்க்சிய எதிர்ப்பாளர்களையுமே நாடிச் சென்றிருக்கின்றன.” என பேராசிரியர் சிவசேகரம் தனது விசனத்தைத் தெரிவித்திருந்தார். இந்த மெல்லிய விமர்சனங்களுக்கு அப்பால் இந்நூலில் பத்மநாப ஐயர் குறித்த வேறு விமர்சனங்கள் எதுவும் இல்லை. இது மட்டுமன்றி கவிதைகள், சிறுகதைகள் அல்லது வேறு விமர்சன, ஆய்வுக் கட்டுரைகள் என்று எதுவுமே இல்லை. தமிழ் பதிப்புத்துறை குறித்தும் நூல் விமர்சனங்களாகவும் வந்த ஓரிரு கட்டுரைகளிலும் கூட எங்காவது ஐயரின் பெயர் ஓரிடத்திலாவது வந்திருக்கவேண்டும் என்ற கடும் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டு அத்தகைய கட்டுரைகளையே அனுமதித்திருக்கிறார்கள். இதில் முக்கியமாக ‘தேடலும் படைப்புலகமும்’ நூல் குறித்த எஸ்.என்.வெங்கட்ராமனின் கட்டுரையும் மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுப்பு குறித்த மு.நித்தியானந்தனின் கட்டுரையும் குறிப்பிடத்தக்கவை. ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதை தொகுப்பு குறித்து பேராசிரியர் சிவசேகரம் எழுதிய கட்டுரை, இப்படியும் வன்மமும் காழ்ப்புணர்வும் கொண்டு ஒரு இலக்கிய விமர்சனம் எழுத முடியுமா என்ற கேள்வியை எம்முன் எழுப்பி நிற்கின்றது. எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது இந்நூல் ஒரு பெருத்த ஏமாற்றத்தையே எமக்கு அளிக்கின்றது.
இங்குதான் எமக்குள் ஒரு குழப்பம் உருவாகின்றது. இந்நூல் உருவாக்கத்தில் பதிப்பாசிரியர்களாக நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி மு.நித்தியானந்தனும் ஓவியர் கே.கிருஷ்ணராஜாவும் பணியாற்றியிருக்கிறார்கள். மலர்க்குழுவில் மு.புஷ்பராஜன், நா.சபேசன், எம்.பௌசர், யமுனா ராஜேந்திரன், வீ.பவகரன், நா.சிறிகங்காதரன் ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் பலரும் நவீன தமிழ் இலக்கியத் துறையில் பன்னெடுங்கால அனுபவம் மிக்கவர்கள்.. இத்தகைய ஆளுமைகளின் பங்களிப்புக்கள் இருந்தும் இம்மலரானது சொதப்பல் ஆகி விட்டது உண்மையிலேயே வியப்பினையும் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தி நிற்கின்றது. அத்துடன் உண்மையிலேயே இவர்கள் இந்த மலருருவாக்கத்திற்கு பங்களித்திருக்கிரார்களா அல்லது இவர்கள் பெயர்கள் வெறும் பெயரளவிலே மட்டுமே இங்கு இடம் பிடித்திருக்கின்றதா என்கின்ற சந்தேகத்தினையும் எமனக்குள் ஏற்படுத்தி நிற்கின்றது.
தோற்றத்தில் ஒரு பிரமாண்டமாக வியப்பினையும் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்திய ‘நூலை ஆராதித்தல்– பத்மநாப ஐயர் 75’ என்ற பவளவிழா மலரானது உள்ளடக்கத்தில் ஒரு ஏமாற்றத்தினை தரும் அதேவேளை,அழுக்கடைந்த பளுப்பு நிறக் காகிதத்தாளில் எந்தவித நேர்த்தியுமின்றி பதிப்பிக்கப்பெற்ற ‘பொதிகை – பொதியவெற்பன் பொன்விழா மலர் 2000’ என்ற நூலின் உள்ளடக்கமோ ஒரு பிரமாண்டமாக விஸ்வரூபம் எடுத்து என் முன் விரிந்து நிற்கின்றது.
‘பொதிகை’ ‘ நூலை ஆராதித்தல்’ என்ற நூல்கள் குறித்ததான எனது வெறும் ஒப்பீடுகள் மட்டுமே இவை. இந்நூல் குறித்து முறையான விமர்சனங்கள் ஆய்வுகள் இதுவரை வெளிவந்ததா என எமக்குத் தெரியவில்லை. அப்படி வெளிவராத பட்சத்தில் இது குறித்து துறைசார் வல்லுனர்களும் கற்கை நெறியாளர்களும் கவனம் செலுத்துவது நல்லது என நினைக்கிறேன். எத்தகைய கோணத்தில் பார்த்தாலும் இவ்விரு நூல்களும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தமிழ் பரப்பில் நிகழ்ந்த அரசியல், சமூக, கலை, இலக்கியச் செயற்பாடுகளை பதிவு செய்து ஒரு காலத்தின் குரல்களாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்பதினை நாம் மறுக்க முடியாது.
மேலும் பொதியவெற்பன், பத்மநாப ஐயர் என்ற இந்த இரு பெரும் ஆளுமைகளும் இன்றும் தமது முதிர் வயதிலும் இடையறாது செயற்பட்டு வருவதினை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம். அவர்களது எண்ணங்களும் தன்னலமற்ற செயற்பாடுகளும் நாம் கற்பனையில் கூட கண்டடைய முடியாதவை. செயல் வீரர்களின் பெருமைகள் சிறப்பிதழ்களினால் மட்டுமே சிறப்படைவதில்லை.
***
-வாகீசன்