‘வாப்பாவும் பாவம் தான் அவரால் என்ன தான் செய்ய முடியும்  ஆயிஷா  இன்னதென்று கூற முடியாத வாஞ்சையுடன் கண்களை நிலத்தினை நோக்கி  பதித்துக் கொண்டு பெருமூச்சுடன் கூறி முடித்தாள். ரெயிலின் ஜன்னலோரமாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த ஹசன் அவளது வார்த்தைகளில் திடுக்கிட்டவன் போல் ஆயிஷாவினை  நோக்கினான். பிறகு எதற்கு வரும் பொழுது வாப்பாவினையும் கூட வரச் சொல்லி அடம்பிடித்தாய்? ஹசன் ஆயிஷாவிடமிருந்து  எதையோ எதிர்பார்ப்பவன் போல் அவனது தோள்பட்டையை   ஒடுக்கி தளர்த்திக் கொண்டான்.  ஆயிஷா  எந்தவித உணர்ச்சிகளையும் வெளியே காட்டாமல் கதிரையில் சாய்ந்து கொண்டாள். ஒரு கனம் இருவருக்குமிடையில் அமைதி நிலவியது. பின்னர்  தன்னை சுதாகரித்துக் கொண்டு ஹசன்  தன் பாக்கட்டில் இருந்த தொலைபேசியினை கையிலெடுத்தான். நேரம் அதிகாலை மூன்று மணியாகியிருந்தது. ரயில் பெட்டியில் இருவருக்கும் பக்கத்தில் இருந்த மற்றவர்கள்  அரை மயக்கத்தில்  உறங்கிக் கொண்டிருந்தார்கள். லன்டனிலிருந்து வந்திறங்கி இன்னும் இரண்டு நாட்களை கூட தாண்டவில்லை என்பதால் இருவருக்கும் நித்திரை மெதுவாக அடியெடுத்து வைப்பதும்  அப்படியே பின்னோக்கிச் செல்வதுமாக  கொண்டிருந்தது போக்குக் காட்டியது. ரயில் பெட்டியின்  சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த  மின் விசிறியின் சத்தம் சில் வண்டின் ஒலியைப் போல் இரைந்து கொண்டிருந்தது. முகிலற்ற வானத்தினையும் இருள் கவிந்த காட்டினையும் துரத்துவது போல் ரெயில் தனது ஓசையை சீரான மூச்சுடன் இயக்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில்  திருகோணமலை  ஸ்டேஷன்  என்று கூறிக் கொண்டே சுற்றியிருந்த பைகளை ஒரு முறை ஆயிஷா  நோட்டமிட்டாள் . திடீரென்று அவளுக்கு என்னவோ குறைவது போலிருந்தது.  ‘உம்மாவின்ட கதை’  சொற்கள் சரிந்து விழுந்தன. உடல் அதிர்ந்து குலுங்கியது.  பதறிக் கொண்டே பையில் கையை விட்டு  துழாவத் தொடங்கினாள். ஏன் பதட்டப்படுகிறாய்? பேர்க்கின் உள்ளே இருக்கும் பர்க்கட்டில் தானே வைத்தாய், அமைதியாயகத் தேடு, வாப்பா சொல்ற மாதிரி உம்மாவினைப் போல் உனக்கு எப்பொழுதும் டென்ஷன் அதிகம் ஹசன்  அமைதியாகக் கூறி முடித்தான். அதற்கிடையில் அந்தக் காகிதத்தினை  அவளுடைய விரல்கள் தொட்டு  விட்டன. மனம் குளிர்ந்து முகத்தில் புன்னகை மலர்ந்தது. உடல் மெல்ல மெல்ல தளர்ந்து இயல்பு நிலையை அடையத் தொடங்கினாள். இருவரும்  வெற்றியின் மகிழ்ச்சியில் புன்னகைத்துக் கொண்டார்கள். பழுப்பேறிய கடதாசியில்   மடிந்திருந்த உம்மாவின்  வாசனையை  நுகர்ந்து காலத்தின் வழியாக ஒழிகிச் சென்றார்கள்.

 

நல்லா முத்திய தேக்க மரம். ஒரு காலத்தில் உன்ட பேரப்பிள்ளைகளும் பூட்டிகளும் வந்து ஆடுவாங்க. சீனி மாமா பலகையில் கை வைத்து இரண்டு பக்கமும் தடவிப் பார்த்து சிரித்தார்.  அவரது பற்கள் வெற்றிலைக் கறையால் சிவந்திருந்தன. ஊஞ்சலுக்குத் தோதான மாதிரி மாமரத்தின் கிளையும் வளர்ந்திருக்கு , உனக்கு இனி கொண்டாட்டம் தான் என்று கூறிக் கொண்டே தும்புக் கயிற்றின் இரு முனைகளிலும் ஒவ்வொரு முடிச்சுகளை போட்டார்.  பின்னர் மாமரத்தின் கிளையினை அண்ணார்ந்து பார்த்தார். மாமரத்தின்  இலைகளினையும் அத்துமீறி உள்ளே நுழைந்த சூரிய ஒளியில் அவருடைய கண்கள் கூசின. தனது கண்களை சுருக்கிக் கொண்டு  ஒரு கையில் கயிற்றினை பலமாக பிடித்தபடி மறுகையால் கயிற்றின் நடு மையத்தினை மாமரத்தின் கிளையை நோக்கி வீசினார்.  பின்னர் சற்று இடைவெளி விட்டு மற்ற முனையின் நடுப்பக்கத்தினையும் வீசினார். இப்பொழுது இரண்டு பக்கமும் சமாந்தரமாக முடிச்சுப் போடப்பட்ட குஞ்சத்துடன் தும்புக் கயிறு கீழே தொங்கியது. அதனைப் பார்க்கையில் பஸீர் மாமா அமெரிக்கா சென்று வருகையில் ஊரிற்கு கூட்டி வந்த வெள்ளைக்கார மாமியின் பொன்னிறக் கூந்தலினை பின்னி விட்டது  போல் இருந்தது. கந்துல ஏன் சாக்கால கட்டியிருக்கீங்க. மாமாவின் சாகசங்களைப் பார்த்தபடி முகத்தினை ஒரு பக்கமாக சரித்துக் கொண்டு கேட்டேன் . ஓ அதுவா . கந்துல சாக்கினை போட்டு அதுக்கு மேலே தான் கயிற்றினை போடணும் . அப்ப தான் ஊஞ்சல் ஆடும் பொழுது கயிறு பலமா இருக்கும். இல்லாட்டி கயிறு சீக்கிரம் அறுந்து விடும். மாமா கூறி முடிக்கும் பொழுது கிளையில் கட்டியிருந்த சாக்கினை கெட்டியாகப் பிடித்தபடி  இரண்டு பக்கங்களிலும் கயிறு தயாராகிருந்தது. பின்னர்  ஊஞ்சல் பலகையின் இரு தலைகளுக்குமிடையில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றின் இரண்டு முனைகளையும் ஒவ்வொரு சுற்றுக்களைப் போட்டு விட ஊஞ்சல் எழுந்து நின்றது. ஊஞ்சலில் தனது கைகள் இரண்டினையும் வைத்து பலமாக அமர்த்தி உறுதி செய்தார் . ஆ… ஊஞ்சல் ரெடி. பிஸ்மி சொல்லி உட்காரு. நான் ஆட்டி விடுறன். என்னை நோக்கி பணித்தார். ராக்கெட்டில் ஏறி அமர்ந்து கொள்வது போல் நான்  கிளர்ச்சியடைந்தேன். கால்கள் இரண்டையும் சம்மணமிட்டபடி அமர்ந்து ஊஞ்சலின் கயிற்றினை பிடித்துக் கொண்ட பொழுது உடல் சில்லிட்டது.  ஏதோவொரு சாகசத்திற்கு தயாராகிவிட்டது போல் சுறுசுறுப்பு தலைக்கேறியது. மாமாவின்  சிரிப்பொலியுடன் எனது இறக்கைகள் வானை நோக்கி பறந்தன’.

‘ஊஞ்சல் போடப்பட்ட அன்றிரவே  உம்மம்மாவும் ஊஞ்சலில் என்னுடன் ஏறிக் கொண்டா. பாற்குடம் சிதறியது போல் நிலவின் பொட்டல் ஒளி மாமரத்தின் கிளைகளில் வடிந்து நிலத்தில் தெறித்திருந்ததன. மாம்பிஞ்சுகளினதும் பூக்களினதும் வாசனை முற்றத்தினை நிறைத்திருந்தன. உம்மம்மா  ஊஞ்சலிற்கு அருகில் வெற்றலைத் தட்டை வைத்துக் கொண்டு சாவகாசமாக ஊஞ்சலில் அமர்ந்து கொண்டா. நான் ஓடிச் சென்று அவருடைய மடியில் தலையைப் புதைத்துக் கொண்டேன். அவருடைய பாக்குவெட்டியிருந்து டிங் டிங் என்ற மணி ஒலி சீராக எழுந்து கொண்டிருந்தது. உன்ட  பாட்டா யாழ்ப்பாணம் சென்று வரும் பொழுது ஒரு மூடை கறுத்தக் கொழும்பான் மாம்பழம் வாங்கி வந்தார். மூட்டையை வீட்டின் நடுவிராந்தாவில்  வைத்தார். அக்கம் பக்கத்து வீட்டில இருந்தவங்களெல்லாம் மாம்பழ மணம் வீசுது என கதைச்சுக்கிட்டாங்க. அடுத்த நாள் மூட்டைய அவிழ்த்துப் பார்க்க செம்மஞ்சள் நிறத்தில தங்கம் மாதிரி மாம்பழங்கள் . மாம்பழத்தினை கீறாக வெட்ட தேன் வடிந்த மாதிரி சாறு. பாட்டா சாப்பிட்ட  கையோட போட்ட விதை தான் இன்றைக்கு இப்படி வளர்ந்து சடச்சிப் போயிருக்கு ரஹ்மானே! உம்மம்மாவின் சொற்கள் எனது காதுகளுக்குள் சொட்டுச் சொட்டாக ஒழுகிச் சென்று கிறக்கமூட்டியது. பக்கத்து வயலிலிருந்து வீசிய குளிர்ந்த மெல்லிய காற்றில் எனது உடல் சிலிர்த்துக் கொள்ள நான் கனவுகளின் தொட்டிலுக்குள் தேவதையாகிப் போனேன்’.

 

ஹசனின் கைகளில் இருந்த  உம்மாவின் கதை காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. காகிதத்தின் இரண்டு விளிம்புகளினையும் அவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். ஆயிஷா அவளது மடியிலிருந்த புகைப்படத்தினை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். எண்ணை வைத்து வாரிக் கட்டிய ஒற்றைக் கூந்தல். மெல்லிய உதடு. பெரிய தலையும் உருண்டை விழிகளும் கொண்ட உம்மா ஐந்து வயது சிறுமியாக பரவசத்துடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். அவளுடைய மெலிந்த கைகள் ஊஞ்சலின் கயிற்றினை இறுகப் பற்றியிருந்தன. அவள் அணிந்திருந்த வாழைக்குருத்துப் பச்சை பாவாடை ஊஞ்சலுக்கு அடியில் மணலின் மீது  சரிந்து கிடந்தது. ஆயிஷாவின் தம்பியினது மூக்கும் கண்களும் உம்மாவின் ஜாடையை ஒத்திருந்தன. அதனை எப்பொழுதும் அவன் பெருமிதத்துடன் ஞாபகப்படுத்திக் கொள்வான். ஆயிஷாவின் பரந்த நெற்றியும் தடித்த உதடுகளும் வாப்பாவினைப் போல இருந்தன. ஆனால் உம்மாவின் கலை உணர்வுகளும் எழுத்துத் திறனும் ஆயிஷாவிடம் செழித்து வளர்ந்தன. அதனால் தான் இன்று எடின்பரோ பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பிரிவில் ஆசிய கலாச்சாரங்கள் சார்ந்து முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றாள்.

உம்மா லன்டனிலிருந்து புறப்பட்டுச் செல்கையில் மக்களுக்காக விட்டுச் சென்றவை அவள் எழுதிய கதைகளும் புகைப தான். உன்ட உம்மா இதையெல்லாம் எப்ப எழுதத் தொடங்கினா ? உனக்கு ஏதாவது தெரியுமா?  காகிதத்திலிருந்து கண்களை எடுக்காமல்  ஆயிஷாவிடம் ஆர்வமாக கேட்டான். எனது தம்பிக்கு ஆறு மாதம் இருக்கும் என்று நினைக்கிறன். நான் முன்பள்ளி தொடங்கியிருந்த காலம். ஒரு நாள் நான் வாப்பாவுடன் பாடசாலை முடிந்து வரும் பொழுது உம்மாவிடம் பால் குடித்து விட்டு மடியில் தூங்கிக் கொண்டிருந்தான். அவ ஒரு கையால் அவனை அணைத்துக் கொண்டு மறுகையால் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தா. அவவுக்கு நீ தூங்கி விட்டது கூடத் தெரியாது. நான் தான் உம்மா தம்பி தூங்கி விட்டான் என்று சுட்டிக் காட்டினேன். அவன்ட நெஞ்சுப் பகுதியின் சட்டை பால் வடிந்து நனைந்திருந்தது. உம்மா எனது குரல் கேட்டு திடுக்கிட்டு என்னைப் பார்த்தா. ஆயிஷா தனது நினைவடுக்குகளை கலைக்கத் தொடங்கினாள். உம்மா கதை எழுதும் போது நான் கவனித்திருக்கின்றேன். ஒரு கோட்டுச் சித்திரம் மாதிரி இருக்கும். சில வேளைகளில்  கரிய மேகம் திரண்டு மழையைக் கொட்டும் முகம். இன்னொரு பக்கம் தெளிந்த வானத்தில் சூரியன் ஒளிரும் முகம். ஆயிஷா  இடைவெளி விட்டு மீண்டும் பேசத் தொடங்கினாள். அவ எங்களை, வாப்பாவ நேசித்த மாதிரி எழுத்தினையும் நேசித்தா. ஆனால் எல்லாவற்றினையும் ஒரே நேரத்தில் கவனித்துக் கொள்ள முடியாது. உம்மாவினைப் பொறுத்த மட்டில் எழுத்தும் வாசிப்பும் ஒரு குழந்தை. அதனை சீராட்டி வளர்க்க நாங்களும் இடைஞ்சலாக இருந்திருக்கலாம். லன்டன் வாழ்க்கை உம்மாவினைத் துரத்திக் கொண்டேயிருந்தது. நாங்களெல்லாம் இங்கேயிருந்திருந்தால் உம்மா நம்ம கூட இருந்திருக்கலாம், ஆயிஷா பெருமூச்சொன்றை வெளியே தள்ளினாள்.

உம்மா வாப்பாவினை திருமணம் செய்து லன்டன் வரும்பொழுது பத்தொன்பது வயது. அவள் உயர்தரப் பரீட்சை எழுதி கலைப்பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தாள். உம்மாவின் வாப்பா மைதீன் போடியார் தனது சொத்துக்களுக்கெல்லாம் ஒரே வாரிசான மகள் மேற்கொண்டு படிப்பதனை விரும்பவில்லை. லன்டன் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவமும் கணக்கியலும் பயின்று உயர்தரக் கம்பனியொன்றில் முகாமையாளராக பணியாற்றும் ஒருவர் தனது மாப்பிளையாக வருவதையே விரும்பினார். உம்மாவிற்கு தனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கான சூழல் அப்பொழுது இருக்கவில்லை. ஆரம்பத்தில் அந்த திருமண சம்பந்தத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மாப்பிள்ளையை நேரடியாக சந்தித்து உரையாடிய பின்னர் அவளுக்கு நம்பிக்கையும் காதலும் துளிர்த்தன.

உம்மா திருமணமாகி லன்டன் வந்திறங்கியபொழுது  பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  மாபெரும் கட்டிடங்களையும் ஓயாது விரைந்து கொண்டிருக்கும் மனித இயக்கத்தினையும் மட்டுமே சந்தித்தாள். வாப்பா அமைதியான குணமுள்ளவர். சில வேளைகளில் அவருடைய முகம் உணர்ச்சிகளை காட்டாது அடங்கியிருக்கும். அவர் அதிகம் பேச வேண்டும் , உணர்வுகளை அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உம்மா  மனம் வருந்துவாள். அவை சம்பந்தமாக வாப்பாவிடம் வெளிப்படையாக கண்டிப்புடன் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொள்வாள். ஆனால் வாப்பா உம்மாவினை அளவு கடந்து காதலித்தார். அந்தக் காதலை மறைமுகமாக அவள் மீது காட்டினார். லன்டன் உம்மாவிற்கு பிடிக்காமல் போய்விட்டதை உணர்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் லன்டனிலிருந்து சற்றே வடக்காக ஒரு கிராமத்தில் வீடொன்றினை வாங்கினார். விடுமுறை நாட்களில் அங்கே சென்று இயற்கையை தரிசித்து வந்தார்கள். காட்டின் மொழி மகத்தானது மக்களே! அதன் அன்பும் அப்படித்தான் . நாம் ஒவ்வொரு முறையும் அதனைத் தேடி வருகையில் எல்லையற்ற  அன்பினை  வாரி வழங்கும் அவ்வாறு தான் உம்மா காட்டினை வர்ணித்தாள்.  ஒரு வசந்த  காலப் பொழுதில் வின்செஸ்ட்டர் நகரத்தின் புறவயப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு காட்டுப்பகுதியிற்கு ஆயிஷாவினையும் அவளது தம்பியினையும் அழைத்துச் சென்றிருந்தாள். முன் காலையின் பிஞ்சு வெயில் நீலமணிப் பூக்களில் சூழ்ந்து நின்றது. ரொபின் குருவிகளும் வேலிக் குருவிகளும் ஆங்காங்கே மரங்களில் தலைகாட்டி பறந்தன. காட்டின் பச்சை வாசனையை முகர்ந்து கொண்டு காட்டின் மையத்தினை அடைந்தார்கள். டேய்சி மலர்கள் நிரம்பிய  கம்பளமொன்று அங்கே விரிந்திருந்தது. உம்மா குழந்தைகளை அங்கே இருத்தினாள். பின்னர் தனது பாதணிகளையும் ஜாக்கெட்டினையும்  கழற்றி  விட்டு கைகளை கீழே தொங்கப் போட்டவாறு உடலை இலகுவாக்கி நின்றிருந்தாள். ஏதோவொரு தியான நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வது போல் தனது கண்களை மூடிக் கொண்டாள். அவளது உடல் இசையின் வருகையை வரவேற்கத்தயாராகியது. காற்றாடியின் சக்கரங்கள் சுழல்வது போல் அவள் மெது மெதுவாக சுழன்று அசையத் தொடங்கினாள். அவளது ஆடை சிறகடித்து படபடத்தது. உம்மாவின் குதி கால்கள் புற்களை முத்தமிட்டு முத்தமிட்டு வேகமாக இயங்கத் தொடங்கின. அவள் உடலும் சொற்களும் ஒன்று சேர்ந்து பேசும் நுண்ணிய பாவனை வழிந்தோடியது உம்மா மூச்சினை உள்ளிழுத்து வேகமாக சுழலத் தொடங்கினாள். தன்னை மறந்த உலகம் அவள் முன்னால் விரிந்து வந்தது.    இறைவனை தரிசித்து நிற்கின்ற அவளின் கட்டற்ற அன்பு  பெருகி ஓடியது.

பருவ காலத்தினையும் கோடை காலத்தினையும் தவிர ஏனைய காலங்களில் உம்மாவின் வாழ்க்கை ஒளியிழந்து இருந்தது. கறுப்புக்கோட்டு வானம், இலைகளே இல்லாது வெறுமையாய் இருக்கும் மரங்கள் , மௌனம் போர்த்திய ஒரு குளிர்கால தேசத்தில்  நாட்கள் கரைய அவளது சொந்த நாட்டிற்கே செல்ல வேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் வலுப்பெற்று வந்தன. வாப்பா அவளது ஆசைக்கு அசைந்து கொடுக்கவேயில்லை. இங்கே உனக்கு என்ன குறை ? என்ற அர்த்தமற்ற கேள்வியைத் தவிர உம்மாவின் உணர்வுகளை கண்டு கொள்ளவேயில்லை.    கருமை கொட்டிய மேகங்கள் வடியத் தொடங்கின.மெது மெதுவாக திரைச் சீலை நகர கிழக்கே வானில் சிவப்புத்தீற்றல் படர ஆரம்பித்தன. வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தின் வழியாக தேம்ஸ் நதியினை கடந்து மஸ்ஜிதினை நோக்கி உம்மா நடந்து கொண்டிருந்தாள். பாலத்தில் பொருத்தியிருந்த மின் விளக்குகள் நீரில் கரைவது போல நீரில் தள்ளாடின. பாலத்தினை தாண்டி மஸ்ஜிதினை நெருங்க நெருங்க அவளது மனம் வண்டு போல ரீங்காரமிடத் தொடங்கியது. மினாரின் உச்சியில் இருந்த பிறையும் நட்சத்திரமும் அவளை நெகிழச் செய்தன. செவ்வொளி படர்ந்திருந்த அதிகாலையில்  பிரம்பாண்டமான குப்பாவிலிருந்து வீசிய பொன்னிற ஒளி ஒரு பெரும் மின்னலாக  அவளது முகத்தில் அறைந்து அறைந்து  ததும்பியது. வாழ்க்கையின் அத்தனை துயரங்களையும் நெழிவுகளையும் உதறிவிட்டு மஸ்ஜிதின் வெற்றுத் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள். தஸ்பீஹ் மணியினை அவளது விரல்கள் வருடிச் செல்ல உடலும் உயிரும் ஒன்றாகக் கலந்த அவளது ஆன்மா இறைவனிடம் நெருங்கியது.

வாப்பாவின் கேள்விகளுக்கு ஒரு வரியில் விடையளிக்க அவளால் முடியவில்லை. இடையிடையே இருவருக்குமிடையில் கருத்து மோதல்கள் வாடிக்கையாகிருந்தன. விவாதங்கள் தலை காட்டி நின்றன. உம்மா அமைதியிழந்தாள். அன்றிரவு வாப்பா தனது வேலையிலிருந்து வீடு வர தாமதமாகியது. ஆயிஷாவும் தம்பியும் தூங்குவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். வழமையைப் போல் உம்மாவின் கதையை கேட்பதற்காக தங்களது கட்டிலில் காத்திருந்தார்கள். உம்மா அவர்களது அறையினுள் நுழைந்ததும் குழந்தைகள்  ஒருவரையொருவர் முகம்பார்த்து மலர்ந்தார்கள். இன்றைக்கு என்ன கதை கூறப்போறீங்க? தம்பியின்  குரல் துள்ளி எழுந்தது. உம்மா சலனமற்று அமர்ந்திருந்தாள். சொற்களை மடித்து உள்ளிழுப்பவள் போல் பரிதவிப்பு அவள் முகத்தில் அப்பியிருந்தது. கதை சொல்லுங்க உம்மா , அவன் மீண்டும் கெஞ்சத் தொடங்கினான். ஆயிஷா குழப்பமாக உம்மாவினை நோக்கினாள். உம்மா உதடுகளை மடித்து கண்களை மூடுகையில் கண்ணோரம் காத்திருந்த கண்ணீர் வழிந்து ஓடியது. உம்மாவின்  மன இரைச்சலும் கொந்தளிப்பும் அதிகரித்துக் கொண்டேயிருந்தன. ஊளையிடும் காற்றுடன் மரங்கள் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு குளிர்கால இரவில் நான் மட்டும் போய்விடுகின்றேன் என்று பூமி அதிர்வது போல் கூறினாள். அவள் செல்வதை வாப்பா தடுக்கவேயில்லை. அவளிடம் சிறு அன்பினை காட்டி கெஞ்சவோ இரைஞ்சவோ இல்லை . ஆயிஷா சில வேளைகளில்  ஏன் இவ்வளவு கடுமையான மனிதராக இருந்தார் என வாப்பா மீது அவளுக்கு வெறுப்பு வரும். ஆனால் உம்மா சென்றதன் பிறகு வாப்பாவின் பெற்றோர் அவசர அவசரமாக மறு திருமணத்தினை தங்களது மகனுக்கு ஏற்பாடு செய்தார்கள். அதனை வாப்பா முழுமையாக நிராகரித்தார். உம்மா சென்றதன் பின்னர் குழந்தைகள் பராமரிப்பினையும் வீட்டு வேலைகளையும் வாப்பா தனியாக செய்தார். எனவே எத்தனை கட்டுக்களை அவிழ்த்தாலும் வாப்பாவின் மனதினை அவளால் புரியவே முடியவில்லை.

தனது ஊரிற்கு உம்மா திரும்பிச் சென்ற பொழுது தனது பெற்றோரிடமிருந்து கடுமையான எதிர்ப்பினை அவள் சந்தித்தாள். தங்களது மகளின் தீர்மானத்தால் தமது பரம்பரையிற்கே அவமானம் ஏற்பட்டுவிட்டதாக அவர்கள் நம்பினார்கள். ஊரிற்குள் தங்களது குடும்பத்தினை பற்றி கதைகள் பரவுவதை அவளது பெற்றோர் விரும்பவில்லை. வீட்டிற்குள் வர வேண்டாம் , திரும்பிப் போய் விடு என்று உம்மாவின் வாப்பா காசீம் போடியார் வாசலில் வைத்தே அவளை விரட்டினார். அந்த நேரத்தில் உம்மா எவ்வளவு வேதனைகளை சுமந்திருப்பாள்  என்றெல்லாம் எண்ணும் பொழுது ஆயிஷாவின் கண்கள் நிறைந்துவிடும். உம்மா காணாமல் போய் சில நாட்களில் காசீம் போடியார் மாரடைப்பினால் காலமானார். அவரது அப்பாவி மகளிற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் வாசலில் வைத்தே விரட்டியதன் பலனாக அவரை ஜின் தாக்கி மரணமடைந்ததாக ஊரிற்குள் கதையொன்றும் உலவியது. அவருடைய மரணத்தினைத் தொடர்ந்து சில மாதங்களில் உம்மம்மாவும் மர்மமான மரணம். உம்மா எங்கே போனாள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. தோப்பூரின் வடக்கே இருக்கின்ற ஒரு மலையொன்றின்  கபுறடியில் அவள் உலாவியதைக் கண்டதாக ஊரிற்குள் சிலர் கூறிக் கொண்டார்கள். அவள் உயிருடன் இல்லை , இறந்து விட்டாள் எனவும் செய்திகள் வந்தன. உம்மா சில நாட்களில் லன்டனுக்கே திரும்பி வருவாள் என வாப்பா நம்பியிருந்தார். ஆனால் அவள் எதிர்கொள்ளவிருப்பவற்றினை நினைத்து திடமாக திரும்பிச் சென்றாள். எனவே அவளது சமரசமற்ற தனித்த குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.   அவள் விரும்பிய அந்த இலட்சிய வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் .அந்த வாழ்க்கை ஏதோவொரு கானகத்தில், கடல் அலைகளுக்கு இடையில் , மலையடிவாரத்தில் எங்கேயோ….

‘காலையில் எழுந்ததும் ஓடிப் போய் ஊஞ்சலில் அமர்ந்து கொள்வேன். பச்சைப்பசேலென விரிந்திருக்கும் வயலின் மடியில் பனி மூட்டம் உறங்கிக் கொண்டிருக்கும் .  மழைச் சாரல் நாட்களில் வயலின் நீர்ப்பரப்பில் கொக்குகளும் நீர் நாரைகளும் அணிவகுத்துச் செல்லும். பின்னர் சாரல்கள் நின்று மேகங்கள் பிரிந்து செல்கையில் ஈரமாகியிருந்த வானம் மீண்டும் நீலப்புடவையினை உடுத்துக் கொள்ளும். மாலை நேரங்களில் பிரிதொரு காட்சியை காண்பதற்காக வயலின் நடுவில் நின்றிருப்பேன். மாலைச் சூரியன் சிவந்த பிழம்பாக மாமரத்தில் இறங்கிக் கொண்டிருக்கும். சிவப்பும் செம்மஞ்சளும் குழைந்த செவ்வொளித் தோகை மெது மெதுவாக ஊஞ்சலில் கவிழ்ந்து கொண்டிருக்கும் . அப்பொழுது ஊஞ்சலும் மாமரமும்  தியான அமைதியில் இருக்கும்.  இவ்வாறு காலங்களையும் இயற்கையின் பருவங்களையும் மாறி மாறி வர்ணம் தீட்டும் மாயங்களுக்குள் நான் கட்டுண்டு கிடந்தேன்’.  ஆயிஷா தாள்களை கவனமாக மடித்து பையில் வைத்தாள். திருகோணமலை புகையிரத நிலையம் என்ற கறுத்த மையால் எழுதப்பட்ட வெள்ளை பதாகையினை தாண்டியதும் ரெயில்  அமைதியாக நிறுத்தப்பட்டது.

தோப்பூரில் உம்மாவின் பூர்வீக வீட்டின் முன்னால் ஆட்டோ குலுங்கி நின்ற பொழுது வானி; விடிவெள்ளி தோன்றியிருந்தது . தனது பரம்பரையில் வந்த வைரம் பதித்து நெத்திச் சுட்டியினை அணிந்திருக்கும் ஆச்சியின் முகத்தினைப் போல காசீம் போடியார் வீடு மின் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. வீட்டின் மதிற் சுவரில் படர்ந்திருந்த கொடிமல்லிகையின் வாசனையை ஆயிஷா உள்ளிழுத்தக் கொண்டாள். சிறுவயதிலிருந்தே அந்த வீட்டில் வாழ்ந்து வந்த மக்கீன் ஆட்டோச் சத்தம் கேட்டு இரும்புக் கேர்ட்டினை திறந்து கொண்டு ஓடி வந்தார். ஆயிஷாவும் ஹசனும் தங்களது பொருட்களைச் சுமந்து கொண்டு வீட்டினுள்ளே நுழைந்தார்கள். ஏதோவொரு இனம்புரியாத வசீகரமும் மன அமைதியும் உடனே ஆட்கொண்டுவிடுவது போல் ஆயிஷா உணர்ந்தாள். பதினெட்டு வருஷமாக நாங்க வந்து கொண்டு இருக்கோம். இங்கே மானசீகமாக உம்மா கூட இருக்கின்ற மாதிரி உணர்வு எனக்கு இருந்து கொண்டே இருக்கும் ..தாவணியை கழற்றி கதிரையின் மேல்  வைத்து தொப்பென அமர்ந்த படி ஆயிஷா கூறி முடித்தாள். அவளுக்கு நேரெதிராக   இருந்த உம்மா வாப்பாவின் சாய்மனைக் கதிரை அவளை உற்று நோக்குவது போல் கம்பீரமாக இருந்தது. அந்த வீட்டின் கதவு ஜன்னல்கள் திறக்கப்பட்டதும் பறவைகளின் சத்தங்களை ஏந்திக் கொண்டு காற்று உள்ளே நுழைந்தது. பஷீர் காக்கா சமையலறையிலிருந்து அவர்களிற்கான டீயை கலக்கிக் கொண்டிருக்கும் கரண்டியின் ஒலி.. காலை  ஆறு மணி என்பதை அறிவுப்புச் செய்கின்ற  சுவரில் தொங்கும் பழங்கால பிரிட்டிஷ் கடிகாரம், உம்மாவின் விருப்பத்திற்குரிய சூபிப்பாடகி ஆபிதாவின் குரலை ஏந்தியிருக்கும் வானொலித் தட்டு, அனைத்தும் ஒன்று சேர அவர்கள் காலையின் இயல்புக்குள் உற்சாகமாக நுழைந்தார்கள். காசீம் போடியாரின் ஒரு தலைமுறை , வாழ்வின் வசீகரத்தினை நெய்து அந்த இடத்தினை உயிர்பெறச் செய்தார்கள்.                                                               ஆயிஷா இங்கே கொஞ்சம் வாயேன், கதிரையில் சாய்ந்து கொண்டிருந்த ஆயிஷாவினை வீட்டின் பின் பக்கமாக இருந்து ஒலித்த ஹசனின் குரல் பரபரப்புடன் தட்டியெழுப்பியது. திணறிக் கொண்டு எழுந்தவள் அவனை நோக்கி வேகமாக நடந்து சென்றாள். மே மாதக்காற்று வயலிலிருந்து எழுந்து வர அவள் முகம் சில்லிட்டது . கோடை வெயிலிலும் உலர்ந்த காற்றிலும் செழித்து வளர்ந்த மாங்காய்களை சுமந்த மாமரக்கிளைகள் நிறைமாதக்கர்ப்பிணிகளைப் போல் நோக்கி மண்டியிட்டுக் கொண்டிருந்தன. அங்கே பாரு என ஹசன் ஊஞ்சலினை நோக்கி தனது சுட்டி விரலை நீட்டினான். ஊஞ்லைச் சுற்றியிருந்த தும்புக் கயிறு கழற்றப்பட்டு ஊஞ்சல் செயற்கையான சுவாசக்குழாயில் சுவாசிப்பது போல் நீல  நிற நைலான் கயிற்றில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஆயிஷா  பேச்சறுந்து நின்றாள். இங்கேயிருந்த தும்புக் கயிறு எங்கே ?; பஷீர் காக்கா இருந்த சமையலறையை  நோக்கி உரத்துக் கேட்டாள். எவ்வளவு எடுத்துக் கூறினாலும் சில நேரங்களில் பஷீர் காக்கா இவ்வாறான செயற்கை மாற்றங்களை எந்தவித உணர்வுகளுமின்றி செய்து முடிப்பார். சென்ற வருடம் அவர்கள் வந்த பொழுது வீட்டின் வராண்டிவிலிருந்த மூங்கில் பிரம்புக் கதிரைகள் அகற்றப்பட்டு தம்பரோ பிளாஸ்டிக் கதிரைகள் பல்லிளித்துக் கொண்டிருந்தன. தும்புக் கயிறு அறுந்துட்டு, இப்ப  தும்புக் கயிறு பாவனை குறைந்து போயிட்டு . கடைகளில் நைலான் கயிறு தான் இருக்கு. அதான் இதனை வாங்கினேன் அவர் சங்கடமாக பதிலளித்தார்.

தும்புக் கயிறு இருக்காங்க? பல சரக்குக்கடையொன்றின் முன்னால் நின்று  தலையை சரித்து புருவத்தினை உயர்த்திய படி ஆயிஷா கேட்டாள். ஊஞ்சல் கட்ட நல்ல பிலமான கயிறாக இருக்கணும், ஹசன் அவளுடன் இணைந்து கொண்டு விளக்கமாகக் கூறினான். கடையில் இருந்தவர்கள் ஆயிஷாவினையும் அவளுக்கு சமாந்தரமாக நின்றிருந்த ஹசனையும் தலை தூக்கிப்பார்த்தார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் பொன்னும் மஞ்சளும் கலந்த கூந்தல். உள்ளூர் சுடிதார்அணிந்து முக்காடிட்ட ஒரு யுவதி. பழுப்பு நிறம் , உருண்டைக் கண்கள் , திடமான உடற்கட்டும் டெனிம் கார்சட்டையும் டீ சேர்ட்டும் அணிந்த இளைஞன்.  இருவரும் வெளியூர் அடையாளத்தில் காட்சி தந்தாலும் இயல்பாக தங்களது ஊரின் பேச்சுமொழியில் உரையாடுவது அவர்களுக்கு புதுமையாக இருந்தது. இப்ப தும்புக் கயிறு திரிக்கிறது குறைஞ்சிட்டு. யாருமே வாங்குறது இல்லை . நைலான் கயிறு தான் இருக்கு.  ஒவ்வொரு கடைகளிலும் ஏறி இறங்கிச் செல்கையில் ஒரே விடை தான் கிடைத்தது. ஆயிஷாவும் ஹசனும் அயர்ச்சியடைந்தவர்களாக சந்தையின் பிரதான வீதியிலிருந்து விலகி சந்துக்குள் நுழைந்தார்கள். அப்பொழுது சந்தினையும் பிரதான வீதியினையும் இணைக்கும் முடக்கில்  லொறியொன்று நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த சாக்கு மூட்டைகளைச் சுற்றி கட்டியிருந்த தும்புக் கயிற்றினை ஒரு இளைஞன் அவிழ்த்துக் கொண்டிருப்பதை எதேச்சையாக ஆயிஷாவின் கண்கள் சந்தித்தன. அங்கே பாரு அவளின் குரல் படபடத்தது. ஹசன் அதற்குள் அந்த தும்புக் கயிற்றினை கண்டு விட்டான். இருவரும் கூச்சலிட்டபடி லொறியை நோக்கி ஓடினார்கள்.

பஷீர் காக்கா , ஊஞ்சலையும் மாமரத்தினையும் சுற்றியிருந்த நைலான் கயிற்றினை கழற்றத் தொடங்கினார்.  ஹசன் நைலான் கயிற்றிலிருந்து விடுபட்ட ஊஞ்சலை  நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். லொறிக்காரனிடம் பேரம் பேசி வாங்க வந்த தும்புக் கயிற்றினை இரண்டாக மடித்து மாமரத்தின் கிளையை  நோக்கி வீசுகையில் தும்புக் கயிறு கிளையில் ஒட்டிக் கொண்டது. அப்பொழுது மாமரத்தின் இலைகள் சலசலத்தன. அந்த ஒலி யாரோ கைதட்டி ஆராவாரம் செய்வது போல் இருந்தது. ஊஞ்சல் புத்துணர்வு பெற்று  சன்னமாக அசையத் தொடங்கியது.                ஆயிஷா  தனது விரலை நொடித்த படி கூறினாள்,  உம்மாவின் அடுத்த சிறுகதைத் தொகுப்பிற்கு பெயர் ரெடி’மாமரத்தின் கிளையில் ஒரு ஊஞ்சல்’.

காலைச் சூரியனின் பிரகாசமான ஒளி ஆயிஷாவின் கூந்தலில் தெறித்து மினுங்கியது. அவள் ஊஞ்சலில் அமர்ந்து முன்னால் இருந்த வயலினை  விளைச்சலுக்காக உழுது கொண்டிருப்பதை அவளது கண்கள் உற்று நோக்கின. வாழ்க்கை என்பதும் உழுது விதைத்து வெளிவரும் அறுவடை தானே . மீண்டும் மீண்டும் பழைய இடத்தினை புதிய உற்சாகத்துடன் புத்துயிர் பெறுவதில் தான் வெற்றியும் சந்தோஷமும் தங்கியிருக்கின்றது .காசீம் போடியாரின் வீட்டின் முன்னால் ஆட்டோவின் ஹோர்ன் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. புறப்படலாமா , ரெயில் கிளம்பிச் செல்ல இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு . ஹசன் அவசரமாக அழைத்தான். ஆயிஷா ஊஞ்சலிலிருந்து எழுந்து நின்றாள். எதையோ புதிதாக தேடுபவள் போல் சுற்றும் முற்றும் பார்க்கத் தொடங்கினாள். பின்னர் இருவரும் ஆட்டோவினை நோக்கி அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள்.  வீட்டிற்குள் இருந்து பஷீர் காக்கா வேகமாக உடல் இளைக்க ஓடி வந்தார். இதைக் கொடுக்க மறந்துட்டேன். போன மாதம் தொங்கல் அறையினை சுத்தம் செய்கையில் கட்டிலிற்கு அடியில் கிடந்துச்சு. ஒரு கட்டு காகிதங்களும் சில வெள்ளை கருப்பு புகைப்படங்களும் தனித்தனியாக நாடாவால் கட்டப்பட்டிருந்தன. ஆயிஷாவும் ஹசனும் இது எப்படி என்பது போல் குழம்பியபடி நின்றிருந்தார்கள்.  பின்னர் ஆயிஷா வியப்புடன் நடுங்கிய கைகளால்   காகிதங்களை பிரித்தாள். மைத்தீற்றல் போல் கருமை நிறத்தில் எழுத்துக்கள் பளிச்சென்று வெளிச்சமாயிருந்தன. அவள்  அதனை  மெதுவாக தடவினாள். அது வெது வெதுப்பாகவும் திடமானதாகவும் இருப்பதை  உணர்ந்தாள். அப்பொழுது மாமரக்கிளையிலிருந்து வீசிய காற்றில் ஊஞ்சல் வேகமாக ஆடியது.

***

-மாஜிதா

Please follow and like us:

1 thought on “மாமரக்கிளையில் ஒரு ஊஞ்சல் – மாஜிதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *