பகுதி-01

நவீன சிங்கள நாவல் இலக்கியத்தின் மூன்று தூண்களுள் ஒருவர் மார்ட்டின் விக்ரமசிங்க. சிங்கள இலக்கிய உலகில் அவருக்கு இந்த இடத்தைப் பெற்றுக்கொடுத்தது அவருடைய கம்பெரலிய எனும் நாவலே. அந்தவகையில் இது நவீன சிங்கள இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நாவலாகும். நவீன சிங்கள இலக்கியத்தைத் தொடக்கி வைத்த முதல் நாவலாக இதனை சிங்கள இலக்கிய உலகு கருதுகிறது. இந்நாவலுக்கு கிராமப்பிறழ்வு என தமிழில் மிகப் பலவீனமான ஒரு மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது. சொல்லுக்குச் சொல்லான அந்த மொழிபெயர்ப்பு நாவலின் மொழி அழகியல், கதையோட்டம், புனைவுத் தன்மை என எல்லாவற்றையும் சிதைத்துவிடுகிறது.

சிங்கள சமூகத்தின் அக முரண்களும், புறத்தோற்றமும், காலப்போக்கில் அந்தத் தோற்றப்பாட்டில் நிகழ்ந்த அகப்-புற மாற்றங்களையும் இந்நாவல் விரிவாகப் பேசுகிறது. மார்ட்டின் விக்ரமசிங்க கம்பெரலியவை, கம்பெரலிய (கிராமப் பிறழ்வு), கலியுகய (கலியுகம்), யுகாந்தய (Destiny) என மூன்று தனித்தனி நாவல்களாக எழுதினார். அவை தனியான நாவல்களாக இருந்தாலும் முதல் நாவலான கம்பெரலியவில் வரும் அதேகிராமத்தின், அதே மனிதர்களின் வாழ்க்கையும் கதையும்தான் மூன்று நாவல்களிலிலும் சித்திரிக்கப்படுகிறது. அதாவது ஒன்று இன்னொன்றின் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கிறது. அதனால் கம்பெரிலய நாவல் வரிசை என்று சொல்வதே பொருத்தமானது.

தென்னிலங்கையில் கொக்கல எனும் கிராமமே கம்பெரலிய நாவலின் கதைக்களன். அதன் மனிதர்களே நாவலின் கதாபாத்திரங்கள். 1930 களுக்கு முன்னரான கொக்கல கிராமத்து சிங்கள மக்களின் சமூக அடுக்கமைவுகள், சாதியம், குலப் பெருமைகள், நெறிமுறைகள், ஒழுக்கம், பழக்க வழக்கங்கள்,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நம்பிக்கைகள், சமூக உளவியல் என மொத்த வாழ்வியலினதும் அழியாச்சித்திரமாக கம்கெரலியவை முன்னிறுத்த முடியும்.

நாவலின் மொத்தக் கதையும் கிராமத்தில் உயர்குலத்தைச் சேர்ந்த கசாறுவத்தை முகாந்திரத்தின் குடும்பத்தைச் சுற்றியே நிகழ்கிறது. அந்தக் குடும்பம் சந்திக்கும் வீழ்ச்சியின் மூலம் நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பின் வீழ்ச்சியை பேசுவதாக நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது.

கசாறுவத்தை முகாந்திரத்தின் மனைவி தொன் கத்தரினா. நாவலில் அவர்  மாத்தறை அம்மையார் என்றே அழைக்கப்படுகிறார். அவர்களுக்கு அனுலா, நந்தா, திஸ்ஸ என மூன்று பிள்ளைகள். அனுலா மூத்தவள். ஆயினும் திருமணம் முடிப்பதில்லை என்ற முடிவுடன் வாழ்பவள். திஸ்ஸ காலியிலுள்ள ஒரு கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் விடுதியில் தங்கிப் படிக்கிறான். கசாறுவத்தை முகாந்திரத்தின் குலப்பெருமைக்கு சான்றாக அது அமைகிறது.

பெரும்பாலும் இந்தக் கிராம மட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த உயர் குலத்தவரான கசாறுவத்தை முகாந்திரத்தினதும் அவரது உயர் குழாத்தினரதும் பொருளாதாரம் நிலமானியத்தின் மீதே கட்டமைந்திருந்தது. நிறைய நிலபுலன்கள் அவர்களிடம் இருந்தன. அவர்களின் குடியிருப்பு இடம்கூட “பெருவளவு“ என்றுதான் அப்பகுதி மக்களால் உயர்வாக அழைக்கப்படுகிறது.

காலனித்துவக் காலம் என்பதால் ஆங்கில அறிவு உயர்வான அந்தத்ஸ்தில் வைத்துப் பார்க்கப்பட்டது. இதனால் முகாந்திரம் தனது மகளான நந்தாவுக்கு அதே கிராமத்தில் வசிக்கும் ஆனால் சாதியில் குலத்தில் அவர்களை விடக்குறைந்த அடுக்கிலிருக்கும் ஆங்கிலம் கற்ற பியல் என்ற இளைஞன் மூலம் ஆங்கிலம் கற்பிக்கிறார். இதனால் பியல் நந்தாவுக்கு பெருவளவுக்குச் சென்று ஆங்கிலம் கற்பிக்கிக்கவும், அவளுடன் நெருங்கிப் பழகுவதற்குமான வாய்ப்பையும் பெறுகிறான். கூடவே நந்தாவின் குடும்பத்தினரோடும்.  இதனால், பெருவளவு வீட்டில் முகாந்திரத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமமாக பியல் மதிக்கப்பட்டான்.

ஒரு கட்டத்தில் நந்தா மீது காதல் கொண்ட பியல் அதனை நந்தாவிடம் தெரிவிக்கிறான். தன் தந்தையைப் போல் சாதியத் திமிரும், குலப்பெருமையும் கொண்ட நந்தா பியலின் காதலை ஏற்க மறுக்கிறாள். ஆனால் பியல் கொடுத்த காதல் கடிதங்களை அவள் குடும்பத்திடம் காட்டிக்கொடுக்கவுமில்லை. ஒருநாள் தன் தாய்க்குச் சம்மதம் என்றால் பார்க்கலாம் என்கிறாள். எப்படியும் அம்மா அதை ஏற்கமாட்டாள் என்ற நம்பிக்கையோடு. பெருவளவில் வேலை செய்யும் கத்திரினா எனும் பெண்ணிடம் மாத்தறை அம்மையாரிடம் சென்று தனக்கு நந்தாவைப் பெண்கேட்குமாறு சொல்லி அனுப்பி வைக்கிறான்.

அப்படியே கத்தரினாவும் செய்கிறாள். அதைக் கேட்டதும் கோபமடையும் மாத்தறை அம்மையாரின் சாதியத் திமிரும் குலப்பெருமையும் தலைக்கேறுகிறது. மிகுந்த கோபம் கொண்டு ஏசுகிறாள். “அவர்களுக்கு யார்பெண் கொடுப்பது?” என்கிறாள். அப்போது சிங்கள சமூக அமைப்பில் சாதியம் எப்படி புரையோடி இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டான பல்வேறு இடங்களில் ஒன்று இது. பின்னர் முகாந்திரத்துக்கும் இந்த விசயத்தைச் சொல்கிறார். அவரும் அதனை வன்மையாக எதிர்க்கிறார். பியல் மீது கோபங்கொள்கிறார்.

பின்னர் பியல் ஊரை விட்டும் நீங்கி கொழும்புக்குச் செல்கிறான். இந்தப் பிரிவுக்குப் பின் நந்தாவை ஒரு நோய் தாக்கிறது. வயிற்றுவலியாலும் வாந்தியாலும் நந்தா அவதியுறுகிறாள். நோய் அவளைக் கடுமையாக உடைததுப் போடுகிறது. இந்த இடத்தில் குலப்பெருமைக்கு அப்பால் அவளுக்குள்ளிருந்த பியல் மீதான காதலை, அவளே மறைத்த காதலை வாசகன் கண்டு கொள்கிறான். அப்போதைய சிங்கள சமூக வழக்கப்படி கிராமிய மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் செய்யப்படுகிறாள். தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக அவளுக்கு பியல் பேயை ஏவி செய்வினை செய்ததனாலேயே அந்த நோய் வந்தது என்ற வதந்தி கிராமத்தில் வேகமாகப் பரவுகிறது.

நந்தாவைக் குணப்படுத்துவதற்காக பாரம்பரிய மருத்துவம், ஆங்கில மருத்துவம் என இரண்டு வகையான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. பாரம்பரிய மருத்துவம் பற்றிய சித்திரிப்புகள் சிங்கள மக்களின் மருத்துவச் சமூகவியலின் வரலாற்றுப் பதிவாக உருக்கொள்கிறது. நந்தாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக முகாந்திரம் தன்னிடம் இருந்த பலசொத்துக்களை விற்க வேண்டி வந்தது. கிட்டத்தட்ட அரைவாசிச்  சொத்துகளும் தீர்ந்து போயின. குணமடைந்த ந்நதாவுக்கு கலியாணத் தரகனான ஜேமிசு மூலம் தங்களது குலத்தில் பொருத்தமான மணமகன் தேடும் படலம் தொடங்குகிறது. தங்கள் சாதிக்குள் மட்டுமே மணமகன் தேடியதால் பல தடைகளும், தாமதங்களும் ஏற்படுகிறது. பின்னர் ஒரு மாதிரியாக நந்தாவின் குலத்தைச் சேர்ந்த ஜினதாச என்பவனுக்கு நந்தா திருமணம் முடித்துக் கொடுக்கப்படுகிறாள். அதிலும் நிறையச் செலவுகள். திருமணம் முடிந்து ஆறு மாதங்களின் பின் முகாந்திரம் இறந்து போகிறார். எஞ்சி இருந்த சொத்துகளும் குடும்பச் செலவுகளுக்குப் போய்விட்டன.

முகாந்திரம் குடும்பம் என்ற வகையில் ஆடம்பரச் செலவுகளும் அதிகமாக இருந்தன. இதனால் திஸ்ஸவும கல்வியைத் தொடரமுடியாது கொழும்புக்கு வேலைக்குச் செல்கிறான். ஜினதாசவும் தொழில் நிலைமைகள் சீர்குலைந்து வருமானமின்றி கஷ்டப்படுகிறான். பின் பிபிலையில் கடைவைத்து வியாபாரம் செய்வதற்காக செல்கிறான். எல்லாவற்றையும் இழந்த ஜினதாச எதனால் என்பது நாவலின் இறுதிப்பகுதியில் அவனது சகோதரியால் சொல்லப்படுகிறது. நந்தாவினதும் பெருவளவு குடும்பத்தினதுமான ஆடம்பர வாழ்க்கையே அதற்குக் காரணம் என்கிறாள்.

தொடக்கத்தில் நந்தாவுக்குக் கடிதம் போடும் ஜினதாச பின்னர் படிப்படியாக கடிதம் எழுதுவதை நிறுத்துகிறான். அவன் பிபிலையிலிருந்து வேறொரு பகுதிக்கு மாறிவிட்டதாக நந்தா கேள்விப்படுகிறாள். மூன்றுவருடங்களின் பின் ஜினதாச ஒரு கிராமத்துப் பெண்ணை திருமணம் முடித்து வாழ்வதாக ஜேமிசு மூலம் நந்தா கேள்விப்படுகிறாள். இந்தக் காலப்பகுதியில் நந்தாவின் குடும்பம் வறுமையால் வாடுகிறது. பொருளாதார தாழ்வுநிலையை அடைந்தாலும் சாதியத்தையும் குலப்பெருமையையும் விட்டுக் கொடுக்காமல் பட்டினியாகவும், நோயாகவும் வாழ்கின்றனர். இந்த சூழலை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட பியல் நந்தாவுக்கும் அவள் குடும்பத்துக்கும் உதவுகிறான். அவன் மனதில் நந்தா என்றும் அழியாத சித்திரமாக இருக்கிறாள். அவளை அடைந்துகொள்ளும் தாகம் அவனை இயக்குகிறது. இதற்கிடையில் அவன் மிகப்பெரும் பணக்காரனாக மாறிவிட்டிருந்தான்.

ஒரு சந்தர்ப்பத்தில் நந்தாவைத் திருமணம் முடிக்கும் எண்ணத்தை அவளிடம் சொல்கிறான். அதற்கும் நந்தா அவனைத் திட்டு விட்டு அவனுடன் கோபம் காட்டுகிறாள். அது அவளது குலப்பெருமையினதும் உயர் குலப்பண்பாட்டின் விதிகளை மீற முடியாது ஒழுகும் அவள் ஒழுக்கதை்தையும் காட்டுவதாக மார்டின் வர்ணிக்கிறார்.

ஆறுவருடங்கள் கழித்து ஜினதாச இறந்த செய்தி நந்தாவுக்குக் கிடைக்கிறது. ஜினதாசவை நினைத்து அழுது கண்ணீர் வடித்து அவன் சாவுக்கு தான்தான் காரணமோ என உளறுகிறாள். சிறிது காலத்தில் மன ஆறுதலடைந்து பின்னர் பியலைத் திருமணம் செய்துகொள்கிறாள். அதற்குப்பின் அவளது ஆடம்பர மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டாலும் சாதியத் திமிரும் குலப்பெருமையும் நீங்கவில்லை. சமூக அடுக்கில் கீழ் அடுக்கமைவிலிருக்கும் லைசாவின் திருமணத்துக்கு போக நந்தா மறுப்பதிலிருந்து இது உறுதியாகிறது.

ஒரு நாள் பியல் வியாபாரப் பயணமொன்று சென்றிருந்த போது, அவளது கணவன் மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இரத்தினபுரியிலுள்ள ஒரு கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக தந்தி கிடைக்கிறது. நந்தா ஓரளவு சந்தேகத்துடனான சஞ்சலத்துடன் வேகமாக வைத்தியசாலைக்கு பியலின் அம்மாவுடன் விரைந்து செல்கிறாள். மருத்துவமனையில் கிடந்த பிணத்தைப் பார்த்ததும் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். அங்கே இறந்திருந்தது பியலல்ல. ஜினதாச. அது நந்தாவுக்குள் ஒருவகைக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. கணவன் உயிருடன் இருக்கும் போதே அவள் வேறொரு திருமணம் முடித்திருந்ததை நினைத்து தனக்குள்ளே உருகி அழுகிறாள். பெருந்துயர் அவளை அடைத்துக்கொள்கிறது. அவளைப் பொறுத்தவரை அது அவளது குலப்பெருமையை மீறும் செயல். ஜேமிசு ஏற்கனவே ஜினதாச இறந்தவிட்டான் என்று சொன்ன கதையை நம்பித்தான் அவள் பியலைத் திருமணம் முடித்தாள். அதனால் இப்போது நந்தாவின் மனதில் ஜேமிசு மீது தீவிர வெறுப்புத் தோன்றியது. அவள் அடையும் குற்றவுணர்ச்சியையும், துயரில் துய்த்த அவள் நிலையையும் நாவல் உச்சமாக வெளிப்படுத்துகிறது.

இதுவே கம்பெரலிய நாவல் வரிசையின் முதல் நாவலான கம்பெரலிய வின் கதையாகும். இந்தக் கதைக்குள் நிகழும் சிங்கள சமூக உளவியல், சமூகத்தின் அகமுரண்கள், சாதிய அடுக்கமைவு,சமூக நம்பிக்கைகள் போன்றவற்றை மார்ட்டின் விக்ரமசிங்ஹ மிக ஆழமாக சித்திரிக்கிறார். அக்கால சிங்கள சமூகம் பற்றிய சமூக, வரலாற்றுப் பண்பாட்டியல் ஆய்வேடாகவே இந்நாவலைக் கொள்ளமுடியும் என்கிற அளவுக்கு அக்கால சிங்கள சமூக அமைப்பின் ஓர் ஆழமான சித்தரிப்பாக இந்நாவலைச் சொல்ல முடியும். சிங்கள சமூகத்தின் ஒவ்வொரு உள்அடுக்கும் மிகத் தத்ரூபமாக நாவலுக்குள் கொண்டு வரப்படுகின்றன. மார்டின் விக்ரமசிங்க ஒரு நாவலாசிரியருக்கான அனைத்து தகைமைகளையும் கொணடவர். அவர் வரலாறு, தத்துவம், மதங்கள் என விரிந்த பார்வையும் வாசிப்பும் கொண்டவர். அவரது அபுனைவுகள், புனைவுகள் இரண்டுமே இதற்கு சாட்சியாக இருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக சிங்கள சமூக அமைப்பில் நிகழ்ந்த படிமுறையான மாற்றத்தை ஒரு சமூகவியல் ஆய்வு போன்று நுண்மையாக தன் புனைவுக்குள் அகப்படுத்தி இருக்கிறார். சிங்கள நிலப்பிரபுத்துவ சமூக ஒழுங்கமைப்பின் நிரந்தர வீழ்ச்சியையும், மத்தியதர வர்க்கத்தின எழுச்சியையும் பேசும் அதேவேளை தனிமனித உறவுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் எப்படி முதலாளித்துவப் பொருளாதார எழுச்சிக்கு வழிகோலியது என்ற விவரணமும் காட்சியாக நாவலின் இன்னொரு பக்கமாக வெளிப்படுகிறது. இருப்பினும், மார்ட்டின் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த சமூக மறுஒழுங்கமைப்புடன் கூடிய கலாசார உணர்திறன்தான் நாவலில் கவனத்தையீர்க்கும் முக்கிய விடயமாகத் தெரிகிறது.

2

தென்னிலங்கையில் கடற்கரையை அண்டியுள்ள கொக்கல என்ற கிராமத்தில் கதை நிகழ்கிறது. இரிகல் தேவலாய எனும் கற்குன்று அங்குள்ளது. அதனை இரிகல் தேவலாய எனும் வழிபாட்டிடமாக அந்த மக்கள் மதித்து வழிபடும் தொல் பண்பாட்டு மரபை பதிவுசெய்கிறது. அக்கல் தெய்வீக சக்தி வாய்ந்தது என நம்பும் அந்த மக்களின் ஆன்மீகத்தோடு கல் கலந்திருப்பதை சித்திரிக்கிறார். மக்கள் தங்கள் தேவைகளை முன்னிறுத்திப் பிரார்த்தனை புரிவது, சமான்ய கிராமிய மக்களின் தேவைகளை முன்வைத்து நேர்த்தி செய்யும் மரபு நாவலில் பகடியாகவே வருகிறது. அந்தக்கல்லே அவர்களின் ஆன்மீக வாழ்வின் குறிகாட்டியாகும். தங்களது தேவைகள், சாபம் ,கோரிக்கைகள் எல்லாம் இரிகல கல் முன்னால் கொட்டிக்கிடந்தது. ஆந்த இரிகல் அந்த மக்களின் வாழ்வோடு எப்படிக் கலந்திருந்தது என்பதை “இங்கு மக்கள் வாழத் தொடங்கிய நாள் முதல் அவர்களின் சுகதுக்கங்கள், அழுகை, ஒப்பாரிகள் முதலியவற்றை நெஞ்சின்றி அறிந்தும் கண் இன்றிப் பார்த்தும் காதின்றிக் கேட்டும் வந்துள்ளது” என்கிறார். அந்தக் கல்லுக்கு தெய்வீக வலு உண்டென்பதை கிராமத்தின் சாமான்ய மக்கள் தொடங்கி கற்றவர் வரை நம்புகின்றனர். அந்தக்கல் ஒரு தேவதையால் பாதுகாக்கபடுகிறது என்பது அவர்களின் மேலதிக நம்பிக்கையாக இருக்கிறது.

அந்தக்கல்லில் தினமும் வந்து குவியும் கிராமப்பெண்களின் பிரார்த்தனைகளும், கோரிக்கைகளும், சாபங்களும் வெவ்வேறானவை. இது அக்கால சிங்கள கிராமப்புற மக்களின் சமூக உளவியலையும், சமூகவியலையும் பிரதிபலித்துக் காட்டுகிறது. நோயிலிருந்து சுகம் பெறவும், வியாபாரத்துக்காகச் சென்ற கணவனை பாதுகாத்துத் தரவும் (ஆனால் அவர்களுக்கு என்ன ஆபத்து இருந்தது என்பது நாவலுக்குள் இல்லை. வாசகனே அனுமானித்துக்கொள்வதற்கான சந்தா்ப்பத்தை தந்துவிடுகிறார் மார்டின்), தமக்குப் பகையான கிராமத்தவனை அழிக்கவும், தனது பசுமாட்டைத் திருடிய கள்வனை அழிக்கவும், தன்னை மலடி என ஏசிய ஒருத்தி அரைபட்டுச் சாகுமாறு சபித்தும் கல்லில் மிளகாய் அரைக்கிறாள் ஒருத்தி. அந்த கிராமிய மக்களின் அன்றாடத்தோடு அந்த நம்பிக்கை வலுவாகப் பதிந்துவிட்டதன் விளைவு அது.

0

தொன் கதறியன் கைசாறுவத்தே முகாந்திரத்தின் குடும்பம் குலப்பெருமையுடனும், சாதிய பெருமையுடனுமே வாழ்ந்தது. நிலபுலன்கள், சொத்துகள், வியாபாரத்தளங்கள் மூலம் பொருளாதார நிலையிலும் உயரடுக்கில் இருந்தனர். முகாந்திரத்தின் வீட்டைப் பற்றிய சித்திரிப்பிலிருந்து இது புலனாகிறது “ஒல்லாந்தரால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் இவ்வீட்டில் வசித்தோர் முதுகுலத்தவரான உயர் சாதியினர். வெயில், மழை, காற்று, காலம் என்பவற்றினால் ஏற்படும் எந்தத் தாக்கத்தையும் ஒரு நவீன வீட்டைவிட தாங்கும் திறன் படைத்தது. அந்த வீடும், அதில் வசிப்பவர்களும் கிராமத்தில் வழக்கொழிந்து மாறிக்கொண்டு வரும் பாரம்பரியத்தின், பரம்பரையின் கடைசித் தலைமுறையாவர். என்றாலும் அவர்கள் எந்தக்கட்டத்திலும் தனது குலப்பெருமையை விட்டுக் கொடுக்காதவர்கள்”

சிங்கள சமூகப் பாரம்பரியத்தின் வழக்காறுகளின் எல்லா மரபுகளும் முகாந்திரத்தின் வீட்டில் பின்பற்றப்படும். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முன்னிட்டு “சிறுமட்பாண்டங்களில் சமைத்தல்” எனும் சடங்கு முகாந்திரத்தின் வீட்டில் கோலாகலமாக நடைபெறும். இது கிராமத்தவரிடையே பிரசித்தி பெற்றிருந்தது. முகாந்திரத்தின் குடும்பத்தினர் மட்டுமே தனியாக அமர்வார்கள். கிராமத்திலுள்ள ஏனையவர்கள் பெருவளவில் கூடி இதற்கு உதவிகள் செய்வார்கள். அவர்களுக்கு வீட்டுக்கு வெளியில் தனியாக விருந்து வழங்கப்படும். ஆனால் முகாந்திரத்தின் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து கலந்துகொள்ளும் வெளியாள் என்றால் அது பியல் மட்டுமே.

நந்தா பியல் உறவு நாவலில் மென்மையாகவே சித்திரிக்கப்படுகின்றன. நந்தா பியலுடன் பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குலப்பெருமையுடன்தான் பேசுவாள். ஒரு கட்டத்தில் பியல் “நான் புத்தாண்டுப் பரிசு கொடுத்தால் நந்தா மறுப்பதேன்?” எனக் கேட்கிறான். “நான் ஏன்பியலிடமிருந்து பரிசு பெறவேண்டும்?” என தன் குலப்பெருமையுடன் திருப்பிக் கேட்கிறாள் நந்தா.

ஆங்கிலேயக் காலனிய அரசு இலங்கையில் அறிமுகப்படுத்திய கல்வி, ஆங்கிலமொழி என்பவற்றின் மீதும் நந்தாவுக்கு வெறுப்பு இருந்தது. அது தங்கள் சாதி, குலப்பெருமைகளை இடையூறு செய்வதாக அவள் நினைத்தாள். இருந்தாலும் அன்று ஆங்கில மொழி தெரிந்திருப்பதும் ஒரு சமூக அந்தஸ்தாக கருதப்பட்டதனாலேயே அவள் பியலிடம் ஆங்கிலம் படித்தாள். ஆனாலும் ஆங்கிலத்தின் மீது தன்வெறுப்பை அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறாள். “ஒப்பமிடவும், தந்தி வாசிக்கவும் ஆங்கிலத்தைக் கற்றிருந்தால் போதும் என அம்மா சொல்கிறார்” என நந்தா ஓரிடத்தில் சொல்கிறாள்.

நந்தாவின் மனவுலகை அறியவும், அவளது மனதில் தனக்கான இடம் என்ன என்பதை அறியவும் பியல் மிகவும் முயல்கிறான். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நந்தா தன் குலப்பெருமை எனும் ஓட்டுக்குள் ஒளிந்துகொள்பவளாகவே இருக்கிறாள். பியலும் சாதியில் அந்தளவு குறைந்தவனுமல்ல. நந்தாவின் அளவுக்கு உயர்ந்தவனுமல்ல. எனினும் நந்தாவை அவன் தீவிரமாக விரும்பினான்.

சிங்களவர் வாழ்வியலில் மதம் உள்ளார்ந்து ஏதேனும் முரண்பாடுகளைக் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. கத்தோலிக்கம் பௌத்தம் என்ற மத பிரிவினைகளை சிங்களவர் என்ற இனத்துவக் கோட்பாடு வெற்றிபெற்றிருந்தது. சிங்களவர் பண்பாடும், இனத்துவமுமே அங்கு முக்கியம். நாவலின் பிரதான கதாபாத்திரங்கள் கத்தேலிக்கப் பெயர்களில் உலவினாலும்கூட இயேசு என்ற ஒரு சொல்கூட இடம்பெறுவதில்லை. பௌத்த பண்பாட்டோடும், நம்பிக்கைகளோடும் இணைந்த வாழ்வுதான் அவர்களுடையதாக முன்வைக்கப்படுகிறது. முகாந்திரத்தின் பெயர் தொன் கதறின் கைசாறுவத்தை முகாந்திரம், மாத்தறை அம்மையாரின் இயற்பெயர் கரோலிஸ். ஆனாலும் பௌத்த நம்பிக்கைதான் அவர்களின் வாழ்வியலோடு கலந்ததாக இருக்கிறது. வீட்டுப் பணியாளன் சாதா ஒரு முறை நுளம்பை அடித்த போது மாத்தறை அம்மையார் அது பாவம் என்கிறாள். உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற பௌத்த அறத்தை நுளம்பில்கூட பிரயோகிக்கும் மிக இளகிய மனம் கொண்டவராகவும், பெளத்த மரபில் தீவிர நாட்டம் கொண்டவர்களாகவும் அவர்கள் வருகின்றனர். இதனால் நாம் ஒரு முடிவுக்கு வரலாம். காலனிய ஆட்சிக்காலப்பகுதியில் சில அரசியல் தேவைகளுக்காக மாத்திரமே கத்தோலிக்கப் பெயர்கள் சூட்டிக்கொள்ளப்பட்டன. ஆனால் உண்மையில் அவர்கள் பௌத்தர்களாகவே இருந்தனர்.

மாத்தறை அம்மையார் பற்றி “வீட்டின் பின் வாயிற் பக்க முற்றத்தில் கோலொன்றில் கட்டப்பட்டுள்ள காகத்துக்கான சிரட்டையில் ஒரு பிடி சோறு வைக்காமல் அவள் ஒரு நாளும் சோறுண்டு கைகழுவுவதில்லை. மரக்கறிப் பாத்திரங்களுடன் ஒரு சோற்றுப்பீங்கானை விகாரைக்கு அனுப்பாது ஒரு பூரணை நாளும் அவள் வாழ்நாளில் கழியவில்லை”

அதேநேரம் மாத்தறை அம்மையார் மத நம்பிக்கை அளவு கடந்த ஒரு வெறித்தனமான பக்தையாகவும் இல்லை என்பதையும் மார்ட்டினின் சித்தரிப்பிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. “அவள் பிக்குகளிலோ, சமயப் போதனைகளிலோ எல்லை மீறிய குருட்டு நம்பிக்கையுள்ள பக்தையாகவும் இருக்கவில்லை” என்கிறார்.   அதுதவிர ஏனைய கதாபாத்திரங்களும் பியல், கரோலிசு, ஜேமிசு, லைசா, கத்தரினா, என பெரும்பாலான கதாபாத்திரங்கள் கிறஸிதவ பெயரிடலைக் கொண்டவர்கள். ஆனாலும் கிறிஸ்தவ வாழ்வியலோ, மதநம்பிக்கைகளோ, பண்பாடோ ஒருதுளியேனும் நாவலில் இல்லை என்பது மீள மீள நம்மில் தோன்றும் ஒரு குழப்பமாக இருக்கிறது.

கிராமத்து வாழ்வியலும் சமூக அடுக்கமைவும், பொருளாதார வடிவமும் மாற்றமுற்ற பாங்கு நுட்பமாக நாவல் நெடுகிலும் பிண்ணப்படுகிறது. முகாந்திரம் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் குணவியல்புகளைப் பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். அவர் தனிச்சொத்தின் மதிப்பை உணர்ந்தவர், ஏழைகளுக்கு அதிகம் பங்கு வைக்க விரும்பாதவர். இறுக்கமான கொள்கையுடையவர். தாராண்மை வாதத்தை நினைவுறுத்துபவர். பொருளாதார எண்ணம் சார்ந்து மாத்தறை அம்மையார் இதற்கு நேரெதிரானாவராக இருக்கிறார். வறியவர்களின் வாழ்வு மீது பரிவுணர்சசி கொண்டவராக இருக்கிறார். அவர்களுக்கு ஏதேனும் கொடுத்து உதவுவதில் முகாந்திரத்தை விட தாராள மணம் மனம் படைத்தவர். இது கிராமத்தில் நிலவிய பொருளாதார வடிவத்தை சித்திரிப்பதாக இருக்கிறது. அவரது இந்தப் பரிவுணர்ச்சியைக் கவனத்திற் கொண்ட முகாந்திரம் “கிராமப் பெண்கள் வறுமையால் துன்பப்படுகின்றனர் என்பது உண்மையே. அதற்காக இப்படிக் கொடுத்தால் எமக்கும் பிள்ளைகளுக்கும் அபாயம்தான் வரும்” என்ற முகாந்திரத்தின் குரல் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

குலப்பெருமையை முகாந்திரம் குடும்பத்தினர் பேணிக்கொள்ள விரும்பியது பிறருக்கு தாங்கள் பெரிய மனிதர் என்று காட்டிக்கொள்வதற்கல்ல. சில சில்லறைத்தனமான மனிதர்களிடமிருந்து எந்தத் தொந்தரவும் நேராமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்குத்தான் என்ற ஒரு உண்மையையும் நாவலின் கதைப் போக்கிலிருந்து ஒரு வாசகனால் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் குலப்பெருமையே கடைசியில் அவர்களின் வீழ்ச்சிக்கு எல்லா வகையிலும் கரணமாக இருக்கிறது. சமூக சூழல் மாறிக்கொண்டிருந்ததை ஒரு தூர நோக்கு அடிப்படையில் அவர்கள் அவதானம் செலுத்தத் தவறிவிடுகின்றனர். காலனிய அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த சமூகத் தளமாற்றத்தை அவர்கள் சரியாக கிரகித்துக்கொள்ளவில்லை. வெறும் காலத்தால் மறையும் சாதி, குலத்தின் மீது மட்டுமே அவர்களின் வாழ்க்கை சுழன்றது.

மார்ட்டின் நாவலுக்குள் கொண்டு வரும் உயர்குல பாரம்பரியம் என்பது ஒழுக்கத்திலும் கட்டுக்கோப்பிலுமே தங்கி இருக்கிறது. பியல் நந்தாவுக்கு ஓரிரு கடிதங்கள் கொடுத்தான் என்பதை மாத்தறை அம்மையார் கேள்விப்பட்ட போது அவர் அடையும் அதிர்ச்சி நம்மைத் திகைப்பூட்டுவதாக இருக்கிறது. இத்தனைக்குமிடையில் நந்தா பியலுக்கு ஒரு கடிதம்கூட கொடுத்திருக்கவில்லை.

நாவலில் இன்னுமொரு இடத்தில் திஸ்ஸவை அவன் கற்கும் காலியிலுள்ள பிரபல பாடசாலைக்கு ரயிலில் அனுப்பிவைப்பதற்காக அவனை ரயில் நிலையத்துக்கு குதிரை வண்டியில் மாத்தறை அம்மையார் அழைத்துக்கொண்டு செல்லும் போது அவரது உறவுக்காரப் பையனான சோமதசாவையும் அழைத்துச் செல்கிறார். காரணம் திஸ்ஸவை அனுப்பிவிட்டு அவர் வரும்போது குடும்ப ஆண்துணையின்றி தனியே வரவேண்டி ஏற்படும். அவர்களின் குலவழக்கப்படி உயர்குலப்பெண்கள் தனியே வரக்கூடாது என்ற குல ஒழுக்கத்தைப் பேணியே அவனை அழைத்துச் செல்கிறார். “உயர் குடும்பப்பெண் நடுத்தர வயதத தாண்டி இருந்தாலும் கூட வீட்டைவிட்டு கால்மைல் தூரம் செல்வதாக இருந்தாலும் வேறொரு பெண்ணுடைய துணை, அல்லது பிள்ளையுடைய துணை, அல்லது வேலைகடகாரியுடைய துணை கட்டாயமானதாக இருந்தது”

என நாவலில் மார்ட்டின் விக்ரமசிங்க விவரிக்கிறார்.

சிங்கள சமூகத்துக்குள் உள்ளுறைந்திருக்கும் களவொழுக்கம் குறித்தும் விபரணங்கள் நாவலில் வருகின்றன. கத்தரினாவுக்கும், முகாந்திரத்துக்குமிடையில் இருந்த கள்ள உறவு, லைசாவுடன் கரோலிசுக்கிருக்கும் கள்ள உறவு என நாவலில் அவ்வப்போது இந்த உறவு பற்றி சித்திரிக்கப்படுகிறது. இது சிங்கள சமூக அமைப்பின் ஒரு புறத்தோற்ற வெளிப்பாடாகும். இத்தகைய உறவு அந்த சமூகத்தில் இன்றுவரை தொடர்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

அக்கால சிங்கள சமூகத்தில் நோய் குறித்த எண்ணப்பாங்குகளும், அதற்குச் சிகிச்சையளிப்பதற்கான அணுகுமுறைகளும் மிக ஆழமான சமூக யதார்த்தத்தோடு முன்வைக்கப்படுகின்றன. கஆங்கில மருத்துவம் ஓரளவு சமூகத்தில் ஊடுறுவிச் செல்வாக்குப் பெற்றுவிட்ட பின்னரும் கிராமிய மருத்துவர்களே பெரும்பாலும் மருத்துவம் பார்த்தனர். குழந்தைப்பேறு கிராமிய மருத்துவச்சிகளால் பார்க்கபட்டது. அநேகமாக நோய்கள் பேய்களால் வந்தாக நம்பப்பட்டன. பெரிய வருத்தங்களுக்கு காலியிலிருந்து ஆங்கில மருத்துவர்கள் அழைத்து வரப்படும் நிலைமையும் காணப்பட்டது. அது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. நந்தாவுக்கு நோய் வந்த போது இந்த இரு வைத்திய முறைகளையும் முகாந்திரம் பயன்படுத்தினார்.

“ஒரு வைத்தியரைக்கொண்டு நோயாளிக்கு வைத்தியஞ் செய்யும்போது பேயாட்டக்காரரைக் கொண்டு பேயாட்டம் ஆடுவிப்பது கிராமத்தவரின் வழக்காறாகும். அப்பழக்கம் பெருவளவிலிருந்தும் இன்னும் அகலவில்லை என்பதால் நந்தாவுக்கு வைத்தியரைக் கொண்டு வைத்தியஞ் செய்யும் அதேவேளை பேயாட்டக்காரரைக் கொண்டும்  பேயாட்டமும் ஆட்டுவிக்கப்பட்டது”

என அந்த சந்தர்ப்பத்தை விவரித்துச் செல்வார் மார்ட்டின். நோய்க்கான காரணத்தை அறிய மைவெளிச்சம் பார்த்தல், சாத்திரம் கேட்டல் போன்ற சமூக நடத்தைகள் நாவலின் மானுடவியல் பண்பாட்டுப்பக்கமாக பரிணமிக்கிறது. பொதுவாகவே சாத்திரம் பார்ப்பவர்கள் நோய்க்காரணியை பேயின் தலையில் போட்டுவிட்டு குணப்படுத்தவதற்கென பணமும் கறந்து விடுவார்கள். நந்தா விசயத்திலும் அதுவே நடக்கிறது. பொதுவாக நோயாளியின் குடும்பமும், சமூகமும் கொண்டிருக்கும் சந்தேகத்தையே அவர்களும் மாறி அடித்துவிடுவர். அதனை நம்பச் செய்வதும் இலகுவானது. அப்போதுதான் கழிப்பு, நேர்ச்சை என்றெல்லாம் பணத்தை கறக்கலாம் என்ற கீழ்மைப் பண்புதான் மருத்துவத்துறையின் பண்பாக அப்போதும் இருந்திருக்கிறது. பியல் நந்தாவைக் கவர்வதற்காக வசியம் செய்ததனால் இந்த நோய் ஏற்பட்டது என குறிசொல்லிகளும் சொல்லிவிட அது கிராமத்தில் முழுமையாகப் பரவிவிடுகிறது. பிறகு பரகசியமாகவே பேயோட்டல் சிகிச்சைக்கு நந்தா உட்படுத்தப்படுகிறாள். பேயாட்டத் தேவையான வாழை மரக் குருத்து, இலை, இளநீர், நிலநீர், இறைச்சி, பூ, வெண்மலர் போன்ற பொருட்களை கிராமத்தவர்களே பெருவளவுக்கு வழங்குகின்றனர். இதற்காக பெரும்பணம் செலவு செய்யப்பட்டது. முகாந்திரத்தின் பெரும்பாலான சொத்துகள் விற்கப்பட்டன. அது அவர்களது பொருளாதார உயர் அந்தஸ்தின் மீதான பாரிய அடியாக விழுகிறது.

நாவலின் ஓரிடத்தில் நந்தாவின் நோய் பியலின் பிரிவினால் வந்தது என்று கத்திரினா சொன்ன போது மாத்தறை அம்மையார் கடுங்கோபங்கொள்கிறார். அது தங்கள் குலப்பெருமைக்கு இழுக்கு என கடுமையாகக் கடிந்துகொள்கிறாள். “நீ இனியும் வீண் பேச்சுப் பேசாதே. என்னிடம் சொன்னது போல் வேறு யாரிடமும் உனது முட்டாள் கருத்துகளைச் சொல்லாதே. கேட்டால் ஐயா கோபிப்பார். உன்னை ஊரிலே இருக்கவிடமாட்டார்”

குலப்பெருமையும் முகாந்திரத்தின் அதிகாரமும் இந்த வார்த்தைகளில் துலக்கம் பெறுகின்றன. கிராமிய நிலமானிய சமூக குலரீதியாக, பொருளாதார ரீதியாக உயரடுக்கில் இருக்கும் முகாந்திரம் போன்றவர்களை சாமான்ய மக்கள் அனுசரித்துப் போக வேண்டிய விளிம்புநிலையில்தான் இருந்தனர் என்பதை மார்ட்டின் மிகத் தெளிவாக முன்வைத்திருக்கிறார்.

***

ஜிஃப்ரி ஹாசன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *