அந்த வீடு இருளுக்குள் இருக்கும்
ஒளி வீடு
ஒவ்வொரு இரவும் கடையை அடைத்துவிட்டுச் செல்லும் வழியில்
அதனைக் காண்கிறேன்
சுற்றிலும் இருள் அடர்ந்திருக்கும்
முற்றத்தில்
ஒளி முளைத்திருப்பது போல
நிற்கிறது அது
ஒளியில் முழுதும் பச்சையம் மின்னும்
முற்றத்து வாழை மரம்
முதல் நாளில் சற்றே கடந்து சென்ற பிறகே
அதனைக் கவனித்தேன்
பின் திரும்பி வந்து பார்த்தேன்
சாலையிலிருந்து
உள் ஒதுங்கிக் கிடந்தது அந்த ஒளி
ஒளிக்குக் காரணமானவள்
ஒரு பெண்ணாக இருக்கலாம்
முதியவராக இருக்கலாம்
கஞ்சா பயிலும் சிறுவனாக இருக்கலாம்
ஒருவேளை ஒரு செய்தியும் அதன் உள்ளடக்கத்தில்
இல்லாமலும் இருக்கலாம்
ஆனாலும்
ஏதேனும் செய்தி இருப்பது போல
அவ்வளவு பிறழ்கிறது
நள்ளிரவில்
அந்த ஒளி
யாருக்கோ அழைப்பு போல
யாரின் பேரிலோ கசப்பு போல
யார் பேரிலோ அன்பு போல
யார் பேரிலோ ஒன்றுமே இல்லை என்பது போல
***
பெண் குழந்தையாக இருக்கையில்
குழந்தையாக இருக்கிறாள்
கன்னியென்றானால்
வெறொன்றாகி நிற்கிறாள்
கையில் குழந்தையுடன் செல்கையில்
முகமே வேறு
சிரிப்பே வேறு
இருசக்கர வாகனத்தில் செல்கையில் சாமி
பெற்ற குழந்தை கார் ஓட்டிச் செல்ல
முன்னிருக்கையில்
அமர்ந்து
ஓரக்கண்ணால் பார்த்து
சிரித்துக் கடக்கிறாள்
நானும் பதிலுக்குச்
சிரித்துக் கொண்டேன்
மருவூர் அரசியின்
சிரிப்பு
மூகாம்பிகைத் தாயாகத்
தெரிகிறாள்
***
கொலையுண்டவனுக்கு
நான்குபேர் என்றால்
கொலை செய்தவனுக்கும்
நான்குபேர்
உடைத்தவனுக்கும் நான்குபேர்
வைத்தவனுக்கும்
நான்குபேர்
***
நாலு நாலுபேராக வந்து
நாலுநாலு பேராக சென்று
நாலுபேர் வந்தார்கள் நாலுபேர் சென்றார்கள்
என அறிந்து முடிப்பதற்குள்
நாலுபேர்
வந்து விடுகிறார்கள்
நாலுபேரைக் குறை சொல்லி
நாலுபேரை நிறை சொல்லி
முடிப்பதற்குள்
நாலுபேர்
வந்து விடுகிறார்கள்
நான்குபேரை சுத்தமாக
அறிந்து கொள்வதற்குள்
நாலுபேர் வந்து விடுகிறார்கள்
இவ்வளவு சிறிய பயணத்திற்கு
எவ்வளவு பெரிய
போட்டி ?
***
தனக்கு ஒவ்வாதவர்களைப் பார்த்து தெருவில் இறங்கி
மனம் குரைக்கத் தொடங்கியது
திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்
தனக்கு இசைவானவர்களை நோக்கி
இளிக்கத் தொடங்கியது
திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்
இச்சை இனாமென்று ஓடும் அதனை
திருப்பித் திருப்பி அழைத்து வந்து
அதன் நாற்காலியில்
அமர வைத்தேன்
ஒருபோதும் நாற்காலியில்
நானிருந்தேனில்லை.
***
-லக்ஷ்மி மணிவண்ணன்
சிறப்பான கவிதை …