வழி
ஒருவன் ஒருவனிடம் வழிகேட்டான்
அது ஒருவனுக்கும் தெரியாத வழி
ஆயினும்
தெரிந்த வழியைக் கூறி அனுப்பினான்
சரியாகப் போய் சேர்ந்துவிட்டான்.
கல்லல்
இந்த மலைக்கு உடலெல்லாம் கண்கள் உண்டு
இமைக்காத கண்கள்
மூடாத கண்கள்
விழிக்காத தியானக் கண்கள்
மலையைப் பார்க்கும் கண்களெல்லாமும் மலையுடையதுதான்
அது தன் கண்களைத்
தன் கண்களால் பார்த்துக்கொண்டேயிருக்கின்றது
உண்மையில் பார்ப்பதை அதனிடம்தான் கற்றுக்கொண்டேன்
மலைக்கு ஜீவராசிகளைப் போன்று வாயொன்றும் இல்லைதான்
அதுதன் ரகசியங்களைத் தவிர்த்துவிட்டு
நம் அனைவரது மெளனத்தையும்
மூச்சு விடாமல் பேசிக்கொண்டேயிருக்கின்றது
கேட்போர் குறித்த கவலையேதும் இல்லாமல்
பேசுவதையும் இப்போது
அதனிடம்தான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
மலைக்கு ஏராளமாய் காதுகளும் உண்டு
மானுட அபத்தங்களிலிருந்து சற்றே விலகியிருந்து
இயற்கை வெளிப்படுத்தும்
ஒவ்வொரு வார்த்தையையும்
ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டிருக்கிறது
தன் சிறுசிறு முணுமுணுப்பையும் தவறவிடாது
கேட்பதையும் அதனிடமே கற்றுக்கொள்ளவேண்டி
அனுதினமும் சென்று அனுதினமும் கொண்டு வருகிறேன்.
திங்களைப் போற்றுதும்
பூமியின் எல்லா கணத்திலும்
நிலவு உதித்துக்கொண்டேயிருக்கின்றது
இந்த அதிசயத்தைக் கண்டுணர்ந்தவன்
வானின் எல்லா இடத்திலும்
நின்று பார்த்துத் தெளிந்தவனாயிருக்க வேண்டும்.
முழுநிலா உற்சாகமாக உதிக்கிறது
வெளியூரில் பணியாற்றி
ஒரு நாள் விடுப்பில் வரும் தந்தை
விளக்குவைக்கிற நேரத்தில் வீட்டுக்குள் நுழைவது மாதிரி
இப்போது நாமெல்லோருமே நமக்குத் தெரியாமலேயே அதன் குழந்தையாகிவிடுகிறோம்.
திரை
பிணைத்து வைத்திருந்த இளமை எங்களிடம் விடை பெற்றிருந்தது
இப்போது எம்மிடையே குடியேறிய முதுமையின்
விருந்தினர் நாங்கள்
எனக்கு வெளியிலிருந்து
உறக்கமில்லாமல் எனது மனையாள் புரண்டு கொண்டிருக்கிறாள்
அங்கிருந்து சிணுங்கும்
ஒரு காலம் எங்கள் அன்பைப் பெருக்கிக் கொண்டிருந்த
கொலுசொலி
இப்போது அவளது உபாதைகளை முணுமுணுத்துக் கிடக்க
இரவுகள் மிக நீண்டிருக்கின்றன
விடியலுக்கே வாய்ப்பில்லை என்பதுபோல் .
மீட்பு
மனைவிக்கும் என் அம்மாவுக்கும் மனப்பிணக்கு
அதனாலான கடும்வாதத்தில் என் தலை உருண்டுவிட்டது
உருண்ட தலையை மீட்டுக்கொண்டு திரும்ப
எனக்கு இரண்டு நாட்கள் ஆயிற்று
பாதுகாப்புக்குப் பிரார்த்தித்தேன்
“நான் என் உத்தமத்திலே நடப்பேன்
என்னை மீட்டுக்கொண்டு என் மேல் இரக்கமாயிரும்”.
-ஸ்ரீநேசன்
மிகவும் அருமையான கவிதைகள்..!!