​​​​​கிஷ்ணா

“எட்டி, என்ன? வேலையா இருக்கேன், திரும்ப கூப்டவா?”

“இரிங்கப்பா, என்னால முடியல.. ஒங்க பிள்ளய வந்து கூட்டிட்டுப் போங்க. சொன்னோடி ஒன்னும் கேக்க மாட்டுக்கா.”

“இப்போ என்ன.. வந்து ஒரு மணிக்கூர் கூட ஆகல!”

“இடுப்ப விட்டு எறங்க மாட்டுக்கா. ஒரே அடம்.. என்ன வேணும்னு கேட்டா, கிஷ்ணா கிஷ்ணான்னு ஒரே அழுக..”

“அது செரி. அவ்ளோதானா? அது நம்ம கதையோட எஃபக்டாக்கும்?”

“ஒங்க வேலதானா? அப்போ நீங்களே வந்து ஒங்க மகள சமானப் படுத்துங்கோ.”

“அப்பா, அப்பா, கிஷ்ணா, கிஷ்ணா” என அலறல் சத்தம்.

“இரிட்டி, இந்தா ஒங்கப்பாட்ட பேசு.. இந்தா.. இந்தா..”

“மக்ளே, என்ன வேணும் பிள்ளக்கி? அழாமச் சொல்லு பாப்பம்.. குட் கேள் லா?”

“கிஷ்ணா வாணும்.. கிஷ்ணா வாணும்…”

“செரி மக்ளே.. அப்பா சாய்ந்தரம் வந்து கிஷ்ணா கத சொல்லுகேன் செரியா? நீ குட் கேளா அழாம இருப்பியா?”

“பேட் கேள்.. பேட் கேள்…”

“நோ, நோ… செல்லக்குட்டி குட் கேளாக்கும்.. தெரியுமா?அப்பா சாய்ந்தரம் வந்து ஒரு சர்ப்ரைஸ் தருவேனே..”

அழுகை அடங்கியது.

“அம்மா, அப்பா சப்பீஸ் சொல்லுகா… சப்பீஸ்.. சப்பீஸ்…”

இன்னும் இருபது நிமிடங்களில் ஆண்டறிக்கை சமர்ப்பித்து முடித்தால் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு நல்லதொரு தேநீருக்குச் செல்லலாம் என நினைத்தேன். பத்து நிமிடங்களில் மறுபடியும் அழைப்பு.

“எட்டி, கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாம இரியேன். நா முக்கியமான மீட்டிங்க்கு போப்போறேன். வந்து கூப்டுறேன்..”

“டேய், என்னன்னு கேளுங்க.. ஒரு நிமிசம்…”

“சட்டுன்னு சொல்லு, என்ன?”

“உங்க ஆஃபீஸ் பக்கத்துல நெறைய மயில் உண்டும்லா?ஒரு மயிலிறகு எடுத்துட்டு வாங்கலாம்டே.. ப்ளீஸ்…”

“மயிரு.. வைட்டி ஃபோன.. நேரங்காலம் தெரியாம கொஞ்சிட்ருக்கா..”

குளுகுளு அறைக்குள் சிறு புழுக்கம்.

“பாரதி, ரிப்போர்ட்லாம் ஓகே தான். ஆனா, ஒன்னு நீங்க யோசிக்கணும்…”

“சொல்லுங்க சார்..”

“லிசன்.. உலகம் எங்கயோ போய்ட்ருக்கு…. சரி, அப்பிடி வேணாம்…. வேற மாதிரி வரேன்… இப்போ ஒரு டிரெயின்ல போறோம்னு வைங்க…”

‘சரித்தான், ஆரம்பிச்சுட்டான்டா. எவ்ளோ ட்ரெயின் ஓடுது. இவன…’

“யெஸ் சார்.”

“பொறப்பட்ட ஸ்பீட்லயே போய்ட்டே இருக்காம்னு வைங்க. ஹவ் வில் யு ஃபீல்?” என்று கேட்டபடி என் முகத்தைப் பார்த்து உடனடியாக பதில் வேண்டும் என்பதைப் போல சைகை செய்தார்.

“புரியுது சார்..”

“சொல்லுங்க பாரதி. உங்களுக்கு அந்த ட்ரெயின் ஜர்னி எப்பிடி இருக்கும்? போரடிக்காதா? கடுப்பாக மாட்டீங்களா?யு ஹேவ் நோ டைம் டூ ஸ்டேண்ட் அண்ட் ஸ்டேர், இல்லையா? ”

“கண்டிப்பா சார்.”

“அப்பிடின்னா உங்க மனசுல என்ன தோணும்?”

‘உன் மண்டைல என்ன தோணுமோ அதுதான்டா எனக்கும் தோணும். ஏதோ வானத்துலந்து வந்து குதிச்ச மாதில்லா சீன் போடுகான்.’

“லிஸன், ரொம்ப ஈஸி…  உலகத்துல எல்லாவனும் இப்போ எப்பிடி யோசிக்றானுங்க.. அப்பிடி யோசிங்க..பதில் கெடைக்கும்.”

“சரி தான் சார். ஏந்தான் இப்பிடி உருட்டுகானோன்னு யோசிப்பேன்..”

“எக்ஸாக்ட்லி.. யு ஆர் மை பாய்… அப்பிடின்னா, உலகம் போற வேகத்துக்கு ஈடு குடுக்கணும்னா நம்ம இங்க என்ன யோசிக்கணும்? நீங்களே சொல்லுங்க பாப்போம்…”

‘உலகம் நல்லா இருக்கணும்னா ஒன்ன மாதிரி ஆளுங்கள நிக்க வச்சி சுடணும். சரிதான!’

சட்டென அலைபேசி அலற அமைதிப்படுத்தினேன். அடுத்த நொடியே மீண்டும் அலறல். தொடர்ந்து ஐந்து முறை. கொஞ்சம் பொறுமையிழந்தவராய், “நீங்க கால் எடுக்கணும்னா எடுத்துட்டு வாங்களேன் பாரதி. நா வெயிட் பண்றேன்.. இட்ஸ் ஆல்ரைட்..” என்றார்.

“நோ சார். வைஃப் தான். அப்றமா பேசிக்றேன்..”

“ஹே, இல்ல மேன்.. வைஃப்னா கண்டிப்பா பேசிடணும். வைஃப் தானே உலகமே நமக்கு. பேசிட்டு வாங்கோ…நாம கொஞ்சம் டீப்பா பேச வேண்டியிருக்கு.. முடிச்சிட்டு வாங்கோ…”

“ஓகே சார். ஜஸ்ட் டூ மினிட்ஸ்..”

“ஒனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாதா? பாஸ் கூட மீட்டிங்க்ல இருக்கேன். அவரு நக்கலா போய் பேசிட்டு வாங்கோன்னு சொல்லுகாரு…”

எதிர்ப்புறம் சிணுங்கல்.

“என்ன இப்போ?”

“எனக்குக் கழியாம இருக்குன்னு தான கூப்டேன். இவள இடுப்புல வச்சிட்டே எப்பிடி கறி வைக்கது? தொட்டில்ல போட்டாலும் கெடக்க மாட்டுக்கா. கிஷ்ணா, கிஷ்ணான்னு… நானும் ஃபோன்ல வீடியோ போட்டுக் குடுத்தாச்சு. அதத் தூக்கி எறிஞ்சு இன்னா க்ராக் விழுந்துட்டு..”

“ஆமா, ஒனக்கு ஃபோன் வாங்கித் தரதுக்கே நா தனி வேலைக்குப் போணும்… இதோட அஞ்சு ஃபோன் ஆச்சுல்லா? செரி, விடு.. இப்ப என்ன? ஒறங்கிட்டாளா?”

“மடிலயே கெடக்கா. ஒறங்கல. நீங்க அவட்ட சொல்லுங்க..”

“மக்ளே, பிள்ள கொஞ்ச நேரம் ஒறங்கு. அப்பா ரெண்டு சர்ப்ரைஸ் கொண்டு வருவேன், செரியா?”

“அப்பா… கிஷ்ணா, கிஷ்ணா…”

“செரி, கிஷ்ணா கத அம்மைட்ட சொல்லச் சொல்லுகேன் செரியா?”

“அம்மா, கிஷ்ணா, கிஷ்ணா…”

“எட்டி, கிருஷ்ணன் கதை ஏதும் சொல்லு. பிள்ள தூங்கிருவா.. நா லஞ்ச்ல கூப்டுகேன். ஒரு ஒன் அவர் கூப்டாத. வலிக்கின்னா பெயின்கில்லர் போட வேண்டியதான?”

பதிலின்றி துண்டிப்பதில் அவளுக்கு என்னதான் கிடைக்குமோ! எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியது நான்தான். எல்லாவற்றிற்கும் தீர்வு குடுக்க வேண்டியதும் நான்தான். என்ன நியாயம் இது?

“ஸோ, சொல்லுங்க பாரதி… ட்ரெயின்ல என்ன எதிர்பாப்பீங்க?”

‘டேய், நீ இன்னும் அதே ட்ரெயின்லதான் இருக்கியா? ஒனக்கெல்லாம் ஏன்டா வீட்லருந்து கால் வர மாட்டுக்கு?ஆமா, சனியன் தொலஞ்சு போட்டும்னு இருக்கும் போல அந்தம்மா. நீ எதுக்கெடுத்தாலும் உலகம் எங்க போகுதுன்னு தூக்கிட்டு வந்துருவேல்லா.. சை.. அண்ணன் படிச்சுப் படிச்சு சொன்னான், மீன் யாவாரத்த எக்ஸ்பேண்ட் பண்ணுவம்லன்னு… கொழுப்பெடுத்துப் போயி ஊர விட்டு வந்தம்லா.. எனக்குத் தேவதாம்…’

“சார், உங்க பாய்ண்ட் புரியுது. நாம இன்னும் வேகமா ஓடணும்னு சொல்ல வறீங்க..”

“குட்.. ஆனா, அது மட்டுமில்ல..”

“எஸ் சார்.. எஸ்..”

“வேற என்ன செய்யணும்? யோசிங்க… நான் என்ன நினைக்கிறேன்னு சரியா சொல்லுங்க பாக்கலாம்.”

‘நீ என்னடா யோசிக்கப் போற? எப்பிடி செலவக் கொறைக்கலாம், எவன வெளிய அனுப்பலாம்னு தான் யோசிப்ப. மண்டையன்.’

முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு யோசிப்பதைப் போல நடிப்பது பழகிய விசயம் தான்.

“சார். செலவு கொஞ்சம் ஓவரா தான் இருக்கு. என்ன பண்ணலாம்னு யோசிக்கணும்.”

“அதேதான்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க.”

“நீங்க என்ன நினைக்கிறீங்க சார்?”

“நான் சொல்றேன். ஆனா, இத எப்பிடி ஹேண்டில் பண்றதுன்னு நீங்க தான் யோசிக்கணும்.”

“நிச்சயமா சார்.. சொல்லுங்க.”

நீண்ட கலந்துரையாடலிற்குப் பிறகு நினைத்தபடியே அந்த முடிவில் வந்து நின்றார். என் அலைபேசியில் மீண்டும் பல அழைப்புகள் வந்திருந்தன.

“சரி, அப்போ அப்பிடியே பண்ணலாம். எவன தூக்கலாம்னு ஒரு லிஸ்ட்ட போடுங்க.. ஒரு மெமோ குடுப்போம். அடுத்த மாசம் ரிலீவ் பண்ணி விடுவோம்.. இவனுக பண்ற வேலைய இப்போ AI-லயே பண்ணிரலாமே. உலகம் எங்கயோ போய்ட்டு இருக்குல்லா? இன்னும் அதே ஓல்ட் சிஸ்டத்தவச்சிக்கிட்டு ஓட்ட முடியாது, ரைட்? அப்றம் எதுக்கு இவனுக, என்ன?”

“எக்ஸாக்ட்லி சார்..”

‘நீ மட்டும்தான் சொல்லுவியா மேன்.. எக்ஸாக்ட்லி… எக்ஸாக்ட்லி… உலகம் போற போக்குல…’

யாரை எப்படி அனுப்புவது என்று முடிவெடுப்பது ஒரு கொடுமையான காரியம். எல்லாரும் நானே பார்த்துப் பார்த்து வேலைக்கு எடுத்தவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உச்சமாக இருக்கும். ஒட்டு மொத்தத்தில் நல்லவொரு அணி. இதைக் கலைத்துப் போட்டு ஒரு ஆட்டம் ஆட வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு போராட்டம்தான்.

“எப்பா, உங்களுக்கு கொஞ்ச நேரம் வந்துட்டுப் போக முடியுமா?”

“எதுக்கு இப்போ?”

“கொஞ்சம் வந்துட்டுப் போங்களேன்.. அழுகைய நிறுத்த மாட்டுக்கா..”

“என்னது? இன்னுமா ஒறங்கல அவ?”

“ஆமா, தொட்டில ஆட்டி ஆட்டி கை வீங்கிட்டு எனக்கு.. பாத்ரூம் போகக்கூட விடமாட்டுக்கா.. எனக்கு அழுகையா வருகு.. நா என்ன பண்ண?”

‘நா என்ன பண்ண! நானுந்தான் இங்க ஒரு மண்டையன்ட்ட மாட்டிக்கிட்டு முழிக்கேன். அவனும், அவன் முழியும். நல்லா அவிச்ச பனம்பழம் மாதிரி..’

“நா ஒன்ன கத சொல்லச் சொன்னம்லா?”

“கதல்லாம் சொல்லிட்டேன். அதுக்கப் பொறவு தான் இன்னும் அழுகா.. என்ன கேக்கான்னே புரிய மாட்டுக்கு..”

‘நீ என்ன லட்சணத்தில் கதை சொன்னியோ! என்ட்ட மட்டும் நல்லா ஒரண்டய இழுக்கேல்லா.. பிள்ளயச் சமாளிக்கக் கழியாதா? கேட்டா, டக்குன்னு கண்ணுலந்து கொட்டிரும்.. நான் எங்க போய்க் கொட்ட?’

“அவட்ட குடு ஃபோன.”

“அம்மு, என்ன வேணும் பிள்ளக்கி.. நா ஒன்ன ஒறங்கச் சொன்னம்லா? பிள்ளக்கி சர்ப்ரைஸ் வேணுமா, வேண்டாமா?”

“சப்பீஸ் வேண்டா.. உக்கம் வாணும்.. உக்கம் வாணும்…”

“என்னம்மா? அழாமச் சொல்லு பாப்போம்.”

“அப்பா உக்கம் வாணும். உக்கம் வாணும். அம்மா தர மாட்டுக்கா.”

“செரிம்மா, அப்பா அம்மைட்ட சொல்லுகேன். அம்மாட்ட குடு..”

“சொல்லுங்கோ..”

“எட்டி, என்ன கத சொன்ன நீ?”

“கிருஷ்ணா கத தான்.”

“அது செரி, என்ன கத?”

“கிருஷ்ணா வாலு பண்ணி யசோதாட்ட வாயத் தொறந்து காட்டுவாம்லா. அந்தக் கத… ஏன் கேக்கியோ?”

“செரி, பிள்ளைட்ட குடு..”

“அப்பா, அப்பா, உக்கம் வாணும்..”

“செரி மக்ளே, அப்பா வரும்போ வாங்கிட்டு வாரேன் செரியா? இப்போ குட் கேளா மம்மம் சாப்டுட்டு ஒறங்கணும், என்னா?”

“அம்மா, அப்பா உக்கம் வாங்கி தருவாளே…”

சந்திப்பு முடிந்து கிளம்பும்போது சொன்னார். “ஸோ பாரதி. உங்களால இதெல்லாம் ஈஸியா பண்ண முடியும்னு எனக்குத் தெரியும். இந்த உலகத்துக்கேத்த ஆளு நீங்க தான்.. கீப் இட் அப்..”

மாலை வீட்டிற்குள் நுழைந்த போது கமந்து படுத்து முனகிக் கொண்டிருந்தாள் அம்மு.

“எட்டி, என்னா? எப்பிடியிருக்கு இப்போ? பிள்ள எப்போ ஒறங்குனா?”

“ம்‌ம்‌ம், எம்மா… எம்மா…” வலியில் முனகினாள்.

“செரி, செரி, நீ கொஞ்சம் ஒறங்கு.”

சட்டென விழித்தவள், “மயிலிறகு கொண்டு வந்தேளா?” என்று கேட்டாள்.

“ஆமா, இப்ப இருக்க நெலமைல நாம் போயி மயிலிறகு பொறுக்கிட்டுக் கெடக்கேன்.”

“எப்பா, நாஞ் சொன்னம்லா எடுத்துட்டு வாங்கன்னு. பிள்ளக்கி கிருஷ்ணன் வேசம் போட்டு ஃபோட்டோ எடுக்கலாம்னு நெனச்சேன். அவ வேற கிஷ்ணா கிஷ்ணான்னு அழுதுட்டே இருந்தால்லா..”

“வேசம் தான? போட்டு விடு.. மயிலிறகு இல்லாட்டி இப்ப என்ன கொறஞ்சிரப் போது?”

“ஆமா, ஒங்களுக்குத் தேவையான விசயம்னா எல்லாம் செய்வியோ. ஒலகத்துல இல்லாத்ததையா கேட்டுட்டேன்? ஒவ்வொருத்தரும் பொண்டாட்டி கேட்டா என்னல்லாம் செய்யா! இது நாம்லா கேட்டேன். அதுக்கு மதிப்பு கெடயாது. நான்னா எளக்காரம் தான! ஒங்ககிட்ட நா கேட்ருக்கவே கூடாது..”

“ஆரம்பிக்காத..”

“ஆமா, நீங்க போய் உங்க வேலயப் பாருங்க. இப்போ எந்திச்சி கத்துவா..”

“கத்துனா நா பாத்துக்குறேன். நீ ஒன்னும் கெடந்து பொலம்பாண்டாம். வேண்டா வெறுப்பா பிள்ளயப் பெத்துட்டு…”

“என்னது? என்ன சொன்னியோ?”

“ஒரு மயிரும் இல்ல, போய்ப் படு, போ…”

“இந்த வார்த்தயெல்லாம் சொல்லக் கூடாது பாத்துக்கோங்கோ..”

“போட்டி போ, போய்ப் படுன்னேன்.”

தொட்டில் மெல்ல அசைந்தது. சிறுசோடு அம்முவும் சிணுங்கிக்கொண்டே கிடந்தாள். தொட்டிலை மெல்ல ஆட்டிக்கொண்டே மின்னஞ்சல்களைப் பார்த்தேன். சிறுசோடு அம்முவும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

“அப்பா, அப்பா..” தூக்கத்தில் பேசுவது என்னைப் போலவே சிறுசுக்கும் ஒட்டிக் கொண்டது. புன்னகைத்தபடி, “ஒன்னுல்லம்மா, ஒறங்கு பிள்ள..” என்றேன்.

குரல் கேட்டதும் சட்டென புரண்டு படுத்தவள் கண் திறந்து, “அப்பா உக்கம், உக்கம்,” என்றாள்.

“செரிம்மா, பிள்ள ஒறங்கு. அப்பா வாங்கிட்டு வரேன், செரியா?”

மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள். குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுசு மீண்டும் தொடங்கினாள்.

“எப்பா, எப்பா, சட்டுன்னு குளிச்சிட்டு வாங்களேன். இவ அடங்க மாட்டுக்கா.. தொண்ட என்னத்துக்கு ஆகும்? காலைலேந்து கத்திக் கத்தி, ஒடம்புல ஒன்னும் கெடயாது..”

“இன்னா வாரேன். இரி..”

“அப்பா வருவா, போட்டும்மா, போட்டும்.. வாவோ, வாவாவோ..”

“அப்பா, உக்கம் வாணும், உக்கம் வாணும், அப்பா, அப்பா”

“நிம்மதியா குளிக்கக் கூட விட மாட்டியோ, செர எழவா இருக்கு…”

“பிள்ளய என்ன வார்த்தடே சொல்லுகீங்க?”

“எம்மா தாயே, நாம் பிள்ளயச் சொல்லலம்மா, ஆள விடு..”

“அப்போ, என்ன தான் சொன்னீங்க?”

“ரைட்டு.. இப்ப என்ன, ஒங் கால்ல விழணுமா, கொண்டா பிள்ளய மொதல்ல. ஒரு பிள்ளய சமானப்படுத்தத் தெரில, வாயி மட்டும்…”

“ஆமா, ஒங்கள விடக் கொறவு தான்..”

“அப்பா, உக்கம் வாணும்…”

“வாம்மா, செல்லக்குட்டில்லா.. அழாத..”

“உக்கம் வாணும்…”

“செரி, செரி, பிள்ளக்கி அப்பா கிஷ்ணா கத சொல்லவா?”

“உக்கம் வாணும்.. உக்கம் வாணும்..”

“அப்பா சர்ப்ரைஸ் சொன்னேம்லா.. பாப்போமா?” கேட்டதும் அழுகையை நிறுத்தினாள்.

“அப்பா சப்பீஸ், சப்பீஸ்..”

“குட் கேள்.. நீ அம்மைட்ட இரி. அப்பா, பேக்ல இருந்து எடுத்துட்டு வாரேன்..”

முறைத்தபடி வாங்கித் தன் மடியில் இருத்தினாள்.

“பிள்ளைக்கி நேரியல் உடுத்து விடு. கிருஷ்ணா வேசம் போடுவோம்.”  மடிக்கணினி பையைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். உற்றுப் பார்த்தபடி வேசத்திற்கான பொருட்களை எடுத்து வைத்தாள்.

“இங்க என்ன பார்வ? ஓங்குடும்பத்துக்கு ஒரு சொத்து எழுதி வச்சிருக்கேன் வேணுமா?”

மீண்டும் முறைத்தாள்.

“இங்கப் பாரு, பிள்ளக்கி சர்ப்ரைஸ்…” என்றபடி புத்தகத்தைத் திறந்து அந்த மயிலிறகை எடுத்தேன்.

“ஹாஹாஹா.. அப்பா, கிஷ்ணா, கிஷ்ணா” என்று சிரித்தாள்.

“பிள்ள தான் கிஷ்ணா, செரியா, கிஷ்ணாக்கு டிரெஸ் போடுங்க அம்மா, வாங்க, வாங்க..”

நேரியல் உடுத்து நேர்ந்து விட்டிருந்த நீண்ட கூந்தலை வாரியிழுத்துக் கட்டி, கண்மையிட்டு, சந்தனம் தீற்றிக் கோடிழுத்த போது அந்தக் குட்டிக் கிருஷ்ணா அழகாகச் சிரித்தான். ‘அடுத்து மகன் பிறந்தா நல்லாத்தான் இருக்குமோ!’

“அய்யா, சூப்பர், கிஷ்ணா ரெடி.. கண்ணாடில போய்ப் பாரு..”

தத்தித் தத்திச் சென்று அலமாரியின் கண்ணாடி முன் நின்று எட்டி எட்டிப் பார்த்து நின்றாள். பிள்ளையைப் பார்த்து ரசித்த அம்முவின் முகம் அவ்வளவு அழகு. ‘கோவமெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் என்ன!’

“அப்பிடியே உங்க அம்மா மாதிரியே இருக்கியே கிஷ்ணா,” என்றபடி அம்முவைப் பார்த்துக் கண்ணடித்தேன். கண்ணாடி முன் நின்று வாயை ஆவெனத் திறந்து பார்த்தாள் சிறுசு. திரும்பி முகத்தைச் சுறுக்கியபடி என்னைப் பார்த்தாள். மீண்டும் கண்ணாடியைப் பார்த்து வாயைத் திறந்து உற்று நோக்கினாள். அவ்வளவுதான். ஓவென ஒரு கத்தல்.

“அப்பா, அப்பா… உக்கம் வாணும், உக்கம் வாணும்.”

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, கிருஷ்ணா தரையில் விழுந்து புரள ஆரம்பித்தான்.

“பிள்ளய எடுக்காம என்னத்தப் பாத்துட்டு நிக்கட்டி?”

“ஏன், நீங்க எடுங்க…” என்று சொல்லிச் சிரித்தபடி அடுக்களைக்குள் ஓடினாள்.

“எட்டி, எட்டி, எங்க….” என்றபடி பிள்ளையைத் தூக்கினேன்.

“அப்பா, உக்கம் வாணும்…” அடுக்களையில் அடுப்பைப் பற்ற வைக்கும் சத்தம்.

“எட்டி, இவள வந்து பிடி…”

“இரிங்கப்பா, இன்னா வாரேன்… கொஞ்ச நேரம் பாத்தா ஒன்னும் ஆகாது..”

மீண்டும் கிருஷ்ணா கதை சொல்ல ஆரம்பித்தேன். சற்று நேரம் கேட்பாள். மீண்டும் ‘உக்கம், உக்கம்’ என்பாள். இரண்டு மூன்று கதைகள் முடிந்தன. அதற்கு மேல் சொந்தக் கதையைத் தான் சொல்ல வேண்டும்.

“இந்தாப் பாரு பிள்ளைக்கி உக்கம்….” என்று சிரித்தபடி வந்து நின்றாள் அம்மு. கையில் ஒரு சிறு சம்படம். பிள்ளை மலைத்தபடி உற்றுப்பார்க்க, அருகே அமர்ந்து அந்த சம்படத்தைத் திறந்து காட்டினாள். அழகாக ஜொலித்த ஒரு சிறு உலக உருண்டை . கிருஷ்ணாவின் முகம் அப்படி மலர்ந்தது.

‘அட! நம்ம மர மண்டைக்கு இது தோணவே இல்லயே!’

“ஹாஹாஹாஹா… உக்கம்.. உக்கம்… ”

நான் அம்முவை ஆச்சரியமாகப் பார்த்தேன். கில்லாடி தான். ஒரு குட்டி மிட்டாய் உலக உருண்டை. எப்படிச் செய்திருப்பாள்!

“அப்பா, உக்கம்.. உக்கம்…”

“ஆமாக்குட்டி, சூப்பர்லா… கிஷ்ணாக்கு உக்கம்…”

“அப்பா, ஆ… ஆ..” என்று வாயைத் திறந்தான் கிருஷ்ணா. ஒருநொடி யோசித்தபடி நின்றேன். அம்மு அந்தக் குட்டி உலகத்தை எடுத்து சிறுசின் வாய்க்குள் வைத்தாள். அவள் சட்டென ஓடிச் சென்று அலமாரியின் கண்ணாடி முன் நின்று வாய் திறந்து பார்த்தாள். என்னவொரு கண்கள். என்னவொரு முகம். ‘அடுத்ததும் மகளே தான்டா.’

சற்று நேரம் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தவள்,“அவ்வா… அவ்வா” என்று திறந்த வாய் மூடியபடி ஓடி வந்தாள். வாயோரம் வண்ண வண்ண மீசைகள் வழிந்துகொண்டிருந்தன. சில நொடிகள் தான். மீண்டும் ஓவெனக் கதறல். மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, தன் சிறு வாயைத் திறந்து காட்டினாள் சிறுசு.

“அப்பா, உக்கம் காணும்… உக்கம் காணும்…”

‘கரையாத ஒரு உலகத்தை எப்படிச் செய்ய!’

***

– சுஷில் குமார்

Please follow and like us:

2 thoughts on “கிஷ்ணா – சுஷில் குமார்

  1. ஹா ஹா 😂😂… அண்ணா… கிஷ்ணாவில் அப்படியே உங்களையும் அக்காவையும் கண்ணு முன்னாடி பாத்த மாதிரி இருக்கு.. செல்லக்குட்டியின் காட்சிகள் அழகு.. அதுலயும் அந்த குட்டி கண்ணாடி ரொமான்ஸ் க்யூட் 🥰
    ஆமா… அண்ணா, யாரு அந்த மண்டையன்😂😂??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *