1.
தன் சிறிய கைகளில்
உலகின் கனிந்த இதயமொன்றைத் தேடி எடுத்துத் தருபவன்.
எப்போதும்
ஒரு நீதிக்கதையின் மீதியை அதற்குள் ஒளித்து வைத்துக் கொடுக்கிறான்.
காலத்தில் பார்க்கப்போகும்,
மண்டியிட்டுக் கிடப்பவர்களுக்கும் ஆயுதமேந்தி நிற்பவர்களுக்கு மிடையில்
எப்படியாவது அச்சிறிய வாக்கியங்களை
நுழைத்திட வேண்டு மவனுக்கு.
2.
பெரிய உடல்களிலிருந்து அதிகாரம் வெளியேறும் போது
சிறிய உடல்களில் அது நடுக்கத்தை உருவாக்குகிறது.
அவர்கள் கற்றுவைத்திருந்த பிரார்த்தனையின் முதல் சொல்லை
உச்சரிக்கத் துவங்கும் போது தான்
எப்போதும் துளைக்கின்றன,
சரியான குறியில் வெளியேறிடும் ரவைகள்.
சிறிய உடல்களின் நடுக்கத்தை அதுவே முற்றிலுமாக நிறுத்துகிறது.
3.
சிறிய விறகுகளைப் போலவே அவர்கள் எரிந்து கொள்கின்றனர்.
சிறிய கற்களைப் போலவே அவர்கள் புதைந்து கொள்கின்றனர்.
சிறிய கனவுகளைப் போலவே அவர்கள் தோன்றி மறைகின்றனர்.
4.
ஒருவன்,
சிறிய பறவையின் வடிவத்தைச் செய்து பார்க்கிறான்.
அடுத்த ஒருவன்,
சிறிய பறத்தலின் சந்தோசந்தைப் பறந்து பார்க்கிறான்.
அதற்கு அடுத்த ஒருவன்,
சிறிய வானின் சுதந்திரத்தை முதன் முதலாகப் பார்க்கிறான்.
அதிகாரத்தின் ஒருவன்
அம்மீறல்களைக் கண்காணித்து குரலெழுப்புகிறான்.
5.
சிறிய சிரிப்பின் வடிவத்தை உங்களின் முகங்களுக்குத் தரப் போகிறேன்.
எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு,
இந்தத் தையலிடப்பட்ட புதிய உடல்களை அணிந்து கொள்ளுங்கள்.
சிரித்திடும் போது,
குண்டுகள் பதிந்த குழிகளின் ஆயிரமாயிரம் சிக்கல்களை
கண்டிப்பாக நீங்கள் மறைத்துக் கொள்ளவே வேண்டும்.
6.
இன்னும் பேசுவதற்கு உங்களிடம் சொற்களிருக்கின்றனவா?!
சில கனவுகளிருக்கின்றன அவை சொற்களை உருவாக்கித்தருகின்றன.
இன்னும் கனவு காண்பதற்கு உங்களிடம் உடல்களிருக்கின்றனவா!?
சில வலிகளிருக்கின்றன அவை உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன.
இன்னும் வலியை உணர்ந்துகொள்வதற்கு உங்களிடம் இதயங்களிருக்கின்றனவா?!
சில உறுதியான கோபங்கள் அவற்றை துடித்துக்கொண்டிருக்க வைத்திருக்கின்றன.
7.
நீங்களோ நானோ அசைவற்றுக் கிடக்கும் போது
அதிகாரம், ஒரு அமைதியை வரைந்ததைப் போலவே எல்லோரும்
பேசிக்கொள்கின்றனர்.
இறுக்கிக் கட்டப்பட்ட நம் கைகளில் பதிந்திருந்த வலிகளை
என்றேனும் யாரேனும் பாடக்கூடும்.
கைவிடப்பட்டவர்களுக்காகத் தான் இந்த உலகம் இவ்வளவு பெரியதாக
மாறியிருக்கிறது.
8.
இந்த உலகில் யாரையோ அணைப்பதற்கென விரிக்கப்பட்ட
கைகள் உலர்ந்திருக்கின்றன.
முன்பொரு காலத்தில் செய்யப்பட்ட சில விதைகளை
அக்கைகள் தூவிப்பார்க்கின்றன.
அவை வளர்கின்றன,
வெறுப்பொன்றும் தெரிந்திடாத சிறு இலைகளென.
அவை பூக்கின்றன,
அன்பை வெளிப்படுத்திடும் சிறு வடிவங்களென.
அவை உதிர்கின்றன,
எளிய மனிதனின் சிறு உடலென.
இந்த உலகில் யாரையோ அணைப்பதற்கென விரிக்கப்பட்ட
அதன் கிளைகளில் சிறிய உடலொன்று
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது.
9.
நாம் தான் அந்த நிலங்களை மிகவும் அகலமாகவும்
ஆழமாகவும் ஆக்கிக் கொடுத்தோம்.
ஒரு நாளில்,
குப்பைகளை நிரப்பிடும் கறுப்புப் பைகளில்
அவர்கள் நம் சிறு உடல்களை எளிதாக நுழைத்து
அந்நிலத்திற்குள்ளிட்டு மூடுகின்றனர்.
தொடர்ந்து பாடுங்கள்,
இந்த மரங்களின் காதுகள் எப்போதும் கேட்டபடியேயிருக்கின்றன!
பல கோடாலிகளின் கைப்பிடிகளாக என்றாவதொரு நாள்
அவை மாறக்கூடும்.
10.
சிறிய வடிவ உடலில் படர்ந்து செல்லும் ஒரு நரம்பை
அறுப்பதற்கு முன்பு,
உபயோகப்படுத்தப்படாத கத்தியின் அமைதியை எல்லோரும்
சந்தேகிக்கின்றனர்.
கடந்து வந்த பாதைகளில் இதுவரையில்,
ஒன்றைக்கூட அது வெட்டியிருக்கவில்லை.
அது மன்றாடுகிறது,
இளம் நரம்பொன்றில் தன் திறமையைச்
செலுத்திப் பார்ப்பதற்கு.
11.
சிறிய மர்மத்தைப் போலத்தான் இந்த சிறிய உடலினுள்
தேங்கிக்கிடக்கிறது
எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு பிரார்த்தனையும்
வன்மமும் மன்னிப்பும்.
எதையும் பகிர விரும்பாதவன்,
நதியில் தன்னுடலை விடுகிறான்,
தாகம் கொண்ட உயிர்களனைத்திற்குமாக.
12.
கண்டடைந்த இச்சிறிய உடல்களை தழுவிக்கொள்கிறோம்.
அம்மாக்கள் அணைத்திடும் இறுக்கத்தின் அன்பை
நம்மால் ஒரு போதும் செய்திட முடியாது.
எப்படியாவது.
அவர்களது அம்மாக்களின் குழிகளைத் தேடி அவற்றிற்குள்
நுழைத்திட வேண்டும் இச்சிறிய உடல்களை.
13.
ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் சில செடிகளை
அப்படியே விட்டுச் செல்கின்றனர்.
ஒரு அதிகாரத்தின் இடையிலோ
ஒரு ஆயுதத்தின் முன்னாலோ
ஒரு உயிரற்ற உடலின் மீதிருந்தோ
அவை தானக வளர்ந்து கொள்கின்றன
-கவிஞர் ஜீவன் பென்னி