சூரியனை வட்டமடிக்கும் கோள்களில்,  கடைவிளிம்பில் சுழலும்  நெப்டியூனின் இயக்கம்   மிகவும் பிறழ்ந்திருப்பதாக ,  புத்தாண்டின்  முதல் நாளில்  மூன்று விண்ணோக்ககங்களும் ஒருங்கே அறிவித்தன.   அக்கோளின்  திசைவேகம் மந்தப்பட்டிருக்கூடும் என  ஓகில்வி   டிசம்பர் மாதமே சந்தேகத்தைக் கிளப்பியிருந்தார்.  நெப்டியூனின் இருப்பையே அறிந்திராத  மக்கள் பெரும்பகுதி வாழும்  இவ் உலகத்தில் அச்செய்தி எந்த ஆர்வத்தையும் கிளர்த்தப்போவதில்லை.   சஞ்சலமுற்ற அக்கோளின் அருகே மங்கலான தொலைதூர ஒளிப்புள்ளி ஒன்று புலப்பட்டிருப்பது குறித்தும்  விண்வெளித்துறைக்கு  வெளியே ,    பெரிய பரபரப்புக்கு வாய்ப்பில்லை.    ஆனால், உருவத்திலும் ஒளிர்விலும் துரிதமாகப்  பெருகி வரும் அந்தப் புதிய ஆகிருதியின் நகர்வு,  கோள்களின் மரபான இயக்கத்திலிருந்து மாறுபட்டிருப்பதும், முன்பில்லாதவகையில்  நெப்டியூனும் துணைக்கோளும்  பிறழ்ந்திருப்பதும் தெரியவருதற்கு  முன்பாகவே அறிவியலாளர்களுக்கு மத்தயில் அது அசாதாரணமான ஒன்றாக உணரப்பட்டது.

அறிவியல்  பரிச்சயமற்றவர்கள் அரிதாகவே   சூர்ய குடும்பத்தின்  மகா தனிமையை  உணர்ந்துகொள்ள முடியும்.  சூரியன் தன்  கோள்களென்னும் சிறுபொறிகளோடும், குறுங்கோள் தூசிகளோடும்  புலப்படாத வால்மீன் கூட்டங்களோடும்  கற்பனைக்கு அசாத்தியமான   பிரம்மாண்ட   வெற்றுவெளியில்  நீந்திக்கொண்டிருக்கிறது. மனித அறிதல் ஊடுருவியவரையில், நெப்டியூனின் சுழல்விளிம்புக்கு அப்பால்  வெம்மையோ, ஒளியோ, சப்தமோ அற்ற சூனியப் பெருவெளி   இருபது மில்லியன் கணக்கான மில்லியன் மைல்களில் விரிந்து செல்கிறது. மிக  நெருக்கமான  விண்மீன்களை எட்டுவதற்குக்கூட  குறைந்தபட்சம்  அத்தொலைவைக் கடக்க வேண்டும்.  வழிதிரிந்துவரும்  இந்த அபூர்வபொருள்  இந்நூற்றாண்டில் தோன்றுவதற்குமுன்னர், மெலிந்தசுடரினும் திடமற்ற   வால்மீன் சொற்பங்களைத் தவிர்த்து , மனிதன் அறிந்து  எந்த விண்பொருளும் அந்த  சூனியப் பெருவெளியைக் கடந்துவந்ததில்லை.  அந்த கணத்த திணிவடர்ந்த, பொருள் விண்வெளியின் எந்த அறிகுறியேதுமின்றி மர்ம இருட்புதைவிலிருந்து வெளிப்பட்டு சூரியச் செவ்வொளி நோக்கி சீறிச் செல்கிறது. இரண்டாம் நாளில், சிம்ம ராசியின் மக விண்மீன் அருகே கணித்தற்கரிய விட்டத்துடன் ஓர் ஒளிப்புள்ளியாக எந்த சராசரி கருவியிலும் அது புலப்படக் கூடியதாக இருந்தது. இன்னும் சில நாட்களில் நாடக அரங்கத்துக்கான ஒரு கையக  நோக்கியிலேயே அது பார்க்கக் கூடியதாய் இருக்கும்.

புத்தாண்டின் மூன்றாம் நாளில் பூமியின் இரு அரைக்கோளங்களிலும்  தினசரிகளைப் புரட்டிவர்கள்  விண்ணகத்தில் தோன்றியுள்ள  அந்த அமானுஷ்யத்தின் முக்கியத்துவத்தை முதன்முறையாக உணர்ந்துகொண்டனர். ” கோள்களின்  மோதல்” எனத் தலைப்பிட்ட லண்டன் தினசரி , இந்த வினோத  கோள் நெப்டியூன்மீது மோதக் கூடும் என டியூகைனின் யூகத்தை முன்மொழிந்தது. லீடர் இதழில் செய்தி விரிவாக அலசப்பட்டது. ஜனவரி மூன்றில் உலகத் தலைநகரங்கள் பலவற்றிலும்,  விரைந்து நிகழவுள்ள பிடிபடா வானியல் மர்மம் குறித்த எதிர்பார்ப்புகள் தீவிரப்பட்டன. சூரியன் அத்தமித்து இரவு படர்ந்த இடமெல்லாம், உலகெங்கும் ஆயிரக்கணக்கானோர் விண்வெளியை உற்றுநோக்கத் தொடங்கினர். நட்சத்திரங்கள் மங்க வானில்  புனர்பூசம் அத்தமித்து லண்டனில்  வைகறை அரும்பும்  வரை,  பழக்கப்பட்ட அதே பழைய நட்சத்திரங்களே தெரிந்தன. அது ஒரு கார்கால வைகறை.   புலர்காலையின் மெல்லொளி வடிந்து பரவ,  விளக்குகளின் மெழுகுவர்த்திகளின் ஒளிர்வில்  சாளரங்களினூடாக அதிகாலைத் துருதுருப்புடன்  மக்கள் தென்பட்டனர். அசதியுற்ற   காவலர் ஒருவர் வானில் அதைப்  பார்த்தார். கடைத்தெருக்களில் பரபரத்த  கூட்டம்  அதில் வியந்து நின்றது. நேரத்தே வேலைகளுக்கு செல்லும் பணியாட்கள், பால்காரர்கள், செய்தி வண்டிகளை செலுத்தபவர்கள் ,  அசதியுடன் வீடுகளுக்குக் கலைந்து செல்பவர்கள்,  வீடற்று  திரிபவர்கள், காலவலாளிகள், கிராமங்களில் கழனிகளுக்கு விரையும் பணியாட்கள், பதுங்கிக் கிடக்கும் கள்ள வேட்டையாடிகள் எல்லொரும் அதைக் கண்டார்கள்.  இருள்விலகாத பரபரத்த தேசம் முழுவதிலும் அது பார்க்கப்பட்டது.  கடல்பரப்பில்  விடியலைப் பார்த்திருந்த  மாலுமிகள் கண்டார்கள்.  மேற்கு நோக்கி  வானில் தோன்றியிருந்த அந்தப் பெரும் வெண்ணிற நட்சத்திரத்தை எல்லோரும் பார்த்தார்கள்.

நாமறிந்த    நட்சத்திரங்கள் யாவினும் அது ஒளிமிக்கதாகயிருந்தது. விடிவெள்ளியின் அதிகபட்ச ஒளிர்வை விடவும் பிரகாசித்தது. வெறுமனே மினுக்கும் ஒளிப்புள்ளியாக இல்லாமல், பெரிதாக வெண்ணிறமாக தெளிந்து  சிறுவட்டுபோல , காலை புலர்ந்து ஒரு மணிநேரம் கடந்திருந்தும் பிரகசாமாக ஒளிர்ந்தது.  அறிவியலறிவு பரயிராத பகுதிகளில் பீதிகொண்ட மக்கள் ,  இதுபோன்ற மேலுலகத் துர்சகுணங்கள் கொள்ளை நோய்களும் போர்களும் சூழ இருப்பதன் அறிகுறிகள் என ஒருவருக்கொருவர் கதைகள் பரப்பினர்.  திடகாத்திரமான போயர்கள், அடர்நிறமான   ஆப்பிரிக்கப் பழங்குடிகள் , கோல்ட் கோஸ்ட் கறுப்பினத்தவர், பிரஞ்சுக்காரர்கள், ஸ்பானியர்கள், போர்துகீயர்கள்,  சூர்யோதய கததப்பில் நின்றபடி மேற்கே அந்தப் புதிய விசித்திர நட்சத்திரத்தின் அத்தமனத்தைப் பார்த்தார்கள் .

நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணோக்கு மையங்களில் , உரத்து  ஆர்ப்பரிக்கும் அளவுக்கு ஓர் அடக்கப்பட்ட உற்சாகப்பெருக்கு தெரிந்தது. அந்த இரு தொலைவெளி உருக்களும் ஒருங்கே  விரைந்திருக்க  ,  ஒளிப்படக் கருவிகளை, நிறமாலைமானிகளை, பல உபகரணங்களை சேகரிக்க  அங்குமிங்கும் பரபரத்தபடி,  அவர்கள் அக்கோளின் அழிவை  அந்த அரிய புதுமையைப் பதிவு செய்துவிட   துடிப்புடன் இயங்கினார்கள். சொல்லப்போனால் அது நம் புவியின் சகோதரக்கோள், மிகப் பெருங்கோள்.  திடீரென அது அழிவை  நோக்கி பிழம்பாக எரிவது   எதிர்பாராதது.  புறவெளியிலிருந்து தோன்றிய அந்த வினோத கோளினால்  நெப்டியூன்,     துல்லியமாக தாக்குண்டு ,  மோதலின் கடுவெப்பத்தால் இரு திடக்கோளங்களும் பிணைந்து ஒற்றை எரிபிழபம்பாகச் சுடர்கிறது.  புவியைச் சுற்றி, அந்நாள் விடியலுக்கு இரண்டு மணிநேரம்  முன்னதாக , அந்த வெளிறிய மகா நட்சத்திரஉரு , சூரியன் மேலேழும்பிட மேற்கு நொக்கி ஒளிகுன்றி மறைந்தது. உலகெங்கிலும் அந்த அற்புதத்தை  எல்லோரும் வியந்துகளித்தனர். ஆனாலும் நடசத்திரங்களை வேடிக்கை பார்ப்பதே பழக்கமாகிவிட்ட கடலோடிகளாளைப்போல  எவரும் அக்காட்சியை ரசித்திருக்க முடியாது. அந்த வினோத விண்ணக உருவின் வருகை குறித்து எந்த செய்தியும் எட்டியிராத, தொலைதூரக் கடல்களில் பயணித்திருக்கும் அவர்கள் , ஒரு குன்றிய  நிலவைப் போன்று தோன்றி  உச்சி வானேகி, தலைக்குமேல்  நகர்ந்தபடி , இரவின் விடைபெறலோடு மேற்கு நோக்கி மறைந்த அந்த வினோதத்தை அதிசயித்து பார்த்தார்கள்.

அடுத்து ஐரோப்பாவுக்கு மேலே அது  உதயமானபோது, மலைச்சரிவுகளில், வீட்டுக்கூரைகளில், திறந்தவெளிகளில் என எங்கும் கூடியிருந்து மக்கள், அந்தப்  மகா நட்சத்திரத்தைக் கிழக்கிலே எதிர் நோக்கினார்கள். வெண்தீயின் ஒளிர்வென  வெண்ணிறப் பிரகாசத்துடன் அது மேலெழுந்தது. முந்தைய நாள் இரவுக்குப் பின் அதன் மறுவருகையைப் பார்த்தவர்கள் “ஓ…அது பெரிதாகியுள்ளது, பிரகாசம் கூடியுள்ளது ” என ஆர்ப்பரித்தனர்.   உண்மையில் மேற்கில் மறைந்துகொண்டிருந்த அரைப்பிறை நிலவு தன் உருவில் பெரிதாகத் தோன்றியது. ஆனால் அத்தனை பெரிதாக இருந்தும் சிற்றுருவான  அந்த  புதிய நட்சத்திரத்தின் பிரகாசத்தை ஈடு செய்யமுடியவில்லை. வீதிகளில் கூடி நின்றவர்கள் ” ஆ, அது முன்பைவிட ஒளிமிகுந்துள்ளது ! ” எனக் கூச்சலிட்டனர். ஆனால் ஒளிகுன்றிய விண்வெளி ஆய்வகங்களில் அதனைக் கூர்ந்தவர்கள், பெருமூச்சுடன் ” அது    நெருங்கி வருகிறது,”… “நெருங்கி வருகிறது” என்றனர்.

 

“அது நெருங்கி வருகிறது” ….ஒன்றன் பின் ஒன்றாகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.  அதனை அடுத்து தடதடத்த தந்திப்பொறிகள் அச்சொற்களை தொலைபேசி வடங்களில் அதிர்விக்க, ஆயிரக்கணக்கான நகரங்களில் , சலித்தமுகம்கொண்ட கோப்புனர்களின் விரல்களில் “அது  நெருங்குகிறது” என அச்சானது.  அலுவலகங்களில் எழுதிக்கொண்டிருந்தவர்கள், ஒரு  விபரீத உணர்வுடன்     எழுதுகோல்களைக் கீழே உதறினர். ஆயிரக்காணக்கான இடங்களின் கூடிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் ” அது நெருங்குகிறது ” என்ற சொற்களில் உள்ள அபாய சாத்தியங்களில் ஒரு கணம் ஸ்தம்பித்தனர்.  துயில்கலைந்த வீதிகளில் அந்த செய்தி பரவியது.  நிசப்தமான  பனிமூடிய கிராமங்களில் அது உரக்கப் பரவியது. அதிரும் தந்திகளில் அச்செய்தியைப் படித்தவர்கள்,  விளக்கெரியும்  முற்றங்ளில் நின்றபடி , வருவோர் போவோரிடமெல்லாம் உரக்கச் சொன்னார்கள் ” அது நெருங்கி வருகிறது !”. நடனங்களிடையே , வேடிக்கையாக பகிரப்பட்ட அச்செய்தியை கேட்ட முகஞ்சிவந்த பிரகாசமான சிங்காரப் பெண்கள் , ” ஓ,  நெருங்கி  வருகிறது. உண்மைதான், எத்தனை அதிசயம்,  இது போன்ற ஒன்றைக் கண்டறிய   அவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருக்க வேண்டும். ” என அதில்  அறிவார்ந்த ஆர்வம் இருப்பது போல  பாவனை செய்தார்கள்.

சில்லிடும்  இரவைச் சமாளித்த   தனிமையான பரதேசிகள்  வானத்தைப் பார்த்தபடி   ” இரவு கொடிதாகக் குளிர்கிறது. அது அருகில்  நெருங்கி வரட்டும்.  எந்த கதகதப்பும்  இல்லை. அருகே வந்தாலும் எல்லாம் ஒன்றுதான் ” என ஆறுதலாக முனுமுனுத்துக் கொண்டார்கள்.

இறந்துபோன தன் கணவனின் பிரேதத்தின் அருகே ஒரு பெண்மணி “எந்த புதிய நட்சத்திரத்தால் எனக்கு என்ன ? ” எனக் கதறி அழுதாள்.

பரீட்சைக்காக அதிகாலையே விழித்த பள்ளிச் சிறுவன், சன்னல் கண்ணாடிகளில் படிந்த உறைபனி மலருருவங்களினூடாக  பிரகாசமாகப் பொலிந்த  அந்த மகா நட்சத்திரப் புதிரை அவிழ்க்க எத்தனித்தான், உற்சாகத்துடன் தாடையை முஷ்டியால் இடித்தபடியே   ” மையவிலக்கு விசை! , மையநோக்கு விசை! ” எனச் சொல்லிக் கொண்டான்  “ஒரு கோளை அதன் பயணப்பாதையில் தடுத்து நிறுத்தி , அதன் மையவிலக்கு விசையை நீக்க வேண்டும். பிறகு ! மையநோக்கு விசை ஆதிக்கம் செலுத்தும். அவவளவுதான் அக்கோள் சூரியனை நோக்கி வீழ்ந்துவிடும். “….” ம்..அப்படி   நேர்ந்தால் அதன் போக்கில் நாம் குறுக்காக வருவோமா! ”

இரவின் திசையில் பகலின் ஒளியும் மறைந்தது.   பின்னர்  நடுக்கும் இருளினூடாக அந்த விசித்திர  நட்சத்திரம் மீண்டும் வானேகியது.  முன்பை விடவும் அது ஒளி  கூடியிருந்தது. அத்தமன வானில் பெருத்து துஞ்சிய வளர்பிறை  நிலவு அதன்  பிரகாசத்துக்கு முன்னால் ஆவியுரு போன்று  வெளிறிக் கிடந்தது. தென்னாப்பிரிக்க நகரமொன்றில், மணக்கோலத்தில் ஊர்வலம் வந்த ஒரு பெரிய மனிதருக்கு  வீதிகளெங்கும்  விளக்குகள் சூடி வரவேற்புகள் களைகட்டின.  அங்கு ஒரு விசுவாசி  ” ஓ அதோ பாருங்கள், நம் தலைவருக்காக, வானில் கூட ஒளி பிரகாசிக்கிறது” எனத் துதிபாடினான். மகர ரேகைக்குக் கீழே ,  கொடிய விலங்குகளையும் துர்ஆவிகளையும் துணிந்த இரு கருப்பினக் காதலர்கள், மின்மினிகள் வட்டமிடும்  கரும்புக்காட்டுக்கு கீழே ஒடுங்கிக் களித்திருந்தார்கள். “ஆ..அது நம் காதலின் நட்சத்திரம்” எனக் கிசிகிசுத்த அவர்கள், அதன் இனிதான ஒளி மினுக்கத்தால் இனம்புரியா ஆறுதலடைந்தார்கள்.

அந்த மாபெரும் கணிஞர்  தன் தனியறையில் தாள்களைப் புரட்டினார். தனது  கணக்கீடுகளை முடித்துவிட்டார். அருகே சிறிய வெண்ணிறக் குப்பியில் நெடிய இரவுகளுக்கு தன்னை விழிப்புடன் வைத்திருந்த ஊக்கவஸ்து  கொஞ்சம் மிச்சமிருந்தது. ஒவ்வொரு  நாளும் தன் மாணவர்களுக்குப் பொறுமையாக  தெளிந்த, சீரான விரிவுரை வழங்கிவிட்டு வந்து உடனடியாக இந்த மகத்துவமான கணக்கீடுகளின் பணியில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.  ஊக்கவஸ்து எடுத்துக்கொண்ட கடும்பணியால்    அவரது முகம் குன்றி சோர்ந்திருந்தது. சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தது போல வெறித்திருந்தார். மெல்ல ஜன்னலை நோக்கி நடந்தபோது அங்கு சட்டென ஒரு பொறி அவரது அபோதத்தைக் கலைத்தது.   அங்கே  செறிந்த வீட்டுக் கூரைகளுக்கும், புகைபோக்கிகளுக்கும் , நகரத்தின் கோபுரங்களுக்கும் மேலே அரைவானுக்கு மேலாக  அந்த  நட்சத்திரம் துஞ்சியிருந்தது.  துணிச்சலான எதிரியை நேர்கொள்வது போல  அதைப் பார்த்தார். சற்று மௌனத்துக்குப் பிறகு கூறினார், “நீ என்னைக் கொன்று போடலாம்..ஆனால் உன்னையும் ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதையுமே எனது சிறிய மூளையின் பிடியில் வசப்படுத்த முடியும், நான் மாறமாட்டேன்…இப்போதும்…”

அந்த சிறிய குப்பியைப் பார்த்தார். “மீண்டும் உறக்கத்திற்கான தேவையே இருக்காது” என்றார்.  அடுத்த நாள், நிமிடம் பிசகாது சரியாக  நண்பகல் பனிரெண்டு மணிக்கு , தனது விரிவுரை அரங்கில் நுழைந்தார்.  எப்போதுமான பழக்கத்தின்படி  தொப்பியை மேசையின் முனையில் வைத்தார். கவனமாக ஒரு எழுதுகோல் சுண்ணத்தை தெரிந்தெடுத்தார். அவரால் அந்த எழுதுகோலை விரல்களில் பற்றிக்கொள்ளாமல் விரிவுரையாற்ற முடியாதென்பது மாணவர்கள் மத்தியில் ஒரு கிண்டலாக இருந்தது.  ஒருமுறை அவர்கள் அதை மறைத்துவைத்தபோது  இயலாமையில் தடுமாறிப் போனார்.   தன் நரைத்த இமைகளைத் தாழ்த்தி , துடிப்பான இளமுகங்களின் உயர்ந்துசெல்லும் அடுக்குகளைப் பர்த்தார். பின் தனது பழக்கப்பட்டுப்போன வழமையான வடிவிலான தொடர்களை கவனமாகத் தொடுத்தார் , “புதிய நிலவரங்கள் உருவாகியுள்ளன , எனது கட்டுப்பாட்டை மீறிய   நிலவரங்கள்”, சற்று நிதானித்தார்.. “நான் வடிவமைத்த இந்த பாடத்தொகுதியை நிறைவுசெய்யமுடியாமல் என்னைத் தடுக்கும் நிலவரங்கள், அது எப்படி என்றால், கண்ணியமானவர்களே, தெளிவாக சுருங்கக் கூறினால் , – மனிதன் வாழ்ந்தது எல்லாம் வீண் ”

மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். தாங்கள் சரியாகக் கேட்டார்களா? அல்லது சித்தப் பிரமையா ?   சிலர் புருவங்களை உயர்த்தினார்கள். ஏளனமாகச் சிரித்தார்கள். ஆனால் ஓரிருவர்  மட்டும் அவரது சாந்தமான, நரை விளிம்பிட்ட முகத்தைக் கருத்தூன்றிப் பார்த்தனர். “அது சுவாரஸ்யமானதாக இருக்கும்..” அவர் தொடர்ந்தார் “அந்த விளக்கத்தை தெரிந்துகொள்ள இந்நாளை பயன்கொள்வோம்,  எனது முடிவை எட்டியதற்கான கணக்கீடுகள் குறித்து உங்களுக்குத் தெளிவுபடுத்த , இப்படி தொடங்குகிறேன்…”….”

தனது  வழமையான பாணியில் ஒரு வரைபடத்தை சிந்தித்தபடி, அவர் கரும்பலகையின் பக்கம் திரும்பினார். அது என்ன  “மனிதன் வாழ்ந்தது வீண்”   என்றால் ? என ஒரு மாணவன் இன்னொருவனிடம் முனுமுனுத்தான். ” கவனி ” என ஆசிரியரை நோக்கி அவன் தலையசைத்தான்.  அவர்கள்  அதை விளங்கிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

அன்றிரவு அந்த நட்சத்திரம் தாமதமாக உதித்தது. அதன் முறையான கிழக்குமுகப் பயணம் , அதனை சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசி  நோக்கி நகர்த்தியிருந்தது ஒரு காரணம்.  அதன் அதீத  பிரகாசத்தால்,  அதன் உதயத்தில் வானம்  ஒளிர்நீலமாகத் தெரிந்தது.  அந்த ஒளிர்வில் உச்சியில்  வியாழன்கோள் ,   புனர்பூசம், ரோகினி,         கத்திரி, துருவ மீன்களை தவிர்த்து  எந்த நட்சத்திரங்களும் புலப்படவில்லை.  அது வெண்சுடராக  அற்புதமாகக்  காட்சியளித்தது.  உலகின் பல பகுதிகளில் அன்றிரவு, அந்த நட்சத்திரத்தைச்  சுற்றி வெளிறிய ஒளிவட்டம் தென்பட்டது. அதன் உருவம் பெரிதுபட்டிருப்பது புலப்படத்தக்கதாக இருந்தது.  ஒளிவிலகல்  நேரும் வெப்ப மண்டலங்களின் தெளிந்த வானில் அது கால்பங்கு நிலவுக்கு நிகரெனத் தோன்றியது.  இங்கிலாந்தில் நிலம் பனிமூடிக்கிடந்தது . ஆனால்  நடுவேனில் நிலவொளி போல எங்கும் வெளிச்சமயமாயிருந்தது. அந்தத் தெளிந்த  குளிர் இருளில் , சராசரியான அச்சு எழுத்தை ஒருவர் சரளமாக வாசித்துவிட முடியும்.  நகரங்களில் விளக்குகள் மங்கிச்  சோகையாக  எரிந்தன.

அன்றிரவு எல்லா பிரதேசங்களிலும் உலகமே விழித்திருந்தது.  கிறித்துவ தேசங்களின்   ஆர்வம்கூர்ந்த ஊர்ப்புறக் காற்றில்  தேனீக்களின் ரீங்கரிப்பு போன்று ஒரு கலக்கமான  முனுமுனுப்பு  நிலவியது. இந்த முனுமுனுத்த கலக்கம் நகரங்களில் உரத்த மணியோசையாக ஒலித்தது.    இனிமேலும் துயில வேண்டாம்,  பாவம்புரிய வேண்டாம், அனைவரும் தேவலயங்களில் கூடுங்கள் , வழிபடுங்கள் என மக்களை விளித்தபடி  ஆயிரக்கணக்கான மணிக்கூடுகளில் , ஆலய கோபுரங்களில்  மணியோசை உரத்து ஒலித்தது. பூமி தன் வழியில் சுழல, இரவுகள் கடந்துசெல்ல, மேலே இன்னும் பெரிதாக , இன்னும் ஒளிமயமாக அந்த மகா  நட்சத்திரம் கண்கூச வானேகியது.

நகரங்களெங்கும்,  வீதிகளிலும் வீடுகளிலும்  விளக்குகள் எரிந்தபடி இருந்தன. கப்பல்தளங்களிலும் பிரகாசமான வெளிச்சம்.  மலைப்பகுதிகளை நோக்கிய சாலைகள் யாவும் நெரிசலுடன் ஒளிவெள்ளமாக இருந்தன. குடிமைகள் பரவிய  நிலவெளிகளைச் சூழந்த கடற்பரப்புகள் யாவிலும் மனிதர்களும் உயிர்க்கூட்டங்களும்   நிரம்பி வழிந்த  பருத்த கப்பல்கள்  தடதடக்கும்  எந்திரப்பொறிகளுடன் ஊர்ந்திருந்தன.  அந்த மகா கணிஞரின் எச்சரிக்கை ஏற்கனவே உலகெங்கும் தந்தியடிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மொழிகளுக்கு பெயர்க்கப்பட்டாயிற்று.  வெந்தழலில்    கட்டுண்ட  நெப்டியூனும் புதிய கோளும்  சுழலடித்தபடி  முன்னெப்போதையும் விட  அதிவேகமாக சூரியனை நோக்கி முன்னேறின.   அந்த  தணல் பிழம்பு ஏற்கனவே   நொடிக்கு நூறு மைல்கள் பாய்ந்தபடி ஒவ்வொரு நொடியும் தன் பேய்வேகத்தை முடுக்கியபடி சீறிச் சென்றது.  தற்போது அது பறந்து வரும் கோணத்தில் , சொல்லப்போனால்  பூமிக்கு நூறு மில்லியன் மைல்கள் அப்பால் பாதிப்பின்றியே  கடந்து செல்லக்கூடும். ஆனால் அதன் கணிக்கப்பட்ட பாதையில்தான் வியாழனும் அதன் நிலாக்களும் சுழன்றபடி அற்புதமாக  சூரியனை  வட்டமடிக்கின்றன. ஒவ்வொரு கணமும் அந்த  நட்சத்திர பிழம்புக்கும் மாபெரும் கோளாகிய வியாழனுக்குமான ஈர்ப்பு வலுப்பெற்று வந்தது.   அதன் விளைவாக தவிர்க்கமுடியாதபடி வியாழன் தன் சூழல்பாதையிலிருந்து   நீள்வட்டத்தில்  விலக்கிவிடப்படலாம். சூரியன் நோக்கி விரைந்துவரும் அந்த நட்சத்திரப் பிழம்பு ஈர்ப்பினால் அலைவுற்று வளைவான பாதையில் புரண்டு பூமியின் மீது மோதுவதோ அல்லது  நெருக்கமாக உரசிச்செல்வதேனும் உறுதி. இதனால்  ”  நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள், கடும்புயல்கள், வெள்ளம், கடல்கொந்தளிப்புகள் , கணிக்கமுடியாத புவிவெப்ப உயர்வு ” ஆகிய விளைவுகளை அந்தத் தலைமைக் கணிஞர் கணித்திருந்தார்.

கடையூழியைக் கொண்டுவரும் அந்த தனியனான வெளிர்நீல துர்நட்சத்திரம் அக்கணிஞரின் சொற்களை உறுதிசெய்வது போல  புவிக்கு மேலே பிரகாசமாக ஒளிர்ந்தது.

அன்றிரவு கண்கள் நோக அதனை வெறித்துப் பார்த்த பலருக்கு  அது நெருங்கி வருவது தெளிவாகத் தெரிந்தது.  பருவ நிலையிலும் மாற்றம் தொடங்கியது. அதுவரை மத்திய ஐரோப்பா, இங்கிலாந்து, பிரான்சு முழுதிலும் பீடித்திருந்த உறைபனி அன்றிரவு  உருகி நெகிழத் தொடங்கியது.

இரவெல்லாம் மக்கள் வழிப்பட்டுக்கொண்டிருந்தனர், கப்பல்களில் பயணம் போயினர்,  மலைஸ்தலங்களுக்கு  கூட்டங்கள் விரைந்தன என்றெல்லாம் நான் கூறுவதை வைத்து, அந்த நட்சத்திரத்தால் மொத்த உலகும் பீதியிலிருந்ததாக நினைத்துவிட வேண்டாம்.  உண்மையில், வழமையான மரபுகளே எப்போதும் போல் ஆதிக்கம் செலுத்தின. சில ஓய்ந்த தருணங்களிலான பேச்சுகளையும்  அந்த அற்புத இரவையும் தவிர்த்துப் பார்த்தால், பத்துக்கு ஒன்பது பேர், அவரவரது வழமையான வேலைகளில்தான் மூழ்கியிருந்தனர்.  நகரங்களில், ஒன்றிரண்டைத் தவிர்த்து எல்லா கடைகளும், எப்போதும்போல உரிய நேரத்தில் திறந்தன. மூடப்பட்டன. மருத்துவர்கள், மரணச் சடங்கு ஆற்றுவோர் எப்போதும் போல் சேவையாற்றினர். பணியாட்கள் தொழிற்சாலைகளில் கூடினார்கள். ராணுவ வீரர்கள் படைப்பயிற்சி செய்தார்கள். புலமையாளர்கள் கற்றலில் ஈடுபட்டார்கள்.  காதலர்கள் அன்பு செய்தார்கள். கள்வர்கள் பதுங்கவும் தப்பியோடவும் செய்தார்கள். அரசியல்வாதிகள் திட்டங்களை ஆலோசித்தார்கள்.  செய்தி நிறுவனங்களின் அச்சுக்கூடங்கள் இரவெல்லாம்  ஓயாது இரைந்தன. மடத்தனமான  பதற்றத்தை தீவிரப்படுத்தவேண்டாம் என  திருச்சபை மதகுருக்கள் தங்கள் புனித ஆலயங்களை திறக்காமல் இருந்தனர்.  முன்பும் கி.பி  ஆயிரமாவது ஆண்டில் இதேபோல  கணிக்கப்பட்டிருந்த உலகின் முடிவு பொய்த்துப் போனதை தினசரிகள் நினைவூட்டின. வந்திருப்பது நட்சத்திரம் இல்லை.  வெறும் வாயுத்திரள்தான். அல்லது ஒரு வால்மீனாக இருக்கலாம். ஒருவேளை நட்சத்திரமாக இருந்தால்  அது பூமியை மோதும் சாத்தியம் இருக்காது. அப்படி ஒரு முன்னுதாரணம் இதுவரை நிகழ்ந்ததில்லை எனக் கூறப்பட்டது. எல்லாவிடத்தும் இயல்பறிவு   தெளிவாகத் தென்பட்டது. பிடிவாதமாக அச்சம்பீடித்தோரை ஏளனமும் கேலியுமாக சீண்டுவதும்  நடந்தது. அன்று இரவு , கிரீன்விச் நேரப்படியான ஏழரை மணிக்கு வியாழனுக்கு அதிகபட்ச நெருக்கத்தில் அந்த நட்சத்திரம் வந்துவிடும். நேரக்காத்திருக்கும் மாற்றங்கள் என்ன என அப்போது உலகம் கண்டுகொள்ளும். அந்த  மகா கணிஞரின் அச்சுறுத்தும் எச்சரிக்கையை பலர் ஒரு விரிவான சுய விளம்பரம் என்றே  எடுத்துக்கொண்டனர்.   கொஞ்சம் விவாதங்களால் சூடுபிடித்த  இயல்பறிவு, இறுதியாக தன் உறுதிப்பாட்டை  நிறுவியபடி அமைதியடந்தது.  அந்த புதிய செய்தியால் முன்பே சலித்துவிட்ட மூர்க்கர்களும் ஈனர்களும் தங்கள் இரவு விவகாரங்களுக்குத் திரும்பிவிட்டனர் . ஒரு சில நாய்களின் ஊளையைத் தவிர்த்து , விலங்குகளின்  உலகமும் அதை சட்டைசெய்யவில்லை.

 

கடைசியாக ஐரோப்பிய நாடுகளில் அந்த நட்சத்திரம் மேலே உதயமாவதைப் பார்த்தவர்கள்,  அது முந்தைய நாளைவிடப்  பெரிதாகியிருக்கவில்லை என்பதை  அடுத்த ஒரு மணி நேரத்தில் கண்டுகொண்டார்கள்.  அது கடந்துசென்றதைப்போல அபாயத்தை எதிர்கொள்ளவும்,  அந்தப்  பெருங் கணிஞனின் எச்சரிக்கையை ஏளனம் செய்யவும்  பலர் இரவெல்லாம் விழித்தபடிதான் இருந்தார்கள்.

ஆனால் அத்துடன்  அந்த ஏளனமும் வேடிக்கையும் நின்றுவிட்டது.   நட்சத்திரம் உருவில் பெரிதாகத் தொடங்கியது. அச்சுறுத்தும் வகையில் ஒவ்வொரு மணிக்கும்  தொடர்ந்து, நிலையாக அது உருப்பெருகியது.  நள்ளிரவின் உச்சி வானில் அது  நெருக்கமாகத் தெரிந்தது.  தொடர்ந்து அதீதமாகி வந்த  அதன் பிரகாசத்தால்  இரவு மற்றொரு பகல்போல் ஆனது. வியாழனிடம் தன் வேகத்தை இழக்காமல்,   வளைந்த பாதையில் அன்றி  பூமியை  நோக்கி அது நேராக வந்திருந்தால்,  இந்த இடைவெளியை அது ஒரே நாளில் கடந்திருக்கும். அப்படி  நேராததால்  நம்மை நெருங்கிவர ஐந்து நாட்கள் பிடித்திருக்கிறது.  அடுத்த நாள் இரவில், ஆங்கிலக் குடிகளின் கண்களுக்கு அத்தமிக்கும் முன்பாக, அது முக்கால்நிலவு அளவுக்கு  பெரிதாகத் தெரிந்தது. உறைபனியையும்   அது நெகிழ்த்தியது.  அமெரிக்காவின் மீது எழுந்தபோது அதன் உருவம் முழுநிலவுக்கு நிகரானதாக இருந்தது.  குருடாக்கிவிடும் பிரகாசத்துடன் கடும் வெம்மையுடன், உயரஉயர அதன் உக்கிரம் ஏறி அனல்காற்று வீசியடித்தது. விர்ஜினியாவில்,பிரேசிலில்,புனித லாரண்ஸ் பள்ளத்தாக்குகளின் மேல், ஊதா மின்னல்கள் வெட்ட, முன்காணா ஆல்ங்கட்டிகள்பொழிய,  புகைந்த இடிமேகப்பொதிகளிடையே அந்த நட்சத்திரம் விட்டுவிட்டு  ஒளிர்ந்தது. மனிடோபாவில் பனியுருகி வெள்ளம்பெருக்கெடுத்தது. உலகின் எல்லா சிகரங்களிலும் அந்தஇரவு பனி உருகத் தொடங்கியது. மலைகளிலிருந்து நதிகள் கணத்து கலங்கடித்துப் பாய்ந்தன.  நீர்ச்சுழலில் சிக்கிய முறிந்த மரங்களையும் செத்த மனிதர்கள், விலங்குகளின் உடலங்களையும் மேற்பகுதிகளிலிருந்து அவை அள்ளிவந்தன. மென்மேலும் உக்கிரமடைந்த  வெள்ளப்பெருக்குகள் , கடைசியாக, பள்ளத்தாக்குகளிலிருந்து மக்கள்கூட்டங்கள் குடிபெயர்ந்து  ஓடும்  கரைகளை அடைந்து  மூர்க்கம் தணிந்தன.

அர்ஜெண்டீனியக் கரைகளிலும் தென் அட்லாண்டிக்கிலும்  மனித நினைவிலேயே கண்டிராத உயரங்களில் கடல்அலைகள் மேலெழுந்தன. மூர்க்கப் புயல்களில்  கடல்கள் பலமைல்கள் நிலங்களில் புகுந்து   நகரங்ககளை  முழுதாக விழுங்கின.   இரவுமுழுதும் பன்மடங்கு அதிகரித்த  கொடுவெம்மையால் சூரியனின் உதயமே ஒரு நிழலின் வருகை போல் தெரிந்தது.   நிலநடுக்கங்கள் தொடங்கி ஆர்டிக் வளையம் தொட்டு ஹார்ன்முனை வரையான மொத்த அமெரிக்க கண்டத்திலும் மலைப்பகுதிகளில்  நிலங்கள் சரிய  ,  புவியில் விரிசல்கள் வெடித்தோட ,  வீடுகளும் கட்டடங்களும் தகர்ந்து மண்ணாக பூகம்பங்கள் தொடர்ந்து உலுக்கின. மூர்க்கமான ஓர் அதிர்வில் மகத்தான கோடோபாக்ஸி எரிமலை மொத்தமும் நொறுங்கி வீழ்ந்தது.  பன்மடங்கு  மேலெழும்பி அகன்று பீய்ச்சிய அதன் எரிகுழம்பு அத்தனைத் துரிதமாகப் பாய்ந்து ஒரே நாளில் கடலை வந்தடைந்தது.

வானில் மங்கிப்போன நிலவு மீந்திருக்க, அந்த நட்சத்திரம் பசிபிக் பெருங்கடலை நோக்கி முன்னேறியது. அங்கியின் கீழ்மடிப்பை வணங்கும் விசுவாசம் போல  வானில் இடிமின்னல்கள்  விளிம்பிட்டுப் பின்தொடர ,  அந்த நட்சத்திரம் உருவாக்கிய ஆழிப்பேரலைகள்   நுரைபொங்க எழுந்து  தீவுகள் தீவுகளாய் மூர்க்கமாகப் பெய்து  அங்கு  மனித வாசத்தையே  துடைத்தழித்தன. குருடுமையாக்கும்  வெளிச்சத்தில்,   உலைக்கள மூச்சுடன்  வெறிகொண்ட பசித்த  மகாஅலைகள்  பேரோலத்துடன் ஐம்பதடிக்கும் மேல் உயர்ந்தெழுந்து  பெருஞ்சுவராக ஆசியாவின் நீண்ட கரைகளை முற்றுகையிட்டன. சீனாவின் நிலவெளிகளை அவை வாரிச்சுருட்டின. பரந்த ஜனத்தொகையான நாடுகள், நகரங்கள், கோபுரங்களும் மரங்களும் செறிந்த கிராமங்கள் , சாலைகள், பண்பட்ட விளை நிலங்களுக்கு மேலே,  தகிக்கும் வானை  பீதியுடன்  கையற்று நோக்கிய   லட்சோப லட்சம் மக்களுக்கு மேலே   இன்னும் உருப்பெருகி தணல்கொதித்த  அந்த நட்சத்திரம்,  சூரியனை விடவும் உக்கிரமும் பேரொளியும் அதிகரித்த தன் மூர்க்க  ஆகிருதியைக் காட்டியது. மெல்ல,   பெருகிவரும் வெள்ளப்பெருக்குகளின்  சலசலப்பு தலைப்பட்டது.  லட்சோப லட்சம் மக்களுக்கு அந்த இரவென்பது போக்கிடமிற்றதாக, வெம்மையால்  அழன்ற  கைகால்களுமாக,    நொய்ந்த   உயிர்மூச்சுமாக ,  அலைச்சுவர்கள் துரத்திவர,  மரணத்தை  நோக்கியதாக இருந்தது.

சீனாவின் மேல் அந்த நட்சத்திரம்  வெண்ணிறமாக ஒளிர்ந்தது. ஆனால் ஜப்பான, சாவகம் உள்ளிட்ட கிழக்காசிய   தீவுகளில், அதன் வருகைக்கு  வீரவணக்கம்புரிவது போல  எரிமலைகள் கக்கிய அனலாலும் புகையாலும்  அந்த மகா நட்சத்திரம் செம்பிழம்புக் கோளமாக எரிந்தது.  மேலே எரிகுழம்பும் , கொதிக்கும் வாயுக்களும் புகையும் நிரம்பின,  கீழோ சீறும் வெள்ளங்கள்.   தொடர்ந்து நீடித்த நிலநடுக்கங்களால் மொத்த பூமியும் குலுங்கி அதிர்ந்தது.   பழமை வாய்ந்த திபெத்திய , இமாலய பனிச்சிகரங்கள் அதிவேகமாக உருகத் தொடங்கின. இந்திய பர்மிய சமவெளிகளில் ஆழ்ந்தும் குவிந்தும் பரந்த  லட்சம் நீர்த்தடங்களினூடாக அவை பெருக்கெடுத்தோடின. இந்திய வனங்களின் மலை முடிச்சுகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் பற்றி எரிந்தன. அடிவாரங்களில் பெருக்கெடுத்த நீரோட்டங்களில் ஓலமிட்டுச் செல்லும்  கரிய உருவங்களில்  தழல்களின்  செந்நிறக் குருதி நாவுகள் பிரதிபலித்தன.  இலக்கற்ற கலக்கத்தில்  மக்கள் திரள் திரளாக  பரந்த நதித் தடங்களிலிருந்து  பெயர்ந்து ஒரே நம்பிக்கையாக கடலை நோக்கிக் குவிந்தார்கள்.

அந்த நட்சத்திரம் மேலும் உரு பெருகியது. வெம்மையும் பிரகாசமும்  உயர்ந்தபடியே இருக்க அசுர திசைவேகத்தை அடைந்திருந்தது.  வெப்பமண்டலப் பெருங்கடல் தன் ஒளிர்திறனை இழந்திருந்தது.  சூறாவளியில் சுண்டியெரியப்பட்ட கப்பல்கள் புள்ளிகளாகத்  தெரியும் ஓயாத கரும் பேரலைகளில் சுற்றிஅடிக்கும்  வெங்காற்று ராட்சத புகைச் சுருள்களாக மேற்சுழன்றது.

பின்  அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஐரோப்பாவில் அந்த நட்சத்திரத்தின் உதயத்தை எதிர் நோக்கியிருந்தவர்களுக்கு பூமியின் சுழற்சி நின்றுவிட்டது போலத் தோன்றியது. இடிந்த வீடுகளிலிருந்தும் வெள்ளங்களிருந்தும், மலைகளில்  நிலச்சரிவுகளிலிருந்தும் எஞ்சிய மக்கள்,  நிலங்களிலும்  மலைகளிலும் ஆயிரக்கணக்கான திறந்த வெளிகளில் அந்த நட்சத்திர உதயத்திற்காக பயனற்று காத்திருந்தார்கள். ஒவ்வொரு மணியாக பயங்கரத் தவிப்புடன் கடந்தது.  ஆனால்  அந்த நட்சத்திரம் தோன்றவில்லை.  தாங்கள் இனி எப்பொதைக்குமாக தொலைத்துவிட்டதாகக் கருதிய பழைய விண்மீன் திரள்களில் மீண்டும் மனிதர்கள் பார்வையை பதித்தார்கள்.  நிலத்தில் தொடர்ந்து நடுக்கம்  நீடித்தாலும் இங்கிலாந்தில் வானம் வெப்பமாகவும் தெளிந்தும் இருந்தது. ஆனால் வெப்பமணடலங்களில்  வெண்புகைப் படலத்தினூடாக   புனர்பூசம், ரோகினி, கத்திரி ஆகியவை புலப்பட்டன. இறுதியில் பத்து மணி நேரத்துக்குப் பிறகு அந்த நட்சத்திரம் வானேகியது. அருகிலேயே சூரியனும் உதித்தது. அதன் வெண்ணிற இருதயத்தின் மையத்தில் ஒரு கரிய வட்டம் தென்பட்டது.

ஆசியாவில்,வானின் நகர்வோடு அந்த நட்சத்திரம் பின்னிறங்கிவிட்டதாகத் தெரிந்தது. பின் திடீரென அது இந்தியாவின் மேலே தோன்றியது.  அதன் பிரகாசம் வெண்புகையால் மறைந்திருந்தது. சிந்துநதி தொடங்கி கங்கை வரை பரந்த இந்திய சமவெளிகள் முழுதும் அழுக்கு நீர்க்கோலமாக ஒளியில் மினுமினுத்தது.   அடர்ந்த ஜனத்திரள்களுடன் கோவில்கள்,அரண்மனைகள், குன்றுகள்,மலைகள்  புலப்படத் தொடங்கின.  உயர்ந்த தூபிகளில் திரள்திரளாக  தொற்றியிருந்த மக்கள்   வெம்மையும் மிரட்சியும் பீடிக்க ஒருவர் பின் ஒருவராக கலங்கிய நீரில் வீழ்ந்தார்கள்.அந்த நிலப்பரப்பு முழுவதும் பெரும் ஓலமாக இருந்தது,  அந்த துயரஉலைக்களத்தின் மீது, திடீரெனஒரு நிழல் குறுக்கிட்டது. குளிர்ந்த காற்று வீச அதனால் மேகங்கள் சூழ்ந்தன. கண்கூசும் நடத்திரத்தின்  அருகே  மக்கள் அண்ணாந்து பார்த்தபோது  வெளிச்சத்தினூடாக அந்த  கரியவட்டு ஊர்வதைப் பார்த்தார்கள்.      நட்த்திரத்திற்கும் பூமிக்கும் இடையே வந்துகொண்டிருந்த நிலவுதான் அப்படித் தோன்றியது. அச்சிறு தணிவில் மக்கள் கடவுளை நோக்கிக் கூவியபோது, விபரீதமான புலப்படா வேகத்துடன் சூரியன் கிழக்கில் எழுந்தது. பின்  நட்சத்திரம், சூரியன், நிலவு மூன்றும் விண்ணகத்தில் விரைந்தோடின.

தற்போது ஐரோப்பிய பார்வையாளர்களுக்கு  நட்சத்திரமும் சூரியனும் அருகருகாக உதித்தன. சற்று  மேல் நோக்கி ஏறிப் பின்  மந்தப்பட்டு இறுதியில்  நிதானித்த போது,  உச்சி வானில் அவை ஐக்கியமாகி ஒற்றைப் பிழம்பாகக் காட்சியளித்தது. நட்சத்திரத்தின் மீதான நிலவு மறைப்பு எப்போதோ விலகிவிட்டது. அது எங்கோ வானின் ஒளிப் பிரகாசத்தில் புதையுண்டு புலப்படாமல்போய்விட்டது. உயிருடன்  எஞ்சியிருந்தவர்கள் பசியும் சோர்வும் பீதியும்   ஏற்படுத்தியிருந்த  கலக்கத்திலும் அக்காட்சியை  கவனிக்கத் தவறவில்லை என்றாலும்    அந்த வானியல் குறிகளின் பொருள் என்ன என்பதை சிலரால்தான்  அறிந்துணர முடிந்தது.      பூமியும் அந்த நட்சத்திரமும் மிக அருகாக வந்துள்ளன, ஒன்றையொன்று சுழன்றுள்ளன, பின் அந்த நட்சத்திரம் கடந்து சென்றுவிட்டது.  அது பின்வாங்கிவிட்டது.  சூரியனை நோக்கிய அதன் தலைகீழ்ப் பயணத்தின் இறுதிகட்டத்தில் அது துரிதகதியில் கடந்துசென்றுவிட்டது.

பின் மேகங்கள் திரண்டு விண்ணகத்தை பார்வையிலிருந்து மறைத்தது. இடியும் மின்னலுமாக உலகைச் சூழந்து பெரும் அம்பரத்தை இழைத்தன.  மனிதர்கள் எப்போதும் கண்டிராத பெருமழை புவிப்பரப்பெங்கும் பேயத்தொடங்கியது. மேக விதானங்களுக்கு கீழே  சிவந்து கனன்ற  எரிமலைகளில் அடைச்சேறு வழிந்தோடியது.  நிலப்பரப்புகள் எங்கும் கொட்டித் தீர்த்த கனமழை, புயல்வீசிய  கடற்கரைகள்  போல பூமியின் கூளங்களையும் , சேறுபடிந்த சிதிலங்களையும், மனிதர்கள்,விலங்குகள்,குழந்தைகளின் பிரேதங்களையும் அள்ளிச்சென்றது.  பல நாட்களுக்கு நிலங்களில்  நீரோட்டங்கள் ஓடி வடிந்தபடியே இருந்தது. அவை  மண்ணையும் முறிந்த மரங்களையும் வீடுகளின் சிதிலங்களையும் இழுத்துவந்து ஊர்ப்புறங்களில் கூளமேடுகளையும் , பெரிய ஓடைகளையும் ஏற்படுத்தின.  அந்த நட்சத்திரத்தையும் வெம்மையையும் தொடர்ந்து வந்த இருண்ட நாட்கள் அவை.  பல வாரங்களுக்கும் மாதங்களுக்கும் நில நடுக்கங்கள் தொடர்ந்து நீடித்தன.

எப்படியும் நட்சத்திரம் கடந்து சென்று விட்டது. பசியாலும் பிணியாலும் அவதியுற்ற மக்கள் மெல்ல உறுதியைத் திரட்டிக்கொண்டு , பாழ்பட்ட நகரங்களுக்கும், புதையுண்ட களஞ்சியங்களுக்கும், பிசுபிசுத்த வயல்களுக்கும் திரும்பக்கூடும்.   பேரழவின் நாட்களில், அசுரப்புயல்களிலிருந்து தப்பிப்பிழைத்த  சில கப்பல்கள், சிதிலப்பட்டு ஸ்தம்பித்துக் கிடந்தன. அக்கப்பல்கள் முன்பு நன்கு பழக்கப்பட்ட துறைமுகங்களின் மாறிய  குறிகளை, மடுக்களை அடையாளங்கண்டபடி  வழித்தடங்களை கவனமாகத்  தேர்ந்து சென்றன.  பேரழிவுகள் ஓய்ந்து காலம் தணிந்த  பிறகு,  பகல்கள் முற்காலங்களைவிட  வெம்மை கூடியிருப்பதும் , சூரியன் பெரிதாகத் தெரிவதையும், மூன்றிலொன்றாக நிலவு  சிறுத்திருப்பதும், இரு அமாவாசைகளுக்கிடையில் அது  எண்பது நாட்கள் எடுத்துக்கொள்வதையும் எல்லோரும் அறிந்திருந்தார்கள்.

ஆனால் மனிதர்களிடையே புதிதாகப் பரவி வரும் சகோதரத்துவம் குறித்தும், ஐஸ்லாந்திலும் கிரீன்லாந்திலும் பேஃபின் குடாவிலும் ஏற்பட்டுள்ள வினோத மாற்றங்கள் குறித்தும்,  அங்கு வரநேரும் கடலோடிகள்  நம்பவியலாதபடிக்கு அக்கரைகளில் பச்சையமும் வனப்பும் மிளிர்வது குறித்தும்  இந்தக் கதை அக்கறைகொள்ளவில்லை. வட மற்றும் தென் துருவங்களில் புவியின் வெம்மை மிகுந்திருப்பது  குறித்தும் இக்கதை பொருட்படுத்தவில்லை. ஒரு நட்சத்திரத்தின் வருகையும் அது கடந்து சென்றதும் குறித்ததுமே இக்கதை.

ஆனால் செவ்வாய்க்கோளின் விண்ணோடிகள் மேற்குறித்த மாற்றத்தில் இயல்பாகவே தீவிர ஆர்வம் காட்டினார்கள். ஆம் செவ்வாயிலும் விண்ணோடிகள் இருந்தார்கள், அவர்கள் மனிதர்களிலிருந்து மாறுபட்டவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கோணத்திலிருந்து பார்த்தார்கள்.  ஒருவர் எழுதினார் “சூரியக்குடும்பத்தினூடாக சூரியனை நோக்கி நாம் ஏவிய எரிகணையின் பெருநிறையையும் வெப்பநிலையையும் கருதும்போது ,  அதன்பாதையில் மிகநெருக்கத்தில் தப்பிய பூமி எத்தனை மிகமெல்லிய பாதிப்பை அடைந்துள்ளது என்பது  வியப்பானது. நன்கறிந்த அதன் கண்டக் கோடுகளும், கடல்களின்  திரள்களும் பிசகின்றி அப்படியே இருக்கின்றன. அதன்  துருவங்களில் பூசிய  அந்த இரு வெண்ணிறத் திட்டுகள்(உறைந்தநீராக இருக்கலாம்)  மட்டும் லேசாகச் சிறுத்துள்ளதுதான் ஒரே மாற்றம். ”    பாரிய  மானுடப் பேரழிவுகள்  சில மில்லியன் மைல் தொலைவுகளில் எத்தனை அற்பமாகத் தெரியுக்கூடும் என்பதைத்தான் அது காட்டுகிறது.

***

மொழிபெயர்ப்பு : பிரவீண் பஃறுளி

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *