1830 ஆம் ஆண்டு.
இன்றைக்கு பெரும் நகரமாக விளங்கும் சின்சுனாடிக்கு சில மைல் தொலைவிலேயே ஒரு அடர்த்தியான , பெரும்பாலும் இடைவெளியே இல்லாத காடு இருந்தது. அந்த மொத்த பிராந்தியத்திலும் எல்லைப் பகுதியிலிருந்து வந்த மக்கள் சிதறலாகக் குடியேறி இருந்தனர் . அந்த அமைதியில்லாத ஆத்மாக்கள் வனாந்தரத்திலிருந்து வெட்டி அடுக்கி சுமாரான வீடுகளை உருவாக்கி ஓரளவு வசதியையும் அடைந்திருந்தார்கள்- தற்போதைய அளவுகோலில் அதை தரித்திரம் என்றுதான் சொல்ல முடியும். குடியேறிய உடனேயே தங்களை இயக்கும் ஏதோ மர்மமான இயல்புணர்ச்சியால் உந்தப்பட்டவர்களாக , எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு மேலும் மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர் . புதிய சவால்களையும் துன்பங்களையும் தேடி – அவர்கள் ஏற்கெனவே துறந்து விட்டிருந்த சொற்பமான வசதிகளை மீண்டும் கண்டடைவதற்காக.
பலர் அந்த இடத்தைக் கைகழுவி விட்டு தூரப் பிரதேசங்களை நோக்கிச் சென்று விட்ட போதிலும் சிலர் அங்கேயே தங்கி விட்டனர். அவர்களில் முதலாவதாக அந்த இடத்திற்கு வந்தவர்களில் ஒருவனும் அங்கேயே தங்கி விட்டான்.
அவன் தனியனாக ஒரு மர வீட்டில் , அடர்ந்த வனத்துக்குள் வாழ்ந்து வந்தான். அந்த இருளுக்கும் அமைதிக்கும் அவன் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டிருந்தான். அவனுடன் சிரிப்பதற்கோ தேவையில்லாத ஒரு வார்த்தை பேசுவதற்கோ எவருமில்லை. அவனுடைய சொற்பமான தேவைகள் காட்டு விலங்குகளின் தோலை விற்பதாலோ பண்டமாற்று செய்வதன் மூலமோ கிடைத்துக் கொண்டிருந்தன . அவன் நினைத்திருந்தால் ஏகபோக உரிமை கொண்டாடி இருக்கக் கூடிய நிலப் பரப்பில் ஒரு புல்லைக்கூட அவன் விளைவிக்கவில்லை
நில “மேம்பாட்டிற்கான” சாட்சிகளும் அங்கே இருந்தன. வீட்டை அடுத்திருந்த நிலத்தில் மரங்கள் அகற்றப் பட்டிருந்தன. அவற்றின் அழுகிய கட்டைகள் புதிய குருத்துக்கள் முளைத்து பாதியளவு மறைந்து காட்சி அளித்தன. கோடரி ஏற்படுத்தி இருந்த சேதத்தை சரி செய்ய வேகமாக வளர்ந்து கொண்டிருந்தன. ஒருவேளை அவனது வேளாண்மை ஆர்வம் என்னும் நெருப்பு மங்கிப்போய் லெந்து கால சாம்பலாக மடிந்து போயிருக்கலாம்.
மரக் கட்டைப் புகைபோக்கிகளும், பலகை பாவிய கூரையும் குறுக்குக் கட்டை உத்தரங்களும் சாரல் தடுப்புகளும் களிமண் சாந்தும் கொண்டு அமைக்கப்பட்டிருந்த அந்த சிறிய மர வீட்டில் ஒரே ஒரு கதவும் அதற்கு நேர் எதிரே ஒரு சாளரமும் இருந்தன. அந்தச் சாளரம் பலகை அடிக்கப் பட்டிருந்தது. அது எப்போது திறந்திருந்தது என்பதை யாரும் அறியவில்லை. அது ஏன் மூடப்பட்டிருந்தது என்பதையும் யாரும் அறியவில்லை. ஆனால் ஒன்று, அந்த வீட்டுக்காரன் வெளிச்சத்தையும் காற்றையும் வெறுத்தவனில்லை.
எப்படி என்றால், எப்போதாவது ஒரு வேட்டைக்காரன் அந்த அத்துவான பிரதேசத்தை கடந்து செல்லும்போது அந்த தனிமனிதன் தனது வாசலில் வெயில் காய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம் – ஏதோ விண்ணகமே அவனுக்காக சூரிய ஒளியைக் கொடுத்திருப்பது போல.
இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எத்தனை பேருக்கு அந்தச் சாளரத்தின் ரகசியம் தெரியுமோ என்பது தெரியாது. அதை அறிந்து கொண்டவர்களில் நானும் ஒருவன் . அதை விரைவிலே நீங்கள் பார்க்க போகிறீர்கள்
அவர் பெயர் மர்லாக் என்று சொல்லப் பட்டது . பார்ப்பதற்கு எழுபது வயது போல தோன்றினாலும் அவருக்கு ஐம்பது வயது இருக்கும். வருடங்களை மீறிய ஒன்று அவரது வயதில் விளையாடி இருக்கிறது. நீளமான தலைமுடி. அடர்ந்த வெண்தாடி. ஒளியில்லாத , குழிந்த , சாம்பல் நிறக் கண்கள்.
சுருக்கங்களால் மடிந்திருந்த அவரது முகம் இரண்டு இடைவெட்டும் அமைப்புகளால் ஆனது போலத் தனித்துத் தெரிந்தது.
உயரமாகவும் மெலிந்தும் இருந்த அவரது தோள்கள் தளர்த்திருந்தன- சுமை தாங்கிகளாக.
நான் அவரைப் பார்த்ததில்லை. எனது தாத்தா அவரது கதையை நான் சிறுவனாக இருந்த போது சொல்லி இருந்தார். அவர்கள் அந்த ஆரம்ப காலங்களில் அருகருகே வசித்தவர்கள்
ஒரு நாள் மர்லாக் தனது பாசறையில் இறந்து கிடந்தார். சந்தேக மரண விசாரணைகளும் செய்தித் தாள்களும் இல்லாத காலம் அது. அவர் இயற்கையாக இறந்தார் என்று ஒப்புக்கொள்ளப் பட்டதாக நினைக்கிறேன். அல்லது அப்படி நினைக்க வேண்டும் என்று எனக்கு சொல்லப் பட்டிருக்கலாம்.
பல வருடங்களுக்கு முன்னால் அவரைத் தனியே விட்டு மரணித்து விட்ட தனது மனைவியின் சமாதிக்கு அருகில் பொருத்தமான விதத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். உள்ளூர் மரபு அவள் இருந்ததையே மறந்து விட்டிருந்தது
இத்துடன் இந்த உண்மைக் கதையின் இறுதி அத்தியாயம் முடிந்து விட்டது . ஒரே ஒரு சம்பவம் மிச்சம் இருக்கிறது.
பல ஆண்டுகள் கழித்து இன்னொரு அஞ்சா நெஞ்சனுடன் சேர்ந்து அந்த பிரதேசத்தில் ஊடுருவி பாழடைந்த அந்த கொட்டகையின் அருகில் முன்னேறி ஒரு கல்லை எடுத்து வீசிவிட்டு பிசாசு துரத்துவதற்கு முன் தப்பித்து ஓடி வந்த வீரன் நான் என்பதே அந்த சம்பவம். அங்கே இருந்த ஒவ்வொரு விவரம் தெரிந்த பையனுக்கும் அந்த வீட்டின் பிசாசு குறித்துத் தெரியும்.
இல்லை. கதை முடிந்து விடவில்லை . ஒரு முந்திய அத்தியாயம் இருக்கிறது – எனது தாத்தா சொன்னது.
மர்லாக் தனது அறையை உருவாக்கி கோடரியின் உதவியால் ஒரு பண்ணையை அமைக்க ஆரம்பித்து தனது துப்பாக்கியின் துணை கொண்டு தன்னை இந்த பகுதியில் நிலை நிறுத்திக் கொள்ள ஆரம்பித்த காலத்தில் அவர் இளைஞராக , உறுதியாக முழு நம்பிக்கையுடன் இருந்தார் . தான் கிளம்பி வந்த கிழக்கு பிராந்தியத்தில் அப்போதைய வழக்கப் படி ஒரு இளம் நங்கையை மணம் செய்து கொண்டு புறப்பட்டிருந்தார்.
அவருடைய நேர்மையான பக்திக்கு எல்லா விதத்திலும் தகுதி உடையவளாக , அவரது ஆபத்துகளையும் துயர்களையும் விருப்பமான உறுதியுடனும் இலேசான இதயத்துடனும் பங்கிட்டுக் கொண்டவளாக இருந்தாள்.
அவளது பெயருக்கு எந்தப் பதிவும் இல்லை. அவளது ஆகிருதியின் , இதயத்தின் வசீகரங்கள் குறித்து மரபு எந்த சாட்சியும் வைத்துக் கொள்ளவில்லை. எனவே அவளது பெருமை குறித்து சந்தேகப் படுவது அவரவர் உரிமை தான் .
ஆனால் கடவுள் ஆணையாக நான் அவர்களது மனைமாட்சியை விளக்கப் போவதில்லை. அவர்களது அன்பும் மகிழ்ச்சியும் குறித்த சத்தியம் என்று பறைசாற்றும் நிரூபணம் மனைவியை இழந்த அவரது வாழ்வில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு நாளிலும் நிரம்பி வழிந்தது. ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நினைவின் ஈர்ப்பை விட வேறு எது தான் அந்த துறு துறுப்பான சாகசக் கார ஜீவனைப் பெரும் அசைவின்மையில் பிணைத்து வைத்திருக்க முடியும்?
ஒரு நாள் மர்லாக் காட்டின் உள்பகுதிக்கு வேட்டையாடி விட்டு வரும்போது அவர் மனைவி காய்ச்சலில் மயங்கிப் படுத்திருந்தார். பல மைல்களுக்கு மருத்துவர் இல்லை; அண்டை விட்டார் என்று யாரும் இல்லை. உதவி கேட்டுச் செல்லலாம் என்றால் அவளை அந்த நிலையில் விட்டுவிட முடியாது. அவரே சிகிச்சை செய்ய ஆரம்பித்தார். மூன்றாம் நாளில் உணர்வை இழந்து செத்துப் போனாள். திரும்பி வருவதற்கான காரணம் ஒரு கீற்று கூட இல்லை என்பது போல.
என் தாத்தா கொடுத்த அவரது இயல்பு பற்றிய கோட்டுச் சித்திரத்திலிருந்து அவரது ஆளுமை பற்றி நாம் ஒரு வரையறைக்கு வர முடியும்.
அவள் இறந்து விட்டாள் என்ற உறுதி வந்தவுடன் இறந்தவர்கள் அடக்கத்திற்கு தயாரிக்கப் படவேண்டும் என்ற அளவிற்கு மார்லாக்கிற்கு பிரக்னை இருந்தது. இந்தப் புனிதச் செயலை நிறைவேறுவதில் அவர் அடிக்கடி தவறு செய்து கொண்டிருந்தார். சில செயல்களைத் தவறாகச் செய்தார். சரியாகச் செய்தவற்றை மீண்டும் செய்து கொண்டிருந்தார். சில சாதாரண எளிய செயல்களைக் கூட தவறாக செய்வது வியப்பை ஏற்படுத்தியது. குடிகாரன் ஒருவன் இயல்பான இயற்கை விதிகள் தடை படுவதைக் கண்டு வியப்பது போல இருந்தது அவர் நிலை. அவர் அழவில்லை என்பதை கண்டு ஆச்சரியப்பட்டார் . சிறிது வெட்கமும் இருந்தது. இறந்தவர்களுக்கு அழாமல் இருப்பது இரக்கமற்றது தான் .
“நாளை”,
அவர் சத்தமாக சொன்னார்
” சவப்பெட்டி தயாரித்து குழியை வெட்டவேண்டும். அப்புறம் நான் அவளைப் பிரிவேன் . என் கண்ணை விட்டு மறைவாள் . ஆனால் இப்போது – நல்லது. அது சரிதான். எப்படியோ. விஷயங்கள் நினைப்பதைப் போல மோசமாக இருக்காது”
மங்கிய வெளிச்சத்தில் உடலுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். தலை முடியை சரி செய்து எளிமையாக அந்த அலங்காரத்தை நேர்த்தி செய்தார் மனம் ஒன்றாமல் இயந்திர கதியில் எல்லாவற்றையும் செய்தார்
அவரது உணர்வுக்குள் ஒரு தீர்மானம் ஓடிக் கொண்டிருந்தது -எல்லாம் நல்லதிற்குத்தான்; அவள் மீண்டும் முன்போலவே கிடைத்து விடுவாள். எல்லாமே விளக்கப்பட்டு விடும்.
துக்கம் அனுசரிப்பதில் அவருக்கு முன் அனுபவமே இல்லை. பயன்பாட்டின் மூலம் அவரது அகத்திறமை விரிவு பெற்றிருக்கவில்லை. அவரது இதயம் இதைப் பெற்றுக் கொள்ளப் போதவில்லை. அவரது கற்பனையால் இதை சரியாக உருவாக்கிக் கொள்ளவும் முடியவில்லை. பேரிடியால் தாக்கப் பட்டிருப்பதை அவர் அறியவில்லை.
அந்த அறிவு பிறகு வரும். அதன் பின் போகவே போகாது. துக்கம் பலவகைப்பட்ட சக்திகளை கையாளத்தெரிந்த கலைஞன். நீத்தருக்கான கையறு நிலைப் பாடலை இசைக்கும் வாத்தியங்களைப் போலவே துயரத்தின் வகைப்பாடுகளும் பன்முகமானவை.
பிரிவுத் துயரம் சிலரில் கூரான , சிலிர்க்கும் சுவரங்களை எழுப்பும். வேறு சிலரிடம் மந்த கதியில் அச்சமூட்டும் தாளங்களை உண்டாக்கும் – தூரத்து முரசின் மெதுவான துடிப்புகளைப் போல. சில வகை இயல்பு கொண்ட மனிதர்களைத் திடுக்கிட வைக்கும் துக்கம் சிலரை மயக்கமடைய வைக்கும். சிலரை அம்பு போலத் தாக்கி மும்முரமான வாழ்விற்கான அனைத்துப் புலன்களையும் குத்தும். சிலருக்கு சம்மட்டி அடி கொடுத்து முடக்கி விடும். எதோ ஒரு வகையில் மர்லாக் பாதிக்கப் பட்டிருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம்.
தனது பக்தி நிறைந்த தயாரிப்பு வேலையை முடித்து விட்டு , உடல் வைக்கப்பட்டிருந்த மேசைக்கருகில் நாற்காலியில் சாய்ந்தவர் இருண்டு கொண்டே வந்த அந்த அறைக்குள் அந்தத் தோற்றம் எப்படி வெண்மையாக இருந்தது என்று நினைத்தவாறு கைகளை மேசை முனையில் வைத்து முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக் கொண்டார். கண்ணீர் இல்லாவிட்டாலும் விளக்கமுடியாத பெருந்துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார். இது யூகித்து சொன்னதல்ல. உண்மையாகவே நடந்த நம்பகமான செய்திதான்.
அந்தக் கணத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக ஒரு நீண்ட அழுகுரல் வந்தது. அடர்ந்த வனத்தின் உள்ளே தொலைந்து போய்விட்ட குழந்தையின் புலம்பலைப் போல இருந்தது . ஆனால் மனிதர் நகரவில்லை. மீண்டும் முன்னை விட அருகில் புவிக்கு அந்நியமான அந்தக் குரல் அவரது மங்கிக் கொண்டிருந்த புலன்களை அடைந்தது. ஒருவேளை அது ஒரு காட்டு விலங்காக இருக்கலாம். அல்லது ஒரு கனவாக. ஏனெனில் மர்லாக் அப்போது தூங்கிக் கொண்டிருந்தார்
சில மணி நேரங்கள் கழித்து கடமை தவறி தூக்கி விட்ட அந்த பாதுகாவலர் விழித்துக் கொண்டு தலையை உயர்த்தி – ஏனென்று தெரியாமல் உற்று கவனித்தார். இறந்தவர் உடலின் அருகில் இருந்த இருட்டைப் பார்த்து எல்லாவற்றையும் அதிர்ச்சி இல்லாமல் நினைவு படுத்திக் கொண்டு – என்ன என்று தெரியாத ஒன்றைப் பார்க்க கண்களை பழக்கினார்.
அவரது புலன்கள் எல்லாம் எச்சரிக்கை அடைந்தன. அவரது மூச்சு தற்காலிகமாக நின்றிருந்தது. அவரது ரத்தம் அந்த நிசப்தத்திற்கு உதவுவது போல தனது ஓட்டத்தை நிறுத்தி இருந்தது. யார் அல்லது எது அவரை எழுப்பியது ? அது எங்கே இருந்தது?
திடீரென மேசை அவரது கைகளுக்குக் கீழே அசைந்தது. அந்த நேரத்தில் ஒரு இலேசான மென்மையான ஒலியை – தரை மீது பதிக்கும் வெறும் பாதங்களின் ஓசையை -அவர் கேட்டார் . அல்லது கேட்டதாக நினைத்துக் கொண்டார்.
கத்தவோ நகரவோ முடியாத அளவிற்கு பயந்து போயிருந்தார்.
கட்டயத்தால் அவர் காத்திருந்தார். நூற்றாண்டுகள் ஊடே அச்சத்திலேயே வாழ்ந்த ஒருவர் அதைச் சொல்வதற்கு உயிரோடு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட காலாதீத அச்சத்தில் காத்திருந்தார்.
இறந்த பெண்ணின் பெயரைச் சொல்வதற்கு முயன்றார் . பயனில்லை. அவளது இருப்பை உணர்வதற்காக மேசையில் கையை நீட்ட முயன்றார். முடியவில்லை. அவரது குரல்வளை ஆற்றலை இழந்து விட்டது. அவரது கை , கால்கள் இறந்தது போலாகி விட்டன. பிறகு மிகவும் பயங்கரமான ஒன்று நடந்தது.
எதோ ஒரு வலுவான பொருள் மேசைக்கு மேலே வீசப்பட்டது போல இருந்தது. அந்தத் தாக்குதலில் அவரை நிலைகுலையச் செய்யுமளவிற்கு நெஞ்சை அழுத்தியது. அதே நேரத்தில் தரையில் எதோ ஒன்று வலுவான ஓசையுடன் விழுந்ததைக் கேட்டார். அந்த அதிர்வில் வீடே குலுங்கியது. ஒரு கைகலப்பு அங்கே நடந்தது. விவரிக்க முடியாத குழப்பமான ஒலிகள் கேட்டன. மர்லாக் எழுந்து விட்டிருந்தார். அச்சம் அவரது புலன்களை உச்சகட்டமாகத் தடை செய்திருந்தது. கைகளை மேசை மேல் வீசினார் . அங்கே எதுவும் இல்லை.
அச்சம் வெறியாக மாறும் புள்ளி ஒன்று. வெறி பின்னர் செயலாக மாறும். எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு பைத்தியக்காரனின் துடிப்பைப் போல மர்லாக் சுவரை நோக்கிப் பாய்ந்து சிறிது துழாவி தனது தோட்டா நிரப்பிய துப்பாக்கியை எடுத்து குறியில்லாமல் இயக்கினார்,
அந்த வெளிச்சத்தில் அறை முழுவதும் தெளிவாகத் தெரிய ஒரு வேங்கை இறந்த பெண்ணை சாளரம் நோக்கி இழுத்துச் செல்வதைப் பார்த்தார். அதன் பல் அவள் தொண்டையில் பதிந்திருந்தது. பிறகு முன்பை விட இருள் சுழ்ந்தது. மௌனம் .
பிறகு அவர் நினைவுக்குத் திரும்பியபோது சூரியன் மேலே ஏறி இருந்தான். காட்டில் பறவைகளின் கீச்சொலி கேட்டது.
அந்த உடல் சாளரத்தின் அருகில் கிடந்தது. துப்பாக்கியின் வெடிக்கும் ஒளியிலும் சுடும் சப்தத்திலும் பயந்து ஓடி விட்டிருக்கிறது விலங்கு.
உடை குலைந்திருந்து. . நீள்முடி கலைந்திருந்தது. கை , கால்கள் என்னவோ போலக் கிடந்தன. பயங்கரமாக காயமுற்றிருந்த தொண்டையில் இன்னும் உறையாத ரத்தம் வெளியேறி இருந்தது. மணிக்கட்டுகளைக் கட்டி இருந்த நாடா கிழிந்திருந்தது. கைகள் இறுக்கிப் பிடித்திருந்தன.
பற்களுக்கு இடையே விலங்கின் காதின் ஒரு துண்டு.
***
-ஆங்கிலத்தில்-அம்புரோஸ் பியர்ஸ்
-தமிழில் – ராகவேந்திரன்