மனிதர்கள் வெற்றி பெறுவதில் மகிழ்கிறார்கள். ஆனால் அவனுக்கோ, உண்மையைச் சொன்னால், தோல்வியில்தான் அதிக சுவாரஸ்யம் இருப்பதாகப்பட்டது, குறிப்பாக வெற்றிக்குப் பிறகாக அது வரும்போது. வெற்றி பெறுவது மிகவும் சுலபம், தோற்பதுதான் அவனுக்கு ஆர்வமூட்டியது. முன்பு, ஒரு வங்கியில் அவன் வேலை பார்த்த போது, நிறைய பணத்தைக் குவிக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கும் இருந்தது. அது சாத்தியமற்றதென்று அவன் உறவினர்களும் நண்பர்களும் கேலி செய்தார்கள். அதன் பிறகு அவன் பம்பாய்க்குச் சென்றான், பிறகு விரைவாகவே, தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நிறைய பணம் அனுப்பி பொருளாதார உதவிகளைச் செய்தான். பம்பாயில் எண்ணற்ற வாய்ப்புகள் நிறைந்திருந்தன. அவன் பெரும் புகழும் பணமும் அள்ளித் தருமெனும் நம்பிக்கையளித்த சினிமாத் துறையைத் தேர்ந்தெடுத்தான். இவ்வுலகில் அவன் கட்டுக்கட்டாக பணம் சேர்க்கவும் முடியும், அதைச் சுலபத்தில் இழக்கவும் முடியும். இன்னும் அங்கு அவன் பீடுநடை போட்டுக் கொண்டுதான் இருக்கிறான். அவன் ஆயிரக்கணக்கில்.. கோடிக்கணக்கில் சம்பாதித்தான், அதைத் தொலைக்கவும் செய்தான். நொடியில் பெற்றதை காலப்போக்கில் வீணடித்தான். அவன் ஒரு படத்திற்கு பாடல்கள் எழுதி லட்ச ரூபாய் சம்பாதித்தான், ஆனால் அபரிதமான அந்தத் தொகையை இழக்க நீண்ட காலம் ஆனது – தாசிகளின் மாடங்களில், தரகர்களின் கூடுகைகளில், பந்தயங்களில், உடன் சூதாட்டக்கூடங்களிலும். அவனது படங்களில் ஒன்று பத்து லட்சமென்கிற பெருந்தொகையை லாபமாக அளித்தது. அபரிதமான இந்த லாட்டரியை எப்படி வீணாக்கலாம் என்பதே பெரிய கேள்வியாக இருந்தது, எனவே பாதையிலிருந்த ஒவ்வொரு அடியிலும் அவன் வேண்டுமென்றே தடுமாறினான். ஒன்றல்ல மூன்று கார்களை வாங்கினான், புத்தம்புதியது ஒன்றும், பழைய வண்டிகள் இரண்டும், அத்தனை விலைக்குத் தகுந்தவை அல்ல என்று தெரிந்தே அவற்றை வாங்கியிருந்தான். அவற்றை வீணாகப் போகும்படி வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்தான். பெட்ரோல் தட்டுப்பாடு என்று புதிய வண்டியை வாகனக்கூடத்தின் உள்ளே பூட்டி வைத்தான். கடைசியில் வாடகை வண்டிதான் அவனுக்கான விடை. ஆக காலையில் சிற்றுந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு கிளம்பி ஓரிரு மைல்களுக்குப் பிறகு ஓட்டுநரை நிறுத்தச்சொல்வான், சாலையில் தென்படும் ஏதேனும் ஒரு சூதாட்ட விடுதி அல்லது மற்றொன்றின் அருகில், மறுநாள் இரண்டு அல்லது இரண்டரை ஆயிரங்களை இழந்த பிறகு அந்த இடத்திலிருந்து வெளியேறுவான். வேண்டுமென்றே இன்னொரு வாடகை வண்டியில் வீட்டிற்குத் திரும்புவான். அந்த ஓட்டுனருக்குப் பணம் கொடுக்க மறந்திருப்பான். மறுநாள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது அங்கே வாசலில் அவன் பணத்திற்காகக் காத்திருக்கும் போது,
“அடேய் இன்னமுமா இங்கே இருக்கிறாய், சரி வா, என் அலுவலகத்திற்குப் போவோம் , அங்கே உன் பணத்தைத் தரச் சொல்கிறேன்” என்பான்.
ஆனால் அலுவலகம் சென்ற பின் மறுபடியும் பணம் கொடுக்க மறந்து விடுவது. இப்படி… ஒன்றன் பின் ஒன்றாக அவனது மூன்று படங்கள் பெரும் வெற்றி பெற்று, அதற்கு முந்தைய எல்லா சாதனைகளையும் முறியடித்தன. அவன் பணத்தில் நீந்திக் கொண்டிருந்தான். அவன் புகழ் வானளவு உயர்ந்தது, ஆனால் அவனுக்கு அது மிகவும் எரிச்சலூட்டியது. ஆகவே அவன் வேண்டுமென்றே படுதோல்வி அடையும் வகையில் ஒன்றிரண்டு படங்களைத் தயாரித்தான், சொல்லப்போனால், அவற்றைப் பற்றி ஊரெல்லாம் பேச்சாக இருக்குமளவிற்கு மோசமான தோல்விகளாக அவை இருந்தன. தான் சீரழிந்தது மட்டுமல்லாமல், கூட இருந்த சிலரையும் கெடுத்தான். ஆனால் அவன் சோர்வு கொள்பவனில்லை. அவனுடன் இருந்தவர்களின் துவண்ட மனங்களுக்கு உற்சாகமளித்து இன்னொரு வெற்றிப் படத்தை இயக்கினான். அந்தப் படமொரு தங்கச்சுரங்கமாக அமைந்தது. அவன் பெண்களோடு பழகிய முறையும் இலாபம் – நஷ்டம் எனும் இதே பாங்கில்தான் இருந்தது. ஏதாவதொரு விபச்சார விடுதி அல்லது ‘ஆடல்-பாடல்’ நிகழுமிடத்திலிருந்து ஒருத்தியை தேர்வு செய்து, அவளுக்காக ஆடம்பரமாகச் செலவளிப்பான். அவளை புகழின் உச்சியில் ஏற்றுவான். அவளுடைய பெண்மையை மிச்சமில்லாமல் உறிஞ்சிய பிறகு அவளாகவே விலகி, வேறு ஆண்களுடன் செல்லும்படியான வாய்ப்புகளை அவனே சாமர்த்தியமாக ஏற்படுத்துவான். ஏதாவதொரு அழகியின் அனுகூலத்தைப் பெறுவதற்கு பெரிய பணக்காரர்களுடன், கவர்ச்சிகரமான இளைஞர்களுடன் கடும் போட்டியிட்டாலும், இறுதியில் எப்போதும் அவனே வெற்றி பெறுவான். முட்புதருக்குள் கையை விட்டு அவன் விருப்பம் போல் ஒரு மலரைக் கொய்து, அதை மடி மீது இருத்திக் கொள்வான். பிறகு தன் போட்டியாளன் அதைப் பறித்துக் கொண்டு போகக் களிப்புடன் அனுமதிப்பான். அவன் ஃபராஸ் தெருவிலிருந்த சூதாட்ட விடுதிக்குத் தொடர்ச்சியாக பத்து நாட்கள் சென்றபோதுதான் தோல்வியின் போதை அவன் தலைக்கேறியது. அதே சமயத்தில் அழகான நடிகை ஒருத்தி அவனிடமிருந்து விடைபெற்றிருந்தாள், பத்து இலட்சங்கள் ஒரு படத்தினால் நஷ்டமாகியிருந்தது. ஆனால் அவ்விரண்டு இழப்புகளும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்திருந்ததால் அவனுடைய ‘தோல்வி தாகம்’ இன்னும் அடங்காமலிருந்தது. இம்முறை அவன் போட்ட கணக்குகள் வெளிப்படையாகவே தவறியிருந்தன. அவன் இப்போது தினந்தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தை ஃபராஸ் தெருவிலிருந்த சூதாட்ட விடுதியில் கவனமாக இழப்பது இந்தக் காரணங்களால்தான். அவன் தன் சட்டைப் பையில் இருநூறு ரூபாய்களுடன் தினமும் மாலை பவன் புல்லுக்கு புறப்படுவான். இரும்புக் கம்பிகள் போட்ட ஜன்னல்கள் வழியே தங்களை விபச்சாரிகளைக் காட்சிப்படுத்தியிருந்த சாளரங்களையெல்லாம் கடந்து – இரும்புக்கம்பிகள் அவற்றினாடாகக் கிடைமட்டமாக வேயப்பட்டிருக்கும் – அவனது வாடகை சிற்றுந்து தெருக் கம்பத்திற்கருகே நிற்கும். வண்டியை விட்டு அவன் வெளியேறி தன் கனத்த மூக்குக் கண்ணாடியையும் வேட்டியின் முன்மடிப்புகளையும் சரி செய்து கொள்வான். பிறகு அவனுக்கு வலது புறத்தில் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் உடைந்த கண்ணாடியின் முன் தன்னை ஒப்பனை செய்து கொண்டிருக்கும் அந்த விகாரமானவளைப் பார்த்தவாறே, தனது இருக்கைக்கு படியேறிச் செல்வான். கடந்த பத்து நாளாக அவன் இந்த ஃபராஸ் தெருவிலிருந்த சூதாட்ட விடுதிக்கு வந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு வருகையிலும் இருநூறு ரூபாய்களை இழப்பதென தீர்மானித்திருந்தான். சில சமயம் சொற்ப நிமிடங்களுக்குள் முடியும் ஆட்டம் சில நாள் அதிகாலை வரையில் நீளும். பதினோராவது நாள் – அவனுடைய வாடகை வண்டி தெருக் கம்பத்திற்கு அருகில் நின்ற உடன் அவன் வெளியில் வந்தான். தன் கனத்த மூக்குக் கண்ணாடியை, வேட்டியின் முன்மடிப்புகளை சரி செய்து கொண்டு, வலது புறத்தைப் பார்த்தான். கடந்த பத்து நாட்களும் அந்த விகாரமான பெண்மணியைத் தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை நினைத்து அவனுக்குள் வினோதமானதொரு உணர்வு எழுந்தது. வழக்கம் போல் அவள் மரஇருக்கையில் அமர்ந்து உடைந்த கண்ணாடியின் முன் தன்னை ஒப்பனை செய்து கொண்டிருந்தாள். அவன் இரும்பு கம்பிகளுக்குப் பக்கவாட்டில் வந்து, அந்த நடுத்தர வயதுப் பெண்ணை உற்று நோக்கினான்: கருத்த நிறம், எண்ணெய் வடியும் தோல், கன்னங்களிலும் தாடையிலும் நீல வட்டங்களை அவள் பச்சை குத்தியிருந்தாள் – அது அவளின் கேவலமான கறுப்புத் தோலோடு ஒன்றியிருந்தது. எப்போதும் வெற்றிலையும் புகையிலையும் மென்றதால் ஈறுகளும் பற்களும் அகோரமாய் காட்சியளித்தன. எந்த மாதிரி ஆள் அவளிடம் போவான் என்று திகைத்தான். கம்பிகளை நோக்கி அவன் இன்னொரு காலடி வைத்தபோது அந்த விகாரமான பெண்மணி அவனைப் பார்த்து சிரித்தாள். முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு புறம் வைத்துவிட்டு அவனைப் பார்த்து ,
“என்ன முதலாளி உள்ளே வருகிறீர்களா?” என்று அருவருக்கத்தக்க முறையில் கேட்டாள்.
அவள் வயதையும் தோற்றத்தையும் பற்றி பொருட்படுத்தாமல் இப்போதும் வாடிக்கையாளர்கள் தன்னிடம் வருவார்கள் என நம்பிய அந்தப் பெண்ணை கூர்ந்து கவனித்தான், மிகுந்த ஆச்சரியத்துடன்,
“உனக்கு என்ன வயது இருக்கும்மா?” என அவளிடம் கேட்டான்.
இது அவள் உணர்வுகளை புண்படுத்தியது. அவள் முகத்தைச் சுளித்து அவனை மராத்தி மொழியின் தகாத வார்த்தைகளில் திட்டினாள். அவன் உடனே தன் தவறை உணர்ந்து, மனமார மன்னிக்க வேண்டினான்.
“தயவு செய்து என்னை மன்னித்து விடும்மா. நான் சகஜமாகக் கேட்டுவிட்டேன், அவ்வளவுதான். இங்கே நீ ஒரு நாளைப் போல் ஒவ்வொரு நாளும் அலங்கரித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. உன்னிடம் யாரும் வருகிறார்களா?” அந்தப் பெண்மணி பதில் சொல்லவில்லை.
அவன் மீண்டும் தான் செய்த தவறை உணர்ந்தவனாக, ஆவலாதிகளற்ற குரலில் வினவினான்
“உன் பெயர் என்னம்மா?” திரைசீலையை விலக்கிக் கொண்டு செல்வதற்காக விரைந்தபோதும் அவள் உள்ளே போகாமல் அவள் நின்றாள்,
“கங்குபாய்” என்றாள்.
“என்னிடம் சொல் கங்கு பாய், ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறாய்?”
அவனுடைய குரலிலிருந்த பரிவை உணர்ந்து கொண்டவளாக, ஜன்னல் கம்பிகளுக்கருகே வந்து,
“ஆறு, சிலசமயம் ஏழு ரூபாய்… சிலசமயம் பூஜ்யம்” என்றாள்.
“ஆறு, சிலசமயம் ஏழு ரூபாய்… சிலசமயம் பூஜ்யம்” – அவன் கங்கு பாயின் சொற்களைத் திருப்பிக் கூறியபோது, தன் சட்டைப்பையில் தான் வீணாக்க கொண்டு வந்திருந்த இருநூறு ரூபாய்களை நினைத்துப் பார்த்தான். சட்டென அவன் மனதில் யோசனை ஒன்று மின்னியது.
“இதோ பார் கங்குபாய் , உனக்கு நாள் ஒன்றுக்கு ஆறு அல்லது ஏழு ரூபாய்தான் கிடைக்கிறது. நான் உனக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன்”
“வேலைக்காகவா?” ”
இல்லை, வேலைக்காக இல்லை. ஆனால் நீ அதை வேலைக்காக என்று நினைத்துக் கொள்ளலாம். அவன் பத்து ரூபாய்த்தாளை தன்னுடைய சட்டைப்பையிலிருந்து விரைவாக உருவி,
“இதோ எடுத்துக் கொள்” என்று அதனை ஜன்னல் கம்பி வழியே தள்ளினான்.
கங்கு பாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“இதோ பார் கங்கு பாய், நான் தினமும் மாலை இதே நேரத்தில் உனக்கு பத்து ரூபாய் கொடுப்பேன், ஆனால் ஒரு நிபந்தனை.”
“நிபந்தனையா? என்ன நிபந்தனை?”
“அதாவது, நீ உன் பத்து ரூபாயை பெற்றுக் கொண்டவுடன் இரவு உணவை சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்று விட வேண்டும். உன்னுடைய விளக்குகள் எரிவதை நான் பார்க்கக் கூடாது.”
கங்கு பாயின் இதழ்களில் வினோதமான சிரிப்பு ஒன்று தெறித்தது.
“சிரிக்காதே. நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். நான் கொடுத்த வாக்கை மீறுவதில்லை” பிறகு அவன் சூதாட்ட விடுதிக்குப் போனான்.
“நான் இங்கே இருநூறு ரூபாய்களை விரயமாக்க நினைத்தேன், அது நூற்றி தொண்ணூறாக ஆனால்தான் என்ன இப்போது?!” என்று படிகளில் ஏறும் போது நினைத்தான்.
பல நாள்கள் கழிந்தன. தினமும் மாலை மின்கம்பம் அருகே வாடகைச் சிற்றுந்து நிற்கும். அவன் வெளியில் வருவான், தன் மூக்கு கண்ணாடியை சரி செய்வான், அவனுடைய வலது பக்கத்தில் ஜன்னல் கம்பிகளுக்கு பின்புறம் மரஇருக்கையில் வசதியாக அமர்ந்திருந்த கங்கு பாயை காண்பான், தன் வேட்டியின் முன்மடிப்பை சரி செய்வான், பத்து ரூபாய்த்தாளை உருவியெடுத்து அவளிடம் கொடுப்பான். அவள் தன் நெற்றிமீது அதை வைத்து, ‘சலாம்’ செய்து அவனுக்கு நன்றி கூறுவாள். அவன் அதன் பிறகு மாடிப்படியேறி நூற்றித் தொண்ணூறு ரூபாய்களை சீட்டாட்டத்தில் இழப்பான். வெளியே வரும்போது இரண்டு முறை, இரவு பதினோறு மணி அல்லது காலை இரண்டு,மூன்று மணிக்கு கங்கு பாயின் கடை மூடி இருப்பதை அவன் கண்டான். ஒரு நாள் மாலையில், அவளுடைய பத்து ரூபாயை கொடுத்தபிறகு சூதாட்ட விடுதிக்குச் சென்றவன் பத்து மணிக்கே ஆட்டத்தை முடித்து விட்டான். ஒவ்வொருமுறையும் துரதிருஷ்டமான சீட்டுக்கள் கைகளில் ஏற அன்றைய நாளின் பணஒதுக்கீட்டைச் சில மணி நேரங்களிலேயே இழந்திருந்தான். கோட்டாவில் இருந்து அவன் கீழே இறங்கி வாடகைச் சிற்றுந்தில் ஏறும் முன் அவனுடைய கண்கள் கங்கு பாயின் கடைப்பக்கம் சென்றது. கடை திறந்திருந்ததோடு, அவள் கம்பிகளுக்குப் பின்புறம் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து திகைத்தான். அவள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்ததாகத் தோன்றியது. அவன் வண்டியிலிருந்து இறங்கி அவளை நோக்கிச் சென்றான். கங்கு பாய் அவன் இறங்கி வருவதைக் கண்டு பீதியடைந்த அதே நேரத்தில், அவன் அவளுக்கு முன் நின்றிருந்தான்.
“என்ன இது கங்குபாய்?” அவள் பதில் சொல்லவில்லை.
“நீ உன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாலையில் உன் விளக்குகள் அணைந்திருக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லையா? ஆனால் நீயோ இங்கு இப்படி அமர்ந்திருக்கிறாய்..” ஏமாற்றமும் துக்கமும் அவன் குரலில் வழிந்தது.
கங்குபாய் கவனமானாள்.
“நீ மோசமானவள்” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான்.
“போகாதீர்கள், முதலாளி! நில்லுங்கள்” என அவனை அழைத்தாள். அவன் நின்றான். கங்கு பாய் மெதுவாக ஒவ்வொரு வார்த்தையாக அளந்து பேசினாள்.
“ஆமாம், நான் மோசமானவள்தான், மிகவும் மோசமானவள். ஆனால் இங்கே யார் நல்லவர்கள் ? முதலாளி, நீங்கள் ஒரு விளக்கை அணைத்து வைக்க பத்து ரூபாய் கொடுக்கிறீர்கள், ஆனால் உங்களைச் சுற்றிப் பாருங்கள், இன்னும் எத்தனை விளக்குகள் எரிகின்றன..”
அவனுடைய தடித்த கண்ணாடி வழியே கங்கு பாயின் தலைக்கு மேல் பிரகாசமாக ஒளிரும் குமிழ் விளக்கையும், பிறகு அவளுடைய பளபளப்பான முகத்தையும் பார்த்தான். தன் தலையை குனிந்தபடி,
“இல்லை, கங்கு பாய், இல்லை” என்றான். அவன் துயரம் கொண்ட மனதுடன் வாடகைச் சிற்றுந்தில் ஏறினான்.
***
தமிழில் : ஜான்ஸி ராணி
நல்ல மொழிபெயர்ப்பு… வாழ்த்துகள்