வேண்டுதல்
தீபாவளிக்கு வாங்கிய
துப்பாக்கியால்
வீட்டிலுள்ள எல்லோரையும்
சுட்டுக் கொண்டிருந்த சிறுமி
சித்தப்பாவைக் குறிவைக்கும் போது
அது நிஜத் துப்பாக்கியாகி விட
வேண்டிக் கொண்டாள்
***
கனவு
கொந்தளிக்கும் நடுக்கடலில்
தத்தளிக்கும் படகொன்றில்
வாழ்விலிருந்து கைவிடப்பட்டவன்
உயிரைத் தன் கையில் பிடித்துக் கொண்டிருப்பது போன்றதொரு சித்திரம்
தோன்றி மறைகிறது.
கலைப்பில்
புரண்டு படுத்தேன்
தவறுதலாக
கை பட்டு, கட்டிலிலிருந்து
கவிழ்ந்த சொம்பு நீர்
தரையைச் சூழ்கிறது
கட்டில் சற்றுத் தத்தளிக்கிறது
இப்படித் தவறுதலாக
நானொரு கனவை
நிஜமாக்கிக் கொண்டிருந்தேன்.
***
எப்போதும் மனிதர்கள்
வேறொரு உடலுக்காக
அலைந்து திரிகிறார்கள்
ஒன்று கிடைத்ததும் மற்றொன்று.
உடல்களை விட்டொழி
அவை பாவம்
நாம் நம் சொற்களால்
அழிந்துபோவோம் வா.
***
பாலைவனத்தை உருவாக்குதல்
முதலில் அவரை
பைத்தியம் என்று
நினைத்தேன்
உற்றுப் பார்த்தபோது தான்
தெரிந்தது
அவர் மரத்துடன் மிகச்சாதரணமாக
பேசிக் கொண்டிருந்தார்
ஆச்சரியத்தை
மறைவாக நின்று
கவனித்தேன்
பறவைகள் பழைய வாடகை
பாக்கி கொடுக்காதது குறித்தும்
மின்சாரக் கம்பியில்
அமரும் மைனாக்களின்
இரைச்சலைக் குறித்தும்
அவரிடம்
புகார்களை தெரிவித்தது மரம்
மேலும்
பிறந்ததிலிருந்து
ஒரே இடத்தில்
வாழ்வது
குறித்து மிகவும் வருத்தப்பட்டது
பாவம்
பைத்தியம் பிடித்தது போல இருக்கும்
அவரால் என்ன செய்துவிட முடியும்
அமைதியாக இருந்தார்
கடைசியாகப் போகும் போது
எனக்கொரு பழுத்த இலை வேண்டும் என்றார்
மரம் சிரித்தபடி அவருக்காக உதிர்த்துக் கொடுத்தது
அவர் சென்றபின்
வெகுநேரம் கழித்து
ஒரு பிடி மண்ணுடன்
மரத்திடம் சென்றேன்
அதற்குள் மரத்தின் மொழியை
மனனம் செய்திருந்தேன்
அதே புகார்களை
அதே வருத்தத்தை
என்னிடமும் தெரிவித்தது
எனக்கு பழுத்த இலையை
விரும்பவில்லை
அதனிடம்
சிரித்தபடி வேரினைக் கேட்டதும்
தந்துவிட்டது மரம்
பிடி மண்ணில் வேரினைச்
சுமந்தபடி அடுத்த மரத்திடம்
பேசத் துவங்கினேன்
இப்படியாக
நான்
என்னுடைய பாலைவனத்தை
உருவாக்கினேன்.
***
-தினகரன்
Nice ❤️