தற்கொலைக் குறிப்புகள்
அவளுடைய தற்கொலையைப் பற்றிய குறிப்புகளை
ஒவ்வொருவரும்
பல விலவிதமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அவள் அமைதியாகக் கிடக்கிறாள்
எத்தனை நூற்றாண்டுகளாலும்
கண்டறிய முடியாத
காரணத்தை
உண்மையை
யாருமே அறியாத ரகசியப் பெட்டிக்குள்
வைத்து விட்டாள்
அந்த ரகசியத்துக்கு
எந்தத் திசையிலும் பாதைகளில்லை
அவள் சென்றதும்
பாதைகளற்ற ஒரு திசையில்தான்.
***
ஒரு தற்கொலை
பல விதமான காரணக்குறிப்புகளை
தன்னைச் சுற்றிப் படர விடுகிறது
எல்லாக் காரணங்களும்
தற்கொலைக்கு அருகிலேயே சென்று முடிகின்றன
அல்லது அதிலிருந்து
கிளைத்து வருகின்றன.
ஆனாலும் அவை
இன்னொரு புறத்தில்
தற்கொலையைத் தவிர்த்திருக்கலாம்
என்றும் வாதிடுகின்றன
தவிர்க்க முடியாது என்றுமவை
உறுதி சொல்கின்றன.
எல்லாவற்றுக்கும் அப்பால்
துக்கம் கோபம்
கருணை என்று பல வண்ண மயமாகிறது
தற்கொலை.
***
தன்னைச் சுற்றிப் படரும்
ஊகங்களையும் வதந்திகளையும்
ஒரு தற்கொலை
ரகசியமாக ரசித்துக் கொண்டிருக்கிறது.
காரணங்களை அது இன்னும் வெளிப்படுத்தவில்லை
தீராத மர்மத்தின் அருகில்
ஒரு நாய்க்குட்டியைப்போல
சாவகசமாகப் படுத்திருக்கிறது
தன்னை நோட்டம் விடுவோரையெல்லாம்
கண்களை மூடி
காதுகளைக் கூராக்கி
மூக்கிலே மோப்பத்தை உணர்ந்தபடி.
ஆனால்
அதை மோப்பம் பிடிக்கத் தவிக்கிறார்கள்
எல்லோரும்.
***
தற்கொலையைப் பற்றிய ஆய்வறிக்கையை
வாசிப்பதற்கிருக்கும் ஆவலைக் கொஞ்சம்
சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அது எவ்வளவு வெட்கக் கேடானது!
அதில் பொதிந்திருப்பது
ஒருவருடைய அந்தரங்கமல்லவா!
யாரிடமும் பகர முடியாத ரகசிய முடிச்சை
அனுமதியின்றித் திறக்க முற்படும்
அநாகரிகத்தின் முன்னும் அநீதியின் முன்னும்
நிற்க முடியவில்லை என்னால்.
அதை ஒரு மரணத்தை முன்னிறுத்தித்
திறக்க முற்படுவது
மரணத்துக்கும்
மரணத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவருக்கும்
இழைக்கப்படும் அவமதிப்பென்பேன்.
உங்கள் உள்ளாடையை
அனுமதியின்றித் திறக்கும்போதும்
நான் அங்கிருக்கேன்.
இறந்தவளை அழைத்து வரத் திராணியற்ற
ஆய்வறிக்கைக்கு
என்னதான் மதிப்பு?
***
அந்த மரணம் நிச்சயமாக
உங்களுக்கு முன்னேயே நிகழ்ந்தது
யாராலும் அதைத் தடுக்க முடியவில்லை.
சரியாகச் சொன்னால்
நீங்கள் அந்த மரணத்துக்கு மிக அருகில்
நேரெதிரில் நின்றீர்கள்.
ஆனாலுமென்ன
மரணம் நிகழ்ந்து விட்டது.
துக்கமும் பதட்டமும் சூழ்ந்து அமிழ்த்த
தோற்றுப் போன மீட்புப் பணியாளரின்
குற்றவுணர்ச்சியில்
சிக்குண்டு தவிக்கும் உங்களைப் பார்த்து
வென்ற மரணம் சிரிக்கிறது.
இறந்தவரின் பெயரை விட்டு விட்டு
உடலோ மறைந்து கொண்டிருக்கிறது.
***
-கருணாகரன்