சிவத்தம்பியும் இலக்கியமும்

பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்ப் புலமைத்துவப் பரப்பில் தன்னை சிந்தனையாளராகவும், சமூக, இலக்கிய வரலாற்றாய்வாளராகவும், விமர்சகராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். பண்பாட்டுச்-சமூகவியல், மார்க்ஸிசம், மற்றும் வரலாறு போன்ற துறைகளில் அவருக்கிருந்த ஆழமான ஈடுபாடும் அது சார்ந்த நுண்ணோக்குமே அவரது இலக்கியம் பற்றிய நோக்கின் அடித்தளமாக அமைந்தன. சமூகவியல், பண்பாட்டியல், அரசியல், தத்துவம், வரலாறு, இலக்கியம் போன்றன ஒன்றுக்கொன்று தாக்கம் ஏற்படுத்துபவை. இவையனைத்தும் ஒருங்கிணைந்துதான் அவரது இலக்கிய வரலாறு பற்றிய கண்ணோட்டத்தை உருவாக்கின. அவர் எப்போதும் இலக்கியத்தை மிக அடிப்படையான சமூக பண்பாட்டு இயக்கமாகவே கருதி வந்தார். இலக்கிய வரலாறு எனும் தொடர் குறித்த அவரது விரிந்த நோக்கே தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய அவரது புதுமையான பார்வை முன்வைக்கப்படக் காரணமாக அமைந்தது.

பண்பாட்டுத் தளத்தில் இலக்கியத்தை வைத்துப் பார்ப்பதன் மூலமே இலக்கிய வரலாற்றை அதன் முழுமையான உள்ளடக்கத்தோடு புரிந்து கொள்ள முடியும் என்பது சிவத்தம்பியின் நம்பிக்கையாக இருந்தது. இலக்கியம் குறித்த வெறும் துண்டுத் துணிக்கையான வரைவிலக்கணங்கள் மீதன்றி அதன் உண்மையான சமூகப் பெறுமானத்தை மையப்படுத்திய அதாவது இலக்கியத்தின் பயன்பாட்டையும், நடைமுறையையும் பிரதிபலிக்கக்கூடிய வரைவிலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டே இலக்கியத்தை புரிந்துகொள்ளவும், விளக்கவும் அவர் முயன்றார். அந்த அடிப்படையான நோக்கிலிருந்ததான் இலக்கிய வரலாற்றை சரியாக பார்க்கவும், புரிந்துகொள்ளவும் முடியும் என்று அவர் கருதினார்.

இலக்கியத்தை வரையறுப்பதற்கு சிவத்தம்பி கிறேய்க், எல்.சி. நைற்ஸ், மரியா குரிஞ்சையன் மற்றும் ரொபர்ட்வெய்மன் போன்ற மேல்நாட்டு அறிஞர்களின் இலக்கியத்தை மிகச் சாரமாக வரைவிலக்கணப்படுத்தும் வரைவிலக்கணங்கள் மீதே சார்ந்திருந்தார்.

இலக்கியம் என்பது, நாம் மனிதர்களாகத் தொடர்ந்திருப்பதற்கு அல்லது போதுமாளனவு மனிதர்களாக இருப்பதற்கு வேண்டிய மிக முக்கியமான உண்மைகளை அறிந்து கொள்வதற்கான, பிறிதொன்றினை இட்டு நிரப்பி விட முடியாத ஓர் அறிவுமுறை என்று கூறுவேன்” எனும் எல்.சி. நைற்ஸின் வரைவிலக்கணத்தை எடுத்தாளும் சிவத்தம்பி இந்தத் தளத்திலிருந்துதான் இலக்கியத்தின் சமூகத்தன்மையையும் அதன் பரப்பெல்லையையும் விரிவாக்கிக் கொள்கிறார். இலக்கியம் குறித்து நைற்சோடு ஒரு கருத்தியல் ஏற்பை பகிர்ந்துகொள்ளும் அவர், இலக்கியம் என்பது நாம் போதுமாளனவு மனிதத்தன்மை உடையவர்களாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய உண்மைகளை அறிந்துகொள்வதற்கான, மற்றொன்றினால் இட்டு நிரப்பிவிட முடியாத அறிவுமுறைமைதான் என ஏற்றுக்கொள்கிறார்.

“இலக்கியப் படைப்புகள், சமூக மனிதனை அவனது உயிர்கள், வாழ்க்கையின் பல்வேறு கோலத்துடன், அவனது உணர்வுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளுடன், சமூகத்துடனான அவனது உறவுகளுடன் அவனது அக வாழ்க்கையையும், புறநடத்தைகளையும் சித்தரிக்கின்றது. இவற்றிலிருந்து நாம் தனிமனிதனுக்கும் அவனது வாழ்க்கையில் வரலாற்று நிலைமைக்குமுள்ள இணைப்புக்களை, அவனது சமூகச் சூழ்நிலையின் பண்பைக் காட்டும் வரலாற்றுப் புலவெளித் தோற்றத்தை, கருத்துகளின் போராட்டங்களை, சமூக மோதுதல்களை, உய்த்தறிந்துகொள்கிறோம்” என்று கூறும் மரியா குரிஞ்சையனின் இலக்கியம் குறித்த நோக்கோடும் சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு உடன்பட்டுப் போகிறது. இலக்கியம் பண்பாட்டுவயமானது என்பதோடு அது பண்பாட்டை உருவாக்கவும் செய்கிறது. அதேநேரம் சமூக சிந்தனைக்கான கருவியாகவும் இலக்கியம் இருக்கிறது என்று சிவத்தம்பி கருதியதாலேயே இந்த இணக்கம் நிகழ்கிறது.

இலக்கிய வரலாறு பற்றிய சிவத்தம்பியின் கருத்தியலைத் தீர்மானித்த மிக முக்கிய வரைவிலக்கணம் டேவிட் கிறெய்க் உடையதாகும். இலக்கியம் பற்றி அவர் முன்வைக்கும் நீண்ட விளக்கம் இலக்கியம் குறித்து சிவத்தம்பி கொண்டிருந்த மன ஒன்றிப்பை மிகச்சிறப்பாக முன்வைக்கிறது. கிறெய்க்கின் அந்த விளக்கம்தான் சிவத்தம்பியின் இலக்கிய வரலாறு பற்றிய கண்ணோட்டத்தை முழுமையாகப் பிரதிபலிப்பது போல் உள்ளது. கிறெய்க் கூறுகிறார்-

“வரலாற்றில் தொழிற்படும் ஆழ வேரூன்றிய சக்திகள் – வாழ்க்கை முறை பற்றிச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே நடக்கும் போராட்டங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கின்றன. அதாவது வாழ்வதற்கென மக்கள் ஒழுங்குபட்டு உழைக்கும் பொழுது தோன்றும் மக்கள் உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன. இந்த மாற்றமைப்பு புதிய தொடர்பு முறையமைப்புக்கள் தோன்றுவதற்கு இடமளிக்கும். இவற்றினடியாக, சொல்லால் வெளியிடப்படுவதான இலக்கியம் தோன்றும். அது ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் புதிய வாழ்க்கைப் பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதாக அமையும்”.

கிறேய்க்கின் இந்த விளக்கம் சிவத்தம்பியை கவர்வதற்கான காரணம், இலக்கியத்தின் சாரமாக மனித வாழ்வின் பல்வேறு பக்கங்களினது உறவிலிருந்தும், முரணிலிருந்தும் உருவாகி வரும் ஒரு பண்பாட்டு இயக்கத்தை அவர் முன்னிறுத்துவதேயாகும். சிவத்தம்பியின் இலக்கியம் குறித்த இந்த நிலைப்பாட்டிலிருந்தே அவரது இலக்கிய வரலாறு பற்றிய பார்வையும் உருவாகி வருகிறது.

சிவத்தம்பியின் இலக்கிய வரலாறு குறித்த பார்வைக்கு அடித்தளமாக அமைந்த மற்றுமொரு இலக்கிய வரைவிலக்கணம் ரொபர்ட் வெய்மன் உடையது. இலக்கியம் குறித்து வெய்மன் முன்வைக்கும் பின்வரும் விளக்கம் சிவத்தம்பியின் இலக்கிய வரலாற்று நோக்கின் பின்புலமாக அமைந்தது.

“ஒரு கலாசிருஷ்டியானது ஒரு புறத்தில் அது தோன்றிய காலத்தின் உற்பத்தியாகும். அக்காலத்தின் கண்ணாடியாகும். அதனை ஆக்கியோனும், அதன் முதலாம் வாசகரும் எந்த சமூகத்துக்குரியோராக இருந்தனரோ அந்தச் சமூகத்தின் வரலாற்றுப் பிரதிபலிப்பாகும். மறுபுறம், அதனைக் காலத்தின் உற்பத்திப் பொருளாக மாத்திரம் கொள்ளாது அந்தக் காலத்தையே உற்பத்தி செய்வதாக, கடந்த காலத்தின் கண்ணாடியாக மாத்திரமல்லாது வருங்காலத்துக்கான விளக்காகவும் கொள்ள வேண்டும்”

சிவத்தம்பியும் இலக்கிய வரலாறும்

சிவத்தம்பி தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையையும் அதன் பண்பாட்டையும் வரலாற்றுரீதியாகப் புரிந்து கொள்ள முயன்று வந்த ஒருவர். வரலாறு மீது அவருக்கிருந்த ஆழ்ந்த வாசிப்பும், புலமையும், பன்னாட்டுப் பல்கைலைக் கழகங்களில் பணியாற்றிக் கிடைத்த அனுபவங்களும் மேலும் தமிழ்ச் சமூகம் குறித்து அந்தத் துறைசார்ந்து இருந்த வெற்றிடமும் அவரை அதிகம் அந்தத் துறையில் இயங்கத் தூண்டின. பண்டைய சமூகத்திலிருந்து நவீன சமூகம் வரை தமிழ்ப்பண்பாடு, தமிழ் நாடகம், சினிமா என அவரது விரிந்த வாரலாற்றுப் பார்வையை அவர் ஆழமாக காலக்கிரம அடிப்படையில் முன்வைத்திருக்கிறார். இன்று தமிழ்ச் சிந்தனை மரபை கால ஒழுங்கில் புரிந்தகொள்வதற்கான மிக முக்கிய ஆய்வுகளாக அவை உள்ளன.

இலக்கிய வரலாறு மற்றும் தமிழ் இலக்கிய வரலாறு குறித்த தனது பார்வையை Literary History in Tamil- A Historiographical Analysis எனும் நூலில் சிவத்தம்பி முன்வைத்தார். இந்நூல் பின்னர் தமிழில் இலக்கிய வரலாறு என தமிழில் வெளிவந்தது. இந்நூலில் அவர் பிரதானமாக விவாதிப்பது தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை விடவும் அதுவரை எழுதப்பட்டிருந்த தமிழ் இலக்கியத்தின் வரலாற்றெழுத்தியல் பற்றித்தான். பொதுவாக இலக்கிய வரலாறினை தனியே இலக்கியத்தின் வரலாறாக சிவத்தம்பி நோக்குவதில்லை. இலக்கிய வழி (சமூக) வரலாறு என நோக்குவதே சரி என்பது அவர் நிலைப்பாடாக இருந்தது. அதற்கான பிரதான காரணம் மேலே சொன்னது போல் இலக்கியத்தின் மைய உள்ளீடே சமூகம்தான் என்ற அவரது கண்ணோட்டமே.

“ஒரு நாட்டினது அன்றேல் ஒரு மொழிக்கூட்டத்தினரின் வரலாற்றை அவர்களது இலக்கியத்தின் வழியாகப் பார்க்கும் பயில் துறையை literary history என்பர். ஒரு நாட்டின் அன்றேல் ஒரு கூட்டத்தினரின் பொருளாதார முயற்சிகள் வழியாக (உற்பத்தி, விநியோகம், நுகர்வு) அவர்தம் வரலாற்றை எடுத்துக் கூறுவது எவ்வாறு பொருளாதார வாரலாறு எனக் குறிப்பிடப்படுகிறதோ, அதேபோல் இலக்கியத்தைக் கொண்டு நாட்டினது அல்லது மொழிக்கூட்டத்தினது வரலாற்றைக் கண்டறியும் முறைமையை ‘லிற்றறரி ஹிஸ்ட்ரி’ என்பர். இந்தவகையில் literary history என்பதை ‘தமிழில் இலக்கிய வரலாறு’ என்று சொல்வதே பொருந்தும் என்பது புலனாகிறது” (தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி, பக். 20)

உண்மையில் தமிழ்ச் சூழலில், இலக்கியத்தின் வரலாறே இலக்கிய வரலாறாக புரிந்துகொள்ளப்பட்டும் பயிலப்பட்டும் வந்தது. இலக்கியத்தின் வரலாறும் (history of literature) இலக்கிய வரலாறும் (literary history) ஒன்றல்ல என்பதை அவர் மிக ஆழமான ஆதாரங்களைக் கொண்டு நிறுவினார். அதாவது இந்தியாவின் வரலாறு இந்திய வரலாறு என அழைக்கப்பட்டது போலவே இலக்கியத்தின் வரலாறு, இலக்கிய வரலாறு என அழைக்கப்படுகிறது என்கிறார். நம் இலக்கிய ஆய்வுச் சூழலில், எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ் இலக்கியத்தின் வரலாறாகவே (History of literature) இருந்தது. உண்மையில் அது ஒரு சமூகத்தின் இலக்கியப் பண்பாட்டின் முழுமையான வரலாறாக ஒருபோதும் அமையவில்லை என சிவத்தம்பி கருதினார். அதற்கான மாற்று வரலாற்று அணுகுமுறை ஒன்றையும் அவர் கட்டியெழுப்பினார். அதுவே தமிழில் இலக்கிய வரலாறு (literary history) ஆகும். அவரது இந்த நுணுக்கமான ஆய்வுப் பார்வை தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில் நிதானித்துப் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு அல்லது ஒரு புதிய திறப்பு எனலாம். ஆனால் அது எந்தளவு தமிழ்ப் புலமைச் சூழலில் அதிர்வை ஏற்படுத்தியது என்பது பூடகமாகவே இருக்கிறது.

மேலும் இலக்கிய வரலாற்றுக்கும் இலக்கியத்தின் வரலாற்றுக்குமான முக்கிய வேறுபாடுகள் பற்றி சிவத்தம்பி சொல்கிறார். ஒரு சமூகத்தின் மதம் பற்றியோ, விளையாட்டுகள் பற்றியோ படிப்பது போன்று அந்த சமூகத்தின் இலக்கியத்தைப் பற்றிப் படித்துக் கொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட அந்த இலக்கியம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு வளர்ச்சியடைந்தது, அவ்விலக்கிய வளர்ச்சியில் இடம்பெறும் இலக்கிய வடிவங்களின் தோற்றம், வளர்ச்சி, தேய்வு எவ்வாறு அமைந்தன என்பது பற்றி இலக்கியத்தின் வரலாற்றிலே அறிந்துகொள்ளலாம். ஆனால் இந்த இலக்கியத்தின் வரலாறு, ஒரு நாட்டின் வரலாற்றை அதன் இலக்கியங் கொண்டு அறியும் வரலாற்று முறைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மாறாக, இலக்கிய வரலாற்றினூடாக ஒரு சமூகத்தின் வரலாற்றையே ஆராய்கின்ற, புரிந்துகொள்கின்ற ஒரு முழுமையான வரலாற்று அறிதல் முறையைக் கொண்டதே இலக்கிய வரலாறாகும் (literary history). அதாவது இலக்கிய வழி ஒரு சமூகத்தின் நாட்டின் வரலாற்றை நோக்குவதாகும்.

அதனால் இலக்கிய வரலாறு எனும் தொடர் ‘இலக்கிய வழி வரலாறு’ மற்றும் ‘இலக்கியங் கொண்டு வரலாற்றை அறிதல்’ ஆகிய இரு கருதுகோள்களை தன்னுள் அடக்கி இருப்பதாக சிவத்தம்பி சொல்கிறார். இதனை மேலும் சுருக்கமாக விளங்கிக் கொள்வதானால், இலக்கியத்தின் வரலாறு என்பது ஒரு சமூகத்தின் குறிப்பிட்டகால இலக்கிய வடிவங்களையும், அதன் போக்குகளையும் பதிவு செய்த வரலாறாகும், இலக்கிய வரலாறு என்பது இலக்கியத்தின் வழியே ஒரு காலகட்ட சமூகத்தின் மொத்தப் பண்பாட்டு இயக்கத்தையும் பதிவு செய்துள்ள வரலாற்றுப் பதிவாகும் என புரிந்துகொள்ளலாம். எனினும் இலக்கிய வரலாற்றினை அறிந்துகொள்வதற்கு இலக்கியத்தின் வரலாறே அடிப்படையாக அமைவதாகச் சொல்கிறார். அதனால், இலக்கியத்தின் வரலாறு எழுதப்பட்டிருத்தல் மிகவும் அவசியமான ஒன்று என்பதை வலியுறுத்துகிறார். “இலக்கியத்தின் வரலாற்றினை ஐயந்திரிபற அறிந்துகொள்ளாமல் இலக்கிய வழி வரலாற்றை அறிந்துகொள்ள முடியாது” (தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி, பக்.22)

சிவத்தம்பியின் நோக்குப்படி பார்த்தால், இலக்கிய வரலாறு என்பது இலக்கியத்துக்கு அப்பாலான புலமைசார் விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறது. இந்த இடத்தில் அவர் இலக்கிய வரலாற்றை சமூக வரலாற்றின் ஒரு பகுதியாகவே காண்கிறார். இந்தப் பார்வை குறைபாடுடையதாக எனக்குத் தோன்றவில்லை. இலக்கியம் மனித வாழ்வை அதன் சிந்தனையை அதன் எழுச்சியை, வீழ்ச்சியை, அதன் பண்பாட்டுக் கண்டுபிடிப்புகளை, பொருளியல் முறைகளை எல்லாம் உடனடியாகப் பதிவு செய்து கொள்கிறது. அந்தவகையில், அது மிக முக்கிய வரலாற்று மூலாதாரமாகவும் வரலாற்றறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதை நாம் அறிவோம். சிவத்தம்பி கூறும் இலக்கிய வரலாறென்பதும் இத்தகைய சமூக வரலாற்றை இலக்கியத்தின் வழி கண்டறிவதுதான்.

“இலக்கிய உருவாக்கம் இல்லாது எந்தவொரு சமூகமும் உருவாக்கம் பெற்றுவிட்டதாகக் கொள்ள முடியாது. சுமூக உருவாக்கத்துக்கு இலக்கிய உருவாக்கம் ஓர் அங்கமாகும்”

(தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி, பக்.30)

சிவத்தம்பியும் தமிழ் இலக்கிய வரலாற்றெழுத்தியலும்

இதுவரை எழுதப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வரலாற்று எழுத்தியல் பற்றி கவனம்செலுத்தும் சிவத்தம்பி இந்த வரலாறுகளின் பின்னணியை ஆராய்வதன் மூலம் அவற்றின் சரிகளையும், சரிவுகளையும் எடுத்துக்காட்டினார். தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை எழுதுவதற்கான தேவை பற்றிய பிரக்ஞை அத்துடன் அந்த வரலாறுகள் எழுதப்பட்ட கல்விநிலைப் பின்னணி என்பன தமிழ் இலக்கியத்தின் வரலாறை எழுதுவதில் செல்வாக்குச் செலுத்தின. குறிப்பாக தமிழ் இலக்கியத்தின் வரலாற்று எழுத்தியலுக்கான தேவையையும், பிரக்ஞையையும் காலனித்துவத்தினால் உருவான மேல்நாட்டுமயவாக்கம்தான் உடனடியாகத் தூண்டியது. தமிழ் மொழியும் அதன் பண்பாடும், இலக்கியமும் காலனிய சூழலில் புறக்கணிப்புக்குள்ளான போது அதனைத் தூக்கி நிறுத்தும் பொறுப்பை தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள் சுமந்து கொண்டு செயற்பட்டனர். அந்தப் பின்னணியிலிருந்து தமிழ் இலக்கியத்தின் வரலாறு எழுதப்படலாயிற்று. காலனித்துவ எதிர்ப்பு மனநிலையிலிருந்து அவசரமாக ஆற்றப்பட்ட ஒரு பணியாக அதன் தொடக்கம் இருந்தது. அதனால் தமிழ் இலக்கிய வரலாறு பல விடுபடல்களை கொண்டிருந்ததோடு, அதன் முழுப்பரிமாணத்துடன் எழுதப்படவில்லை. இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான மாற்றை சிவத்தம்பி வலியுறுத்தினார்.

“உண்மையில் இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞை தமிழ்த் தேசிய இனப் பிரக்ஞையின் காரணமாகவும் அதன் அளவீடாகவும் அமைந்திருந்தது. ஆனால் இந்த பிரக்ஞை ஏற்பட்ட காலகட்டத்தினை (அதாவது 19ம் நூ.ஆ.பிற்பகுதி, 20 பதாம் நூ.ஆ. முற்பகுதியினை) எடுத்துக் கொண்டு, தமிழில் இலக்கிய வரலாற்றாய்வின் தொடக்கமாக அக்காலகட்டத்தையே கொள்வதென்பது, தமிழ் இலக்கிய வரலாற்றைப் பெரிதும் ஐரோப்பியமய நோக்குடையதாக்குவதாகும்”

(தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி- பக்.60)

தமிழ் இலக்கியத்தை கால அடிப்படையில் பகுத்து ஒவ்வொரு காலப்பகுதியையும் விரிவாக அவதானிக்கும் சிவத்தம்பி எப்படி அந்தந்தக் காலப்பகுதிகளின் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் என்பன தமிழ் இலக்கிய வரலாற்றெழுத்தியலுக்குள் கொண்டு வரப்பட்டது. அல்லது விட்டு விடப்பட்டது போன்றவற்றை நுண்மையாக முன்வைக்கும் பாங்கை தமிழில் இலக்கிய வரலாறு நூலில் காண முடிகிறது.

தமிழ் இலக்கியத்தின் பிரதான உள்ளடக்கம் சார்ந்து அதன் வரலாற்றை சிவத்தம்பி பின்வருமாறு கால அடிப்படையில் பகுத்துக் கொள்கிறார்.

  1. 1700 க்கு முற்பட்ட காலம்
  2. 1700-1835
  3. 1835-1929
  4. 1930 க்குப் பின்வரும் காலம்

(அ) 1930-1950

(ஆ)1950-……..

தமிழ் நாட்டு புலமை வாழ்க்கை மரபில் 18ம் நூற்றாண்டிலேயே மாற்றம் தொடங்குவதாக சிவத்தம்பி குறிப்பிடுகிறார். 18ம் நூற்றாண்டுக்கு முன்னர் அதாவது 1700 க்கு முன்னர், இஸ்லாத்தின் வருகையத் தவிர தமிழின் இந்தியத் தன்மையை மறுதலிக்கத்தக்க எந்த சக்தியும் தொழிற்படவில்லை என்கிறார். அதுகால வரையான தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினை இந்தியப் பண்பாட்டின் முழுமையை நிறைவு செய்யும் அங்கங்களாக விளங்கும் இந்துக்களும், சமணர்களும், பௌத்தர்களும் பரஸ்பரச் செல்வாக்குகள் மூலம் உருவாக்கி இருந்தனர். இஸ்லாம் கூட வணக்க வழிபாடுகளுக்கு அப்பால் தமிழ் வாழ்க்கை மரபைச் சார்ந்தே செயற்பட்டனர் என்கிற எண்ணம் சிவத்தம்பிக்குள்ளது.

18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ்க் கத்தோலிக்க இலக்கியமும் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்துடன் கலந்து வரலாறாக உருப்பெறத் தொடங்கியது. இதற்கு வீரமாமுனிவரின் வருகையே முக்கிய பங்காற்றியதாக சிவத்தம்பி சொல்வார். 18ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக்கு புரட்டஸ்தாந்திகளின் வருகை இரண்டு விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறுகிறார் சிவத்தம்பி.

“முதலாவதாக, இவர்கள் மூலமே மறுமலர்ச்சிக் காலத்தின் பின்னர் தோன்றிய (சமூகத்தினை புதிய முறையில் நோக்குகின்ற) ஐரோப்பிய மனோபாவங்கள் தமிழுக்குள் வந்து சேர்கின்றன. இரண்டாவதாக புரட்டஸ்தாந்தம் முற்றிலும் எழுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதம் என்ற வகையில், தமிழ் நாட்டில், ‘அச்சுப் பண்பாட்டை’ ப் பெருமளவில் ஆரம்பித்து வைப்பதற்கு இவர்கள் காரணர் ஆகின்றார்கள். புரட்டஸ்தாந்திகள் மதமாற்றத்தைக் கல்வியுடன் இணைத்தனர். அவர்கள் கல்விமுறை அச்சடித்த பாடப்புத்தகங்களை அடிப்படையாக் கொண்டது”.

(தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி- பக்.66).

1835 ஆம் ஆண்டுதான் அச்சுயந்திரத்தை உடைமையாக வைத்திருப்பதற்கான சுதந்திரம் சுதேசிகளுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிலைமையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த சுதந்திரம்தான் 1835க்குப் பின்னர் பழைய தமிழ் இலக்கிய நூல்கள் முதன் முதலாக அச்சிடப்படுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கின. இதனாலேயே சிவத்தம்பி இந்த ஆண்டை தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய காலமாக பகுத்துக் கொள்கிறார்.

இந்தவகையில் பார்த்தால், 18ம் நூற்றாண்டானது தமிழ் இலக்கியத்தின் ஒரே தன்மையாக இருந்த தொடர்புடைமை நீங்கி வேறு பண்பாடுகளும் கலந்த ஒரு தன்மையைப் பெறுகின்ற ஒரு காலகட்டமாக விளங்குகிறது எனச் சொல்ல முடியும்.

 

***

-ஜிஃப்ரி ஹாசன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *