1.வேஷம்
அவர்கள்
இரவில் இருட்டை போர்த்திக் கொண்டு நுழைகிறார்கள்.
பகலில் வெளிச்சத்தைப் போர்த்திக் கொண்டு வெளியேறுகிறார்கள்.
மாய வித்தைக்காரன்
இரவில் தீக்குச்சியால்
சிறிய பகலையும்
பகலில் கருந்துளையையும் ஒற்றை விரலில் உருட்டிக் காட்டுகிறான்
நகரம் பிச்சை வீசியபடி
விரைந்து கடக்கிறது
பொழுதுகளை.
2. மெய்நிகர்
பூவொன்றை
கொய்கிறான்.
அவனுக்கு மட்டும் சொந்தமான
அதன் மணத்தை
அந்தப் பூ
அவனிடம் யாசிக்கிறது.
3. அவர்கள்
மழை கொட்டுகிறது
கரைகளற்றப் பேராறு
ஓடி நிகழும் யத்தனத்தில்
அதைத் தவிர்க்கப்பார்க்கும்
நெடும் பள்ளம்
யுகமாய் மீண்டுவிடுகிறது
ஆறு.
4. தெளிவு
எனது கவிதைகள்
ஒரு தும்பி அமர்ந்துவிட்டு
எழுந்த புல்லாக சிலிர்ப்படைந்தவை.
மொழியின் தன்னியல்பில் சுருங்கிப்போனவை.
துருத்தியைத் தொடர்ந்து இயக்க வேண்டிய கொல்லனின் கடமை.
வெளிச்சத்தைப் பார்த்து கண் கூசாத வான்காவின் துரிகைகள்.
வயல்வெளியெங்கும் அலைந்து திரியும் காக்கையொன்றின் சாய்ந்த பார்வைகள்.
இரவில் விரித்துப் பார்க்கும் பேரண்டத்தின் கருவிழி.
இருமையின் சாயலில் ஒளிந்திருக்கும் பிரபஞ்சம்.
அதனால் அதனளவில்
ஒரு ஊமை
ஒரு குருடு
ஒரு செவிடு
மற்றபடி இயங்கிக்
கொண்டிருக்கும்
ஒரு சராசரி.
5. சுடர்
எழுதும் பேனாவில்
ஒளி பொருந்தி வரவேண்டும்.
மெழுகுவர்த்தியால்
எழுதிப் பார்க்கிறேன்
சொட்டுகள்,
கண்ணீரோ?
ஸ்கலிதமோ?
அதை நிகழ்த்தும்
ஒற்றைத் துடிப்புதான்
பேரொளியைப் பரப்புகிறது.
எனது தாளும் மொழியும்
வேறானவை
அதுவே
அந்தத் துடிப்பின்
சாரம்.
6. பிராப்தம்
அவன் படைப்பில்
யாருடைய துக்கமோ சொல்லப்படுகிறது.
அதற்கு எல்லோரும் கொண்டாடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான
விருப்பக் குறிகளைப் பெறுகிறது.
இந்த பூமியே ஒரு குன்றாக
அவனை உயர்த்திக் காட்டுகிறது.
அன்றிரவு அவனுக்கு
இந்தக் கனவு வந்திருக்க
வேண்டும்.
கல்வாரியின் முள் கூட்டில்
ஒரு பறவை
முட்டையிட்டு அமர்கிறது.
ஆனால் அந்தக் கனவு
தன்னை முட்டையிட
ஒரு கூடும் கிடைக்காமல்
பரந்த வெளியில்
மற்றுமொரு வான்காவிற்கோ
காஃப்காவிற்கோ
ஏங்கித் திரிகிறது.
***
– சாகிப்கிரான்.
படிமமும் சொற்கள் விளையாட்டும்
சிறப்பாக உள்ளது…
அருமை