–தேவிபாரதி
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் படைப்பிலக்கியவாதிகளில் பலர் நடுத்தர வர்க்கப்பின்னணி கொண்டவர்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ நடுத்தர வர்க்கத்தின் மனோபாவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். இதற்குத் திட்ட வட்டமான வரலாற்றுக்காரணிகள் உண்டு. குறிப்பிட்ட சில கூறுகள் தவிர்த்து பழைய மரபுக்கூறுகளின் மீதும் விழுமியங்களின் மீதும் ஆழமான பிடிப்புக் கொண்டது நடுத்தர வர்க்கம். இவ்வர்க்கத்தின்அறிவுத்துறைச் செயல்பாடுகள் மரபின் விழுமியங்களை அவற்றின் உள்ளடக்கத்திற்குக் குந்தகம் ஏற்படாத வகையில் புதுப்பித்துப் பாதுகாக்கிறது. நவீனச் சிந்தனைகளுக்கு மறுவிளக்கங்கள் அளித்து பழைய மதிப்பீடுகளை அவற்றின் ஆயுட்காலத்திற்குப் பின்னரும் நீடித்திருக்கச் செய்கிறது.
நவீனத் தமிழ் படைப்பிலக்கிய முயற்சிகளில் ஒரு கணிசமான பகுதி இவ்வகைக்குட்பட்டது. மரபு சார்ந்த விழுமியங்களின் மீது நுட்பமான விமர்சனங்களை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புக்களை இவற்றின் எதிர் நிலையாகக் கொள்ளலாம்.
நிலைபெற்றுள்ள சமூகக் கட்டமைப்பின் மீது உள்ளார்ந்த பகைமை கொண்ட கட்டமைப்பின் பலகூறுகளோடு கோட்பாட்டு ரீதியாகவும் அனுபவரீதியாகவும் முரண்பட்டிருந்த சிலரது படைப்பு முயற்சிகளில் இந்தப் போக்கைக் காணலாம். மரபின் எதிர்மறைக் கூறுகளோடு கோட்பாட்டு ரீதியில் முரண்பட்டிருந்தவர்கள் அனுபவ ரீதியில் உடன்பாடான நிலையை மேற்கொண்டதற்கும் அனுபவ ரீதியில் முரண்பட்டிருந்தவர்கள் கோட்பாட்டு ரீதியில் உடன்பட்டதற்கும் நம்மிடையே உதாரணங்கள் உண்டு. நவீன தமிழ் படைப்பிலக்கிய முயற்சிகளை இயங்கியல் ரீதியில் பரிசீலித்தால் இதை இன்னும் விரிவாக அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கட்டமைப்புக்குள்ளிருந்து கொண்டு அதன் எல்லைக்குட்பட்ட வாழ்க்கையை கட்டமைப்புக்குள்ளிருந்து கொண்டு அதற்குப் புறத்தே உள்ள வாழ்க்கையை தமது படைப்புக்களுக்கான இயங்குதளமாக எடுத்துக் கொண்டவர்கள், கட்டமைப்பிலிருந்து வெளியேறி அதன் எல்லைக்கப்பாலிருந்து அதைக் கடுமையாக விமர்சித்தவர்கள், வெளியேறுவதற்கான முனைப்போடு அதன் விளம்பில் நின்று தத்தளித்தவர்கள் என எண்ணற்ற முனைப்புக்களை தமிழ் படைப்பிலக்கியத் துறையில் அடையாளம் காணமுடியும். மேற்குறிப்பிட்ட சகல வண்ணங்களையும் தனது ஆளுமையின் மீது வரைந்து கொண்டவர் புதுமைப்பித்தன். கட்டமைப்பிற்குட்பட்ட, அதிலிருந்து வெளியேறிய, அல்லது வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்வைத் தனது படைப்புக்களில் சித்தரித்தன் மூலம் அதன் மீதான கூர்மையான விமர்சனங்களை முற்றொருமையுடன் முன்வைத்த படைப்பாளுமைகளில் நிகரற்றவர் புதுமைப் பித்தன். கட்டமைப்பிலிருந்து தன்னை முற்றாகத் துண்டித்துக் கொண்டு வெளியேறி, அதற்கு வெளியே சிதறிக் கிடக்கும் உதிரிகளின் வாழ்க்கையைத் தன்னுடையதாக மாற்றிக் கொண்டு அதையே தனது மொத்தப்படைப்புலகுக்குமான இயங்குதளமாக மாற்றிக் கொண்ட ஜி. நாகராஜன் இருண்ட வண்ணங்களைப் பூசிக்கொண்டு தனது ஆளுமையை உருக்குலைத்துக் கொண்டவர். கட்டமைப்பின் சுதந்திரமின்மைக்கும் பொய்மைக்கும் வக்கிரங்களுக்கும் ஆபாசங்களுக்கும் அபத்தங்களுக்குமான சாட்சியங்களாக அந்த மனிதர்களின் உருக்குலைக்கப்பட்ட உடல்களை முன்வைத்தவர் நாகராஜன்.
கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட உதிரிகள் அதனோடு ஏற்படுத்திக் கொள்ளும் அபத்த உறவுகளும், கட்டமைப்பின் இயக்கத்திற்கும் திசைவழிக்கும் எதிரான இயக்கப்போக்கையும் திசைகளற்ற பயணத்தையும் கொண்ட வாழ்வின் அக மற்றும் புறக்கூறுகளும் ஏறத்தாழ இவரது எல்லாப்படைப்புக்களிலும் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உதிரி வாழ்வின் கதியிலிருந்து சுயேச்சையாக உருவாகும் உள்ளீடற்ற குடும்ப அமைப்பு, அதன் உள்ளும் புறமுமான பாலியல் சார்ந்த உறவுகள், இருத்தல் சார்ந்து உருவாகும் மதிப்புக்கள், கட்டமைப்பின் அறவியல் கோட்பாடுகளையும், இயக்க ஒழுங்கையும் அர்த்தமற்றதாக்கும் வாழ்வின் மேலாண்மையுடன் நடத்தும் போராட்டங்கள். அவற்றின் வெற்றி தோல்விகள் போன்ற எண்ணற்ற கூறுகள் சார்ந்த விவாதங்களை உள்ளீடாகக்கொண்ட நாகராஜனின் படைப்புக்கள், உள்ளீடுகளின் துருத்தல்களுக்கு இடந்தராத கச்சிதமான வடிவ ஒழுங்கைக் கொண்டிருப்பவை.
குடும்ப அமைப்பின் தேவைகள் குறித்தும், அவற்றின் அறவியல் அடிப்படைகள் குறித்தும் தற்சார்பு நிலையோடு ஓரளவுக்கு வெளிப்படையாக விவாதிக்கும், குறத்திமுடுக்கு மேற்குறிப்பிட்ட அம்சத்திலிருந்து சற்று மாறுபட்ட அவரது படைப்பு.
கட்டமைப்பின் அடிப்படையான அலகு ஒன்றைத் தனது பிழைப்பாதாரமாகக் கொண்ட குறத்தி முடுக்கின் நாயகன், கட்டமைப்பின் அடிப்படைகள் மீதும், நிறுவனங்கள் மீதும் அவநம்பிக்கை கொண்டவனாக (இந்த அவ நம்பிக்கை கோட்பாடு சார்ந்ததா, அனுபவம் சார்ந்ததா என்பது பற்றிய குறிப்புக்கள் நாகராஜனின், கலைப்பார்வை பற்றிய ஆரோக்கியமான அம்சத்திற்குச் சான்று) கட்டமைப்பிற்கு வெளியே உள்ள தங்கத்தோடு கொள்ளும் பாலியல் உறவையும் காதலையும், கந்தன் மீனாவோடு கொள்ளும் பாலியல் உறவோடும் காதலோடும் ஒப்பிட்டுப் பார்த்தால், நாகராஜன் இந்த இரு நாவல்களையும் மையமாக வைத்து சில ஆச்சரியமான விவாதங்களை எழுப்பியிருப்பது புரியவரும். தனது பழைய வீட்டை விற்கு, அந்தப் பணத்தில் ஒரு டாக்கி வாங்கி, ஒரு ஆயிரத்தை நூறு ரூபாய் கொடுத்து மீனாவைச் சொந்தமாக்கிக் கொண்டு, வாழ்க்கையில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டுமென்ற கட்டமைப்பிற்கு இசைவான கனவுகளோடு தொடங்குகிறது. சன் தியேட்டரில் மாதம் அறுபது ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தில், கேட் கீப்பராக இருக்கும் கந்தனின் பயணம். முதன் முதலில் மீனாவை கோயிலில் சந்திக்கிறான், கந்தன். (கோயிலில் நின்று கொண்டிருந்தான், கந்தன் –என்னும் கனவின் சித்தரிப்பை முதல்வரியாகக் கொண்ட நாவலில், இதை ஒரு தற்செயலான நிகழ்வாகக் கொள்ளமுடியாது) அவள் கோயிலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறாள், அவன் கோயிலுக்குள் நுழைகிறான். எதிரும் புதிருமான வெளியில் இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. அவளைப் பார்த்ததும், ‘இத்தனை காலமா எங்க இருந்த நீ’ என்று கேட்கிறது, கந்தனின் மனம். (நாவலில் வேறு எந்த இடத்திலும் அவனது மனம் சார்ந்த இயக்கம் இவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்யப்படவில்லை) அவன் அவளைப் பின் தொடர்கிறான். அவனுக்கு வழிகாட்டுவது போல, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே, அவள் முன் செல்கிறாள், பல தெருக்களையும் சந்துகளையும் கடந்து, சோலைப்பிள்ளை தொழில் நடத்தும் வீட்டுக்குள் நுழைகிறாள். மீனா. படியேறி நின்று கொண்டு, அவனை விபச்சாரத்துக்கு அழைக்கிறாள். அவளது அழைப்பை மறுத்துவிட்டு, சோலைப் பிள்ளையிடம் சென்று அவளைக் கல்யாணம் செய்து கொள்ளும் தனது விருப்பத்தை வெளியிடுகிறான், கந்தன். பேரம் படிகிறது. அவளிடம் இருந்து பேசிவிட்டுச் செல்லும்படி சோலைப் பிள்ளை சொல்லும் போது வெட்கமும் சற்றே பதற்றமும் அடைகிறான், கந்தன்.
கோவிலில் நிகழும் முதல் சந்திப்பும், பார்த்த கணத்தில் கந்தன் அவள் மேல் கொள்ளும் காதலும், அவன் மனம் எழுப்பும் கேள்வியும், முன் செல்லும் அவளைப் பின் தொடர்ந்து அவன் மேற்கொள்ளும் சிறு பயணமும், பயணத்தின் முடிவில் அவள் அவனைக் கொண்டு சேர்க்கும் இடமும் விழிப்பு நிலையையுடைய வாசகனை உலுக்கக் கூடியவை. மிகக்குறுகியகால எல்லைக்குள் நடந்து முடிந்து விடும், இச்சம்பவம் வாழ்வின் தார்மீக மதிப்பை சரிவை நோக்கி இட்டுச் சென்ற பின்னோக்கிய பயணமாக அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான கலாபூர்வமான குறிப்புக்களை நாகராஜன் விட்டுச் சென்றுள்ளார். விபச்சாரத்துக்கான மீனாவின் அழைப்பும், கல்யாணம் என்ற சம்பிரதாயமான ஏற்பாட்டுக்கு முன்னதாக புணர்ச்சியை மறுக்கும் கந்தனின் மன அமைப்பும், சோலைப் பிள்ளையிடம் அவன் நடத்தும் உரையாடலும், அவன் கொள்ளும் வெட்கமும் பதற்றமும், வாழ்வு பற்றிய அவனது எளிய ஆசைகளை குறித்த சித்திரங்களைக் கொண்டதுமான சம்பவ அடுக்குகள், வாசக மனதின் கனவின் சிறகுகளை, பதற்றமே இல்லாமல் நிதானமாகப் பிடுங்கிப் போடும் இரக்கமற்ற செயல்பாடு.
கோயில், திருமணம், பாலுறவு இவற்றுக்கிடையேயான, மாயப் பண்புடைய இணைப்பை விபச்சாரி மீனாவும், தரகர் சோலைப் பிள்ளையும், துண்டிக்கிறார்கள். கந்தனின் பணத்தைத் ‘தாப்பாப்’ போடும் சோலைப் பிள்ளை, டாக்சி வாங்கும் கந்தனின் கனவுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார். மீனாவைக் கல்யாணம் செய்து கொள்வதென்று தீர்மானித்த மூன்றாம் நாள், கந்தனின் தாய் மாரடைப்பால் செத்துப் போய்விடுகிறாள். சம்பவ அடுக்கின் கடைசிவரியாக இதை எழுதி இந்த நிகழ்வுக்கு அழுத்தம் தருகிறார் நாகராஜன். மீனாவைக்கல்யாணம் செய்து கொள்வதென்ற கந்தனின் முடிவும், சொர்ணத்தம்மாளின் மரணமும், மரபான நம்பிக்கை சார்ந்த, புதிர்த்தன்மை கொண்ட கண்ணியால் இணைக்கப்படுகின்றன. வாழ்வின் கதி கந்தனை ஒரு பெண் தரகனாக மாற்றுகிறது. மீனா ஒரு விபச்சாரியாகவே நீடிக்கிறாள். கந்தன் மூலமாகப் பெற்றெடுத்த குழந்தைகளில் ஒன்று, அகாலத்தில் செத்துப்போய்விடுகிறது. மற்றொன்று கண்காணாத இடத்துக்கு ஓடிப் போய்விடுகிறது. வாழ்வின் புதிர், விடுவிக்க முடியாததாத் தொடர்ந்து கொண்டிருக்கிறது அவனுக்கு. கனவில் வரும் அம்மாவின் சாயலைக் கொண்ட தெய்வச் சிலை அவனைப் பார்த்துச் சிரிக்கிறது, கண்களில் நீர் துளித்திருக்கிறது. அழுவது போலவும் தோன்றுகிறது. சிலையின் மார்பிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வழிந்து பொத்தென்று, தரையில் விழுகிறது. மறுகணம் அது ஒரு கேப் துப்பாக்கி போல் அவன் காதுகளில் வெடிக்கிறது. புரண்டுபடுக்கும் கந்தன் மீனாவை அணைக்கக் கைகளை நீட்டுகிறான். நம்பிக்கை சார்ந்த, பிம்பமாக தாயின் இயக்கம், கந்தனுக்குள் ஒரு புதிராக நீடித்துக் கொண்டே இருக்கிறது.
ஜிஞ்சர் போதையில், காலை நேரத்தில் மீனாவுடன் புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான், கந்தன். தனது வாடிக்கையாளர்களின் பாலியல் நடத்தை பற்றி ஒருவித லயிப்போடு அவனுக்குச் சொல்லிக் கொண்டே புணர்ச்சியில் ஈடுபடுகிறாள், மீனா. கந்தன் அந்த லயிப்பிலிருந்து விலகியிருக்கிறான். அவனுக்குப் பாலியல் கிளர்ச்சியூட்டியது, ஒன்றையொன்று விரட்டிக் கொண்டிருந்த இரு அணில்கள். ‘அன்னைக்கு அணிலுங்க, இன்னைக்கு நாய்ங்க’ என்று அவனது மந்தய பாலியல் கிளர்ச்சிக்கான காரணம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. புணர்ச்சியின் போது கந்தன் ஈடுபாட்டுடன் பேசுவது யானைகளின் புணர்ச்சியைப் பற்றி. ‘கண்றாவி’ என்கிறாள் மீனா. ‘அப்ப அணில்கள நெனச்சுக்க’ என்று அவளிடம் சொல்கிறான் கந்தன். மீனாவோ அணில்களுக்குப் பதில் ‘அக்கா’ வீட்டுக்கு வரும் ‘டீஷண்டான’ ஆட்களை நினைத்துக் கொள்கிறாள். ‘அதிலும் காலேஜ் ஸ்டூடன்ஸ் வந்தா குஷியா இருக்கும்’ புணர்ச்சி முடிந்தவுடன் அவள் விசும்புகிறாள். சிகரெட் ஒன்றைப் புகைத்து விட்டு அவன் குளிக்கப் போகிறான். அவன் குளித்து முடியும்வரை அவளது ஒப்பாரி போன்ற அழுகை அவனுக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
தெய்வங்களின் உலகில் சஞ்சரிக்கும் ஆன்மாவையும் மிருகங்களோடு புரளும் உடலையும் கொண்டிருக்கிறான் கந்தன். ஆன்மா, உடல் இரண்டின் அடையாளங்களும் மறுக்கப்பட்டவளாக இருக்கிறாள் மீனா.
“இதுக்கு ஒரு நல்ல எற்பாடு செய்யனும்” எனத் தீர்மானித்தவாறே அவளுடனான முதல் சந்திப்பை நினைவுகூர்கிறான் கந்தன். பிறகு அவள் பேச்சியக்காவிடமிருந்து கடனாகப் பெற்றுவரும் சில்லறையை எடுத்துக்கொண்டு விறகுக்கடைக்கு ஜிஞ்சர் குடிக்கப்போகிறான். திரும்பும் வழியில் அவனைக் கடந்து போகும் பலூன் விற்கும் கிழவன் அவனுக்கு அவனுடைய செத்துப்போன மகள் கீதாவை நினைவூட்டிச் செல்கிறான். பிறகு ஜிஞ்சர் போதையில் மீனாவுடன் புணர்ச்சி. புணர்ச்சி முடிந்தவுடன் காணாமல் போன மகளை நினைத்து அழும் மீனாவின் கேள்வி, அதற்குப் பதிலளிக்காமல் கத்தியை இடுப்பில் செருகிக்கொண்டு வெளியேறும் கந்தன். கனவு, யதார்த்தம், கோயில், விபச்சார விடுதி, கணவன், தரகன், தகப்பன், மகன், குழந்தை, தெய்வம், மிருகம், சாமியார், போலீஸ், வக்கீல், வைப்பாட்டி, தீவிரவாதி, வேதப்புத்தகத்தின் வசனங்கள், சினிமாத் தியேட்டர், கோர்ட், சாராயக்கடை என்று காலமும் வெளிகளும் ஒழுங்குகளும் திட்டமிட்ட, குழம்பிய கதியில் தாறுமாறாக இந்த நாவலுக்குள் அடுக்கப்பட்டுள்ளன.
கந்தன், மீனாவைத் தவிர பிற பெண்களுடன் உறவு கொண்டிருந்தானா என்பதற்கான குறிப்புகள் நாவலின் வெளியில் இடம்பெறவில்லை. முக்கனின் பெண்டாட்டி ராக்காயி, தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்த முத்துச்சாமியின் ‘காதலி’, செட்டியாரின் ஆங்கிலோ இந்தியன் வைப்பாட்டி ‘ஜரீன்’, கந்தனே அசந்து போகும் முலைகளைக் கொண்ட அயிசாபீபி, உள்ளங்கையைச் சுரண்டிய அன்னக்கிளி தவிர நாவலின் எழுதப்பட்ட வரிகளுக்கிடையேயான நுண்ணிய பிராந்தியங்களுக்குள் உலவும் எண்ணற்ற விபச்சாரிகள் என எல்லாப் பெண் பாத்திரங்களுடனும் ஒரு திட்டவட்டமான இடைவெளியை உருவாக்குகிறான் கந்தன். அவனுடைய காதலைப் போலவே காமமும் புதிர்கள் நிறைந்த இயக்கமாக இருக்கிறது. மீனாவின் உடல் மீது உடைமைத் தன்மையற்ற, நிபந்தனைகளைச் சுமத்தாத காதல் கந்தனுடையது. காதலைப் பற்றிய, ஆண் பெண் உறவைப் பற்றிய கட்டமைப்பின் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள், இவை. மீனா கந்தன் பால் கொண்டுள்ள உறவு காதலாலோ காமத்தாலோ கட்டுப்படுத்தப்பட்டதல்ல. காணாமல் போய்விட்ட தனது மகன் சந்திரனின் நினைவுகள் சார்ந்து மட்டுமே அவள் தனது உணர்வுகளை அழுத்தமாக வெளியிடுகிறாள். கந்தனுடனான ஒரு பகல் நேரப்புணர்ச்சியின் முடிவில், அவள் சந்திரனை நினைத்துக் கொண்டு அழுகிறாள். புணர்ச்சிக்கும், குழந்தைக்குமிடையேயான இணைப்பை, புணர்ச்சியைத் தொழிலாகக்கொண்ட ஒருத்தியை முன் வைத்து விவாதிக்க முற்படுகிறார், நாகராஜன். நாவலின் பிற பக்கங்களிலும், சிறுகதைகளிலும் புணர்ச்சி பற்றிய விரிவான சித்தரிப்புக்களை கவனமாகத் தவிர்க்கும் நாகராஜன், கந்தன் மீனாவுடைய மேற்குறிப்பிட்ட பகல் நேரத்திய புணர்ச்சியை, கிட்டத்தட்ட கிளர்ச்சியூட்டும் முறையில் விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரித்துக் கொண்டு போகிறார். தன்னுணர்வை இழந்து உணர்ச்சியின் பாதுகாப்பற்ற பிரதேசத்துக்குள் தடுமாறி நிற்கும் வாசகனின் மீதான இரக்கமற்ற தாக்குதலாக மீனாவின் விசும்பலும், ஒப்பாரியை ஒத்த அழுகையும் கேட்கிறது. ‘வடக்கேயிருந்து சோலைப்பிள்ளையால் அய்நூறு ரூபாய் கொடுத்துக் கூட்டி வரப்பட்டவள் என்பதைத் தவிர அவளைப்பற்றிய வேறு குறிப்புகள் எதுவும் நாவலில் இல்லை. கந்தனுக்கு சொர்ணத்தம்மாள் போல, மீனாவுக்கு யார் இருந்தது? அவளை சோலைப் பிள்ளையிடம் அய்நூறு ரூபாய்க்கு விற்றது? அவளை இங்கு கொண்டு வந்து சேர்த்த வாழ்க்கையின் துவக்கப் புள்ளி எது? என்பன போன்ற கேள்விகளை. இவை குறித்த ஆழ்ந்த இரக்கமற்ற மௌனத்தின் வாயிலாக வாசகனின் மனதில் எழுப்பிக் கொண்டே கடந்து செல்கிறார் நாகராஜன்.
தனது சுயம் சார்ந்த எளிய அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டங்களையும், அவற்றின் சிறிய வெற்றிகளையும், தோல்விகளையும் பதற்றமின்றி எதிர்கொள்ளும், வாழ்வியக்கம் தங்கத்தினுடையது. இழப்புக்களையும், தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு, வாழ்வின் கதியை புகார்களின்றி ஏற்றுக் கொள்ளும் தங்கம், குறத்தி முடுக்கின் நாயகனின் மீது கொள்ளும் காதலிலும் மேற்குறிப்பிட்ட புதிர்த் தன்மை செயல்படுவதைக் காணலாம்.
கந்தனின் பயணத்திற்கு எதிர் திசையிலான பயணம், குறத்திமுடுக்கின் நாயகனுடையது. நாவலின் கட்டமைப்பும், நாயகனின் எதிர்திசை பயணத்திற்கு இசைவான தன்மைகொண்டது. கந்தன் மீனாவை கோயிலில் சந்திக்கிறான். முடிவில் ஒரு விபச்சாரியாக அடையாளம் காட்டப்படுகிறாள். தங்கம் வாசகனுக்கும் நாயகனுக்கும் ஒரு விபச்சாரியாவே அறிமுகப்படுத்தப்படுகிறாள். மீனா கடவுளால் அறிமுகப்படுத்தப் பட்டவள் (சாராம்ச ரீதியில்) தங்கம் ஒரு பெண் தரகனால் அறிமுகப்படுத்தப்பட்டவள். (சாராம்ச ரீதியில் மனிதனால்) கணநேர பிரமைக்குப் பின்னர் மீனாவின் அடையாளம் மாறுகிறது. நடைமுறைத் தேவைகளும், கற்பிதங்கள் உருவாக்கும் இழுவிசையும் ஒன்றிய ஒரு இயக்கத்தின் தர்க்கபூர்வமான வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் தங்கத்தின் அடையாளம் மாறுகிறது. ஒன்றுமறியாத ஒரு குழந்தையின் சாயலைப் பெறுகிறாள். பாலுணர்வின் பிரதிபலிப்பாகவே அவனது மனக்கண் முன்பு நின்று கொண்டிருந்தவளை, சிறிதும் காம உணர்ச்சியற்றவனாகக் கட்டித் தழுவுகிறான். முதன் முதலாக அவனது மனம் அப்படியொரு உணர்ச்சியை அனுபவிக்கிறது. அவன் கண்களிலிருந்து, நீர் பெருகுகிறது. தனக்காகவும், அவளுக்காகவும் அவன் கண்கள் வடிக்கும் கண்ணீர். குழந்தைகளாகிவிட்ட இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு குறத்திமுடுக்கை விட்டு வெளியேறுவதான பிரமை. தர்க்க பூர்வமான வளர்ச்சியின் விளைவுதான் என்றாலும் இதுவும் ஒரு பிரமை. கந்தனின் பிரமையைப் போலவே இதுவும் கணநேரமே நீடிக்கிறது. ‘கேசு முடிஞ்சதும் நாம ரெண்டுபேரும் எங்காவது போயிடலும், சாகிறவரைக்கும் இரண்டு பேரும் பிரியாம இருக்க முடியும்’ என்று அவளிடம் சொல்லி முடித்ததுமே திடுக்கிட்டுப் போகிறான். அவனது வாக்குறுதியே அவனை அச்சுறுத்துகிறது. தங்கத்தைத் தோளிலே சுமந்து கொண்டு, ஒரு மேட்டிலே ஏறிச்செல்வது போன்ற மனப்பிராந்தி ஏற்படுகிறது, அவனுக்கு. பட்ட கடனுக்குப் பிரதியாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற தெளிவில்லாத அவனது கனவும், அவனது பாலியல் தேவைகளை பூரணமாக நிறைவேற்றும் தங்கத்தின் உடலைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்ற நடைமுறைத் தேவையும் இணைந்த ஒரு முனைப்பின் வெளிப்பாடாகவே, அவன் அவளைக் கல்யாணம் செய்து கொள்வதென்ற முடிவு அமைகிறது. கந்தனின் காதலைப் போல அவனுடைய காதல் புதிரானதோ உடமைத் தன்மையற்றதோ அல்ல. தங்கத்தின் வீட்டிலிருந்து ஒரு இளைஞன் வெளியேறுவதை அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. திரும்பிவிடலாமா என்று ரேழி வரை சென்று யோசிக்கிறான். ‘வந்தவரு என்னப் பாக்க வரலே என் தங்கம் அவனை சமாதானப் படுத்த வேண்டியிருக்கிறது. ‘துப்பு துலக்கற மாதிரி’ பல கேள்விகளைக் கேட்கிறான்.
மீனாவின் மீது கொண்டுள்ள காதலுக்குக் காரணங்களோ நிபந்தனைகளோ கந்தனிடத்தில் இல்லை. தர்க்கம் சாராத ஒரு வகை லயிப்பு அது. கோவில் என்ற தத்துவவெளி இந்த லயிப்பை உருவாக்கியிருக்கலாம். தங்கத்துக்குக் குறத்திமுடுக்கின் நாயகன் மேல் ஏற்படுவதும் ஒருவகை லயிப்புதான். அவள் அவனைத் தன்னுடைய வீட்டில், விபச்சார விடுதியில் சந்திக்கிறாள். சந்திப்பின் பின்புலமான வெளி வேறுபட்டிருப்பது போலவே, இருவரது லயிப்பும் பண்பு ரீதியில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகிறது, லயிப்புடன் கூடவே ஒரு விழிப்பு நிலையும் தங்கத்திடம் செயல்படுகிறது. ‘நடந்தது, நடக்காம இருந்திருக்கனும்’ என்ற ஆசையை (அவருடைய ஒரே ஆசை அது) கொண்டிருக்கிற, தங்கத்துக்கு அவளது நட ராசனின் குடும்பத்தைப் பாழ் படுத்திவிட்ட குற்ற உணர்வு ஆழமாகச் செயல்படுகிறது. ‘இதுக்கு என்னங்க செய்யறது?’ என்று அவள் கேட்பது கூட, அவள் லயிப்புக் கொண்டிருந்த நாயகனிடம் தான். கீதாவின் பலூனை உடைத்துவிட்ட கந்தனுக்குள் செயல்படும் குற்ற உணர்வை ஒத்தது. நடராசனின் வீட்டுக்குள் பிடிவாதமாக நுழையும் தங்கத்தைக் கொள்ளிக்கட்டையால் சுடுவது கூட நடராசனின் குழந்தைதான். குடும்பம் என்னும் அமைப்பிற்கும் குழந்தைக்குமுள்ள இணைப்பின் முடிச்சை நாகராசன், இறுக்கிக் கொண்டே போகிறார். ‘இதுக்கு ஒரு நல்ல ஏற்பாடு செய்யனும்’ என்று அந்தோனி பிள்ளையிடம் உதவி கேட்டு நிற்கும் கந்தனுக்குக் கூட லயிப்பிலிருந்து விடுபடுவதற்கான ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது விழிப்பு நிலை அல்ல. அவனால் தனது கனவிலிருந்து மீனாவை விலக்க முடியாமல் போகிறது. ‘ஒங்க தலையெழுத்தில்ல, ஒங்க பயம்’ என்று வாக்கப்பில் அடைபட்டிருக்கும், அவனது கனவில் வந்து கேலி செய்கிறாள், மீனா.
தங்கத்தைத் தனது கனவிலிருந்து விலக்க முடியாமல் தத்தளிக்கிறான் குறத்தி முடுக்கின் நாயகன். அவள் மடியில் படுத்துக் கொண்டிருப்பதாகவும், அவளோடு பேசுவதாகவும், அவள் தனது முடியைக் கோதிவிடுவதாகவும் நினைத்துக் கொள்கிறான். (கனவு அல்ல நினைவு) அவளைக் கட்டிணைப்பதாக நினைத்துக் கொண்டு தலையனையைக் கட்டிக்கொள்கிறான். அவனுடனான பழைய உறவுகளை முற்றாகத் துண்டித்துக் கொண்டுவிட்ட தங்கம் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாள். ‘எங்கிருந்து உனக்கு இத்தனை குளு குளுப்பு, இத்தனை வளவளப்பு, இத்தனை மென்மை இத்தனை புதுமை எல்லாம் எங்கிருந்து வந்தன? ‘என்று அவளது உடல் சார்ந்த லயிப்பில் மூழ்குகிறான். கழுத்தில் புதிய தாலிச்சரடை அணிந்து கொண்ட தங்கம், மெல்ல அவனிடம் வருகிறாள். அவனது கன்னிமைகளை மூடி ‘தூங்குங்கள்’ என்று சொல்கிறாள். லயிப்பு அல்ல, தர்க்கங்களின் கோணல் மானலான பாதையைப் புரிந்து கொள்ள முடியாததனால் உண்டாகும் தத்தளிப்பு. லயிப்பு அல்ல. தங்கத்தின் மீதான அவனது காதல் தர்க்கங்களுக்குட்பட்டது. நிபந்தனைகளை உள்ளடக்கியது. பெரிதும் உடல் சார்ந்தது. பாலியல் ரீதியிலான நிறைவு அவனுக்குப் பிற பெண்களிடமிருந்தல்லாமல், தங்கத்திடமிருந்தே பூரணமாகக்கிடைக்கிறது. (இது பற்றிய தெளிவான குறிப்புக்கள் நிறைய இடம் பெற்றிருக்கின்றன) கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை படிப்படியான தர்க்கபூர்வமான வளர்ச்சியின் விளைவு. முதலில் ஒரு ஆறுமாத காலம் அவளோடு சேர்ந்திருக்கவே விரும்புகிறான். சமூக பகிஷ்காரத்திற்குள்ளான ஒருவனின், மன அமைப்பில் செயல்படும் இயல்பான பலவீனமே அவனை, தங்கத்தைக் கல்யாணம் செய்து கொள்ளும் முடிவைநோக்கி இழுத்துச் செல்கிறது. தவிர அவனைப் பொருத்தவரை ஒரு நிரந்தரமான உச்சபட்ச இன்பத்தைத் தரக் கூடிய பாலியல் துணை என்கிற ரீதியிலேயே, அவளைக்கல்யாணம் செய்து கொள்ளும் முடிவு அமைகிறது.
தங்கத்துக்காக கோர்ட்டில் சாட்சி சொல்வது கூட அவள் தன்னைக் கல்யாணம் செய்துகொள்வாள் என்ற நம்பிக்கையின் விளைவாகத்தான். காமத்தின் மூலமாகத் தான்அவள் மீது பெற்றிருந்த வெற்றியை காதலின் மூலமாக, நிலைநிறுத்தும் ஒரு முயற்சி. அவமானத்தைச் சகித்துக் கொள்ளும் ஒரு காரியமாகவே, அவளுக்காக கோர்ட்டில் சாட்சி சொல்லும் தனது செயல் அவனுக்குத் தோன்றுகிறது. அவனை நிராகரித்து விட்டு ஓடிப் போகும் தங்கம் அவனைத் தோல்வியடையச் செய்கிறாள். காதல் பற்றிய அவனது புரிதலைக் கண்டு, வயிற்றுவலிக் காரியைப் போல குனிந்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அபராதம் கட்டி சுலபமாகத் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை நிராகரித்து, கேஸ் நடத்திப் பார்த்து விடுவது என்று மல்லுக்கட்டும் தங்கத்தின் சுய அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டத்தை அவனால் புரிந்து கொள்ளவே முடியாமல்போகிறது.
வாலிபர்களை விபச்சாரத்துக்கு அழைத்த அழகி கைது–என்று வக்கிரமாகச் செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையின் நிருபரான அவனுக்கும், அத்தகைய அத்தகைய செய்திகளில் செயல்படும் ஆபாசத்தை நமது ரசனைக்கான தீனியாக ஏற்றுக் கொண்டுவிட்ட நமக்கும் நமது மதிப்பீடுகளுக்குக்கெதிரான தங்கத்தின் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொள்ள முடியாமல் போவது ஆச்சரியமானதல்ல. கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் மனோபாவத்திற்கும், கட்டமைப்பின் மனோ பாவத்திற்கும் இடையேயான இந்த இடைவெளிதான், நாகராஜனின் படைப்புக்களுக்கும் தமிழ் வாசக மனதிற்குமிடையேயான இடைவெளியோ என்று தோன்றுகிறது.
தங்கம் என்ற வேசிக்குள் செயல்படும் சுயமரியாதை உணர்வை, அவளைக் கூட்டிக்கொடுத்து அவளிடம் வரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கும் அவளுடைய அத்தான் நடராசன் மேல் அவள் கொண்டிருக்கும் நம்பிக்கையை, மரியாதையை, அவளது மனதின் அடிப்பரப்பில் ஒரு புழுவாக நெளிந்து கொண்டிருக்கும் காலின் விசையை, தனக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் நாயகனின் மனிதாபிமானத்தை நிராகரிக்கும் அவளது நடத்தையை, வேசியின் கால்களை முத்தமிடும் வாடிக்கையாளனை, (நாளை மற்றுமொரு நாளே) ‘உன் அம்மா உன்னைத் தனது சுயநலத்துக்காகச் சீரழித்துக் கொண்டிருக்கிறாள்’ என்று (முலையைத் தடவிக் கொண்டு) சொல்லும் ஒரு வாடிக்கையாளனின் மனவிகாரங்களுக்குப் பலியாகாமல், அம்மாவிடம், ‘சமையல் கட்டில் போய் படித்துக்கொண்டிருக்க’ அமைதி கேட்கும் பள்ளிச் சிறுமியை, அவளுக்கும் அவளைக் கூட்டிக்கொடுக்கும் தாய்க்குமிடையே நிலவும் நுட்பமான உறவை (பூர்வா சிரமம்) கொனேரியாக்கிருமிகளிடம் நாட்டு மருந்துகளின் உதவியோடு போராடி வாழயத்தனிக்கும் ரோகினியால், ஒரு நோய் பிடித்த வாடிக்கையாளன் இழைக்கும் அவ மானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனதை, துக்கம் கேட்க வந்தவனிடம் விபச்சாரம் செய்யும் அவருடைய அக்காவை, துக்கம் கேட்ட கையோடு புணரத் தலைப்பட்ட வாடிக்கையாளனை. அவனது காமத்தை (துக்க விசாரணை) கயிற்று நுனியில் உயிரைத் தொங்க விட்டு விட்டு அய்ந்து ரூபாய் கொடுத்து வெறுமனே அவளது அழகை எட்டி நின்று ரசித்துவிட்டுப் போகிற எட்டுமுழ வேட்டியும் டெர்லின் சட்டையும் அணிந்த ஒரு வாடிக்கையாளனின் வருகை பற்றிய, கனவில் தன்னை இழக்கும் ஒரு சிறுமியை (எட்டு முழ வேட்டியும், டெர்லின்சட்டையும் அணிந்த மனிதர்) என்று நாகராஜன் படைத்துக் காட்டும் எந்தவொரு உலகையும் புரிந்து கொள்ள முடியாத படியான கடக்க முடியாத இடைவெளியை நாகராஜனின் படைப்புக்களில், கண்டு தமிழ்வாசக மனம் தடுமாறுவது தவிர்க்க முடியாதது.
ஒரு படைப்பிலக்கியம் உருவாக்கும் இத்தகைய இடைவெளிகளை எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்காமல், ஒரு நேர்மையான வாசக மனம் உருப்பெற முடியாது. வாழ்வியக்கத்தைத் தத்தம் தத்துவக் குடுவைகளுக்குள் திணித்து, மொண்ணையாகப்புரிந்து கொண்டிருக்கும், தமிழ் அறிவுலக மேதாவிகளால், சலவை செய்யப்பட்ட, முளைச்சதையை தனது மண்டைக்குள் சுமந்து கொண்டு திரியும் தமிழ் வாசகன், உருகிவழியும் தனது மூளையின் துர்நாற்றத்தைத் தமிழ் படைப்புலகின் மீது கவியச் செய்து, அதை நாறடித்துக் கொண்டிருக்கிறான். இத்தகைய வாசகச் செயல்பாடு, நாகராஜன் எழுப்பும் கேள்விகளைப் புரிந்து கொள்வதிலிருந்தும், மதிப்பீடுகளுக்கெதிரான நடைமுறையைக் கட்டமைப்பிற்குள்ளும், நடைமுறையின் தாக்குதலை மீறிய மதிப்புக்களுக்கான போராட்டத்தை கட்டமைப்புக்கு வெளியேவும் இனம் காண்பதையும் தடை செய்யக்கூடியது.
நாகராஜன் படைப்புக்கள் உருவாக்கும் இந்த இடைவெளிகளையே சாதகமாக்கிக்கொண்டு, அவர் படைத்துக் காட்டும் வாழ்வின் இறுக்கத்திலிருந்தும், கேள்விகளின் உக்கிரத்திலிருந்தும் எளிதாகத் தப்பிச் செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. தனக்கு அன்றியப்பட்டதொரு வாழ்வின் நெருக்கடிகளை, படைப்பிலக்கியத்தின் வழியே தெரிந்துகொள்ளும் வாசகன் அவற்றைத் தன்னுடைய நெருக்கடிகளாகப் புரிந்து கொள்வதற்குப்பதில், அவற்றை அந்தச் சூழலுக்குரிய இயற்கையான நிகழ்வுகளாகப் புரிந்து கொள்வது, ஆசுவாசம் தரக்கூடியது. தமிழின் அறிவுலக மனிதா பிமானிகள், தங்கள் கோணிப்பைகளில் சேகரித்து வைத்திருக்கும், மனிதாபிமானத்தோடு முன்வரலாம். குறத்தி முடுக்கில் வசிக்கும் விபச்சாரிகளுக்கு இலவசக் காண்டம் விநியோகிக்கும் யோசனையை, சுற்றுச் சூழலில் நாட்டமுள்ள யாராவது ஒரு அறிவு ஜீவி அரசுக்குப் பரிந்துரைக்கலாம். குறத்திமுடுக்கின் குறுகலான சந்துகளைச் சுத்தம் செய்வதற்கு, ஜீன்ஸ் பாண்ட்டும், டி–சர்ட்டும் அணிந்த காளைகளும், கன்னிகளும் தோளில் துடைப்பக் கட்டைகளைச் சுமந்துகொண்டு, வளைய வரலாம். புரட்சியின் உடனடித் தேவையை வலியுறுத்துவதற்கு ஆதாரமான புதியதொரு வரவாக நாகராஜன் படைப்புக்களைக் கொண்டாடலாம். தீவிர இலக்கிய தாகத்தைத் தணித்துக் கொள்வதற்கு, இனி கொஞ்ச காலம் ‘ஜிஞ்சர்’ அடிக்கலாம். யாராவது ஒரு இலக்கிய வாசகன், ஒரு அழகான இளம் வயது விபச் சாரியைக் காதலிப்பதாக ஏதாவதொரு இலக்கியக் கூட்டத்தில் அதிரடியாக அறிவிக்கலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக, வேசிகளுடனான தமது தொடர்பை, இனி கூச்சமில்லாமல் ஓரளவுக்குத் தற் பெருமையுடன் கூட ஒப்புக் கொள்வதற்கான, சூழலை இந்தத் தொகுப்பு உருவாக்கலாம். (இதையெல்லாம் கிண்டலாக எடுத்துக்கொள்பவர்களுக்கு, ஜே.ஜே. சில குறிப்புக்கள் நாவல், தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்படுத்திய பாதிப்புக்களை நினைவூட்ட விரும்புகிறேன். முல்லைக்கல் மாதவன் நாயர் ஒன்றும் மலையாளியல்லவே) இப்படி எண்ணற்ற வாய்ப்புக்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு உருவாகியிருக்கிறதெனினும், வாழ்வை வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளுக்கு ஒரு வானம் காட்டிக் கொண்டிருப்பதையும், அன்பின் பெயரால், மனிதா பிமானத்தின் பெயரால், ஒழுக்க நியதிகளின் பெயரால் வாழ்வைப் பற்றிய கட்டுக்கதைகளை பரப்பிக்கொண்டிருப்பதற்கான உரிமையையும், இந்தத் தொகுப்பு உடனடியாகத் தடை செய்கிறது. இந்தத் தொகுப்பின் முக்கியமான பயன் மதிப்பு, இதுதான்.
***
-தேவிபாரதி