Scholars
Bald heads forgetful of their sins,
Old, learned, respectable bald heads
Edit and annotate the lines
That young men, tossing on their beds,
Rhymed out in love’s despair
To flatter beauty’s ignorant ear.
All shuffle there; all cough in ink;
All wear the carpet with their shoes;
All think what other people think;
All know the man their neighbour knows.
Lord, what would they say
Did their Catullus walk that way?
-W.B. Yeats
பண்டிதர்கள்
தங்கள் பாவங்களை மறந்திருக்கும் வழுக்கையர்,
வயதான கற்றறிந்த மரியாதைக்குரிய வழுக்கையர்,
அழகின் பேதைக் காதுகளில் இச்சகம் ஓத
வாலிபர்கள் படுக்கையில் புரண்டபடி
காதலின் கிலேசத்தில் யாத்த
வரிகளைத் தொகுத்து உரை எழுதுவர்.
தளர்நடையிட்டு மசியிருமி
தரைவிரிப்பை ஜோடுகளால நைத்து
பிறர் நினைப்பதையே தாமும் நினைத்து
அயலான் அறிந்தோனையே தாமும் அறிந்தபடி
இருப்பர் யாவரும்.
கடவுளே என்சொல்வர் இவர்
இவர்தம் கட்டுலஸ் அவ்வழி வந்தால்.
-டபில்யூ. பி. யேட்ஸ்
மொழியாக்கம் பற்றிய குறிப்பு:
மொழியாக்கம் செய்யும்போது கவிதையின் ‘பொருள்’ சரியாக கைப்பற்றப்பட வேண்டும். இதைச் சொல்லும்போது கவிஞனின் நோக்கம், கவிதையின் நோக்கம், குறித்த கேள்விகள் தவிர்க்க முடியாமல் போகிறது. ஆனால், கவிஞனின் வாழ்க்கையைக் கொண்டு கவிதையின் தரத்தை நாம் மதிப்பீடு செய்வதில்லை என்பது போலவே கவிஞனின் நோக்கத்தைக் கொண்டும் கவிதையைப் புரிந்து கொள்ளத் தேவையில்லை, வாசகச் சுதந்திரம் உண்டு எனினும், மொழியாக்குனர்கள் அதை ஓரளவுக்கு மேல் கோர இயலாது.
இந்தக் கவிதையின் கைப்பிரதி, பண்டிதர்கள் அல்ல, careeristகள்தான் ஏளனத்தின் இலக்கு என்பதை தெளிவுபடுத்துகிறது. தன் கவிதைகளையே பல முறை திருத்திய யேட்ஸ் எப்படி, “edit and annotate,” என்று கேலி செய்திருக்க முடியும்? அவரது கோபம் எடிட் செய்கிறார்கள், குறிப்பு எழுதுகிறார்கள் என்பது அல்ல, மீறல்கள் இருட்டில் நடக்கின்றன என்பதுதான்.
There’ll be their life to the world’s end
To wear the carpet with their shoes
And earn respect; have no stranger friend;
And only sin, when no one knows;
Lord what would they say
Should their Catullus walk that way.
கட்டுலஸ் பச்சை பச்சையாக கொச்சை வார்த்தைகள் பயன்படுத்தி அப்பட்டமாக எழுதியவர். எனவேதான் கவிதை இருந்த என்வெலப்பின் பின்புறம், யேட்ஸ் இப்படி ஒரு குறிப்பு எழுதுகிறார் – “இந்த முடிவை நீ தேர்ந்தெடுப்பதானால், “பிரிட்டிஷ் மியூசியத்தில்,” என்று வேண்டுமானால் இதை அழைத்துக் கொள்ளலாம். எனக்கு இந்த புதிய நான்காம் வரி அவ்வளவு பிடிக்கவில்லை. புதிய பின்புலத்தில் இந்தக் கிழவர்கள் வருத்தப்படுவார்களா?” Regret என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் யேட்ஸ். கட்டுலஸ் இவர்கள் இருக்கும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு வந்தால் அவனைப் பார்த்ததும் இவர்கள் தாம் வாழ்ந்த வாழ்வை எண்ணி வருந்துவார்களா? இந்தக் கேள்வி தேவையற்றது என்பதால்தானோ என்னவோ, “And only sin, when no one knows;” என்று இருந்த அந்த நான்காம் வரியை, “If they have sinned, no one knows,” என்று மாற்றி கடைசியில் முற்றிலும் நீக்கி விட்டார்- ஆனால் இவர்கள்தம் பாபங்கள் மறையவில்லை, “Bald heads forgetful of their sins,” முதல் வரியிலேயே இருக்கிறது.
இந்தக் கவிதைக்கு ஆத்மாநாம், கல்யாணராமன், செந்தில்நாதன், முறையே படிப்பாளிகள், சான்றோர்கள்,அறிஞர்கள், என்று செய்த மொழியாக்கங்கள் இருக்கின்றன-மியூசியத்தில் என்று தலைப்பு வைக்கலாம் என்று யேட்ஸ் எழுதியதைக் கருத்தில் கொண்டு பண்டிதர்கள் என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது, “அறிவுப் புலத்தவர்,” என்றும் இருக்கலாம். அறிவுக்கும் உணர்ச்சிக்கும் உள்ள இடைவெளியைதானே இக்கவிதை பேசுகிறது?
இந்த மொழியாக்கங்களின் வெவ்வேறு சொற்தேர்வுகள் குறித்து மொழியாக்குனர்கள் தவிர பிறருக்கு அதில் ஆர்வம் இருக்காது. கவிதையின் அழகை வெளிப்படுத்தும் சில இடங்களை மட்டும் பார்க்கலாம்.
to flatter beauty’s ignorant ear- தாபத்தில் தவிக்கும் இளைஞர்கள் தூக்கம் கொள்ளாமல் தம் காதலிகளைப் புகழ்ந்து புனையப்பட்ட கவிதைகளைத்தான் இவர்கள் தொகுத்து, குறிப்புகள் எழுதுகிறார்கள். உலகில் எந்த ஒரு அழகிய பெண்ணுக்கும் தான் அழகி என்பது தெரியாமல் இருக்குமா? இருந்தாலும் இப்படி எழுதுகிறார் யேட்ஸ். கவிஞர்களின் புகழ்ச்சியுரைகள் அழகை அல்ல, தம் காதலை அறிவுறுத்துகின்றன. ‘அழகின் அறிவிலிக் காதுகள்’, என்கிறார் ஆத்மாநாம். ‘சவுந்தர்யத்தின் மடக்காதுகளை’ காண்கிறார் செந்தில்நாதன், ‘அழகின் அறியாச் செவி’ என்று யாக்கிறார் கல்யாணராமன். ‘அழகின் பேதைக் காதுகள்’ என்று திருப்தி கொள்கிறது இம்மொழியாக்கம். கவிஞர்களின் புகழ்ச்சியை நம்புவது பேதைமைதானே? ஆனால் மற்ற மூன்றுமே நன்றாகத்தான் இருக்கிறது.
All shuffle there; – என்று ஒரு வரி ஆங்கிலத்தில் வருகிறது. சீட்டுக்கட்டுகளை ஷஃப்பில் செய்வது நினைவில் வந்ததோ என்னவோ, “எல்லோரும் கூடிக்கலைவாரங்கே;” என்கிறார் ஆத்மாநாம். “யாவரும் அங்கே கால் தேய்த்து நடப்பர்;” என்று கல்யாணராமனும் “இவர்கள் எல்லோரும் இங்குமங்கும் செல்வார்கள்;” என்று செந்தில்நாதனும் மொழியாக்கம் செய்கிறார்கள். ஏன் இவர்கள் இப்படி நடக்கிறார்கள்? கவிதையின் பின்புலம், இந்தக் கவிதைக்கு ‘பிரிட்டிஷ் மியூசியத்தில்,’ என்று பெயர் வைக்கலாம், என்று யேட்ஸ் சொன்னதை கருத்தில் கொண்டால் இது எளிதில் விளங்கும். இவர்கள் இருப்பது நூலகத்தில். நடக்கும்போது சத்தம் செய்து பிறர் கவனத்தைக் கலைத்து கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளக் கூடாது என்ற அச்சம், எனவேதான் மெல்லடி வைத்து நடக்கிறார்கள், ‘There’ll be their life to the world’s end/ To wear the carpet with their shoes/ And earn respect;’ என்றுதான் முதலில் எழுதியிருக்கிறார் யேட்ஸ். சாகும் வரை தரை விரிப்பைத் தேய்த்து மரியாதை ஈட்டுவதே இவர்கள் வாழ்க்கையாய் இருக்கப் போகிறது, கட்டுலஸோ மரியாதை தெரியாதவன். இது மொழியாக்கத்தில் தளர்நடையாகிறது, கிழவர்கள்தானே இவர்கள்.
இத்தோடு தொடர்புடையவை கடைசி வரிகள். “Lord, what would they say/ Did their Catullus walk that way?” இந்தக் கவிதை குறித்த ஆங்கில உரைகள் எல்லாவற்றிலும் இவர்களைப் போலவே கட்டுலஸும் நடந்து கொண்டால் இவர்கள் என்ன சொல்வார்கள், என்று வாசிக்கப்படுகிறது. கட்டுலஸால் இப்படிப்பட்ட கவிதைகள் எழுதி இருக்க முடியாது, இவர்களால் ரசிக்கப்படக்கூடிய கவிதைகள் எழுத முடியாது, இவர்கள் வாழ்க்கைக்கும் இந்தக் கவிதைகளுக்கும் தொடர்பில்லை என்பது போல். முதலில் யேட்ஸ் செய்த கடும் கண்டனம் இப்படி வாசிக்கச் செய்கிறது. “ஆண்டவரே என்ன சொல்வர் அவர்கள்/ அவர்களின் காட்டுலஸ் அவ்வழி நடந்தால்?” என்பது ஆத்மாநாம். “ஆண்டவரே, எதைத்தான் இவர்களால் கூற இயலும்?/ அவர்தம் காட்டுலசும் அவ்வழியே நடந்தான் என்றா?”, இது கல்யாணராமன் (முடியாது என்பது உட்கிடை. கட்டுலஸ் வழி வேறு தம் வழி வேறு என்பதை அவன் நேரில் வந்தால் இவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும் என்று கல்யாணராமன் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரைகளுக்கு ஏற்ப மொழியாக்கம் செய்திருக்கலாம்). “கடவுளே, இவர்களது காட்டுலஸ் இந்தப் பக்கமாய்க் கடந்தால்/ என்ன தான் சொல்வார்கள் இவர்கள்?”, செந்தில் நாதன் ஆத்மாநாமை ஒட்டிச் செல்கிறார். “கடவுளே என்சொல்வர் இவர், இவர்தம் கட்டுலஸ் அவ்வழி வந்தால்,” என்று கொள்ளலாமா, நாம்? ஜூராசிக் பார்க்கில் டைனோஸர்கள் எதிர்ப்பட்ட அனுபவம் போலிருக்கும், பிரிட்டிஷ் மியூசியத்தில் புத்தகங்களுக்கு வெளியே கட்டுலஸை பற்களும் நகமுமாய்க் காண்பது. விரும்பவும் செய்கிறேன், வெறுக்கவும் செய்கிறேன், என்கிறான் கட்டுலஸ். முரண்பட்ட உணர்வுகள் அவனுக்கு மட்டும் உரியவையல்ல. ரசிக்கும் விஷயங்களை வெட்கி நாம் மறைவில் வைத்திருக்கவும் கூடுமல்லவா?
மொழியாக்கம் : நம்பி கிருஷ்ணன்
குறிப்பு: ஓ.பெலிக்ஸ்
– நம்பி கிருஷ்ணன்