சைக்கிள் கம்பியை தாக்கத்தி போல வளைத்து கைத்துப்பாக்கியாகப் படைத்து அதன் பிடியை இறுகப்பற்றி இருந்தான் நசுருதீன். அதன் நுனிப் பகுதியில் பூட்டியிருந்த குழிவு நட்டுக்குள் தீக்குச்சியின் தலையில் இருந்த மருந்தை துகள் துகள்களாக உருத்தி துவக்கின் குழிவு நட்டுக்குள் கொட்டிக் கொண்டான். பின் நட்டுடன் ஆணியை நூதனமாகப் பொருத்தினான். அவனை வளைத்து அவனது புழுதிப் பட்டாளம் நின்றது. அவனது நண்பர்களுக்கு ஊர் வைத்த பெயர் புழுதிப்பட்டாளம். பட்டாளத்தில் இன்னும் இரண்டு மூன்று பேரின் கைகளிலும் சைக்கிள் கம்பித் துவக்கு இருந்தது. மருந்து வைத்து மூடப்பட்ட துவக்கின் நுனியை திண்ணையில் ஓங்கித் தட்டினால் “படார்” என்ற ஓசையை எழுப்பி வெடிக்கும். ஒரு சிறிய பட்டாசுச் சத்தம்போல் அதன் ஓசை. காதுக்குள் கொஞ்ச நேரம் விண் கூவி ஒளியும். இலேசான புகை அதன் வாய் வழியே ஒழுகி தீக்குச்சி மணம் வெடிமருந்து மணம் போல சில கணங்கள் சூழலை நிறைக்கும். அதை முகர்ந்து உள்ளிழுத்தபடி புழுதிப்பட்டாளம் மகிழ்ந்திருக்கும்.
ஒரு வீடு இருந்ததற்கான எச்சமாக ஒரு கட்டாந்தரை மட்டுமே எஞ்சி இருந்த சீமெந்துத் தரையில் நசுருதீன் தயார்படுத்தப்பட்ட கம்பித்துவக்குடன் திண்ணையில் குந்தி இருந்தான். கம்பித்துவக்கின் மருந்து வைத்து மூடப்பட்ட தலைப்பகுதியை ஆயாசமாக முகர்ந்து ஓங்கித் தட்டுவது போல் தாப்புக் காட்டிக் கொண்டிருந்தான். பட்டாளம் அவனது துப்பாக்கி வெடிக்கும் ஓசைக்காக காத்துக்கிடந்தது. பக்கத்தில் நசுருதீனின் மூத்த அசகாய சகோதரன் முனவ்வரும் தம்பி துப்பாக்கியை வெடிக்கச் செய்வான் என்ற எதிர்பார்ப்பில் காத்து நின்றான். திடீரென்று முனவ்வர் சைக்கிள் கம்பித்துப்பாக்கியை நசுருதீன் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் அவன் கையிலிருந்து பிடுங்கி திண்ணையில் வேகமாக ஓங்கி அடித்தான். அது பட்டாசின் சத்தத்தோடு வெடித்து ஓசை எழுப்பியது. அதிலிருந்து சில தீப்பொறிகள் தெறித்து எங்கோ மறைந்தன. அதிலொன்று நசுருதீனின் இடது தொடைப் பகுதியில் பட்டுத் தீய்த்தது. அவன் ஆ என்ற சத்தத்தை சற்றுத் தாழ்வாக எழுப்பி தழல் தீய்த்த இடத்தைக் கவனமாகத் தேய்த்தான். முனவ்வரும் அந்த இடத்தை வேகமாக தேய்த்துவிட்டான். ஆனால் தீப்பொறி பட்ட சிறு தழும்பு ஒன்று அந்த இடத்தில் தடம் பதித்துக்கொண்டு எழுந்தது. உடலின் வேறு பாகங்களிலும் அதன் சூட்டை நேரம் செல்லச் செல்ல நசுருதீன் உணர்ந்தான்.
மறுநாள் தூங்கி எழுந்த போது நசுருதீனின் இடது பிட்டத்தில் கட்டுத் திரண்டிருந்தது. கைப்புத்தகடு அளவுக்கு சீழ் கட்டி பெரிய கட்டு. அவஸ்தையாய் இருந்தது அவனுக்கு. உள்ளே ஏதோ ஒன்று விண் விண் எனத் தெறித்தது. புழுப்போல அதனுள்ளே நெளிவதாக உம்மாவிடம் சிணுங்கிக் கொண்டே சொன்னான். எந்த இலைகளை அரைத்து பூசுவது என்ற குழப்பத்தில் யாராவது ஆலோசனை சொல்பவர்கள் வருவார்களா என உம்மா வெளியே எட்டிப் பார்ப்பதும் வருவதுமாக இருந்தாள்.
நேர்த்தியாக இருக்கவோ, நிமிர்ந்து படுக்கவோ அவனால் முடியவில்லை. அது அப்படியான இடத்தில் முளைத்த கட்டு. அந்திச் சூரிய வட்டத்தைப் போன்று செம்மஞ்சல் நிறத்தில் அவனைக் குத்திக் குடைந்துகொண்டிருந்த அந்தக் கட்டுப் புழு கணத்துக்குக் கணம் வளர்ந்து கொண்டிருப்பது போல் உணர்ந்தான். கொழுவி இருந்த கண்ணாடியை முனவ்வர் கழற்றி அவனது பிட்டம் தெரியும் அளவில் சுவரில் சாய்த்து வைத்தான். யாரும் பார்க்கிறார்களா என சுற்றத்தை நோட்டமிட்டுக் கொண்டு சாரத்தை ஒதுக்கி அந்த இடத்தைப் பார்த்தான். அவனுக்கே பயங்கரமாக இருந்தது. தீப்பொறி தெறித்த இடம் வேறு கட்டுத் திரண்டிருக்கும் இடம் வேறு என தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டான். முனவ்வர் ஆறுதல் சொல்வது போலவும் இது தீப்பொறியால் வந்ததுதானா என்ற சந்தேகத்துடனும் அவனையே கொஞ்ச நேரம் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் ஆ ஊ என்று நெளிவதைப் பார்த்து உம்மா சொன்னாள்.
“பொறுடா வாப்பா வரட்டும்” காட்டுக்கு விறகு எடுக்கச் சென்ற வாப்பாவை நசுருதீன் அச்சத்துடன் காத்திருந்தான். முதலில் என்ன செய்தது என்று கேட்டு நாலைந்து அறைகள் விழும். முனவ்வர் கம்பித் துப்பாக்கியால் சுட்டான் என்று சொல்லவும் மனதில்லை. அவனும் இவனிடம் பதறிக்கொண்டு திரிந்தான். கம்பித்துப்பாக்கி செய்யும் கலையையும் நசுருதீனுக்கு கற்றுக் கொடுத்ததும் அவன்தான். காட்டிக் கொடுப்பது அந்த நன்றி விசுவாசத்துக்கு கேடானது என நசுருதீன் நினைத்தான். கட்டுக்குள்ளே நெளிந்துகொண்டிருப்பது உண்மையிலேயே புழுதானா என்ற சந்தேகமும் இப்போது அவனுக்கு வந்தது. பள்ளிக்கூடத்துக்கோ மதரசாவுக்கோ போகத் தேவையில்லை என்ற சலுகையைத் தவிர மிச்சமெல்லாம் அதனால் மிஞ்சியது வலி மட்டுமே. முகங்குப்புறப் படுத்துக்கிடப்பதே கதி என்றாகிற்று. அந்த இடத்தில் கைமருந்துகளை வைத்துக் கட்டவும் முடியாது. இலகுவாக மருந்து கட்டுவதற்கும், எல்லோருக்கும் காட்டுவதற்கும் உரிய இடத்தில் அது வரவில்லை என்பது இன்னொரு துக்கமாக அவனுக்கு வலித்தது.
அன்று செக்கலுக்குள் வாப்பாவும் உசன் வட்டானையும் திரும்பி வருவதை குப்புறப்படுத்தபடி நசுருதீன் பார்த்தான். காட்டில் நல்ல விறகு கிடைத்து மாட்டு வண்டி முழுலோடாக வந்து நின்றது. செங்கல் போரணையில் கல் சுடுவதற்கு போதுமான கொள்ளி வந்துவிட்டது. அப்படி என்றால் வாப்பாவுக்கு பெரிதாக கோபம் வராது என நசுருதீன் மனதுக்குள் கணக்குப் போட்டான். அறை எப்படியும் விழ வாய்ப்பில்லை. ஆனாலும் ஒரு முன்னெச்சரிக்கையாக முனவ்வர் அன்று பின்னேரமே வீட்டிலிருந்து புறப்பட்டு நாளை திரும்பி வருவதாகச் சொல்லி வாழைச்சேனையிலிருந்த அவனது மூத்தம்மாவின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தான். கடைசியாக அவன் செல்லும் போது ஒரு பல்லி மிட்டாய் பக்கெட் ஒன்றை நசுருதீனின் கைகளுக்குள் திணித்துவிட்டுச் சென்றிருந்தான். நசுருதீன் பல்லி மிட்டாய் பக்கட்டை ஒரு மூலையில் கடித்து ஓட்டை போட்டு ஒரேமுழுங்காக வாய்க்குள் கொட்டிக்கொண்டான். அதன் இனிப்பை உனைத்து இரசித்துச் சுவைத்து திண்ண கட்டுக்குள்ளிருக்கும் புழு அவனை விடவில்லை. உள்ளே ஊர்ந்து ஊர்ந்து ரணப்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு புழுவைப்போலவே அவனும் நெளிந்தான்.
“மால மகரி நேரம் குப்புறப்படுத்துக் கெடக்காம ஒலும்பி ஓதுடா” வாப்பா தோளில் சுருட்டி வைத்துக்கொண்டு வந்தகயிற்றுப் பட்டை கீழே இறக்கினார். கையிலிருந்த கோடாரியும் கத்தியும் கதவுமூலைக்குள் சென்றன.
“அவனுக்கு சூத்தில கட்டாம்..சுள்சுள்ளென்டு குத்துதான்டு கத்துறான் உடும்பு..” உம்மாவின் குரலில் செயற்கையான கடுமை தெரிந்தாலும் உள்ளூர ஒரு கனிவை உணர்ந்தான்.
“என்னடா செஞ்ச?” வாப்பா அதட்டிக்கொண்டே சாரத்தை விலக்கி கட்டை உற்றுப் பார்த்தார். என்ன நடந்தது என்று சொல்ல நசுருதீனுக்குத் தெரியவில்லை. வலியால் முனங்கி நெளிந்தான். நல்ல வேளைக்கு உசன் வட்டானை நசுருதீனின் கட்டைக் குறித்து தன் மரபார்ந்த கருத்தை எளிதாக வெளியிட்டார். ஊரில் பழம் நம்பிக்கைகளின் நடமாடும் உருவம் உசன் வட்டானை. அவர் நசுருதீனின் கட்டுக்கான காரணத்தையும் அதற்கான சிகிச்சையையும் ஒரே நொடியில் கண்டறிந்தார்.
“அபுலசன் இது செய்த்தான் கொறடா… நீ ஒண்டுஞ் செய்ய வானா.. சேர்மண்ட கபுரடிக்கு பால் டின்னும் பாணிச்சாவலும் தாரண்டு நேந்து வெய்..எல்லாம் செரியாயிடும்..”
உசன் வட்டானையின் மீது வாப்பாவுக்கு ஒரு மதிப்பிருந்தது. அவர் சொல்வது பிழை என்றாலும் அதை மதிப்பளிப்பது போல அவர் பாவனைசெய்து கொள்வார். அவர் முன்னால் பிள்ளைகள் மீதும் தன் கோபத்தை சற்று அடக்கியே கொட்டுவார்.
“முதல் ரெண்டுருவா குத்திய எடுத்து நேந்து ஒரு புடவத்துண்டுல முடிஞ்சி இந்த பந்தல்ல கட்டிவை..போகக்க அதையும் கொண்டு போ..”
உசன் வட்டான அவசரப்படுத்தினார். உசன் வட்டானையின் உள்மன நம்பிக்கை அவரை உஷார்படுத்தியது. ஆனால் வாப்பாவுக்கு இதன் மீதெல்லாம் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. வட்டானை சொல்லிவிட்டார் என்பதற்காக உம்மா செய்ய அவர் சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஓ..ஆக்கா..நேந்து கட்றன்” என்று அவரை ஆமோதித்து வாப்பா சொன்னது வட்டானைக்கு முகத்தில் ஒரு பூரிப்பைக் கொடுத்திருந்தது.
நசுருதீனின் கட்டைக் கேள்விப்பட்ட புழுதிப்பட்டாளம் அவன் வீட்டுப் பக்கமாக சில நாட்கள் திரும்பியும் பார்க்கவில்லை. நசுருதீனின் வாப்பா செவியைப் பிடித்து முறுக்கி அறைந்துவிடுவார் என பட்டாளம் அஞ்சியது. முனவ்வர் ஒருவித அப்பாவிக் கோலத்தில் ஆனால் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி வீட்டில் நடமாடும் அளவுக்கு அச்சம் நீங்கி இருந்தான். நல்ல பிள்ளை போல வாப்பா சொல்லாமலே மாட்டுக்கு வைக்கோலும் புண்ணாக்கும் போட்டு பிசறி வைத்தான். தண்ணீர் மொள்ளினான். கடைக்கு கூலி கேட்காமல் உம்மாவுக்குப் போய்க்கொடுத்தான். புழுதிப்பட்டாளத்துடனான உறவை அவனும் அந்த ஓரிரு நாட்கள் சற்றுத் தள்ளிவைத்துக் கொண்டான். ஆனால் நசுருதீனுக்கு இப்போது கட்டின் வலி தணிந்து கபுரடிக்குப் போவதுதான் அவன் கண்களில் கனவாக நிழலாடியது.
சேர்மண்ட கபுரடிக்கு பால்டின்னும் பாணிச் சாவலும் கொடுப்பதாக நேர்ந்து வைத்து இரண்டு நாளில் கட்டு வெடித்துவிட்டது. முட்டைவெடித்து குஞ்சு சுதந்திரமாக வெளிவருவதைப் போல் நசுருதீன் கட்டு வெடித்து சுதந்திரமாக வெளியேறி உலாவத் தொடங்கினான். இழந்த சௌந்தர்யம் மீண்ட பரவசம் அவனுக்கு. சேர்மண்ட கபுரடிக்குப் போவதை நினைத்து களிப்பில் மிதந்தான்.
கட்டு அவனை அவஸ்தைப்படுத்தியது போல அவன் உம்மாவை அவஸ்தைப்படுத்தத் தொடங்கினான்.
“எப்பமா போர..?”
“எங்கடா?”
”சேர்மன்ட கபுரடிக்கு..”
“வாப்பா வரட்டும்..கேளு…” உம்மா எரிச்சலாகச் சொன்னாள்.
“அது எங்கம்மா இரிக்கி?”
“ஏராவூர்ல..”
அவன் கண்களில் ஆவல் பூத்தது. அவனுக்கு அன்றைக்கே போக வேண்டும் போலிருந்தது. அன்று முழுவதும் புழுப்போல் உம்மாவைக் குடைந்து கொண்டே இருந்தான். அவளுக்கு அவன் ஒரு கட்டுப் போலவே மாறிவிட்டான்.
“பொர்ரா..உடும்பு..வாப்பா நாளெக்கு வந்தவுடன போவம்..”
மீண்டும் கண்களில் பரவசம். மனது ஊஞ்சலாகி ஆடத் தொடங்கியது. புழுதிப்பட்டாளத்தை தேடி சைக்கிள் சக்கரம் ஒன்றை உருட்டிக்கொண்டே சென்றான்.
“டேய் நசுருடா. கட்டு நல்லப்பெயித்தாடா?” புழுதிப்பட்டாளம் அவனை மொய்த்துக் கொண்டது. களிசனைக் கழற்றிவிடுவதைப் போல இடது பிட்டப் பகுதியையே அவர்கள் நீண்டநேரமாக வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றனர். நசுருதீன் வெட்கமடைவது அவன் உடல்மொழியில் தெரிந்தது.
“ஓன்டா..சேர்மண்ட கபுரடிக்கு பால்டின்னும், பாணிச்சாவலும் கொடுக்கிறண்டு நேந்து வெச்சவுடனெயெ கட்டு ஒடஞ்சிட்டு.நாளெய்க்கு வாப்பா வந்தவுடன போறண்டு உம்மா சொல்லி இருக்கா..”
“அது எங்கடா இரிக்கி?“
“ஏராவூர்ல“
“வரக்குல உங்களுக்கு டொபியும் பல்லி முட்டாசும் வாங்கி வருவன் ஏண்டா?
அவர்கள் முகங்களில் இளிப்பு விரிந்தது.
“நாளைக்குப் போய் வந்து செரி்யா இவடத்துக்கு வா ஏண்டா?”
புழுதிப்பட்டாளம் நேரமும் இடமும் குறித்தது.
“செரி“ என்று நசுருதீன் ஒப்புதலளித்தான்.
வாப்பா சேர்மண்ட கபுரடிக்குப் போய் நேர்த்திக் கடனை முடிப்பதில் ஆர்வமற்றிருப்பதை நசுருதீனால் சகித்துக்கொள்ள முடியாமல் இருந்தது. நாளை நாளை என நாட்கள் உருண்டதே தவிர அந்த நாள் வரவேயில்லை. இப்போது அவன் மனதில் புண் வந்துவிட்டது. வாப்பாவிடம் நேரடியாகக் கேட்க அஞ்சினான். உம்மாவைத்தான் குடைந்தான்.
“வாப்பாக்கிட்ட கேள்றா உடும்பு” என்று உம்மாவும் வெறும் சொற்களை மட்டுமே கொட்டினாள். கபுரடிக்குப் போவது போன்று தூக்கத்தில் கனவுகள் கூட அவனுக்குத் தோன்றின. எதிலும் நம்பிக்கையற்ற வாப்பா இதிலும் பொடுபோக்காகவே இருந்தார்.
“இந்த உடும்பு கபுரடிக்குப் போறலியாண்டு என்ன பாட்டப்படுத்துறான்” உம்மா வாப்பாவிடம் எரிச்சலாகச் சொன்னாள். வாப்பா என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. நசுருதீனின் பிஞ்சு உடம்பில் நைலோன் கயிறு சரமாரியாக விளையாடியது. கயிற்றின் தடங்களை உடலில் வாங்கிக் கொண்டு நசுருதீன் புறவளவுப்பக்கமாக ஓடிச்சென்றான். புழுதிப்பட்டாளத்தை சற்றுத் தொலைவில் கண்டான்.
பாழடைந்த கிணற்றின் அருகேயிருந்த படிக்கட்டில் தழும்புகளைப் பார்த்தபடி தனியே குந்தி விம்மினான். கட்டை விட அது அசுர வலி கொடுத்தது. அருகே மஞ்சோனா மரத்தில் ஒரு குருவி வந்து கீச்சிட்டது. வெள்ளையும் மஞ்சளுமாய் புதுமையான நிறத்தில் புதிதாக வந்த குருவியின் குரலை நசுருதீன் இரசித்தான். கயிற்றின் தடங்கள் காற்றில் அழிந்தன.
“குருவிக் குருவி என்னக் கபுரடிக்கி கூட்டிப் போவியா..?” விளையாட்டும் விம்மலுமாகக் கேட்டான். குருவி சிர்ரென்று ஓசை எழுப்பிப் பறந்தது. அதன் பின்னால் ஓடிவிடவே அவன் விரும்பினான். ஏமாற்றமாக புழுதிப்பட்டாளத்தை எழுந்து நின்று பார்த்தான். கண்ணுக்கெட்டிய தொலைவில் அவர்களை இப்போது காணவில்லை. பொழுது நன்றாக இருண்டு கொண்டு வந்தது. நசுருதீன் அங்கேயே குந்தி இருந்தான். இருளில் மெல்ல ஊர்ந்து வந்து முனவ்வர் பல்லி மிட்டாய் பக்கெட் ஒன்றை நசுருதீனின் கைகளுக்குள் திணித்தான்.
“மெய்தானடா வாப்பா ஒனக்கு அடிச்சயாம்..”
வெப்புசாரத்துடன் தலையை ஆட்டினான்.
“டேய் வாப்பாக்குத் தெரியாம நாம ரெண்டு பேரும் கபுரடிக்குப் போவமாடா..” முனவ்வர் விளையாட்டாகத்தான் கேட்டான். வாப்பாவின் நைலோன் கயிறு அவனுக்கு கண்ணில் தோன்றி மறைந்தது. நசுருதீன் மௌனமாக பல்லி மிட்டாய்களை உனைத்தான்.
நசுருதீனின் வாப்பாவின் செங்கல்வாடி தொழிலுக்கு மழை ஒரு எதிரிதான். அவ்வப்போது அது குறுக்கிட்டு அவரது கோபத்தையும் வெறுப்பையும் கிளர்த்திவிடும். அவர் கோபமடைந்தால் இயற்கையைக்கூட தயவுதாட்சண்யமின்றி திட்டுவார். சிலவேளைகளில் நசுருதீன் மீதும் காட்டிவிடுவார். கல்போரணைக்கு நெருப்பு வைத்தால் மழை பெய்யக்கூடாது. பெய்தால் தீயணைந்து கற்கள் எல்லாம் புகையடித்துவிடும். கரைந்தும் விடலாம். அவர் பட்ட அத்தனை கஷ்டங்களும் வெறும் களிக்குவியலாக-துயர் மலையாக மாறிவிடும். அதை அவரால் ஒருபோதும் தாங்கிக் கொள்ளவே முடியாது. இத்தனைக்கும் இறைபக்தி மிக்கவரான அவர் இறைவனை அதிகம் நம்புபவர். அவர் இறைவனை நேசிப்பது போல் சகமனிதனை நேசித்தாரா என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படியென்றால் உசன் வட்டானையை மட்டுமே அவர் நேசித்திருக்க வேண்டும். ஆனால் இறைவன் தன் அடியானான நசுருதீனின் வாப்பாவை அவ்வப்போது சீண்டி விளையாடினான். அப்போதெல்லாம் தன் சகாவான இறைவன் கூட அவரது கோபத்திலிருந்து தப்பவே முடியாது. எரியும் தழல் போன்ற சூடான சொற்களால் கடவுளைக் கரித்து மந்திரம் ஓதுவார். அப்போதெல்லாம் அவரது அன்புச் சகாவான இறைவன் தன் காதுகளைப் பொத்திக்கொள்வானா? அல்லது வாப்பாவைப் பார்த்துச் சிரிப்பானா? என நசுருதீன் யோசிப்பான். இறைவனை வாப்பாவைப் போல் யாரும் நேசித்ததையும் அவன் கண்டதில்லை. சோதனை வந்தால் கடவுளை கரித்துக் கொட்டாமலும் விடமாட்டார். ஆனாலும், அவர் அவனை மட்டுமே நம்பினார். எந்த உதவியையும் அவர் அவனிடம் மட்டுமே கோரினார். மனிதர்கள் என்றால் உசன் வட்டானை. இந்த சுழல் வட்டத்தைத் தாண்டி அவர் வேறெங்கும் சென்றதே இல்லை.
காலையில் தெளிவாக இருந்த வானத்தை நம்பி வாப்பா போரணைக்கு நெருப்பு வைத்தார். அவரது உதவியாளரான உசன் வட்டானையும் வானத்தை நம்பினார்.
அன்று தன் அடியானுடன் தன் வழக்கமான விளையாட்டுக்கு கடவுள் தயாராக இருந்திருக்க வேண்டும். பின்னேரம் இரண்டு மணிக்கெல்லாம் வானம் திடீரென்று மாறியது. வானம் முழங்கி மேற்குப்பக்கமாக இருட்டி வந்தது. கரிய மேகத்தின் கீழால் வெள்ளைக் கொக்குகள் சாவகாசமாகப் பறந்து செல்வதை வாப்பா துயரமாகப் பார்த்துக் கொண்டு நின்றார். உசன் வட்டானையின் முகத்திலும் சந்தேகம் படர்ந்தது. வாப்பா கோபமடைந்து சீறும் சிறுத்தையாக போரணையைச் சுற்றி நடக்கத் தொடங்கினார்.
“இந்த வெறுவாய்க்கிலம் கெட்ட வானம் காலத்தால நல்லாத்தான காக்கா இரிந்திச்சி”
உசன் வட்டானையைப் பார்த்து உரத்த தொனியில் பேசினார். உசன் வட்டான வானத்தையும் போரணையையும் மாறி மாறிப் பார்த்தபடி கல்போல நின்றிருந்தார். மழை மெல்லத் தூறத் தொடங்கியது. மழைக்கோட்டுச் சீலையை வாப்பா விரித்தார். முதலில் போரணையின் உட்புறங்களான காண், மகுடம் போன்ற பகுதிகள்தான் பத்தும். அதன் பிறகுதான் மேல் பகுதி பத்தத் தொடங்கும். அதனால் மேலே இப்போதைக்குத் தீ இல்லை. மழைக்கோட்டுச் சீலையை வாப்பா ஒரு பக்கமாகவும், உசன் வட்டானையும் முனவ்வரும் நசுருதீனும் ஆளுக்கொரு பக்கமுமாகப் பிடித்துக் கொண்டு நின்றனர். எந்த சந்தர்ப்பத்திலும் இறைவனைத் தன் சகாவாகக் கருதும் வாப்பா இப்போதும் அவனை நம்பினார்.
திடீரென்று மின்னல் வெட்டுப் போல அவருக்குள் அந்த யோசனை முகிழ்த்தது. படங்கைப் பிடித்துக்கொண்டே வேகமாகச் சொன்னார்.
“டேய் நசுரு, படங்க உம்மாக்கிட்ட குடுத்துட்டு மழய்க்கி ஓதுர துவாவ எடுத்து ஓதுரா..” படங்கு நுனி உம்மாவின் கைக்கு மாறியது. நசுருதீன் முகத்தையும் கால்களையும் கழுவிக் கொண்டு தலையில் தொப்பியை கவிழ்த்தான். சம்மானமிட்டு கதவடியில் உட்கார்ந்து துஆ மன்ஸிலை மடியில் வைத்துப் புரட்டினான். மழைக்கு ஓதும் துஆவை தேடிப்பிடித்து வேமாக திரும்பத் திரும்ப மெல்லிய ஆட்டத்துடன் ஓதத் தொடங்கினான். மழையில் நனைந்து அவன் மெல்லிய குரல் ஒரு இசைபோல அந்த இடத்தில் அலைந்துகொண்டிருந்தது. வாப்பா தன் சகாவை நம்பினார். அவன் குரலைக் கூர்ந்து கேட்டார். வானத்தைப் பார்த்தார். மழையின் இசையை வெறுப்பாகச் செவியேற்றார். அதிசயமாக மழை மேலும் அதிகமாகியதையும் கண்டார். மழையின் மெல்லிய கோடு தடித்துச் செறிவாகியது. இசையின் சுருதி கடுமையாகியது. வாப்பாவின் முகம் மேலும் இருண்டது.
”டேய் அதிர பொருள வாசியாப்பம்..” வாப்பா திடீரென்று ஒரு யோசனையில் சொன்னார்.
நசுருதீன் பொருளைச் சத்தமாக வாசித்தான். “யா அல்லாஹ், இந்த மழையைக் காடுகளிலும் மலைகளிலும் திட்டிகளிலும் கொண்டு பொழிய வைப்பாயாக”
“நிப்பாட்டு..நிப்பாட்டு..” வாப்பா ஆத்திரமாகக் கத்தினார்.
ஏன் என்பதைப் போல உசன் வட்டான வாப்பாவைப் பார்த்தார்.
“செரிதான காக்கா..இது காடுதான..இத ஓத ஓத இங்கதான் மழ பேயும்..ஊருல உள்ளவனும் ஓத ஓத இங்கதான பேயும்..இவெனும் ஓதுனா இங்கதான பேயும்”
உசன் வட்டானைக்கு இப்பதான் தர்க்கம் பிடிபட்டது. வாப்பா எதையும் ஒரு மேலோட்டமான பார்வையிலேயே ஆழமாகப் புரியக்கூடியவர் என்பதை நசுருதீனும் முனவ்வரும் அந்தக் கணத்தில் உணர்ந்தனர். உம்மா ஒரு கையால் முந்தனையால் முகத்தை மறைத்துக் கொண்டு குலுங்கிச் சிரிப்பதை நசுருதீன் பார்த்தான். சீற்றமடைந்து வாப்பா தன் சகாவை சரமாரியாக ஒரு கணம் திட்டி ஓய்ந்தார். ஆனாலும் மழைதான் ஓயவில்லை.
போரணையும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இம்முறையும் கபுரடிக்குப் போவது பொய்த்துப் போகும் என நசுருதீன் வருத்தமடைந்தான். அவன் கனவும் எதிர்பார்ப்பும் வாப்பாவின் போரணையை விடப் பெரிதாக இருந்தது. போரணையின் அழிவை விடவும் அவன் கனவுதான் அவனளவில் பெரிதாக இருந்தது.
வெப்பிசாரம் வெடிக்கும் முகத்துடன் நசுருதீன் கேவினான் “எப்பமா போர..?”
“சும்மா போடா உடும்பு…” உம்மா அலட்சியமாகத் திட்டினாள். சில நாட்களாக புழுதிப்பட்டாளத்தின் முகத்தில் அவனால் முழிக்க முடியவில்லை. உள்ளுக்குள் தேம்பி உடல் குலுங்கித் திரிந்தான். சில நாட்களில் முனவ்வரும் பழித்துக் காட்டத் தொடங்கினான்.
“பொர்ரா வாப்பாட்ட சொல்லிக் குடுத்துக் காட்றன்” நசுருதீன் விபரீதமாக முடிவெடுத்தான். முனவ்வர் வெளியே சென்று வாப்பா வருவதற்குள் ஒரு பல்லி மிட்டாய் பக்கட்டோடு திரும்பி வந்தான். நசுருதீன் ஒரு பல்லி மிட்டாய்ப் பக்கெட்டுக்கு நொடியில் சோரம் போனான். வாப்பாவிடம் முனவ்வர் பற்றி எந்தப் புகாரையும் அவன் எழுப்பவில்லை.
சில நாட்களில் வாப்பா இல்லாத சமயம் பார்த்து புழுதிப்பட்டாளம் அவனைத் தேடி வீடு வரைக்கும் வந்தது. மீண்டும் உறவு புதுப்பிக்கப்பட்டது. சைக்கிள் கம்பித்துப்பாக்கியோடு தீக்குச்சிகள் சிலவற்றை உம்மாவுக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு முனவ்வரும் நசுருதீனும் புறப்பட்டனர்.
மீண்டும் அதே திண்ணைவெளியில் குந்திக்கொண்டனர். கம்பித் துவக்கின் தலையில் சொருகப்பட்டிருந்த ஆணியைக் கழற்றி தீக்குச்சியின் மருந்தைப் பிய்த்து துவக்கின் தலைக்குள் வைத்து மீண்டும் ஆணியால் தலையை முனவ்வர்மூடினான். ஒரு கணம்தான். ஓங்கி திண்ணையில் அடித்தான். படார் என்ற சத்தத்துடன் தீப்பொறி பறந்து அவன் உள்ளங்கையில் தீய்த்தது. சூடு தணியாமல் சிறிது நேரம் எரிவது போல உணர்ந்தான். அதைக் கவனமாகத் தேய்த்துவிட்டான்.
செருசாமத்தில் முனவ்வரின் தூக்கம் கெட்டது. அதே கைப்புத்தகடு அளவுக்கு அந்திநேரச் சூரிய நிறத்தில் அவன் உள்ளங்கையில் ஒரு கட்டுத் திரண்டிருந்தது. புழுப்போல ஏதோ ஊர்ந்து விண் விண் எனத் தெறித்தது. காலையில் பார்த்தால் அது மேலும் உருப் பெருத்திருந்தது. நசுருதீனின் கட்டை விட இது பெரிசு என உம்மா ஊகித்தார். வாப்பா வரும்வரை அவனைப் பொறுமையாக இருக்கச் சொன்னார். ஆனால் அவன் புழுப்போல வலியால் துடித்தான்.ஊதிப்பார்ப்பதற்கு உம்மா அவனை பெரிய ஹசரத்திடம் அழைத்துச் சென்றார்.
வாப்பா காட்டால் வந்த உடனேயே உம்மா முனவ்வரின் கட்டைக் காட்டிச் சொன்னாள்.
“ஞ்சப்பாருங்களம்… நசுருக்கு வந்தாப் போலதாங் இவனுக்கும் ஒரு கட்டு” முனவ்வர் உள்ளங்கையை நடுக்கத்துடன் விரித்தான். வாப்பா அதைப் பார்த்துவிட்டு பனை மரம் போல் கொஞ்ச நேரம் அசையாமல் நின்றார். காரணம் எதுவும் அவருக்குக் கேட்கத் தோன்றவில்லை. காரணம் அவருக்கு சரியாகத் தெரிந்தவரைப் போல மௌனமாக இருந்தார். எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியேறிச்சென்றவர் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தார்.
“எடுங்க போவம்” என்றார்.
“எங்க வாப்பா?”
“சேர்மண்ட கபுரடிக்கு…”
அவர் கையில் பால் டின்னும் பாணிச்சாவலும் ஒரு தினுசாகத்தொங்கிக் கொண்டிருந்தன.
***
-ஜிஃப்ரி ஹாசன்