“இந்தியாவைப் போலவே இங்கும் வறுகடலை மிகவும் பிரபலம்…” என்று சொல்லிவிட்டு பீங்கான் தட்டில் உரித்த வறுகடலையைத் தட்டியபடி இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு இசை தொடங்கிவிடும் என்று மௌனமாய்க் காத்திருக்கும் இசைக் கருவிகளைக் காட்டிச் சொன்னார்.
வாரயிறுதி நாளின் பின்மாலை வேளையில் உணவும் மதுவும் ஒருசேரக் கிடைக்கும் உணவகத்தில் நானும் என்னோடு வேலை பார்க்கும் ஐரோப்பியரும் ஒன்றாய் அமர்ந்திருந்தோம். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள காகிதத் தொழிற்சாலையில் இயந்திரவியல் தொடர்பான என் நிறுவன வேலைக்காக நான் மார்ச் இரண்டாம் தேதி இந்தியாவிலிருந்து கிளம்பி வந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது.

உணவகத்தில் நுழைந்த பிற்பாடு தான் கவனித்தேன். எல்லோரது பார்வையும் ஒருவித குறுகுறுப்புடன் எங்களையே மேய்ந்தபடி இருந்தன. சபிக்கப்பட்ட ‘2020’ ஆண்டுக்கான பிரத்தியகப் பார்வை… உலகெங்கும் கொடியநோய் பரவும் இப்போதைய சூழலில்… மொழி தெரியாத ஊரில்…. அதுவும் ஒரு ஐரோப்பியனுடன் இருக்கும் பட்சத்தில் இதேபோன்ற வெறித்த பார்வைகள் இயல்புதான்..
“வெல்கம் சார்…!” என்றபடியே முழங்காலுக்கு மேல்வரை நீண்ட கறுப்புக் காலுறை அணிந்து உதட்டில் அடர் சிவப்புப்பூச்சு அப்பியிருக்கும் பெண்சிப்பந்தி எங்களைப் பார்த்துச் செயற்கையாய்ச் சிரித்தாள். மரணம் எல்லோரது முகத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் காலத்தில் எதற்கு இந்த தேவையில்லாத சிரிப்பு?
நடந்து வந்திருந்ததால் வியர்த்திருந்த தன் வெளுத்த முகத்தை நான்கைந்து டிஷ்யூ பேப்பர்களால் அழுத்தமாய்த் துடைத்தபடியே ஐரோப்பியரும் பதிலுக்குத் தலையாட்டி மெலிதாய்ச் சிரித்தார். சிரிப்பு என்பது இந்நாட்களில் பாதுகாக்கப்பட்ட அரிய பொருளாகிப் போனதால் நினைத்ததும் செலவு செய்ய என்னால் முடியவில்லை. பெண் சிப்பந்தியும் என் பதில் சிரிப்புக்குக் காத்திருக்காமல் “என்ன ஆர்டர்??” என்றாள்.
மிளகாய்க்காட்டம் நாக்கில் உறைக்கும்படி காரமான ப்ரைட் ரைஸ் சொன்னோம். இங்குள்ள உணவகத்தில் ப்ரைட் ரைஸ் மட்டுமே அரிசி சார்ந்த உணவு என்பதால் பிடிக்காத போதிலும் நான் மறுக்கவில்லை. உணவு தயாராகி வரும் முன்னரே ஆளுக்கொரு பெரிய கண்ணாடிக் குவளையில் ஜில்லென்ற பீரை எடுத்து வந்து வைத்தாள். வெள்ளை நுரை ததும்பி நிற்கும் பீர் குவளையை ஐரோப்பியர் ‘ஷியஸ்…’ என்று கையில் ஏந்தி உயரத் தூக்கினார். கிளிங் என்ற சப்தத்தோடு அவை மோதிக்கொள்ளவும், சாவின் மடியில் அமர்ந்துகொண்டு மது அருந்தும் என் மெத்தனத்தை நினைத்து சிரித்துக்கொண்டேன்.

“இரண்டு நாட்கள் முன்பு நம் தொழிற்சாலையின் வழக்கமான மருத்துவச் சோதனையின் போது உனக்கு உடல் வெப்பம் அதிகம் காட்டியதும் உன் கண்களைப் பார்க்கணுமே…. நீ மொத்தமாய்ப் பயந்து போயிருந்தாய்….” என்று பெருத்த சரீரம் குலுங்க ஐரோப்பியர் என்னைப் பார்த்துச் சிரித்தார். ஐம்பது வயதைக் கடந்த அவரது முகத்தில் எந்தவொரு பதட்டமோ அயர்ச்சியோ இருக்கவில்லை. புன்னகை மட்டுமே நிறைந்திருந்தது.
உண்மைதான். அந்த ஒருமணி நேரம் என் மூளை கட்டுப்பாடின்றி எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தது. உள்ளுக்குள் லேசாய் அனத்துவது போன்ற உணர்வு. இந்த இக்கட்டான நேரத்திலும் என்னை வெளிநாடு அனுப்பிய என் நிறுவனத்தைத் திட்டித் தீர்த்தேன். எப்போதோ எடுத்திருந்த என் ஆயுள்காப்பீடுத் தொகையை மீண்டும் மீண்டும் கணக்கு செய்து பார்த்தேன். வீட்டிலிருந்து இரண்டு மூன்று முறை போன் வந்திருந்தது. எப்போதும் அவர்கள் கூப்பிடும் நேரம்தான். “சாப்பாடு முடிஞ்சுதா? இங்க மணி எட்டு… அங்க மணி என்ன? அங்கே ஒண்ணும் பிரச்சனையில்லையே…” என்ற வழக்கமான கேள்விகளுக்கு அப்போது பதில் சொல்லும் மனநிலையில் இல்லாததால் அழைப்பைத் துண்டித்துவிட்டேன். ஒருமணி நேரம் கழித்து அவர்கள் எடுக்கப்போகும் அடுத்த சோதனையிலும் என் உடல்வெப்பம் கூடுதலாய்க் காட்டினால்…? என்ற கேள்விதான் உள்ளுக்குள் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.
பீர் குவளையை மேசை மீது வைத்தபடி என்னைப் பார்த்துச் சிரித்தார்.
“கல்யாணம் ஆகாத இளைஞனையும் மரணபயம் என்னவெல்லாம் யோசிக்க வைக்கிறது…”
“மரணபயத்துக்கு வயசு வித்தியாசம் இருக்கா என்ன? அதைவிட இன்னொரு விஷயம்… நான் சமீபத்தில் பத்திரிக்கையில் பார்த்திருந்த புகைப்படம் ஒன்றில் என்னை நானே பொருத்திப் பார்த்து அன்று விசித்திரமாய்க் கற்பனை செய்து கொண்டிருந்தேன்….”
“அப்படி என்ன கற்பனை?”
“நானும் காலனும் ஏதோ பழகிய நண்பர்களைப் போல் வெகுநேரமாய் கல்பெஞ்சில் நெருக்கிக்கொண்டு அருகருகே உட்கார்ந்து இருக்கிறோம்…”
“காலனா??”
“ஆமாம் மரணத்தின் தூதன்….”
“எந்த நாட்டு தூதன்?? கொழுத்த கன்னங்கள் அதிரச் சிரித்தபடி “சாரி… நீ சொல்…”
“நானும் காலனும் அருகருகில் உட்கார்ந்திருந்தும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் எதிரே மறையும் சூரியனை மௌனமாய்ப் பார்த்தபடி இருக்கிறேன். அப்போது எங்கிருந்தோ சுடுமணலில் வறுபடும் நிலக்கடலையின் வாசம் அடிக்கிறது…”
“இப்போது நம் பிளேட்டில் இருக்கும் வறுகடலை மாதிரியே….”
“ஆமாம்… நான் தனியாக சாப்பிட மனமில்லாமல் உனக்கும் வேணுமா…? என்று காலனிடம் கேட்கிறேன். அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. என் கையிலிருக்கும் முக்கோண வடிவப் பொட்டலத்தின் அடியில் கைக்கொத்து வேர்க்கடலை மிச்சம் இருக்கும்போது, ‘போகலாமா..?’ என என் காதில் மெல்ல கிசுகிசுக்கிறான்… ‘இன்னும் கொஞ்சம் நேரம்…’ என்று நான் சொன்னதும் அவனது முகம் விகாரமாகி விட்டது. ‘ஏற்கனவே நேரமாகிவிட்டது…’ என்று என்னைப் பார்த்து முறைக்கிறான்.

மரணத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தும் கொஞ்சமும் பயமில்லாமல் ஏக்கம் நிறைந்த முகத்தோடு, “இன்னும் கொஞ்சம் நேரம்…! இந்தச் சூரிய அஸ்தமனத்தை மட்டும் பார்த்துவிட்டுக் கிளம்பலாம்…” என்கிறேன்.
அவனும் முகத்தின் இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்கிறான். ஆனால் என்மேல் நம்பிக்கை இல்லாமல் என் மெலிந்த மணிக்கட்டை தன் உறுதியான உள்ளங்கைக்குள் அழுத்தமாய்ப் புதைத்துக் கொள்கிறான். இருவரது ஆடையும் உரசியபடி, கருஞ்சிவப்பு வானில் சூரிய அஸ்தமனத்தை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்…” மீதியிருக்கும் பீரை ஒரே மிடறில் குடித்து முடித்து கீழே வைத்தேன். மீண்டும் நிரப்பப்பட்டது.
உடல் குலுங்கச் சிரித்தபடி கேட்டார் “அந்நேரத்தில் உனக்கு இந்தக் கற்பனை தேவையா?? சரி, பத்திரிக்கையில் நீ பார்த்ததாய்ச் சொன்ன புகைப்படம் எது??”
“அது ஒரு சீன மருத்துவமனை… படுக்கையில் கிடக்கும் பாதிக்கப்பட்ட நோயாளிக்குச் சூரிய உதயத்தை மருத்தவர் காண்பிக்கும் போட்டோ. ஆனால் அப்போதிருந்த என் நெகட்டிவ் மனநிலையில் சூரிய அஸ்தமனம், காலன், வறுகடலை என வினோதமாக என் கற்பனை வளர்ந்துவிட்டது. அடுத்த மருத்தவச் சோதனையில் என் உடல்வெப்பம் சீராக இருந்து டாக்டர் ஓகே என்று சொல்லும் வரையிலும் இதே மாதிரி எண்ணங்கள் தான்…”
“மரணபயம் எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது…”
“இது இயல்புதானே. ஒரு நகைச்சுவையான விஷயம், உள்ளுக்குள் இத்தனை பயத்தை மறைத்து வைத்திருக்கும் நான் ஒருமுறை தற்கொலைக்குக் கூட முயன்றிருக்கிறேன்.”
“என்ன??”
“ஆம், அது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது நடந்தது. இப்போது நினைத்தால் சிரிக்கும் விஷயம்தான். பரீட்சையில் மிகவும் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அடுத்த நாள் ஸ்கூலில் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு வேறு. எனக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை… பயம்!! வீட்டில் கண்டிப்பு அதிகம். தப்பிக்க தற்கொலை ஒன்றே வழி என்று தோன்றியது. என் வயதும் அப்போதைய சூழலும் அப்படி யோசிக்க வைத்திருக்கலாம். எங்கள் ஊரில் பச்சை வயல்வெளியைத் தாண்டிப் போனால் ஆள் இல்லா ரயில்வே லெவல் கிராஸிங் ஒன்று உண்டு…”
“நான் இந்தியா வந்திருந்தபோது அதேபோன்ற ரயில்வே கிராஸிங்களைப் பார்த்திருக்கேன்…”
“இந்தியா வந்த போதா?”
“ஆமாம், எண்பது தொண்ணூறுகளில்… இப்போது பார்க்கும் அதே காகிதத் தொழிற்சாலை சம்பந்தமான வேலையாகத்தான். அப்போது பல இடங்களுக்குப் பயணித்திருக்கிறேன், மெட்ராஸ், பல்லாப்புர், அசாம், கோல்கொண்டா இன்னும் சில இடங்கள்… பெயர் மறந்துவிட்டது. கோல்கொண்டா என்றதும் தான் அங்கு சினிமா பார்த்தது நினைவு வருகிறது. அங்குத் தங்கியிருந்த சமயம் ஒருமுறை இந்திய நண்பர் ஒருவர் என்னைப் படத்துக்குக் கூட்டிப்போனார். வெறும் கூரை போட்ட தியேட்டர்… பழைய நெளிந்த இரும்பு நாற்காலிதான் என் இருக்கை.
ஒரு சந்தேகம்! ஏன் இந்தியப் படங்களில் சோகக் காட்சி வரும்போதும் கூட பாடல் வருகிறது. சோகத்திலும் மக்கள் ஏன் ஆடிப்பாடுகிறார்கள்??”
நான் மெலிதான புன்முறுவலோடு சிகரெட்டை ஆஷ் ட்ரேயில் தட்டினேன்.
“இரண்டுமணி நேரத்தை இரண்டு யுகமாக மிகச்சிரமத்தோடு கழித்தேன். பெரிய மீசை வைத்திருப்பவன் தான் வில்லன் போல. அவன் திரையில் தோன்றும் போதெல்லாம் மக்கள் கோபமாய்க் கத்துவதும்… சீட்டில் இருந்து எழுந்து அவனைப் பார்த்துக் கையை உயர்த்தி ஏதோ திட்டுவதுமாய்… ஒரே சிரிப்புதான். அதன்பின் எந்தவொரு இந்திய படமும் நான் இதுவரை பார்க்கவில்லை.
ஸாரி, பேச்சு வேறெங்கோ போய்விட்டது. பாவம்! என்னால் உன் கடந்தகால தற்கொலை முயற்சி தடைபட்டுவிட்டது….” சிரித்தபடி புருவங்களை உயர்த்திக் கேட்டார்.
“பெரிதாய் ஒன்றும் நடக்கவில்லை. மிதிவண்டியில் நான் அந்த ரயில்வே கிராஸிங்கை நெருங்கியபோது ஒரு விரைவு ரயில் கடந்து போனது. அப்படியொரு வேகம்! முகத்தில் மணலும் புழுதியும் ஓங்கி அடித்தது. சரளைக் கற்கள் சுற்றுமுற்றும் சிதறின. அந்த நொடியில் சாவின் பயம் என்னை மொத்தமாய் ஆட்கொண்டு விட்டது. ரயிலின் பாரமான இரும்புச் சக்கரங்களின் அடியில் நசுங்கிச் சிதைந்த தலையற்ற முண்டமாக என்னைக் கற்பனை செய்து பார்த்தேன். உடல் வெடவெடத்து விட்டது. பயத்தில் கால்கள் நடுங்க மிதிவண்டியை அழுத்தியபடி வீட்டுக்கே திரும்பி வந்து விட்டேன்.

இதில் வேடிக்கையான விஷயமே, அடுத்தநாள் என் வகுப்பு ஆசிரியர் அப்பாவிடம் பெரிதாய் ஒன்றும் சொல்லவில்லை. ‘கொஞ்சம் விளையாட்டு புத்தி அதிகம்… கவனமாகப் படித்தால் தேறிவிடுவான்…’ என்று மட்டும் சொன்னார். நல்லவேளை நான் வீணாகத் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தேவையே இல்லாமல் செத்துப் போயிருப்பேன். சில நேரங்களில் மரணபயம் தான் உயிர்வாழ வைக்கிறது.”
“ட்ரூ ட்ரூ….” என்று சொல்லித் தலையசைத்தார்.
இசை தொடங்கியிருந்தது. உயரமான ஹீல்ஸ் வைத்த காலணி அணிந்திருந்த பெண் கால்மேல் கால் போட்டபடி மைக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தாள். நீண்ட கொண்டை போட்டிருந்தவன் தனது எலக்ட்ரிக் கிட்டாரை ஒருமுறை வாசித்துப் பார்த்தான். கழுத்துப்பட்டை வரை நெருக்கமான கட்டங்களும் எம்பிராய்டரி டிசைன்களும் கொண்ட பாரம்பரிய இந்தோனேசியச் சட்டை அணிந்திருந்தவன் ட்ரம்ஸ் கருவியோடு தன் இருக்கையின் உயரத்தை சரிசெய்து கொண்டான்.
அடுத்த சில நொடிகளில் நீர்வீழ்ச்சியாய் இசை துவங்கியது. கண்களை மூடியபடி சிவப்பு அங்கி அணிந்திருக்கும் அந்த ஒல்லியான பெண் பாடத் தொடங்கினாள். அதைத் தொடர்ந்து ட்ரம்ஸும் கிட்டாரும் இணைந்து கொண்டன.
தலையசைத்தபடியே “எனக்கும் சிறுவயது முதலே ட்ரம்ஸ் வாசிக்க வேண்டும் என்ற ஆசை…” என்றார்
“அப்புறம்??”
“அப்பா மறுத்துவிட்டார். நானும் விட்டு விட்டேன். அவ்வளவுதான். இப்போது ஆசை மட்டும் இருக்கிறது. ஆனால் கற்றுக்கொள்ள சோம்பேறித்தனம்….” காலியான இரு பீர் குவளைகளையும் மீண்டும் நிரப்பச் சொன்னார்.
“இங்கு யாரும் தொற்று நோயைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை போல. எல்லாரும் அவரவர் போக்கில் இயல்பாகத் திரிகின்றனர்.”
“ஆமாம்! வேறு என்ன செய்ய? அதுக்காக பயந்தே சாகமுடியுமா என்ன? மரணத்தின் முகம் எப்படி இருக்கும் என்று பார்த்துவிட வேண்டியது தான் என்று நினைத்திருப்பார்கள்….”
அவர் பேசுவது இசையின் சப்தத்தில் சரியாக கேட்கவில்லை என்று சமிக்ஞை செய்தேன். இருவரும் அந்த அறையை விட்டு வெளியே போடப்பட்டிருக்கும் மூங்கில் நாற்காலிகளில் போய் அமர்ந்தோம். உள்ளே சப்தமாக ஒலித்த இசை வெளியே குழந்தையின் மெல்லிய சிணுங்கலைப் போல் சன்னமாகக் கேட்டது.
“உங்கள் ஐடியா என்ன? எப்போது உங்கள் நாட்டிற்குத் திரும்புகிறீர்கள்?”
“என் மனைவி பிலிப்பைன்ஸ் நாட்டவள். அவளும் என் பத்து வயது மகளும் அங்குதான் இருக்கின்றனர். ஆனால் என்னால் அங்கு இப்போது போகமுடியாது. அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு விட்டன. நான் திரும்பவும் பிரான்ஸும் போகமுடியாது. ஐரோப்பாவில் கால்மணி நேரத்திற்கு ஒருமுறை தேவாலய மணி அடிக்கப்படுகிறது. பிணங்கள் புதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதில் என்னைப் போன்ற ஐம்பது வயதைக் கடந்தவர்கள் தான் அதிகம். இங்கேயும் என்னால் அதிக நாட்கள் தங்கியிருக்க முடியாது. என்னுடைய இந்தோனேசியா விசா முடியப்போகிறது. இப்போது யோசித்துப் பார்த்தால் உலகில் இத்தனை நாடுகள் இருந்தும் திடீரென்று நான் அனாதையாகி விட்டேன்.”
“இந்தியாவிற்கு வருகிறீர்களா??….”
“இந்தியாவிலும் இப்போது என்னைப் போன்ற ஐரோப்பியர்களுக்கு அனுமதி இல்லை. அங்கு இப்போதுதான் நோய் பரவத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. கேஸ்கள் நூறுக்குள் தான். இருந்தும் முன்னெச்சரிக்கையாக ஐரோப்பியர்களுக்கு விசா கொடுப்பதை நிறுத்தி வைத்துள்ளார்கள்…..”
“ஆமாம், மார்ச் இருபத்து ஒன்றுக்கு மேல் வெளிநாட்டு விமான சேவையையும் முற்றிலுமாய் நிறுத்தப் போகிறார்களாம்… அதற்குமுன் நானும் எப்படியாவது நாட்டுக்குத் திரும்பிவிட வேண்டும்…” நீண்டதொரு வெள்ளை சிகரெட்டை எடுத்துப் புகைக்கத் தொடங்கினேன்.
“நான் இப்போது பிரான்ஸ் திரும்பிப் போனால் நீ ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய நினைத்ததைப் போலாகிவிடும்…”
“கடவுள் தான் ஐரோப்பாவைக் காப்பாற்ற வேண்டும்…”
“ஆமாம். ரோம் நகரம் அங்குதானே இருக்கிறது….” கண்களை இடுக்கிச் சிரித்தார். ”நீ கடவுளைப் பற்றிச் சொன்னதும் தான் என் சிறுவயதில் கேள்விப்பட்ட விசித்திரமான ஐரோப்பியக் கதையொன்று நினைவு வருகிறது. அதன் நிகழ்வுகளும் உலகத்தின் இப்போதைய நிலைமையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்…”
என் உதட்டில் பீர் வரைந்திருந்த தடித்த வெள்ளை மீசையை துடைத்துக்கொண்டேன். தொண்டையைச் செருமிக்கொண்டு பீர் குவளையை மேசையின் மீது வைத்துவிட்டு அவர் சொல்லத் தொடங்கினார்…
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் சிறிய நகரொன்றில் இக்கதை நிகழ்கிறது….
அவ்வூரில் அவன் ஒருவன் மட்டுமே சவப்பெட்டி செய்து வந்தான். பலவித மரங்களினாலான சவப்பெட்டிகள்… மாதத்திற்கு அதிகபட்சம் நான்கோ ஐந்தோ சவப்பெட்டிகள் தான் விற்று வந்தது. மனைவியும் மூன்று பிள்ளைகளுக்குமான குடும்பத்தின் பசியைப் போக்க அந்த வருமானம் போதுமானதாய் இல்லை. கர்த்தரின் கிருபையை யாசித்துக் கண்ணீர் மல்க மன்றாடினான். அடுத்த சில நாட்களிலேயே இதுவரை அவ்வூர் பார்த்திராத விதத்தில் காலரா தாக்கியது. இப்போதிருக்கும் தொற்றுநோய் போலவே பெரும் உயிரிழப்பை உணடாக்கியது…
கரப்பான்பூச்சிக் கூட்டம்போல் மக்கள் கொத்து கொத்தாய்ச் சாகவும் இரவுபகல் பாராமல் அவன் சவப்பெட்டிகள் செய்து அடுக்கினான். அந்த இக்கட்டான நேரத்தில் அவன் ஒருவனால் மட்டுமே அவ்வூரில் இறந்த எல்லோருக்கும் நல்லடக்கம் வாய்க்கப் பெற்றது.
வீட்டுக்கும் போகாமல் உறங்கவும் நேரமின்றி கண்கள் சிவக்க வெவ்வேறு அளவிலான சவப்பெட்டிகளைத் தொடர்ந்து செய்தான். அவனது குடும்பம் மொத்தமும் அதே நோயால் இறந்துபோன போதும் மனம் தளரவில்லை. அவர்களுக்கான சவப்பெட்டிகளையும் அவனே செய்தான்.

ஆனால் திடீரென்று ஒருநாள் சவப்பெட்டிகள் செய்வதை நிறுத்திக் கொண்டான். யார் என்ன சொல்லியும் மறுத்துவிட்டான். ‘நான் சவப்பெட்டிகள் செய்வதாலேயே தொடர்ந்து மக்கள் சாகின்றனர். அதனால் நான் இனி சவப்பெட்டிகள் செய்யப் போவதில்லை’ என்றான்.”
“அதெப்படி உண்மையாகும்…?”
“தான் பிரார்த்தித்ததாலேயே கர்த்தர் ஊரில் கொள்ளைநோயை ஏவிவிட்டார் என்று அவன் நம்பியிருந்தான்…”
“முட்டாள்தனம்…”
“உண்மைதான்! நீ நினைப்பது போலத்தான் சிலர் அவனை மடையன் என்றனர். சிலர் அவனை மனிதகுலத்துக்கு எதிரானவன் என்றனர். இருந்தும் அவன் மனம் மாறவில்லை.
ஆனால் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் மிக ரகசியமாக உயர்ரக பைன் மரத்தில் தனக்கான சவப்பெட்டியை மிகவும் நேர்த்தியாகச் செய்தான். மரத்தின் பச்சைவாசம் கூட அகலவில்லை. நயிலான் துணிக்கு அடியில் பஞ்சை வைத்து அடைத்தான். அதன் வெளிப்புறத்தில் அவனுக்குப் பிடித்த மேப்பிள் இலைகளின் வேலைப்பாடுகளை நுணுக்கமாய் வடித்தான். ஆனால் எப்படியோ விஷயம் வெளியே கசிந்துவிட்டது. அதேநேரம் இனி யாருக்கும் சவப்பெட்டிகள் செய்யப்போவதில்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தான். அரசு சொல்லியும் கேட்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரசு கோரிக்கையை இப்படி நேரடியாக நிராகரிப்பது பெருங்குற்றம். அதுவும் இதேபோன்ற இக்கட்டானத் தருணத்தில்… விளைவு, அப்போதைய அரசு அவனுக்கு மரண தண்டனை விதித்தது.

அவன் ரகசியமாய் செய்து முடித்த சவப்பெட்டியை அவனை வைத்தே சுமக்க செய்து வீதிவீதியாக அடித்திழுத்துச் சென்றனர். புதிதாய் சவப்பெட்டிகள் கிடைக்காததால் அங்கங்கே சவக்குழிகள் தோண்டி மொத்த மொத்தமாய் பிணங்கள் புதைக்கப்படுவதை இரத்தம் தோய்ந்த முகத்தோடு பார்த்தபடியே நடந்தான். அத்தனை மரணங்களுக்கும் தான் ஒருவனே காரணம் என்று நம்பினான். ஒட்டுமொத்த பாவத்தையும் தன் மீதே சுமந்தபடி நடந்தான்…
‘நீ கடமையைச் செய்யத் தவறியவன். உனக்கு நல்லடக்கம் என்பது கிடையாது. நீ கொடூரமாகச் சாகக்கடவாய், உன் மரணம் பலருக்குப் பாடமாக இருக்கட்டும்…’ என்று உரக்கப் பேசிய உயர் அதிகாரி அவனது சவப்பெட்டியைப் பிடுங்கிக்கொண்டு, அவனை உயரமான குன்றின் மீதிருக்கும் வழிபாடற்ற இடிந்த தேவாலயத்துக்கு இழுத்துச் சென்றார். சிதிலமடைந்த ஆலயத்து ஊசிக்கோபுரத்தின் மேலிருக்கும் அகண்ட சிலுவையில் முன்பக்கம் பிதாமகன் அறையப்பட்டிருக்க, பின்பக்கம் அம்மனிதன் அறையப்பட்டான்.”
“என்னது?? சிலுவையிலா??”
“ஆமாம்… பாவத்தைக் கரைக்கும் இடம் அதுதானே! அதுபோக நல்லடக்கம் கிடையாது என்பதுதானே அவனுக்கான தண்டனை.
இனிதான் சுவாரசியமே…
இரண்டு பக்கமும் பாரம் தாங்காமல் சிலுவை ஆடுகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் சிலுவை வேரோடு பெயர்க்கப்பட்ட மரத்தைப்போல் சாய்ந்து விழப்போகிறது. அந்தச் சாபம் ஊரையே அழித்துவிடும் என்று அஞ்சி மக்கள் எல்லோரும் பிராத்திக்க, தள்ளாடும் சிலுவையின் முன்பக்கத்திலிருந்து தேவகுமாரன் உயிர் பெற்று எழுகிறார். சிலுவையின் ஆட்டமும் நின்று விடுகிறது. காலராவையும் ஒழித்து விடுகிறார். ஊர்மக்கள் ரட்சிக்கப்படுகின்றனர். கதை சுபமாய் முடிகிறது.”
“சிலுவையின் பின்பக்கம் அறையப்பட்ட சவப்பெட்டி செய்பவன் என்ன ஆனான்??”
“அவன் காலத்துக்கும் சிலுவையிலே அறையப்பட்டுக் கிடப்பான்…!!”
“அவன் இறைவனிடம் வேண்டியதால் தான் இத்தனை சாவு என்று வைத்துக்கொள்வோம், ஆனால் அவ்வூரில் காலராவை ஏவியது என்னவோ ஆண்டவன் தானே…. ஏதோ அவன் மட்டுமே பாவம் செய்தவன் போல. கடவுளுக்கு இதில் பங்கு இல்லாததைப் போல. குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் செயல்… இது சரி கிடையாது…”
“சரி தவறு என்ற ஒன்று உலகில் இருக்கா என்ன?”
நான் பதிலேதும் சொல்லவில்லை.
“இந்த மாதிரியான பேச்சுகளும் கேள்விகளும் எழும் என்று தெரிந்துதான், தொற்றுநோயால் இப்போது உலகில் இத்தனை பேர் இறந்து கொண்டிருக்கும் போதும் கர்த்தர் இன்னும் உயிர்த்தெழவில்லை போல…” எனத் தோள்களைக் குலுக்கிக்கொண்டு கைகளை விரித்து உதட்டைச் சுழித்தார்.

சிலுவையின் ஒருபக்கம் தேவனையும் மறுபக்கம் அம்மனிதனையும் கற்பனை செய்துபார்த்தேன். மீண்டும் கண்ணாடிக் குவளைகளில் பீர் நிரப்பப்பட்டது. கைபேசியை வெளியே எடுத்து நோக்கினேன். கொள்ளைநோய் பற்றிய துணுக்குச் செய்திகளாக உலகமே பரபரத்துக் கொண்டிருந்தது. போனை அணைத்து கீழாடைப் பைக்குள் திணித்துவிட்டு பெருமூச்சுவிட்டேன்.
“எனக்கு வேறு வழியில்லை…” என்றார். “நான் வியட்நாம் செல்ல இருக்கிறேன். அங்கும் நிலைமை மோசம்தான். ஆனால் அங்கு இன்னும் எல்லை மூடப்படவில்லை. எனக்கு விசாவும் கிடைத்து விடும். என்னை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துவார்கள். பரவாயில்லை… எனக்கான மற்ற எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்டு விட்டன, இது ஒன்று தான் இப்போதைக்கு ஒரே வழி.”
“அங்கு என்ன செய்வீர்கள்? யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?”
“இங்கு மட்டும் யார் இருக்கிறார்கள்? வரக்கூடிய நாட்களில் உலகில் எந்த மூலையிலும் யாரும் யாருக்கும் துணையாக இருக்கப்போவதில்லை. நீ சொன்ன காலன் தான் இனி எல்லாருக்கும் பேச்சுத்துணை. ஒருவேளை தாமதித்தால் வியட்நாம் நாட்டிலும் விமானசேவையை நிறுத்திவிடுவார்கள்.”
குடித்துக்கொண்டிருந்த பீர்குவளை காலியானது. தங்கியிருந்த ஹோட்டல் பக்கம் தான் என்றபடியால் இருவரும் நடந்தே சென்றோம்.
“எப்படியோ இன்றைய பொழுது இனிமையாய் முடிந்தது, குட்நைட்…” என்றுவிட்டு தன் அறைக்குப் போனார்.
அன்றைய இரவு நான் கண்ட கனவில், உயரமான மலை உச்சியின் மேல் இரத்தம் தோய்ந்த நிறத்தில் ஒற்றை சிலுவை தெரிகிறது. தேவாலயம் எதுவும் அங்கில்லை. பிரம்மாண்ட சிலுவையின் பின்பக்கம் அறையப்பட்ட மானுடனின் உடம்பிலிருந்து சிந்தும் இளஞ்சூட்டு இரத்தம் பரமபிதாவின் மெழுகு உடலை நனைத்தபடி சொட்டுசொட்டாய் வடிகிறது. வானில் வட்டமடிக்கும் பிணந்தின்னி கழுகு ஒன்று சிலுவையின் மத்தியில் வந்து அமரவும் பாரம் தாங்காத சிலுவை ஆடுகிறது… ஊர் மொத்தமும் கண்ணீர்மல்கத் துதிக்கிறது. ஆனால் இயேசு இன்னும் உயிர்த்தெழவில்லை. பூமி நடுங்க சிலுவை வேகமாய் அதிர்ந்து கொண்டே இருக்கிறது….
அழைப்புமணி அடிக்கும் சப்தம் கேட்டதும் கண் விழித்துப் பார்த்தேன். மணி காலை ஒன்பது! கதவைத் திறந்ததும் ஆரஞ்சு நிற டீ ஷர்ட்டும் காக்கி நிற நீண்ட கால்சட்டையும் அணிந்து ஐரோப்பியர் நின்றிருந்தார்.
“சாரி! இன்னும் முழிக்கவில்லையா…? என் பிளானில் ஒரு திடீர் மாற்றம்! இன்று மதிய பிளைட்டிலேயே நான் கிளம்புகிறேன்… அதைச் சொல்லத்தான் வந்தேன். நீயும் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் உன் நாட்டுக்குக் கிளம்பிவிடு…”
“சரி…” எனத் தலையசைத்தேன். “வியட்நாம் நாட்டில் எங்குத் தங்கப் போகிறீர்கள்?”.
“உலகின் பெருந்துயரமே உனக்கென்று யாருமற்ற இடத்தில் நீ தனியாய் சாவை எதிர்கொள்வது தான். அந்தத் தைரியம் எனக்கில்லை. நான் என் முடிவை மாற்றிவிட்டேன். வியட்நாம் போகவில்லை, ஐரோப்பாவிற்கே திரும்பிப் போகிறேன்… கர்த்தர் ரட்சிக்கட்டும்…” என்று கண் சிமிட்டிவிட்டுக் கிளம்பினார்.
தூரத்தில் ஒரு விரைவு ரயில் தண்டவாளம் அதிர அவரை நோக்கி வருவதாய் உடல் தடதடத்தது.

***

-விஜய ராவணன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *