மேகங்களுக்கிடையில் நிலா பவ்வியமாய் புகுந்து கொண்டது. முன்னெப்போதும் இல்லாதபடி வானம் சிலிர்த்திருந்தது. பொழுதினை ரசிப்பதற்கான எந்த வசதிகளும் இத்தருணத்திற்கு ஏதுவாய் இருக்கவில்லை. மனத்தின் ஓரத்தில் கீறிக் கொண்டிருக்கும் சில மணி நேரங்களிலான துயரங்களின் வழியே ஒரு ராகத்தை மட்டும் உசும்பிக் கொண்டிருந்தது மனது.உப்பு நிலத்தின் அரசனாக வாப்பா வாழ்ந்த போது எங்கள் வீடு மட்டுமே அரண்மனையாகவிருந்தது. உம்மாவுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும்; உப்பு நிலத்துக்குமாய் வாப்பா அரசனாகவிருந்தார்.

குடிப்பதற்கான தீரா தாகத்தில் நாங்கள் சுழன்ற போது, கிணறுகள் தோண்டுவதற்கான பெரும் பணியில் வாப்பா மும்முரமாயிருந்தார். எல்லா வாப்பாக்களையும் போல அவர் இருந்தாலும்; ஏகத்தின் மிதமான குளிரில் கசக்கி எழும் வெப்பச் சுடர் மேனியின் விதப்பில் ஊடறுப்பதைப் போல வாப்பா வேறுபட்டு நின்றார், பிற வற்றையும விட. காலத்தின் அசுர வேகம் பெரும் இடியுடனான மாற்றத்தினை வானில் ஏற்படுத்தியிருந்தது. உப்பு நிலத்தின் ஓடைகள், மிஞ்சிய சவர்ச் சுவையினை நாக்கின் எட்டலில் துலாவிச் சென்றது. எங்கு தோண்டினாலும் வாப்பாவின் நாவில் நல்ல தண்ணீர் உறைக்கவில்லை. இதனால்தான் என்னவோ வாப்பாவின் நிலம் முழுக்க உப்புக்களே பூத்திருந்தன. தோண்டுவதும் மூடுவதுமாய் நிலப்பரப்பு நீட்சியடைந்திருந்தது. வாப்பாவும் விட்டபாடில்லை. உப்புகரச்சியின் பரப்பில் நின்று கறுத்த மேனியின் இடர்நோக்கி ஒழுகும் வியர்வையின் தீட்சத்தில் மீண்டுமொரு உப்புக்கடலை நெய்து கொண்டிருந்தார். மீன்களை விற்பதுதான் வாப்பாக்கு பழக்கமான தொழில். உரையாடலை தொடங்கி வைக்கும் மெலிதான சந்தர்ப்பங்களில் எல்லாம், அனைத்து வித்தைகளையும் ஆழமறிந்து கற்றவன் என சாட்சியம் கூறுவார். விட விடத்த கைகள், செங்குட்டான மறுத்தலை சீர்செய்யும் பார்வைக் கோணங்கள், ஓரளவு கொட்டான், முழுக் கறுப்பு. வேறென்ன சொல்ல வேண்டியிருக்கு எங்கள் உப்பு நிலத்தின் அரசனைப் பற்றி.
சாம்பல் தூரிகைகளின் துமிக்கைகளை, இரண்டு விரல்களுக்கிடையிலான பருமட்ட தொங்கலில் வைத்து தட்டும் போதெல்லாம் வாப்பாவின் சிகரட் உஷ்ணமேறி தீப் பற்றிக் கொள்ளும். மூக்கின் இடைநெரிசலில் சுரித்துக் கொண்டிருக்கும் மீன் வாசனைக்கு முன்பாக உம்மாவின் காதல் வருடல்கள் சாம்ராஜ்ஜியங்களின் பெருந்தகர்ப்பினை நிகழ்த்திக் கொண்டிருந்தன.
வாப்பாவின் இறைபக்தி தியானத்திலானது. தலையிைனை மடித்து முக்கோண முறிவு வட்டத்தில் குனிந்திருப்பார். பாடசாலைக் காலங்களை மீட்டித்தரும் நினைவுகளின் போதுமைக் குணங்கள் வாப்பாவிடம் இருந்ததில்லை. அழுது கண்டிராத இரு மணிக் கண்களும் செந்நிற வெளியினை விட்டு நீண்ட தூரம் அகன்றுவிடாமல்; பற்றற்ற மானுடர்களின் கதை வாழ்வில் நிலைத்து நிற்கும் நாடக நடிகன் ஒருவனின் ஒப்பனைக்கு ஒவ்வாரமிட்டபடியிருக்கும்.

வாப்பாவின் சைக்கிள் பறிபோன கதை ஹாஷ்யமானது. மிகக் குறைவான சிரிப்போடு உலா வந்த அவருக்கான வாழ்வில், எஞ்சியிருக்கும் மீளுருவாக்க கூடார வெளி கட்டுக் கோப்புகளால் ஆனது.

சந்தையின் பின்பக்க மூலையில் சைக்கிளை சாத்தி வைத்து விட்டு பள்ளிக்குச் சென்றிருக்கிறார் வாப்பா. அவருக்கு எந்த நேரமும் உதவியாளராகவிருந்த முழு நேர போதையாளி எங்கள் அங்கிசத்தில் ஒருவர். அங்குமிங்கும் தேடியலைந்ததில் வாப்பாவை தவறவிட்டிருக்கிறார். பள்ளியை தவிர்த்து எல்லா இடங்களிலும் வாப்பாவின் பெயர் கூவி அழைத்திருக்கிறார். போதையின் மிதமான ஆட்டத்தில் அவருக்கான அதிகபட்ச சிந்தனை ஆரோகணச் சிதறலாயிற்று.

ஆடியசைந்து சைக்கிளை ஓட்டி, வீட்டின் முன்பக்க தூணில் சாத்தி விட்டு சென்று விட்டார். இன்றைக்கான போதையில் அவருக்கான பணி உன்னதமானதுதான்.பள்ளி முடித்து வந்த வாப்பா சந்தை முழுக்க சைக்கிளை தேடியலைந்தார். எங்கும் சிக்கி விடாத தருணமொன்றில் திருடன் ஒருவன் கவர்ந்திருக்கக் கூடும் என நினைத்து தன் போக்கில் விட்டு விட்டார். இப்படி வாப்பா தொலைத்த பொருட்கள் ஏராளமிருக்கின்றன என உம்மா முறைப்பட்டுக் கொள்வது சகஜமானதுதான்.
வீட்டிற்கு வந்த வாப்பாவிற்கு இது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். தூணில் சாய்ந்திருந்த சைக்கிளை தடவிப் பார்த்தார். இலேசான விசாரனையினை உம்மாவிடம் நடத்திவிட்டு பிற காரியங்களுக்கு தயாரானார். போதையாளி சைக்கிளை ஓட்டியதையோ, படு கவர்ச்சியாக தூணில் சாத்தி வைத்ததினையோ உம்மா கண்டிருக்கவில்லை. எப்படியோ வந்து சேர்ந்தது எனும் குழப்பவிடுதயைில் அமைதியாயினர்.
பின்னேரத்து சாயம் விம்பியிருந்தது. சினனப்பள்ளியின் முன் கடையில் டீயும், சிகரட்டையும் ஒரே மிடரில் பருகியபடியிருந்திருக்கிறார் வாப்பா. குமிந்திருந்து பேசும் அரசியல் கூட்டாளிகள் வாப்பாவுக்கு குறைவாகவே இருந்தார்கள். சட்டென பதிலொன்றை கூறிவிட்டு நகர்ந்து விடுவார். சரி, பிழைகளுக்கு அப்பால் வாப்பாவின் அறத்தின் வழி அற்புதமானது.

கடைக்கு முன்பாக சாத்தியிருந்த சைக்கிளை மீண்டும் எதிர் கொண்டான் போதையாளி. வீட்டின் தூணில் சாத்தி வைத்த முதலாளியின் சைக்கிள், சின்னப்பள்ளியடி கடைக்கு முன் விறாந்தையில் எப்படி வந்தது என வியாபித்தான். யாரோ திருடி வந்து இங்கே வைத்திருக்கக் கூடும் என்ற சிந்தனைக்கு முன்பாக ஒரு போத்தல் வடி சாராம் எத்துணை மட்டமானது.
: மீண்டும் அந்தப் புயல் இடது திசை நோக்கி வந்தமை போல, போதையாளன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வீடு நோக்கி பயணிக்கலானான். அதே கம்பீரத்துடன் வீட்டுத் தூணில் சாத்தப்பட்டது சைக்கிள். நாளை காலை வீரத்தாபங்களோடு இச்சரிதத்தை முதலாளியிடம் ஒப்புவிக்க நினைத்துக் கொண்டான்.

கடையிலிருந்து வெளியே வந்த வாப்பா கண்களை உலாவவிட்டிருந்தார். அயலில் இருந்தவர்களிடம் “சைக்கிளை கண்டதா?” என விசாரித்தார். மௌனமே பதிலாகி நின்றிருந்த சனக்கூட்டத்தை கிழித்து வீட்டிற்கு நடக்கத் தொடங்கியிருந்தார்.

ஒரே அமைப்பிலான இரண்டு காட்சிகள் இருவேறுபட்ட சமாச்சாரங்களில் தோன்றுவதற்கு ஒப்ப, வீட்டின் தூணில் சைக்கிள் இருப்பதை கண்டு வாப்பா கதிகலங்கிப்போனார்.போதையாளியின் வரலாற்று சரித்திரக் கதையின் பின்னர் வாப்பாவின் மிடரான சிரிப்பு எங்கள் பற்களின் வழியே நகர்ந்த கதை இப்படியேதான் நிகழ்ந்து முடிந்தது. திடகாத்திர உடம்பினை வாப்பா பெற்றிருந்ததெல்லாம் கடின உழைப்பின் பலன்தான். ரெஜிபோம் பெட்டி நிறைய ஐஸ் கட்டிகளை அடித்துக் குமிப்பார். பெரு மூட்டைகளாக சுமந்து வந்து, கட்டைகளின் முறுக்கலான சீற்றத்தோடு வளைவு சுளிவிற்கு ஏற்ப அடிகள் விழுந்து கொண்டிருக்கும். துகளான ஐஸ் கட்டிகளை பெட்டியின் கீழ்தரத்தில் பரப்பி மேல் முழுக்க செந்நிற இறால்களை பரப்பி வைத்திருப்பார். பல பெட்டிகள் கட்டப்பட்டு கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படும். தனியாளாக நின்று வாப்பா செய்யும் இக்கோலங்கள் காற்றின் மேல் பரப்புகளோடு பிரியாத மூர்த்தம் கொண்டவை. மீன்களின் அற்புதமான சுழிவுகள் பற்றி நிறையக் கதைகளை வாப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். மீனம்பர், பொன்னம்பர் பற்றிய மாயக்கதைகளில், பல இரவுகளை வாப்பாவுடன் கழித்திருக்கிறேன். மடிவெடித்து மீன்கள் கடலை நோக்கி ஓடும் போதெல்லாம் சுதந்திரம் பற்றிய பிரக்ஞை வாப்பாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

வாப்பாவின் ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மீன் வாசம், நூற்றாண்டு கால நறுமணங்களை தோற்கடிக்கும் வலு கொண்டது. அவர் எங்களை அரவணைக்கும் போதெல்லாம் அந்த வாடையினை நுகர்ந்து கொள்வோம். வெள்ளையைத்தவிர வேறு ஆடைகள் அணிந்தவராக வாப்பாவை நான் கண்டதில்லை. ஆடையில் படிந்திருக்கும் மீன்களின் செதில்களை அகற்றுவதற்கு உம்மா நன்கு பழகியிருந்தார். உப்புப் படிந்திருக்கும் எங்கள் கிணற்றுத் தண்ணீருக்கு ஒரு சூட்சபமான சுவையிருந்தது.

எங்கள் வீடும் குளத்தில்தான் முளைத்திருந்தது. உப்பின் அதிகாரத்தில் நிரம்பியிருந்த அக்குளத்தை உப்புக் கரச்சி என்பார்கள். ஒரு தடவை வாப்பா அனுப்பிய விலாங்கு மீன் சீறிப் பாய்ந்ததில் உம்மா பயந்து போனார். பாம்பு என நினைத்து குளத்தில் எறிந்து விட்டார். வாப்பாவிற்கு கோபத்தினை அடக்க முடியவில்லை. பெரும் சண்டையாகி விட்டது. உப்புக் கரச்சியில் விலாங்கு மீன்கள் சுதந்திரமாய் திரியட்டும், என வாப்பாவினை சமாதானப்படுத்த முடியவில்லை. சுதந்திரம் என்பது பசியுடன் சம்பந்தப்பட்டது என வாப்பா நம்பியிருந்தார்.
இங்கு புனிதங்கள் மீதான ஓரக்கண் பார்வைதான் நிரம்பி வழிகிறது. மனித குணங்களில் பதுங்கிக் கொண்டிருக்கும் காதல் வாடை காலத்தின் பரிதவிப்பினை எழுதிச் செல்கிறது. யாரும், யாரையும் நொந்து விடாதபடி கரிசனை மனம் தடுத்தும், மனித உள்ளங்களின் கசடினை மீறியமைக்க கட்டுமானங்கள் இல்லாமலிருக்கின்றன. கருத்துப் பறிமாற்றங்களின் விலங்காக மாத்திரமன்றி, மோதலின் உருவாக்கமாக மனிதர்கள் மீதான காதல் அமைந்து விடுகின்றன. இத்தனைக்கும் மத்தியில் மெல்லிய கோடாய் வெளிப்பட்டு நிற்கும் அன்பு நிறைந்த மனிதர்கள் எப்படியெல்லாம் புனிதமானவர்களாயிருக்கின்றனர்.
வாப்பாவின் ஊது மந்திரமேதான் உப்புக்கரச்சி முழுக்க பரவியிருந்தது. கபடமற்ற மனித நெஞ்சங்களும், நேசமும் காதலும் கலந்திருந்த உறவுகளும், வசந்தத்தின் விம்பங்களுமாய் வானம் பிணைந்திருந்த இலையுதிர் காலமது. பிராத்தனைகளுடனும், முனுமுனுக்கும் தஸ்பீஹ் ஓசையுடனும் எந்த நேரமும் நடை பவனியாக வாப்பா வலம் வருவார். அவரது கை படாத எந்தக் கிணற்றின் வாசமும் எங்கள் வீட்டின் முழுமத்தியில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

உப்புக்கரச்சி முழுவதுமாய் நிரம்பியிருக்கும் நீரில், கால் நனைத்து விடாத எந்தக் குழந்தைகளும் இருந்து விட முடியாது. கெழுத்தி, குறட்டை, பனையான், செல்வன் என உப்புக்கரச்சியின் ராஜ்ஜியம் பெருவெளியாய் விரிந்து கிடந்த காலமது. பெரும் கோடைக் காலங்களில் மாத்திரம் உப்புக்கரச்சியின் நீரற்ற வெளியினை பார்க்க முடியும். இடைவெளி விட்டுப்போன சுரிகளுக்கு நடுவே பொட்டியான் குஞ்சுகள் செத்துக் கிடக்கும். மஞ்சளின் புட்டியினை மையமாக வைத்து ஒரு விளையாட்டு மைதானம் அடிக்கடி முளைத்து மறைந்து போகும். மாரி காலங்களில் உப்புக்கரச்சியின் நீரினை வாரிக் கொண்டு முகத்தில் தூர்விட்டெரியும் சாறலில் தலையிடி, காய்ச்சல், தடிமல் வராத எந்த மானுட ஜென்மங்களையும் காண்பது அரிது.

வெட்ட வெளியான பரப்பென்பதால் பேய்கள், சைத்தான்களின் நடமாட்டம் ஆங்காங்கே தென்படுவதுண்டு. வெள்ளைப் புடவை உடுத்துக் கொண்டு நடந்து வந்த மூத்தம்மா திடீரென மறைந்து விட்டதாக மஃரிப் நேரத்தில் பதறியடித்துக் கொண்டு வந்தாள் றாத்தா. பேயினைக் கண்டால் அடுத்த நாளில் காய்ச்சல் வந்து விடும். இப்படியான காய்ச்சலுக்கு மருந்திருப்பதில்லை.

மனிதர்கள் நோயோடும், வலியோடும் வாழ்வின் மிச்சமிருக்கும் நிலவரங்களினையும் வாப்பா நன்றாகவே அறிந்திருந்தார். வாழ்வின் மிக உன்னதமான மனிதர்கள் இப்படியே வாழ்ந்து பெருவெடிப்பாய் எம் மனதில் கலங்கமற்று தெரிகிறார்கள் என்பதை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். எத்தனை வருடங்கள் கழிந்தாலும் நினைவுகளின் அப்பிய முகம் எம கண்முன்னே நீட்டி நிமிர்ந்து நிற்பதைப் போல, எதனைக் கொண்டும் அழித்து விட முடியாத இந்த நினைவுகளுக்கு மனிதர்களின் அன்பும், காதலுமே காரணமாய் தளைத்து விளைந்திருக்கிறது.

காலத்தின் விரல்களின் வீரமும், தழும்பிக் கொண்டிருக்கும் வாயும், உற்றுப் பார்க்கும் கண்களும் மௌனத்தினை மொத்தமாய் விழுங்கியிருந்தன. காற்றின் அசைவோடு கலங்கிப்போன அந்த தென்னை மரத்திலிருந்து ஒவ்வொரு கீறல்களும் வெளியிறங்கலாயிற்று. காலத்தின் அசூர வேகத்தில் உப்புக்கரச்சி நிரப்பப்பட்டு இன்று மாடா மாளிகைகளின் இருப்பிடமாயிருக்கிறது. ஆனாலும் வானத்தின் இடைவெளிகளிலிருந்து வாப்பாவின் ரம்மியக் குரல் இந்த உப்பு நிலம் முழுக்க பிரண்டு திரிவதை யாரால்தான் தடுத்து நிறுத்த முடியும்?. வாப்பா நிழல் கோடாக என்னுள் பதிந்து இன்றுடன் நீண்ட நாட்களாகின்றன. அவரின் நோயில் இருத்தல் பற்றிய கதையினை நினைத்தழும் போதெல்லாம் நேரம் நள்ளிரவினைத் தாண்டியிருந்தது. வீதி முழுக்க வாப்பாவின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருப்பது போலவும், கம்பங்களில் அவரது கொடி பறப்பது போலவும், கைகளில் இடுக்கில் சிகரட்டின் மிகுதி தீட்டப்பட்டிருப்பது போலவும் கனா கண்டேன். என் கனவிலிருந்து வெளியிரங்கிய வாப்பா பாதை ஓரமொன்றில் நிமிர்ந்தபடி நிண்டிருந்தார். அவரது உடம்பு முழுக்க காதலும் காயங்களும், கூரிய கற்களின் சீவப்பட்ட நுனியிலிருந்து கடலும் வெளியாகிக் கொண்டிருந்தது. பிறகு என்னால் தூங்க முடியவில்லை. கனவிலிருந்து வெளிப்பட்ட வாப்பாவினை மீண்டும் என் கண்வழியே அனுப்பிவிடுவது பற்றி தீவிரமாக ஆலோசிக்க தொடங்கினேன். விடிவதற்குள் வாப்பாவினை கண்டுபிடிக்க வேண்டும். இந்த உலகத்தின் மகாந்திர மனிதர்களிடம் வாப்பா சிக்கிக் கொள்ள கூடாது. அவரது காதலைப் பகிர்ந்து தோல்வியடையக் கூடாது. இரண்டாவது முறை வாப்பா மரணித்துவிடக் கூடாது. எல்லா வாப்பாக்களையும் போல, எல்லா உணர்ச்சிகளையும் போல, எல்லா கண்கள், இருதயங்கள், உதடுகள், தோள்பட்டைகள் என வாப்பா அப்பட்டமான ஜீவனாகவே இருந்தார். அப்படி விசித்திரமாக அவரிடத்தில் வேறொன்றும் இருக்கவில்லை, காதலைத் தவிர.

வாப்பா படுக்கையில் கிடந்து வாழ்ந்த போது அவருக்கென உலகமிருந்தது. சில குழந்தைகளும், முன்பொருநாள் இறந்து போன மகனின் ஞாபகங்களும், நேசத்திற்குரிய உம்மாவுமே எஞ்சியிருந்தனர். வாப்பாவின் உணர்ச்சிகளுக்கான வார்ப்புகளை இந்த உலகம் புரிந்து கொள்ள மறுத்த சூழலில் இன்னொரு உலகுடன் சல்லாபம் கொள்ள புறப்பட்டார். இந்த நொடியிலிருந்து வாப்பாவை விசித்திரமாக கண்காணிக் தொடங்கியது இந்த உலகம். வாப்பாவின் நடக்க முடியா நடை பற்றியும் அவரது மார்பு பற்றியும், குனிந்த பார்வை பற்றியும் சிலாகிப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை. அவரது இருவரி பேச்சு போலவே தன்னை நிர்வகித்துக் கொண்டார். சிலரை பார்த்து சிரித்தார், சமயங்களில் அழுதார். வாப்பாவினை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்பாடுகளுக்கு அப்பால் பட்டவராக வாப்பாவை அடையாளம் கண்டனர்.

வாப்பா இந்த உலகத்தில் மீண்டுமொரு முறை வெளிவந்திருப்பது எவ்வளவு ஆபத்தானது. வாப்பாவின் நோயில் ஆத்மார்த்தம், விலங்கிடுதல் புண்ணியம் எல்லாமுமே ஒன்றுதான். வாப்பா பச்சதாப்படும் சொல். அல்லது மகாந்திர மனிதர்கள் வாழும் உலகத்தின் பட்சி. ஆம் வாப்பா பட்சிதான். அவரின் விரிந்த உலகத்தின் எல்லா பரப்புக்களிலும்.

மூசாப்பு வெளிச்சத்தின் தோரணை ஔிபோல விழுந்திருந்தது வாப்பாவின் தேகம். இஸ்ராயீலின் முகம் தெரியத்தொடங்கியது. இறுதியாக எனது குரலின் ஈறல் சப்தத்தை வாப்பா கேட்டார். சாப்பிட்டுவிட்டதும் இடிச்சத்துக்கு கீழே வாப்பா தூங்கும் போதும் இப்படியிருந்ததில்லை. இன்று மரணத்தை ஒத்த சப்தமுடையதாய் மாறியிருந்தது நிசப்தம். வாப்பாவின் ஆடை பெரிதளவு நனைந்திருந்தது. அவரது கண்களை அது கரிக்கச் செய்திருக்க வேண்டும். அங்குமிங்கும் புரண்டு படுக்க முயலவில்லை. வாப்பாட உம்மா இருந்திருந்திருந்தாள் ஒரு கதை சொல்லியிருப்பார். வழமையாக அவர் சொல்லும் கதைதான். வப்பா உம்மாவை காதலித்த கதை. திருமணம் செய்யும் போது பதினாறு வயது உம்மாவுக்கு. வாப்பாவைத் தவிர அவள் எதையுமே அறிந்திருக்கவில்லை

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழும்பிவிடுவார். கூட்டாளிகள் எல்லோரும் சின்னப்பள்ளிக்கு முன்பாகவே கூடுவார்கள். அக்கரைப்பற்றின் வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் பெரும் போராளியவர். அவருக்கிருந்தது கடல் மாத்திரம்தான். அதனைத்தான் யாருக்கும் விற்காமலிருந்தார். இன்னும் கடலுக்கு என்ன கடனைத்தான் கொடுக்க முடியுமாயிருக்கும் அவருக்கு.

இந்தக் காலம் முடிந்தவுடன் மீட்பதாக வாக்குறுதி அளித்திருந்தது கடல். உம்மாவின் முகத்தினை பார்த்தார். பிரம்மை பிடித்தவர் போல வானைப் பார்த்தார். அவரது கண்கள் விரிந்து நிற்பது அச்சத்தை தந்தது. ‘படுங்கள் வாப்பா போதும்’ என்றபடி கையை விட்டு இறங்கிவிட்டேன்.அதற்குப் பிறகு வாப்பா தூங்கவில்லை.ஆனாலும் அவரது மௌத்திற்குப் பிறகு கடல்தான் உறங்காமலிருந்தது.

***

-சாஜித் அஹமட்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *