அப்பா ஒப்பனைக் கண்ணாடியின் முன்
வெகுநேரமாய் அமர்ந்திருக்கிறார்
கூத்துக்காட்சியில்
அவர் நுழையும் நேரமிது.
தாளக்காரர்கள் சுருதியை ஏற்றி ஏற்றி இறக்குகிறார்கள்
கட்டியங்காரர் ஓய்ந்துவிட்டார்
சனங்கள் கொட்டாவி விடுகிறார்கள்
அப்பாவுங்கூடத் தயார்தான்
பொங்கியெழுகிற இந்தக் கண்ணீர் மட்டும் அடங்கிவிட்டால்
ஒப்பனையை ஆரம்பிக்கலாம்.

அப்பாவைக் கட்டிவைத்திருக்கிறார்கள்
நாசியிலிருந்து வடியும் ரத்தத்தில்
அநியாயத்துக்கு ஈ மொய்க்கிறது
இன்னும் எவ்வளவு நேரம் அடிப்பார்களோ
யாருக்குத் தெரியும்?
வெயில் உச்சிக்கு ஏறுகிறது,
ஊர் போய்ச் சேர வேண்டும்
இறுமுகிற சாக்கில் கண்களைச் சுழற்றி
கூட்டத்தில் என்னைத் தேடுகிறார்
உள்ளங்கையில் பத்திரமாய்ச் சேகரித்துவைத்திருக்கும்
அவரது மூன்று பற்களையும் காட்டிச் சிரிக்கிறேன்
பெருமூச்சோடு தலைகவிழும் அப்பாவின்
பின்புறம் நிற்கிறவன்
கைகளைப் பிணைத்திருக்கும் கயிற்றை
அவிழ்த்துவிடுகிறானா
மேலும் இறுக்குகிறானா
தெரியவில்லை.

காவு கொடுக்கப்பட்ட ஆட்டின்
கழுத்துமணியை சந்தோசமாய் இசைத்தபடி ஓடுகிறாள் சிறுமி
வெகுநாட்களுக்குப் பிறகு
சீட்டாட்டத்தில் ஜெயித்திருக்கிறார் அப்பா.
வண்டி நோக்காலுக்குப் புதுக்கயிறு
விரித்துப்படுக்க சணல்சாக்கு
சிரங்குக் களிம்பு
கொஞ்சம் பன்றிக்கறி
போக மீதக்காசில்
கொஞ்சமே கொஞ்சமாய் அவர் குடிக்கும்
சாரயத்துக்குக் கடித்துக்கொள்ள,
பாத்தியிலிருந்து ஒரு சிறுகிழங்குச் செடியைப்
பிடுங்கி
வாய்க்காலில் அலசிக்கொண்டிருக்கிறேன்.

***

-வெய்யில்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *