1999-ஆம் ஆண்டில் வெனிசுவேலாவில் இருந்து நான் திரும்பிய பிறகு, என்ரிக் லின்னின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதுபோலக் கனவுகண்டேன். அந்த நாடு சீலேயாகவும் நகரம் சன்தியாகோவாகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு காலத்தில் சீலேயும் சன்தியாகோவும் நரகத்தைப்போல இருந்தன என்பதை நினைவில்கொண்டால் உண்மையான நகரம் கற்பனை நகரம் இரண்டின் உள்ளடுக்கில் ஏதோ ஒரு வகையில் அந்த ஒப்புமை நிரந்தரமாகத் தங்கியிருக்கும். லின் இறந்துவிட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடன் இருந்தவர்கள் அவரைப் பார்க்க அழைத்துப்போகிறேன் என்று சொன்னதும் தயக்கமேதுமின்றி ஒத்துக்கொண்டேன். ஒருவேளை அவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள் என்றோ அதிசயமான நிகழ்வேதும் சாத்தியமாகலாம் என்றோ நினைத்தேனோ என்னவோ. ஆனால் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருந்துவிட்டேன் அல்லது அவர்களின் அழைப்பைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.

எப்படி இருந்தாலும், ஏழு தளங்களை உடைய அந்தக் கட்டடத்துக்கு வந்து சேர்ந்தோம். அதன் முன்புறத்துக்கு வெளிர்மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. கீழ்த்தளத்தில் நீளமான பரிமாறும் மேசையும் நிறைய தனியறைகளும் கொண்ட பெரிய மது விடுதி இருந்தது. என்னுடைய நண்பர்கள் (அவர்களை இப்படி அழைப்பது விந்தையாக இருந்ததால் கவிஞரைச் சந்திக்க அழைத்துச்செல்ல முன்வந்த ஆர்வலர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்) அப்படி ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றார்கள், அங்கே லின் இருந்தார். முதலில் அவரை அடையாளம் தெரியவில்லை. இதுவரை புத்தகங்களில் பார்த்திருந்த முகமல்ல அது. அதைவிடவும் மெலிந்து, இளமையாக, அழகாக இருந்தார். அவருடைய கண்கள் புத்தகங்களின் மேலட்டைப் புகைப்படங்களில் இருந்ததைவிடவும் அதிகமாக ஒளிவீசின.

உண்மையில், லின் பார்க்க லின் போலவே இல்லை. ஹாலிவுட்நடிகரைப்போல இருந்தார், ஐரோப்பாவின் திரையரங்குகளில் திரையிடப்படாமல் நேரே வீடியோக்களுக்கு அனுப்பிவைக்கப்படும் தொலைக்காட்சிப் படங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் இரண்டாம்தர நடிகரைப்போல இருந்தார். அதே நேரத்தில் அவர்தான் லின் என்பதில் சந்தேகமேயில்லை. ஆர்வலர்கள் அவருக்கு வணக்கம் சொன்னார்கள். நன்கு அறிமுகமானவர்களைப்போல போலியான நெருக்கத்தை வரவழைத்துக்கொண்டு என்ரிக் என்று அழைத்தார்கள். எனக்குப் புரியாத கேள்விகளை அவரிடம் கேட்டார்கள். பிறகு எங்கள் இருவரையும் அறிமுகம் செய்துவைத்தார்கள். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் ஒரு காலத்தில், குறைந்த காலமென்றாலும் அவருடன் கடிதம் வழியாக உரையாடி இருக்கிறேன். ஒரு வகையில் அவருடைய கடிதங்கள் வாழ்வதற்கான ஊக்கத்தை எனக்குக் கொடுத்தன.

1981 அல்லது 1982-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். செரோனாவுக்கு வெளியே இருந்த வீட்டில் உலகைவிட்டு ஒதுங்கித் தனியாக நான் வசித்த சமயம் அது. கையில் காசில்லை, அது கிடைக்கும் நம்பிக்கையும் கொஞ்சமும் இல்லை. ஒரு சில மூத்த புகழ்பெற்ற எழுத்தாளர்களைத்தவிர (அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு) இலக்கியம் என்பது எதிரிகளால் கைப்பற்றப்பட்ட கண்ணிவெடி புதைத்த நிலம்போல இருந்தது. ஒவ்வொரு நாளும் கண்ணிவெடி புதைத்த நிலத்தின் வழியே நடக்கவேண்டியிருந்தது. ஒரு அடி பிசகினாலும் உயிரை மாய்த்துவிடும். அர்க்கிலோகஸின் கவிதைகள் மட்டுமே வழித்துணையாக இருந்தன. எல்லா இளம் எழுத்தாளர்களின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது.

எந்தவிதமான ஆதரவும் கிடைக்காத நேரமொன்று இருக்கும்  நண்பர்களிடம் இருந்தும்கூடக் கிடைக்காது. வழிகாட்டும் ஆசான்களை அறவே மறந்துவிடலாம். உங்களுக்குக் கைகொடுக்க ஒருவரும் இல்லாமல் போகலாம். இதழ் பதிப்பு, பரிசு, உதவித்தொகை  இவையெல்லாம் மீண்டும் மீண்டும் “ஆமாம் சாமி” போடுபவர்களுக்காக அல்லது ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துவதிலும் அதை மீறுபவர்களைத் தண்டிப்பதிலும் கொண்டிருக்கும் நாட்டத்தினால் மட்டுமே தனித்துத் தெரியும் இலக்கிய பீடாதிபதிகளின் முடிவேயில்லாத கூட்டத்தைப் புகழ்ந்து தள்ளுபவர்களுக்காக மட்டுமே ஒதுக்கிவைக்கப்பட்டதுபோலத் தோன்றும். அவர்களிடம் இருந்து எதுவும் தப்ப முடியாது, எதையும் எளிதில் மன்னிக்கவும் மாட்டார்கள். எப்படி இருந்தாலும், நான் சொன்னதுபோல, எல்லா இளம் எழுத்தாளர்களும் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நிச்சயம் இப்படி உணர்ந்திருப்பார்கள். அந்தச் சமயத்தில் எனக்கு 28 வயதாகி இருந்தது, எந்த வகையிலும் என்னை இளம் எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. வாழ்க்கையின் போக்கில் சென்றுகொண்டிருந்தேன். அரசாங்க சம்பள மானியத்தைப் பெற்றுக்கொண்டு  ஐரோப்பாவில் வசிக்கும் வழக்கமான இலத்தீன்-அமெரிக்க எழுத்தாளன் இல்லை நான். ஒன்றும் இல்லாதவன் என்பதால் யாரின் கருணையையும் யாசிக்கவோ யார்மீதும் கருணை காட்டவும் முடியாது.

அப்போதுதான் என்ரிக் லின்னுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தேன். நான்தான் முதலில் எழுதினேன். அவருடைய பதிலுக்காக நீண்டகாலம் காத்திருக்கும் அவசியம் ஏற்படவில்லை. நீளமான சிடுசிடுவென்ற தொனியில் எழுதப்பட்ட பதில் கடிதம் வந்தது, சீலேயில் சொல்வதுபோலத் துயரமும் எரிச்சலும் கலந்திருந்தது. அதற்கு நான் எழுதிய பதிலில் என்னுடைய வாழ்க்கை, கிராமத்தில் ஜெரோனாவின் எல்லையில்  மலையின்மேல் இருந்த என் வீடு, அதற்கு நேரெதிரே இருந்த இடைக்காலத்தில் நிறுவப்பட்ட நகரம், அதற்குப் பின்புறம் இருந்த பரந்தவெளி – எல்லாவற்றைப் பற்றியும் எழுதினேன். என்னுடைய நாய் லைக்கா பற்றியும் ஒன்றிரண்டைத் தவிர சீலே இலக்கியம் மொத்தமும் உடல்கழிவைப்போன்றது என்ற என் கருத்தையும் எழுதினேன். அவருடைய அடுத்த கடிதத்திலேயே நாங்கள் நண்பர்களாகிவிட்டோம் என்பது தெரிந்தது. புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் யாரென்றே தெரியாத நபரிடம் நட்புக்கொள்ளும்போது என்ன நடக்குமோ அதுதான் அடுத்து நடந்தது.

என்னுடைய கவிதைகளைப் படித்ததும் சீலே-வடஅமெரிக்கக் கல்வி நிறுவனமொன்றில் இளம்தலைமுறையினரின் படைப்புகளை வழங்குவதற்காக அவர் ஏற்பாடு செய்திருந்த படிப்பு வட்டத்தில் அவற்றுள் சிலதைச் சேர்த்துக்கொண்டார். 2000-ஆம் ஆண்டில் சீலே கவிதை உலகின் ஆறு கவிதைப் புலிகளாக இருக்கக்கூடியவர்கள் என்று அவர் நினைத்தவர்களின் பெயர்களைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பெர்தோனி, மகுவேரா, கோன்சாலோ முனோஸ், மார்ட்டெனிஸ், ரொட்ரிகோ லிரா இவர்களோடு என்னையும் சேர்த்து ஆறு புலிகள் என்று குறிப்பிட்டிருந்தார். ஏழு புலிகளாகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஆறு புலிகள்தான் இருந்தன என்று நினைக்கிறேன். 2000-மாவது ஆண்டில் எங்கள் ஆறு பேரில் ஒருவரும் பெரிதாக எதுவாகவும் ஆகவில்லை. குழுவிலேயே சிறந்தவனான ரொட்ரிகோ லிரா அதற்குள்ளாகத் தற்கொலை செய்துகொண்டிருந்தான். அவனுடைய மிச்சம் ஏதோ ஒரு கல்லறையில் அழுகிக்கொண்டிருக்கும் அல்லது சாம்பலாகி சன்தியாகோ தெருக்களின் குப்பையோடு காற்றில் அலைந்துகொண்டிருக்கும். புலி என்பதைவிடப் பூனை என்று சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். எனக்குத் தெரிந்தவரையில் பெர்தோனி கடலருகே கிளிஞ்சலும் கடல்பாசியும் பொறுக்கியபடி வாழும் ஹிப்பியாகியிருந்தான்.

மகுவேரா, கார்டெனால் மற்றும் கோரொனில் உர்டெக்கோவின் வடஅமெரிக்கக் கவிதைகளின் தொகுப்பு பற்றிய நுட்பமான ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி, இரண்டு புத்தகங்களைப் பதிப்பித்துக், கடைசியில் குடியில் மூழ்கினான். கோன்சாலோ முனோஸ் மெக்சிகோவுக்குப் போனான் என்று கேள்விப்பட்டேன். அங்கே லௌரியின் ஆலோசகரைப்போல விளம்பரத் துறையில் நுழைந்து மொத்தமாகக் காணாமல் போனான். ‘டூசம்ப் டூ சினே ‘ பற்றிய தீவிரமான ஆய்வறிக்கை ஒன்றை எழுதிவிட்டு இறந்துபோனான் மார்ட்டெனிஸ். ரொட்ரிகோ லிராவோ, அவனுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் ஏற்கனவே சொன்னேனே. எப்படிப் பார்த்தாலும் புலி என்பதைவிடப் பூனை என்பதுதான் பொருத்தமாக இருக்கும். பரந்துபட்ட பிரதேசத்தின் பூனைக்குட்டிகள்.

எனக்கு லின்னை நன்றாகத் தெரியும் என்பதால் அறிமுகம் தேவையில்லை என்பதைத்தான் சொல்லவந்தேன். இருந்தாலும் ஆர்வலர்கள் அறிமுகம் செய்துவைத்தனர். நானோ லின்னோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆக, அந்தத் தனியறைக்குள் நாங்கள் இருந்தோம்; இதுதான் ரொபெர்த்தோ பொலான்யோ என்ற குரல்கள் கேட்டன. என் நீட்டிய கரத்தை தனியறையின் இருள் சூழ்ந்தது. கொஞ்சம் குளிர்ந்துபோயிருந்த லின்னின் கரத்தைப் பற்றினேன், அது என் கரத்தை சில வினாடிகள் இறுகப் பற்றியது. துயரமுற்றவரின் கையைப்போல இருக்கிறது என்று நினைத்தேன். என்னைக் கொஞ்சமும் அடையாளம் தெரியாததுபோலத் துளைத்தெடுத்து ஆராய்ந்துகொண்டிருக்கும் முகத்தோடு ஒத்துப்போகும் கையும் கைகுலுக்கலும் என்று நினைத்தேன். அந்தப் பரிமாற்றம் வெறும் அசைவியக்கமாக உடலளவில் மட்டும் நடந்தது. என்னிடம் சொல்வதற்கு ஏதுமில்லாத தெளிவற்ற உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக இருந்தது.

அந்தக் கணம் கடந்ததும், ஆர்வலர்கள் மறுபடியும் பேச ஆரம்பித்தார்கள், மௌனம் கலைந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விவகாரங்கள் குறித்தும் நிகழ்வுகள் குறித்தும் லின்னின் கருத்தைக் கேட்டனர். அந்தப் புள்ளியில்தான் அவர்களிடம் எனக்கிருந்த வெறுப்பு காற்றில் கரைந்தது. ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். யார் ஆதரவும் இல்லாத இளம் கவிஞர்கள். சீலேயின் புதிய மத்திய-இடது சாரி அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள். எந்தவிதமான பின்புலமோ பணபலமோ இல்லாதவர்கள். அவர்களுக்கென இருந்ததெல்லாம் லின் மட்டுமே. இந்த லின் புத்தக அட்டைப்படங்களில் இருந்த உண்மையான என்ரிக் லின்னைப் போல இல்லை. அதைவிட  அதிக அழகும் கவர்ச்சியும் கொண்டவராக இருந்தார். இந்த லின் அவருடைய கவிதைகளை ஒத்திருந்தார், அவர்களுடைய வயதுக்காரனாகத் தானும் மாறியிருந்தார், அவருடைய கவிதைகளைப் போன்ற கட்டடங்களில் வசிப்பவராக, இருந்தார். நேர்த்தியான திடமான கருத்துக்களைத் தாங்கிய அவருடைய கவிதைகள் சில நேரங்களில் மாயமாக மறைவதுபோலவே தானும் மறைந்துபோனார். இந்த உண்மை புலப்பட்டதும் கொஞ்சம் நலமாக இருப்பதைப்போல உணர்ந்தேன் என்பது நினைவுக்கு வருகிறது.

நிலைமை புரியத் துவங்கியதும் சிரித்தேன். நான் எதுகுறித்தும் பயப்பட வேண்டியதில்லை: என்னுடைய இடத்தில், என் நண்பர்களுடன், நான் எப்போதும் வியந்து பார்க்கும் எழுத்தாளருடன் இருந்தேன். இது ஒன்றும் திகில்படத்தில் வரும் காட்சியல்ல. அல்லது முழுக்க முழுக்க திகில்படம் அல்ல என்றாலும் நிறைய இருண்ட நகைச்சுவை கலந்த திகில்படம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இருண்ட நகைச்சுவையைப் பற்றி நான் நினைத்ததும் ஒரு பெரிய மாத்திரைப் புட்டியைப் பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்தார் லின். மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு மாத்திரை சாப்பிடவேண்டும் என்றார். ஆர்வலர்கள் மறுபடியும் அமைதியானார்கள். பரிசாரகர் கண்ணாடி கிளாஸில் தண்ணீர் கொண்டுவந்தார். மாத்திரை பெரியதாக இருந்தது. தண்ணீர் கிளாஸுக்குள் அது விழுவதைப் பார்த்தபோது அப்படித்தான் நினைத்தேன். உண்மையில் அது பெரியதாக இல்லை. அடர்த்தியாக இருந்தது.

லின் அதைத் தேக்கரண்டியினால் உடைக்க ஆரம்பித்ததும் எண்ணற்ற அடுக்குகளைக்கொண்ட வெங்காயத்தைப்போல இருக்கிறதென்று நினைத்தேன். கண்ணாடி கிளாஸுக்குள் எட்டிப்பார்த்தேன். அது முடிவே இல்லாத மாத்திரையென்று ஒரு கணம் நினைத்தேன். கண்ணாடி கிளாஸின் வளைந்த வெளிப்பக்கம் உருப்பெருக்கியாக மாறியது: உள்ளே இருந்த இளம்சிவப்பு நிற மாத்திரை பேரண்டமோ விண்மீன்திரளோ பிறப்பதுபோலக் கரைந்தது. விண்மீன்திரள்கள் ஒன்று திடீரென்று பிறக்கும் அல்லது இறக்கும், எதுவென்று மறந்துவிட்டேன். கண்ணாடி கிளாஸின் வளைந்த பக்கத்தின் வழியே நமக்குப் புரியாத ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு சுருங்கும் உட்கணமும் ஒவ்வொரு நடுக்கமும் மந்தமான கதியில் நடைபெறுவதைப் பார்க்கமுடிந்தது. கொஞ்சநேரத்தில் களைப்படைந்து பின்னால் சாய்ந்து உட்கார்ந்தேன். மாத்திரையில் இருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்து லின்னைப் பார்த்தேன். எதையும் சொல்லாதே. இந்த மருந்தை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை விழுங்குவதே சிரமமாக இருக்கிறது, நீ வேறு தண்ணீர், வெங்காயம், நட்சத்திரங்களின் மந்தமான அணிவகுப்பு என்று அதன் இடுகுறிப் பொருளைத் தேடாதே என்று சொல்வதுபோல இருந்தது.

ஆர்வலர்கள் மேசையைவிட்டு நகர்ந்தார்கள். சிலர் மதுபானம் பரிமாறப்படும் இடத்தில் இருந்தார்கள். மற்றவர்கள் எங்கே என்று தெரியவில்லை. மீண்டும் லின்னைப் பார்த்தபோது அவருக்குப் பக்கத்தில் இருந்த ஆர்வலர் காதில் எதையோ குசுகுசுத்துவிட்டு நண்பர்களைத் தேடுவதற்காக நகர்ந்து செல்வதையும் கவனித்தேன். தான் இறந்துவிட்டோம் என்பது லின்னுக்குத் தெரியும் என்பதை அந்தக் கணத்தில் புரிந்துகொண்டேன். என் இதயம் என்னைக் கைவிட்டது என்றார். அது இப்போது உயிரோடு இல்லை என்றார். ஏதோ சரியாக இல்லையே என்று தோன்றியது. லின் புற்றுநோயால் இறந்தார், இதயநோயால் அல்ல. ஏதோ பெரிய பாரம் அழுத்துவதுபோல உணர்ந்தேன். கொஞ்சம் கை காலை நீட்டி நடக்கலாம் என்று எழுந்துகொண்டேன். மதுபானம் பரிமாறப்படும் இடத்துக்குப் போகாமல் சாலைக்குப் போனேன். நடைபாதை சாம்பல் நிறத்தில் மேடுபள்ளமாக இருந்தது. எல்லாவற்றையும் பிரதிபலித்திருக்க வேண்டிய ஆனால் அப்படி எதையும் செய்யாத ரசம்பூசாத கண்ணாடியைப்போல இருந்தது வானம்.

இருந்தபோதிலும் எல்லாம் இயல்பாக இருப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டு பார்த்தவற்றில் எல்லாம் பரவியது. போதுமான அளவு காற்று வாங்கிவிட்டு உள்ளே செல்லும் நேரமாகிவிட்டது என்று தோன்றியதும் படியேறிக் கதவை நெருங்கியபோது (கற்படிகள், ஒவ்வொன்றும் கருங்கல்லைப்போன்ற ஒரே கல்லினால் ஆனது, இரத்தினக் கல்லைப் போலப் பளபளத்தது) என்னைவிட உயரம் குறைவான ஐம்பதுகளில் வாழ்ந்த கொலைகாரர்களைப்போல உடையணிந்த ஒருவன் எதிரே வந்தான். பார்க்க கேலிச்சித்திரம்போல இருந்தான். நட்புறவு பாராட்டும் கொலைகாரனுக்கு எடுத்துக்காட்டைப்போல இருந்தவன் அவனுக்குத் தெரிந்த வேறொரு நபரோடு என்னைக் குழப்பிக்கொண்டு வணக்கம் சொன்னான். அவனை இதற்கு முன்னால் பார்த்ததில்லை என்பதும் என்னை வேறு யாரோ என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதும் உறுதியாகத் தெரிந்தாலும் நானும் பதிலுக்கு வணக்கம் சொன்னேன். ஆனால் அவனை முன்பே தெரியும் என்பது போலவும் வேறு யாரோ என்று நினைத்துக்கொண்டுவிட்டேன் என்பது போலவும் நடந்துகொண்டேன். மின்னும் கருங்கல் படிக்கட்டில் ஏறியபடியே பேசினோம். கொலைகாரனின் குழப்பம் சில நொடிகள் மட்டுமே நீடித்தது. தான் தவறுசெய்துவிட்டது புரிந்ததும் நீயும் தவறாக நினைத்துவிட்டாயா என்பதுபோல வித்தியாசமாகப் பார்த்தான். அல்லது முதலில் இருந்தே வேண்டுமென்றே அவனைக் குழப்புகிறேனோ என்பதுபோலப் பார்த்தான். அவனுக்கே உரிய வகையில் கூர்மையான அறிவுகொண்டவனாக இருந்தாலும் பலத்த சந்தேகத்துடன் என்னைப் பார்த்தான். வன்மமான சிரிப்போடு நீ யார் என்று கேட்டான். ” ஜரா, நான்தான் பொலான்யோ என்றேன்.

அவனுடைய சிரிப்பைப் பார்த்த எவருக்கும் அவன் ஜரா இல்லை என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனால், திடீரென இடியால் தாக்குண்டதைப்போல (இல்லை நான் ஒன்றும் லின்னுடைய கவிதையையோ என்னுடையதையோ மேற்கோள் காட்டவில்லை) அவனும் அந்த விளையாட்டைத் தொடர்ந்தான். முன்பின் அறிந்திராத ஜராவின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமா என்ற ஓரிரு நிமிடம் யோசித்தான். அந்த ஒளிவீசும் படிக்கட்டைத் தவிர வேறு எங்குமே இருக்கமுடியாத ஜராவாக நின்றுகொண்டு என்னுடைய வாழ்க்கையைப்பற்றிக் கேட்டான். நீ யாரென்று (அடிமுட்டாளைப்போல) என்னைக் கேட்டான். அப்படிக் கேட்ட உடனேயே அவன்தான் ஜரா என்பதை ஒத்துக்கொண்டான். அந்த ஜராவுக்கு பொலான்யோவின் இருப்பே மறந்து போயிருந்தது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளமுடிந்தது. நான் யார் என்பதை விளக்கமாகச் சொன்னேன். அப்படியே அவன் யார் என்பதையும் சொன்னேன். அப்படியாக அந்தக் கணத்துக்கு பொருத்தமான, நானும் அவனும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஜராவை உருவாக்கினேன்.

நம்பவியலாத, கூரறிவுகொண்ட, தைரியசாலியான, பணக்கார, தயாளகுணம்கொண்ட, பயமற்ற ஜரா. ஓர் அழகான பெண்ணைக் காதலித்து அவளால் காதலிக்கப்படவும் செய்தான். அதைக்கேட்டதும் கொலைகாரன் சிரித்தான், நான் அவனை ஏமாற்றுகிறேன் என்பது உறுதிபடத் தெரிந்தாலும் நான் அவனுக்காகக் கட்டமைத்த பிம்பத்துக்குள் விழுந்துவிட்டவனைப்போல அந்த நிகழ்வை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் தவித்தான். ஜராவைப்பற்றி மட்டுமில்லாமல் ஜராவின் நண்பர்களைப் பற்றியும் சொல்லுமாறு ஊக்கமூட்டினான். இறுதியில் ஜராவுக்குக்கூட விசாலமாக இருக்கும் உலகமொன்றைப் பற்றியும் சொல்லச்சொன்னான். அந்த உலகில் மாபெரும் ஜரா ஒரு எறும்பு போன்றவன் என்றும் ஒளிவீசும் படிக்கட்டில் நிகழும் அவனுடைய சாவு யாருக்கும் கவலைதருவதாக இருக்காதென்றும் சொல்லச் சொன்னான். அதற்குள்ளாக அவனுடைய நண்பர்கள் இருவர் அங்கே வந்தார்கள். உயரமாக, வெளிர்நிற சூட் அணிந்திருந்தார்கள். என்னைப் பார்த்தார்கள், பிறகு பொய்யான ஜராவை, இவன் யாரென்று கேட்பதைப்போல, பார்த்தார்கள். இதுதான் பொலான்யோ என்று சொல்வதைத்தவிர அவனுக்கு வேறு வழியே இல்லை. அந்த இரண்டு கொலைகாரர்களும் வணக்கம் சொன்னார்கள். மோதிரங்களும் விலைமதிப்புமிக்க கடிகாரமும் தங்கக் கைக்காப்பும் அணிந்திருந்த அவர்களின் கைகளைப் பற்றிக் குலுக்கினேன். அவர்களுடன் வந்து மது அருந்துமாறு அழைத்தார்கள். நண்பரோடு வந்திருக்கிறேன் என்று மறுத்துவிட்டு ஜராவைத் தாண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். லின் இன்னமும் தனியறைக்குள் அமர்ந்திருந்தார்.

இப்போது அவர் அருகே ஆர்வலர்கள் யாரும் இல்லை. கண்ணாடி கிளாஸ் காலியாக இருந்தது. மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டுக் காத்துக்கொண்டு இருந்தார். ஏதும் பேசாமல் அவருடைய வீடு இருந்த தளத்துக்குப் போனோம். அவர் ஏழாவது மாடியில் வசித்ததால் எலவேட்டரில் ஏறிப்போனோம். அது பெரிய எலவேட்டர், ஒரே நேரத்தில் முப்பது பேராவது ஏறிக்கொள்ளலாம். அவருடைய வீடு ஒரு சீலே எழுத்தாளரின் வீட்டைப்போல இல்லாமல் சிறியதாக இருந்தது, அங்கே புத்தகங்களும் இல்லை. அதுகுறித்துக் கேட்டபோது இனி தான் படிக்கவேண்டிய அவசியமில்லை என்றார். கூடவே, புத்தகங்கள் எப்போதும் இருக்கும் என்றார். அவருடைய வீட்டிலிருந்து மது விடுதியைப் பார்க்கமுடிந்தது. தரைமுழுவதும் கண்ணாடியாலானதுபோல இருந்தது. கொஞ்ச நேரம் முட்டிபோட்டு உட்கார்ந்துகொண்டு கீழே தெரிந்த மனிதர்களுக்குள் ஆர்வலர்களும் மூன்று கொலைகாரர்களும் இருக்கிறார்களா என்று தேடினேன். ஆனால் சிறிதும் அறிமுகமில்லாதவர்கள்மட்டுமே உணவோ மதுவோ அருந்திக்கொண்டு இருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் எழுதப்பட்ட நாவலில் வரும் ஜுரத்தால் பீடித்து மனக்கிளர்ச்சி கொண்டவர்களைப்போலப் பெரும்பாலும் ஒரு மேசையில் இருந்து அடுத்ததுக்கோ ஒரு தனியறையில் இருந்து அடுத்ததுக்கோ மது விடுதியின் மேலும் கீழுமாகாவோ நடந்துகொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்திலேயே ஏதோ சரியில்லை என்பது புரிந்தது. லின்னின் வீட்டின் தரையும் மது விடுதியின் உட்கூரையும் கண்ணாடியால் செய்யப்பட்டதென்றால் இரண்டாவது முதல் ஆறாவது வரையிலான தளங்கள் எங்கே? அவையும் கண்ணாடியால் ஆனவைதானா? மறுபடியும் கீழே பார்த்தபோது முதல் தளத்துக்கும் ஏழாவது தளத்துக்கும் நடுவே வெற்றிடம்தான் இருந்தது. இந்தக் கண்டுபிடிப்பு எனக்குத் துயரத்தை ஊட்டியது. கடவுளே! என்னை எங்கே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள் லின் என்று நினைத்தேன். உடனேயே, கடவுளே! உங்களை எங்கே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் லின் என்று நினைத்தேன். மிகவும் எச்சரிக்கையுடன் எழுந்து நின்றேன். ஏனென்றால் அந்த இடத்தில், இயல்பான உலகுக்கு நேர்மாறாக மக்களைவிடவும் பொருட்கள்தான் எளிதில் உடையக்கூடியவையாக இருந்தன என்பதைத் தெரிந்துகொண்டேன். லின்னைக் காணவில்லை. அந்த வீட்டின் பல அறைகளில் அவரைத் தேடினேன். வீடு இப்போது ஐரோப்பிய எழுத்தாளருடையதைப்போலச் சிறியதாக இல்லாமல் சீலே எழுத்தாளருடையதைப்போலப் பெரியதாக, விசாலமாக இருந்தது. குறைந்த சம்பளத்துக்கு வேலைசெய்யும் வீட்டுப் பணியாளர்களும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட நுட்பமான அலங்காரப் பொருட்களும் கொண்ட மூன்றாம் உலகத்து வீடு. வீடு முழுவதும் நிழல்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. அரையிருட்டாக இருந்த அறைகளில் இரண்டு புத்தகங்களைப் பார்த்தேன். ஒன்று செவ்விலக்கியம், கூழாங்கல்லைப்போல வழவழப்பாக இருந்தது. மற்றது புதியது, காலத்தை வென்றது, உடல்கழிவைப் போன்றது. மெதுவாக லின்னைத் தேடிக்கொண்டு போனபோது குளிரத் தொடங்கியது,கொஞ்சநேரத்தில் வெறியேற்றும் அளவுக்கு அதிகமாகக் குளிரத் தொடங்கியது.

வீடு ஒரு கற்பனை அச்சில் சுழல்வதைப்போல இருந்தது, உடல் நோயுற்றதைப்போல உணர்ந்தேன். அப்போது ஒரு கதவு திறந்தது. உள்ளே இருந்த நீச்சல் குளத்தில் லின் நீந்திக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன். வாயைத் திறந்து வயதாவது குறித்து ஏதும் சொல்வதற்கு முன்னால் லின் தன் மருந்தைப் பற்றிய, உயிர்வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்து, மோசமான தகவல் ஒன்றைச் சொன்னார். மருந்து நிறுவனத்தின் சோதனை எலியாக தன்னை அது மாற்றிவருகிறது என்றார். இந்த நிகழ்வு முழுமையும் ஒரு நாடகம் என்பதைத்தான் கேட்க விரும்பினேன். நான் பேசவேண்டிய வசனங்களும் உடன் நடிப்பவர்களின் வசனங்களும் திடீரென நினைவுக்கு வந்தன. லின் நீச்சல் குளத்தைவிட்டு வெளியே வந்தார். நாங்கள் கீழ்த்தளத்துக்குச் சென்று கூட்டமாக இருந்த மது விடுதிக்குள் நுழைந்தோம். அப்போது லின், புலிகளின் காலம் முடிந்தது, இருக்கும் வரையிலும் இனிமையாக இருந்தது என்றார். பொலான்யோ, நான் சொல்வதை நீ நம்பப்போவதில்லை. இந்தக் குடியிருப்புப் பகுதியில் இறந்தவர்கள் மட்டும்தான் நடைபயிலப் போவார்கள் என்றார். அதற்குள்ளாக நாங்கள் மது விடுதியை அடைந்து ஜன்னலுக்கருகில் நின்றபடி இறந்தவர்கள் மட்டுமே நடந்துகொண்டிருந்த அந்த வித்தியாசமான பகுதியில் இருந்த தெருக்களையும் கட்டடங்களின் முன்புறங்களையும் வேடிக்கை பார்த்தோம் பார்த்தோம், பார்த்துக்கொண்டே இருந்தோம். அந்த முன்புறங்கள் எல்லாமே வேறு ஒரு காலத்தைச் சேர்ந்த முன்புறங்களாக இருந்தது தெளிவாகத் தெரிந்தது. நடைபாதை முழுவதும் வேறு ஒரு காலத்தைச் சேர்ந்த கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்தக் காலம் அமைதியாக இருந்தது என்றாலும் நகர்ந்துகொண்டு இருந்தது (அது நகர்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தார் லின்), அது ஒரு கொடுமையான காலம், செயலின்மையினால் மட்டுமே அது நீடித்திருந்தது.

***

-தமிழில்: கார்குழலி

Please follow and like us:

2 thoughts on “என்ரிக் லின்னுடன் ஒரு சந்திப்பு – ரொபெர்த்தோ பொலான்யோ

  1. லின் இறந்துவிட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடன் இருந்தவர்கள் அவரைப் பார்க்க அழைத்துப்போகிறேன் என்று சொன்னதும் தயக்கமேதுமின்றி ஒத்துக்கொண்டேன். ஒருவேளை அவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள் என்றோ அதிசயமான நிகழ்வேதும் சாத்தியமாகலாம் என்றோ நினைத்தேனோ என்னவோ. ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *