I

செல்வி எமிலி க்ரியர்ஸன் இறந்தபோது எங்கள் ஊர் முழுதுமே அவரது இறுதிச்சடங்குக்கு திரண்டது. பாழடைந்த நினைவுச் சின்னத்தின் மீது ஒருவர் கொள்ளக்கூடிய மரியாதை கலந்த பற்றுதல் அவர் மீது இருந்ததால் ஆண்கள் அனைவரும் வந்திருந்தனர். பெண்களுக்கோ அவருடைய வீட்டின் உட்புறம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அங்கு தோட்ட வேலையும் சமையலும் செய்துவந்த வயதான ஒரு வேலையாளைத் தவிர வேறு யாரும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, அந்த வீட்டின் உட்புறத்தை பார்த்திருக்கவில்லை.

பெரிய சதுரமான வீடு அது. ஒருகாலத்தில், எங்கள் ஊரின் மிகச் சிறந்ததாகக் கருதப்பட்ட தெருவில், வெள்ளை வெளேரென, மாடங்களும், சுருள்வடிவ மாடிமுகப்புகளுமாக எழுபதுகளின் மோஸ்தரில் மிகப்பகட்டாக இருந்த வீடு. ஆனால் பட்டறைகளும் பஞ்சாலைகளும் ஆக்ரமிக்கத் தொடங்கி, சுற்றுவட்டாரத்தின் பெயரே கெட்டுவிட்டிருந்தது. எமிலியின் வீடு மட்டுமே பிடிவாதமாக பசப்புக்காக எஞ்சியது போல், பஞ்சுப்பொதி வண்டிகளுக்கும், பெட்ரோல் பம்புகளுக்கும் நடுவே, அருவருப்புகளுக்கு நடுவே ஒரு அருவருப்பாக நின்றுகொண்டிருக்கிறது. இப்போது எமிலி, செடார் மரங்கள் நிறைந்த கல்லறைத் தோட்டத்தில், ஜெஃபர்ஸன் போரில் மரணமடைந்த யூனியன், கன்ஃபெடரேட் வீரர்களோடு அடக்கம் செய்யப்பட்டிருந்த ஊரின் பெயர்பெற்ற மனிதர்களோடு சேர்ந்துகொள்ளச் சென்றுவிட்டார்.

நீக்ரோ பெண்கள் எவரும் ‘ஏப்ரன்’ அணியாமல் தெருவில் இறங்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்த இவ்வூரின் மேயர் கர்னல் சார்டோரிஸ், 1894-இல், எமிலியின் தந்தை இறந்தபோது, எமிலி இனி என்றென்றைக்கும் வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை என்று விலக்கு அளித்திருந்தார். எமிலி இதை ஒரு அறக்கொடையாக ஏற்றிருக்க வாய்ப்பில்லை. எமிலியின் தந்தை ஊருக்கு கடன் அளித்திருந்தார் என்றும், அதை திரும்பக் கொடுக்கும் முகமாக இந்த ஏற்பாடு என்றும் கர்னல் சார்டோரிஸ் ஒரு கதைகட்டிவிட்டார். இத்தகைய ஒரு கதையை உருவாக்க அவரது தலைமுறையினரால் மட்டுமே முடியும்; அதை நம்புவதும் ஒரு பெண்ணால்தான் முடியும். இப்படியாக, தன் வாழ்நாளில், செல்வி எமிலி ஊரின் ஒரு மரபாக, ஒரு கடமையாக, ஊர்கொண்ட அக்கறையின் அடையாளமாக இருந்தார்.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த, நவீனக் கருத்துகள் கொண்டவர்கள் நகரத்தந்தைகளாக பொறுப்பேற்றபோது இந்த ஏற்பாடு சற்று அதிருப்தியை உண்டாக்கியது. வருடத்தின் முதல் நாள் அவருக்கு வரிக்கேட்பு அறிக்கையை அனுப்பினார்கள். பிப்ரவரி தொடங்கிய பிறகும் அவரிடமிருந்து பதிலேதும் இல்லை. முடிந்தபோது ஷெரீஃபின் அலுவலகத்திற்கு வரும்படி சொல்லி முறைமையான கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. ஒரு வாரம் கழித்து தானே வந்து அவரை பார்ப்பதாகவும், இல்லையென்றால் தனது காரை அனுப்பி அவரை அழைத்துக்கொள்வதாகவும் கூறி, எமிலிக்கு மேயரே ஒரு கடிதம் எழுதினார். இதற்கு பதிலாக, புழக்கத்தில் இல்லாத வடிவத்தாள் ஒன்றில், சாயம் போன மை கொண்டு மெலிதாக அழகிய கையெழுத்தில், தான் எங்கும் வெளியில் செல்வதே இல்லை என்று தெரிவித்து ஒரு கடிதம் வந்தது. எந்தக் குறிப்பும் இன்றி வரிக்கேட்பு அறிவிப்பும் இணைக்கப்பட்டிருந்தது.

நகராட்சிக் குழுவின் சிறப்புக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.

எமிலியை சந்திக்க ஒரு தூதுக் குழுவை அனுப்பினார்கள். ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாக, அதாவது அவர் சீன ஓவியம் கற்றுத் தருவதை நிறுத்திய பின்னர், ஒருவரும் நுழைந்திராத அந்த வாயில் கதவு தட்டப்பட்டது. வயதான அந்த நீக்ரோ அவர்களை அரையிருட்டான கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த படிக்கட்டு இன்னும் இருண்டிருந்தது. தூசு மணமும் ஈரக்கசிவால் உண்டாகும் மணமும் நிரம்பியிருந்தது. நீக்ரோ அவர்களை வரவேற்பறைக்கு இட்டுச் சென்றார். அந்த அறையில் கனமான தோலுறைகள் இடப்பட்ட தளவாடங்கள் இருந்தன. நீக்ரோ ஒரு ஜன்னலின் தட்டியை திறந்ததும் அந்தத் தோலுறைகள் அங்கங்கே வெடித்து பிளந்திருந்ததை பார்க்கமுடிந்தது. அவர்கள் உட்கார்ந்ததும் மெல்லிய தூசு மிக மெல்ல எழுந்து அவர்கள் தொடைகளில் அமர்ந்தது. உள்ளே வந்த ஒற்றை சூரியக் கதிரில் தூசு சுழன்றாடியது. கணப்படுப்புக்கு மேலே, மங்கிப்போன பொற்பூச்சுடன் இருந்த படச்சட்டம் ஒன்றில் எமிலியுடைய தந்தையின் க்ரயான் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது.

எமிலி வந்ததும் அவர்கள் எழுந்தனர். சிறிய உருவம். பருத்த உடல். கறுப்பு உடை அணிந்திருந்தார். தங்கச் சங்கிலி ஒன்று இடை வரை தொங்கி இடுப்புப்பட்டைக்குள் சென்று மறைந்தது. மழுங்கிப் போயிருந்த தங்கப் பூண் போட்ட கைத்தடியில் சாய்ந்தபடி நின்றிருந்தார். அவரது உடற்கூடு மிகச் சிறியதாய் இருந்தது. அதனால்தானோ என்னவோ சதைப் பற்றுள்ளதாகத் தெரிய வேண்டிய உருவம் அளவுக்கதிகமான பருமன் கொண்டதாகத் தெரிந்தது. அசைவற்ற நீரில் மூழ்கிக் கிடந்த உடல் போல உப்பி வெளுத்துப் போயிருந்தார்.

பருத்து திரண்ட முகத்தில் மறைந்தே போன அவரது கண்கள், பிசைந்த மாவில் அழுத்தி வைத்த இரண்டு சிறிய கரித் துண்டுகளை போலிருந்தன. வந்திருந்தவர்கள் தங்கள் நோக்கத்தை சொன்னபோது ஒவ்வொரு முகத்தையாக நோக்கி உருண்டன.

அவர்களை அமரும்படி அவர் சொல்லவே இல்லை. கதவருகில் வெறுமனே நின்றபடி அமைதியாக அவர்கள் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்தும்வரை கேட்டுக்கொண்டிருந்தார். தங்கச் சங்கிலியின் நுனியில் இருந்த, கண்ணுக்குத் தென்படாத கடிகாரத்தின் டிக் டிக் ஒலியை அவர்களால் கேட்கமுடிந்தது.

வறண்டுபோன, குளிர்ந்திறுகிய குரலில் “ஜெஃபர்ஸனில் எனக்கு வரிகள் கிடையாது. கர்னல் சார்டோரிஸ் எனக்கு சொல்லியிருக்கிறார். உங்களில் ஒருவர் நகராட்சி ஆவணங்களைப் பார்த்து உறுதிசெய்து கொள்ளலாம்” என்றார்.

“நாங்கள் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். நாங்கள் நகராட்சி அதிகாரிகள்தான். ஷெரீஃப் கையைழுத்திட்டு அனுப்பிய அறிவிப்பு உங்களுக்கு கிடைக்கவில்லையா?”

“ஏதோ ஒரு காகிதம் வந்தது. அவர் தன்னை ஷெரீஃப் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போல… ஜெஃபர்ஸனில் எனக்கு வரிகள் கிடையாது.”

“அதற்கு ஆவண சாட்சி எதுவும் இல்லை. நாங்கள் பின்பற்ற வேண்டியது…”

“கர்னல் சார்டோரிஸிடம் போய் கேளுங்கள். ஜெஃபர்ஸனில் நான் எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை.”

“ஆனால்…”

“கர்னல் சார்டோரிஸை கேளுங்கள்” (பத்து வருடம் முன்பே கர்னல் சார்டோரிஸ் இறந்திருந்தார்.) ஜெஃபர்ஸனில் நான் வரிகட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்று சொன்னவர் “டோபே!” என்று கூப்பிட்டார். நீக்ரோ வந்தார். “இவர்களை அனுப்பி வை.”

 

II

ஆக, முப்பது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் அவர்களுடைய தந்தையரை வாயடைக்கச் செய்தது போலவே, அவர்களையும் அடக்கி அனுப்பிவைத்தார் எமிலி. தந்தை இறந்து இரண்டுவருடங்களுக்குப் பிறகு, எமிலி மணம் செய்துகொள்வாள் என்று நாங்கள் நம்பியிருந்த காலத்தில், அவளுடைய காதலன் அவளை விட்டுச் சென்று சில நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்தது அந்தச் சம்பவம். தந்தை இறந்தபிறகு வெளியில் செல்வதையே வெகுவாக குறைத்துக்கொண்டிருந்தாள் எமிலி. காதலன் ஓடிப்போன பிறகோ யாருமே அவளை பார்க்கவில்லை. மடத் துணிச்சல் கொண்ட பெண்கள் சிலர் அவள் வீட்டிற்குச் சென்றபோது உள்ளே அனுமதிக்கப்படவே இல்லை. காய்கறிக் கூடையுடன் வீட்டின் உள்ளும் புறமும் சென்றுகொண்டிருந்த, அப்போது இளமையாக இருந்த ஒரு நீக்ரோ மட்டுமே அந்த வீட்டிற்கு உயிர் இருந்தது என்பதற்கு ஒரே அடையாளமாக இருந்தான்.

“ஒரு ஆணால் சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியுமா என்ன?” என்பதுதான் பெண்கள் பேசிக்கொண்டது. இதனால், நாற்றம் வரத் தொடங்கியபோது அவர்கள் ஆச்சரியப்படவில்லை. நயமில்லாத, மக்களால் நிரம்பிய உலகுக்கும் பெருவல்லமை கொண்ட க்ரியர்ஸன் குடும்பத்திற்கும் இடையிலான மற்றுமொரு இணைப்புக் கண்ணி அந்த சம்பவம்.

அண்டைவீட்டுப் பெண்மணி ஒருவர் மேயராக இருந்த, எண்பது வயதான நீதிபதி ஸ்டீவன்ஸிடம் புகார் அளித்தார்.

“நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

“அவர் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள். சட்டம் என்று ஒன்று இல்லையா என்ன?”

“நிச்சயமாக அதெல்லாம் தேவையில்லை” என்றார் நீதிபதி ஸ்டீவன்ஸ். “அந்தக் கருப்பன் தோட்டத்தில் பாம்பையோ எலியையோ கொன்று போட்டிருப்பான். நான் அவனிடம் பேசுகிறேன்.”

அடுத்த நாள் அவருக்கு மேலும் இரண்டு புகார்கள் வந்தன.  தயக்கத்தோடும் ஒவ்வாமையுடனும் வந்த ஒருவர் சொன்னார் “நீதிபதி அவர்களே, நாம் கட்டாயம் ஏதாவது செய்தே ஆகவேண்டும். எமிலிக்கு இடைஞ்சல் தருவதில் எனக்கு விருப்பமே இல்லை. என்றாலும் இந்த விஷயத்தில் ஏதாவது செய்தே ஆக வேண்டும்.”

அன்றிரவு நகராட்சிக் குழு கூடியது: நரைத்த தாடியுடன் மூவரும், எழுந்துவரும் தலைமுறையைச் சேர்ந்த இளையவர் ஒருவரும் பங்குபெற்றார்கள்.

இளைய உறுப்பினர் சொன்னார் “இது மிக எளிய விஷயம். வீட்டை சுத்தம் செய்யச் சொல்லி அவருக்கு ஆணையிடுங்கள். செய்து முடிக்க காலக்கெடு கொடுத்து, அதற்குள் முடிக்கவில்லை என்றால்….”

“நிறுத்துங்கள்!” என்ற நீதிபதி ஸ்டீவன்ஸ், “ஒரு பெண்மணியை நேருக்கு நேராகப் பார்த்து ‘நாற்றமடிக்கிறது’ என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

அடுத்த நாள் இரவில், நள்ளிரவு தாண்டிய பிறகு, நான்கு பேர், எமிலியின் தோட்டத்திற்குள் நுழைந்து, புல்தரையைக் கடந்து திருடர்கள் போல பம்மியபடி வீட்டைச் சுற்றி வந்தனர். கட்டடத்தின் அடிப்பகுதியிலும் நிலவறைச் சாளரங்களிலும் மோப்பம் பிடித்தனர். அவர்களில் ஒருவர் தன் தோளிலிருந்த சாக்குப் பையிலிருந்து எதையோ எடுத்து விதைப்பதுபோல தூவியபடி சென்றார். நிலவறைக் கதவை உடைத்துத் திறந்து அங்கும், கட்டடங்களைச் சுற்றியும் சுண்ணாம்பை தூவினார்கள். அவர்கள் திரும்பி புல்தரையை கடந்தபோது அதுவரை இருட்டாக இருந்த ஜன்னல் ஒன்றில் விளக்கெரிந்தது. பின்னால் விளக்கெரிய, உடலசைவின்றி சிற்பம் போல் எமிலி அமர்ந்திருந்தாள். அவர்கள் ஓசையின்றி புல்தரையைக் கடந்து தெருவில் வரிசையாக நின்றிருந்த லோகஸ்ட் மரங்களின் நிழலுக்குள் சென்று மறைந்தனர். ஓரிரு வாரங்கள் கழித்து நாற்றம் மறைந்துவிட்டிருந்தது.

அப்போதுதான் மக்கள் எமிலி மீது பரிதாபப்பட ஆரம்பித்தார்கள். க்ரியர்ஸன் குடும்பத்தார், உண்மைக்குப் புறம்பாக, தங்களை மிக உயர்ந்தவர்களாக எண்ணிக் கொண்டார்கள் என்பதுதான் எமது ஊராரின் கருத்து. ஏனென்றால், இறுதியில் முழுப் பைத்தியமான, மூதாட்டி வ்யாட்டை நாங்கள் அறிவோம். எமிலியின் அத்தைப்பாட்டி அவர். எமிலியைப் போன்றவர்களுக்கு எந்த இளைஞனும் பொருத்தமானவனாக இல்லை. வாயிற்கதவு பின்னோக்கி திறந்திருக்க, வெள்ளை உடையணிந்து, ஒல்லியான உருவத்தோடு எமிலி பின்னால் நிற்க, அவளுக்கு முதுகைக் காட்டியபடி, கையில் குதிரைச் சவுக்குடன், கால்களை அகட்டியபடி அவள் தந்தை முன்னால் நிற்கும் ஒரு ஓவியமாகவே வெகு காலத்திற்கு அவர்களை நாங்கள் அறிந்திருந்தோம். அவளுக்கு முப்பது வயதானபோதும் மணம் செய்துகொள்ளவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம்தான். ஆனால், அவள் குடும்பத்திற்கே உரிய பித்து இருந்தாலும், வாய்ப்புகள் வந்திருந்தால் அவள் அவற்றை உதறியிருக்க மாட்டாள் என்ற எங்கள் எண்ணமே மெய்ப்பிக்கப்பட்டது.

அவளது தந்தை இறந்தபோது, அவளுக்கென எஞ்சியது அந்த வீடு மட்டுமே என்று தோன்றியது. ஒரு வகையில் மக்களுக்கு மகிழ்ச்சிதான். எப்படியோ, அவர்களால் எமிலியின் மீது இரக்கம் கொள்ள முடிந்தது இல்லையா? தனியளாக, நொடித்துப் போனவளாக ஆனதும் அவளுக்கும் மானுடத் தன்மை வந்துவிட்டிருந்தது. அவள் இனி பழைய போலிப் பகட்டுகளை விட்டு யதார்த்தத்திற்கு இறங்க வேண்டுமல்லவா?

அவர் இறந்த மறுநாள், எங்களூர் பெண்மணிகள் எல்லோரும், எங்கள் மரபுப்படி, அவள் வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கவும், உதவி செய்யவும் தயாரானார்கள்.

வாசலில் அவர்களை எதிர்கொண்ட எமிலி எப்போதும் போல் உடுத்தியிருந்தாள். அவள் முகத்திலும் சோகத்தின் தடயமே இல்லை. தன் தந்தை இறக்கவில்லை என்றே அவர்களிடம் சொன்னாள். தொடர்ந்து மூன்று நாட்களும் மதகுருமார்களும், மருத்துவர்களும் வீட்டிற்கு வந்து உடலை அடக்கம் செய்ய தரும்படி கேட்டபோதும் அவள் அதையே சொல்லிக் கொண்டிருந்தாள். சட்டப்படி பலவந்த நடவடிக்கை எடுப்பது என்று அவர்கள் முடிவெடுத்த வேளையில் உடைந்து போனாள். அவசர அவசரமாக அவள் தந்தையை அவர்கள் புதைத்தனர்.

அப்போது நாங்கள் அவளை கிறுக்கி என்று சொல்லவில்லை. அவள் அப்படித்தான் நடந்துகொண்டிருக்க முடியும் என்று நம்பினோம். அவளது தந்தையால் விரட்டியடிக்கப்பட்ட இளைஞர்கள் எல்லோரும் எங்கள் நினைவுக்கு வந்தனர். எல்லோரையும் போல, தனக்கென வேறெதுவும் இல்லாதபோது, தன் வாழ்வை எது பறித்ததோ, அதையே பற்றிக்கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை என்று நாங்கள் அறிந்திருந்தோம்.

 

Ill

நீண்ட காலம் அவள் நோய்வாய்ப்பட்டிருந்தாள். நாங்கள் அவளை மீண்டும் பார்த்தபோது, தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டு சிறுமி போலிருந்தாள். தேவாலயத்தின் வண்ணக் கண்ணாடி ஜன்னல்களில் கொஞ்சம் சோகமும் கொஞ்சம் அமைதியும் தவழும் முகத்தோடு இருக்கும் தேவதை போல் தெரிந்தாள்.

அந்த சமயத்தில், சாலையோர நடைபாதைகளை அமைப்பதற்கான பணியை நகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு அளித்திருந்தது. கட்டுமான நிறுவனம் கருப்பர்களையும், கோவேறு கழுதைகளையும், இயந்திரங்களையும் கொண்டுவந்து இறக்கியிருந்தது. கருத்த பெரிய உருவமும், பெருங்குரலும், முகத்தைவிட சற்று கருமை குறைந்த கண்களும் கொண்ட ஹோமர் பர்ரோன் என்ற யாங்கீ (நியூ இங்கிலாந்தைச் சேர்ந்தவன்) கண்காணிப்பாளனாக வந்தான். அவன் கருப்பர்களை வசைபாடுவதையும், அவர்கள் குத்துகோடரியைத் தூக்கி இறக்குகையில் பாடும் பாடலைக் கேட்கவும் சிறுவர்கள் கும்பலாக அவர்கள் பின்னால் சென்றுகொண்டிருப்பார்கள். அவன் விரைவிலேயே ஊரில் அனைவரையும் அறிந்துகொண்டான். நாற்சந்திகளில் பலமான சிரிப்பொலி கேட்டதென்றால், அங்கே நிச்சயம் நடுநாயகமாக ஹோமர் பர்ரோன் இருப்பான். இப்போது, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்களில் மஞ்சள்நிறச் சக்கரம் கொண்ட ஒற்றைக் குதிரை வண்டியிலும், ஒரேமாதிரியான கருஞ்சிவப்புக் குதிரைகளிலும் அவனும் எமிலியும் சேர்ந்து போவதை நாங்கள் காணத் தொடங்கியிருந்தோம்.

முதலில் அவளுக்கு அவன் மேல் ஆர்வம் இருக்கும் என்றுதான் எண்ணினோம். ஆனால், “க்ரியர்ஸன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்திக்கு, வடக்கத்தியான் மேல், அதுவும் ஒரு கூலித் தொழிலாளி மேல் எந்த  மதிப்பும் இருக்க முடியாது” என்று பெண்கள் எல்லோரும் சொன்னதால்  நாங்கள் நிம்மதியாக உணர்ந்தோம்.

சில முதியவர்கள், குலப்பெண் ஒருத்தி, துயரத்தில் கூட தன் கண்ணியத்தை மறக்கக் கூடாது என்றே சொல்லிக்கொண்டிருந்தனர். “பாவம் எமிலி. அவளுடைய உறவினர்கள்தான் அவளுக்கு உதவ வேண்டும்” என்று சொன்னார்கள். அலபாமாவில் அவளுக்கு சில உறவினர் இருந்தனர். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு, அவளது தந்தை, பித்தியான மூதாட்டி வ்யாட்டின் சொத்து குறித்து அவர்களோடு பிணங்கியிருந்தார். இரு குடும்பங்களுக்கிடையே பேச்சுவார்த்தை இல்லாமலிருந்தது.

இறுதிச்சடங்குக்குக் கூட எவரும் வந்திருக்கவில்லை.

முதியவர்கள் “பாவம் எமிலி” என்று சொன்ன உடனேயே கிசுகிசு தொடங்கிவிட்டது. “உண்மையில் அப்படி இருக்கும் என்றா நினைக்கிறாய்?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர். “அதேதான். வேறென்ன…?” ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெயிலைத் தடுப்பதற்கென மூடப்பட்டிருந்த பட்டு, சாடின் திரைச்சீலைகளை விலக்கி, இணைக் குதிரைகள் கிளாப் கிளாப் கிளாப் என ஒலியெழுப்பியபடி கடந்துசென்றதைப் பார்த்தபடி “பாவம் எமிலி” என்றனர்.

அவள் வீழ்ந்துவிட்டாள் என்று நாங்கள் நம்பியபோதும் அவள் தலை நிமிர்ந்தே இருந்தது. க்ரியர்ஸன் குடும்பத்தின் கடைசி வாரிசான அவளுடைய கண்ணியம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் இன்னும் தீவிரம் காட்டியது போலிருந்தது அது. அந்த இயல்பான செயல் மூலம், யாரையும் அணுகவிடாத தன் குணத்தை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினாள் போலும்.

“பாவம் எமிலி” என்று அவர்கள் சொல்லத் தொடங்கி ஒரு வருடம் கழிந்திருக்கும். அவளது ஒன்றுவிட்ட சகோதரிகளும் வந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.

“கொஞ்சம் விஷம் வேண்டும்” என்று மருந்துக் கடைக்காரரிடம் கேட்டபோது அவளுக்கு முப்பது வயது தாண்டியிருந்தது. உடல் இன்னும் மெலிந்திருந்தது. மேட்டிமையைக் காட்டும், இறுகிய கண்கள். நெற்றியிலும் விழிக்குழிவுகளிலும் தோல் சுருக்கம் கண்டிருந்தது. ஒரு கலங்கரை விளக்கப் பராமரிப்பாளரின் முகத்தை நினைவுறுத்தக்கூடிய முகம். “கொஞ்சம் விஷம் வேண்டும்.”

“தருகிறேன். எந்த மாதிரி விஷம்? எலிக்கு வைப்பதற்கா? நான் பரிந்துரை…”

“உள்ளதிலேயே நல்லது வேண்டும். எந்த மாதிரியானதாக இருந்தாலும் சரிதான்.”

மருந்துக் கடைக்காரர் பல பெயர்களை சொன்னார். “இதெல்லாம் ஒரு யானையைக் கூட கொன்றுவிடும். ஆனால் உங்களுக்குத் தேவைப்படுவது…”

“ஆர்செனிக் நல்லதுதானே?”

“எது? ஆர்செனிக்கா? நல்லதுதான். ஆனால் உங்களுக்குத் தேவையானது…?”

“ஆர்செனிக்கே கொடுங்கள்.”

மருந்துக் கடைக்காரர் அவளை ஏற இறங்க பார்த்தார். அவரை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்த அவள் முகம் வலித்திழுத்துக் கட்டப்பட்ட கொடி போலிருந்தது. “உங்களுக்கு வேண்டுமென்றால் அதையே கொடுக்கலாம். ஆனால், சட்டப்படி அதை எதற்கு பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும்.”

எமிலி, தலையை பின்புறமாகச் சாய்த்து மருந்துக் கடைக்காரரை நேருக்கு நேர் வெறித்துப் பார்த்துகொண்டே இருந்தாள். அவர் பார்வையை திருப்பிக்கொண்டார். பின்னர் உள்ளே சென்று ஆர்செனிக்கை எடுத்து பொட்டலம் கட்டினார். நீக்ரோவான கடைப்பையன் அதை அவளிடம் கொண்டுவந்து கொடுத்தான். மருந்துக் கடைக்காரர் திரும்ப வெளியில் வரவேயில்லை. வீட்டிற்கு வந்து அவள் பொட்டலத்தைப் பிரித்தாள். மண்டையோடும் எலும்புகளும் இருந்த படத்திற்குக் கீழே “எலிகளுக்கானது” என்று எழுதப்பட்டிருந்தது.

 

IV

“அவள் தற்கொலை செய்துகொள்வாள்” என்பதுதான் நாங்கள் மறுநாள் சொல்லிக்கொண்டது. “அதுதான் நல்லது” என்றோம். அவளை முதலில் ஹோமர் பர்ரோனுடன் கண்டபோது “அவள் அவனை மணந்துகொள்வாள்” என்று சொல்லிக்கொண்டிருந்தோம். ஹோமர் தான் ஆண்களைத்தான் விரும்புவதாக சொல்லியிருந்தான். அவன் இளைஞர்களோடு சேர்ந்து குடிப்பவன் என்பதும் மணம் செய்து குடும்பம் நடத்தும் வகையைச் சேர்ந்தவன் அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. “அவள் அவனை இணங்கச் செய்விடுவாள்” என்று சொல்ல ஆரம்பித்தோம். பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பளபளக்கும் ஒற்றைக்குதிரை வண்டியில், ஓரம் மேல்நோக்கி வளைத்துவிடப்பட்ட தொப்பி அணிந்து, பற்களில் சிகாரை கடித்துக்கொண்டு, மஞ்சள் நிற உறை அணிந்த கைகளில் கடிவாளத்தையும் சாட்டையையும் பிடித்தபடி ஹோமர் பர்ரோன் ஓட்டிச்சென்ற பளபளப்பான ஒற்றைக் குதிரை வண்டியில், தலைநிமிர்ந்து அமர்ந்து அவள் சென்றதை ஜன்னல் வழியே பார்த்தபோது, “பாவம் எமிலி” என்றோம்.

சில நாட்கள் கழித்து, இது ஊருக்கே அவமானம் என்றும் இளையவர்களுக்கு தவறான முன்னுதாரணம் என்றும் பெண்கள் பேச ஆரம்பித்தார்கள். ஆண்கள் யாரும் இதில் தலையிட விரும்பவில்லை. அப்படியும், கடைசியில் பெண்கள் எல்லோரும் சேர்ந்து, எபிஸ்கோபல் திருச்சபையைச் சேர்ந்த மதகுருவை கட்டாயப்படுத்தி அவளிடம் அனுப்பி வைத்தனர். அவளை சந்தித்துவிட்டு திரும்பியவர் என்ன நடந்தது என்பதை கடைசிவரை எவரிடமும் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால், இன்னொருமுறை அவளை சந்திக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவரும் தெருக்களில் வலம் வந்தார்கள். அதற்கடுத்த நாள் மதகுருவின் மனைவி, அலபாமாவில் வசித்த எமிலியின் உறவினருக்கு கடிதம் எழுதினார்.

இதனால் அவள் வீட்டிற்கு மீண்டும் உறவினர் வந்தனர்.  என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்க காத்திருந்தோம். முதலில் எதுவும் நிகழவில்லை.

பின்னர், அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என உறுதியாக நம்பினோம். எமிலி நகைக் கடைக்குச் சென்று ஹெச்.பி. என்ற எழுத்துக்கள் வெள்ளியில் பொறிக்கப்பட்ட ஆண்களுக்கான ஒப்பனைப் பொருட்களை வாங்கினாள் என்பதை அறிந்தோம்.

இரண்டு நாட்கள் கழித்து, ஆண்களுக்கான ஆடைகளும், இரவுடையும் வாங்கினாள் என்பது தெரியவந்தது. “அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது”’ என்று சொன்னோம். உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சிதான். எமிலியின் ஒன்றுவிட்ட சகோதரிகள் அவளைவிட மோசம் என்பதுதான் எங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம்.

எனவே, ஹோமர் பர்ரோன் போய்விட்டான் என அறிந்தபோது எங்களுக்கு வியப்பேற்படவில்லை. சாலைப்பணிகள் முடிந்தும் கொஞ்சகாலம் ஆகிவிட்டிருந்தது. அவன் சென்றது, எல்லோரும் அறியும்படி பொதுவில் வெடிக்கவில்லை என்பதில் எங்களுக்கு சிறிது ஏமாற்றம்தான். ஆனால், எமிலியை அழைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவோ அல்லது எமிலி தன் சகோதரிகளை துரத்துவதற்கு வாய்ப்பளிக்கவோதான் அவன் சென்றிருக்க வேண்டும் என நாங்கள் நம்பினோம். (அதற்குள் எமிலியின் சகோதரிகளைச் சூழ்ந்து தாக்கும் சதியில் நாங்கள் எமிலியின் துணைவர்களாகியிருந்தோம்). எதிர்பார்த்தபடி ஒருவாரத்தில் அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே, மூன்று நாட்களில் ஹோமர் பர்ரோன் ஊருக்கு திரும்பி வந்தான். ஒரு நாள் மாலைநேரத்தில் அவனை சமையலறைக் கதவு வழியாக வீட்டிற்குள் அந்த நீக்ரோ அழைத்துச் சென்றதை அண்டைவீட்டுக்காரர் பார்த்தார்.

அதுதான் நாங்கள் கடைசியாக ஹோமர் பர்ரோனை பார்த்தது. அதன் பின் சில காலம் எமிலி தென்பட்டாள். நீக்ரோ காய்கறிக் கூடையுடன் வீட்டின் உள்ளும் புறமும் சென்றுகொண்டிருந்தான். ஆனால், வாசற்கதவு மூடியே இருந்தது.

அவ்வப்போது, அன்று சுண்ணாம்பு தெளிக்கச் சென்றவர்கள் பார்த்தது போல, ஒரு ஜன்னலில் ஒரு கணம் அவள் தென்படுவாள். ஆனால், கிட்டத்தட்ட ஆறுமாதமாக அவள் தெருக்களில் காணப்படவே இல்லை. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதே என்று நாங்கள் புரிந்துகொண்டோம். ஒரு பெண்ணென அவள் வாழ்வை பலமுறை குலைத்துப்போட்ட அவளது தந்தையின் குணம் எவ்வளவு நச்சுத் தன்மையும் சீற்றமும் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது.

அடுத்து நாங்கள் எமிலியைப் பார்த்தபோது அவர் பருத்துப்போயிருந்தார். தலைமுடி நரைக்கத் தொடங்கியிருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் நரைத்துக் கொண்டே சென்ற தலைமுடி மிளகும் உப்பும் சீராகப் பரப்பியது போலானது. தனது எழுபத்தி நான்காவது வயதில் அவர் இறக்கும்வரை அதேபோல், சுறுசுறுப்பான ஆணுடையது போன்ற, சாம்பல் நிறத்திலேயே இருந்தது.

அப்போதிலிருந்து அவ்வீட்டு வாயிற்கதவு மூடியே இருந்தது. நடுவில், அவளுக்கு நாற்பது வயதிருக்கும்போது, ஆறேழு வருடங்கள் சீன ஓவியம் கற்றுக்கொடுத்த போது மட்டும் அது திறந்திருந்தது. கீழ்தளத்தில் இருந்த அறை ஒன்றில் ஒரு கலைக்கூடத்தை அமைத்திருந்தாள். கர்னல் சார்டோரிஸின் சமகாலத்தவர்களின் மகள்களும் பேத்திகளும் அவளிடம் ஓவியம் பயில அனுப்பப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில், நன்கொடைத் தட்டில் சேர்ப்பதற்கென இருபத்தைந்து சென்ட்டுகளோடு தேவாலயங்களுக்குச் செல்வது போல், அவர்கள் தவறாமல் சென்று வந்தனர். இந்தக் காலகட்டத்தில் அவள் கட்ட வேண்டிய வரிகள் கட்டப்பட்டன.

புதிய தலைமுறை எழுந்து ஊரின் முதுகெலும்பாக, ஆன்மாவாக உருவெடுத்த பின்னர் அவளது மாணவர்கள் வளர்ந்துவிட்டிருந்தனர். அவர்கள் வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டதோடு தங்கள் குழந்தைகளையும் வண்ணச் சாயப் பெட்டிகளோடும், தூரிகைகளோடும், பெண்களுக்கான பத்திரிகைகளிலிருந்து வெட்டியெடுத்த படங்களோடும் அவளிடம் அனுப்பவில்லை. கடைசி மாணவி செல்வது நின்றதும், அவ்வீட்டின் வாயிற்கதவு என்றென்றைக்குமென மூடப்பட்டது. ஊருக்கு இலவச அஞ்சல் சேவை வந்தபோது, எமிலி மட்டும் தன் வீட்டுக் கதவுக்கு மேல் உலோகத்தாலான எண்களையும், அஞ்சல் பெட்டியையும் பொருத்துவதற்கு அவர்களை அனுமதிக்கவே இல்லை. அவர்கள் பேச்சை அவள் கேட்பதாகவே இல்லை.

ஒவ்வொரு நாளும், மாதந்தோறும், வருடந்தோறும் நரைத்துக் கொண்டே சென்ற தலைமுடியோடும், கூனல் அதிகரித்துக்கொண்டே சென்ற முதுகோடும் அந்த நீக்ரோ காய்கறிக் கூடையுடன் சென்று வருவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். டிசம்பர் மாதம் வந்ததும் எமிலிக்கு வரிக்கேட்பு அறிக்கையை அனுப்புவோம். ஒருவாரத்தில், பெற்றுக்கொள்ளப்படவில்லை என்ற குறிப்போடு அஞ்சலகத்தால் எங்களுக்கு திருப்பி அனுப்பப்படும்.   மாடத்தில் வைக்கப்பட்ட சிலையின் முண்டப்பகுதி போல, வீட்டின் மேல்தளம் அடைக்கப்பட்டு விட்டிருந்தது தெரிய வந்தது. சில சமயம் கீழ்தளத்தில் ஏதாவது ஒரு ஜன்னலில் அவர் தென்படுவார். அவர் எங்களைப் பார்க்கிறாரா இல்லையா என்பதை சொல்லமுடிந்ததே இல்லை. ஒரு தலைமுறைக்கு நெருக்கமானவராக, அடுத்த தலைமுறையிடமிருந்து தப்பிக்க முடியாதவராக, ஒரு தலைமுறையால் ஏற்றுக்கொள்ள முடியாதவராக, இன்னொரு தலைமுறைக்கு அமைதியானவராக, மற்றொரு தலைமுறைக்கு திரிபடைந்தவராக, அவர் கடந்துசென்றார்.

இறுதியாக, அவர் இறந்துபோனார். தூசும் நிழலும் மண்டிய அந்த வீட்டில், கிழடுதட்டிப் போன ஒரு நீக்ரோவின் உதவியோடு மட்டுமே வாழ்ந்தவர், வீழ்ந்தார்.

அவருடைய உடல்நிலை கெட்டிருந்ததா என்பதைக் கூட நாங்கள் அறியோம். அந்த நீக்ரோவிடமிருந்து தகவல் பெற முயல்வதை நாங்கள் எப்போதோ நிறுத்தியிருந்தோம். அவர் யாருடனும் பேச மாட்டார். எமிலியிடமே கூட பேச மாட்டார் போலும். பயன்படுத்தாததனாலேயே அவரது குரல் கரகரத்து கட்டையாகிப் போயிருந்தது.

எமிலி, கீழ்தளத்தில் ஒரு அறையில் இருந்த கனமான, திரைச்சீலையுடன் கூடிய வால்நட் கட்டிலில் இறந்துகிடந்தார். சூரிய ஒளி படாமல் பூசணம் பிடித்து பழுப்பேறிய தலையணை அவரது நரைத்த தலையை தாங்கியிருந்தது.

V

முதலில் வந்த பெண்களை முன்பக்கக் கதவருகே எதிர்கொண்ட நீக்ரோ, அவர்களை உள்ளே அனுமதித்தார். அவர்கள் தம் கணவர்களோடு, ஆர்வத்தோடு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு, மெல்லிய சலம்பலுடன் உள்ளே நுழைந்ததும், வீட்டிற்குள் போன அவர் பின்புறமாக வெளியில் சென்று மறைந்தார். அதன் பிறகு அவர் யார் கண்ணிலும் படவில்லை.

ஒன்றுவிட்ட சகோதரிகள் உடனடியாக வந்துசேர்ந்தனர். இறுதிச்சடங்கு மறுநாள் நடத்தப்பட்டது. விலைக்கு வாங்கப்பட்ட மலர்க்குவியலின் அடியில் கிடத்தப்பட்ட எமிலியை காண்பதற்கு மொத்த ஊரும் வந்திருந்தது. சவப்பெட்டிக்கு மேல், சுவற்றில் க்ரயான் கொண்டு வரையப்பட்ட அவரது தந்தை முகம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது. பெண்கள் கிசுகிசுப்புடன் அச்சத்தோடு பார்த்தபடி நின்றிருந்தனர். வயதான ஆண்களில் சிலர் ‘கான்ஃபெடரேட்’ சீருடை உடுத்தி வந்திருந்தனர். வீட்டின் முன்புறமும், புல்வெளியிலும் உலவியபடி, எமிலி தம் சமகாலத்தவர் என்பதுபோல, அவருடன் தாங்கள் நடனமாடியது போல, அவரை காதலித்து மணம் செய்துகொள்ள முயன்றது போல எல்லாம் கற்பனை கலந்து பேசிக்கொண்டிருந்தனர். வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் காலக்குழப்பம் அவர்கள் பேச்சில் நன்றாகத் தெரிந்தது. அவர்களைப் பொறுத்தவரை கடந்தகாலம் என்பது தேய்ந்து மறையும் ஒரு சாலை அல்ல, பனிக்காலம் தீண்டாத ஒரு பெரும் புல்வெளி. அண்மையில் கடந்துசென்ற ஒன்றிரண்டு வருடங்களே அவர்களை அதிலிருந்து பிரித்தன.

நாற்பது வருடங்களுக்கு மேலாக யாரும் பார்த்திராத ஒரு அறை, மாடியில் இருப்பதும், அதை உடைத்துத் திறக்க வேண்டியிருக்கும் என்பதும் எங்களுக்கு முன்பே தெரியும். எமிலி கண்ணியத்தோடு  அடக்கம் செய்யப்படும் வரை அவர்கள் காத்திருந்தனர்.

அந்தக் கதவை உடைத்துத் திறப்பதிலிருந்த வன்முறையே, அந்த அறையை ஊடுருவி நிறைத்திருந்த தூசியோ என்று தோன்றியது. மணச்சடங்குக்கென அலங்கரிக்கப்பட்டது போலிருந்த அறையை, பிணத்தின் மேல் போர்த்தும் சல்லாத்துணி போன்ற மெல்லிய கசப்பு போர்த்தியிருந்தது. சாயம்போன ரோஜா வண்ணத் திரைச் சீலைகள் மேல், ரோஜா வண்ணச் சாயம் பூசப்பட்ட விளக்குகள் மேல், அலங்கார மேசை மேல், வேலைப்பாடு நிறைந்த பளிங்குக் கற்கள் மேல், மங்கிப்போன வெள்ளியில் பதிக்கப்பட்ட ஆண்களுக்கான ஒப்பனைப் பொருட்கள் மேல் என எங்கும் பரவியிருந்தது. வெள்ளியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களே மறைந்துபோயிருந்தன. இவற்றிற்கு நடுவே, அப்போதுதான் கழற்றிவைக்கப்பட்டவை போலிருந்த கழுத்துப்பட்டையும், கழுத்துப்பட்டியும் இருந்தன. அவற்றை எடுத்தபோது, அவை கிடந்த இடத்திலிருந்த தூசியில் மங்கிய பிறைவடிவம் தோன்றியது. ஒரு நாற்காலியின் மேல் கவனமாக மடித்துவைக்கப்பட்ட சூட் ஒன்றும், கீழே இரண்டு சப்பாத்துகளும், களைந்தெறியப்பட்ட காலுறைகளும் கிடந்தன.

படுக்கையில் அவனே படுத்திருந்தான்.

சதையற்ற அந்த முகத்திலிருந்த ஆழமான இளிப்பை பார்த்துக்கொண்டு வெறுமனே வெகுநேரம் நின்றோம். அந்த உடல் ஒருவரை அணைப்பதுபோல கிடத்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் இப்போது, காதலைத் தாண்டி வாழும், காதலின் ஏளனத்தையே வெல்லும் நீண்ட உறக்கத்தில், மனைவியால் துறக்கப்பட்டவனின் சடலமெனக் கிடந்தது. எஞ்சிய இரவுடையின் அடியில் எஞ்சியிருந்த உடலை அந்தப் படுக்கையிலிருந்து பிரித்தெடுக்கமுடியாதபடி அதன் மீதும் அருகில் கிடந்த தலையணை மீதும் பொறுமையுடன் படிந்த தூசி சீரான படலம்போல் அப்பியிருந்தது.

அருகிலிருந்த தலையணையில் தலைவைத்துப் படுத்த தடத்தை நாங்கள் கவனித்தோம். எங்களில் ஒருவர் அத் தலையணையிலிருந்து எதையோ எடுத்தார். கண்ணுக்குத் தெரியாத தூசி மூக்கில் ஏற, குனிந்து உற்றுப்பார்த்தோம். நீண்ட சாம்பல்நிற முடி.

***

தமிழில்:-ஆனந்த் ஸ்ரீனிவாசன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *