பெண்களின் அழகுக்கு அவர்களுடைய இயல்பு, பண்பு நலன்கள், ஆளுமைக்கும் இடையிலான
முரண் பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது. நான் கல்லூரி முதலாமாண்டு படிக்கையில் எங்கள்
வகுப்பில் சற்று தாமதமாக ஒரு பெண் வந்து சேர்ந்தாள். அவள் அசாதாரணமான அழகைக்
கொண்டிருந்தாள். பெண்கள் ஒருவித அச்சத்தை அவளிடம் காட்டினர். ஆண்கள் அவளைப் பார்த்து
தடுமாறிப் போனார்கள். அவள் வந்து அமர்ந்ததும் ஒருவித மௌனம் எங்கும் பரவியது. யாரும்
அவளிடம் போய்ப் பேசவில்லை. ஆனால் வகுப்பு ஆரம்பித்ததும் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. ஆசிரியர்
அவளை சுய-அறிமுகம் பண்ணக் கேட்டார். நாங்கள் முதன்முதலில் அவளது குரலைக் கேட்டோம்.
அதைக் கேட்டதும் ஆண்கள் மத்தியில் இருந்து அமர்த்தலான சிரிப்பொலிகள் கேட்டன.
ஏனென்றால் அவள் மூக்கால் பேசினாள். அப்படி ஒரு அழகுக்கும் அந்த குரலுக்கும் பொருந்தவே
இல்லை. அடுத்தடுத்த நாட்களில் அவளுடைய அந்த பேரழகுக்கும் சுபாவத்துக்கும் சம்மந்தமே
இல்லை என நாங்கள் அறிந்து கொண்டோம். அவளுக்கு தன் அழகு குறித்த பிரக்ஞை
இருப்பதாகவே தெரியவில்லை. இது அவளை கவர்ச்சியாகவும் மாற்றவில்லை. ஏனென்றால்
வேடிக்கையான ஒரு குழந்தையாகவே அவள் இருந்தாள். விரைவில் அனைவருக்கும் அவள்
நெருக்கமான தோழியானாள். ஆண்கள் யாரும் அவளைக் காதலிக்கவில்லை. பெண்கள் யாரும்
அவளிடம் பொறாமை கொள்ளவில்லை. ரொம்ப விலகி நின்று அவளை ரசிக்கும் ஆண் கூட
பக்கத்தில் வந்ததும் ஹி ஹி என சிரித்து விட்டு அவளை சாதாரணமாக உணர்வான். ஒருவேளை
அவள் சுமாரான தோற்றமும் வேடிக்கையான மனோபாவமும் கொண்ட ஒரு பெண்ணாக
இருந்திருந்தால் கூட அவளை சிலர் விரும்பியிருப்பார்கள், ஆனால் அவளுடைய தோற்றத்துக்கும்
சுபாவத்துக்குமான அந்த முழுமையான முரண் எல்லா கற்பனாவாதங்களையும் கலைத்துப் போடும்.
பெரும்பாலான பெண்கள் தமது தோற்றத்தை ஒரு திரையாக பயன்படுத்தி தம் சுயத்தை மர்மமாக
மாற்றுவார்கள். “சந்தோஷ் சுப்பிரமணியத்தில்” வரும் ஜெனிலியாவின் குழந்தைமையில் கூட ஒரு
சுட்டித்தனம், தன்னுணர்வு, அதனாலான கவர்ச்சி இருக்கும், ஆனால் இவளோ அத்தகைய
சூட்சுமங்கள் இல்லாதவள்.
இவளைப் பற்றின நினைவு வரும் போதே ஒரு பெண் எப்போது அழகாகிறாள், எப்போது
அழகற்றவளாகிறாள் எனும் கேள்வி எனக்குள் எழும். அழகு தோன்றித் தோன்றிக் கலைகிற ஒன்றாக
இருக்க, நாமோ அது நிலையானது என இந்த காட்சி ஊடக உலகில் நம்புகிறோம். இது ஆண்-பெண்
உறவில் பல சிக்கல்களை விளைவிக்கிறது. இதனால் மட்டுமே அழகு முக்கியமற்றது என நாம் கூறி
விட முடியாது. அழகே பெண்ணுலகுக்கான திறவுகோல் (பாலுறவு சார்ந்து). ஆனாலும் இந்த அழகே
பெண்ணிருப்பை அறிய விடாமல் தம்மை தடுக்கவும் செய்கிறது. அழகு ஒரே சமயம் பெண்களுக்கு
சிறுகுகளாகவும் அவர்களை எழ விடாத பெருத்த எடையாகவும் இருக்கிறது. அழகின் இருத்தல் தான்
என்ன, அதன் முரண்கள் என்னென்ன, அது ஏற்படுத்தும் குழப்பங்கள், நெருக்கடிகள் என்னென்ன,
இந்த சிக்கல்களில் இருந்து எப்படி நம்மை விடுவிப்பது என்பதைப் பற்றியே இங்கு பேசப்
போகிறோம்.
பெண்களைப் பொறுத்தமட்டில் தோற்றமும் அவர்களுடைய வாழ்தலும் ஒட்டாதவையாக உள்ளன
என்பதே நம் விவாதத்தின் துவக்கப் புள்ளி. ஒரு பொறுப்புத் துறப்பு: இங்கே தோற்றத்தை நான்
உடலாகப் பார்க்கவில்லை. உடல் என்பது இந்த உலகில் நாம் இருப்பதற்கான ஒரு கருவி; நம்
இருப்பை அறிவதற்கு அடிப்படையாக விளங்கும் ஒரு இயக்கமே உடல். ஆக, ஒரு அழகான
பெண்ணை நாம் அழகான பெண்ணுடல் என்று வரையறுத்து விட முடியாது. ஏனென்றால் நீங்கள்
பார்க்காவிடிலும் அவளுடைய உடல் மற்றொன்றாக ஆவதில்லை. ஆனால் நீங்கள் பார்க்காவிடில்
அவளுடைய அழகு என்பது அதுவாக இருக்காது. அழகு என்பது இந்த உடல் மீது சூடப்பட்ட ஒரு
அலங்காரமாக உள்ளது; அது சுலபத்தில் துறக்க முடியாத அலங்காரமாக, வாழ்தலின் ஒரு
பகுதியாகவும் இருக்கிறது என்பதே சிக்கல். இதை நான் அடுத்தடுத்த பத்திகளில் நிறுவ முயல்கிறேன்
என்பதால் இதுவரைப் படித்தவர்கள் தொடர்ந்து படிக்கத் தவறாதீர்கள்.

அண்மையில், தமிழினி இணைய இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான கோகுல் தனக்குப் பிடித்த
அயல்நாட்டு நடிகையரின், அழகியரின் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதுவரை என் மனதை
அரித்துக் கொண்டிருந்த இக்கேள்வி அப்போது அவருடனான ஒரு பின்னூட்ட விவாதமாக
வெளிப்பட்டது. அங்கு நான் எழுப்பிய கேள்விகளையே இங்கு விரித்து கட்டுரையாக தருகிறேன்:
1) ஒரு பெண் சாராம்சமாக ஒரு அழகியாக நிலைக்க முடியாது. நான் காலத்தால் அவள் அழகு
மறைவதை சொல்லவில்லை. இந்த நிமிடமே கூட அவள் தன்னளவில் மட்டும் அழகியாக முடியாது.
அவள் எந்த கோணத்தில், எப்படியான ஒளியமைப்பில் நம் முன் தோற்றமளிக்கிறாள், என்ன
மாதிரியான ஒப்பனை அணிந்திருக்கிறாள், அவள் எந்த சூழலில் இருந்து நம் முன்பு தோன்றுகிறாள்
என்பதில் துவங்கி அவளை நாம் கவனித்து பார்ப்பது வரை பல நிலைகள் அவளது தோற்றத்தை
அழகாக்குகின்றன. நிபந்தனைகள் இன்றி அழகே இல்லை. இதை நாம் அனைவரும் ஏற்போம்.
இன்றைய காஸ்மெடிக் நிறுவனங்கள் ஒரு பெண்ணின் முகத்தை 50% மேல் புதுப்பொலிவை,
அமைப்பை, ஒளிர்வை தரும்படி மாற்றலாம் என உறுதியளிக்கும் அளவுக்கு ஒப்பனை செய்வது ஒரு
தனி கலையாக இன்று மாறி உள்ளது. பெண்கள் இன்று தம்மை ஒரு ஓவியம் போல தம் மீதே எழுதிக்
கொள்ள முடிகிறது. இதைக் கற்றுப் பயிலும் பெண்கள் அழகை ஒரு முகமூடியை போல எடுத்தணிந்து
கொண்டு உலகுக்கு தோற்றமளிக்கிறார்கள். முகமூடிக்குப் பின்பு தாம் வேறொரு நபர் என்பது
அவர்களுக்கு எந்த குழப்பத்தையும், குற்றவுணர்வையும் ஏற்படுத்துவதில்லை. கண்ணாடி முன்பு நாம்
நிற்கும் போது தெரிவது ஒரு தோற்றம் எனில் (பிரதிபிம்பத்தை உங்களால் தொட்டுணர முடியாது
என்பதால்) ஒப்பனை செய்து நிற்கையில் நாம் காண்பது ஒரு தோற்றத்தின் மீது அமர்த்தப்பட்ட
மற்றொரு தோற்றத்தை – அதாவது தோற்றத்தின் தோற்றத்தை. அது தோற்றத்தின் நிழல் அல்ல, ஒரு
பிரதி-தோற்றம் என்பதே முக்கியமான அவதானிப்பு. இப்போது ஆண்நோக்கை (male gaze) இங்கு
கொண்டு வந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகிறது. கண்ணாடி ஒரு உயிரற்ற பார்வையாளன். அது
உங்களை பிரதிபலித்தே ஆக வேண்டும். ஆனால் பார்க்கும் ஆளுக்கு உங்களை உதாசீனிக்க,
மதிப்பிட, விரும்ப, வெறுக்க உரிமைகள் உண்டு. இப்போது பார்க்கப்படாவிடில் ஒரு பெண் அழகி
அல்லாமல் ஆவாளா?
ஆண் பார்க்காவிடினும் பெண் அழகியல்லாமல் ஆக மாட்டாள் என்பதே பதில். ஏனென்றால்
ஆணின் நோக்கைக் கொண்டு அவள் தன்னையே கற்பனையால் பார்த்துக் கொள்ள முடியும், செல்பி
எடுக்க முடியும், கண்ணாடியில் நெடுநேரம் நின்று சிலாகிக்க முடியும். ஆனால் ஒரு பேரழகியை
பார்க்க உலகில் யாருமே இல்லை, அவளும் தன் பார்வைப் புலனை இழந்து விட்டாள் எனில் அவள்
பேழகியாக எஞ்சுவாளா? ஆம் தன் மனக்கண் வழி அவள் தன்னை பார்ப்பதன் வழியாக எஞ்சுவாள்.
அழகுக்கு ஏதோ ஒரு கண் தன்னை பார்ப்பது ஒரு தவிர்க்க முடியாத நிபந்தனையாக இருக்கிறது.
இனி பார்க்கிற ஆணின் தரப்பில் இருந்து ஒரு கேள்வி: உங்கள் முன்பு இரு பெண்கள் நிற்கிறார்கள்.
ஒருத்தி பேரழகி, மற்றவள் குரூபி. திடீரென வெளிச்சம் முழுக்க அணைந்து இருள் உலகெங்கும்
சூழ்கிறது. பெண்கள் இடம் மாறி நிற்கிறார்கள். உங்களால் அவர்களை அழகியராக இப்போது
அடையாளம் காண முடியுமா? அவர்களுடைய உடல் வாசனை, குரல், உயரம், பருமன்
ஆகியவற்றை வைத்து மனக்கண்ணால், கற்பனையால் முடியும். ஆனால் இதுவே காட்டி
விடவில்லையா, அழகை நீங்களே தோற்றத்தை வைத்து உற்பத்தி செய்கிறீர்கள் என்பது.
2) இருந்தும் நம்மால் அழகை ஆராதிக்காமல் இருக்க முடிவதில்லை. மிக அன்பான, பண்பான,
முதிர்ச்சியான பெண்ணை விடவும் அழகான பெண்ணையே மனம் விரும்புகிறது. அதே நேரம் ஒரு
அழகியிடம் மேற்சொன்ன குணங்கள் இல்லாமல் அவள் வெறுப்பாலானவளாக, பண்பற்றவளாக,
முதிர்ச்சியற்றவளாக இருந்தால் நாம் மெல்ல மெல்ல அவளை வெறுக்க ஆரம்பிக்கிறோம். பார்வைப்
புலனால் கிடைக்கும் இன்பமே முக்கியமெனில் ஏன் குணநலன்கள் முக்கியமாக கருதப்படுகின்றன?
ஆண்கள் ஏன் ஒரு பெண்ணிடம் ஆளுமையை எதிர்பார்க்கிறார்கள்? இங்கு தான் அழகின் ஒரு
முக்கியமான தத்துவச் சிக்கல் தோன்றுகிறது – அழகு என்பது வெளிப்படுத்தப்படுவது அன்று.
வெளிப்படுத்தலை நான் ஒரு செயலாகக் காண்கிறேன். ஒருவர் தன் பேச்சு, எழுத்து, படைப்பாக்கம்,
செயலின் வழி புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தலாம். அது ஒரு செயலாக இருக்கிறது. ஆனால்,

கவனியுங்கள், ஒப்பனை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஒரு பெண்ணை நீங்கள்
பார்க்கும் போது, அல்லது அவள் உங்கள் அருகே அமர்ந்து ஸ்டிராபெரி ஐஸ் கிரீமோ டெயிரிமில்க்
சில்க்கோ சாப்பிடும் போது போது அது ஒரு செயல் அல்ல. ஏன்? ஒரு பெண் தரையைப் பெருக்கும்
போது கூட அழகாக தோன்றலாம், தூங்கும் போது கூட அவளைப் பார்க்கும் ஒரு ஆணுக்கு இச்சை
ஏற்படலாம். ஆனால் அவள் அங்கு தன் அழகை வெளிப்படுத்த முயலவில்லையே. அதே
போலத்தான் புகைப்படத்தில், படக்காட்சியில் வரும் பெண்ணும். செயல் என்பது ஒன்றை நிகழ்த்தும்
நோக்கில் செய்யப்படுவது. புகைப்படத்தில் உள்ள பிம்பமோ தூங்கும் பெண்ணோ அப்படி தன்
அழகை ‘செய்வதில்லை’. ஒரு தோற்றநிலை (புகைப்படம்), அசைவு (நடத்தல்), வேறு உத்தேசத்துடன்
செய்யப்படும் செயல்கள் (தூக்கம், குளியல், பெருக்குவது) அழகாக கருதப்படுவதாலே அழகாகிறது
ஒழிய ‘அழகாக’ நிகழ்த்தப்படுவதால் அல்ல. இதை ஆளுமையுடன் ஒப்பிடலாம் – ஒருவருடைய
ஆளுமை நிகழ்த்தப்படாமல் வெறுமனே பார்க்கப்படுவதால் வெளிப்பட இயலாது. ஒருத்தி தன்
பசியால் அழும் குழந்தைக்கு மார்பைத் திறந்து பாலூட்டுகிறாள். அக்குழந்தைக்கு அது
பசியாற்றப்படும் செயலன்றி வேறில்லை. ஆனால் அதைப் பார்க்கும் ஒரு ஆணுக்குள் அது பால்
இச்சையை தூண்டலாம். முதலாவது அனுபவத்தால் அறியப்படுவது, இரண்டாவது
பார்வைப்புலனால் தூண்டப்பட்டு கற்பனையால் உண்டுபண்ணப்படுவது.
நீங்கள் இப்படிக் கேட்கலாம்: ஒரு பெண் குறைவான ஆடையில் கவர்ச்சியாக சாலையில்
போகிறாள். இதில் தன் அழகை நிகழ்த்தும் நோக்கம் இல்லையா? இருக்கலாம், ஆனால அப்போது
அது ஒருவழிப்பாதையாகவே இருக்கும். அவளை அப்போது ஒரு யானை துரத்தினால் அவள் ஓடுவது
பார்வையாளனுக்கு அழகாக, கவர்ச்சியாக இருக்கலாம், ஆனால் அந்த சமயம் அவளுக்கு அந்த
நோக்கம் ஒரு துளி கூட இருக்க முடியாது தானே!
பார்க்கப்படும் எந்த காட்சிக்கும் இந்த போதாமை உண்டு தானே என நீங்கள் கேட்கலாம்.
என்னுடைய பதில்: ஆவி பறக்கும் சூடான காப்பியைப் பார்த்தால் அது சூடான காப்பி எனத்
தெரியும். அதை எடுத்து அருந்தி உறுதி செய்யவும் முடியும். ஆனால் அழகை அப்படி எடுத்து நீங்கள்
அருந்த முடியாது. அழகு தோற்றத்தில் மட்டுமே உயிர்க்கிற ஒரு விசித்திர ஜீவி.
இதனால் தானோ ஏனோ அழகிகள் கூட தம் உடம்பால் மட்டும் மதிப்பிடப்படுவதை
விரும்புவதில்லை, அதே நேரம் அவர்களுடைய இருப்பானது உடலின் மீது எழுப்பப்பட்டிருப்பதால்,
அழகைக் கொண்டே அந்த உடலுடன் உறவாட ஆண்களை அழைக்க முடியும் என்பதால் வெறுமனே
தன்னை ஒரு உரையாடும் தரப்பாக, உடலற்ற குரலாக மட்டும் காணும் ஆண்கள் மீது ஒருவித
கோபமும் அசூயையும் அவர்களுக்கு ஏற்படுகிறது. அல்லது குறைந்தது அவர்களை ஒரு எல்லை
வகுத்து அங்கேயே நிறுத்தி விடுகிறார்கள் (friend zone). எந்த பெண்ணுக்கும் உடலே மனம், மனமே
உடல். ஒரு பெண் தன் தோற்ற அழகை எப்படியாக செயல்படுத்தி விட வேண்டும் என துடிக்கிறாள்.
தனது கூந்தல் இழை காற்றில் ஆடுவதில் துவங்கி சின்னச்சின்ன உணர்ச்சி வெளிப்பாடுகள்,
அக்கறை, சரியான சொற்கள் ஒவ்வொன்றும் அழகின் பகுதியாக பார்க்கப்பட வேண்டும் என
விரும்புகிறார்கள். இது பெண்கள் விசயத்தில் தோற்றம்-ஆளுமை எனும் இருமையை அழித்து அழகு
என்றால் என்ன எனும் கேள்வியை மேலும் சிக்கலாக்குகிறது. ஆனால் இந்த ஆட்டத்தில் பெண்கள்
தோற்றுக்கொண்டே போகிறார்கள் என்பதே துயரம். ஏன் எனக் கேட்கும் முன் அடுத்து ஒரு
கருத்தையும் பரிசீலித்து விடுவோம்.
3) ஒரு தச்சு வேலை செய்கிறவனை தச்சன் என்கிறோம். பேச்சை நிகழ்த்துபவனை பேச்சாளன்
என்கிறோம். பார்வையிடுகிறவனை பார்வையாளன் என்கிறோம். தலைமை தாங்குபவன் தலைவன்.
கவிதை எழுதுகிறவன் கவிஞன். கொலை செய்பவன் கொலைகாரன். பாலியல் தொழில் செய்பவர்
பாலியல் தொழிலாளி. இப்படி ஒவ்வொருவரும் தாம் சீரியஸாக எடுத்து செய்கிற ஒன்றால்
அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அன்றாடத்திலோ, போன் பேசிக் கொண்டு போகிறவன் போன்
பேசிக் கொண்டு போகிறவன் ஆகிறான். பிளாட்பாரத்தில் தூங்குகிறவன் பிளாட்பாரத்தில்
தூங்குகிறவன் ஆகிறான். செயலே அடையாளம். ஏனென்றால் செயலே நமது இருப்பு. இந்த
இருப்பானது தொடர்ந்து மாறுகிறதாக, நிலையற்றதாக இருப்பதனாலே, ஒரு நிமிடத்துக்குள் மூக்கை

நோண்டுகிறவனாக, வெறித்துப் பார்ப்பவனாக, வியர்வையை துடைப்பவனாக, போனை எடுத்துப்
பார்ப்பவனாக நாம் பல ஆட்களாக இருந்து கொண்டிருப்பதால், குழப்பம் வேண்டாம் எனக் கருதியே
நாம் பெயர்களை சூடிக் கொள்கிறோம். (அப்போதும் பெயரைக் கொண்டு மதிப்பிடப்படுவதை
விரும்ப மாட்டோம்.) இப்போது ஒரு கேள்வி கறுப்பாக இருப்பவனை கறுப்பன் என நாம் கூறினால்
அதை ஒருவர் ஏற்றுக் கொள்வாரா? மாட்டார். குள்ளமாகத் தெரிபவனை குள்ளன் என்று
சொல்லலாமா? ம்ஹும். ஒரு நாகரிகமான சமூகத்தில் கூடாது. ஏனென்றால் கறுப்பாக இருப்பதோ
வெள்ளையாக இருப்பதோ அவரது செயல் அல்ல. குள்ளமாக, உயரமாக இருப்பதும் ஒரு செயல்
அல்ல. பின்னர் ஏன் அழகாக தெரிபவரை மட்டும் அழகி என அழைக்கிறோம்? ஒரு புத்தகம் அது
புத்தகமாக தெரிவதனால் மட்டுமே புத்தகம் அல்லவே. திறந்து பார்த்தால் வெற்றுப்பக்கங்கள் எனில்
நீங்கள் அதை ஒரு நாவலாக, கவிதைத் தொகுப்பாக ஏற்க மாட்டீர்கள். ஏனென்றால் புத்தகமானது
ஒரு வாசகனுடன் உரையாடும் போதே அது புத்தகமாகிறது. ஒரு ஆப்பிள் உங்களால் கடித்து சாப்பிட
முடியும் எனும் போதே ஆப்பிள் ஆகிறது. ஒரு கல், ஒரு மலை, மேகம்? இவற்றையும் உங்களால்
பார்க்க மட்டுமே முடியும் ஆனால் தொட்டுணரவோ வேறு வழியில் பருண்மையாக அறிந்து
கொள்ளவோ முடியவில்லை எனில் அவை கல்லோ, மலையோ, மேகமோ அல்ல. ஒரு ஆப்பிளை
எடுத்துக் கடிப்பதைப் போல அழகை எடுத்து கடிக்க முடியுமா? (கன்னத்தைக் கடிப்பதை
சொல்லவில்லை.) ஒரு கல்லை எடுத்து எடையை அறிவதைப் போல அழகை கையில் எடுத்து எடை
பார்க்க முடியுமா?
“எவ்வளவு அழகாக இருக்கிறாய்?” என நாம் ஒரு பெண்ணைக் கொஞ்சும் போது அவள்
வெட்கமுறலாம் அல்லது நம்பிக்கையுடன் அதை ஏற்கலாம், கர்வம் கொள்ளலாம், ஆனால் தான்
அப்படி “இருக்கவில்லை” என்பதையும் தான் உணர்கிறாள். அது தன்னை அல்ல வேறு யாரையோ
நோக்கி சொல்லப்படுவது என அவளுக்குத் தோன்றுகிறது. அதனாலே போதாமை தோன்ற அவள்
“வேறெப்படியெல்லாம் இருக்கிறேன்?” என கூடுதலாய் தன்னை விவரிக்க, கொண்டாட, ரசிக்க
அவனைக் கேட்கிறாள். அவன் நூறு நூறு சொற்களால் வர்ணித்தாலும் அந்த போதாமை தீராது.
ஏனென்றால் அவை இல்லாத ஒன்றை இட்டு நிரப்ப கொட்டப்படும் சொற்கள்! ஆனால் பெண்களின்
உலகம் பிரத்யேகமானது என்பதால் வேறெப்படியும் அவளுடைய இருப்புக்குள் நுழைய ஒரு
ஆணிற்கு வழி இருப்பதில்லை. அவளுடைய இருப்பில் பங்கேற்ற பின்பு அவன் பெரும்பாலும்
மொழிக்குள் மீண்டும் சரணடைவதில்லை. ஏனென்றால் அவள் தன்னுடையவள் ஆகி விட்டாள்
எனும் போலி நம்பிக்கை ஏற்படுகிறது. அதனாலே பெண்கள் ஒரு கட்டத்துக்கு மேல் ஆண் தன்னை
போதுமான அளவுக்கு புகழ்வதில்லை என அலுத்தும் சலித்தும் கொள்கிறார்கள்.
இறுதியாக, ஆண்களின் தரப்பில் இருந்து பெண்ணழகு சார்ந்த சில சிக்கல்களைக் குறிப்பிட்டு இதை
முடித்து வைக்கிறேன்.
ஒரு பெண் தன்னிருப்பை அறிவதற்கு உடலை ஒரு மார்க்கமாக வைத்தாலும் அவள் ஒரு அழகியாக
இருக்கும் பட்சத்தில் அந்த அழகானது ஆணைப் பொறுத்தவரையில் ஒரு கவனச்சிதறலாகவே
இருக்கும். (அவன் அவளுடைய அழகை பார்த்து ரசிப்பதில் அக்கறை மிகுந்து போனால்
தொலைவில் இருந்து சைட் அடிக்கிறவனாக இருக்கவே விரும்புவான். இப்பழக்கம் மோசமாக
வளர்கையில், திரையில் மட்டும் பாலின்பத்தை துய்ப்பதை ஒருவன் விரும்பும் போது,
போர்னோகிரபி போதையாக மாறும்.) ஒரு அழகியுடன் பேசிப் பழகும் போது அவளுடைய
எண்ணங்களை, இயல்பை, நாட்டத்தை, உள்முரண்களை, அன்பை, வெறுப்பை அறிவதற்கு அந்த
அழகு ஒரு தடையாக இருப்பதை அவன் உணர்வான். பெண்களுக்கோ மிகுதியான அழகு ஒரு
தன்னுணர்வை அதிகப்படுத்தி ஆணவத்தை உண்டு பண்ணி ஆணிடம் இருந்து அவர்களை விலக்கி
வைக்கும். இருவருக்கும் இடையில் ஒரு வெற்றிடம் தோன்றும். ஒரு அழகற்ற பெண்ணிடத்து
உங்களுக்கு ஆர்வம் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் பழகுவதற்கு, அறிவதற்கு, உறவாடுவதற்கு
அவர்களே சுலபமானவர்கள். அவர்கள் உடனடியாக ஒப்புக்கொள்வார்கள் என்று அல்ல நான்
சொல்வது. அவர்களுக்கு அழகு எனும் தடையரண் இல்லை என்பதையே வலியுறுத்துகிறேன். ஏன்
அழகை ஒரு தடையரண் என்கிறேன்?

ஒரு பெண்ணிடம் முக்கியமாக இரண்டு விசயங்களை சொல்லலாம்: 1) ஆளுமையும் (2) பாலின்பமும்.
இரண்டையும் நோக்கி உங்களை ஈர்க்கிற அழகு அவற்றை நெருங்க விடாதபடி ஒரு
முள்வேலியாகவும் செயல்படுகிறது. அழகில்லாத போது ஒரு பெண் தன் ஆளுமையை
வெளிப்படுத்த, ஆணுடன் உறவாடி பாலின்பம் தந்திட, பெற எளிதாகிறது. ஆனால் அழகோ
எப்போதும் உறவுகளை சிக்கலாக்குகிறது, ஏனென்றால் அழகு வாழ்தலுக்கு, நமது இருப்புக்கு
வெளியே அமைந்திருக்கிறது. ஏனென்றால் அழகு முழுக்க முழுக்க இன்மையால் ஆனதாக
இருக்கிறது.
ஒரு அழகிய பெண்ணுடன் இருட்டில் முயங்கும் ஒரு ஆணுக்கு தான் துய்ப்பது அழகற்ற ஒரு உடலை,
முன்பு இருந்த தோற்ற அழகு இப்போது இல்லை எனத் தெரியும். அது ஏற்படுத்தும் ஒரு
அந்நியமாதல், அதன் அதிர்ச்சி அவனை மேலும் மேலும் அந்த உடலுக்குள் புகுந்து அதுவாகவே
ஆகத் தூண்டுகிறது. தான் மிக அதிகமாக ஆராதித்த அழகை தன்னால் தொட, முகர, தழுவ
முடியவில்லை, தான் தழுவியதும் அது மறைகிறது என்பதை உணராத ஆண் உண்டா? பாலுறவால்
ஒரு உறவை தக்க வைக்க முடிவதைப் போல தோற்றப்பொலிவினால் செய்ய முடிவதில்லை
என்பதை நடப்பில் பார்க்கிறோம். ஏனென்றால் வாழ்தல் செயல்களினால் ஆனது, தோற்றத்தினால்
அல்ல.
இந்த கோணத்தில் பார்த்தால், அழகு என்பது ஒரு அப்பாலைக் கருத்துருவாக (metaphysical
construct) நம் சமூகத்தில் உள்ளது. சர்வ வியாபியான, சர்வ வல்லவனான, முதல்முழுமையான
இறைவனைப் போல. அறம், மக்களாட்சி, நேர்மை, உண்மை போன்ற லட்சிய கருத்துருக்களைப்
போல. எப்படி ஒரு பக்தன் தன் கடவுளை துதிக்கத் துதிக்க தெய்வத்தின் இருப்பு குறித்த சந்தேகம்
அவனுக்கு வலுவாகிறதோ, அப்படியே அழகுக்கும் நிகழ்கிறது. கடவுளைப் போன்றே அழகும்
செயலில் இருப்பற்றது. அது கற்பனையை, நம்பிக்கையை (தோற்றத்தை) சார்ந்து இருக்கிறது.
மிகப்பெரிய சிலைகளை எழுப்பி கோயில்களை அமைத்த பின்னரும் பக்தர்களால் இறைவன்
அங்குதான் இருக்கிறான் எனக் கூற முடியாது போகிறது. அத்வைதம் கோருவதைப் பின்பற்றி ஒருவர்
வாழ்தலில் இறைவனை நாடினாலோ வாழ்தலில் இருந்து இறைவன் ஒரு மீனைப் போல தப்பித்
தப்பிப் போகிறான்.
இறைவனைப் போன்றே அழகும் இன்மைக்கான நுழைவுவாயில் எனத் தெரிய வரும் போதே நாம்
விடுதலை கொள்கிறோம்!

-எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.