கன்னடத்தில்: மதுசூதனன் வை. என்

தமிழில்: கே. நல்லதம்பி

நீங்கள்; உங்களை நீங்கள் எனாமல் என்னவென்று அழைக்கவேண்டுமோ தெரியவில்லை. முந்தாநாள் நீங்கள் என்னை சந்தித்தீர்கள். தலையைக் கோதினீர்கள். கண்ணத்தைக் கிள்ளிப் போனீர்கள். எதற்காக அப்படிச் செய்தீர்கள்? எவ்வளவு சிரமம் தெரியுமா. அன்று ஃபிலம் ஃபெஸ்டிவல் கியூவில் நின்றபோது, எனக்கு அது நீங்கள் என்று தெரிந்திருந்தது. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி விட்டது போலனது. எனக்கு விருப்பமான படம். விட்டு ஓடவும் முடியாது. அதற்காக வரிசைக்குள்ளே போகும்வரை உங்களுக்கு எதிராக திரும்பி நின்று விட்டேன். என்னை அப்படி எல்லாம் நேரடியாக சந்திக்கக் கூடாது. எனக்குப் பிடிக்காது. எனக்கு நீங்கள் என்றால் விருப்பம். அந்த விருப்பம் பாழாகக் கூடாது. அதற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறேன் தெரியுமா.
எனக்கு எல்லாம் தெரியும். முழு முட்டாள் அல்ல. அன்று தியேட்டரில் உங்கள் கண்கள் யாரை எல்லாம் சந்தித்திருந்தன! அவன்; தாடிக்காரன், வாராத கரடித் தலை; அவனுடன், மற்றொரு கண்ணாடிக்காரன்; கன்னம் ஊதிக் கொண்டிருக்கிறது. வயிறு முன்னால் தள்ளியிருக்கிறது. அப்போதே சீனியர் சிட்டிஜன் வசதிகளைப் பெறுகிறான். அவன் தேடலுக்கும் எதிர்வினை செய்கிறீர்கள். மற்றொருவன் சின்னவன்; இன்னும் ஓட்டுரிமையைப் பெற்றிருக்கிறானோ இல்லையோ; அந்தச் சின்னவனுக்கு குறும்புச் சிரிப்பை அளிக்கிறீர்கள். எனக்குப் பொறாமை. அதற்குத் தான் என்றும் நேரடியாக கிடைக்க வேண்டாம் என்றது. தொலைவிலிருந்தே ஆராதிப்பது எனக்கு நல்லது; நவ தேவிகளில் ஒருவரைப்போல இருக்கிறீர்கள் நீங்கள். உருண்டை முகம் உங்களுக்கு அழகு; வெள்ளைக் கோதுமை மாவின் நிறம்; நீண்ட கேசத்தின் நுனியில் சுருள்; உங்கள் பார்வை; மற்றும் நீங்கள், மொத்தத்தில் நீங்கள்!
தெரியுமா, என் வீடு தாஜ்மகால் வடிவத்தில் இருக்கிறது. உள்ளே ஒரு சமாதி இருக்கிறது. அந்த தாஜ்மகால் முழுமையாக வெள்ளைப் பளிங்கில் கட்டியிருந்தால், இந்த மகால் முழுமையாக கண்ணாடியால் ஆனது. உள்ளே இருந்து வெளியே எதுவும் தெரியாது. வெளியே இருந்து உள்ளே எல்லாம் தெளிவாகத் தெரியும். சமயலறை, கூடம், படுக்கை அறை, பாத் ரூம்; எல்லாம் தெள்ளத் தெளிவாக. அந்த தாஜ்மகால் யமுனை நதிக் கரையில் இருக்கிறது. இந்த மகால் வரண்ட நதிக்கு நடுவில் இருக்கிறது. பிளந்த கற்களுக்கு நடுவில்.
முந்தாநாள் ஒருவன் வீட்டிற்கு வந்திருந்தான். அப்போதுதான் ஆடை அணிந்து, பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். தடார் என்று கதைவைத் தள்ளினான். உள்ளே வந்தவன் ஒரு புத்தகத்தை முகத்தின் மீது வீசி எறிந்து, “இது என்ன எழுதியிருக்கிறீர்கள் நீங்கள்? எதற்கும் பொறுத்தமில்லை” என்று குதித்தான். எச்சைக் கையுடன் இருந்தேன். புத்தகம் என் மூக்கில் பட்டது. வலித்தது. விபத்து ஏற்படும்போது உண்டாகும் ஷாக் போலானது. இடது கையால் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அட்டைப் படத்தைப் பார்த்தேன். ஆம், நான் அடுத்ததாக எழுத வேண்டும் என்று கொண்ட புத்தகம். அது எப்படியோ ஒரு பிரதி அவன் கைக்குக் கிடைத்து விட்டது.
“ஏ, ஏ., என்ன ஆனது? எதற்கு சரியில்லையா? ஏதாவது தவறு இருக்கிறதா? நல்லா இல்லையா? ரச-ருசி கிடைக்கவில்லையா?” மிகவும் பயந்து போயிருந்தேன்; திக்கினேன். “என்னப்பா இது, எதிர்காலப் புத்தகத்திற்கு இப்பவே இந்தத் துப்புத் துப்புகிறானே.” வேதனையடைந்தேன்.
அவன் சொன்னான் – “இல்லை, இங்கே நாயகனும் அவன் மனைவியும் ஆதர்ச தம்பதிகள். வில்லனும்; வில்லியும் அவர் வீட்டில், கணவன் மனைவியைப்போல இருப்பவன்; மனைவி கணவனைப்போல இருப்பவள். மேலும் ஆதர்ச தம்பதிகளின் வீட்டில் குடியிருப்பவர்கள். நீங்கள் உருக்குலைத்து விட்டீர்கள். உங்களுக்கு பாத்திரத் தெளிவு இல்லை. அனுபவத் தெளிவு இல்லை. மிகவும் புத்திசாலித்தனத்தைக் காட்டி இருக்கிறீர்கள். நாயகன் பாத்திரம் சாதுவானது, நல்ல குணம்; வில்லன் திருடன், கெட்ட குணங்களின் மொத்தம். பாத்திரங்களின் வர்ணனையிலிருந்து எளிதாக ஊகித்துக்கொள்ள முடியும்: நாயகனுடையது டிபிக்கள் இந்து அரெஞ்ச்ட் மேரேஜ். வில்லனுடையது லிபரல் தலித் பிராமண லவ் மேரேஜ். நாயகனுக்கு சைவ உணவிட்டு; வில்லனுக்கு மாமிச ஆகாரம் கொடுத்து; அதுவும் மாட்டுக்கறி. நாங்கள் என்ன காதில் பூவைத்திருப்பதைப் போலத் தெரிகிறோமா?”
நான் அதிர்ச்சியடைந்தேன். ஏதோ ஒரு பாத்திரம்; ஏதோ ஒரு சாப்பாடு என்று நினைத்திருந்தேன். எனக்குச் சொல்ல வேண்டிய கதை; அதில் இருக்கும் சிக்கல்; அதை விடுவிப்பது முக்கியமாக இருந்தது.
“ஏதோ ஒரு பாத்திரம், ஏதோ ஒரு உணவல்ல அது; உங்கள் மன ஆழத்தில் அடங்கி இருக்கும் வேற்றுமை.”
அட, கெட்டிக்காரன். உள் மனப் பேச்சை கேட்கிறானே. என் உணவுப் பழக்கத்தை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். வேண்டாம் என்று அமைதியானேன். சங்கோசம் என்றல்ல; அவனுடைய ருசியின் அனுபவத்திற்கு பங்கம் விளைவிப்பது போலாகும். நான் சொன்னதையே சுளிவாக எடுத்துக்கொண்டு என்னையே ஒரு பாத்திரமாக கற்பனை செய்துகொண்டு வில்லனை நாயகனாகவும் நாயகனை வில்லனாகவும் ஆக்கி மற்றொரு தகராறு செய்கிறான்.
அவனை அங்கேயே உட்கார வைத்துவிட்டு, என் வீட்டிற்கு எதிரே இருக்கும் மலையை ஏறினேன். எட்டு நூறு மீட்டர் உயரமான மலை அது. ஒரே பாறை என்ற பெருமை. உச்சிக்குப் போனேன். அங்கே இருந்து கீழே குதித்தேன். அது எப்படியோ தரையைத் தொடும் முன் எனக்கு சிறகு முளைத்து விட்டது. முளைத்த சிறகுகளை மடித்துக்கொண்டு பள்ளத்திலிருந்து எழுந்து வீட்டிற்கு வந்தேன்.
அவன் என்னவெல்லாம் விவரத்தை உளறினான், அது கதையா, புனைவா தெரிவிக்கவில்லை. அதை சொல்லி இருந்தாலாவது எழுதக் கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும்.
வீட்டுக்குள் வருகிறேன், ஆசாமி, என் தட்டில் இருக்கும் அவலை மேய்ந்து கொண்டிருக்கிறான். அதில் இருக்கும் சிறப்பான கலவைகளை பொறுக்கிப் பொறுக்கி சாப்பிடுகிறான். கடலையை பொறுக்கித் திண்பது போல.
“நல்ல இருக்கா?”
“உங்கள் எழுத்து நிரசமானாலும் சாப்பாடு நல்லா இருக்கிறது; ருசியாக இருக்கிறது.” தலையை அப்படியும் இப்படியும் அசைத்துச் சொன்னான். மக்கள் இப்படியும் ஒருவரின் மர்ம அங்கத்தை உதைத்து சாரி சொல்லலாம் போல. மறுபடியும் “எழுத்து” என்று குப்பையைக் கொட்டினான்; கதையா, புனைவா தெரிவிக்கவில்லை. புத்தகத்தின் மீது அது என்ன என்று எழுதவில்லை. ஒன்றை கவனித்தேன்; அவன் குரல் இப்போது பனிக் கட்டியைப்போல குளிர்ச்சியாக இருந்தது: ருசியான சாப்பாட்டின் தாக்கம்.
“ஆமா, ஆமா; நான் தயாரிக்கும் பலகாரங்கள் மற்ற இடங்களில் கிடைக்காது. எனக்குப் பழக்கம், சமையல் சலிப்பு. அததையே தின்று நாக்குக் கெட்டுப் போயிருக்கும். அதனால் புதுப்புது கலவைகளை கண்டு பிடிக்கிறேன். நீங்கள் சாப்பிடும் அவள் ரெசபியை சொன்னால் அதிர்ந்து போவீர்கள்.”
“அய்யோ, அது எதற்கு அதிர்ந்து போகவேண்டும்; இவ்வளவு அருமையான பலகார ரெசபியை சொன்னால் எனக்கும் அனுகூலம், உண்மை தானே. மனைவியிடம் சொல்லி சமைக்க வைப்பேன்.”
மெல்ல, “அது நீங்கள் அவலில் பொறுக்கிப் பொறுக்கி சாப்பிடுவது பீஃப் துண்டுகள்” என்றேன்.
வாசிப்பாளன் திடீர் என்று தலையைத் தூக்கினான். நெஞ்சுவரை உயர்த்தி இருந்த பிடி அங்கேயே நின்றுவிட்டது. முகத்தில் வியர்வை வழிந்தது.
நீங்கள் அன்று பெஸ்டிவலில் யார் யாரையோ தேடியதைப்போல இவன் கண்கள் என்னிடம் யார் யாரையோ தேடின.
“எனக்கு எண்ணெய் பலகாரங்கள் சேராது. அதனால் சூரியகாந்தி, கடலை, அரிசி, கொப்பரை போன்ற எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவதில்லை.”
“பிறகு தாளிப்புத் தெரிகிறதே; ஆலிவ் ஆயில் சேர்க்கிறீர்களோ; தடித்த காரில் நடமாடும் எழுத்தாளர்.”
“ச்சே,ச்சே, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நான் எண்ணெயை வாங்குவதே இல்லை. ஃபிஷ், சிக்கன், ஃபோர்க், பீஃப்; எந்தக் குழம்பு சமைத்தாலும்; அதில் மிதக்கும் எண்ணெயை எடுத்துக் கொள்கிறேன். மற்ற சமையலுக்குப் பயன்படுத்துகிறேன். இன்று போட்டிருப்பது ஃபோர்க் எண்ணெய்.”
பாறையை தகர்க்கும் வெடி மருந்தைப் போல அவன் வெடித்தான். தட்டை தூக்கி என் முகத்தின் மீது வீசி எறிந்தான்.
“என்னடா தேவிடியாப் பயலே, அப்ப இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். என்னைப் பற்றி என்ன நினைக்கிறே. விளையாடறயா. கேடு கெட்டவனே, திமிரு பிடிச்சவனே, வஞ்சகனே….” என்று கத்தினான். வாசகன் என்றும் அரசன் என்று என் மனதில் அச்சாகி உட்கார்ந்திருந்தது. துப்பினாலும் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவன் வசைகளை எல்லாம் வாங்கிக்கொண்டேன். முகத்தின் மீது விழுந்த அவலை துணியால் துடைத்துக்கொண்டேன். அவன் கோபத்துடன் எழுந்து வெளியே நடந்தான். என் கண் அவன் முதுகைத் தொடர்ந்தது.
நீங்கள் அங்கேயே இருக்கிறீர்கள்; என் வீட்டுக்கு வெளியே. என்னைப் பார்த்துக்கொண்டே நடந்து போனீர்கள். உங்கள் முக பாவம் எனக்குப் புரியவில்லை.
***
அன்று பெஸ்டிவலில் அறிமுகப் படுத்திக்கொண்ட நான்கு பேரை எப்படியோ நட்புப் பாராட்டி வீட்டிக்கு அழைத்திருந்தேன். தாடிக்காரனின் பெயர் க, கண்ணாடிக்காரனின் பெயர் ச, கிழவன் த, பையன் ப என்று தெரிந்தது. நான் வேடிக்கை செய்யவில்லை. அவர்களுடைய உண்மைப் பெயர் அவை. நேற்று வந்திருந்த வாசகன் என்னை கில்லாடி என்று கிண்டல் செய்தது அதே காரணத்திற்காக. நீங்கள் எவ்வளவு அதிசயமானவர்கள், உங்கள் பெயர் எனக்கு விருப்பம். ‘அதிசயம்’; மிக அழகாக இருக்கிறது. நான் அந்த எழுதாத புத்தகத்தில் ஒரு எழுத்துப் பெயர்களைக் கொடுத்திருந்தேன். என்னைப் பொறுத்தவரை பாத்திரங்களுக்கு உண்மைப் பெயர்களைக் கொடுத்தால் கதை கெட்டுவிடும். குறுக்குப் பாதையைப் பிடிக்கும். அவன் வாசக அரசன். அவன்தான் அதற்கு டிபிக்கல் எடுத்துக்காட்டு. பாத்திரங்கள் அருந்தும் உணவின் மீது மற்றதை எல்லாம் கற்பனை செய்துகொண்டிருந்தான். வெறும் சாப்பாட்டிலிருந்து எதை எல்லாம் ஊகம் செய்து கொண்டிருந்தான். இனி முழுப் பெயரையும் கொடுத்திருந்தால் என் மண்டையை உடைத்து விட்டுப் போயிருப்பானோ. அப்படி என்ன பெரிதாக அதில் இருக்கிறது, மண்டை உடைப்பது என்று உங்களுக்குத் தோன்றலாம்; பிறகு சொல்கிறேன். திரும்பப் பார்ட்டிக்கு வருவோம்.
பார்ட்டியில் நான்கு பேரும் நன்றாகக் குடித்தார்கள், தின்றார்கள். தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நான் எழுந்து போய் சுவரில் மாட்டியிருந்த இரண்டு ராஜா கத்திகளை எடுத்து வந்தேன். என் தாஜ்மகாலில் இதுபோன்ற அதிசயமான பொருட்கள் நிறையவே இருக்கின்றன. அதில் சமாதியும் ஒன்று. சில சமயம் சமாதியின் மீது தலையணையை வைத்துப் படுத்துக் கொள்வேன்.
பள பளவென்று ஒளிரும் தங்கக் கத்திகளை பார்த்தவுடன் க மற்றும் ச ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டு விளையாட்டுப் பொருளைப் போல சூழற்றினார்கள்.
குடித்திருந்தார்கள்; “ஏ, இதை எல்லாம் அப்படி வீசி சுற்ற வேண்டாமப்பா, எங்கள் மீது பட்டுவிடும். அவை கூர்மை. வேண்டுமென்றால் பின்புறம் போங்கள், அங்கே விசாலமான இடம் இருக்கிறது” என்றேன்.
அவர்கள் உடனே எழுந்தார்கள். எனக்கு குடித்துக் கார் ஒட்டவேண்டும் என்ற பழக்கம் எப்படியோ அப்படி அவர்களுக்கு குடித்து விட்டு கத்தியைச் சுழற்ற வேண்டும் என்ற பழக்கம். த, ப, நானும் அவர்களைப் பின்தொடர்ந்தோம்.
பின்கட்டில் பௌர்ணமி இருட்டில் அவர்கள் தடுமாறிக்கொண்டே கத்திகளை இரு முறை டன் டன் என்று சத்தம் செய்தார்கள். அதுதான் அவர்களுடைய சாதனை. மூன்றாம் முறை ஒவ்வொருவர் கழுத்தையும் கசக் என்று வெட்டிக் கொண்டார்கள். அவர்கள் கழுத்திலிருந்த இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தம் சில்லென்று பாய்ந்து தெறித்தது. நான் குளியலறைக்குச் சென்று இரண்டு வாளிகளை எடுத்துக்கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தேன்; தெறித்த இரத்தம் சரியாக வாளியில் விழுவதுபோல. கோழி, ஆடு வெட்டும்போது இரத்தத்தை அள்ளிகொள்வோமே அப்படி. வேஸ்ட் ஆகக்கூடாது தானே.
நமக்கு எது தேவையோ அதுதான் நடக்குமா? அப்படி நடக்கும்படியாக நாம்தான் சூழ்நிலையை அமைக்கிறோமா? நீங்கள் மறுபடியும் வானில் மிதக்கிறீர்கள். இந்த முறை உங்களிடம் கவலை இருந்தது. நீங்கள் உங்கள் இரு நெருங்கியவர்களை இழந்த துயரம் என்று எண்ணினேன். காரை எடுத்துக்கொண்டு மெஜஸ்டிக்குக் போய் வட்டவடிவத்தில் இருக்கும் பி. டி. எஸ் பேருந்து நிலையத்திற்கு நட்ட நடுவில் மக்களின் மத்தியில் உட்கார்ந்து பேண்டு வந்தேன்.
***
என் தாஜ்மகால் வரண்ட நதிக்கு நடுவில் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா. அந்த நதிக்கு தொலைவில் அணை கட்டப்பட்டிருக்கிறது. அது கொஞ்சம் விரிசல் விட்டு குழாயைப்போல தண்ணீர் சொட்டுகிறது. அங்கே இருந்துதான் தினமும் தண்ணீர் எடுத்து வருவது. சில நேரம் நதி திடீர் என்று பொங்கும். அணையை மீறிப் பாயும். வெள்ளம் வரும். அப்போது நான் வீட்டில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன்; எழுதிக்கொண்டிருப்பேன்; வளாகத்தில் செடிகளின் தலையைக் கோதி விடுவேன். அல்லது அணையின் முன் பகுதியில் உட்கார்ந்து துணி துவைப்பேன்; தண்ணீர் நிரப்புவேன். வெள்ளம் வரும்போது மூழ்குவேன். எனக்கு நீச்சல் வராது. ஒவ்வொரு முறையும் இந்த முறையும் இறந்து போவேன் என்று நினைப்பேன். சாகமாட்டேன். மாலை மீதிருந்து குதிக்கும்போது பறவைக்கு சிறகு முளைப்பது போல வெள்ளம் பொங்கி வந்தாலும் சிறகுகள் முளைக்கும்; ஆமை சிறகுகள். அது எப்படியோ புள புள என்று மிதக்கும். வெள்ளம் இறங்கும் போது என் கண்ணாடி வீடு கழுவப்பட்டு சுத்தமாகி மிர மிர என மின்னும். வெள்ளம் வருவதே என் வீட்டை கழுவத்தான் என்று நினைக்கிறேன்.
அவன், வாசகன் திரும்பவும் வந்திருந்தான். இந்த முறை புது எழுத்தை எடுத்துக்கொண்டு, புதிய கம்ப்லைன்ட்-டை சுமந்து வந்திருந்தான். இதில் ஒருத்தி ஒருவனுக்கு கடன் கொடுத்திருப்பாள். அவன் திருப்பித் தருவதில்லை. அவள் கோபத்துடன் அவன் வீட்டைத் தேடிப் போகிறாள். அவன் கடனுக்கு பதிலாக தன் மனைவிடமிருந்து ருசியான பிரியாணியை சமைக்க வைத்து வயிறு வெடிக்குமளவுக்கு சாப்பிட வைத்து அனுப்புகிறான். அவல் தன் பணத்தை இழந்த வெறுப்புடன் வெளியே வருகிறாள். உள்ளே போகும் போது காலி வயிறாக இருந்தது வெளியே வரும்போது அது ஊதி இருப்பதை அவள் கணவன் மறைவில் நின்று கவனிக்கிறான். அவளுக்கு முன்பே வீடு சேர்ந்து விஷம் அருந்தி நிம்மதியாகப் படுத்திருக்கிறான்.
‘கடந்த முறை வில்லன் தலித் பிராமண ஜோடியை உருவாக்கி என்னிடம் இருந்து வசை வாங்கிக் கொண்டு இந்த முறை உணர்வுபூர்வமாக அதே ஜோடியை நாயகர்களாக்கி, தோல் நிறத்தை மாற்றி அவளுக்கு வெள்ளைத் தோலைக் கொடுத்து மேல் சாதி என்றும், அவனுக்கு கறுப்பு சருமம் கொடுத்து கீழ் சாதி என்றும் செய்து; பிரியாணி சாப்பிட வைத்து வில்லன் முஸ்லிம் என்று நுணுக்கமாக பிம்பித்து; அவள் வாயிலிருந்து ‘ஒருவேளை’, அவன் வாயிலிருந்து ‘அநேகமாக’, இவை எல்லாம் தோன்றாத அளவுக்கு கூமட்டை என்று நினைக்கிறாயா என்னை?, பிரியாணி இடத்தில் தயிரை வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்?’
“என்ன நடந்திருக்கும்?”
“உங்கள் எழுத்துக்கு வேறொரு திருப்பம் கிடைத்திருக்கும்.. அதன் கோணம் மற்றொரு திசையில் புரண்டிருக்கும்.”
நான் முதலில் புத்தத்திலிருந்து பெயர்களை எடுத்திருந்தேன். இப்போது இனி சாப்பாட்டை எடுத்து விடவேண்டும் என்று உறுதியாக முடிவு செய்தேன். பாத்திரங்களின் வாயிற்கு பூட்டுப் பூட்டி, கூழ் இல்லாமல் சாகடிக்க வேண்டும், கேடு கெட்டவைகள்.
கோபம் வருகிறது; பெற்ற வயிறு, சங்கடத்தையும் அனுபவிக்கிறது. கிழங்கு, புல் கீரையையாவது போட்டு காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற திட்டம் உருவாகிறது.
அந்தக் கோபத்தில்; என் பாத்திரங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஒரே அக்கரையுடன் அவனுக்குக் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.
“நீங்கள் எதற்கு ஒருவரை மேல் சாதி என்று அழைத்து அழைத்து அவர்களை மேலே உட்கார வைக்கிறீர்கள்? மற்றொருவரை கீழ் சாதி என்று அழைத்து அழைத்து அவர்களை கீழே அமர்த்துவது? அவ்வளவு சைக்காலஜி தெரியாதா உங்களுக்கு? ஒரு குழந்தைக்கு பிறப்பிலிருந்தே நீ மேல் சாதி என்று தலைக்குள் புகுத்தினால் அது முட்டாளாக இருந்தாலும் பெறுமையில் வீங்கும். மற்றொரு புத்திசாலி குழந்தைக்கு நீ கீழ் சாதி என்று அழைத்து அழைத்து தாழ்வு மனப்பான்மையால் அது மன வளர்ச்சியே குன்றிவிடும்.”
“உங்கள் பேச்சின் பொருள் என்ன? நீங்கள் கீழ் சாதியை கீழ் சாதி என்று அழைப்பதல்ல அது; சமூகம் உங்களை கீழ் சாதியாகப் பார்க்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது.”
“இரண்டும் ஒன்றுதானே அவர்கள் மனத்திலிருந்து மறையாமல் நிலைப்படுத்துவது.”
“உங்கள் எண்ணப்படி பரிகாரம் என்ன?”
“எளிது; இந்த இரண்டு சொற்களுக்கும் இணைப் பொருட் சொற்களை தேடுங்கள். உங்களுக்குத் தெரியுமா? கார்ப்பரேட் அமைப்புக்களில் சாதாரணமாக நாங்கள் பொருள், விஷயங்களைப் பிரிக்கும் போது வைட் லிஸ்ட், பிளாக் லிஸ்ட் என்ற சொற்களைப் பயன்படுத்துவோம். ஏற்கும் பொருட்களை வைட் லிஸ்ட்டிலும், ஏற்காத பொருட்களை பிளாக் லிஸ்ட்டிலும் சேர்ப்போம். நீங்கள் “அவன் வாழ்க்கையில் இந்த நிகழ்வு கறும்புள்ளி” என்று சொல்கிறீர்களே. ஒருவகையில் அதுபோல. இப்போது அந்த இரண்டு சொற்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.”
அவன் போன பிறகு என் வீடு முழுக்கவும் கறுப்பு நூல் சுற்றிக்கொண்டது. மிகவும் அதிகமாக. பாட்டலில் வெள்ளைப் பஞ்சு சரமாலை நிறைந்திருப்பது போல. கறும் புள்ளி. வெள்ளைப் புள்ளி. நான் வளாகத்தில், நின்றுக்கொண்டு சிக்கு விழுந்த நூலை விடுவித்துக் கொண்டிருந்தேன். நூல்கள் எழுத்து வடிவில் உருண்டையாயின. அந்தக் கலக்கல் எழுத்துக்களை சரியாக அடுக்கி வைத்தால் பொருள் இருப்பது போல; எப்படி ஜோடிப்பது என்று புரியாமல். இதுபோன்ற நேரங்களில் காந்தத்திற்கு இரும்பு ஒட்டிக்கொள்வது போல என் தலை படுக்கைக்கு ஒட்டிக்கொண்டிருந்தது. எவ்வளவு இழுத்தாலும் வெளியே வரவில்லை.
அன்று என் தலை படுக்கையில் ஒட்டிக்கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் வந்து தலையைக் கோதி கன்னம் கிள்ளிப் போனது. என்னை அந்த அளவுக்கு கட்டுப்படுத்துவது நலமா?
***
உங்கள் தொடுதலின் மந்திரத் தன்மையால் படுக்கையிலிருந்து தலை விடுவித்துக் கொண்டது. நீங்கள் அங்கிருந்து போன பிறகு த வும், ப வும் வந்திருந்தார்கள்; பார்ட்டி செய்ய. அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தேன். போன முறை வந்திருந்த போது க மற்றும் ச இறந்தது நினைவிற்கு வந்தது. இந்த முறை என்ன விபத்துக் காத்திருக்கிறதோ? ஆழந்த உறக்கம். அவர்களுக்குப் போதுமான அளவுக்கு குடிக்கக் கொடுத்து எழுந்து மலை மீது சென்றேன். குதித்தேன். எவ்வளவு நேரமானாலும் சிறகு முளைக்கவில்லை. விபரீதமாக பயம் உண்டானது. கீழே பாறை இருந்தது. வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. மரணம் உறுதி. “யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறினேன்.
கத்தியது போல வாய் அசைந்தது; குரல் வரவில்லை. அதற்குள் பெரிய பறவை ஒன்று அலகிலிருந்து என்னை பிடித்து எடுத்துக்கொண்டு போனது.
அதன் சிறகுகள் எனக்கு முளைக்கும் சிறகுகளை விடவும் பெரியதாக இருந்தது. பறவை வீட்டுக்கு எதிர் திசையில் பறக்கத் தொடங்கியது.
“எங்கே சுமந்து செல்கிறாய். வீட்டில் கெஸ்ட் இருக்கிறார்கள்.”
“உனக்காக ஒருவர் வெகு காலமாக காத்துக்கொண்டிருக்கிறார்.”
எனக்காகவா? எனக்காகக் காத்துக்கொண்டிருப்பவர் புவி மீது இருக்கிறார்களா? ரோமாஞ்சனமானது. ஆர்வம். யாராக இருக்கலாம்?
பறவை ஒரு வீட்டு வளாகத்து முன் தொப் என்று போட்டுப் போனது.
வளாகத்தில் கிழவி ஒருத்தி பக்கத்தில் ஊன்று கோலை வைத்துக்கொண்டு குதிக்காலில் உட்கார்ந்திருந்தாள். தடித்த கண்ணாடி போட்டிருந்தாள். பூதக் கண்ணாடி போல இருந்தது அது. தலை நடுங்கிக் கொண்டிருந்தது.
“மறந்து விட்டாயா, என்னை” என்றது பாட்டி.
“யார் நீங்கள்? தெரியவில்லையே”
“நான் யாரா? மறந்து விட்டாயா ம?”
எனக்கு கீழே இருந்து மேலே மின்சாரம் பாய்ந்தது. என்னை ம என்று அழைப்பது பூமி மீது ஒரே ஒரு ஜீவன். அவர் வ. அவர் எங்கே இந்தக் கிழவி எங்கே?
வ யார் தெரியுமா? வெகு காலத்திற்கு முன்; நான் ஏதோ ஒரு திருமண மண்டபத்தில் புது ஆடை அணிந்து மகிழ்ச்சியாக நடமாடிக்கொண்டிருந்தேன். கீழ் மாடிக்கு நடுவில் மண்டபம். முதல் மாடியில் நின்றுகொண்டு மண்டபத்தின் அலங்காரத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். நிறைந்த சபையையும் கொண்டாட்டத்தையும் பார்ப்பது எனக்கு மிகவும் இன்பத்தைக் கொடுக்கும். அது சலித்துப் போனதால் உடனே மாடியை சுற்றிக்கொண்டு அறைகளை எட்டிப் பார்க்க தொடங்கினேன்; உள்ளே யார் இருக்கலாம் என்ற குழந்தை ஆர்வம். ஒரு அறையைத் திறந்தபோது இரு நடு வயதுப் பெண்கள் சேலை உடுத்திக் கொண்டிருந்தார்கள். மிகவும் அவசரத்தில் இருந்தார்கள். முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் எட்டிப் பார்த்ததும் ஒருவர் கையில் இருந்த கொசுவத்தால் தன் மார்பை மறைத்துக் கொண்டார். மற்றொருவர் கொஞ்சமும் அசையாவில்லை. மாறாக வாயில் கவ்வியிருந்த முந்தானையை கீழே விட்டார். அவருடைய தரிசனம் ஆனது. அவர்தான் வ.
வ இப்போது பாட்டியாகி விட்டார்.
எங்கள் ஊர்க்காரர்தான். அன்று அவர் காட்டிய சலுகை சல்லாபத்தால் அவர் என்னை காதலித்தார் என்று நினைத்தேன். எனக்கு அவர் மீது காதல் உண்டானது. அவர் வீட்டு முன் அவ்வப்போது சுற்ற ஆரம்பித்தேன். அவர் சாணி தெளிக்கும் போதும்; கோலம் போடும்போதும், சில சமயம் விடிகாலையிலேயே எழுந்து அவர் காலைக் கடன்களைக் கழிக்கும் இடங்களையும் சுற்றத் தொடங்கினேன். அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் பார்வையை மதிப்பார். என்றால், அதற்கு ஆதரவையோ எதிர்ப்பையோ காட்டவில்லை. பல ஆண்டுகள் நான் அவரை மனதாரக் காதலித்தேன். நான் அவர் முழங்கால் அளவுக்கு இருந்திருக்கலாம். ஆனாலும் என் மனைவியாகி இருந்தார். இருளில் அவர் வீட்டிற்குள் புகுந்து அவர் கணவனின் ஆத்மாவுடன் சேர்ந்து கொள்வேன். அவருடன் உடலுறவுகொள்வேன். என் வாழ்க்கைக்கு ஊக்கமாக இருந்தார் வ. ஆனால் ஒருமுறையும் ஆதரவு காட்டவில்லை; எதிர்ப்பும் கிடையாது. ஒப்புதல் அவ்வளவுதான்.
இப்போது கேட்கிறார் மறந்து விட்டாயா என்னை ம என்று.
நான் இதற்கு முன் உங்களிடம் கூறி இருந்தேனல்லவா; பெயர் சொன்னால் வாசகனின் மண்டையை உடைப்பேன் என்று. அந்த செய்தி என்னவென்றால் இதே போல நான் உலகத்தின் பல நாடுகளின் கோவில்களில் இருக்கும் பல தேவதைகளுடன் இருளைக் கழித்து வந்திருக்கிறேன். அவர்களுடைய உண்மைப் பெயரை சொன்னால் மதக் கலவரம் ஏற்படும். அவர்கள் என்னை தங்கள் மடி மீது படுக்க வைத்துக்கொண்டு அபிமன்யுவுக்கு சக்ரவியூகம் போதித்தது போல தங்கள் தங்கள் மதங்களின் போதனையை செய்திருக்கிறார்கள். நடு இரவு படுத்திருக்கும் போது தலையைக் கோதி முத்தம் கொடுத்திருக்கிறார்கள். அவை எல்லாம் சாத்தியப்பட்டது வ வினால். ஆத்மாவிற்குள் பிரவேசிக்கும் கலை நுணுக்கத்தால்.
நான் வீடு திரும்பி வந்தேன். நடுவில் மெஜஸ்டிக்-இல் பீ பேண்டு வருவதை மறக்கவில்லை. வீட்டிற்கு வந்தவன் காலி செய்த பியர் பாட்டிலை எடுத்து த வின் தலையில் அடித்தேன். ப துணைக்குச் சேர்ந்து கொண்டு பிணத்தை நதியின் பள்ளத்தாக்கில் வீசி எறிந்து வந்தோம்.
***
விடிகாலை எழுந்தவுடன் நீங்கள் ஆஜர்! இந்த முறை வீட்டுக்குள் வந்துவிட்டீர்கள். ப வுடன் பேசிக் கொண்டிருந்தீர்கள். முதல் முறையாக உங்கள் குரலைக் கேட்டேன். அதிசயமாக இருந்தது. என்னைப் பார்த்தீர்கள்; ஆனால் பேசவில்லை. எனக்கும் உங்களுடன் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பேசாமல் இருப்பதே மிகவும் சுகமாக இருந்தது. உங்களைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி. நீங்கள் இருவரும் எழுந்து வெளியே நடந்தீர்கள். நான் பின் தொடர்ந்தேன். ப சிறு பையனைப்போல இளைஞன். நான் நடு வயதுக்காரன். நான் எப்போதும் ஒவ்வொரு கல்லைப் பிடித்துக்கொண்டு நதியின் ஆழத்திற்கு இறங்குவேன். அவன் மணல் குன்றிலிருந்து சர்ரென்று வழுக்குவான். ஒரு கல்லிலிருந்து மற்றொரு கல்லுக்குத் தாவுவான். உங்களிடம் அவனைப் பற்றி பெருமை மூள்கிறது. உங்களுக்கு அது விருப்பமென்று தெரிந்தது. நீங்கள் அதிசயம். கிழவனின் ஞானம்; இளைஞனின் இளமை; கண்ணாடிக்காரனின் புத்திசாலித்தனம்; தாடிக்காரனின் கிளர்ச்சி குணம்; ஒவ்வொன்றையும் அனுபவிப்பராக இருந்தீர்கள். என்னிடம் அவை ஒன்றும் இருக்கவில்லை. மிகவும் சப்பை. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ . டிக்ரி முடித்து மாஸ்டர்ஸ் செய்து வேலைக்கு சேர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன; இப்போதும் பனிரெண்டாம் வகுப்புப் பரீட்சைக்கு உட்கார்ந்து வருகிறேன். அதற்கும் தாமதமாகப் போகிறேன். ஆட்டோ ஓட்டுனரிடம் என் உயிரைப் பணயம் வைக்கிறேன்.
நான் மெல்ல கற்களை பிடித்துக்கொண்டு பள்ளத்தில் இறங்கும் முன் நீங்கள் அவன் பின்னால் ஓடினீர்கள். நீங்கள் இருவரும் நொடியில் கண் மறைந்தீர்கள். எனக்கு மிகவும் வலியானது. பொறாமை, சங்கடம், கோபம். விட்டு விட்டுப் போனீர்கள் என்று. அவன் பின்னால் போனீர்கள் என்று. மெல்ல மெல்ல கறுங்கற்கள் மீது ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக்கொண்டு அணை இருக்கும் திசையில் நடக்கத் தொடங்கினேன்.
வெகு தூரம் நடந்தேன். நீங்கள் கிடைக்கவே இல்லை. இன்னும் தொலைவாக நடந்தேன். பிறகும் இல்லை. ஒரு பெரிய பாறை மீது நின்று கொண்டு, ”எங்கே காணவில்லையேப்பா” என்று சுற்றியும் திரும்பினேன். நீங்கள் இருவரும் என் காலடியில் இருந்தீர்கள். பாறையின் நிழலில்.
நீங்கள் அவனுடன் கூடலில் தொடங்கி இருந்தீர்கள். அவனிடமிருந்து விரும்பி ரசத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தீர்கள். என் தொடைகள் நடுங்கின. அவன் மேலே இருந்தான்; நீங்கள் கீழே இருந்தீர்கள். உங்களுக்கு நான் தெரிந்தேன். உங்கள் கண்கள் என் கண்களை சந்தித்தன. பேச்சில்லை; கதையில்லை. ஆதரவில்லை; எதிர்ப்பில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். என் எண்ணங்களுக்கு ஒப்புதல் முத்திரியை ஒற்றினீர்கள். சூழ்நிலை அரசாங்க அலுவலகத்தில் அதிகாரி விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டு சரி புறப்படுங்கள் என்பது போல இருந்தது. உங்கள் முகத்தில் அதிகாரியின் திமிர் இல்லை என்பது நிம்மதி. அவனிடமிருந்து செயலை நடத்திக்கொண்டு என்னை கூர்ந்து பார்த்தீர்கள். ஒருவரிடம் இருந்து சுகத்தைப் பெற்றுக்கொண்டு மற்றொருவரைப் கவனிப்பது இருக்கிறதே; அது அதிசயம்.
நான் பின்னால் திரும்பி வீட்டுப் பக்கமாக நடந்தேன். சிறிது நேரத்தில் பின்னால் இருந்து யாரோ என் கையைப் பிடித்தார்கள். பெண் கை. அது நீங்கள். அவனுக்கு பை சொல்லி அனுப்பினீர்கள். என்னை மற்றொரு பாறை மீது அமரத்தினீர்கள். நீங்கள் கீழே படுத்துக்கொண்டு என்னை மேலே படுக்க வைத்துக் கொண்டீர்கள். ஆடையைக் கழற்றினீர்கள். அனுதாபக் கலவி. பிடிவாதக் குழந்தைக்கு சாக்கலேட் கொடுத்து ஆறுதல் சொல்லும் அன்பு.
நான் வெட்கத்தை விட்டு விட்டு இனி என்ன ஆரம்பிக்கவேண்டும் என்பதற்குள் மர்ஃபி மேலே இருந்து ஆசீர்வாதப் பூமழை பொழிந்தான். என்றும் உடையாத அணை உடைந்தது. வெள்ளம்; அல்லோலகல்லோலம். அது நம்மை அடித்துக்கொண்டு போனது. நாம் பிரிந்தோம். குப்பை, குட்டை, சருகு; மஞ்சள் நீர்; நீங்கள் மனிதக் கைகளுடன் நீந்திப் போய்விட்டீர்கள். நான் ஆமை சிறகுகள் இருந்தும் பின் தங்கிவிட்டேன்.
***
அப்படியான விபரீத வெள்ளத்திலும் என் கண்ணாடி வீடு அசையவில்லை. நான் நதிலிருந்து மேலே எழுந்து நடந்து வந்தேன். கழுத்தில் கட்டியிருந்த டை அப்படியே இருக்கிறது. பீட்டர் இங்கிலாண்ட் சட்டையின் இஸ்த்ரி கொஞ்சமும் கெடவில்லை. ஈரமில்லை. கால்களில் லிபர்ட்டி கறுப்புப் ஃபார்மல் ஷூக்கள், சாக்ஸுகள். சாக்ஸ் –க்கும் சட்டைக்கும் நடுவில் எதுவும் இல்லை. கிராப் சீவி இருக்கிறேன்.
அந்த வாசகன் திரும்பவும் வந்திருக்கிறான். வீட்டு முன் நின்றிருக்கிறான். அணை உடைந்தாலும் அசையாத கண்ணாடி வீடு அவனுக்கு இல்லாத கோபத்தை அளிக்கிறது. தெருவில் நின்றுகொண்டு பெரிய பெரிய கற்களை எறிகிறான். கல் படும் இடங்களில் எல்லாம் வீடு பள் பள் என்று உடைகிறது. சுவர்கள் இடிகின்றன.
நான் குனிந்து கற்களைப் பொறுக்குகிறேன். அவன் பக்கமாக வீசுகிறேன். ஒரு கல் அவன் நெற்றியை பிளக்கிறது. இரத்தம் கொட்டுகிறது. அவன் ஓடத் தயாராகிறான். நான் அவனைத் துரத்துகிறேன். இந்த முறை அவன் கொலை உறுதி. இனி ஒருமுறை இந்தப் பக்கம் வரக்கூடாது. என் எழுத்தின் பொருளைக் கெடுக்கக் கூடாது.
நான் வேகத்தை அதிகரிக்க அவனும் தன்னுடைய வேகத்தை அதிகரிக்கிறான். ஒன் வே தெருவில் இறங்குகிறான். அது ரெக்டேங்க்யுலர் சாலை. அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடமாகத் தெரிகிறது. நான் முன் திசைக்கு ஓடினால், பக்கத்துத் தெருவில் பின் திசையில் ஓடுகிறான். டிராஃபிக் போலிஸ் நான் தவறு செய்யட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். நான் மிகவும் சோர்ந்து போயிருக்கிறேன், வேகம் குறைகிறது. வாசகன் வர வர என் முதுகுக்குப் பின்னால் நெருங்கிவிட்டான். நான் திகிலடைகிறேன். அவன் வேண்டுமென்றே அந்த வியூகத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்தது போலத் தெரிகிறது. வேகத்தை அதிகரிக்காவிட்டால் பின்னால் இருந்து வந்து மறுபடியும் முதுகைத் தட்டுவான், துப்புவான், அடிப்பான். அழுகவா; நான் சாவா வாழ்வா என்று ஓட்டம் பிடித்தேன். ஒருமுறை நான் அவன் முதுகின் பின்னால், மறுமுறை அவன் என் முதுகின் பின்னால்.
***

 

கன்னடத்தில்: மதுசூதனன் வை. என்

தமிழில்: கே. நல்லதம்பி

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *