[க்ளாரிஸ் லிஸ்பெக்டர் (1920-1977) பிரேசிலைச் சேர்ந்த எழுத்தாளர். ஜியோவானி பொண்டியாராவின் ஆங்கில மொழிபெயர்ப்பு வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. செய்தித்தாளில் வாராவாரம் க்ரோனிக்கிள்ஸ் என அவர் எழுதிய குறிப்புகள், நினைவோடைகள், கதைகள், கட்டுரைகள் என பலதரப்பட்ட எழுத்துகளின் தொகுப்பில் இடம்பெற்ற ஒன்று Forgiving God. இதைக் கதையாகவோ, நினைவுக் குறிப்பாகவோ வாசிக்கலாம்.]
கோப்பகாபனா நிழற் சாலையில் கட்டடங்களை, கடலை, நடைபாதையிலிருக்கும் மக்களைப் பார்த்தபடி குறிப்பாக எதையும் என்றில்லாமல் எதையோ யோசித்தபடி உலாவிக்கொண்டிருந்தேன். என் கவனம் சிதறியிருக்கவில்லை, இலகுவாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் இன்னும் உணர்ந்திருக்கவில்லை. மிக அரிதான ஒரு நிலையில் இருந்தேன்: சுதந்திரமாக. எல்லாவற்றையும் ஓய்வான மனநிலையில் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எல்லாவற்றையும் காண்கிறேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன். என் சுதந்திரம் சுதந்திரத்தை இழக்காமலேயே இன்னும் காத்திரமானது. முதலாளி தன் பொருட்களைப் பார்ப்பது போலல்ல, நான் கண்ட எதுவும் என்னுடையதல்ல, நான் அவற்றை என்னுடையதாக்கிக்கொள்ள விழையவுமில்லை. ஆனால் நான் பார்த்தவற்றால் மிக திருப்தியடைந்ததாக உணர்ந்தேன்.
நான் அதுவரை அறிந்திராத ஒரு உணர்வை அப்போதுதான் உணர்ந்தேன். வெறும் பாசத்தினால், பூமியாகவும் உலகமாகவும் இருக்கும் கடவுளின் தாயாக உணர்ந்தேன். வெறும் பாசத்தினால், துளியும் அகங்காரமோ பெருமையோ இல்லை, துளியும் மேன்மையுணர்வோ சமத்துவமோ இல்லை, நான் மொத்த இருப்பின் தாயாகிவிட்டேன். இவையெல்லாம் நான் உண்மையிலேயே உணர்வது, ஒரு போலி உணர்வெழுச்சி இல்லை, எனும்போது கடவுள் என்னால் நேசிக்கப்பட தன்னை அளிப்பார், எந்த பெருமையும் சிறுமையும் இல்லாமல், எந்த சமரசங்களும் தேவைப்படாமல், என்று எனக்குத் தெரியும். நான் அவரை நேசிக்க எடுத்துக்கொள்ளும் நெருக்கத்தை அவர் ஏற்றுக்கொள்வார். இந்த உணர்வு எனக்குப் புதிது, ஆனால் எனக்கு அதில் சந்தேகங்கள் இல்லை, அதற்கு முன் எனக்கு இந்த உணர்வு தோன்றவில்லை என்றால், அது தோன்றியிருக்க முடியாது என்பதால்தான். நான் கடவுள் என்றழைப்பதை ஆழ்ந்த அமைதியான அன்புடன், மரியாதையும், பயத்துடன், பணிவுடன் நேசிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவரை தாயைப் போல் நேசிப்பது குறித்து எனக்கு யாரும் சொல்லியிருக்கவில்லை. இந்த தாய்ப்பாசம் கடவுளைக் குறைத்துவிடவில்லை, அவரை இன்னும் மேன்மையானவர் ஆக்கியது, உலகத்தின் தாயாக இருப்பது என் அன்புக்கு சுதந்திரம் அளித்தது.
அப்போதுதான் நான் ஒரு செத்த எலியை மிதித்தேன். உயிரோடிருப்பதன் பயங்கரத்தில் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன; ஒரு நொடியில் பயத்தாலும் பதட்டத்தாலும் சிதறிப்போனேன், என்னுள் துளைத்தெழும் அலறலை அடக்கப் போராடினேன். என்னைச் சுற்றியுள்ள யாரையும் கவனிக்காமல், கிட்டத்தட்ட ஓடிச்சென்று ஒரு விளக்குக் கம்பத்தில் சாய்ந்து நின்றேன். கண்களை இறுகமூடி இதற்கு மேல் எதையும் பார்க்க மறுத்தேன். ஆனால் அந்த செத்த எலி காட்சி என் மனதில் பதிந்துவிட்டிருந்தது: பெரிய வாலுடன் ஒரு செம்பழுப்பு நிற எலி, அதன் நகங்கள் நசுங்கியிருந்தன, அமைதியாக செத்துப்போய் கிடந்தது, செம்பழுப்பாக. எனது அடக்கமுடியாத எலிப் பயம்.
தலையிலிருந்து கால் வரை நடுங்க, எப்படியோ நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன். முழுக்க குழப்பமும் பயமும் நிறைந்திருக்க தொடர்ந்து நடந்தேன். என் முகபாவம் குழந்தைத்தனமாக இருந்தது, என் ஆச்சரியம் அப்படிப்பட்டது. இரண்டு உண்மைகளுக்கு இடையிலான தொடர்பை அறுக்க முயன்றேன்: நான் சில கணங்கள் முன் உணர்ந்ததும், இந்த எலியும். ஆனால் பயனில்லை. காலத்தால் சமீபத்திருந்ததாலாவது அவை தொடர்பு கொண்டிருந்தன. தர்க்கங்களிலின்றி அவை தொடர்புகொண்டிருந்தன. ஒரு எலிக்கும் எனக்கும் ஒத்திசைவு இருக்கலாம் என்பதை யோசித்து மருண்டேன். என்னில் அருவருப்பு நிரம்பி வழிந்தது: திடீரென்று தோன்றிய அன்பிடம் என்னால் என்னை ஒப்புக்கொடுக்க முடியவில்லையா? கடவுள் என்ன சொல்ல முயல்கிறார்? எல்லாவற்றிலும் ரத்தம் உள்ளது என்று நினைவூட்டப்பட வேண்டிய ஆள் இல்லை நான்! அந்த ரத்தத்தை கண்டுகொள்ளாமல் செல்பவள் அல்ல, அதை ஒப்புக்கொள்பவள், நேசிப்பவள். ரத்தத்தை மறக்க அனுமதிக்காதபடி என்னுள் நிறைய ரத்தம் இருக்கிறது. ஆன்மீகம், லௌகீகம் போன்ற சொற்களுக்கு என்னைப் பொருத்த வரை எந்த பொருளும் இல்லை. அப்படி ஒரு எலியால் என்னை பயங்கரமாக எதிர்கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதுவும் நான் மறைவுகளின்றி எளிதாய் பாதிக்கப்படும் நிலையில் இருந்த ஒரு கணத்தில்! என்னை சிறு வயதில் இருந்து துரத்தி வரும் பயங்கரத்தை நீங்கள் யோசித்திருக்க வேண்டும்; இந்த எலிகள் என்னை ஏற்கனவே கேலி செய்திருக்கின்றன, துன்புறுத்தியிருக்கின்றன. பழங்காலங்களில் இருந்து இந்த எலிகள் என்னை வெறுப்புடன் பொறுமையின்று தின்று வருகின்றன! எனவே, இது இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமா? நான் எதையும் கேட்காமல், எதையும் வேண்டாமல், தூய அப்பாவித்தனமான அன்புடன் நேசித்தபடி வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்க, கடவுள் தன் எலியால் என்னை எதிர்கொள்கிறார். கடவுளின் கொடூரம் என்னை காயப்படுத்தியது, ஆங்காரமூட்டியது. கடவுள் ஒரு கொடூரன். கனத்த இதயத்துடன் நடந்தேன். நான் சிறுவயதில் அனுபவித்த ஏமாற்றங்களைப் போல இந்த ஏமாற்றமும் ஆற்றுப்படுத்த முடியாததாக இருந்தது. குழந்தைமையின் அநீதிகளிலிருந்து தப்பிக்க முடியாமல் சீக்கிரமே வளர்ந்துவிட்ட குழந்தை நான். நான் தொடர்ந்து நடந்தபடி மறக்க முயன்றேன். என் மனம் முழுக்க பழிவாங்கல்தான் இருந்தது. ஆனால் எல்லாம்வல்ல இறைவனை நான் என்ன பழிவாங்கிவிட முடியும், என்னை நசுக்க ஒரு எலியை நசுக்க வேண்டியிருக்கும் கடவுளை? சாவுள்ள ஒரு மனிதனாக என்னிடமிருந்ததெல்லாம் என் பாதுகாப்பின்மைதான். பழிவாங்கும் வெறியில் என்னால் அவரை எதிர்கொள்ளவும் முடியவில்லை. அவர் எங்கு ஒளிந்திருப்பார், அவரை எங்கே காண்பது என்றும் எனக்குத் தெரியவில்லை. ஏதாவதொன்றை வெறுப்புடன் பார்த்தால், நான் அவரைக் கண்டுகொள்வேனா? அந்த எலியில்?… அந்த சாளரத்தில்?… அந்த சாலையோரக் கற்களில்? என்னைப் பொறுத்தவரை, அவர் இனிமேல் இல்லை! என்னுள், அவரைக் காணவில்லை!
அப்போதுதான் எனக்கு பலவீனர்களின் பழிவாங்கல் நினைவு வந்தது: இதுதானா அது? சரிதான், நான் என் மௌனத்தைக் களைந்து எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன். ஒருவரின் நம்பிக்கையைப் பெற்று பின் அவரது ரகசியங்களை வெளிப்படுத்துவது கண்ணியமற்ற செயல் என்று தெரியும், ஆனால் நான் பேசப் போகிறேன். எதையும் சொல்லாதே, அன்பிற்காக, எதையும் சொல்லாதே! அவரது வெட்ககரமான ரகசியங்களை உனக்குள்ளே வைத்துக்கொள்! – ஆனால் நான் பேசுவதென்று முடிவெடுத்துவிட்டேன்… எனக்கு நடந்ததை விளக்கப் போகிறேன். இந்த முறை நான் அமைதியாயிருக்க மாட்டேன், அவர் எனக்குச் செய்ததை வெளிக்காட்டுவேன். அவரது பெயரைக் கெடுப்பேன்.
… யாருக்குத் தெரியும்… ஒருவேளை உலகமும் ஒரு எலிதானோ, நான் தயாராக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன்… நான் பலமானவள் என்றெண்ணியதால், நான் அன்பை ஒரு கணிதக் கணக்காக்கிவிட்டேன். கணக்கு தவறாகிவிட்டது. புள்ளி புள்ளியாக புரிந்ததை அடுக்குவதை, முட்டாள்தனமாக, நேசித்தல் என்று நம்பினேன். தவறான புரிதல்களை சேர்ப்பதன் வழியாகவே ஒருவர் அன்பை அடைய முடியுமென்பதை காணத் தவறிவிட்டேன். பாசத்தை உணர்ந்ததால், அன்பு எளிதென்று நினைத்துவிட்டேன். சிரத்தையான அன்பின் மேல் எனக்கு விழைவு தோன்றவில்லை, சிரத்தை என்பது தவறான புரிதலை ஒரு சடங்காக்கி, அதை காணிக்கையாக்கும் என்பதை புரிந்துகொள்ள தவறிவிட்டேன். ஆனால் முரண்டு பிடிப்பது என் சுபாவம், எப்போதும் சண்டை போடத் தயாராக இருப்பேன். எப்போதும் என் வழியில் போகத்தான் முயல்வேன், நான் இன்னும் விட்டுக்கொடுக்க கற்கவில்லை. மனதின் ஆழத்தில் எனக்கு நான் எதை நேசிக்கத் தேர்ந்தெடுக்கிறேனோ அதைத்தான் நேசிக்க வேண்டும், நேசிக்கவென்று இருப்பதை நேசிக்க வேண்டாம். ஏனெனில் நான் இன்னும் நானில்லை, எனது தண்டனை இன்னும் தானாக இல்லாத ஒரு உலகத்தை நேசிப்பது. நான் எளிதில் காயப்பட்டுவிடுவேன். நான் அடம்பிடிப்பவள் என்பதால், இந்த விசயங்களை எனக்கு நேரடியாகச் சொல்லவேண்டுமோ. நான் எனக்கு சொந்தமானவற்றை விட்டுக்கொடுக்க மாட்டேன், அதனால்தான் ஒரு நகைமுரணோடு அந்த எலி எனக்கே வேண்டுமா என கேட்கப்பட்டது போல. ஒரு செத்த எலியை என் கையில் எடுக்க முடிந்தால்தான் என்னால் எல்லாவற்றின் தாயாக முடியும். சாவான சாவில் சாகாமல் என்னால் அந்த செத்த எலியை எடுக்கவும் முடியாது. எனவே தான் அறியாத, காணாதவற்றைக் கண்மூடித்தனமாக போற்றும் ‘எனது ஆவி கடவுளை பெருக்கிக் காட்டுவதாக’ எனும் பிரார்த்தனையை மனதில் கொள்கிறேன். என்னை தூரமாக்கி வைக்கும் சம்பிரதாயங்களைக் கைக்கொள்கிறேன், ஏனெனில் சம்பிரதாயங்கள் என் எளிமையைக் காயப்படுத்தவில்லை என் பெருமையை காயப்படுத்துகின்றன. பிறந்ததில் நான் கொள்ளும் பெருமையே உலகோடு என்னை நெருக்கமாக உணரச் செய்கிறது – என் இதயத்திலிருந்து வெளியே கேட்காத அலறல்களை உண்டாக்கும் இந்த உலகோடு. நான் இருப்பதைப் போலவே எலியும் இருக்கிறது, ஆனால் என்னாலோ எலியாலோ எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள முடியாதோ, தூரம் எங்களை சமமாக ஆக்குகின்றது. ஒரு எலியின் மரணத்தைக் கோரும் என் இயல்பை நான் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் எந்த குற்றங்களும் புரியவில்லை என்பதாலேயே என்னை நான் மிக மென்மையானவளாக கருதிக்கொள்கிறேன். அவற்றை அடக்கிக் கொள்வதால், என் அன்பை அப்பாவித்தனமானதாக கருதுகிறேன். முதலில் எனதிந்த கட்டுக்கடங்காத ஆன்மாவை பீதியின்றி பார்க்க முடிந்தால்தான் என்னால் அந்த எலியையும் எதிர்கொள்ளமுடியுமோ. எல்லாவற்றிலும் எனது சுயம் கொஞ்சமாக இருக்கும் இந்த பழக்கத்தை உலகிடம் பகிர வேண்டுமோ. எனது சொந்த இயல்பின் பரிமாணங்களையே நேசிக்க முடியாவிட்டால் நான் எப்படி உலகின் பிரம்மாண்டத்தை நேசிப்பேன்? நான் தீயவள் என்பதால் கடவுள் நல்லவர் என்று கற்பனை செய்யும் வரை, நான் எதையுமே நேசிக்க மாட்டேன்: அது வெறுமனே என்னை குற்றஞ்சாட்டிக்கொள்ளும் வழி. என்னை முழுதாக ஆராயாமல், நான் என் எதிர்மறையை நேசிக்கத் தேர்ந்தெடுத்துவிட்டேன், அதை கடவுள் என்றும் அழைக்கிறேன். என்னோடு வாழப் பழகிக்கொள்ளாத நான், எனக்கு எந்தத் துன்பங்களும் அளிக்காதே என்று உலகைக் கேட்கிறேன். என்னை எனக்கு சமர்ப்பிப்பதில் மட்டுமே வெற்றி பெற்ற நான், (நான் என்னைவிட மிக மிக பிடிவாதக்காரி), எனக்கு என்னைவிட வன்முறை குறைவான பூமியை வழங்கிக்கொள்ள முடியுமென நம்பினேன்.
நான் என்னை நேசிக்கவில்லை என்பதால் மட்டும் கடவுளை நேசிக்கும்வரை, நான் வெறும் தாயக்கட்டைதான், என் பெருவாழ்க்கையெனும் ஆட்டம் ஆடப்படாது. நான் கடவுளை உருவாக்கிக்கொண்டே இருக்கும்வரை, கடவுள் இருக்க மாட்டார்.
***
-வயலட்