நூல் விமர்சனம் : “நாகரிகத்தின் மீட்பு (Saving Civilisation ) – போர்களுக்கிடையில் யேட்ஸ் , ஆடென் மற்றும் எலியட் “ – லூசி மெக்டெயர்மிட் – கேம்பிரிட்ஜ்

மேலை நாகரிகம் முதல் உலகப் போரிலிருந்து முழுமையாக மீண்டு வந்ததே இல்லை. விக்டோரிய இங்கிலாந்து கற்பனை செய்திருக்காத நான்காண்டு படுகொலையின் முடிவில் ஒரு வழியாக 1918 இல் ஒரு போர் நிறுத்தம் கையெழுத்தான போது இரு தரப்பிலும் எண்பது லட்சம் வீரர்கள் கொல்லப் பட்டிருந்தனர். மேலும் இரண்டு கோடி பேர் காயமடைந்திருந்தனர் அல்லது இறந்திருந்தனர். எண்ணிப்பார்க்க முடியாத 603 மில்லியன் டாலர் கடனை இந்தப் போர் உருவாக்கி இருந்தது. ஐரோப்பாவின் ஒரு பகுதி சிதிலமாகி இருந்தது. சுமார் 25000 மைல் நீளமான பதுங்கு குழி மேற்குலகின் பூமியைக் குதறிப் போட்டிருந்தது. இது நிலநடுக் கோட்டின் நீளத்திற்கு இணையானது.

முதல் உலகப் போர் அனைத்துப் போர்களுக்கும் முடிவு கட்டிவிடும் என்றும் உலகம் ஜனநாயகத்திற்கு தயாராகி பாதுகாப்பாகி விடும் என்றும் உட்ரோ வில்சன் உறுதியாக நம்பினார். அவருடைய ” தேசங்களின் லீக்” மனிதனின் சகோதரதத்துவத்தை நிலைநாட்டி விடும் என்று நம்பினார் அவர்.மாறாக , வெர்சயில்சில் ஆறு மாதங்களுக்கு பேரம் பேசிய அரசியல்வாதிகள் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தனர். “ஒழுங்கு முறையின் முடிவு” என்று சார்லஸ் மீ வர்ணித்த இந்த ஒப்பந்தம் இரண்டாம் உலகப் போரை தவிர்க்க முடியாததாகி விட்டது.

இரு போர்களுக்கு இடையேயான இந்த இருபது ஆண்டுகளின் – அச்சமூட்டும் இறந்த காலத்தையும் பேசவே முடியாத சம்பவங்களை அளிக்கப் போகும் எதிர் காலத்தையும் பிரிக்கும் இருபது ஆண்டுகளின் – முக்கிய அம்சங்களாக – பொருளாதார மந்தம், சர்வாதிகாரத்தின் எழுச்சி மற்றும் கலையின் செயல்பாடு , மதிப்புகள் குறித்து ஆழமான கேள்விகள் எழுப்பப் பட்டதைக் கூறலாம்.

தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்ட உலகில் கலைஞனின் பங்கு என்ன? வறுமைக்கும் பசிக்கும் ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கும் ஸ்பெயின் தேசத்தின் உள்நாட்டுப் போருக்கும் அவன் ஆற்ற வேண்டிய எதிர்வினை என்ன?
கலைஞர்கள் பல்வேறு பாதைகளைத் தேர்ந்தனர் . சிலர் அவர்களின் வாசிப்பின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டனர். சிலர் துப்பாக்கியைத் தேர்ந்தனர். மார்க்சிஸ்ட் விமர்சகர் கிறிஸ்டோபர் காட்வெல் ஸ்பெயினில் குடியரசு ஆதரவாளர்களுக்காகப் போரிட்டு மடிந்தார். ஜார்ஜ் ஆர்வெல்லும் அதே பாதையில் சென்றார். ஆனால் விரைவிலேயே ஒருவகை சர்வாதிகாரம் மறறொன்றைப் போன்றே ஆபத்தானது என்று கண்டு கொண்டார். கழுத்தில் சுடப்பட்ட பின் அவர் தப்பினார் . ஜான் டாஸ் பாஸோஸ் ஸ்பெயினுக்கு சென்று ஒரு படம் எடுத்தார். ஹெமிங்வே அங்கு சென்று ஒரு புத்தகம் எழுதினார் . “ஃ பார் ஹும் தி பெல் டோல்ஸ் ” புதினத்திற்கு பதிலாக பூசலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

ஹெமிங்வே, ஒரு கலைஞன் சிறப்பாக எழுதுவதன் மூலம் அதிக பட்ச நன்மையை செய்ய முடியும் என்று நம்பினார் .இந்த அறிவார்ந்த ஆய்வில் பேராசிரியர் மெக் டெர்மியாட் வைக்கும் கேள்வி ஒரு கலைஞன் கலைக்கும் உலகத்திற்கும் ஒரே நேரத்தில் ஆற்ற வேண்டிய கடமையைக் குறித்ததாகும்.

வெர்சயில்ஸ் குழறுபடிக்கும் “இரவின் கொடுங்கனவு ” என்று ஆடென் ஐரோப்பாவை விவரித்த 1939 க்கும் இடைப்பட்ட இந்த கோரமான காலகட்டத்தின் மூன்று முக்கிய ஆளுமைகளை எடுத்துக் கொள்கிறார்.
மேக்டியர்மிட் கூறுவது போல , யேட்ஸ் , எலியட் மற்றும் ஆடென் இம்மூவரும் உலகில் நன்மை செய்ய ஆர்வமாய் இருந்தபோதிலும் கட்சி கட்டுவதற்கு இலக்கியத்தின் மீது வைக்கப்பட்ட நிர்பந்தத்தாலும் இலக்கியம் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினாலும் எரிச்சல் அடைந்திருந்தனர். இவர்கள் “தலையிட வேண்டும் ” என்ற சமுதாய உந்துதலுக்கும் அதே நேரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்ற கலையின் தேவைக்கும் இடையில் அல்லாடினர். கவலை கவிந்திருந்த இந்தப் பத்தாண்டுகளில் ஒவ்வொரு கலைஞனும் சமூகத்தை எப்படி மீட்பது என்ற வினாவுடன் போராடிக் கொண்டிருந்தனர்.

மானுடத்தின் மீட்பு என்பது இவர்களைப் பொறுத்தவரை ஒரு கருத்து நிலை சார்ந்த பிரச்சனையாக , அரசியலை விட பண்பாடு சார்ந்த சித்தாந்தமாக இருந்தது. இவர்கள் முழுமையாக அரசியலை ஒதுக்கினார்கள் என்றில்லை. மெக் டியார்மெட் கூறுவது போல யேட்சும் எலியட்டும் பிற்போக்குவாதிகளாக, இன்னும் ஃ பாசிஸ்டுகளாகவே முத்திரை குத்தப் பட்டனர். ஆடென்னும் அவரது சீடர்களும் “இடது” கவிஞர்களாக பார்க்கப் பட்டனர். ஆனால் மெக் சரியாகவே வாதிடுவது போல இந்த முத்திரைகள் கவிஞர்களை குடிமகன்களாக சரியாக சித்தரிக்கவில்லை. இந்தப் பதங்கள் சுட்டுவதை விடக் குறைவான சித்தாந்த தீவிரம் கொண்டவர்கள் தாம் இந்த எழுத்தாளர்கள். பத்திரிகைகளின் முழக்கங்களையும் தற்காலத்தின் சிக்கல்களையும் தாண்டி உயரே எழும் தீவிரம் கொண்ட இவர்களின் கவிதைகளைப் புரிந்து கொள்ளவும் இந்தக் கட்சி கட்டல் உதவுவதில்லை.

எலியட்டுக்கு நாகரிகம் என்பது “நாம் அடைந்திருக்கிற , காத்துக் கொள்ள விரும்புகிற அனைத்து நல்லவைகளையும் நாம் இழந்து விட்ட , மீட்டெடுக்க விரும்புகிற அனைத்து நல்லவைகளையும் ” குறிக்கிறது. யேட்சும் ஆடென்னும் மறுத்திருக்க மாட்டார்கள். இறுதியாக, மூன்று பேருமே கலை என்பது ஒரு துண்டு விளம்பரம் அல்ல என்றும் நாகரிகத்தின் மீட்பென்பது கொள்கைச் சாய்வுகளால் ஆகக் கூடியதல்ல என்றும் அங்கீகரித்தவர்கள்தாம்

அவர்கள் அரசியலைத் தாண்டி நின்றார்கள் என்றால் யேட்ஸ் , எலியட் , ஆடென் மூவருமே குறுகலான தேசியவாதத்தையும் கடந்தவர்கள் . மூவரின் வாழ்வுகளின் அமைப்பையும் பார்க்கும்போது எலியட்டுக்கு நாகரிகம் என்பது அமெரிக்காவைக் கடந்தது என்பதும் யேட்சுக்கும் ஆடேன்னுக்கும் அது அயர்லாந்தையும் இங்கிலாந்தையும் கடந்தது என்பதும் வியப்புக்குரியதல்ல. வெவ்வேறு விதங்களில் இம்மூவரும் உடல் ரீதியாக, அறிவு பூர்வமாக , ஏன் ஆன்ம உலகிலும் அலைதல் கொண்டிருந்தனர். 1914 இல் அமெரிக்காவிலிருந்து இங்கிலத்திற்கு சென்ற எலியட் தன்னுடைய நிலையை “விருந்தினரான அயலான்’ என்று துயருடன் குறிக்கிறார். பிரிட்டனில் இரு மனைவியரை ஏற்று 1927 இல் குடியுரிமை பெற்ற போதும் பிரிட்டன் அவரைத் தங்களுள் ஒருவராக ஏற்கவில்லை. அமெரிக்கர்களுக்கோ எலியட்டின் புதிய உச்சரிப்பும் பழக்கங்களும் இயல்புக்கு முரணாகத் தெரிந்தன. ஆடென் விரிவாகப் பயணம் செய்தார் . ஐஸ்லாந்து , ஸ்பெயின் , சீனா, இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவிற்குச் சென்றார். 1939 இல் இங்கிலாந்தை விட்டு அமெரிக்காவிற்கு சென்றதை சிலர் கடைசி வரை மன்னிக்கவில்லை.

யேட்ஸ் தன் வாழ்வின் பெரும்பகுதியை அயர்லாந்திற்கு வெளியில் கழித்தார். ஆச்சரியமாக அயர்லாந்து வரலாற்றில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு மாறாக கீலிக் மொழியை அவர் கற்றுக் கொள்ளவில்லை. 1916 ஆம் ஆண்டின் ஈஸ்டர் புரட்சியை அவர் ஆதரிக்காததும் அவரது சம காலத்தவர் குறித்த கண்டனப் போக்கும் ஐரிஷ் தேச பக்தர்களை சினமடையச் செய்தது.”அண்டர் பென் புல்பென் ” கவிதையில் சக எழுத்தாளர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறார்-

ஐரிஷ் கவிஞர்களே
உங்கள் தொழிலைக் கற்றுக் கொள்ளுங்கள்
நல்லவற்றைப் பாட.தற்போது கிளம்பி வருகிற –
உச்சி முதல் பாதம் வரை கோணலாக வளர்வதை
மறதி நிறைந்த அவர்களின் இதயங்களை தலைகளை
கீழான தொடக்கம் கொண்ட கீழான தயாரிப்புகளை எள்ளிடுங்கள்

இது போன்ற போக்கினால் அவர் மேட்டிமைவாதி என்று குற்றம் சாட்டப்பட்டார். “தந்த கோபுரம் “ என்ற பழமையான முத்திரை குத்தல் மூலம் தன்னைச் சுற்றி வீசும் சமூக சுழல்களை கவனியாதவர்கள் கவிஞர்கள் என வசை பாடப்பட்டார். “பழைய நாட்களில் உங்கள் பார்வையைப் பதியுங்கள் ” என்று தனது சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். அயர்லாந்தின் இலட்சியவாதம் நிறைந்த வீரம் செறிந்த ஏழு நூற்றாண்டுகள் தான் அவரது களம் . 1938 இன் உலகம் அவரைப் பொறுத்தவரை கலையின் களமல்ல .

எலியட்டும் அதே போன்ற தளத்தில் வசைபாடப்பட்டார். தன்னை இலக்கியத்தில் செவ்வியல்வாதி என்றும் அரசியலில் அரச குடும்பவாதி என்றும் சமயத்தில் ஆங்கிலோ கிறித்துவர் என்றும் ஒரு புகழ்பெற்ற பிரகடனத்தில் தன்னைச் சொல்லிக் கொண்டார். நேர்மையான , துல்லியமான அந்த சுயவிமர்சனம் வேறு விதமான நம்பிக்கை கொண்ட சிலரை எரிச்சல் படுத்தியது . எலியட்டுக்கும் யேட்சுக்கும் வேறு ஒரு துணைக் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் எழுத்தின் “அணுக முடியாத்தன்மை ” – சரியாகச் சொன்னால் “மிகக் கடினத்தன்மை” தான் அது.

“தி வேஸ்ட் லேண்ட் ” இருபதாம் நூற்றாண்டின் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கவிதை என்று விவாதத்திற்கு அப்பாற்பட்டு நிறுவப்பட்டு விட்டது. 1922 இல் பதிப்பிக்கப்பட்ட பின், பிற கவிஞர்களும் ஏன் எலியட்டுமே வியந்தது போல “ இங்கிருந்து கவிதை எங்கு செல்லும் என்பது குறித்து வேறு என்ன சொல்ல முடியும்? “ பல விமர்சகர்கள் வாதிட்டது போல இந்தக் கவிதை ஒரு விதத்திலாவது முதல் உலகப் போருக்குப் பிந்தைய மேற்குலகு குறித்த சித்திரம்.

ஆனால் அதிகம் குறியீடுகளும் புராண, வரலாற்றுக்குறிப்புகளும் நிறைந்த , ஆங்கிலத்தில் மட்டுமன்றி ஃ பிரெஞ்சு , கிரேக்கம், லத்தின், ஜெர்மன், டச்சு, இத்தாலியன் மொழிகளிலும் எழுதப்பட்ட இக்கவிதை கற்றோருக்கும் சாமானியருக்கும் எட்டாததாகவே இருக்கிறது. இரக்கமற்ற ஒரு விமர்சகர் கேட்கலாம் – பெரும்பான்மையானவர்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாமல் எலியட் எப்படி மானுடத்தை மீட்கப் போகிறார் ?

பழங்காலப் புலவர் முதல் ஷேக்ஸ்பியர் , டிக்கன்ஸ் வழியே தற்காலம் வரை யேட்ஸ் , எலியட் , ஆடென் வரை இந்த வாசகப் புரிதல் என்னும் சிக்கல் அடிப்படைப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. ஒவ்வொருவரும் இதைத் தீர்க்க முயன்றுள்ளனர். மேக் டியார்மிட் அவர்களின் ஆய்வு புதிய திறப்புகளை அளிக்கிறது. ஹார்வர்டில் 1933 பேசும்போது எலியட் கல்வி அறிவற்ற பார்வையாளர்களே தனக்கு விருப்பம் என்ற திடுக்கிடும் அறிவிப்பைச் செய்கிறார். இத்தனைக்கும் “தி வேஸ்ட் லேண்டு” இன் சிக்கல் தன்மைக்கும் வரவிருந்த ” ஃ போர் க்வார்ட்டர்ஸ்” க்கும் இடையில் இப்படி அறிவிக்கிறார்.

ஆடென்னைப் பொறுத்தவரை இயலுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாடு இங்கே மிகவும் குறைவாக வெளிப்பட்டுள்ளது. அவருக்கு கவிதை என்பது “நினைவில் நிற்கக் கூடிய பேச்சு “. 1936 இல் தொழிலாளர் கல்வி சங்கத்திற்காக எழுதும்போது ஆடென் சொன்னார் ” தனிப்பட்ட முறையில் நான் எழுத விரும்புகிற ஆனால் எழுத முடியாத கவிதை என்பது சாமானியரின் மொழியில் எழுதப் பட்ட ஒரு ஞானியின் எண்ணங்களே ”

ஆடென் நினைத்ததை விட வெற்றி கொண்டவராகவே இருந்தார். கொச்சை மொழியில் , சில நேரங்களில் காரசாரமான நடையில் அவர் மனிதனின் துயரை அறிவார்ந்த கருணையுடன் எடுத்துரைத்தார். உதாரணமாக “ஆஸ் ஐ வாக் அவுட் ஒன் ஈவினிங்” ஸ்பானிய உள்நாட்புப் போரின்போது எழுதப்பட்டது. மன்றோ ஸ்பியர்ஸ் இப்பாடலை ஆடென் உடைய கதைப் பாடல்களில் மிகச் சிறந்ததாக மதிப்பிடுகிறார். தேர்ந்தெடுக்கப் பட்ட தனது கவிதைத் திரட்டில் ஆடென் இதனைச் சேர்த்துள்ளார்.

கவிதை உலகம் தலைகீழாக மாறியது. ஆடென் எந்த உலகில் எழுதினாரோ அதுவும் மாறியது. வெகுளித்தனம் மறைந்து விட்ட உலகில் எப்படி வாழவேண்டுமென்று மிகத் தீவிரமான தனது செய்தியைச் சொல்ல வந்த கவிஞர் மழலைப் பாடல்களை எடுத்துக் கொண்டு விளையாட்டுத் தனமாக பல முரண்பாடான திருகல்களை முன்வைக்கிறார். “ஜாக் இன் தி பீன்ஸ்டாக் ” கதையில் ஜாக் பூதத்தை எதிர்க்கிறான். ஆடென் கவிதையில் ஜாக் பூதத்தை கவர்ச்சியளிப்பதாக காண்கிறான். மேலும் அப்பாவியாக நீர் முகப்பதற்கு மலை மேல் செல்லும் ஜில் உருண்டு விழுகிறாள் . அறத்திலிருந்து சறுக்கும் இந்த வீழ்ச்சிக்கு , இந்த அனுபவ உலகத்திற்கு ஆடென்னின் பதில் மானுடக் குறைபாடுகளுக்கு எதிர்வினையாக அன்பு.

ஓ, பார் கண்ணாடியில்
உன் துயரத்தில் பார்
வாழ்வு ஆசியளிப்பதாகவே இருக்கிறது
உன்னால் ஆசி தர முடியாவிட்டாலும்.

ஓ, நில் ஜன்னலருகில்
கண்ணீர் சுட்டு வழியும்போதும்
உன் கோணல்கார அண்டை வீட்டானை நேசிப்பாய்
உன் கோணல் இதயத்தின் மூலம்

இதன் செய்தியை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது.

ஆடென் இரு போர்களுக்கு இடையில் 20 வருடங்களிலும் அதன் பின் தொடர்ந்த தனது இலக்கிய வாழ்விலும் எழுதிய கவிதைகள் யேட்ஸ் மற்றும் எலியட் படைப்புகளை விட ஆர்ப்பாட்டமானவையாக, பகடி நிறைந்ததாக உள்ளன. மானுடக் கூத்துக்களை மட்டுமல்ல தன்னைப் பார்த்தும் சிரித்துக் கொள்ள விரும்பினார். பிற இரு படைப்பாளிகளை விட ஐயவாதம் அதிகம் வெளிப்பட்ட இவர் கவிதைகளில் அந்த நகைச்சுவை ஐயவாதக் கொள்கைக்கும் வலு சேர்ப்பதாகவே இருந்தது. ஆடென் உடைய நகைச்சுவை உணர்வுக்கு மெக் டியார்மேட் அதிக கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அவரது கவிதைகளில் அதிகம் விரவி நிற்பது இவ்வுணர்வு .

இந்த விவாதம் ஒருபுறமிருக்க எலிசபெத் பிஷப்பால் “இதுவரை வந்தவற்றில் நமது மிக மோசமான நூற்றாண்டு ” என்று வர்ணிக்கப்பட்ட சிக்கலான காலகட்டத்தில் மூன்று முக்கிய படைப்பாளிகளின் கலை குறித்த மதிப்பூட்டும் அலசலை “சேவிங் சிவிலைசேஷன் ” வழங்குகிறது.

இம்மூவரின் படைப்புலகங்களும் மேக் டியார்மேட்டிற்கு வசப்பட்டிருக்கிறது. கவிதைகள் மட்டுமில்லாமல் நாடகங்களும் கட்டுரைகளும் கூட. நேர்த்தியாகப் பதியப்பட்ட இந்த ஆய்வு முந்தைய அவரது கல்விப்புலத்தினைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. சில பகுதிகள் பரிச்சயமான தளங்களில் நகர்கின்றன. உதாரணமாக மூவரும் கற்பனாவாதத்தில் செய்த முயற்சிகள் மற்றும் இடைக்கால ஐரோப்பிய வரலாறு ( ஐந்து முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை ) மற்றும் மறுமலர்ச்சி கால கட்டம் மீதான இப்படைப்பாளிகளின் அணுகுமுறை இவற்றைக் குறிப்பிடலாம். இந்தக் கருப்பொருள்களும் ஒருங்கிணைந்த முழுமையில் தொகுக்கப் பட்டுள்ளன. சற்று சுருக்கமான புத்தகமாக இருந்தாலும் (129 பக்கங்கள்) கடினமான ஒரு பேசுபொருளுக்கு இந்த விமரிசன நூல் சிறப்பாகவே நியாயம் செய்திருக்கிறது.

எலியட் “ஃபோர் க்வார்டெட்ஸ் ” இன் இரண்டாம் பாகமான “ஈஸ்டு கோக்கர்” இந்த ஐந்தாம் பிரிவின் தொடக்கத்தில் வெர்ஸாயில்சுக்கும் ஹிட்லரின் போலந்து தாக்குதலுக்கும் இடைப்பட்ட காலகட்ட எழுத்துக்களை மதிப்பிடுகிறார். 1939 இல் யேட்ஸ் மறைந்த பிறகு ஆங்கிலத்தின் மையமான கவிஞராக நிலை பெறுகிறார் எலியட். ஆனால் தனது பங்களிப்பை அவர் குறைத்துப் பேசுகிறார்.

சரி, இங்கே நான் நிற்கிறேன்.
நடு வழியில் இருபது வருடங்களாக
வீணடித்துக் கொண்டு
போர்களுக்கு நடுவே
சொற்களின் பயன்பாட்டைக் கற்றுக்கொள்ள முயன்றபடி
ஒவ்வொரு முயற்சியும் புதுத் தொடக்கமாக
ஒரு புது வித தோல்வியாக முடிய.

இந்த இருபது ஆண்டுகள் வீணடிக்கப்பட்டவை அல்ல. எலியட் தோல்வியுற்றவரும் அல்ல.யிட்ஸும் ஆடென்னும் அப்படியே.கவிஞர்களின் தோல்வி என்பது அமைதியில் முடிந்திருக்கும். கலையை முற்றிலும் த றப்பதில் முடிந்திருக்கும்.குர்ட்ஸ் இன் இடத்தில் மார்லோ கண்டறிந்த ஒரு பண்பு யேட்ஸ் , எலியட் மற்றும் ஆடென் இடத்தில் இருந்தது – “அவர்களிடம் சொல்வதற்கு ஏதோ இருந்தது – அவர்கள் அதைச் சொன்னார்கள் “ஆ டென் 1939 இல் உறுதிபடச் சொன்னது – “கவிஞன் தலைமகனாக செயல் படும் களமொன்று -உண்டு அதுவே மொழியின் களம் “.

***

-ஆங்கிலத்தில்:வின்சென்ட் ஃபிட்ஸ்பேட்ரிக்
தமிழில் : ராகவேந்திரன்

Please follow and like us:

1 thought on “கலையும் அரசியலும் – யேட்ஸ், ஆடென் மற்றும் எலியட்டின் பார்வையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *