– ரேமண்ட் கார்வர்

தமிழில் – சுஷில் குமார்

எனது நண்பர் மெல் மெக்கின்னிஸ் பேசிக்கொண்டிருந்தார். மெல் மெக்கின்னிஸ் ஓர்
இருதயநோய் மருத்துவர், சில சமயங்களில் அதுவே அவருக்கு பேசுவதற்கு முன்னுரிமையைக்
கொடுத்தது.
நாங்கள் நால்வரும் அவரது சமையலறை மேசையைச் சுற்றியமர்ந்து ஜின் குடித்துக்
கொண்டிருந்தோம். பாத்திரம் கழுவும் தொட்டியின் பின்புறமிருந்த பெரிய சன்னலிலிருந்து
வந்த சூரிய ஒளி சமையலறையை நிறைத்தது. அங்கு மெல்லும், நானும், அவரது இரண்டாம்
மனைவி தெரசாவும் – நாங்கள் அவளை டெர்ரி என்று அழைத்தோம் – என் மனைவி லாராவும்
இருந்தோம். அப்போது நாங்கள் ஆல்பகிர்க்கியில் வசித்தோம். ஆனால், நாங்கள் எல்லோரும்
வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள்.
மேசையின் மீது ஐஸ் கட்டித் துண்டுகளுடைய ஒரு வாளி இருந்தது. ஜின்னும் டானிக் நீரும்
சுற்றி சுற்றி வந்தன, நாங்கள் எப்படியோ காதலைப் பற்றி பேச ஆரம்பித்தோம். மெல்
உண்மையான காதல் ஆத்மீக காதலை விட குறைவானதில்லை என்று நினைத்தார். மருத்துவக்
கல்லூரிக்குச் செல்வதற்கு முன் ஐந்து வருடங்களை தான் ஒரு சமயப்பள்ளியில் கழித்ததாகக்
கூறினார். இன்றும் கூட, சமயப்பள்ளியில் இருந்த அந்த வருடங்களையே தன் வாழ்வின் மிக
முக்கியமான வருடங்களாகப் பார்ப்பதாகக் கூறினார்.
மெல்லுடன் வாழ்வதற்கு முன் தன்னுடன் வாழ்ந்த மனிதன் தன்னை கொலை செய்ய முயலும்
அளவிற்குக் காதலித்ததாக டெர்ரி கூறினாள். பின் அவள் தொடர்ந்து கூறினாள், “ஒருநாள்
இரவு அவன் என்னை அடித்து விட்டான். என் கணுக்கால்களைப் பிடித்து வீட்டின் பிரதான
அறையைச் சுற்றிலும் என்னை இழுத்தான். நான் உன்னை காதலிக்கிறேன், நான் உன்னை
காதலிக்கிறேன், பிட்ச்; என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். தொடர்ந்து அந்த அறையைச்
சுற்றிலும் என்னை இழுத்தான். என் தலை பொருட்களின் மீது மோதிக் கொண்டேயிருந்தது.”
டெர்ரி மேசையைச் சுற்றிலும் பார்த்தாள். “அந்த மாதிரியான காதலை வைத்துக்கொண்டு
என்ன செய்வது?”
அழகான முகம், கருமையான கண்கள், பின்புறத்தில் கீழ் நோக்கித் தொங்கிய பழுப்பு நிற
முடியையுடைய மிகவும் ஒல்லியான பெண் அவள். டக்வாய்ஸ்(நீலப் பச்சை) கற்களால்
செய்யப்பட்ட அட்டிகைகளும் நீண்ட பதக்கங்களைக் கொண்ட காதணிகளும் அவளுக்குப்
பிடித்தமானவை.
“அடக் கடவுளே, முட்டாளாக இருக்காதே, அதொன்றும் காதலில்லை, அது உனக்கே தெரியும்,”
என்றார் மெல். “அதை நீ என்னவென்று சொல்வாய் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால்
அதை காதல் என்றழைக்க மாட்டாய் என்றெனக்கு உறுதியாகத் தெரியும்.”
“நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஆனால் அது காதல் தான் என்றெனக்குத்
தெரியும்,” என்றாள் டெர்ரி. “உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம், ஆனால்,என்னை பொருத்தமட்டில் அதுதான் உண்மை. மனிதர்கள் வித்தியாசமானவர்கள், மெல். ஆம்,

சில சமயங்களில் அவன் வெறிபிடித்த மாதிரி நடந்திருக்கலாம், சரி, ஆனால், அவன் என்னை
காதலித்தான். ஒருவேளை அவனுக்கே உரிய வழியில் ஆனாலும் அவன் என்னை காதலித்தான்.
அங்கு காதல் இருந்தது, மெல். இல்லையென்று சொல்லாதீர்கள்.”

மெல் பெருமூச்சு விட்டார். தன் கோப்பையை எடுத்துக்கொண்டு என்னையும் லாராவையும்
நோக்கித் திரும்பினார். “அந்த ஆள் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்,” என்றார்
மெல். அவர் தன் பானத்தை முடித்துவிட்டு ஜின் பாட்டிலை எடுத்தார். “டெர்ரி காதல்
வசமானவள். ‘என்னை அடி, நீ என்னை காதலிக்கிறாய் என்று அப்போது எனக்குத் தெரியும்’
என்கிற கூட்டத்தைச் சார்ந்தவள். டெர்ரி, அன்பே, முகத்தைத் அப்படித் திருப்பாதே.” மெல்
மேசையின் குறுக்காக கைகளை நீட்டி டெர்ரியின் கன்னத்தை தன் விரல்களால் தொட்டார்.
அவளைப் பார்த்து பல்லைக் காட்டிச் சிரித்தார்.
"இப்போது அவர் இட்டுக்கட்டி சமாளிக்கப் பார்க்கிறார்," என்றாள் டெர்ரி.
“எதை இட்டுக்கட்ட?” என்று கேட்டார் மெல்.”இட்டுக்கட்டுவதற்கு என்ன இருக்கிறது? எனக்கு

என்ன தெரியுமோ, தெரியும். அவ்வளவு தான்.”
“சரிசரி, நாம் எப்படி இந்த விசயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம்?” என்று கேட்டாள் டெர்ரி.
அவள் தன் கோப்பையை உயர்த்திக் காட்டி அருந்தினாள். “மெல்லின் மனதில் எப்போதுமே
காதல் இருக்கிறது,” என்றாள் அவள். “இல்லையா அன்பே?” அவள் புன்னகைத்தாள், சரி,
அதோடு முடிந்துவிட்டது என்று நினைத்தேன் நான்.
“எட்-டின் நடத்தையை நான் காதல் என்றழைக்க மாட்டேன். நான் சொல்வது அவ்வளவு தான்
அன்பே,” என்றார் மெல்.  “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”மெல்  என்னையும் லாராவையும்
பார்த்துக் கேட்டார். “உங்களுக்கு அது காதல் என்று தோன்றுகிறதா?”
“அதைக் கேட்பதற்கு சரியான ஆள் நானில்லை,”என்றேன் நான். “எனக்கு அந்த ஆள்
யாரென்று கூடத் தெரியாது. தற்செயலாக அவர் பெயரைச் சொல்வதை மட்டும்
கேட்டிருக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால்,
நீங்கள் காதல் புனிதமானது என்று சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.”
மெல் சொன்னார், “ஆம், நான் பேசும் வகையான காதல் புனிதமானது தான். நான் பேசும்
வகையான காதலில், நீங்கள் மனிதர்களைக் கொல்ல முயற்சிப்பதில்லை.”
லாரா சொன்னாள், “எனக்கு எட்-டைப் பற்றியோ அல்லது அந்த சூழ்நிலையைப் பற்றியோ
ஒன்றும் தெரியாது. ஆனால், வேறொருவரின் சூழ்நிலையை யார் தான் மதிப்பிட முடியும்?”
நான் லாராவின் கையின் பின்பகுதியைத் தொட்டேன். அவள் என்னைப் பார்த்து சிறிது
புன்னகைத்தாள். நான் அவளது கையைப் பற்றினேன். அது வெம்மையாக இருந்தது, நகங்கள்
சாயம் பூசப்பட்டிருந்தன, கச்சிதமாக ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. அந்த அகன்ற
மணிக்கட்டை என் விரல்களால் சுற்றி வளைத்து அவளைப் பிடித்தேன்.

“நான் சென்றதும் அவன் எலி மருந்தைக் குடித்தான்,” என்றாள் டெர்ரி. அவள் தன்
உள்ளங்கைகளால் தனது கைகளைக் கட்டிக்கொண்டாள். “அவர்கள் அவனை சான்டா
ஃபேவிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது நாங்கள் அங்குதான்
வாழ்ந்தோம், சுமார் பத்து மைல்கள் தள்ளி. அவர்கள் அவனை காப்பாற்றினர். ஆனால்,
அதிலிருந்து அவனது ஈறுகள் தாறுமாறாகி விட்டன. அதாவது, அவை அவனது
பற்களிலிருந்து விலகி விட்டன. அதன் பிறகு, அவனது பற்கள் கோரைப் பற்கள் போல
வெளியே துருத்திக் கொண்டு நின்றன. கடவுளே,” என்றாள் டெர்ரி. ஒரு நிமிடம்
காத்திருந்தாள், பின் கைகளை விட்டுவிட்டு தன் கோப்பையை எடுத்தாள்.

“மனிதர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்!” என்றாள் லாரா.
“அவன் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை,” என்றார் மெல். “அவன் இறந்துவிட்டான்.”
எலுமிச்சைகள் இருந்த தட்டினை என்னிடம் நீட்டினார் மெல். நான் அதில் ஒரு துண்டை
எடுத்து, எனது பானத்தின் மீது அதைப் பிழிந்தேன், பின், ஐஸ் கட்டித் துண்டுகளை என்
விரலால் கலக்கினேன்.
“இப்போது இன்னும் மோசமாகி விட்டது,” என்றாள் டெர்ரி. “அவன் தன்னைத்தானே வாயில்
சுட்டுக் கொண்டான். ஆனால், அதையும் அரைகுறையாகவே செய்தான். அப்பாவி எட்,”
என்றவாறு தன் தலையை ஆட்டினாள்.
“அப்பாவி எட் உதவாக்கரை,” என்றார் மெல். “அவன் பயங்கரமானவன்.”
மெல்லிற்கு நாற்பத்தைந்து வயது. உயரமானவர், நீண்ட கால்களையுடையவர், மெல்லிய
சுருள் முடியுடையவர். டென்னிஸ் விளையாடியதால் அவரது முகமும் கைகளும் பழுப்பு
நிறத்தில் இருந்தன. குடிபோதை இல்லாத சமயங்களில் அவரது செயல்களும், அவரது எல்லா
நடவடிக்கைகளும் சரியாக, மிக கவனமாக இருக்கும்.
“இருந்தாலும் அவன் என்னை காதலித்தான், மெல். அதையாவது எனக்காக
ஒத்துக்கொள்ளுங்கள்,” என்றாள் டெர்ரி. “அவ்வளவுதான் நான் கேட்பது. நீங்கள் என்னை
காதலிப்பதைப் போல அவன் என்னை காதலிக்கவில்லைதான். நான் அப்படிச்
சொல்லவில்லை. ஆனால், அவன் என்னை காதலித்தான். எனக்காக அதை நீங்கள்
ஒத்துக்கொள்ள முடியும், இல்லையா?”
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அவன் அரைகுறையாக செய்தானா?” என்று கேட்டேன் நான்.
லாரா தன் கோப்பையுடன் முன்னோக்கி குனிந்தாள். தன் முழங்கைகளை மேசைமேல் ஊன்றி
கோப்பையை இரு உள்ளங்கைகளாலும் பிடித்தாள். அவள் மெல்-லிலிருந்து டெர்ரியை
நோக்கி பார்வையை செலுத்தினாள், நாம் நட்பாக இருந்த மனிதர்களுக்கு இப்படிப்பட்ட
விசயங்கள் நடந்திருக்கின்றனவே என்பதை எண்ணி திகைத்துப் போயிருந்ததைப் போல
தனது வெளிப்படையான முகத்தில் ஒரு குழப்பமான தோற்றத்துடன் காத்திருந்தாள்.
“அவன் தற்கொலை செய்துகொண்டான் என்றால் அரைகுறையாக எப்படி செய்திருக்க
முடியும்?” என்று கேட்டேன் நான்.
“என்ன நடந்ததென்று நான் சொல்கிறேன்,” என்றார் மெல். அவன் என்னையும் டெர்ரியையும்
பயமுறுத்துவதற்காக வாங்கியிருந்த அந்த இருபத்தி-இரண்டு ரக துப்பாக்கியை எடுத்தான்.
அட, நான் நிஜமாகத்தான் சொல்கிறேன், அவன் எப்போதுமே அச்சுறுத்துபவனாகவே
இருந்தான். அந்த நாட்களில் நாங்கள் வாழ்ந்த விதத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
ஏதோ தப்பியோடியவர்களைப் போல. நான் கூட ஒரு துப்பாக்கி வாங்கினேன். உங்களால்
நம்ப முடிகிறதா? என்னைப் போன்ற ஒரு ஆள்? ஆனால், நான் வாங்கினேன். தற்காப்பிற்காக
நான் ஒன்றை வாங்கினேன், அதை என் காரின் முன்பக்க பெட்டியில் வைத்துத் திரிந்தேன். சில
சமயங்களில் நான் நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டியிருக்கும்.
மருத்துவமனைக்குச் செல்வதற்கு, புரிகிறதா? டெர்ரிக்கும் எனக்கும் அப்போது திருமணம்
ஆகியிருக்கவில்லை, வீடு, குழந்தைகள், நாய், எல்லாமே எனது முதல் மனைவியிடம்
இருந்தன, டெர்ரியும் நானும் இந்த வீட்டில் வசித்துக் கொண்டிருந்தோம். நான் சொன்னதைப்
போல, சில சமயங்களில் நள்ளிரவில் எனக்கு அழைப்பு வரும், அதிகாலை இரண்டு அல்லது

மூன்று மணிக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். வெளியே, வாகன
நிறுத்துமிடத்தில் இருட்டாக இருக்கும், என் காரைச் சென்று அடைவதற்குள்ளேயே எனக்கு
பயங்கரமாக வியர்த்து விடும். அவன் புதர்களுக்குள்ளிருந்தோ இல்லை ஒரு காரின்
பின்புறமிருந்தோ வெளிவந்து சுட ஆரம்பித்து விடுவானோ, தெரியவில்லை. என்ன
சொல்கிறேனென்றால், அந்த ஆள் ஒரு பைத்தியக்காரன். அவனால் ஒரு வெடிகுண்டைக் கூட
தயார் செய்து விட முடியும், இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வான். அவன் அடிக்கடி
எனது மருத்துவமனைக்கு அழைத்து மருத்துவரிடம் பேச வேண்டும் என்பான், நான் திரும்ப
அழைக்கும்போது, அவன் சொல்வான், ‘இழிமகனே, உனது நாட்கள் எண்ணப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.’ என்று. இந்த மாதிரி சின்னச் சின்ன விசயங்கள். மிகவும் பயமாக
இருந்தது, தெரியுமா.”
“இருந்தாலும் நான் அவனுக்காக வருந்துகிறேன்,” என்றாள் டெர்ரி.
“இது ஒரு கொடுங்கனவைப் போல இருக்கிறது,” என்றாள் லாரா. “ஆனால், அவன்
தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பிறகு உண்மையில் என்னதான் நடந்தது?”
லாரா ஒரு சட்ட உதவியாளர். காதலித்து சேர்ந்து வாழ்வதற்கு முன்பு தொழில் சார்ந்த ஒரு
விசயத்தில் நாங்கள் சந்தித்திருந்தோம். அவளுக்கு முப்பத்தைந்து வயதாகிறது, என்னை விட
மூன்று வயது இளையவள். காதலர்களாக இருப்பதையும் தாண்டி, எங்களுக்கு ஒருவரை
ஒருவர் பிடிக்கும், ஒருவர் மற்றவரின் அருகிலிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
அவள் பழகுவதற்கு மிகவும் எளியவள்.

“என்ன நடந்தது?” லாரா கேட்டாள்.
மெல் கூறினார், “அவன் தன் அறையில் தன்னைத்தானே வாயில் சுட்டுக் கொண்டான். யாரோ
ஒருவர் அந்த சத்தம் கேட்டு மேலாளரிடம் தெரிவித்தார். ஒரு சாவியை வைத்துத் திறந்து
அவர்கள் உள்ளே வந்து என்ன நடந்ததென்று பார்த்தார்கள், ஒரு மருத்துவ அவரச ஊர்தியை
அழைத்தார்கள். அவர்கள் அவனைக் கொண்டுவந்தபோது நானும் அங்கு இருந்தேன், அவன்
உயிரோடிருந்தான், ஆனால் சுயநினைவில்லை. அவன் மூன்று நாட்கள் உயிரோடிருந்தான்.
அவனது தலை ஒரு சராசரி தலையை விட இரு மடங்கு வீங்கி விட்டது. அதைப்போல ஒன்றை
நான் ஒருபோதும் பார்த்ததில்லை, மறுபடி ஒருபோதும் பார்க்க மாட்டேன் என்றும்
நம்புகிறேன். இதைப் பற்றி கேள்விப்பட்டதும் டெர்ரி அங்கு சென்று அவனுடன் இருக்க
விரும்பினாள். அதற்காக நாங்கள் சண்டை போட்டோம். அவள் அவனை அப்படிப் பார்க்க
வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. அவள் அவனைப் பார்க்க வேண்டுமென்று நான்
நினைக்கவில்லை, இப்போதும் கூட அப்படிதான் நினைக்கிறேன்.”
“சண்டையில் ஜெயித்தது யார்?” என்று கேட்டாள் லாரா.
“அவன் இறந்தபோது நான் அந்த அறையில் அவனுடன் இருந்தேன்,” என்றாள் டெர்ரி. “அவன்
சுயநினைவிற்கு வரவேயில்லை. ஆனாலும், நான் அவனுடன் இருந்தேன். அவனுக்கு வேறு
யாரும் இல்லை.”
“அவன் பயங்கரமானவன்,” என்றார் மெல். “அதை நீ காதல் என்று சொன்னால், அப்படியே
வைத்துக்கொள்.”

“அது காதல் தான்,” என்றாள் டெர்ரி. “நிச்சயமாக, பெரும்பாலான மக்களின் கண்களுக்கு அது
அசாதாரணமானது தான். ஆனால், அவன் அதற்காக சாவதற்குத் தயாராக இருந்தான். அவன்
அதற்காக சாகவும் செய்தான்.”
“நிச்சயமாக அதை நான் காதலென்று சொல்ல மாட்டேன்,” என்றார் மெல். “என்ன
சொல்கிறேனென்றால், அவன் அதற்காக என்ன செய்தான் என்பது யாருக்கும் தெரியாது.
நான் நிறைய தற்கொலைகளைப் பார்த்திருக்கிறேன், யாருக்காவது அவர்கள் எதற்காக
அப்படிச் செய்தார்கள் என்று தெரியுமா என்று என்னால் சொல்ல முடியாது.”
மெல் தன் கைகளை கழுத்தின் பின்புறம் வைத்து தனது நாற்காலியை பின்புறமாக சாய்த்தார்.
“அந்த விதமான காதலில் எனக்கு ஆர்வமில்லை,” என்றார் அவர். “அது காதல் என்றால்,
அப்படியே வைத்துக்கொள்.”
டெர்ரி கூறினாள், “நாங்கள் பயந்துவிட்டோம். மெல் ஒரு உயில் கூட எழுதி விட்டார்,
கலிஃபோர்னியாவில் இருந்த அவரது சகோதரருக்கு கடிதம் எழுதினார், அவர் அமெரிக்க
இராணுவத்தில்(Green Beret) இருந்தவர். தனக்கு ஏதேனும் நடந்துவிட்டால் யாரைப் பார்க்க
வேண்டுமென மெல் அவரிடம் சொன்னார்.”
டெர்ரி தன் கோப்பையிலிருந்ததைக் குடித்தாள். “ஆனால், மெல் சொல்வது சரிதான், நாங்கள்
தப்பியோடியவர்களைப் போல்தான் வாழ்ந்தோம். நாங்கள் பயத்துடனே இருந்தோம். மெல்
பயந்திருந்தார், இல்லையா அன்பே? ஒரு கட்டத்தில் நான் காவல்துறையினரைக் கூட
அழைத்தேன், ஆனால் அவர்களால் எந்த பயனும் இல்லை. அவர்கள் எட் நிஜமாக ஏதும்
செய்யாதவரை தங்களால் ஏதும் செய்ய முடியாதென்று கூறினார்கள். நகைச்சுவைதான்,
இல்லையா?” என்றாள் டெர்ரி.
அவள் கடைசியாகவிருந்த ஜின்னை தன் கோப்பையில் விட்டுவிட்டு அந்த பாட்டிலை
ஆட்டினாள். மெல் இருக்கையிலிருந்து எழுந்து அலமாரியை நோக்கிச் சென்றார். இன்னொரு
பாட்டிலை எடுத்தார்.

“நல்லது, காதல் என்றால் என்னவென்று எனக்கும் நிக்-கிற்கும் தெரியும்.” என்றாள் லாரா.
“அதாவது, எங்களுக்கு,” என்றாள். அவள் தனது முட்டியால் என் முட்டியை இடித்தாள்.
“இப்போது நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்,” என்றவாறு என்னைப் பார்த்து
புன்னகைத்தாள்.
பதில் சொல்லும் விதமாக, நான் லாராவின் கையைப் பிடித்து எனது உதட்டருகே
உயர்த்தினேன். அவள் கையை தொடர்ந்து முத்தமிட்டேன். எல்லோரும் குதூகலமாகி
விட்டோம்.
“நாங்கள் அதிருஷ்டசாலிகள்,” என்றேன் நான்.
“நீங்கள்,” என்றாள் டெர்ரி. “முதலில் இதை நிறுத்துங்கள். நீங்கள் என்னை
எரிச்சல்படுத்துகிறீர்கள். அட கடவுளே, நீங்கள் இன்னும் தேனிலவில் தான் இருக்கிறீர்கள்,
இன்னும் அந்த கிளர்ச்சியில் தானே இருக்கிறீர்கள். அதற்குள்ளாகவா? பொறுமையாக
இருங்கள். எவ்வளவு காலமாக நீங்கள் சேர்ந்து இருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் ஆகிறது?
ஒரு வருடமா? ஒரு வருடத்தை விட அதிகமா?”

“ஒன்றரை வருடமாக போய்க்கொண்டிருக்கிறது,” வெட்கத்துடன் புன்னகைத்தவாறு
சொன்னாள் லாரா.
“ஓ, இப்போதேவா,” என்றாள் டெர்ரி. “கொஞ்ச காலம் காத்திருங்கள்.”
அவள் தன் கோப்பையைப் பிடித்தவாறு லாராவைக் கூர்ந்து பார்த்தாள்.
“நான் விளையாட்டாகத்தான் சொல்கிறேன்,” என்றாள் டெர்ரி.
மெல் ஜின்னைத் திறந்து பாட்டிலுடன் மேசையைச் சுற்றிச் சென்றார்.
“உங்களுக்கு, இதோ,” என்றார் அவர். “நாம் ஒரு டோஸ்ட் செய்வோம். நான் ஒரு டோஸ்ட்
சொல்ல விரும்புகிறேன். காதலுக்காக ஒரு டோஸ்ட். உண்மையான காதலுக்காக,” என்றார்
மெல்.
நாங்கள் கோப்பைகளைத் தொட்டோம்.
“காதலுக்காக,” என்றோம்.

வெளியே கொல்லைப்புறத்தில் நாய்களில் ஒன்று குரைக்க ஆரம்பித்தது. சன்னலின் பக்கமாக
சாய்ந்திருந்த ஆஸ்பென் மரத்தின் இலைகள் சன்னல் கண்ணாடியில் தட்டின. பின்மதிய
சூரியன் அந்த அறையில் ஓர் இருப்பைப் போலத் தோன்றியது, எளிமை மற்றும்
பெருந்தன்மையின் விசாலமான வெளிச்சம். மகிழ்ச்சிவயப்பட்ட எந்தவொரு இடத்திலும்
நாங்கள் இருந்திருக்க முடியும். நாங்கள் மீண்டும் எங்கள் கோப்பைகளை உயர்த்தி
தடைசெய்யப்பட்ட ஏதோவொன்றைப் பற்றி தங்களுக்குள் ஓர் உடன்பாட்டை வைத்திருக்கும்
குழந்தைகளைப் போல ஒருவரையொருவர் பார்த்து பல்லைக்காட்டிச் சிரித்தோம்.
“உண்மையான காதல் என்றால் என்னவென்று நான் உங்களுக்குச் சொல்கிறேன,” என்றார்
மெல். “அதாவது, உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் தருகிறேன். பிறகு, நீங்களே சொந்தமாக
ஒரு முடிவிற்கு வரலாம்.” அவர் தன் கோப்பையில் இன்னும் நிறைய ஜின் ஊற்றினார். ஒரு
ஐஸ் கட்டித் துண்டையும் எலுமிச்சை சிம்பையும் அத்துடன் கலந்தார். நாங்கள் ஜின்னை
உறிஞ்சிக் குடித்தவாறு காத்திருந்தோம். லாராவும் நானும் மீண்டும் முட்டிகளை இடித்துக்
கொண்டோம். நான் அவளது வெதுவெதுப்பான தொடையில் ஒரு கையை வைத்து அதை
அப்படியே விட்டுவிட்டேன்.
“நம்மில் யாருக்கும் உண்மையில் காதலைப் பற்றி என்ன தெரியும்?” என்று கேட்டார் மெல்.
“நாமெல்லாம் காதலில் துவக்கநிலையில் தான் இருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது.
நாம் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என்று சொல்கிறோம், காதலிக்கிறோம் தான்,
எனக்கு அதில் சந்தேகம் இல்லை. நான் டெர்ரியை காதலிக்கிறேன், டெர்ரி என்னை
காதலிக்கிறாள், நீங்களும் ஒருவரையொருவர் காதலிக்கிறீர்கள். இப்போது நான்
பேசிக்கொண்டிருக்கும் வகையான காதலைப் பற்றி உங்களுக்குத் தெரியும். உடல்சார்ந்த
காதலும், விஷேசமான ஒருவரை நோக்கி உங்களைச் செலுத்தும் அந்த உணர்ச்சியும், அதைப்
போலவே, ஒரு வகையில் பார்த்தால், மற்றவரின் இருப்பின் மீதான, அவனது அல்லது
அவளது சாராம்சத்தின் மீதான காதலும். காமம் சார்ந்த காதல், மற்றும், எப்படிச் சொல்லலாம்,
உணர்வுப்பூர்வமான காதல் என்று சொல்வோம், மற்ற நபரைப் பற்றி தினசரி அக்கறை
காட்டுதல். ஆனால், சில சமயங்களில், எனது முதல் மனைவியையும் நான் காதலித்திருக்க
வேண்டும் என்கிற உண்மையை எண்ணிப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. ஆனால்,

நான் காதலித்தேன், எனக்குத் தெரியும் நான் காதலித்தேனென்று. எனவே, அந்த வகையில்
நான் டெர்ரியைப் போலத்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். டெர்ரியும் எட்-டும்.”
அவர் அதைப் பற்றி யோசித்தார், பின், தொடர்ந்து கூறினார்.
“எனது முதல் மனைவியை என் வாழ்க்கையை விட மேலாக காதலித்தேன் என்று நான்
நினைத்திருந்த ஒரு காலகட்டமும் உண்டு. ஆனால், இப்போது அவளது மன உறுதியை நான்
வெறுக்கிறேன். ஆம், நான் வெறுக்கிறேன். அதை எப்படி விளக்குவது? அந்த காதலுக்கு
என்ன ஆயிற்று? அதற்கு என்ன ஆயிற்று என்பதைத் தான் நான் அறிந்துகொள்ள
விரும்புகிறேன். யாராவது என்னிடம் சொல்ல மாட்டார்களா என்று இருக்கிறேன். அப்புறம்,
எட் இருக்கிறானே. சரி, நாம் எட்-டிற்கு வந்துவிட்டோம். டெர்ரியைக் கொலை செய்ய
முயற்சிக்கும் அளவிற்கு அவன் அவளைக் காதலிக்கிறான், தற்கொலை செய்து கொள்வதில்
சென்று முடிகிறான்,” மெல் பேசுவதை நிறுத்தி விட்டு தன் கோப்பையிலிருந்ததை
விழுங்கினார். “நீங்கள் இருவரும் பதினெட்டு மாதங்களாக சேர்ந்து இருக்கிறீர்கள், நீங்கள்
ஒருவரையொருவர் காதலிக்கிறீர்கள். உங்களில் முழுவதும் அது தெரிகிறது. அதனால் நீங்கள்
ஜொலிக்கிறீர்கள். ஆனால், நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் முன்பு நீங்கள் இருவருமே
மற்ற நபர்களை காதலித்தீர்கள். எங்களைப் போலவே நீங்கள் இருவரும் முன்பு திருமணமும்
செய்திருக்கிறீர்கள். ஒருவேளை, அதற்கு முன்பும் கூட நீங்கள் வேறு நபர்களை
காதலித்திருக்கக் கூடும். டெர்ரியும் நானும் ஐந்து வருடங்களாக சேர்ந்து இருக்கிறோம்,
நான்கு வருடங்கள் திருமணமானவர்களாக. ஆனால், பயங்கரமான விசயம், பயங்கரமான
விசயம் என்னவென்றால், ஆனால், நல்ல விசயமும் கூட, காக்கும் கருணை என்று
வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம், அது என்னவென்றால், எங்களில் யாருக்காவது
ஏதாவது நடந்தால், இதை சொல்வதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், ஆனால்,
எங்களில் ஒருவருக்கு நாளை ஏதேனும் நடந்தால், நான் நினைக்கிறேன், மற்றொருவர், மற்ற
நபர், சிறிது நேரம் வருத்தப்படுவார், என்ன, ஆனால், பின் அந்த பிழைத்திருக்கும் நபர்
வெளியே சென்று மீண்டும் காதலிப்பார், போதுமான விரைவில் இன்னொரு நபர்
வந்துவிடுவார். இதெல்லாம், நாம் பேசுகின்ற இந்த காதலெல்லாம், அதுவொரு நினைவாக
மட்டுமே இருக்கும். ஒருவேளை, ஒரு நினைவாகக் கூட இல்லாமல் போகலாம். நான்
சொல்வது தவறா? நான் அடிப்படையிலிருந்தே விலகிப் பேசுகிறேனா? ஏனென்றால், நான்
பேசுவது தவறென்று நீங்கள் நினைத்தால் என்னை நீங்கள் சரிப்படுத்த வேண்டுமென நான்
விரும்புகிறேன். நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதாவது, எனக்கு ஒன்றும் தெரியாது,
அதை ஒப்புக்கொள்ளும் முதல் ஆளும் நான்தான்.”
“மெல், அடக் கடவுளே!” என்றாள் டெர்ரி. அவள் அவரருகே சென்று அவரது மணிக்கட்டைப்
பிடித்தாள். “நீங்கள் குடிபோதையில் இருக்கிறீர்களா அன்பே? போதையாகி விட்டதா?”
“அன்பே, நான் பேசிக்கொண்டு தானே இருக்கிறேன்,” என்றார் மெல். “சரிதானே? நான்
நினைப்பதை சொல்வதற்கு நான் குடிபோதையில் இருக்கவேண்டியதில்லை. அதாவது,
நாமெல்லாம் பேசிக்கொண்டு தானே இருக்கிறோம், சரிதானே?” என்றவாறு மெல்
பார்வையை அவள்மீது திருப்பினார்.
“இனியவரே, நான் குறை சொல்லவில்லை,” என்றாள் டெர்ரி.
அவள் தன் கோப்பையை எடுத்தாள்.
“நான் இன்று வேலையில் இல்லை,” என்றார் மெல். “நான் உனக்கு நினைவூட்டுகிறேன். நான்
வேலையில் இல்லை,” என்றார்.

“மெல், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்,” என்றாள் லாரா.
மெல் லாராவைப் பார்த்தார். அவள் யாரென்று அடையாளம் தெரியாத மாதிரி, முன்பிருந்த
பெண்ணாக தற்போது அவள் இல்லாத மாதிரி, அவர் அவளைப் பார்த்தார்.
“நானும் உன்னை நேசிக்கிறேன், லாரா,” என்றார் மெல். “பிறகு, நிக், உன்னையும்
நேசிக்கிறேன். உனக்கொன்று தெரியுமா?” என்று கேட்டார் மெல். “நீங்கள் எங்கள்
நண்பர்கள்,” என்றார்.
அவர் தனது கோப்பையை எடுத்தார்.

மெல் கூறினார், “நான் உங்களிடம் ஒரு விசயத்தைப் பற்றி சொல்லவிருந்தேன். அதாவது, ஒரு
விசயத்தை நிரூபிக்கவிருந்தேன். என்ன தெரியுமா? அது சில மாதங்களுக்கு முன்பு நடந்தது,
ஆனால், அது இப்போதும் கூட நடந்துகொண்டுதான் இருக்கிறது, மேலும், அது நம்மை
வெட்கப்பட வைக்க வேண்டும், காதலைப் பற்றி பேசும் பொழுது நாம் எதைப் பற்றி
பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்ததைப் போல நாம் பேசுவது தான் அது.”
“விளையாடாதீர்கள்,” என்றாள் டெர்ரி. “நீங்கள் குடிபோதையில் இல்லாவிட்டால்
குடித்திருப்பதைப் போல பேசாதீர்கள்.”
“வாழ்க்கையில் ஒரு முறையாவது வாயை மூடு நீ,” மிக அமைதியாக சொன்னார் மெல்.
“எனக்கு ஒரு உதவி செய்வாயா, அப்படி ஒரு நிமிடம் இருப்பாயா? நான்
சொல்லிக்கொண்டிருந்த மாதிரி, ஒரு முதிய தம்பதியர் இருந்தார்கள், அவர்களது கார் மாகாண
நெடுஞ்சாலையில் சேதமடைந்து விட்டது. ஓர் இளைஞன் அவர்களை இடித்துவிட்டான்,
அவர்களது கார் மொத்தமாக சிதைந்து விட்டது, யாரும் அவர்கள் மீண்டு வர வாய்ப்பு
கொடுக்கவில்லை.”
டெர்ரி எங்களைப் பார்த்தாள், பின் மீண்டும் மெல்லைப் பார்த்தாள். அவள் படபடப்பாக
தோன்றினாள், அல்லது, ஒருவேளை அது கொஞ்சம் கடுமையான வார்த்தையாக இருக்கலாம்.
மெல் பாட்டிலை மேசையைச் சுற்றி கொடுத்துக் கொண்டிருந்தார்.
“நான் அன்றிரவு மருத்துவமனையில் இருந்தேன்,” என்றார் மெல். “அது மே மாதம், அல்லது
ஜூனாக இருக்கலாம். மருத்துவமனையிலிருந்து அழைத்த போது டெர்ரியும் நானும்
அப்போதுதான் இரவு சாப்பிட உட்கார்ந்திருந்தோம். மாகாண நெடுஞ்சாலையில் இந்த
சம்பவம் நடந்திருந்தது. குடிபோதையிலிருந்த இளைஞன், பதின் வயதைச் சேர்ந்தவன், தன்
தந்தையின் பிக்அப் வகை காரை இந்த முதிய தம்பதியர் இருந்த கேம்பர் வகை காரின் மீது
மோதியிருந்தான். அந்த தம்பதியர் தங்கள் எழுபதுகளின் இறுதிப் பகுதியில் இருந்தனர். அந்த
இளைஞன், பதினெட்டோ, பத்தொன்பதோ, ஏதோவொன்று, அவனைக்
கொண்டுவரும்போதே இறந்திருந்தான். ஸ்டியரிங் சக்கரம் அவனது மார்பெலும்பைத்
துளைத்திருந்தது. அந்த முதிய தம்பதியர் உயிரோடு இருந்தார்கள், புரிகிறதா? அதாவது, ஏதோ
பிழைத்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு எல்லா பாதிப்புகளும் இருந்தன, பல எலும்பு
முறிவுகள், உள்காயங்கள், இரத்தக் கசிவு, சிராய்ப்புகள், தசை சிதைவு, இருக்கிற எல்லா
காயங்களும் அவர்களுக்கிருந்தன, அவர்கள் இருவருமே தலையில் அடிபட்ட அதிர்ச்சியில்
இருந்தார்கள். என்னை நம்புங்கள், அவர்கள் மோசமான நிலையில் இருந்தார்கள். மேலும்,
அவர்களது வயது அவர்கள் பிழைப்பதற்கெதிரான வலுவான காரணியாக இருந்தது. அந்த
பெண்மணி அந்த ஆளை விட மோசமான நிலையிலிருந்தார் என்று சொல்வேன். மற்ற

எல்லாவற்றுடன் சேர்த்து சிதைந்த மண்ணீரலும். இரண்டு முழங்கால் சில்லுகளும்
உடைந்துவிட்டன. ஆனால், அவர்கள் தங்கள் சீட் பெல்ட்டினை அணிந்திருந்திருக்கிறார்கள்,
அதுதான் அப்போதைக்கு அவர்களைக் காப்பாற்றியதா என்று கடவுளுக்குத் தான் தெரியும்.
“நண்பர்களே, இது தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கான ஒரு விளம்பரம்,” என்றாள் டெர்ரி.
“இதோ பேசிக்கொண்டிருப்பது உங்கள் செய்தித் தொடர்பாளர் டாக்டர்.மெல்வின் ஆர்
மெக்கின்னிஸ்,” என்று சொல்லிச் சிரித்தாள் டெர்ரி. “மெல்,” என்றழைத்து, “சில நேரங்களில்
நீங்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் போகிறீர்கள். ஆனால், நான் உங்களை நேசிக்கிறேன்,
அன்பே,” என்றாள்.
“அன்பே, நான் உன்னை காதலிக்கிறேன்,” என்றார் மெல்.
அவர் மேசையின் மேலாக முன்புறம் சாய்ந்தார். டெர்ரி நடுவில் அவரை சந்தித்தாள். அவர்கள்
முத்தமிட்டனர்.
“டெர்ரி சொல்வது சரிதான்,” மீண்டும் தன் இடத்தில் உட்கார்ந்தவாறு சொன்னார் மெல். “சீட்
பெல்ட்டினைப் போடுங்கள். ஆனால், உண்மையில், அந்த முதியவர்கள் ஒரு விதமான
நிலையில்தான் இருந்தார்கள். நான் அங்கு சென்று சேர்ந்த போது நான் சொன்னதைப் போல
அந்த இளைஞன் இறந்து விட்டிருந்தான். அவன் ஒரு மூலையில் ஒரு கர்னியில்(சக்கரங்கள்
உடைய ஸ்ட்ரெச்சர்) கிடத்தப்பட்டிருந்தான். நான் அந்த முதிய தம்பதியரை ஒருமுறை பார்த்து
விட்டு அவசர சிகிச்சையறையின் செவிலியை ஒரு நரம்பியல் மருத்துவரையும் எலும்பியல்
மருத்துவரையும் இரு அறுவை சிகிச்சை நிபுணர்களையும் உடனடியாக அங்கு அழைத்து வரச்
சொன்னேன்.”
அவர் தன் கோப்பையிலிருந்து குடித்தார். “நான் சுருக்கமாகவே சொல்கிறேன்,” என்றார்.
“பிறகு, நாங்கள் அவர்களிருவரையும் அறுவைசிகிச்சை அறைக்கு கொண்டு சென்றோம்,
இரவின் பெரும்பகுதியும் அவர்களுக்கு கடுமையாக சிகிச்சை அளித்தோம். அந்த இருவரிடமும்
நம்பமுடியாத அளவு நெஞ்சுரம் இருந்தது. அவ்வப்போது அப்படி நடப்பதைப் பார்க்கலாம்.
எனவே, நாங்கள் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்தோம், பிறகு, காலையை
நெருங்கியபோது நாங்கள் அவர்களுக்கு ஒரு ஐம்பது சதவீத வாய்ப்பிருப்பதாக நினைத்தோம்,
ஒருவேளை அந்த பெண்மணிக்கு அதைவிட குறைவாக இருக்கலாம். அடுத்த நாள் காலையில்
அவர்கள் இன்னும் உயிரோடு இருந்தார்கள். எனவே, நாங்கள் அவர்களை தீவிர சிகிச்சை
பிரிவிற்கு மாற்றினோம், அங்கு தான் அவர்கள் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடித்துப்
போராடினார்கள், எல்லா வாய்ப்புகளிலும் மேலும் மேலும் நன்றாக முன்னேறி வந்தார்கள்.
எனவே, நாங்கள் அவர்களை மீண்டும் அவர்களது அறைக்கே மாற்றினோம்.”
மெல் பேசுவதை நிறுத்தினார். “இந்தாருங்கள்,” என்ற அவர், “இந்த மலிவான ஜின்னை
குடித்து முடித்துத் தொலைப்போம். பிறகு, நாம் சாப்பிடப் போகிறோம், இல்லையா?
டெர்ரிக்கும் எனக்கும் ஒரு புதிய இடம் தெரியும். எங்களுக்குத் தெரிந்த அந்த புதிய இடத்திற்குத்தான் நாம் செல்லப் போகிறோம். ஆனால், இந்த விலை குறைந்த, மோசமான
ஜின்னை முடிக்காமல் நாம் போகப்போவதில்லை.”
டெர்ரி சொன்னாள், “நாங்கள் இதுவரை அங்கு சாப்பிட்டதில்லை. ஆனால், வெளியிலிருந்து
பார்ப்பதற்கு அது நன்றாக இருக்கிறது.”

“எனக்கு உணவென்றால் பிடிக்கும்,” என்றார் மெல். “மீண்டும் முதலிலிருந்து வாழலாம்
என்றால், நான் ஒரு செஃப் ஆகத்தான் இருப்பேன், தெரியுமா? அப்படித்தானே, டெர்ரி?”
என்று கேட்டார் மெல்.
அவர் சிரித்தார். ஐஸ் கட்டித் துண்டை தன் விரல்களால் கோப்பைக்குள் போட்டார்.
“டெர்ரிக்கு தெரியும்,” என்றார் அவர். “டெர்ரியால் உங்களுக்குச் சொல்ல முடியும். ஆனால்,
இதை நானே சொல்கிறேன். மீண்டும் இன்னொரு வாழ்க்கையில் திரும்ப வர
முடிந்ததென்றால், இன்னொரு நேரத்தில், என்ன செய்வேன் தெரியுமா? நான் ஒரு
வீரனாக(Knight) திரும்பி வர விரும்புகிறேன். அந்த கவசங்களையெல்லாம் அணிந்து மிகவும்
பாதுகாப்பாக இருக்கலாம். அத்தகைய ஒரு வீரனாக இருப்பது வெடிமருந்தும், நீண்ட மஸ்கட்
துப்பாக்கிகளும், சிறு கைத்துப்பாக்கிகளும் உடனிருக்கும் வரை நன்றாகத்தான் இருக்கும்.”
“மெல் ஒரு குதிரை ஓட்டவும் ஒரு குத்தூசியை வைத்திருக்கவும் விரும்புகிறார்,” என்றாள்
டெர்ரி.
“ஒரு பெண்ணுடைய கழுத்துச் சால்வையை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள்,”
என்றாள் லாரா.
“அல்லது ஒரு பெண்ணையே,” என்றார் மெல்.
“மானக்கேடு உங்களுக்கு,” என்றாள் லாரா.
டெர்ரி சொன்னாள், “ஒருவேளை நீங்கள் ஒரு கொத்தடிமையாக வந்திருக்கிறீர்கள் என்று
வைத்துக் கொள்வோம். அந்த நாட்களில் கொத்தடிமைகளின் நிலைமை அவ்வளவு நன்றாக
இல்லை.”
“கொத்தடிமைகள் ஒருபோதும் நன்றாக இல்லை,” என்றார் மெல். “ஆனால், வீரர்கள் கூட
யாரோ ஒருவருக்கு பாத்திரங்கள்(வெஸ்ஸெல்ஸ்) தான் என்று நான் நினைக்கிறேன். அது
அப்படித்தான் நடக்கும், இல்லையா? ஆனால், அப்படிப்பார்த்தால் ஒவ்வொருவருமே
எப்போதும் யாரோ ஒருவருக்கு பாத்திரம்(வெஸ்ஸெல்ஸ்) தானே. சரிதானே, டெர்ரி? ஆனால்,
வீரர்களைப் பற்றி எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர்களது பெண்களைத் தவிர,
அவர்கள் கவசத்தாலான ஒரு ஆடையை அணிந்தார்கள் இல்லையா, அதுதான், அத்துடன்
அவர்கள் மிக எளிதில் காயமடையவும் முடியாது. அந்த நாட்களில் கார்கள் இல்லை,
இல்லையா? உங்கள் குண்டியைக் கிழிப்பதற்கு குடிபோதையிலிருக்கும் பதின் வயதினரும்
இல்லை.”

“வாஸ்ஸல்ஸ்(Vassal – கொத்தடிமைகள்),” என்றாள் டெர்ரி.
“என்ன?” என்று கேட்டார் மெல்.
“வாஸ்ஸல்ஸ்,” என்றாள் டெர்ரி. “அவர்கள் வாஸ்ஸல்ஸ் என்று அழைக்கப்பட்டார்கள்,
வெஸ்ஸெல்ஸ் அல்ல.”
“வாஸ்ஸல்ஸ், வெஸ்ஸெல்ஸ்,” என்றார் மெல். “என்ன இழவு வித்தியாசம்? எப்படியும் நான்
சொன்னது என்னவென்று உனக்குத் தெரியும், பிறகென்ன?” என்றார். “நான்
படித்தவனில்லை. என் தொழிலை நானே கற்றுக்கொண்டேன். நான் ஓர் இருதய அறுவை

சிகிச்சை மருத்துவன், சரிதான், ஆனால், நான் வெறும் ஒரு மெக்கானிக் தான். நான் சென்று
வீணாக நேரத்தைக் கழித்து விஷயங்களை சரி செய்கிறேன், குப்பை,” என்றார் மெல்.
“பணிவு உங்களுக்குப் பொருத்தமாக இல்லை,” என்றாள் டெர்ரி.
“அவர் ஒரு தாழ்மையுள்ள மருத்துவர் தானே,” என்றேன் நான். “ஆனால், சில நேரங்களில்
அந்த கவசங்களில் அவர்கள் மூச்சுத் திணறுவார்கள், மெல். அதிக வெப்பமாகும் போது,
அவர்கள் மிகவும் சோர்வடைந்து, களைத்துப் போய்விட்டால் அவர்களுக்கு மாரடைப்பு கூட
வரும். நான் எங்கோ வாசித்திருக்கிறேன், அவர்கள் தங்கள் குதிரைகளிலிருந்து கீழே விழுந்து
எழுந்திருக்க முடியாமல் கிடப்பார்கள், ஏனென்றால் அந்த கவசங்களையெல்லாம் அணிந்து
நிற்க முடியாமல் களைத்துப் போய் விடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் தங்கள்
குதிரைகளின் கால்களிலேயே மிதிபட்டுக் கிடப்பார்கள்.”
“அது பயங்கரம்,” என்றார் மெல். “அது ஒரு பயங்கரமான விசயம், நிக்கி. யாரேனும் வந்து
அவர்களை ஷிஷ் கபாபாக(Shish Kebab) செய்யும்வரை அங்கேயே காத்துக் கிடப்பார்கள்
என்று நினைக்கிறேன்.”
“வேறொரு பாத்திரம்(வெஸ்ஸெல்),” என்றாள் டெர்ரி.
“அது சரிதான்,” என்றார் மெல். “ஏதோவொரு வாஸ்ஸல் வந்து காதலின் பெயரால் இந்த
இழிபிறப்புடையவனை ஈட்டியால் குத்துவான். அல்லது வேறு எதற்காக அவர்கள் அந்த
நாட்களில் சண்டை போட்டார்களோ, அதன் பெயரால்.”
“இந்த காலத்தில் நாம் சண்டை போடுகிற அதே விசயங்கள் தான்,” என்றாள் டெர்ரி.
லாரா சொன்னாள், “ஒன்றும் மாறவில்லை.”
லாராவின் கன்னங்களின் நிறம் இன்னும் அதிகமாகத்தான் இருந்தது. அவளது கண்கள்
பிரகாசமாக இருந்தன. அவள் தனது கோப்பையை உதட்டருகே கொண்டு வந்தாள்.
மெல் தனக்கு இன்னொரு கோப்பை ஜின் ஊற்றிக்கொண்டார். ஒரு நீண்ட வரிசை எண்களை
படிப்பதைப் போல அவர் அந்த பாட்டிலின் பெயர்க் காகிதத்தை உன்னிப்பாக பார்த்தார்.
பிறகு, அந்த பாட்டிலை மேசை மீது மெதுவாக வைத்தார், டானிக் நீரை எடுக்க மெதுவாக
கையை நீட்டினார்.

“அந்த முதிய தம்பதியருக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டாள் லாரா. “நீங்கள் ஆரம்பித்த
கதையை முடிக்கவில்லையே.”
லாரா தனது சிகரெட்டைப் பற்ற வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள். அவளது தீக்குச்சிகள்
அணைந்து கொண்டேயிருந்தன.
அறைக்குள்ளிருந்த சூரிய ஒளி இப்போது வித்தியாசமாக இருந்தது, மெல்லியதாக
மாறிக்கொண்டிருந்தது. ஆனால், சன்னலுக்கு வெளியேயிருந்த இலைகள் இன்னும்
மினுமினுத்துக் கொண்டிருந்தன, அவை சன்னல் கண்ணாடிச் சில்லுகளிலும் மைக்காவாலான
திண்டிலும் ஏற்படுத்திய வடிவங்களை நான் உற்றுப் பார்த்தேன். ஆம், அவை ஒரே
மாதிரியான வடிவங்களாக இல்லை.
“அந்த முதிய தம்பதியருக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன் நான்.

“முதியவர்கள், ஆனால் புத்திசாலிகள்,” என்றாள் டெர்ரி.
மெல் அவளை முறைத்துப் பார்த்தார்.
டெர்ரி சொன்னாள், “உங்கள் கதையைத் தொடருங்கள், அன்பே. நான் விளையாட்டாகத்தான்
சொன்னேன். பிறகு என்ன நடந்தது?”
“டெர்ரி, சில நேரங்களில்,” என்றார் மெல்.
“தயவுசெய்யுங்கள் மெல்,” என்றாள் டெர்ரி. “எப்போதும் மிக தீவிரமாகவே இருக்காதீர்கள்,
இனியவரே. ஒரு நகைச்சுவையைக் கூட புரிந்துகொள்ள முடியாதா?”
“எங்கே அந்த நகைச்சுவை?” என்று கேட்டார் மெல்.
அவர் தன் கோப்பையைப் பிடித்தவாறு தன் மனைவியை விடாது பார்த்தார்.
“என்ன ஆயிற்று?” என்று கேட்டாள் லாரா.
மெல் லாராவின் மீது தன் பார்வையைப் பொருத்தினார். “லாரா, டெர்ரி என்னுடன்
இல்லையென்றால், அவளை நான் மிக நேசித்திருக்காவிட்டால், நிக் எனது சிறந்த நண்பனாக
இல்லாவிட்டால், நான் உன்னிடம் காதலில் விழுந்திருப்பேன். உன்னை நான் தூக்கிக்
கொண்டு போய்விடுவேன் அன்பே.” என்றார் அவர்.
“உங்கள் கதையைச் சொல்லுங்கள்,” என்றாள் டெர்ரி. “பிறகு, நாம் அந்த புதிய இடத்திற்குச்
செல்லலாம், சரியா?”
“சரி,” என்றார் மெல். “எங்கே விட்டேன்?” என்று கேட்டார். மேசையை வெறித்துப் பார்த்தார்,
பின் மீண்டும் ஆரம்பித்தார்.
“அவர்கள் இருவரையும் பார்ப்பதற்காக நான் தினமும் அங்கு சென்றேன், சில சமயங்களில்
மற்ற அழைப்புகளுக்காக நான் அங்கு இருக்கவேண்டியிருந்தால் ஒரு நாளைக்கு இருமுறை
சென்று பார்த்தேன். இருவருக்குமே தலை முதல் கால் வரை கட்டுகளும் வார்ப்புகளுமாக
இருந்தன. உங்களுக்குத் தெரியுமில்லையா, திரைப்படங்களில் பார்த்திருப்பீர்களே? அவர்கள்
பார்ப்பதற்கு அப்படித்தான் இருந்தார்கள், திரைப்படங்களில் இருப்பதைப் போலவே. சிறிய
கண் துவாரங்கள், மூக்குத் துவாரங்கள், மற்றும் வாய் துவாரங்கள். அதற்கும் மேல், அந்தப்
பெண்மணியின் கால்களை மேலே கட்டித் தூக்கி அசையாமல் வைத்திருக்கவும்
வேண்டியிருந்தது. மிக நீண்ட நாட்களுக்கு அவரது கணவர் மிகவும் மனச்சோர்வுற்று
இருந்தார். தன் மனைவி பிழைத்துக் கொள்வாள் என்று அவருக்குத் தெரிந்த பிறகும் கூட அவர்
மிகுந்த மனச்சோர்வுடனே இருந்தார். ஆனால், விசயம் அந்த விபத்தைப் பற்றியல்ல. அதாவது,
அந்த விபத்து ஒரு காரணம் தான், ஆனால் அது மட்டுமே முழு காரணமல்ல. நான் அவரது
வாய் துவாரம் வரை நெருங்கிச் செல்வேன் தெரியுமா, ஆனால், அவர் இல்லையென்று
விடுவார், உண்மையில் அந்த விபத்து பிரச்சினையே அல்ல, ஆனால், தனது கண்
துவாரங்களின் வழியே அவரால் தன் மனைவியைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான்.
அதுதான் அவரை மிக மோசமாக வருந்தச் செய்வதாக அவர் கூறினார். நினைத்துப் பார்க்க
முடிகிறதா? என்ன சொல்கிறேனென்றால், அவரால் தன் சொந்தத் தலையைத் திருப்பி தன்
சொந்த மனைவியைப் பார்க்க முடியவில்லை என்பதால்தான் அவரது மனம் உடைந்து
விட்டது.”

மெல் மேசையைச் சுற்றிலும் பார்த்து தான் சொல்லவிருப்பதை நினைத்து தலையை
ஆட்டினார்.
“என்ன சொல்கிறேனென்றால், பாழாய்ப்போன அந்த பெண்மணியைத் தன்னால் பார்க்க
முடியவில்லை என்கிற காரணமே அந்த வயதான துக்கவாதியைக் கொன்றுகொண்டிருந்தது.”
நாங்கள் அனைவரும் மெல்லைப் பார்த்தோம்.
“நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டார் அவர்.

ஒருவேளை அப்போது நாங்கள் கொஞ்சம் குடிபோதையில் இருந்திருக்கலாம். விசயங்களை
மனதில் வைத்துக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது என்றெனக்குத் தெரியும்.
அறையிலிருந்து வெளிச்சம் வடிந்துகொண்டிருந்தது, எங்கிருந்து வந்ததோ அந்த சன்னலின்
வழியே வெளியே சென்றுகொண்டிருந்தது. இருந்தாலும், தலைக்கு மேலிருந்த மின்விளக்கைப்
போடுவதற்கு மேசையிலிருந்து எழுந்திருப்பதற்கு ஒருவரும் அசையவில்லை.
“கேளுங்கள்,” என்றார் மெல். “இந்த பாழாய்ப்போன ஜின்னை நாம் முடித்து விடுவோம்.
ஆளுக்குக் கொஞ்சமாக ஒரு சுற்று ஊற்றுவதற்குப் போதுமான அளவு இதில் மிச்சமிருக்கிறது.
பிறகு, நாம் சென்று சாப்பிடலாம். நாம் அந்த புதிய இடத்திற்குப் போகலாம்.”
“அவர் மனச்சோர்வுற்றிருக்கிறார்,” என்றாள் டெர்ரி. “மெல், ஒரு மாத்திரை எடுத்துக்
கொள்கிறீர்களா?”
மெல் தன் தலையை ஆட்டினார். “இருந்த எல்லாவற்றையும் நான் சாப்பிட்டுவிட்டேன்.”
“அவ்வப்போது நம் எல்லோருக்குமே ஒரு மாத்திரை தேவைப்படுகிறது.” என்றேன் நான்.
“சிலருக்குப் பிறவியிலேயே அவை தேவையாக இருக்கின்றன,” என்றாள் டெர்ரி.
அவள் மேசையில் இருந்த எதையோ தேய்ப்பதற்கு தன் விரலை உபயோகித்துக்
கொண்டிருந்தாள். பின், தேய்ப்பதை நிறுத்தினாள்.
“நான் என் குழந்தைகளிடம் பேச விரும்புகிறேனென்று நினைக்கிறேன்,” என்றார் மெல்.
“அதனால் உங்கள் யாருக்கும் பிரச்சனையில்லையே? நான் என் குழந்தைகளை அழைக்கப்
போகிறேன்.”
டெர்ரி கேட்டாள், “தொலைபேசியை மார்ஜொரீ எடுத்தால் என்ன செய்வீர்கள்? மார்ஜொரீ
பற்றி நாங்கள் சொன்னதை நீங்கள் இருவரும் கேட்டீர்கள், இல்லையா? அன்பே, நீங்கள்
மார்ஜொரீயிடம் பேச விரும்ப மாட்டீர்கள் தானே? அது உங்களை இன்னும் மோசமாக
வருத்தப்பட வைக்கும்.”
“நான் மார்ஜொரீயிடம் பேச விரும்பவில்லை,” என்றார் மெல். “ஆனால், நான் என்
குழந்தைகளிடம் பேச வேண்டும்.”
“அவள் மீண்டும் திருமணம் செய்து கொள்வாள் அல்லது செத்துப் போவாள் என தான்
விரும்புவதாக மெல் சொல்லாமல் ஒரு நாள் கூட கழிவதில்லை,” என்றாள் டெர்ரி. “ஒரே
விசயத்திற்காக.” டெர்ரி தொடர்ந்தாள், “அவள் எங்களை திவாலாக்குகிறாள். தன்னை எரிச்சல்
படுத்துவதற்காகவே அவள் அப்படிச் செய்வதாக மெல் கூறுகிறார், அதற்காகவே அவள்

மீண்டும் திருமணம் செய்துகொள்ள மாட்டாளாம். அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான்,
அவன் அவளுடனும் குழந்தைகளுடனும் தான் வாழ்கிறான், அதனால், மெல் அவனுக்கும்
சேர்த்து செலவு செய்கிறார்.”
“அவளுக்கு தேனீக்கள் என்றால் ஒவ்வாமை இருக்கிறது,” என்றார் மெல். “நான் பிரார்த்தனை
செய்யாதிருந்தால் அவள் மீண்டும் திருமணம் செய்துகொள்வாள், கொடூரமான தேனீக்கள்
கூட்டத்தால் கொட்டப்பட்டு அவள் செத்துப்போக வேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்து
கொண்டிருக்கிறேன்.”
“கேவலமாக இல்லையா உங்களுக்கு,” என்றாள் லாரா.
“உஸ்ஸ்,” என்று சொல்லிய மெல் தன் விரல்களை தேனீக்களைப் போல வைத்து அவற்றை
டெர்ரியின் தொண்டைக்கருகில் வைத்து சத்தமெழுப்பினார். பின், அவர் தன் கைகளை
உடலின் பக்கவாட்டில் கீழிறக்கினார்.
“அவள் கொடியவள்,” என்றார் மெல். “ஒரு தேனீ வளர்ப்பவன் போல வேசமிட்டுக் கொண்டு
அங்கு செல்லலாம் என நான் சில சமயங்களில் நினைப்பேன். தெரியுமில்லையா, முகத்தின்
முன்பாக வரும் தகட்டை உடைய ஒரு தலைக்கவசம் போன்ற அந்தத் தொப்பி, அந்த பெரிய
கையுறைகள், அந்த தடிமனான மேலாடை? நான் கதவைத் தட்டுவேன், ஒரு கூடு நிறைய
தேனீக்களை அந்த வீட்டிற்குள் விட்டு விடுவேன். ஆனால், முதலில் குழந்தைகள்
வெளியில்தான் இருக்கிறார்களா என்பதை நான் உறுதி செய்துகொள்வேன்.”
அவர் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டார். அதை செய்ய அவர் நிறைய நேரம்
எடுத்துக் கொண்டதைப் போலிருந்தது. பிறகு, அவர் இரு பாதங்களையும் தரையில் வைத்து,
முழங்கைகளை மேசையில் வைத்து, முன்னோக்கி சாய்ந்தார், தனது நாடியை தன் கைகளில்
தாங்கிப் பிடித்தபடி இருந்தார்.
“சரி, போனது போகட்டும், நான் குழந்தைகளை அழைக்கப் போவதில்லை. ஒருவேளை, அது
அப்படியொன்றும் நல்ல யோசனையில்லையோ என்னவோ? நாம் போய் சாப்பிடலாம், என்ன
தோன்றுகிறது?”
“எனக்கு சரியாகப் படுகிறது,” என்றேன் நான். “சாப்பிடலாம், அல்லது சாப்பிட வேண்டாம்.
அல்லது குடித்துக் கொண்டேயிருக்கலாம். என்னால் அப்படியே சூரிய அஸ்தமனத்திற்குள்
போய்விடக்கூட முடியும்.“
“அப்படியென்றால் என்ன அர்த்தம், அன்பே?,” என்று கேட்டாள் லாரா.
“அதற்கு நான் சொன்னது தான் அர்த்தம்,” என்றேன் நான். “அப்படியென்றால், என்னால்
அப்படி போய்க்கொண்டே இருக்க முடியும் என்று அர்த்தம். அவ்வளவுதான் அர்த்தம்.”
“நான் ஏதும் சாப்பிடலாமென்று நினைக்கிறேன்,” என்றாள் லாரா. “என் வாழ்க்கையிலேயே
இந்தளவு பசியாக நான் இருந்ததில்லை என நினைக்கிறேன். இங்கே கொறிப்பதற்கு ஏதும்
இருக்கிறதா?”
“நான் கொஞ்சம் பாலாடைக்கட்டியும் பிஸ்கட்டுகளும் எடுத்து வைக்கிறேன்,” என்றாள் டெர்ரி.
ஆனால், டெர்ரி அங்கேயே உட்கார்ந்திருந்தாள். எதையும் எடுத்து வருவதற்கு அவள்
எழுந்திருக்கவில்லை.
மெல் தன் கோப்பையைத் தலைகீழாகக் கவிழ்த்தார். அதை மேசையின் மீது கொட்டினார்.

“ஜின் தீர்ந்துவிட்டது,” என்றார் மெல்.
டெர்ரி கேட்டாள், “இப்போது என்ன செய்யலாம்?”
என் இதயம் துடிப்பதை என்னால் கேட்க முடிந்தது. எல்லோருடைய இதயத் துடிப்பையும்
என்னால் கேட்க முடிந்தது. அந்த அறை இருண்டு போன பொழுதும் கூட, எங்களில் ஒருவர்
கூட நகராமல், அங்கு உட்கார்ந்து நாங்கள் உருவாக்கிய மானுடக் கூச்சலை என்னால் கேட்க
முடிந்தது.

– ரேமண்ட் கார்வர்

Raymond Carver, Ridge House, Port Angeles, Washington. 1987.

 

 

தமிழில் – சுஷில் குமார்

Please follow and like us:

1 thought on “காதலைப் பற்றி பேசும்போது நாம் எதைப்பற்றி பேசுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *