திருஉத்திரகோசமங்கை ஒரு காலத்தில் புழுதிக்குள் கிடந்தது என்றால் யார்தான் நம்புவார்கள். இன்று துப்பாக்கிக் காவலுக்குள்ளும் சந்தனக்காப்பின் குளிர்ச்சியான இருளுக்குள்ளும் கதகதத்துக்கிடக்கின்ற நடராசனை நோக்கி, வாலை ஆட்டிக்கொண்டே சாதாரண தெருநாய் படுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்த காலமது. நெட்டித்தள்ளினால் முறிந்து விடுகின்ற தப்பைக் கதவுக்குள்ளிருந்து நடராசனும், “பின்ன அலைச்சலா..” என காலைத்தூக்கி நின்ற நிலையிலேயே கேட்டுக் கொண்டிருந்த மதியங்கள் அவை. எட்டிவயல் தாண்டியும் ஒரு கோர்வை பலூனோ பீப்பியோ விற்காத நாளிலெல்லாம் கிழவன், என்னை கோயில் மண்டபத்தில் உட்கார வைத்துவிட்டு மேலும் ஏழெட்டு கிலோமீட்டர்களுக்கு துருப்பிடித்த சைக்கிளை நகர்த்திச் செல்வார். அலங்காரமான பசுமைகளை கொளுத்தி எரிக்கின்ற கோடை நிலமது. அம்மா திருநெல்வேலி பக்கம். பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் அப்பாவும் படுத்த படுக்கையாக, கிழவனை நம்பியே நாங்கள் இருந்தோம். ஒரு மரம் கூட இல்லாத வறட்டு சமவெளிகளும் வானத்தை வெறிக்கின்ற பனைமரக்கூட்டங்களுமாக எரிக்கின்ற வெயில் என்பதைத்தாண்டி வேறு அணிகலனே இல்லாத எண்ணை வழிகின்ற முகம்போன்ற கிராமங்கள்.

இவ்வளவு வறண்ட – அதன் வழியான மூர்க்கத்தின் அழகிற்கு தன்னை பழக்கிக்கொண்ட – நிலத்தில் உத்திரகோசமங்கையின் மூன்று நெடிதுயர்ந்த தென்னைகளும், பச்சைப்பாசி குளமும், காய்ந்து வெளிறிய கோபுரமும் ஒரு வேண்டாத தேமலைப் போல வெயிலுக்குள் கிடக்கும். கிழவன் என்னை மண்டப கல்திண்ணையில் அமரச்சொல்லிவிட்டு சென்றுவிட்ட பின்னர் கல்தூணின் யாளி வாயினுள் கிடக்கும் கல்பந்தை சுழற்றிக்கொண்டே வெயிலைப் பார்த்தபடியிருப்பேன். சிலசமயங்களில் அந்திவரை. என்ன யோசித்தேன் என்றோ, தூங்கிவிட்டேனா என்றோ தெரியாத ஒரு மனக்கானல் உள்ளே ஓடிக்கொண்டேயிருக்கும். அம்மா அதனைத் திட்டுவாள், ”பராக்கு பார்க்காதே” என. ஆனால் நான் அப்படித்தான் இருந்தேன். எப்போதும் நான்கு நிமிடங்கள் தாமதிப்பவனாக.

பெரும்பாலும் நானும் கோவிலின் வெறிச்சிட்ட பிரகாரமும் தனியே கிடக்கின்ற மதியங்களில் உச்சிக்கால பூஜை முடிந்து சைக்கிளை உருட்டிக் கிளம்பும் ஓதுவார், “அம்மா ஊருக்குப் போவலியாடா?” என்றபடி நகர்வார்.

அம்மாவிற்கு தேரிக்காட்டிற்குள் ஒரு கிராமம்தான் சொந்த ஊர். திசையெங்கும் செம்மண் விரிந்து கிடக்கின்ற அந்த வனத்திற்குள் தாழம்புதர்கள் மிகுதி. அவள் ஊர்சென்று திரும்பும்போதெல்லாம் ஈரமான வேட்டிக்குள் பொதிய பொதிய தாழம்பூக்களை அள்ளிக்கொண்டு வருவாள். வந்த மறுநாளே என்னிடம் கொடுத்து வியாபாரத்திற்கு போகும்வழியில் உத்திரகோசமங்கையில் குடுத்துப்போகச் சொல்லுவாள். எங்களது கிராமத்திலிருந்து உத்திரகோசமங்கை பக்கமென்றும் தூரமென்றும் சொல்லமுடியாத தூரம். சைக்கிள் நிறைய பலூனும் பீப்பிகளும் பொதிகளாகக் கிடக்க, வயர்கூடையில் அதே ஈரத்துணிக்குள் தாழம்பூக்கள் வாசனை கசிய கூடவே வரும். வெயிலும் நிலமும் உக்கிரமாக புணர்ந்து கொண்டிருக்கின்ற அந்த வறட்டு சமவெளியில், அதன் மண் எரிகின்ற உலோக வாசனைக்கு நடுவே தாழம்பூவின் வாசனை திசை தவறிய சிறிய பறவையைப் போல பதறித் தவிக்கும். நான் போகும் வழியிலேயே அவ்வப்போது அதை எடுத்து முகர்ந்துபார்ப்பதுண்டு. அம்மா, “சாமிக்கு சாத்துவது. அப்படி செய்யக்கூடாது” எனச் சொல்லியே அனுப்புவாள். ஆனால் என்னால் அப்படிச் செய்யாமல் இருக்க முடியாது. மலர்ந்து பிரிந்துவிட்ட தாழம்பூவின் மெல்லிய குருத்துகளுக்குள் எங்கே அந்த வாசம் கசிகிறதென்றே தெரியாது. ஒரு நேரம் மிக மூர்க்கமாக சுவாசத்தையே அறுக்கின்ற அதன் வாசனை, சட்டென மிகத்தாழ்ந்து ஊதுவத்தியின் மெல்லிய புகையைப் போல தன்னை வெளிப்படுத்தி குழப்பத்திலாழ்த்துவதும் உண்டு. ஒரு பூவிற்குண்டான வர்ணத்தோற்றமே இல்லாத அதன் இருப்பே மர்மமான ஒன்றுதான். மர்மமான ஒன்றிலிருந்து வெவ்வேறு குரல்கள் எழுவதைப்போல, இருக்கிறதா இல்லையாவெனக் குழம்பச் செய்கின்ற விதமாக வாசனையும் வருகிறபோது அது மேலும் வசீகரமாகிவிடுகிறது. தாழம்பூவை நுகரும்போதெல்லாம் எனக்குள் நினைவுகள் அழிந்து, வாசனையைத் தேடி அலகுகளால் மண்ணைக்கிளறியபடி செல்கின்ற பறவையின் தீவிரம் வந்துவிடுகிறது.

அன்று நாங்கள் மதியம் தாண்டிய வேளையில் உத்திரகோசமங்கையின் அனாதை வீதிகளுக்குள் அலைந்து சலித்து கோயிலுக்குள் ஒண்டினோம். கற்தளம் முழுக்க இறங்குவெயிலின் தணுப்பு ஓடிக்கொண்டிருந்தது. கிழவன் வேர்வை பொங்குகின்ற உடலைத் துண்டால் அழுத்தித் துடைத்தபடி தூணிலேயே சாய்ந்துவிட்டார். சதைப்பிடிப்புகள் கரைந்துவிட்ட முகத்தில், மூடியிருந்த கண்கள் ஆமையோடுகளாகப் பதுங்கித் தவித்தன. அரைப்பங்கிற்கும் சுருக்கமான வியாபாரம். இன்னும் அலைச்சல் மீதமிருக்கின்றது. இதைவிட ஆவேசமாக, கொதிப்போடு எழுகின்ற ஏறுவெயிலோடு மோதியபடி நாங்கள் சைக்கிள் மிதிக்கும்போதெல்லாம் இந்த சோர்வோ களைப்போ எங்களை நெருங்குவதில்லை. சூரியனுக்குக் கீழே வியர்வை பொங்கப் பொங்க இலக்கே இல்லாமல் தூர நிலங்களை நோக்கி நாங்கள் வியாபார பொதிகளோடு விரையும்போது அதுவரை வெறுத்திருக்கின்ற கோடையின் ஜ்வாலைகள் எங்களையும் சக நெருப்புத் துண்டுகளாக மாற்றி பற்களைக் கடித்தபடி ஆவேசமாக சைக்கிளை மிதிக்க வைக்கும். ஆனால் நோயைப்போல படருகின்ற இந்த இறங்குவெயிலோ ஒரு சீக்கு பிடித்த விலங்கு. நமது காலுக்கிடையே அசிங்கமாக குழைந்தபடி நம் நடையைத் தாமதிக்கச் செய்யும் விலங்கு. கிழவன் இதனை அடிக்கடி சொல்வார். அவருக்கு இங்கே எல்லா கிராமங்களும் அத்துப்படி. கிழிந்த துணிகள் சிக்கி படபடக்கின்ற கருவேலம் காட்டிற்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்ற குடிசைகளை அதில் வாழ்கின்ற காய்ந்த பனம்பழம் போன்ற மனிதர்களை அவர் எப்படியாவது கண்டுபிடித்துவிடுவார். எதிலும் விருப்பமே இல்லாது வறண்டுவிட்ட அந்த மனிதர்களை ஏதேனும் பேசி, எப்படியாவது வாங்கவைத்துவிடுகின்ற கிழவனிடம், இரண்டு பொருளுக்கு நாலு பொருளாக எடுத்துவிட்டு கணக்கு கேட்டால் மீசையை நமட்டி கடித்தபடி யோசித்துக்கொண்டே இருப்பார். அதனாலேயே அம்மா என்னை கூடவே அனுப்பினாள். அதுவும்போக அம்மாவிற்கு அவர்மீது எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு.

சிறிய தூக்குப்போணியில் நீரள்ளி வர தெப்பம் பக்கமாக நடந்தேன். காற்றின் சிலிர்ப்பு ஓடாத பாசிபடிந்த குளத்துநீர் வெயிலுக்குள் அடங்கிக் கிடந்தது. ஒற்றைக் கால்தடம் தவிர மீதமிருந்த கற்தளங்களிலெல்லாம் காய்ந்த நாணல்கள் முழங்காலளவு நிமிர்ந்து நின்றிருந்தன. பாசி விலக்கி நீரள்ளித்திரும்பியபோது, மடப்பள்ளி அருகே மாடுகள் கட்டிக்கிடந்த வைக்கோல் படப்பினுள் அந்த முகத்தைப் பார்த்தேன். படப்பிற்கருகே ஒண்டியபடி தலைக்கு முக்காடிட்டு அமர்ந்தவளாக, லேசான வெப்பக் காற்றில் தன் முகத்தின் மீது வந்துவிழுகின்ற வைக்கோல் பிசிறுகளை உதாசீனப்படுத்தியபடி எங்கோ வெறித்தவாறு இருந்தாள். ஆட்களே இல்லாத நீண்ட பிரகாரத்திற்கு, ஆழம் பற்றிய பீதியை உணரச்செய்கின்ற பாசிபடிந்த குளத்திற்கு அருகே இவ்வளவு நேரம் என்னைப் பார்த்திருக்கக்கூடிய ஆனால் அதனை மறைத்துக்கொண்டிருந்த அவளது இருப்பு முதலில் சட்டென ஒரு பயத்தையே கொண்டு வந்தது. ஆனால் நான் என்ன செய்வதெனத் தடுமாறிக்கொண்டிருக்கும்போதே காய்ந்து உப்பு பரிந்த உடலைத் துணியால் தட்டியபடி கிழவன் பின்னாலேயே வந்துவிட்டிருந்தார். எனது பார்வை குத்தியிருந்த திசையை வெகுவேகமாக உன்னித்தவர், பிறகு “யாரது” என்றபடி நாணலை விலக்கியபடி முன்னேறி அருகே சென்றார்.

கிழவன் கொஞ்சம் திட்டியபிறகே அவள் அங்கிருந்து எழுந்து எங்களது சோற்றுப் போணிகள் இருந்த பிரகாரத்திற்கு வந்தாள். எனக்கு பசிக்கவில்லை. கிழவனுக்கு உடலை அலசியவுடன் வயிற்றுக்குள் பருக்கைகளைத் தள்ளிவிட வேண்டும். அவள் அமைதியாக எழுந்து பின் தொடர்ந்து வருவதை ஒருமுறை ஊர்ஜிதம் செய்தபிறகு, கிழவன் போணியைத் திறந்து உண்பதிலேயே குறியாய் இருந்தார். அவள் நீண்ட மரக்கதவுக்குப் பின்னிருந்த இருளுக்குள் தன்னை பதுக்கியபடி சுவற்றுக்கு சாய்ந்து கொண்டாள். நான் யாளியின் வாய்க்குள் கல்பந்தை சுழற்றியபடி இருளுக்குள் நீரைப்போல் ஆங்காங்கே ஒளிரும் அவளது முகத்தைப் பார்த்தபடியிருந்தேன். கிழவன் சாப்பிடும்போது எதையும் ஏறிடுவதில்லை. வாயில் அள்ளிவைத்த கவளத்தை நாயைப்போல தலைதாழ்த்தி சீராக மென்று, அதக்கி சாறுருஞ்சி, பிறகு தொண்டைக்குழி மேலெழும்ப உள்ளே தள்ளுவதுவரை அவர் நிமிர்வதேயில்லை. சிறிய மூடியில் அவளுக்கு அள்ளி வைத்த சோறு தொடப்படாமல் இருந்தது.

அவளது முகத்திலும் சேலையிலும் மிகச்சிறிய கரும்புள்ளிகள் பொட்டுகளாக சிதறியிருந்தன. அவள் மிக ஆழமாக எதையோ எண்ணிக்கொண்டிருந்தாள். யாளியின் கல்பந்தை சுழற்ற சுழற்ற எனது கண்கள் மேலும் மேலுமென அவளது முகத்தை உன்னித்தபடியிருந்தன. அம்மா இப்படி யாரையும் உற்றுப்பார்க்கக் கூடாதென்பாள். ஆனால் நான் என்னையறியாமலேயே குழிக்குள் விழுந்துவிட்ட யானைக்குட்டியைப் போல எதாவது ஒரு கணத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பேன். எதையோ திரும்பத்திரும்ப கண்களால் மனதிற்குள் பார்த்துக் கொண்டிருந்தாள். கூப்பிட்டால் கேட்காத ஒரு தூரத்தில், அவள் பார்க்கப்பார்க்க அது நடந்து கொண்டேயிருந்தது.

எனது உதட்டினோரம் ஒருதுளி சலவாய் வடிந்துவிட்டதை நான் மறந்திருந்தேன். மெல்லிய இருளுக்குள் மிதக்கும் அந்த கண்களுக்குள் நான் குட்டியானையைப்போல பரிதவித்துக் கொண்டிருந்தபோது, சட்டென அவள் எல்லாவற்றையும் உதறி மேலேறி வந்து என்னைப்பார்த்து புன்னகைத்தாள். வந்ததிலிருந்து அவளது முகத்தில் நிகழ்ந்த முதல் மாற்றம் அது. எனது கண்களை சட்டென அங்கிருந்து எடுக்க முடியாமல் திணறிய அந்த வினாடி வித்தியாசத்தில் அவள் மீண்டும் பற்கள் தெரிய புன்னகைத்தாள். நான் பதறியபடி தன்னிலை அடைந்தவனாக யாளியைக் கட்டிக் கொண்டேன். இறங்கு வெயிலின் வெதுவெதுப்பு இறங்கிய கல்யாளியின் உடலில் அப்போது மெல்லிய உயிர்த்தன்மை வந்திருந்தது. வயர்கூடை ஈரத்துணிக்குள் பொதியப்பட்டு கிடக்கும் தாழம்பூக்களிலிருந்து வாசனை ஒரு கொடியைப்போல எங்களைச்சுற்றி, பிறகு காற்றில் வால் அசைத்து நெளிந்து சென்றது.

சாப்பிட்ட கிறக்கத்தோடு தூணில் சாய்ந்து கண்மூடியிருந்த கிழவன், சட்டென தலையை முன்னுக்கு நகர்த்தி மோப்பம் பிடித்தார். அதைப் பார்த்தவுடன் அவள் உடலைக்குறுக்கி சுவற்றோடு அண்டிக்கொண்டாள். கிழவன் பதட்டமாய் முன்னகர்ந்து வந்து அவளது சேலையை, முகத்தை உற்றுப்பார்த்தார். அவரது கை இயல்பாக சேலை மீது தெளித்திருந்த கருந்துளிகளை தொட்டுப்பார்த்தது. லேசாக அதை சுரண்டினார். அவை துகள்களாக உதிர்ந்தன.

“ஏம்பிள்ள! என்ன காரியம்வே செஞ்சு வந்திருக்க!” யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை விசாரிக்கின்ற குரலும் முகமும் போய் கிழவனின் முகத்தில் கொந்தளித்த பதட்டத்தில் ஒரு தகப்பன் களை வினாடிகணம் வந்து சென்றது. அவள் ஒன்றும் சொல்லாமல் ஊளையிடுகின்ற குரலில் அழத்துவங்கினாள்.

“ராவும் பகலும் நரகம்யா. சொரணை எல்லாம் அத்துதான் இருந்தேன். இன்னிக்கு எப்படியோ எல்லாமே சிதறிடிச்சுய்யா.”

அவள் சொல்லச்சொல்ல கிழவன் கோவில் வாசலுக்கு வெளியே நீள்கின்ற மண்தடத்தில் ஆட்கள் வருகிறார்களாவென எட்டிப்பார்த்தபடியேயிருந்தார்.

“கொமருக எத்தினி?”

நரைத்த முடிகள் பொங்கிய கிழவனின் கையைப் பற்றியபடி தலை கவிழ்ந்து அரற்றிக்கொண்டே,

“ஒன்னுதாம்யா. பார்த்திபனூர் ஆஸ்டல்ல போட்டு படிக்கிறாய்யா. பொறுத்தது எல்லாம் அவளுக்கோசரம்தான்.”

நான் இன்னமும் யாளியோடேயே ஒட்டிக்கிடந்தேன். அவர்களது பதறலை என்னால் உணரவேயியலவில்லை. பிரகாரத்தின் இருள் மூலைகளிலெல்லாம் அவளது அழுகை மோதித் திரும்பிக்கொண்டிருக்க, நான் சற்று முன் என்னை புன்னகையுடன் ஏறிட்ட அந்த கண்களை, அப்போது எங்களைச்சுற்றி விரிந்திருந்த அமைதியின் கண்ணாடிப்பரப்பை இந்த அழுகை உடைத்துக் கொண்டிருப்பதை தவித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தேன்.

கிழவன் இயல்பாக வெளியே செல்பவரைப்போல ஒருமுறை வேட்டியை அவிழ்த்துக் கட்டியபடி வாசலுக்குச் சென்று பார்த்து வந்தார்.

“இங்கன உனக்கு வக்கீல் செலவுக்கு ஆள் இருக்கா?”

அவள் நிமிராமல் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள். பரப்பிக் கிடந்த எங்களது சோத்துப் பாத்திரங்களை ஒன்றுகூட்டி பையில் திணித்தவராக,

“மதுரை பக்குட்டு போய்க்கோ. எங்கியாச்சும் முறுக்கு கம்பெனி பக்கமா ஒதுங்கிக்கோ. புரியுதா?” என்றார்.

வயர்க்கூடையை அவர் எடுக்க முற்படும்போது நான், “அதுல தாழை கிடக்கு.” என்றேன். அவர் ஈரத்துணியோடு அதை வெளியே எடுத்து வைத்துவிட்டு, தனது துண்டை விரித்து சட்டைப்பையிலிருந்த ரூபாய்களை, நாணயங்களை அதில் எடுத்து வைத்து மடித்து வயர்கூடைக்குள் வைத்தார்.

என்னை ஏறிடாதவராக, “இந்த தாழைய உள்ள சன்னதி வாசல்ல வச்சிட்டு வாடா” என்றவாறே, அவளை, “ம். எந்திரி” என்றார்.

கையில் ஈரத்துணி சுற்றிய தாழையை நெஞ்சோடு வைத்துக் கொண்டவனாக நான் சன்னதி நோக்கிய இருளுக்குள் சென்றுகொண்டிருந்தேன். மூச்சையடைக்கச் செய்கின்ற வௌவால்களின் சவ்வு வாடையை மீறி கையிலிருந்து மணம் வந்து கொண்டிருந்தது. சன்னதிக்குத் திரும்புகின்ற முதலாம் முக்கு வாசலில் என் உயரத்திற்கு நின்ற யானை தாமரை குத்துவிளக்கில் கனத்த திரியில் தீ ஆடாமல் நின்று கொண்டிருக்க, நான் நுழையும்முன்பு ஒருமுறை வாசலை திரும்பிப் பார்த்தேன். வாசல் நிலையைத் தாண்டிவிட்ட கிழவனது பாதம் தெரிந்தது. அவருக்குப் பின்பாக, முக்காடுக்கு சேலையை உதறியபடி செல்கின்ற அவளது முகமும் தெரிந்தது. நல்ல வெளிச்சம்பட்ட முகத்தோடு அங்கிருந்து என்னை ஒருமுறை பார்த்து புன்னகைத்தாள்.

நான் இருளுக்குள் நின்றிருந்தேன். கையில் ஈரமான உடலும் ஞாபகத்தையே குழப்பிவிடுகின்ற வாசனையும் கொண்ட குருத்தான ஓருயிர் கமழ்ந்தபடி இருந்தது.

நாங்கள் அமைதியாக சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தோம். தூரத்தில் ‘கருவாட்டி வண்டி’ என்றழைக்கப்படும் பாசஞ்சர் ரயிலின் பிளிறல் கருவேலம்காட்டிற்குள் சிதறி மறைந்தது. கப்பி ரோடெங்கும் உதறியபடி செல்கின்ற சைக்கிளை பேலன்ஸ் செய்தவனாக,

“அவங்க எங்க?” என்றேன்.

கிழவனின் முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. கண்கள் கூர்மையாக பாதையைப் பார்த்தபடி, சைக்கிளின் நிதானமான வேகத்தை துளிகூட வீணாக்காமல் ஜல்லிகளை தவிர்த்து மாறிச்செல்ல பணித்தபடியிருந்தது. நான் மீண்டும் சத்தமாக,

“ட்ரெயின்லயா?” என,

அவர் நிமிராமல், “யாரு?” என்றார்.

“அந்தக்கா.”

“யாரு? பாதையைப் பார்த்து வா. நொடியா கிடக்கு.”

மெல்ல வேகமெடுத்து அவருக்கு இணையாக வந்தபடி,

“காசெல்லாம் குடுத்திட்டயா?”

அவர் பதில் சொல்லவில்லை. வெகுதூரத்தில் ரயிலின் ஹாரன் ஓசை வெயிலின் மீது துணியைப் போல மிதந்து வந்தது.

சைக்கிளிலிருந்த வியாபார பொதிகளை இறக்கிவைத்துவிட்டு, அம்மாவிடம் கிழவன் கணக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்: முழுவியாபாரமும் இன்று கடனில் போய்விட்டதாக. மெதுவான குரலில் கூறிவிட்டு அம்மா எரிச்சலாகத் திட்டுவதைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர எழுந்தவர் முன்பாக நின்றபடி, நான் அம்மாவிடம் அங்கே நிகழ்ந்ததை கனவில் பார்ப்பதைப் போல திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். மீந்திருந்த சரக்குகளை, கிழவன் தந்த நாணயங்களை எண்ணியபடி கணக்கினை சரிபார்த்துக் கொண்டிருந்த அம்மா அங்கிருந்து என்னை ஏசி விரட்டினாள்.

“எப்பப்பாரு தாழம்பூ வாசனை இழுத்துகிட்டு. சொல்லி வை குட்டி. அதுக்க வாசனை ஒரு தீட்டு. எங்கினயாச்சும் ஏங்கி நிக்க வெச்சுபுடும்.” என்றபடி வேட்டியை அவிழ்த்து மடித்து வைத்துவிட்டு, குற்றாலத்துண்டை கட்டிக்கொண்டு வீட்டுவாசல் கல்தொட்டியில் கிடந்த நீரை அள்ளி உடம்பு முழுவதும் தேய்க்கத் துவங்கினார்.

அன்று இரவுவரை,  அழுபவனைப்போல, கிழவனிடம் அது உண்மைதானென்று அம்மாவிடம் ஒப்புக்கொள்ளச் சொல்லி முணங்கிக் கொண்டேயிருந்தேன். கிழவன் எனது தலையைத் தடவிவிட்டபடி, “தாழம்பூ வாசனை ஆகாது கண்ணு” என்றார்.

அப்பாவிற்கு வாரமொருமுறை ஊசிபோட வருகின்ற காட்டாஸ்பத்திரி கம்பவுண்டர் நாவரசு அண்ணன் ஊசி போட்டுக்கொண்டே,

“கருங்குளத்துல போன வாரம் என்னாச்சி கேட்டீகளா? துண்டா புருஷங்காரன் தலைய வெட்டி வைக்கப்படப்புக்குள்ள வீசிட்டு ஓடிட்டா ஒருத்தி. ஆள் யார்னு நினைக்கறீங்க? நம்ம வர்கீஸ் டெய்லர்கடை வாசல்லயே எப்பவும் குடிச்சுட்டு கெடப்பானுகளே அந்த கூட்டாளிகள்ல ஒருத்தனாம். செத்து நாலு நாளைக்கப்பறம் தனித்தனியா போலீசு பெறக்கிட்டு போகுது. அவ இந்நேரத்துக்கு எங்கின தப்பி போய் ஒளிஞ்சிருக்காளோ?”

இந்த ஒரு வார இடைவெளியில் அந்த மதியத்தில் நான் பார்த்த நிகழ்வுகள் அனைத்தும் ஒருவேளை நானாக எண்ணிக்கொண்டதோ எனக்குழம்பி ஒரு வழியாக நானே சமாதானம் ஆகிக் கொண்டிருந்தேன். நாவரசு சொல்லிக்கொண்டிருக்கும்போது நானும் கிழவனும் வியாபாரத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தோம். பொருட்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்த கிழவனது கைகளையே நான் பார்த்தேன்.

சிறிய அட்டைகளில் கோர்க்கப்பட்ட மிட்டாய் சரங்களை கூடையொன்றில் ஒரே சீராக அடுக்கிக் கொண்டிருந்த அந்தக் கைகளின் இயக்கத்தில் துளி கூட தடுமாற்றமில்லை. நாவரசு சொல்வதை கேட்டதாகவே காட்டிக் கொள்ளாமல் அவை இயங்கிக் கொண்டிருப்பதை கிழவனது கண்கள் வேறு யாருடைய கையோ என்பது போல உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் கிழவனது தோளுக்குப் பின்புறமாக நின்றிருந்த என்னை, எனது குழப்பம் நீங்கிய முகத்தை தனது முதுகின் வழியே அவர் பார்ப்பதை நான் உணர்ந்தேன்.

அதன்பின் நீண்ட பருவங்கள் என்னைக் கடந்திருந்தன. அம்மா ”பராக்கு பார்க்காதே” என என்னைக் கண்டித்த பல சந்தர்ப்பங்களை நான் தாண்டி வந்திருந்தேன். ஏதேனும் ஒரு கணத்தை, நிறத்தை, சொல்லை இல்லையென்றால் யாருடைய அமைதியையாவது பராக்கு பார்ப்பவனாக, அப்படிப் பார்க்கின்ற நேரத்தில் அதன் கரை மீது உலவிவிட்டு வரத் தெரியாமல் அதன் சுழிகளுக்கு நீந்திச் செல்பவனாக அங்கே மீண்டும் மீண்டும் பிறப்பவனாக நான் காலத்தில் தேங்கிவிட்டவனாக நின்றிருந்தேன்.

அப்பாவின் மரணத்திற்குப் பிறகு வந்த மழைக்காலமொன்றில் எங்கோ கிளம்பிச் சென்ற கிழவன், பிறகு எங்களிடம் திரும்பவேயில்லை. அம்மா எண்ணியதுபோலவே நான் படிப்பிலும் தோற்றேன். ஒரு கட்டத்தில் என் மீதான நியாயமான பதட்டங்களையெல்லாம் அம்மா கைவிட்டாள். எனது முட்டாள்தனங்களின் காயத்தையெல்லாம் ஒரு மூன்றாவது மனுஷிக்கே உரிய பிளாட்பார கருணையுடன், “நீ இன்னும் கவனமாக இருந்திருக்கலாம்” என்பதோடு நிறுத்திக் கொண்டாள். வருமானத்திற்கு வழியேயற்ற அந்த பருவங்களில் வீட்டுச் சுவற்றில் அப்பி வளர்ந்த கீரைகளை கடைந்து உண்டோம். எவ்வித பிராதும் இல்லாமல் சிம்னி விளக்கில் வெளிச்சம் வைத்துவிட்டு, கொடூரமாக இருமியபடி அம்மா உறங்கச் செல்கின்ற இரவுகளில் நான் எனக்கு முன்னிருக்கின்ற நீண்ட நாட்களை பயத்துடன் எண்ணிக்கொண்டிருப்பேன்.

சாயங்காலத் தெருவில் வாசல் தெளிக்கின்ற புழுதிவாசனை மெல்லிய வெம்மையோடு தீண்டியது. வாயைத் துடைத்தபடி நிமிர்ந்து அமர்ந்தேன். அருகே புவனேஷ் இன்னமும் நாற்காலி விளிம்பில் தலையை பலிபீடத்தில் வைத்ததைப் போல உறங்கிக் கொண்டிருந்தான். கண்ணாடியை வேட்டி நுனியால் துடைத்துப் போட்டவாறே அவனது தோளைத் தட்டினேன். முதலாளி வருகின்ற சமயம். அவனது டேபிளின்மீது வாழையிலைக்கீற்றில் காய்ந்துவிட்ட சந்தனவில்லை இருந்தது. அவனது அம்மாவின் முதுகுத்தண்டுவட சிகிச்சைக்குப் பிறகு, தினசரி குளிர்ந்த நீரில் அதனைப் பொட்டளவு கரைத்துப் பருகச்சொல்லி யாரோ கூறியதால் உத்திரகோசமங்கையில் ஆள்வைத்துச் சொல்லி வாங்கிய, மேனியில் காப்பாக பூசி எடுத்த சந்தனம். அதனை என்னிடம் கூறும்போது அந்த நாலணா வில்லையை வாங்க அவன் தாஜா செய்ய அலைந்த முக்கியஸ்தர்கள் பற்றியும், பச்சை மரகத நடராசனைத் தாழம்பூ மணக்கப் பார்ப்பது எவ்வளவு அரிதென்றும் சொல்லிகொண்டிருந்த போது, எனக்குள்ளும் அந்த நிதான யானைக்குட்டி நடுத்தரம் தாண்டிய இந்த வயதுக்குள்ளிருந்து பாலக பருவத்தின் ஞாபகச் சரிவுக்குள் சருகுகள் அப்ப விழுந்திருந்தது.  எங்களைச்சுற்றியிருந்த ஸ்டீல் ரேக்குகளில் விதவிதமான குழந்தை விளையாட்டுப் பொருட்களின் குவியல். ஒரு நீண்ட பயணம் சென்றுவந்த களைப்பு மேலிட்டது. புழுதிப்படலம் படிந்த மாடிப்படிக்கட்டுகளில் இறங்கிக் கீழே வந்தேன்.

எழுகடல் தெருவில் நின்றிருந்த புராதானத் தூண்களின் வரிசைக்கப்பால் புதுமண்டபத்தின் முகப்பு சாயங்கால வெளிச்சத்தை வாங்கியபடி பழைய அழுக்கு தங்கநகைபோல துலங்கி விரிந்தது. எப்போதும்போல ஒரு புதியவனைப் போலவே அதை ஒரு கணம் பார்த்து நிதானித்தேன். பகவதியைத் திருமணம் செய்துகொண்ட கொஞ்ச நாட்களிலேயே அவளுக்கு என்னிடமிருக்கும் இந்த நிதானம் குடும்பத்தைக் கொண்டு செலுத்த உதவாது எனத் தெரிந்து கொண்டாள். இது அவள் பிறந்துவளர்ந்த ஊர். நீண்ட பொட்டல்வெளிகளில் சூரியனும் சந்திரனும் தவிர வேறு ஆச்சரியங்களையே வானில் தலைதூக்கிப் பார்க்காத ஒருவனுக்கு மதுரை எப்போதுமே தீராத ஒரு திருவிழா நிலம். பகவதி எனது குணத்தை அனுசரித்துக் கொண்டாள். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற பிறகும், உப்பு உறைப்பாக ஓடாத ஒரு ஆணை தாலிச்சரத்தில் தொங்குகின்ற ஊக்கை எடுத்து இரண்டாமவளின் சேலை மடிப்புக்கு தோள்பட்டையருகே கவனமாகக் குத்திவிட்டபடி அவள் வழிநடத்திக் கொண்டுதானிருந்தாள். முகம் கழுவிவிட்டு, சிறிய திருநீறு கீற்றலிலேயே தங்களை திருத்தமான முகங்களாக மாற்றிக் கொள்கின்ற பெண் பிள்ளைகள் எனது நிதானத்தை இன்னமும் ஆழப்படுத்தி விட்டார்கள்.

வடக்குக் கோபுரத்தின் மேலே மேகங்கள் உறைந்து நின்றிருந்தன. ஏதோ யோசித்தபடி காபி குடித்து முடித்துவிட்ட குவளையை வீசியெறியாமல் கோபுரத்தின் சுதை சிற்பமொன்றில் அயர்ந்திருந்தேன். கற்தள பிரகாரங்களில் குழந்தைகளின் அழுகை சிரிப்பு கூச்சல் எல்லாமே சிறிய குருவிகளாக பறந்து கொண்டிருந்தன. நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் வடக்கு கோபுரத்தின் வாசல்வழியே வெளியேறி வருகின்ற எண்ணற்ற முகங்கள் தெரிந்தவை போலவும் புதிது போலவும், மீன் வாயிற்குள்ளிருந்து வெளியேறும் முட்டைகளைப் போல, மாறிமாறி தோன்றி மறைந்தன.

பார்த்துக்கொண்டே கோப்பையை நசுக்கிப் போடப்போனவன் ஒரு கணம் தாமதித்தேன். பிறகு சற்றே உற்றுப்பார்த்தேன். எண்ணிலா முகங்களுக்குள் சில நொடி தென்பட்டு மறைந்த அந்த முகத்தை, அதன் சிரிப்பை இதற்குமுன் எங்கோ பார்த்திருக்கிறேன். அந்த மனிதனின் நேர்த்தியான உடைகளும் மிகத்திருத்தமான உடல்மொழியும் எப்போதோ என்னால் உன்னிப்பாகப் பார்க்கப்பட்ட ஒன்று. அப்படிப் பார்த்ததை எனக்குள் ஒரு தோல்வியாகக்கூட உணர்ந்திருக்கிறேன். ஆனால் இன்னமும் எனக்கு அடையாளம் தென்படவில்லை.

கோவிலுக்கு வெளியே சிதறிக்கிடந்த சிறிய கோவில்களில் ஒன்றான காலபைரவரின் தீப்பெட்டி அளவு கோவிலுக்குள் வயதான ஓதுவார் செவ்வரளி மாலைகளோடு நுழைந்ததைப் பார்த்தவாறே அந்த முகத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். சிறிய மின்விளக்கு கூட இல்லாத கருமை நிறைந்த கோவிலுக்குள் அந்த முதிய குரல் எதிரொலித்தபடியிருந்தது. தீச்சுடரின் முதல் வெளிச்சம் இருளுக்குள் ஒரு சொல்லைப் போல பிறந்து வந்தது. அது பற்றிக்கொண்ட திரியிலிருந்து கருவறை முழுக்க வெளிச்சம் தங்கத்தை உரசி ஊற்றியதைப்போல பூத்து வர, முழுக்க முழுக்க செவ்வரளி மாலைகள் சூடிய காலபைரவரின் சிலை நெருப்புத்துண்டங்களுக்குள்ளிருந்து தளும்பி மேலெழுவதைப்போல எழுந்து வந்தது.

அந்த முகம் குறித்த குழப்பத்திலிருந்து இந்த காட்சி தந்த மயக்கத்தில் நான் வெளியேறி விட்டிருந்தேன். மெல்ல புன்னகைத்தவாறே, கோபுரங்களில் வழிகின்ற காற்றை வாங்கித் திரும்புகையில், வடக்கு கோபுரத்தின் வாசல்வழியாக பகவதி வெளியேறிக் கொண்டிருந்தாள். அவளுக்கு வெகுதூரத்தில் மறைகின்ற அந்த முதுகைப்பார்த்து மெல்ல புன்னகைத்துத் தளர்ந்தவளாக எதிர்திசையில் நடக்கத் துவங்கினாள். ஒவ்வொரு சித்திரமாக வரிசைக்கிரமமாக யாரோ எனக்குள் அடுக்கிக்கொண்டே வருவதை பதறியபடி உணர்ந்தேன். அந்த தொடர்கண்ணிகளை அறுத்தெறியும் விதமாக, மிக ஆழமாக நான் நினைவழியும்படி தாழம்பூவை நுகர வேண்டுமென மனம் அரற்றியது.

***

-பா. திருச்செந்தாழை

Please follow and like us:

3 thoughts on “காப்பு – பா. திருச்செந்தாழை

  1. வனம் இணைய இதழில் எழுத்தாளர் பா.திருச்செந்தாழை எழுதியுள்ள ‘காப்பு’ என்னும் சிறுகதையை வாசித்தேன். அது குறித்த என் வாசிப்பு அனுபவம்.

    கடைசி வரை கதையை என்னால் கண்டறிய முடியவில்லை. திரும்பத்திரும்ப வாசிக்க அதன் வார்த்தைகளில் நான் தொலைந்து விடுகிறேன். கதையைக் கண்டறியும் முயற்சியில் எழுத்தாளர் பா.திருச்செந்தாழையின் மொழியில் மாட்டிக் கொள்கிறேன். ஆஹா எப்படியான மொழி அவருடையது என எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். அவர் கண்ட அந்தப் பெண்ணை நம்மையும் பார்க்க வைக்கிறார். நம்மால் அதை நம்பவே முடியவில்லை. நம்பாமல் தப்பிக்கவும் முடியவில்லை. மீண்டும் ஒருநாள் என்னைத் தயார்படுத்திக் கொண்டு கதையை வாசித்துக் கண்டறிவேன். அதுவரையில் இம்மொழியின் போதையில் மிதந்து கொள்கிறேன். கூடவே ‘காப்பு’ கதையில் நான் சிக்குண்ட மொழிவலைகளில் ஒன்றில் உங்களையும் சிக்க அழைக்கிறேன்.
    ///மலர்ந்து பிரிந்துவிட்ட தாழம்பூவின் மெல்லிய குருத்துகளுக்குள் எங்கே அந்த வாசம் கசிகிறதென்றே தெரியாது. ஒரு நேரம் மிக மூர்க்கமாக சுவாசத்தையே அறுக்கின்ற அதன் வாசனை, சட்டென மிகத்தாழ்ந்து ஊதுவத்தியின் மெல்லிய புகையைப் போல தன்னை வெளிப்படுத்தி குழப்பத்திலாழ்த்துவதும் உண்டு. ஒரு பூவிற்குண்டான வர்ணத்தோற்றமே இல்லாத அதன் இருப்பே மர்மமான ஒன்றுதான். மர்மமான ஒன்றிலிருந்து வெவ்வேறு குரல்கள் எழுவதைப்போல, இருக்கிறதா இல்லையாவெனக் குழம்பச் செய்கின்ற விதமாக வாசனையும் வருகிறபோது அது மேலும் வசீகரமாகிவிடுகிறது. தாழம்பூவை நுகரும்போதெல்லாம் எனக்குள் நினைவுகள் அழிந்து, வாசனையைத் தேடி அலகுகளால் மண்ணைக்கிளறியபடி செல்கின்ற பறவையின் தீவிரம் வந்துவிடுகிறது. ////
    – தயாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *