குலசாமிக் காத
1.
வேலிக்காத்தான் இருமருங்கும் காய்ந்துகிடக்க
ஒற்றையடி வெண்பாதை இட்டுச்செல்வது
தேவியர் வீற்றிருக்கும் இலுப்பை மரத்தடிக்கே
சுண்ணம் சுதை மண் குதிரைகளில்
ஏழுபூமிகளில் வலம் வருபவர்களை
இரவாட்டத்தில் வேடமுரிப்பான் கட்டியக்காரன்
நெடிது வளர்ந்த ஒதியன் மரங்களில்
கூகைக்கண் விழித்திருந்து
போவோர் வருவோரைப் பார்த்திருக்கவென
அவனை அனுப்பி வைத்திருந்தாள்.
காதில் குண்டலமாகக் குழவியை அணிந்த
முதுபெண்ணொருத்தி
காத தூரம் கடந்தேறுபவர்கள்
தாதுவருடப் பஞ்சக் கதைகளைப் பேசுகிறார்கள்
இலுப்பைப் பூக்களும் இரவின் நெடியும் மீறிய
நரவாசம் விரவ திருக்கண் மலர்கிறார்கள் தேவியர்கள்
2.
எதிரெதிர் புறம் திரும்பிய இரு அன்னப்பட்சியின்
தலைகளைத் தன் தலையாகக் கொண்டவள்
வலக்கையில் யானைத் தலையையும்
இடக்கையில் பன்றித் தலையையும் ஏந்தி
எத்திசைச் செல்வதெனத் தெரியாது குழம்புகிறாள்
வடக்கிருந்தோர் திரும்பவும் திரும்பவும்
வடக்கிருக்கும் திசை தென்திசையாலானதென
சூலிப்பெண் குறிதரித்துப் போகிறாள்.
பனைவிடலிகளில் கருந்தேள்கள்
கூடுகட்டும் சூட்சமம் அறிந்தவளாக
கிளிகளின் நிறத்தை சமிக்ஞையாக்கிப்
பாதுகாக்கிறாள் பூதகி.
3.
கேழ்வரகுக் களியும்
மரவள்ளிக் கறியும்
கலந்துப் பிசைந்து
உதடொழுக உண்கிறாள் மலையத்தி
கோடை அறுவடைக்காகத் தானியங்களைக்
பால்கதிர் முதலே விட்டுவைத்த
ரீங்கரிக்கும் சிட்டுக் குருவிகளை
இறைத்த மண்மேட்டிலிருந்து
ரீங்காரக் கருவியை இசைத்தபடி
அழைத்துக் கொண்டிருக்கின்றன
விக்கிரமாதியனின் பதுமைகள்
நச்சு மலரும் பூக்களில்
மகரந்தங்களை உண்ணும்
தேனீக்களை
வேற்று நிலத்துப் போருக்கென
தயார்நிலையில் வைத்திருந்தான்
சோழிகளை உருட்டிக்குறி சொல்லிவிட்டு
வேறு நிலம் போனவன்
திரும்பவேயில்லை.
4.
சித்திரை முழுநிலா
காலை உண்ணா நோன்போடே
மூன்று தலைக்கட்டுக்கு
உணவு தயாரிக்கிறாள் அமிர்தம்
நெல்சோறு கிடைக்கும் பொன்னாளது
கூடிப்பேசி ஆவணி பதினான்கில்
கூத்து நடத்த உத்தமம்
மெய்யூரு சாராயம் பல ஊரு பவணி வர
சேவலும் கோழியும் ஆடும் மாடும் பன்றியும்
தீணி மேய்ந்து வளர்ந்தன
5.
மஞ்சள் துணி
வேப்பிலை மாலை
வெண்கலச் சொம்பு
வெண்ணூல் பிரி சுற்றி
தலைமீது சுமந்து வரும்
கன்னிமைக் கழியா மாதரும்
அலகுவேல் குத்தி ஊஞ்சலாடும் ஆடவரும்
ஒருசேரச் சந்திக்கும் பங்குனி நண்பகல்
வெய்யோன் வேக
ஊர்வளம் பெருகக்
கோடை மழையாய்
உதிரத் தொடங்கினாள் அன்னை.
6.
தேவியின் அருகில்தான் பெருங்கரையானின் புற்று
வசதிக்காகச் சுருண்டு படுத்திருக்கிறது காலப்பாம்பு
படையலுக்கெனக் கொண்டுவந்த எலுமிச்சங்களை
சூலமும் வேலும் பதம்பார்க்க வழிகிறது குங்குமச் சிவப்பு
முதுகிலடித்துக்கொண்டு வாக்குச் சொல்லும் மீசைக்காரன்
ஆயுதங்களைக் கோருகிறான்
ஆளுக்கொரு ஆயுதத்தைப் புற்றிலிருந்து உருவுகிறார்கள்
கசியும் குருதியோடு நெளிகிறது காலப்பாம்பு
பரிதி மறையும் வேளை
ஏற்றப்பட்ட விளக்கின் பிரகாசம் பச்சையாய் விரிகிறது
தேவி தன் அகலபாரத்தைப் பச்சைப் பிரகாசத்தால்
மூடிக்கொண்டாள்
மீசைக்காரனின் வாக்குப் பலிப்பதாகத்
தெற்கிலிருந்து உருவான கருமுகில்களைக் கண்டு
வணங்கலாயினர்
7.
ஆண்டு பலவாக வயிற்றில் புழுபூச்சி காணாதவள்
ஊர்தாண்டி ஆற்றங்கரையில்
உறங்கிக்கொண்டிருக்கும் ஆலமரத்தாண்டி சமாதியில்
நெய்தீபம் ஏற்றப்போனவள்
கருவுற்றாள் என்கிற கதை
ஊரெல்லாம் பரவிற்று
அலர், அம்பல் ஆகி
கல்லொன்றை நட்டுவைத்தான் மாத்தன்
சிறு புல்மாலையும் மஞ்சளும் சேப்பும் பூசி
நாளும் அக்கல்லைப் பூஜிக்கக்
புள்ளை கொடுத்தான் பாறையாயிற்று அக்கல்
மூன்று தலைக்கட்டும் சாமி கும்மிடப்போகும் முன்
பாறை தாண்டித்தான் போகவேண்டும்.
8.
காய்ந்த புளிய மெலாருகளைக் குவித்து எரியவிட்டு
குளிர்காய்கிறார்கள் சிறுவர்கள்
திருவிழா மாட்டுத்தோல் பறையைக் காயவைக்கிறான் காசாம்பு
தண்ணீர் சேந்திய கிணற்றடியில் மேயும்
பன்றிகளைத்தான் அப்பத்தாவுக்குப் பிடிக்கிறது
பனி தங்கிய வெள்ளைப்பூண்டின் காய்ந்த
சருகுகளிடையே வெறிபிடித்தபடி ஓடும்
காளியம்மாளுக்கு இது ஒன்பதாவது பிரசவம்
பசிக்கு மரவள்ளிக்கிழங்கை மட்டுமே உண்டு
வாழ்ந்த கூட்டத்துக்கு
நெல்சோறு என்றென்றும் வாய்க்க
ஊர்க்கோடித் தெற்குத் தெருமுக்கில்
மாவிலைத் தோரணம் மஞ்சள் பூசி
பந்தக்கால் நட்டாயிற்று
ஆடிப்பட்ட மேகம் பிரசன்னமாயிற்று.
9.
சோழிகளைத் தாடிக்குள் வைத்திருந்த
வள்ளுவப் பண்டாரம்
கைவிரித்துக் கட்டங்களில் விட்டான்
ஊஞ்சலில் இளைப்பாறும் தொட்டில் பிள்ளைகள்
வீரிட்டலற கோபுரமென தழல் எரிந்தது
ஆறாம் தலைமுறைப் பழிசொல்லொன்று
தீயுருக்கொண்டு வம்சவிருத்தியைத் தடுக்கிறதென்றும்
தீப்பாய்ஞ்ச குருவனுக்கு எருக்கம்பாலில் திரித்த
நூலாம்படை மாலை அணிவித்தால்
சாபம் தீருமெனவும்
ஆறுவார காலத்துக்குக் கவிச்சி கூடாதென்றும்
முடிவாயிற்று
ஊரெங்ஙகும் இரத்த வாடை நீர்த்தது .
10.
ஆரு செய்த குத்தமென அறியோம்
மேல் நாறும் உள் சோறும் சேர்ந்து
ஈரமாக வளரும் வாழையாகத்தான்
வாழ்ந்து வருகிறோம்
கருணை கூர் மலர்க்கண்ணே
அருள் புரிவாய்
நின் மலர்த்தாளில் எங்கள் சிரசுகள் வீழ
அடைந்தோம் பேரின்பம்
சரணம்,சரணம்,சரணம்.
***
-தாமரை பாரதி