வாழ்வென்னும் கதை
உலகப் புகழ்பெற்ற
மாய யதார்த்தவாதப் புதினம்
ஒன்றில்
இடம் பெற்றிருந்த
மறக்கமுடியாத
கதாப்பாத்திரம்
அவள்.
அலட்சியமாகவொரு
கம்பளித் துணியை
தேகத்தில் போர்த்தியபடி
அலைந்து திரியும்
அவளுடைய அழகு
அவ்வூரின் ஆண்கள்
பலரையும் சித்தம் பேதலிக்கச் செய்தது.
அவள் தோட்டத்தில் உலவச் செல்கையில்
எண்ணிறந்த மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்
சூழ்ந்துகொள்கின்றன.
அவள் மீது
அளவிறந்த நேசம் கொண்ட
இசைக் கலைஞன் ஒருவன்
இரவு முழுவதும்
பனியில் நனைந்தபடி
விடியும் வரை
அவள் வீட்டு ஜன்னலின்
கீழ் நின்றவாறு
கீதமிசைத்தவாறிருக்கிறான்.
குளிக்கும் போது
கூரையின் ஓட்டை பிரித்து,
அவளுடைய நிர்வாணத்தை
காணும் முயற்சியில்
தோற்று
பிடி நழுவி விழுந்து
மரித்துப் போகிறான்
மற்றொருவன்.
இவ்விதமாகப்
பித்துற்று தன் பின்னால்
அலைகழியும் ஆண்களை
ஒரு பொருட்டாகக் கருதாமலும்
அதற்குக் காரணமான
தன் வசியசக்தி குறித்த
தன்ணுர்வு ஏதுமின்றியும்
அரியதொரு காந்தக்கல் போல்
அவள் தன்னியல்பில் மிளிர்ந்துகொண்டிருந்தாள்.
புனைவின் போக்கிற்கு
உதவாது
உலகியல் இச்சை
ஒன்றுமில்லாமல்
உலவி திரிகிறவளை
எழுத்துக்குள் வைத்துக்கொண்டு
என்ன செய்வதெனப் புரியாமல்,
கடைசியாகக்
கதையின் பாதியில்
பறக்கும் கம்பளமொன்றில்
ஏற்றி அனுப்பிவிட்டு
அவளைக் காணாமலாக்கி விடுகிறார்
கதாசிரியர்.
வருடங்கள் கடந்த
பிறகொரு பேட்டியில்
‘தெய்வத்தின் அம்சம் போலும் உருக்கொண்டுவிட்ட
அப்பாத்திரத்திற்கு
பூமியில் வசிக்கும்
எளிய மனிதர்களுக்குரிய
எந்த முடிவும் பொருந்தாது
என்பதாலேயே
தேவதைக் கதைகளில்
வருவது போல்
அவ் அழகியை
அடி வானத்தில் பறந்து போகவிட்டு
படிப்பவர்களின்
பார்வையிலினின்றும்
மறைந்துபோகச் செய்தேன்!’
என்றவர் விளக்கம்
தந்திருந்ததை
பத்திரிகை ஒன்றில்
படித்தபோதும் எனக்கது
அவ்வளவாக உவக்கவில்லை.
பின்னொரு பொழுதில்
என் வாழ்வில்,
மின்னி மறையும்
விண்மீன் போலும்
பெண்னொருத்தி
தன்னியல்பாய் வந்து, தடயமேதுமின்றி
மறைந்து போனபோதுதான்
தெளிந்தேன்;
உய்த்துணரவும்
உணர்ந்ததை
உள்ளபடிச் சொல்வதற்கும்
கதையைக் காட்டிலும்
வாழ்வுதான் அதிகமும் புனைவாயிருக்கிறது.
( கவிஞர் சுகுமாரனுக்கு )
உருமாற்றம்
ஒரிரு
நாட்களுக்கு மேல்
காத்து வைத்திருக்க முடியாத
உணவுப் பொருளை
வீணாக்க
வேண்டாமென்று,
தேவைக்கும்
அதிகமாக இருந்ததில்
சிறு துண்டைத்தான்
அந்தக் குட்டிக்கு
கொடுத்தீர்கள்!
மீந்ததைதான்
தந்தீர்கள்
என்பதறியாமல்,
அன்பென்று மயங்கி
அவ்வளவு தொலைவுக்கு
வாலாட்டியபடியே
உங்கள் பின்னோடி
வந்துவிட்டது.
விரட்டினாலும்
போகமாட்டேனென்று
அடவாதமாய்
காலடியில் மருகி நின்ற
கனிவைக் கடைசியில்
இரக்கமின்றி எட்டி உதைத்துதான்
துரத்த வேண்டியதாயிற்று.
அம்மட்டில் தொல்லை விட்டதென்று
நீங்கள்
அடுத்த வேலையை பார்க்க போயிருந்தால் சரி.
அல்லாமல்
துரத்தியும் போகாமல்
தூரத்தில் இருந்தவாறே
ஏக்கத்துடன் நோக்கிடும்
அதன் கண்களை மாத்திரம்
ஒரு கணம்
திரும்பிப் பார்த்துவிடக் கூடாது!
அச் சிறிய பிசகுதான்
அதன் பிறகு,
வாழ்வு நெடுகிலும்
போனால் போகிறதென்று
உங்களுக்கு ஈயப்பெறும்
ஒவ்வொரு துளி
அன்பிற்கு பின்னாலும்,
வெகுதொலைவு
மூச்சிரைக்க ஒடி
ஏமாந்து திரும்பவருகிற
அசட்டு மிருகமாக
அடியோடு உங்களை மாற்றிவிடும்.
மூன்று வாத்துகள்
சிநேகிதி
அனுப்பிவைத்த
சித்திரமொன்றில்
முன்பின்னாக
மூன்று வாத்துகள்
நடந்துகொண்டிருந்தன.
முதல் வாத்தின்
முன்னால்
எட்டிய தொலைவு வரை
ஏதுமற்ற வெட்ட வெளி;
தான் போகும்
பாதை சரியானதுதானா
என்கிற பதட்டம்
அவ்வப்போது
அதற்கு எழுந்தடங்கியது.
இரண்டாவது வாத்திற்கு
இதுபோன்ற குழப்பம் எதுவுமில்லை
முன் செல்லும் வாத்தும்
பின் தொடரும் வாத்தும்
தன் பாதுகாப்பில்
பத்திரமாகப் பயணிப்பதாக
அது அறுதியாக நம்பியது.
மூன்றாவது வாத்துதான்
உள்ளதில் சிறியது,
அனுபவம் அதிகமில்லாதது.
அது
தன்னை முன்னிட்டு
தனக்கு பின்னால்
வாழையடி வாழையாக
வரவிருக்கும்
வாத்துகளின் கூட்டத்தை
வழிநடத்திசெல்வது
பற்றிய
கனவில் மூழ்கியபடி
உற்சாகத்தோடு நடந்தது.
இவ்விதமாகவே
மூன்று வாத்துகளும்
முப்பது எட்டுவைப்பதற்கு
முந்நூறு யோசனைகளுடன்
நடந்த தடம் தேய்ந்து
தெருவாகி அகன்று
மூன்றும் பத்தும் பெருகி முப்பதாயிரம் வாத்துமடையர்கள்
முண்டியடித்துப் பயணிக்குமொரு
பெரு வழியாயிற்று.
அழகாக இருக்கிறதென
அனுப்பித் தந்த அந்த வாத்து,
அதைப் பெற்றுக் கொண்டு
அதில் எதையோக் கண்டு
எழுதிய இந்த வாத்து,
பொழுது போகாமல்
இதைப் படிக்கிற எந்த வாத்துமென
ஆக மொத்தம்
மூன்று வாத்துகள்…
அப் பாதையை கடக்கத் தெரியாமல்,
சிறகுகள் இருந்தும் பறக்கத் தயங்கி நிற்கின்றன.
***
-க. மோகனரங்கன்