“மலைப்பாம்ப வச்சுக் கும்பிட்டா அதிர்ஷ்டம்னு சீனனுங்க சொல்லுவானுங்க,” என்றான் வீரா.

அடுக்குமாடி வீடுகளின் தாழ்வாரங்களில் பிற்பகல் நேரங்களில் கனமாய்ப் பதிந்துகிடக்கும் நிழல்களைப் போன்ற நிறம். நீளமான முகம். தொங்கு மீசை. சின்ன சிக்கு பழங்களாய்ப் பொங்கி நிற்கும் மஞ்சள் நிறக் கண்கள். தனது கையில் வைத்திருந்த கோணிச் சாக்கை அவ்வப்போது பார்த்துக் கொண்டான். சாக்கின் நுனி சுருக்குப் போட்டு இறுக்கமாய்க் கட்டப்பட்டிருந்தது.

“அதுக்காகக் கையில கிடைக்குற பாம்ப எல்லாம் வீட்டுக்கே கொண்டு வந்திருவியா நீ?”

சமையலறை மேசைமீது விரிக்கப்பட்டிருந்த பூப்போட்ட பிளாஸ்டிக் விரிப்பில் முழங்கையை ஊன்றியபடிச் சாய்ந்து அமர்ந்திருந்த இளஞ்சேரன் தன் நீளமான கால்களை நீட்டி அவன் அணிந்திருந்த மலிவான தோல் சப்பாத்தின் நுனியால் சாக்கின் அடிப்பகுதியை வருடிக் கொடுத்தான். வீராவைவிட நல்ல கறுப்பு. மண்டையோட்டோடு ஒட்டிப் பின்வாங்கி கழுத்தைத் தாண்டியும் வழிந்து கொண்டிருந்த சுருட்டை மயிர். உடம்பில் இருந்த ஈரப்பசை, கொழுப்பு அனைத்தையும் உறிஞ்சி எடுத்ததைப்போல் அவன் உடம்பும் முகமும் வற்றிப்போயிருந்தன, முன்னே துருத்திக் கொண்டிருக்கு நெற்றிக்குக் கீழே இடுங்கிப் போன மிகச் சிறிய கண்கள். அவை ஓயாமல் இங்குமங்கும் அசைந்து கொண்டே இருந்தன. அப்படி அவ்வப்போது அசையும்போது தெறிக்கும் வெளிச்சத்தில் மிகப்பெரிய விஷமமும் வன்மமும் கலந்திருந்தது.

“நான் என்ன செய்யுறதாம்? வேலை முடிஞ்சு வரப்ப அள்ளூருல படுத்துகிட்டு இருந்துச்சு. காத்தால ஆறே முக்கால் மணிங்கிறதால நல்ல வேளையா இங்க மார்க்கெட்டுல கடை வச்சிருக்குற சீனனுங்க எவன் கண்ணுலயும் படல. இல்லனா ஒரே லபக்கா அள்ளிகிட்டுப் போயிருப்பாங்க. நான் விடுவேனா? உடனே பக்கத்துல நிக்குற குப்பத் தோம்பு ஓரமா கெடந்த காய்கறிச் சாக்க எடுத்து இதை அள்ளிப் போட்டுகிட்டு வந்துட்டேன்.”

“நீ போய் அள்ளிப்போட்டு வரவரைக்கும் பாம்பு சும்மா ஈயினு பல்லிளிச்சுகிட்டுக் காலை விரிச்சு மல்லாந்து படுத்துகிட்டு இருந்துச்சி.”

இளஞ்சேரனின் கட்டைக் குரலில் புதிதாய் ஊற்றிவைத்த பீரின் அடியிலிருந்து கிளம்பும் குமிழ்களைப்போன்று கொப்புளிக்கும் நையாண்டி. பீரின் நிறம்போல் சமையலறை ஜன்னலில் காலை வெயில் ஏற அவன் முகத்தில் பிரகாசம் கூடியிருந்தது.  வீரா கோணிச் சாக்கைச் சமையலறை மேஜைமீது வைத்துவிட்டுத் துறைமுகத்தில் கொடுத்திருந்த நீல நிற மேலங்கியின் பட்டன்களை விடுவித்து அதிலிருந்து ஒவ்வொரு காலாய் எடுத்து வைத்து வெளியேறிக் கொண்டிருந்தான்.

“என்னாலா நீ? அள்ளூருல பாம்பு கிடந்துச்சுனு சொல்றன். நம்ப மாட்டேங்குற?”

வீரா சொன்னதை இளஞ்சேரன் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. எதிரில் தெரியும் எதிலோ மனம் பறிகொடுத்தவனாய்ப் பேசத் தொடங்கியதிலிருந்து முதன்முறையாகச் சிறிதளவு ஆர்வத்தோடு அவன் அமர்ந்திருந்த சமையலறை ஜன்னலின் வழியே வெயியே தெரியும் குட்டையான அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். பிரதானச் சாலைக்குக் கொஞ்சம் உள்ளே தள்ளி நீளவாட்டில் வரிசையாகப் பிரிட்டிஷ்காரர்களால் அந்தக் காலத்தில் துறைமுகத் தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்ட குடியிருப்புக்கள். காலை எட்டு மணி வெயிலில் கண்ணைப் பறிக்கும் வெள்ளை வெளேரென்று.

குடியிருப்புக்களில் எதுவும் ஐந்து மெத்தைகளுக்கு மேல் இருக்கவில்லை. கட்டடங்களில் உருவாக்கப்பட்டிருந்த குருவிக் கூட்டைப்போன்ற சிறு சிறு ஓரறை அடுக்குமாடி வீடுகளின் சமையலறைகளில் மற்றக் கட்டடங்களைப் பார்க்கும்படிக்கு ஜன்னல்கள் இருந்தன. வெயிலில் பளபளக்கும் அத்தனை ஜன்னல்களும் தன்னையே உறுத்துப் பார்க்கும் ஆயிரம் கண்களைப்போல இளஞ்சேரனுக்குத் தோன்றின. தனது அடிவயிற்றில் புரளும் ஓர் அசைவாக இளஞ்சேரன் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தான்.

அந்த ஜன்னல்களில் நின்றுகொண்டு வெவ்வேறு கட்டடங்களில் குடியிருக்கும் மத்திய வயது பெண்மணிகள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதை இளஞ்சேரன் கேட்டிருக்கிறான். பெரும்பாலும் அவர்களுடைய கணவர்கள் காலையில் வேலைக்குப் போன பிறகுதான் பெண்கள் அப்படிப் பேசிக் கொள்வார்கள். துவைத்த ஈரத் துணிகளை நீளமான மூங்கில் கழிகளில் தொங்கப் போட்டுக் காய வைப்பதற்காக ஒவ்வொரு சமையலறை ஜன்னலின் வெளிப்புறத்திலும் ஆறு இரும்புக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.  சமையலறைக்குள் இரண்டு நாற்காலிகளைத் தூரமாகத் தள்ளி வைத்து, அதில் பலவிதமான வண்ணங்களில் இருக்கும் மூங்கில் கழிகளைக் கிடத்திக் குளியலறையில் சோப்புப் போட்டுத் துவைத்த துணிகளைத் தொங்கப் போடுவார்கள். ஈரம் சொட்டிக் கொண்டிருக்கும் துணிகளைச் சுமந்த நடுப்பகுதி லேசாய்க் கீழ்நோக்கி வளைய மீன்பிடிக்கும் தூண்டிலைப்போல மூங்கில் கழிகளைக் கை வலிக்கச் சுழற்றி ஜன்னலுக்கு வெளியே கொண்டு வந்து குழாய்களுக்குள் பொருத்தும் நேரத்தில்தான் பெண்களின் காலை நேரச் சம்பாஷணைகள் நடக்கும். சாயங்கால நேரங்களில் காய்ந்த துணிகளை உள்ளே இழுத்துக் கொள்ளும் போது பெண்கள் மீண்டும் கதையளக்க ஆரம்பிப்பார்கள்

சமையலறை ஜன்னலின் பச்சை நிற இரும்புச் சட்டம் எதிரிலிருந்த வீடுகளில் காய்ந்து கொண்டிருந்த பல்வேறு நிறமுள்ள துணிகளை இளஞ்சேரனுக்கு ஒரு ஓவியமாய்க் காட்டின. அந்த நேரத்தில் கொஞ்சம் பலமாகவே எழுந்த காற்றில் வண்ணக் குழம்பாய், பலவிதமான நிறங்களின் சமுத்திரமாய்ப் பொங்கி அடங்கிக் கொண்டிருந்த துணிகளில் அவன் எண்ணம் மூழ்கிவிட்டிருந்தது. காலை எட்டு எட்டரை மணிக்குத் தினமும் இந்தக் காற்றுத் துறைமுகம் இருந்த தெற்குத் திசையிலிருந்து எழுவதை இளஞ்சேரன் வீட்டிலிருந்த இந்த இரண்டு வாரங்களில் கவனித்திருக்கிறான். ,மூங்கில் கழிகளை விசிறி இரும்புக் குழாய்களுக்குள் பொருத்த தெறிக்கும் நீர்த்துளிகளிலிருந்து தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ள புறங்கையை முகத்துக்கு நேராய் நீட்டியபடிப் பேசிக் கொண்டிருக்கும் பெண்கள் இளஞ்சேரனின் கண்களின் முன்னால் வந்து போனார்கள். அவனும் வீராவும் இருந்த வீடு இரண்டாம் மாடியிலிருந்தது. நாற்காலியிலிருந்து கொஞ்சம் உடம்பைத் தூக்கி ஜன்னல் வழியாகக் கீழே பார்க்க வீடுகளிலிருந்து வீசி எறியப்பட்டிருக்கும் உணவு கழிவுகளைக் காகங்களும் பூனைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தின்று கொண்டிருப்பது கண்களுக்குத் தெரிந்தது.

ஒவ்வொரு சமையலறையிலும் குப்பையை வீசுவதற்காகச் சுவரில் ஒரு குழாயைப் பொருத்தியிருந்தாலும், அந்தக் குழாயின் கனமான இரும்பு மூடியை இழுக்கச் சோம்பல்பட்டு அந்தக் குடியிருப்பில் வசித்தவர்கள் எல்லோருமே சமைக்கும்போது மீந்த காய்கறிச் சீவல்களிலிருந்து பல நாள் வைத்து லேசாய் நாற்றமெடுக்க ஆரம்பித்திருக்கும் சோறுவரைக்கும் சமையலறை ஜன்னல்களின் வழியாகவே தூக்கிப் போடவே செய்தார்கள். அப்படித் தூக்கி எறிந்துவிட்டு ஜன்னலோரமாகவே இருந்த தண்ணீர்க் குழாயில் தட்டுகளையும் பாத்திரங்களையும் கழுவுவது சௌகரியமாக இருந்தது. அப்படிப் பழைய உணவுப் பொருள்கள் கொட்டிக் கிடந்த கட்டடத்தின் பின்புறப் பகுதிகளையே வீட்டுக் குப்பைகளைச் சேர்க்கும் இடமாகப் பலரும் பயன்படுத்தினார்கள். உணவுக் குப்பைகளுக்கு அருகிலேயே கை உடைந்த சோபாக்களும், பழைய டிரான்சிஸ்டர் ரேடியோக்களும், பின்புறத்து குழாய்கள் துருவேறிப் பயனில்லாமல் போன ஐஸ் பெட்டிகளும், முள் உடைந்த ரெக்கார்ட் பிளேயர்களும், பழைய கடிகாரங்களும் காலி அட்டைப் பெட்டிகளும் கிடந்தன. ஆனால் அப்படித் தூக்கியெறியப்பட்ட பொருள்கள் சில நாள்களிலேயே மாயமாய் மறைந்து போகும். ஒரு வீட்டில் பயன்படாதது மற்றொரு வீட்டில் பண்டிகைக்கான புது பொருளாய்ப் பளபளக்கும். வாழ்க்கை கிட்டத்தட்ட தன்னைத்தானே ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் வட்டம் என்று இந்த இரண்டு வாரங்களில் இளஞ்சேரன் கற்றுக் கொண்டிருந்தான்.

அது கைவிட்ட போன பின்பு மீண்டும் சுற்றித் தொடங்கிய இடத்துக்கே வர எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதுதான் யாரும் தெரிந்து கொள்ள முடியாத பெரும் ரகசியாமாக இருந்தது.

குளியலறையின் தகரக் கதவைத் திறக்க வீரா போராடும் சத்தம் கேட்டது. கதவு பொருத்தப்பட்டிருந்த கோணத்துக்கும் அது பொருத்தப்பட்டிருந்த சுவருக்கும் அடியிலிருந்த தரைக்கும் பொருந்தவே இல்லை. ஒவ்வோரு முறையும் குளியலறைக்குப் போய் வெளியில் வரும்போது தோள் வலிமை எல்லாவற்றையும் திரட்டி கிட்டத்தட்ட பலம் கொண்ட மட்டும் கதவைத் தூக்கியும் அசைத்தும் கீழிறக்கியுமே திறக்க முடிந்தது. வீட்டை அவர்களுக்கு வாடகைக்கு விட்ட ராமசாமி ஐயாவிடம் சொன்னாலும் பயனில்லை. துறைமுகத்தில் நிரந்தர வேலையிலில்லாத மலேசியக் கேஷுவல் லேபர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டதே சட்ட விரோதம் என்று பயமுறுத்துவார். இல்லையென்றால் கண்களை லேசாய் மூடியபடி வெறும் வாயை மெல்வதுபோலவே முகபாவத்தை வைத்துக் கொண்டு மற்ற குடித்தனக்காரர்கள் கொடுக்கும் வாடகையைப் பற்றியும் வீராவும் இளஞ்சேரனும் கொடுக்கும் அறுபத்து ஐந்து வெள்ளி வாடகைப் பணம் கைக்கு வருவதற்கே சில நேரங்களில் ஒரு வாரம் தாமதம்கூட ஆகியிருப்பதை பற்றியும் மெல்லப் பேச ஆரம்பிப்பார்.

குளியலறையிலிருந்து ஒரு வழியாக வீரா இடுப்பில் கட்டிய பூப்போட்ட கைலியோடும் வெற்றுடம்போடும் வெளியில் வந்து நின்றான். ஜன்னலிலிருந்து பொழிந்து கொண்டிருந்த வெயிலின் வெளிச்சத்தில் லேசாய் மேலேறிய இறங்கிய அவனுடைய வழவழப்பான தோள்களையும் கைலியின் மேலிருந்து பொங்கி வழிந்த சிறு தொந்தியின் வெண்மையையும் பார்த்த இளஞ்சேரனின் மனம் கொஞ்சம் அலைக்கழிந்து அடங்கியது. என்னோடு வந்து இந்த ஊரில் கஷ்டப்பட இவன் என்ன பாவம் செய்தான் என்று இளஞ்சேரன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

செம்பனை மரங்களுக்கிடையே இருவரும் சிறுவயதில் ஓடியாடி விளையாடி இருந்தாலும்கூட, மற்ற பையன்களைச் சேர்த்துக் கொண்டு வட ஜோகூர் காடுகளில் இருவரும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடி இனிப்புச் சுவையுடைய அந்த மாமிசத்தைச் சிறு கத்திகளால் அரிந்து காட்டின் நடுவிலேயே தீமூட்டி வாட்டித் தின்றிருந்த போதிலும்கூட வீரா முற்றிலும் வித்தியாசமானவன் என்று இளஞ்சேரனுக்குத் தோன்றியது. என்ன இருந்தாலும் வீரா வேறு பிறப்பு. அவன் அப்பா நாலு எழுத்துப் படித்தவர். செகாமாட்டில் பிரிட்டிஷ் படைகளில் கிளார்க்காக இருந்துவிட்டு ராணுவத் துரைகளின் பரிந்துரையின் பேரில் வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்த பனைத்தோட்டத்தில் கணக்கராக வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர். இளஞ்சேரனின் அப்பாவும் அம்மாவும் இரண்டு தலைமுறைகளாய்த் தோட்டத்தில் கூலி வேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

செம்பனை எண்ணெய்யின் அடர்த்தியோடும் கனத்தோடும் தனது முகத்தில் வழிவதுபோல் தோன்றிய பச்சாதாபத்தைச் சட்டென்று துடைத்துவிட்டு இளஞ்சேரன் தனது முகத்தை மீண்டும் கடுமையாக்கிக் கொண்டான். படட்டுமே, ஒரு தலைமுறைக்காவது இதுகளும் சிரமப்பட்டுப் பார்க்கட்டுமே. அவன் கண்களில் விஷமம் மின்னியது. அந்த விஷமத்தோடு சேர்ந்து ஒரு வகையான குரூரமும் சேர்ந்திருந்தது.

“இந்தச் சனியனை என்ன செய்ய?”

சமையலறை மேசைமீது இருந்த கோணிச் சாக்கைப் பார்த்து இளஞ்சேரன் கேட்டான்.

வீரா காய்ந்த பின் இஸ்திரி போடுவதற்காக இளஞ்சேரன் மடித்துவைத்திருந்த துணிகளின் மீதிருந்த மேரி பிஸ்கட் டின்னின்மேல் உள்ளங்கையளவு கண்ணாடியை வைத்துத் தனது உயரமான உடம்பை அதற்கு முன்னால் குறுக்கி மரச்சீப்பின்னால் தலைவாரிக் கொண்டிருந்தான். இளஞ்சேரனின் கேள்வியைக் கேட்டவன் தலை வாரியபடியே ஓரக்கண்ணால் இளஞ்சேரனைப் பார்த்தான். வெயிலின் வெளிச்சத்தில் அவன் காது மடல்களின் மேல்புறம் லேசாய்ச் சிவந்திருந்தது.

“எதாவது அட்டைப் பெட்டியில வச்சுக் கொஞ்ச நாள் கும்பிடலாமேனு தோணுச்சு. இந்த மாதிரி வயசான மலைப்பாம்புகளோட ஒடம்புல சீனச் சாமி வந்து குடியிருக்குமாம். அதைச் சந்தோஷப்படுத்தினால் வீட்டுல நல்ல காரியம் நடக்கும்னு ஷிப்யார்ட்டுல சீனனுங்க பேசிகிட்டதக் கேட்டிருக்கேன். சில சமயம் கனவுலகூட அந்தச் சாமி வந்து சூதாட்டத்துல வச்சு வெளையாட நம்பர்லாம் கொடுக்குமாம் காப்பர் திருடுன கேஸுல நீயும் சஸ்பெண்ட் ஆகியிருக்குற இந்நேரத்துல எதாவது நல்லது நடந்தாலாவது…”

சொல்லிவிட்டு வீரா அவசரமாக உதட்டைக் கடித்துக் கொண்டான். இளஞ்சேரன் அவன் சொன்னதைக் காதில் வாங்கியதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

அவனுக்கும் வீரா சொன்ன அந்தக் கதைகள் தெரிந்திருந்தன. தீவின் வடக்குப் பகுதியில் கோழிப் பண்ணைகளும் பன்றிப் பண்ணைகளும் அதிகம் இருந்த இடங்களில் மலைப்பாம்புகள் அதிகமிருப்பதாய்ச் சொல் பேச்சு இருந்தது. தீனிக்குத் திரியாத நேரங்களில் டிசம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரிவரை அடித்துப் பெய்யும் பெருமழைகளின் வெள்ளத்தைக் கொண்டு செல்ல பிரிட்டிஷ்காரர்கள் தீவு முழுக்கக் கட்டிவைத்திருந்த ஆழமான மான்சூன் சாக்கடைகளின் சிலுசிலுப்பிலும் இருட்டிலும் மலைப்பாம்புகள் ஒளிந்து கொள்ளும். சில நேரங்களில் அப்படியே ஊர்ந்தும் நீந்தியும் போய் தண்ணீர்க் குழாய்களின் வழியாக வீடுகளுக்குள் புகுந்து கொள்வதும் நடந்திருக்கிறது, மலைப்பாம்புகளுக்கு மிக நன்றாய் நீந்தத் தெரியும் என்று முன்பொரு நாள் பனைத் தோட்ட மண்டோர் கிருஷ்ணசாமி சொன்னது இளஞ்சேரனுக்கு நினைவிலிருந்தது.

செய்தித்தாள்களில் அவ்வப்போது பிடிபட்ட மலைப்பாம்புகள் ஒரு தடியின் முனையில் தொங்கியபடி இருக்கத் தடியை தொளதொளப்பான காக்கி அரைக்கால் சட்டையும் தலையில் சொங்கோக் என்றழைக்கப்படும் மலாய்த் தொப்பியும் அணிந்த மலாய்க்காரப் போலீஸ்காரன் பிடித்துக் கொண்டிருப்பதுபோல சாம்பலும் வெள்ளையும் கலந்த மங்கலான புகைப்படம் வரும். படத்தில் நிற்கும் போலீஸ்காரன் புட்டத்தோடு சேர்த்து உடம்பையும் தடியிலிருந்து நன்றாகத் தள்ளியே வைத்திருப்பான். இந்த ஊரில் உள்ள மலைப்பாம்புகள் பத்து மீட்டர் நீளம்வரை வளரக் கூடியவை.

“இது வயசான பாம்புனு எதை வச்சுச் சொல்ற? இது உயிரோட இருக்கானே தெரியலியே?

குழம்புக் கரண்டியை எடுத்து இளஞ்சேரன் சாக்கில் புடைத்திருந்த வளைவுகளைக் குத்தினான். எந்த அசைவும் இல்லை.

“மூணு ஆள் நீளம் இருந்தது. உசிரோடதான் இருக்கும். அள்ளூருல வச்சுப் பிடிக்கும்போதே அது அசையாமத்தான் கிடந்துச்சு. ஆனா கண்ணை மட்டும் நல்லாத் தொறந்து வச்சுகிட்டு என்னையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. சாக்குக்குள்ளாற அதை வச்சப்ப லேசா உடம்ப முறுக்கிப் போட்டுத் திரும்புச்சு. அவ்வளவுதான்.”

”இங்கச் சுத்திகிட்டு இருந்த தெருநாய்ல ஒண்ண பிடிச்சுத் தின்னு முடிச்சுப் படுத்துகிட்டு இருந்திருக்கும். அந்த நேரமாப் பார்த்து நீ போய் அதைப் பிடிச்சிருப்ப.”

“மலைப்பாம்பு நாயக்கூட தின்னுமா? சின்னதா இருக்குற கோழி, பூனை, பெருச்சாளி இப்படிப்பட்ட விஷயங்களைத்தானச் சாப்பிடும்னு கேள்விபட்டிருக்கேன்.”

வீரா இளஞ்சேரனின் எதிரில் சாப்பாட்டு மேசை நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“மலைப்பாம்பு ஆட்டையே திங்கிறப்ப நாயைத் தின்னாதா?”

சொல்லிவிட்டு இளஞ்சேரன் வீராவை உற்றுப் பார்த்தான். லேசாய்ப் புன்முறுவல் ஒட்டியிருந்த அவன் உதடுகளில் பாதிக்குப் பாதி விஷமும் காமமும் கலந்திருந்தன.

இரண்டு வருடத்துக்கு முன்னால தோட்டத்தில்  பவுனம்மா ஆச்சி தீபாவளி விருந்துக்கு வளர்த்து வந்த கோழிகளில் ஒன்றை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியது. நல்ல கனமான பெட்டை. இரவு முழுவதும் பவுனம்மா வீட்டுக்குள்தான் இருந்திருக்கிறார். ஒரு சத்தமும் இல்லை. காலையில் எழுந்து கக்கூஸுப் பக்கமாய்ப் போனபோதுதான் பாதி கோழியை விழுங்கிவிட்டு மிச்சத்தை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் மலைப்பாம்பு அசையாமல் படுதிருந்ததைப் பவுனம்மா பார்த்தார்.

அப்படி வயிறு உப்பிக் கிடந்த மலைப்பாம்பை இளஞ்சேரனும் சில இளவட்டங்களும்தான் இரும்புக் கழிகொண்டு மாற்றி மாற்றி அடித்துக் கொன்றார்கள். வாய் நிறைய பாதி செரித்த ஆட்டுடன் பெருமூச்சுகூட விடமுடியாமல் மலைப்பாம்பு அடிவாங்கிச் செத்துப் போனது.

“ஆமா, எதையும் நசுக்கிக் கூழாக்கித்தான மலைப்பாம்பு தின்னுது. ஆடு என்ன, புலியைக் கூட தின்னாலும் தின்னும் – சனியன்.”

வீரா மேசையின்மீது இருந்த சாக்கை வெறுப்புடன் பார்த்தான். அவன் பார்வையில் ஈரப்படலமாகப் பயம் பளபளத்தது.

இளஞ்சேரன் மறுப்பதுபோல் லேசாய்த் தலையசைத்தான். அவன் கண்களில் செம்பனைத் தோட்டத்தில் பேய் மழைப் பிடித்துக் கொண்டு மின்சாரம் நின்றுபோன கறுப்பு இரவுகளில் அத்தாப்பு வீட்டின் ஒரு மூலையில் தன்னையும் தம்பி தங்கைகளையும் அருகில் அழைத்துக் கொண்டு அவர்களின் முதுகினில் தட்டிக் கொடுத்தபடி கதை சொல்லும் அம்மாவின் முகம் வந்து போனது. அம்மா இடுப்பில் கைலி ஒன்றைக் கட்டி, பெரிய முலைகள் துருத்திக் கொண்டிருக்கும் சாயம் போன சட்டையின்மேல் ஒரு துண்டைக் குறுக்கப் போட்டபடி அமர்ந்திருப்பாள். பக்கத்தில் வைத்திருக்கும் ஹரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகத்தின் அடிப்பகுதி தீப்பற்றியதுபோல பிரகாசித்து ஒரு வெளிச்ச மலராய்ப் பூத்திருக்கும்.

அந்தக் காட்சிக்கு அடுத்ததாக செம்பனைத் தோட்டத்திற்குள் கனமான பூட்ஸுகளோடு ஜப்பானிய ராணுவ வீரர்கள் கறுப்பான துப்பாக்கிகளை முன்னால் நீட்டியபடி நுழையும் காட்சி இளஞ்சேரனுக்குத் தோன்றியது. அவர்கள் தங்கள் கண்களின் முன்னால் எதிர்ப்பட்ட பெண்களின் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து வீட்டுச் சுவர்களின் மீதும் மரங்களின் மீதும் அவர்களின் முகத்தை மோதினார்கள்.  இடுப்பில் செம்பருத்திப் பூவின் முத்திரையைப் போட்ட வாளை அணிந்திருந்த குள்ளமான ஜப்பானிய அதிகாரி ஒருவன் இளம் சீனத்தி ஒருத்தி மார்போடு பிடித்திருந்த கைக்குழந்தையை எட்டிப் போய்ப் பிடுங்கினான். அப்போதுதான் பிறந்த குழந்தை போலும். பூஞ்சையாய் இருந்தது. பாலுக்காக வீல் வீல் என்று கத்திக் கொண்டிருந்தது. குழந்தையை லாவகமாகக கையில் வாங்கிக் கொண்ட அதிகாரி அதைக் காற்றில் மேல் நோக்கி எறிந்தான். குழந்தை மேலே பறந்து கீழே வருவதற்குள் தன் இடுப்பில் இருந்த வாளை உருவி அதன் முனையை குழந்தையின் உடம்புக்குள் செலுத்த குழந்தையின் உடம்பு தரையில் விழாமல் பிடித்துக் கொண்டான். குழந்தையின் அழுகை சத்தம் சட்டென்று அடங்கிப் போனது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண் மயங்கி விழுந்தாள். அவளுடைய மார்புகளைக் கொத்தாகப் பிடித்து மற்ற ஜப்பானிய வீரர்கள் இழுத்துக் கொண்டு போனார்கள். அவர்களின் சிரிப்பொலி தோட்டப்புறங்களைச் சுற்றித் திரியும் இளம்பழுப்பு நாய்களின் குரைப்புப்போலவே இருந்தது.

இளஞ்சேரன் மீண்டும் தலையை லேசாய் ஆட்டினான்.

“மனுஷனைத் தவிர மத்த எந்த மிருகமும் மத்த மிருகத்தைச் சித்தரவதைச் செஞ்சுக் கொல்லுறது இல்ல, வீரா. மலைப்பாம்புங்க இரையை மெல்ல மெல்ல நசுக்கித் துன்புறுத்திச் சாகடிக்குதுனுதான நினைக்குற. அதுதான் தப்பு. மலைப்பாம்புங்க இரையோட வேதனையத் தாமதமாக்குறதே இல்ல. இரையோட விலாவச் சுத்திப் பலமா இறுக்கி மூளைக்குப் போற பிராணவாயுவ மலைப்பாம்பு நிறுத்திடும். மூளைக்குப் பிராணவாயு போகலனா மூணு நிமிஷத்துக்குள்ளாறயே இரை சுயநினைவை இழந்துரும். அப்புறம் அதுக்கு வலியும் தெரியாது, வேதனையும் தெரியாது. சுகமான மரணம். அப்படியே கொஞ்ச நஞ்சம் சுய நினைவிருந்தாலும்கூட மலைப்பாம்பு இரையோட தலைய முதல்ல விழுங்குறதால பாம்போட வாய் கவ்வுறப்போ கபாலம் நொறுங்குறதுல காணாமப் போயிடும். பாம்ப மாதிரி கருணையுள்ள ஜீவன் உலகத்துல இல்ல. ராஜநாகத்தோட விஷம்கூட சில நிமிஷத்துலேயே உடம்பெல்லாம் பரவி மனுஷனை மயக்கம்போட வச்சு வலி தெரியாத மாதிரி செஞ்சுருது.”

சொல்லிவிட்டு இளஞ்சேரன் வீராவை மீண்டும் உற்றுப் பார்த்தான்.

“இதைச் சாமினு சீனனுங்கச் சொல்றதுல தப்பே இல்ல.”

“அப்படினா வச்சுக்கலாம்னு சொல்றியா?” என்று வீரா கேட்டான்.

“இதுக்கு என்ன சாப்பாடு போடுவ?”

“எதாவது கோழி சதை வாங்கியாந்து போடலாம் இல்லையா. இல்லனா ஷிப்யார்ட்டுல எதாச்சும் பெருச்சாளிய பொறி வச்சுப் பிடிச்சுக் கொண்டு வரலாம்.”

“ப்ச்சு.”

“வச்சுக்கலாம்ங்கிறியா, வேணாங்கிறியா? ரெண்டுல ஒண்ணத் தெளிவாச் சொல்லு” என்றான் வீரா.

“பாம்ப வளர்த்தா ஒழுங்காத் தீனி போடணும். போன வருஷம் பக்கத்து புளோக் மரைக்கானுக்கு நடந்த கதை ஞாபகம் இருக்கில்ல. கக்கூஸுல போய்க் கைலியத் தூக்கிட்டு உட்கார்ந்திருக்கான். கக்கூஸ் தண்ணியில ஒளிஞ்சிருந்த குட்டி மலைப்பாம்பு அவன் கொட்டைகளைப் பழம்னு நினைச்சுக் கவ்வியிருக்கு. மரைக்கான் எவ்வளவு ஆட்டிப் பார்த்து விடவே இல்ல.”

மரைக்கான் கட்டம்போட்ட கைலியை இரண்டு கைகளாலும் உயரத் தூக்கியபடியே கால்களுக்கு நடுவில் இரண்டு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு தொங்க கண்ணீர் விட்டபடியே அலறிக் கொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஓடியது நினைவுக்கு வந்ததில் இருவரும் உரக்க வாய்விட்டுச் சிரித்தார்கள்.

“உனக்கு எதாவது நல்லது நடக்கும்னுதான் இதைப் புடிச்சு வந்தேன்.”

“ஷிப்யார்ட்டுல எதாச்சும் சொன்னாங்களா?”

“இல்ல. யாருமே வாய் தொறக்க மாட்டேங்குறாங்க. விசாரணை போயிகிட்டு இருக்குனு மட்டும் தெரியுது. ஆனா என்கிட்ட சொன்னா அது உனக்குத் தெரிஞ்சிரும்னு நெனச்சு யாரும் எதுவும் சொல்றதில்ல…”

இளஞ்சேரனின் விழிகள் பெரிதானதைக் கவனித்த வீரா உடனே தன்னை அவசரமாகத் திருத்திக் கொண்டான்.

“நீயும் நானும் ஒரே வாடகை வீட்டுல குடியிருக்கோம் இல்லையா. அதைச் சொன்னேன். அந்த சூப்பர்வைஸர் பக்கிரிசாமிகிட்டயும் போய்க் கேட்டுப் பார்த்தேன். அந்த நாயும் எதுவும் சொல்ல மாட்டேங்குது.”

“நேத்து நாயர் வந்திருந்தான்.” என்றான் இளஞ்சேரன்.

“இங்க வந்தானா? எப்ப?”

“நீ வேலைக்குக் கெளம்புனதுக்கு அப்புறம்.”

“அது கேடுகெட்ட நாயாச்சே. தமிழங்களப் பார்த்தா அந்த நாயிங்களுக்கு எப்பவும் எளக்காரம். என்ன சொன்னான் அந்த நாயி?”

“முந்தா நேத்துத்தான் முதலாளிங்க கூட்டத்துல என் விஷயத்தைப் பத்திப் பேசுனாங்களாம். விஷயம் மோசமாப் போகுதாம். போலீஸுக்குச் சொல்ல வாய்ப்பிருக்காம்.”

“இதுவரைக்கும் கம்பெனியில வச்சுத்தான விசாரணை நடக்கும்னு யூனியன்ல சொல்றாங்க. போலீஸுக்குப் போகப் போறாங்கனு இந்த நாய்க்கு எப்படித் தெரிஞ்சது?”

“நாயர்தான அட்மின் பிரிவுல கிளார்க்கா இருக்கான். முதலாளிங்க நடத்துற கூட்டங்களுக்கு இவன்தான் குறிப்பு எழுதுவான்.”

“நீதான் திருடுன காப்பருக்கு உண்டான காசைக் கொடுத்துடுறேன்னு சொல்லியிருக்க இல்ல. அப்பவுமா போலீஸுக்குப் போவாங்க?”

“திருடுனது சாதாரண சாமானா இருந்தா பரவாயில்ல. நான் திருடுனது உயர்ந்த ரக மில்பெரி காப்பர். பிரிட்டிஷ்காரனோட மிலிட்டரி கேம்ப் கட்ட பாவிக்கிறது. ராஜத் துரோகச் சட்டம்கூட எம்மேல பாயலாம்னு நாயர் சொல்றான். இந்த நிலைமையில வீட்டுல எப்ப வேணா ரெய்டு வரலாம். இந்த நேரத்துல வீட்டுல பாம்ப வச்சுகிட்டு இருக்குறது நல்லதான்னு தெரியல.”

“உன்னைக் கூப்பிட்டு ஒரு வார்த்தைகூட இதுவரைக்கும் விசாரிக்கலியே?” என்றான் வீரா.

“மலாயாவிலேர்ந்து இங்க வந்து வேலை பார்க்குற யாரைத்தான் இந்த ஊர்க்காரங்க மதிச்சிருக்காங்க? எல்லாம் ஒரே ஊருனுதான் பேரு.” இளஞ்சேரன் காறித் துப்புவதுபோல் பேசினான்.

வீராவும் இளஞ்சேரனும் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தார்கள். பின்பு வீரா பேசினான்.

“யாராவது சீனன்கிட்ட பாம்ப வித்துடலாமாம். கொஞ்சம் காசாவது வரும்.”

“யாருகிட்ட விப்ப?”

“பழக்கடை சீனன்கிட்ட வித்தா என்ன? அவன்தானே மாரியம்மன் கோவில் பின்னால இருக்குற சந்து ஒண்ணுல போலீஸுக்குத் தெரியாம சூதாட்ட கிளப்பு நடத்துறான். கேங்குல கூட அவன் பெரிய மண்டைனு பேசிக்குறாங்க.”

“பார்க்கலாம்.”

“வேணும்னா கீழே மார்க்கெட்டுக்குப் போய் அவனைக் கூட்டியாறவா?”

இளஞ்சேரன் இடுப்பிலுள்ள துணி நெகிழ்ந்து திண்ணென்ற தொடைகளில் கைலி புரள அமர்ந்திருக்கும் வீராவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். வழக்கு விசாரணை பற்றிய பயமும் கோபமும் போய் வேறு பசி அவனை விழுங்க ஆரம்பித்திருந்தது.

“ஒன்பது மணிகூட ஆகல. ராத்திரியெல்லாம் குடிச்சுக் கூத்தடிச்சுட்டு அவன் பன்னெண்டு மணிக்கு மேலதான் கடையே தொறப்பான். இப்ப அங்கப் போயி யாரை தேடப் போற? இப்படிக் கொஞ்சம் வா. மரைக்கான குட்டி மலைப்பாம்பு எங்க, எப்படிப் பிடிச்சுக் கவ்விச்சுனு தெளிவாச் செஞ்சு காட்டுறேன்.”

வீரா இடுப்பிலிருந்து நழுவும் கைலியைக் கொத்தாய் ஒரு கையில் பிடித்துக் கொண்டு கலகலவென்று சிரித்தபடி இளஞ்சேரனை நெருங்கி வந்தான். வீராவின் உடம்பு சுடர்விடுவதுபோல் இளஞ்சேரனுக்குத் தோன்றியது. இருவரும் எழுந்து ஒருவர் இடுப்பில் மற்றொருவர் கைபோட்டு அணைத்தபடிப் படுக்கையறைக்குப் போனார்கள்.

படுக்கையில் சாய்ந்தபோது இளஞ்சேரனின் கண்கள் முழுக்க மூங்கில் கம்புகளில் காய வைக்கப்பட்டிருந்த பலவகையான நிறங்களைக் கொண்ட ஈரத் துணிகளின் கடல் மெல்லப் பொங்கி அடங்கவும் ஆரம்பித்திருந்தது. அதில் வீராவைத் தோணியாக்கி இளஞ்சேரன் கண்ணைக் கூசவைக்கும் பகல் வெளிக்கும் வண்ணங்கள் எல்லாம் நீர்த்துப் போகும்வரைக்கும் அசதியே இல்லாமல் பயணம் போனான்.

வீரா அழைத்து வந்த பழக்கடைச் சீனன் சாமர்த்தியசாலி என்று பெயர் வாங்கியவன். இப்போது மாரியம்மன் கோவில் இருந்த சௌத் பிரிட்ஜ் சாலை வட்டாரத்தில் இயங்கி வந்த சீனக் குண்டர் குழுக்களில் ஒன்றில் பெரும் தலையாய் இருப்பவன் பத்து வருடங்களுக்கு முன்னால் தீவை ஆக்கிரமித்திருந்த ஜப்பானிய படைகளோடு மிக அன்னியோன்யமாய் இருந்தான் என்றும் பல சீனர்களை அவர்களிடம் காட்டிக் கொடுத்தான் என்றும் மார்க்கெட்டில் பலரும் பேசிக் கொண்டார்கள். ஆனால் இதையெல்லாம் அவன் முகத்துக்கு நேராகச் சொல்ல யாருக்கும் துணிவில்லை.

ஜப்பானியர்கள் தோற்றுவிட்டார்கள் என்று அவர்களால் கடுமையாகத் தடைசெய்யப்பட்ட வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ரேடியோ ஒலிபரப்புக்களை ரகசியமாய்க் கேட்டுத் தெரிந்து கொண்ட பழக்கடைச் சீனன் ஜப்பானியர்களுக்குக் கைக்கூலியாக இருந்தவர்களுக்கு பொதுமக்கள் என்ன பரிசு கொடுப்பார்கள் என்று ஊகித்து ஜப்பானியர்களிடம் காட்டிக் கொடுத்துச் சேர்த்த பணத்தையெல்லாம் மூட்டைக் கட்டி இந்தோனேசிய தீவுகளில் தலைமறைவாகிச் இரண்டு வருடங்களுக்கு முன்னால்தான் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தானாம். அவன் உடம்பு முழுவதும் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்ற நிறங்களில் பச்சைக் குத்தியிருந்தது. உடம்பில் பச்சைக் குத்தியிருக்கும் மிருகங்களையும் அவற்றின் தோரணைகளையும் வைத்தே அவன் எந்தக் குண்டர் கூட்டத்தைச் சேர்ந்தவன், அவன் உபாசிக்கும் தெய்வம் எது, சீனாவில் அவனது பூர்வீக ஊரும், குலமும் என்னவென்று சொல்லிவிட முடியும் என்று விஷயம் அறிந்தவர்கள் சொன்னார்கள்.

வீட்டுக்குள் நுழைந்தவன் அதிகம் பேசவில்லை. சாக்குப் பைக்குள் கைவிட்டுச் சர்வ சாதாரணமாகக் கையை நுழைத்து பாம்பை வெளியில் எடுத்தான். வீராவும் இளஞ்சேரனும் நான்கடி தள்ளிச் சமையலறையின் விளிம்பிலேயே நின்று கொண்டார்கள். பாம்பைத் தூக்கி அதன் முகத்தைத் தனது முகத்துக்கு நேராகப் பழக்கடைச் சீனன் வைத்துப் பார்த்தான். பின்பு அதன் உடலை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தான்.

பாம்பு அவன் கையில் சோம்பலும் நெளிந்தது. அதன் உடம்பின் மஞ்சள் பழுப்பு நிறப் பட்டைகளிடையே வரியோடிய கறுப்பு நிறக் கோடுகளையும் நீண்ட தலையிலிருந்து பின்னோக்கிச் சென்ற கனமான கறுப்புப் பட்டையையும் ஆரஞ்சு நிறக் கண்களையும் பார்த்தவனின் முகத்தில் ஏமாற்றம் அப்பிக் கிடந்தது.

“சாதாரண மலைப்பாம்புதான். கொஞ்சாமாவது உடம்புல வெள்ளை நிறமிருக்கும்னு பார்த்தேன். ரெண்டு மூணு எடத்துல இருக்குற வெள்ளைப் புள்ளிகளத் தவிர மத்தபடி அப்படி எதுவுமே இல்ல. நாங்க கும்புடுற சாமிக் கிழவனோட நிறம் வெள்ளை. அப்படி வெள்ளை நெறம் இருந்தாதான் அவன் பாம்புல எறங்கியிருக்கான்னு அர்த்தம். உடம்புல வெள்ளை நெறம் இருந்தா இதோட வெலையே வேற. வேணும்னா இதுக்கு முப்பது வெள்ளி கொடுக்குறேன்.”

ராமசாமி ஐயாவுக்குக் கொடுக்க வேண்டிய ஒரு மாத வாடகைக்கே இந்தப் பணம் பத்தாது. ஆனால் சாக்கடையில் வந்த பாம்புதானே என்று சிறிது பேரத்துக்குப் பின்னால் வீராவும் இளஞ்சேரனும் பாம்பை நாற்பது வெள்ளிக்கு விற்கச் சம்மதித்தார்கள்.

அப்போதுதான் புதிதாய்ப் பட்டத்துக்கு வந்திருந்த இரண்டாவது எலிசபத் மகாராணியின் படம்போட்ட நான்கு பத்து வெள்ளி மலாயா பிரிட்டிஷ் போர்னியோ நோட்டுகளைச் சீனன் கொடுக்க சாக்கில் இருந்த மலைப்பாம்பு சீனனுக்குக் கை மாறியது.

சீனன் நல்ல வியாபாரி. சாமர்த்தியம் உள்ளவன். மனிதர்களின் பேராசைகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் தெரிந்தவன். அவன் மார்க்கெட்டிலிருந்த தனது பழக்கடைக்குப் பக்கத்திலேயே ஒரு மரக் கூண்டைச் செய்யச் சொல்லி அதிர்ஷ்டத்துக்காக அதற்குச் சிவப்பு நிறச் சாயம் பூசி அதற்குள் மலைப்பாம்பைக் காட்சிக்கு வைத்தான். அதற்கு முன்னால் மேடைபோல் இருந்த சிறு மேசையில் தங்கத்தையும் செல்வச் செழிப்பையும் குறிக்கும் வகையில் அன்னாசிப் பழங்களையும் ஆரஞ்சுப் பழங்களையும் வைத்து ஊதுவத்திக் கொளுத்தி வைக்க மணல்நிறைந்த பாத்திரம் ஒன்றை வைத்தான். மார்க்கெட்டுக்கு வருகிற போகிற தொழிலாளர்களும் அவர்கள் வீட்டுப் பெண்களும் கூண்டுக்கு முன்னால் நின்று குவித்த கைகளை மலைப்பாம்புக்கு எதிராக முன்னும் பின்னும் ஆட்டிக் கும்பிட்டு விட்டுப் போனார்கள். நான்கைந்து நாட்களுக்கு ஒரு முறை சீனன் வாங்கிவந்து கூண்டுக்குள் விடும் நாட்டுக் கோழியை மலைப்பாம்பு விழுங்குவதைக் காணப் பள்ளிப் பிள்ளைகள் கூண்டுக்கு முன்னால் ஆர்வத்தோடு கூடினார்கள்.

விரைவில் மலைப்பாம்பின் மகிமையைப் பற்றிய செய்திகள் வர ஆரம்பித்தன. மலைப்பாம்புக்கு முன்னாலிருந்த மேசைமீது சில்லறைகளைப் போட்டு ஊதுவத்துக் கொளுத்திக் கும்பிட்ட சில பேருக்கு லாட்டரியிலும் சூதாட்டத்திலும் பணம் விழுந்தது. ஹார்பர் போர்டு அலுவலகத்துக்கு வெளியே கைவண்டியில் தின்பண்டங்களும் குளிர்பானங்களும் விற்கும் சீனத்திக்கு நாலு நம்பரில் ஆயிரம் வெள்ளி விழுந்தது. அவள் கூப்பாடு போட்டுக் கொண்டு வந்து இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி வணங்கியபடியே மலைப்பாம்புக்கு அலறலான குரலில் அரை மணி நேரத்துக்கு மேலாய் நன்றி சொன்னாள்.

வீராவோடும் இளஞ்சேரனோடும் துறைமுகத்தில் வேலை பார்த்த கோபால்சாமிக்கும்கூட மலைப்பாம்பைக் கும்பிட்டதால் அரசாங்க லாட்டரியில் நூற்றைம்பது வெள்ளி பரிசு கிடைத்தது.

கோபால்சாமி குடியிருப்பில் தனக்குத் தெரிந்தவர்களின் வீட்டுக்கெல்லாம் போய் இந்தச் செய்தியைச் சொல்லி மலைப்பாம்பின் மகத்துவத்தைப் பாராட்டிய நாள் மாலை வேலையிலிருந்து திரும்பிய வீரா இரவு தின்பதற்கு மலாய் ரோஜாக்கும், மாமாக் கடை மீ கொரேங்கும் இரண்டு பாட்டில் ஸ்டௌட்டும் வாங்கி வந்தான்.

ஸ்டௌட் பாட்டில் கறுப்பு நிறமாய் இருந்தது. ஸ்டௌட்டேகூட கசப்பும் துவர்ப்பும் நிறைந்த  ஐரிஷ் மதுபானம்.  அதைச் செய்ய பார்லி பயன்படுத்துவார்கள். ஸ்டௌட் பாட்டிலின் உச்சியில் நாய் வாய் திறந்திருப்பது போன்ற சித்திரம் ஒன்று இருந்தது. அதனால் இந்தியர்கள் அந்தப் பானத்தை ‘நாய்ச் சாப்பு’ என்று அழைத்தார்கள்.

“கோபால்சாமி வந்து சொன்னானா?” என்று இளஞ்சேரனிடம் கேட்டான் வீரா.

“ம்.”

“ஷிப்யார்ட்டுலேயும் இதே கதைதான்.”

“பெரிய காசுதான்.”

“மலைப்பாம்பை நாமளே வச்சிருந்திருக்கலாமோ?” என்று கேட்டான் வீரா,

இளஞ்சேரன் முதலில் எதுவும் சொல்லாமல் இருந்தான். பிறகு கையில் பற்றவைத்திருந்த சிகரெட்டை வாயில் வைத்துப் புகையை ஆழ இழுத்துவிட்டபடிப் பேசினான்.

“அது நமக்கு உபயோகமாக இருந்திருக்காது வீரா. அது சீனனுங்க சமாச்சாரம்” என்றான்.

வீரா புரியாதது மாதிரி இளஞ்சேரனைப் பார்த்தான்.

“ஆமா, வீரா. அது சீனனுங்க சாமி. நம்மாளுங்களுக்கு அது வேலை செஞ்சிருக்காது. நம்ம சாமி வேற…”

இளஞ்சேரன் இப்படிச் சொல்லிவிட்டு சிகரெட்டுப் புகையை மீண்டும் ஆழமாக இழுத்து ஊதினான். கறுப்புப் பாட்டிலைச் சூழ்ந்து ஜொலித்த அடர்த்தியான புகையில் பாட்டிலில் பொறிக்கப்பட்டிருந்த நாய் அவனைப் பார்த்து வாய்விட்டுச் சிரிப்பதுபோல் தோன்றியது.

***

-சித்துராஜ் பொன்ராஜ்

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:

2 thoughts on “சீனன் சாமி – சித்துராஜ் பொன்ராஜ்

 1. தான் வாழும் நிலத்தின் கதையை எழுதி, அதனை எந்த நிலத்திலும் பொருந்திட வைக்கும் யுக்தியை பலமுறை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் கதைகளில் கண்டுள்ளேன். அந்த நிலத்தின் சிக்கலை பேசும் அதே வேலையில் ஒரு வாசகனால் எல்லை கடந்தும் அந்தக் கதைகளை புரிந்துக் கொள்ள முடிகிறது.

  கதை நடக்கும் காலத்தை முன்னமே யூகிக்கும் வழிகளைக் காட்டி, பின்னர் காலத்தை ஒரு வரியில் குறிப்பிடுகின்றார். பிறந்த நாடு விட்டு பிற நாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்கள் எதிர்நோக்கும் சிக்கல் எல்லா காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை காட்டும் கதை.

  அப்படி வேறு நாட்டிற்கு சென்று வேலை செய்பவர்கள் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எதிர்க்கொள்ளும் சிக்கல்களையும் அவர்களுக்கு அவர்களே கூறிக்கொள்ளும் சமாதானங்களையும் தனக்கே உரிய பாணியில் கதைக்களன் ஆக்கியுள்ளார் ஆசிரியர். எப்படியாவது தீர்த்தே ஆகவேண்டிய பசி கொண்ட உடலிற்கும் மனதிற்கும் அதற்கான வழி கிடைத்தே விடுகிறது. இரு நண்பர்களின் நெருக்கத்தையும் அவர்கள் தீர்த்துக் கொள்ளும் காமத்தையும் வாசித்தப்பின்பு எப்போதோ ஒரு முறை வெளிநாட்டில் சில ஆண்டுகள் வேலை செய்த நண்பர் ஒருவர் பகிர்ந்த அனுபவம் மீண்டும் நினைவிற்கு வந்துபோனது.
  ஒரு கதையின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவது ஆசிரியர் எழுதும் சூழல் குறித்த விவரணைகள் என நான் நம்புகிறேன். இக்கத்தையில் ஆசிரியர் சொல்லியிருந்த குடியிருப்பு பகுதி பற்றிய விவரணனைகளை வாசிக்கையில் யாரையும் அதில் பங்கு பெற செய்துவிடுகிறது.

  மனிதர்களை விட பாம்பு ஒன்றும் அத்தனை கொடூர செயல்களை செய்பவை அல்ல. அவை தான் விழுங்கும் இரைக்குக்கூட அதிகம் வலிகளைக் கொடுக்கவில்லை என காட்டும் அதே வேலையில் பச்சிளம் குழந்தையை கத்தியால் குத்திக் கொன்ற ஜப்பானிய இராணுவ வீரனையும் காட்டுகின்றார். நாயகன் நினைப்பதாக வரும் அக்காட்சியில் நம்மையே அங்கு ஒரு ஆளாக நிற்கவைத்து மனதை பதைபதைக்க வைக்கிறார்.

  கடைசியில் ஏமாந்து தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொள்ளும் நபர்களாகவே நாமும் பல இடங்களில் இருந்துவிடுவதை நினைக்க வைத்து கதையை முடித்திருக்கும் அங்கிருந்து நம்மை அடுத்த இடத்திற்கு நகர்த்திவிடுகிறது.

  யோசிக்கையில் கதையில் இருந்த மலைப்பாம்பு போல பல பெயரில் நாமும் யாரோ ஒருவரிடம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே தானே இருக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *