(ஜெரேனியம் என்பது ஒரு வகை பூச்செடி)

கொஞ்சம் கொஞ்சமாக அவரைப்போலவே உருமாறிக்கொண்டிருந்த அந்த நாற்காலியில் மடிந்து அமர்ந்த முதியவர் டட்லி, பதினைந்து அடி தூரத்திலிருக்கும் கருமைபடிந்த செங்கற்களால் சட்டமிடப்பிட்ட ஜன்னலை தன்னுடைய ஜன்னலின் வழியாக நோக்கினார். ஜெரேனியத்திற்காக அவர் காத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு காலையிலும் பத்துமணிவாக்கில் அதை அங்கே வைத்த அவர்கள் ஐந்தரைப்போல மீண்டும் உள்ளே எடுத்துக்கொள்வார்கள். ஊரிலுள்ள வீட்டில் திருமதி கார்சனும் ஒரு ஜெரேனியம் வைத்திருந்தாள். வீட்டில் எண்ணற்ற ஜெரேனியம் செடிகள் இருந்தன – இதைவிட அழகானவை. எங்களுடையவை அசலான ஜெரேனியம்கள் என முதிய டட்லி நினைத்துக்கொண்டார் – இது போல வெளிர்சிவப்பு, பச்சை நிறக்காகித இதழ்களைக் கொண்டவற்றிற்கு அங்கு வேலையேயில்லை. அவர்கள் ஜன்னலில் வைக்கிற ஜெரேனியம், வீட்டில் இருக்கும் சிறுவன் க்ரிஸ்பீயை அவருக்கு நினைவுபடுத்தியது: இளம்பிள்ளைவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவனை தினமும் காலையில் சக்கரநாற்காலியில் வெயிலுக்குக் கொணர்ந்து கண்சிமிட்டச் செய்ய வேண்டியிருந்தது. லுதிஷாக இருந்திருந்தால் இந்த ஜெரேனியத்தை எடுத்து மண்ணில் ஊன்றி பார்ப்பதற்குப் பிரயோஜனமான ஒன்றாக சில வாரங்களில் மாற்றியிருப்பாள். தெருவிற்கு எதிர்ப்புறம் இருக்கும் அவர்களுக்கு அதனிடம் எந்த வேலையும் இருக்கவில்லை. பகலெல்லாம் கதிரவன் அதனை வாட்டும்படி வெளியில் வைத்துவிடுவார்கள்; காற்று கீழே தள்ளிவிடக்கூடும் என்கிற அளவிற்கு விளிம்பிலும் அது வைக்கப்படும். அவர்களுக்கு அதனுடன் எந்த வேலையும் இல்லை, எந்த வேலையும் இல்லை. அது அங்கே இருந்திருக்கவே கூடாது. முதிய டட்லிக்கு தொண்டை அடைப்பது போல் இருந்தது. லூதிஷால் எதனையும் வேர்பிடிக்கச் செய்யமுடியும், ராபியினாலும் கூட. அவரது தொண்டை இறுகிக்கொண்டது. தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்ட அவர் தன் மனதைத் தெளிவாக்க முயன்றார். நினைத்துக்கொண்டால் அவரது தொண்டையை இங்கனம் இறுகிக்கொள்ளச்செய்யாத நினைவுகள் எதையுமே அவரால் நினைவிற்குக் கொண்டுவரமுடியவில்லை.
அவரது மகள் உள்ளே வந்தாள். “நீங்கள் சற்று நடந்துவிட்டு வர கிளம்பவில்லையா? என வினவிய அவள் எரிச்சலுற்றிருந்தது போல் தெரிந்தது.
அவர் அவளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
“ம்ம்?”
”இல்லை”. இன்னும் அவள் எவ்வளவு நேரம் இங்கேயே நிற்கப்போகிறாளோவென யோசித்தார் அவர். அவரது கண்களையும் அவரது தொண்டையைப் போலவே உணரச் செய்தாள் அவள். அவற்றில் கண்ணீர் சுரக்கும், அதை அவள் பார்க்கவும் செய்வாள். இதற்குமுன்பும் அவள் அதைப் பார்த்திருக்கிறாள், அவருக்காக அவள் வருந்துவது போலத் தோன்றும். அவள் தனக்காகவும்கூட வருந்திக்கொள்வது போல் தோன்றியிருக்கிறது. ஆனால் இவரைத் தனியே விட்டிருந்தால், ஊரிலேயே இவரை விட்டிருந்தால், தனது சனியன்பிடித்த கடமையைப் பற்றி பெரிதாக அவள் அலட்டிக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவள் இதிலிருந்து தப்பித்திருக்கலாம் என முதிய டட்லி நினைத்தார். சத்தமான ஒரு பெருமூச்சை அவர்மீது தவழவிட்டுவிட்டு அவள் அறையிலிருந்து வெளியேறினாள். அவளுடன் நியூயார்க்கிற்குச் சென்று வாழ அவர் முடிவெடுத்த அந்த ஒரு நிமிடத்தை – அதில் அவளது தவறு எதுவுமேயில்லை – அது மீண்டும் அவருக்கு நினைவூட்டியது.
அவர் இங்கே வருவதைத் தவிர்த்திருக்கலாம். இதுவரை தான் வாழ்க்கையைக் கழித்த இடத்திலேயே இனிமேலும் வாழ்ந்துகொள்கிறேன் என அவர் பிடிவாதமாய் இருந்திருக்கலாம், ஒவ்வொரு மாதமும் அவள் அவருக்குப் பணம் அனுப்பினாலும் சரி அனுப்பாவிட்டாலும் சரி – அவர் தன்னுடைய ஓய்வூதியத்தினையும் சில்லறை வேலைகளையும் கொண்டு காலத்தைக் கழித்திருப்பார். அவளுடைய நாசமாய்ப் போன பணத்தை அவளே வைத்துக் கொள்ளலாம், அவரை விட அவளுக்குத்தான் அது அதிகம் தேவையாயிருந்தது. தனது கடமையை விட்டுக் கொடுத்திருந்தால் அவள் இப்போது மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். அப்படிச்செய்திருந்தால், ‘மரணிக்கும் தருவாயில் பிள்ளைகள் யாரும் அவருடன் இல்லாமல் போனது அவரது பிழைதான், பார்த்துக் கொள்ள யாரும் இல்லாமல் நோயில் கிடந்தார் என்றால் அதுவும் அவருடைய தவறே, இப்படிப்பட்ட சூழலை அவரேதான் தேர்ந்தெடுத்துக்கொண்டார்’ என அவள் சொல்லியிருக்கலாம். ஆனால் நியூயார்க்கைப் பார்க்கவேண்டும் என உந்துகிற எதோ ஒன்று அவருக்குள் இருந்தது. சிறுவனாக இருந்தபோது அவர் ஒருமுறை அட்லாண்டாவிற்குச் சென்றிருக்கிறார். நியூயார்க்கை ஒருமுறை ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறார். மாநகரங்களின் தாளம் என்பதுதான் அப்படம். மாநகரங்கள் முக்கியமான இடங்களாக இருந்தன. அவருள் இருந்த அந்த உந்துதல் அந்த ஒரு நொடியில் மேலெழுந்துவிட்டது. திரைப்படங்களில் அவர் பார்த்திருக்கிற ஒரு இடத்தில் அவருக்கும் கூட இடம் இருக்கிறது! அது ஒரு முக்கியமான இடம், அதில் அவருக்கு இடம் இருக்கிறது! ஆமாம், நான் வருகிறேன் எனச் சொல்லிவிட்டார்.

அப்படிச் சொன்ன போது அவர் நோயுற்றிருந்திருக்க வேண்டும். நலமாய் இருந்தபோது அப்படிச் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அவர் நோயுற்றிருந்தார், அவளோ கடமையில் குறியாயிருந்தாள், இப்படியாக எப்படியோ அவள் அந்த பதிலை அவருள் இருந்து கொணர்ந்து விட்டாள். முதலில் அவள் எதற்காக அங்கு வந்து இதைக் கேட்டு நச்சரிக்க வேண்டும்? அவர் நன்றாகத்தான் இருந்தார். அவருக்கு வந்து கொண்டிருந்த ஓய்வூதியம் சாப்பாட்டிற்குப் போதுமானதாய் இருந்திருக்கும், அவர் செய்துவந்த சில்லறை வேலைகள் அந்த விடுதியில் அவருக்கான அறையைத் தக்கவைத்திருந்திருக்கும்.

அந்த அறையின் ஜன்னல் அவருக்கு நதியைக் காட்டியது அடர்த்தியாகவும் சிவப்பாகவும் பாறைகளின்மேலும் வளைவுகளைச் சுற்றியும் பிரயாசையுடன் அது ஓடிக்கொண்டிருக்கும். அதனால் எப்படி ஒரே நேரத்தில் சிவப்பாகவும் குறைவேகத்துடனும் இருக்க முடிந்தது என்பது குறித்து அவர் சிந்திக்க முயன்றார். அதன் இருபுறமும் மரங்களைக் காட்சிப்படுத்தும் விதமாக பச்சை வண்ணத்திட்டுக்களையும் குப்பைகளை இடுவதற்கு நதியின் துவக்கத்தில் ஒரு பழுப்புப்புள்ளியையும் அவர் சேர்த்தார். ஒவ்வொரு புதன்கிழமையும் அவரும் ராபியும் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஒரு படகில் சென்று அந்நதியில் மீன் பிடித்தார்கள். அந்த நதியின் இருபது மைல் தொலைவின் உள்ளும் புறமும் ராபிக்கு அத்துப்படி. கோவா மாகாணத்தில் அவனைப்போல அதை அறிந்திருந்த வேறு கருப்பினன் எவனுமே இல்லை. அவன் அந்த நதியை நேசித்தான். ஆனால் முதியடட்லீக்கு அதுகுறித்து எந்த உணர்வும் இல்லை. அதிலிருந்த மீன்களின்மேல்தான் அவருக்குக் கண். இரவுகளில் நீண்ட சரங்களாக அவற்றைக்கொணர்ந்து நீர்த்தொட்டியில் அறைவது அவருக்கு விருப்பமானது. ”சில மீன்கள் சிக்கின” என்பார். இந்த மீன்களையெல்லாம் பிடிக்க ஒரு ஆணால்தான் முடியும் என அந்த விடுதியில் தங்கியிருக்கும் மூதாட்டிகள் எப்போதும் பதிலளிப்பார்கள். புதன்கிழமை அதிகாலைகளில் அவரும் ராபியும் வீட்டிலிருந்து கிளம்பிச்சென்று முழுநாளும் மீன்பிடிப்பார்கள். இடத்தைக் கண்டறிந்து ராபி துடுப்புப் போடுவான்; முதிய டட்லி எப்போதும் அவற்றைப் பிடித்துவிடுவார். ராபிக்கு அவற்றைப்பிடிப்பதில் ஆர்வம் இல்லை – அவன் அந்த நதியை நேசித்தான், அவ்வளவே. “தூண்டில இங்க வீசறதுல எந்த பயனும் இல்ல மொதலாளி,” என்பான் அவன். “இங்க ஒரு மீன் கூட இல்லை. இந்த நதி எதையும் எங்கயும் மறைச்சு வைக்கல, வாய்ப்பே இல்லை எசமான்.” என்றபடியே நகைத்துவிட்டு படகை நதியோட்டத்தில் செலுத்துவான். ராபி அப்படித்தான். அவனால் ஒரு மரநாயைவிடத் துப்புரவாக வேட்டையாட முடியும் என்றாலும் மீன்களனைத்தும் எங்கே இருக்கின்றன என்பதை அவன் அறிந்திருந்தான். முதிய டட்லி எப்போதும் அவனுக்குச் சிறியவற்றைத்தந்துவிடுவார்.
’22ல் அவரது மனைவி இறந்தது முதலே அந்த விடுதியின் மாடியில் மூலையிலுள்ள அறையில்தான் முதிய டட்லி வசித்துவந்தார். அந்த விடுதியில் இருந்த ஆண் அவர்தான், ஒரு வீட்டில் ஆண் செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட அத்தனையையும் அவர் செய்துவந்தார். ஆனால் இரவுகளில் வரவேற்பறையில் ஒன்றாகக் குழுமிக்கொண்டு இடைவெளியேயில்லாமல் சிட்டுக்குருவிகள் போலக் கீச்சிட்டும் கிரீச்சிட்டும் மூதாட்டிகள் இடும் சண்டைகளைக் கவனித்து நியாயம் சொல்வதுதான் அயர்ச்சியூட்டும் வேலையாய் இருந்தது. ஆனால் பகல்வேளைகளில் ராபி இருந்தான். ராபியும் லுதிஷும்ம் கீழே தரைத்தளத்தில் வசித்தனர். லுதிஷ் சமையலையும் ராபி தோட்ட மற்றும் தூய்மைப் பணிகளையும் கவனித்துக் கொண்டான்; ஆனால் வேலையைப் பாதியில் விட்டுவிட்டு முதிய டட்லியின் அன்றைய பணியில் உதவுவதற்கு – கோழிக்கூண்டு நிர்மானிப்பதிலோ, கதவிற்கு வண்ணம் தீட்டுவதிலோ – நழுவுவதில் அவன் முனைப்பாய் இருந்தான். அவனுக்கு கவனிக்கப் பிடிக்கும், முதிய டட்லி வசித்தபோது அட்லாண்டா எப்படி இருந்தது, துப்பாக்கியின் உட்பாகங்கள் எவ்விதம் ஒன்றாய்ப் பொருத்தப்படுகின்றன என்பது உள்ளிட்ட அந்த முதியவன் அறிந்திருந்த அத்தனை பற்றியும் கேட்டுக்கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கும்.

சில சமயங்களில் இரவுகளில் அவர்கள் பாஸம் (இறந்தது போல் நடித்து எதிரிகளை ஏமாற்றும் பாலூட்டி வகை விலங்கு – possum) வேட்டைக்குச் செல்வார்கள். ஒருபோதும் அவர்களால் பாஸம்மைப் பிடிக்க முடிந்ததில்லை என்றாலும் அவ்வப்போது மூதாட்டிகளிடமிருந்து வெளியே செல்ல விரும்பிய முதிய டட்லிக்கு வேட்டை ஒரு நல்ல காரணமாக இருந்தது. பாஸம் வேட்டையில் ராபிக்கு விருப்பமில்லை. ஒருபோதும் அவர்கள் பாஸம்மைப் பிடித்ததில்லை, காட்டிற்குள் அவர்கள் அதைக் குறிவைத்ததும் இல்லை. மட்டுமின்றி அவன் பெரும்பாலும் நீர்சார் கருப்பினன். முதிய டட்லி வேட்டை நாய்களையும் துப்பாக்கிகளையும் பற்றிப் பேசுகிற சமயங்களில், “இன்றிரவு நாம எந்த பாஸம்மையும் வேட்டையாடப் போறதில்ல, அப்படித்தானே மொதலாளி? நான் முடிக்கவேண்டிய வேலை ஒண்ணு இருக்குது.” என்பான். ”யாருடைய கோழிகளை இன்றிரவு நீ திருடப்போகிறாய்?” என நகைப்பார் டட்லி. ”இன்றிரவு நான் பாஸம்மைத்தான் வேட்டையாடப்போகிறேன் என நினைக்கிறேன்,” என்றபடி பெருமூச்சு விடுவான் அவன்.

தனது துப்பாக்கியை வெளியே எடுக்கும் முதிய டட்லி அதைத் தனித்தனியாகப் பிரித்து அது செயல்படும் விதம் பற்றி விளக்குகையில் ராபி அவற்றைச் சுத்தம் செய்வான். அதன் பிறகு அவர் அதனை மீண்டும் ஒன்றாகப் பொருத்துவார். அதை அவர் மீண்டும் பொருத்துகிற விதத்தைக் கண்டு ராபி எப்போதும் வியப்பான். நியூயார்க் பற்றியும் ராபிக்கு விளக்க முதிய டட்லிக்கு விருப்பம் இருக்கிறது. அவனுக்கு அதைக் காட்ட முடிந்திருந்தால் அது அவருக்கு இவ்வளவு பெரியதாகத் தோன்றியிருக்காது – ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் அது அவரை நசுக்குவது போல் உணர்ந்திருக்க மாட்டார். “அது அப்படி ஒன்றும் பெரியதில்லை,” என அவர் அவனிடம் சொல்லியிருப்பார். ”அது உன்னைத் தாழ்வாக உணரச்செய்ய நீ ஒருபோதும் அனுமதிக்காதே ராபி. எல்லா நகரங்களையும் போல இது இன்னொரு நகரம், அவ்வளவுதான். நகரங்கள் ஒன்றும் அத்தனை சிக்கலானவை அல்ல.”

ஆனால் அவை சிக்கலானவையாகத்தான் இருந்தன. ஒரு கணம் இரைச்சலும் நெரிசலுமாய் இருக்கின்ற நியூயார்க், அடுத்த கணம் அசுத்தமானதாகவும் உயிர்ப்பற்றதாகவும் இருந்தது. அவர் மகள் வசித்த இடத்தை வீடு என்றுகூடச் சொல்லமுடியாது. ஒன்றே போல் இருந்த பல கட்டிடங்களில் ஒன்றில் மைய வரிசையில் வசித்தாள். அவை எல்லாமும் கருஞ்சிவப்பாகவும் சாம்பல் நிறமாகவும், ஜன்னலில் தொங்கியபடி எதையாவது இரைந்துகொண்டே அடுத்த ஜன்னலில் இருந்து அதே போலத்தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஆகியிருந்தது. அதன் உட்புறத்தில் வரிசை வரிசையாக இருந்த அறைகள் கதவின் ஒவ்வொரு அங்குலத்திலும் தொங்கவிடப்பட்ட அளவை நாடாவை நினைவுபடுத்தும் அமைப்பினைக் கொண்டிருந்தன, உங்களால் அதன் மேலேயும் கீழேயும் சென்றுவர முடியும். முதல் வாரத்தில் அந்தக் கட்டிடம் அவரை அச்சுறுத்திவிட்டதை நினைவுகூர்ந்தார். இரவில் அந்த அறைகள் மாறியிருக்கும் என நம்பியபடியே விழித்து அவர் கதவின் வழியே நோக்கும்போது அவை அங்கேயே நாய்க்கூண்டுகள் போல நீண்டிருக்கும். தெருக்களும் அதேபோலத்தான். அவற்றில் ஒன்றின் இறுதிக்கு நடந்தால் தான் எங்கே சென்று சேர்ந்திருப்போம் என அவர் யோசித்ததுண்டு. அப்படி நடப்பதாக ஓரிரவு கனவு கண்டவர் அந்தக் கட்டிடத்தின் இறுதிக்கு – சூன்யவெளிக்குச் சென்றிருந்தார்.
அடுத்த வாரத்தில் அவரது மகளும் மருமகனும் அவர்களுடைய மகனும் அவரது பிரக்ஞையில் அதிகம் நிறைந்துகொண்டனர் – அவர்கள் இல்லாத ஓர் இடத்தை அவரால் கண்டறியமுடியவில்லை. மருமகன் விநோதமானவனாக இருந்தான். பாரவண்டி ஓட்டுநராக இருந்த அவன் வார இறுதிகளில் மட்டுமே வீட்டிற்கு வந்தான். “no” என்ற சொல்லை “nah” என உச்சரித்த அவன் பாஸம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கக்கூட இல்லை. எதையும் பேசக்கூட முடியாத அந்த பதினாறுவயதுச் சிறுவனுடன்தான் அவர் உறங்கினார். ஆனால் முதிய டட்லியும் மகளும் மட்டும் தனித்திருக்கும் சமயங்களில் அவள் அவரிடம் வந்து அமர்ந்து பேசுவாள். என்ன பேசுவதென்பதை அவள் முதலில் யோசிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவள் வேறு வேலைகளைக் கவனிக்கக் கிளம்பத் தீர்மானித்திருக்கும் நேரத்திற்கு வெகுமுன்னதாகவே அது தீர்ந்துபோய்விடும். எனவே அவர் எதைக்குறித்தாவது சொல்ல வேண்டியிருக்கும். இதற்குமுன் சொல்லாத எதைக்குறித்தாவது சொல்லவே அவர் முயல்வார். எதையுமே அவள் இரண்டாம் முறை கேட்டதில்லை. நடுங்குகின்ற தலைகளைக் கொண்ட மூதாட்டிகளால் நிறைந்த சிதைந்த விடுதி ஒன்றில் அல்லாமல் தன் குடும்பத்துடன் அவரது இறுதிக்காலம் கழிகிறது என்பது மட்டுமே அவளது கவனமாய் இருந்தது. அவள் தனது கடமையைச் செய்துகொண்டிருக்கிறாள். அவளது சகோதர சகோதரிகள் அதைச் செய்யாதவர்களாய் இருந்தார்கள்.

ஒருமுறை அவள் அவரைக் கடைவீதிக்கு அழைத்துச் சென்றாள், ஆனால் அவர் மிகவும் மெதுவானவராய் இருந்தார். தரைக்கு அடியில் ஒரு பெரிய குகையைப்போல் நீண்ட சுரங்க ரயில்பாதையில் அவர்கள் சென்றனர். ரயிலிலிருந்து குமிழிகளாய் வெளியேறிய மக்கள் படிகளில் ஏறி தெருக்களில் கலந்தனர். தெருக்களிலிருந்து படிகளில் சுழன்று இறங்கி ரயிலில் ஏறவும் செய்தனர் – கருப்பும் வெள்ளையும் மஞ்சளுமாய் அவர்கள் அனைவரும் எதோ குழம்பிற்குள் கிடக்கிற காய்கறிகள் போல் கலந்து இருந்தனர். எல்லாமே கொதித்துக்கொண்டிருந்தது. சுரங்கப்பாதையின் உள்ளிருந்து இரைந்தபடி வந்த ரயில்கள் கால்வாய்கள் மேல் ஏறி திடீரென நின்றன. உள்ளே ஏறுகின்ற மனிதர்களைத்தள்ளியபடி இறங்குகிறவர்கள் வெளியேறியதும் ஒரு சப்தம் ஒலிக்க, அதன்பிறகு ரயில் மீண்டும் கிளம்பிவிடும். அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்குச் செல்லும் மார்க்கமாக முதிய டட்லியும் அவரது மகளும் மூன்று வெவ்வேறு சுரங்க ரயில்களில் பயணிக்கவேண்டியிருந்தது. இந்த மக்கள் அப்படி எதற்காக வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள் என அவர் வியப்புக்கொள்வார். தன் நாக்கு கீழே நழுவி அடிவயிற்றிற்கே சென்றுவிட்டதாக அவர் உணர்ந்தார். அவரது மேலங்கியின் கைப்பகுதியால் அவரைப் பற்றியபடி கூட்டத்திற்கிடையில் அவரை அவள் இழுத்துச் சென்றாள்.

மேம்பாலமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு இருப்புப்பாதையிலும் அவர்கள் பயணித்தார்கள். அவள் அதனை ”EI.” என அழைத்தாள் (EI. என்பது Elevated rail). அதைப்பிடிக்க அவரகள் ஒரு உயரமான நடைமேடையில் ஏறிச்செல்லவேண்டியிருந்தது. தனக்குக்கீழே மக்களும் வாகனங்களும் விரைந்துகொண்டிருப்பதை முதிய டட்லியால் காண முடிந்தது. அவர் களைப்பாக உணர்ந்தார். ரயிலை ஒரு கையால் பற்றியிருந்த அவர் நடைமேடையின் மரத்தரையில் சரிந்தார். சப்தமிட்டு அலறிய மகள் அவரை விளிம்பிலிருந்து மேலே இழுத்தாள். “நீ என்ன கீழே விழுந்து செத்துப்போகப் போகிறாயா?” எனக் கத்தினாள்.
தரையில் இருந்த கீறல்களின் வழியாக அவரால் கீழே நீந்துகின்ற மகிழுந்துகளைக்காண முடிந்தது. “அப்படி நடந்தாலும் அப்படி நடக்காவிட்டாலும் எனக்கு எந்தக் கவலையுமில்லை.” என முணுமுணுத்தார் அவர்.

”தைரியமாய் இருங்கள்,” என்றாள் அவள். “வீட்டுக்குப் போனதும் இதெல்லாம் சரியாகிவிடும்.”

“வீடு?” எனத் திரும்ப வினவினார் அவர். ஒரே சீராக அவருக்குக்கீழே மகிழுந்துகள் நகர்ந்துகொண்டிருந்தன.

”எழுந்திருங்கள், இதோ அது வந்துவிட்டது; நாம் ஏறுவதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது.”

அன்று அவர்கள் அதில் ஏறிவிட்டார்கள். கட்டிடத்திலிருக்கும் அடுக்ககத்திற்குத் திரும்பினார்கள். அடுக்ககம் அதீத இறுக்கமாய் இருந்தது. யாரேனும் இல்லாத ஓர் இடம் என்பதே அங்கு இல்லை. சமையலறை குளியலறைக்குள் திறந்தது, குளியலறை வேறு எதெதெற்குள்ளோ திறந்தது. இறுதியில், நீங்கள் எங்கிருந்து கிளம்பினீர்களோ அங்கேயே வந்து சேர்கிறீர்கள். அங்கே வீட்டிலோ, மேல்த்தளம் இருந்தது, தரைத்தளமும் நதியும் ஃப்ரேஸியருக்கு எதிரே நகர்ப்புறமும்… இந்தச் சனியன் பிடித்த தொண்டை.

இன்று ஜெரேனியம் தாமதமாக வந்தது. மணி பத்தரை ஆகிவிட்டது. வழக்கமாக பத்தேகாலுக்கெல்லாம் வெளியே வைத்துவிடுவார்கள்.
கீழே எங்கோ ஓர் அறையில் ஒரு பெண் தெருவை நோக்கி புரியாத எதையோ சொல்லிக்கத்தினாள்; ஒரு நாடகத்திற்கான, கேட்டுக்கேட்டுத் தேய்ந்துபோன ஒலியை வானொலி முழங்கியது; ஒரு குப்பைத்தொட்டி அவசரகால வாயிலில் மோதிச்சப்தமெழுப்பியது. அடுத்த அறையின் கதவு சாத்தப்படும் சத்தத்தைத் தொடர்ந்து கூர்மையான காலடிச்சத்தம் கீழே வெட்டி இறங்கியது. ”அது அந்தக் கருப்பினனாய்த்தான் இருப்பான்,” என முணுமுணுத்துக்கொண்டார் முதிய டட்லி. “பளபளக்கும் சப்பாத்துகளை அணிகின்ற கருப்பினன்.” இவர் வந்து ஒரு வாரத்தில் அந்தக் கருப்பினன் அங்கே குடிவந்தான். அந்த வியாழக்கிழமை, நாய்க்கூண்டுபோல் நீள்கின்ற அறைகளை வரவேற்புக்கூடத்தின் கதவு வழியாக அவர் பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தக் கறுப்பினன் அருகிலிருக்கும் தனது அடுக்ககத்திற்குள் சென்றான். நீள்கோடுகளால் ஆன சாம்பல்நிற மேல்சட்டையும் கால்சட்டையும் பழுப்புநிற கழுத்துப்பட்டியும் அணிந்திருந்தான். மிக விறைப்பாகவும் வெண்மையாகவும் இருந்த அவனது கழுத்துப்பட்டை அவனது கழுத்தின் நிறத்திற்கெதிராக ஒரு தெளிவான கோட்டினை வரைந்திருந்தது. பழுப்புநிறத்தில் பளீரிட்ட சப்பாத்துகள் அவனது கழுத்துப்பட்டைக்கும் தோள்நிறத்திற்கும் கச்சிதமாய்ப்பொருந்தின. முதியவர் டட்லி தலையைச் சொறிந்து கொண்டார். இதுபோன்ற இடைஞ்சலான அடுக்ககங்களுக்குள் வசிக்கிறவர்கள் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ள முடிகிற அளவிற்கு வசதியாய் இருப்பார்கள் என அவர் அறிந்திருக்கவேயில்லை. உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். தன் அதிசிறந்த ஆடையை அணிந்திருக்கும் ஒரு கருப்பினனால் அவர்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்துவிட முடியும். ஒருவேளை இந்தக் கருப்பினன் இந்நகரத்தைப் பற்றி அறிந்திருக்கலாம் – அல்லது அதற்குள் சென்றுவருவது பற்றி. அவர்களால் வேட்டையாட முடியுமாய் இருக்கும். ஏதேனும் ஒரு நதியை இவர்களுக்கு அவன் கண்டறிந்து தரக்கூடும். கதவை மூடிவிட்டு மகளின் அறைக்குச் சென்றார். “ஏய்!” எனக் கத்தினார். “அடுத்த அறையில் வசிக்கிறவர்கள் ஒரு கருப்பினனை வைத்திருக்கிறார்கள். சுத்தம் செய்வதற்காக இருக்கும். தினமும் அவனை வரச்சொல்கிறார்கள் என்றா நினைக்கிறாய்?”
படுக்கையைச் சரிசெய்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். “நீங்கள் எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்?”
“அடுத்த வீட்டுக்காரர்கள் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறேன் – ஒரு கருப்பினன் – கச்சிதமாக உடுத்தியிருக்கிறான்.”
படுக்கையின் மறுபுறத்திற்கு நடந்து சென்றவள், “உங்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும்.” என்றாள். ”அடுத்த அடுக்ககம் காலியாக இருக்கிறது. அதோடு இங்கிருக்கும் யாருக்கும் வேலையாள் வைத்துக்கொள்கிற அளவிற்கு வசதி கிடையாது.”
”நான்தான் அவனைப்பார்த்தேன் என்று சொல்கிறேனே,” என நகைத்த முதிய டட்லி, “அந்த அறைக்குள்- கழுத்துப்பட்டியும் வெண்கழுத்துப்பட்டையும் கூர்நுனி சப்பாத்துகளும் அணிந்தபடி மிகச்சரியாக அந்த அறைக்குள் நுழைந்தான்.” என்றார்.
”அந்த அறைக்குள் அவன் நுழைந்தான் என்றால் அவன் அதை தனக்காக வாடகைக்குப் பார்க்கிறானாய் இருக்கும். ” என்றுவிட்டு அலமாரி அருகே சென்றவள் அங்கிருக்கும் பொருட்களை நோண்ட ஆரம்பித்தாள். .
முதிய டட்லி நகைத்தார். நினைத்தமாத்திரத்தில் அவளால் நகைச்சுவையாகப் பேசிவிட முடியும். “சரி, நான் அங்கே சென்று அவனுக்கு எந்த நாளில் விடுமுறை எனக் கேட்கலாம் என நினைக்கிறேன். தனக்கு மீன்பிடிக்க விருப்பம் என என்னால் அவனை ஒப்புக்கொள்ளச்செய்ய முடியும் என நினைக்கிறேன்.” என்றவாறு தனது சட்டைப்பையில் இருந்த இரண்டு நாணயங்களை ஓசையெழச் செய்யுமாறு தட்டினார். அவர் அறையை விட்டு முழுதாக வெளியேறும் முன்பாக மேலே விழுகிறபடி பின்னால் ஓடிவந்த அவள் அவரை அறைக்குள் மீண்டும் இழுத்தாள். “நான் சொல்வது கேட்கவில்லையா?” எனக் கத்தினாள். “நான் உண்மையைத்தான் சொன்னேன். அந்த அறைக்குள் அவன் சென்றான் என்றால் அதை அவன் தனக்கே வாடகைக்கு எடுக்கிறான் என அர்த்தம். நீங்கள் போய் அவனிடம் எதையும் கேட்டுக்கொண்டோ சொல்லிக்கொண்டோ இருக்காதீர்கள். கருப்பினர்களுடன் எந்தப்பிரச்சனையும் வைத்துக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை.”
“அப்படியென்றால்,” முணுமுணுத்தார் முதிய டட்லி. “அவன் உனது அடுத்த அடுக்ககத்தில் வசிக்கப்போகிறானா?”
அவள் தோள்களைக்குலுக்கிக் கொண்டாள். “அப்படித்தான் நினைக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருங்கள்.” என்றவள், “அவனிடம் எந்தப் பழக்கமும் வைத்துக்கொள்ள வேண்டாம்.” என்றாள்.
அதை அவள் அப்படித்தான் சொன்னாள், என்னவோ இவருக்கு எந்த அறிவும் இல்லை என்பது போல. ஆனால் அவர் அவளை அப்போதே கடிந்துகொண்டுவிட்டார். தான் என்ன நினைக்கிறேன் என்று அவர் சொன்னபோது அவளுக்கு அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. “உன்னை அப்படி வளர்க்கவில்லை!” என அவர் இடிபோல் ஆர்ப்பரித்தார். “தன்னை நமக்குச் சரியாக நினைக்கும் கருப்பினர்களுடன் நெருக்கமாக வாழும்படியாக நீ வளர்க்கப்படவில்லை. ஆனால் நான் அவர்களில் ஒருவனுடன் பழக்கமாவேன் என நீ நினைக்கிறாய்! நான் அவர்களுடன் ஏதேனும் செய்ய விரும்புகிறேன் என நினைத்தால் நீ பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும்.” அதன்பிறகு அவரது தொண்டை இறுகிக்கொண்டதால் தன்னை அவர் நிதானப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. மிக விறைப்பாக நின்று கொண்ட அவள் அவர்களது வசதிக்கு அவர்களால் எங்கே வசிக்க முடியுமோ அங்கே வசிப்பதாகவும் அதில் எவ்வளவு சரியாக வாழ முடியுமோ அவ்வளவு சரியாக வாழ்வதாகவும் கூறினாள். இவருக்குப் பிரசங்கம் செய்கிறாள்! அதே விறைப்புடன் அடுத்து ஒரு வார்த்தையும் கூறாமல் அறையை விட்டு வெளியேறினாள். அதுதான் அவளது குணம். பணிவாகக் குவிந்த தோள்களுடனும் சாய்ந்த கழுத்துடனும் பவித்திரமாக இருக்க முயலுதல். என்னவோ இவர் ஒரு முட்டாள் என்பது போல. அமெரிக்கர்கள் கருப்பினத்தவரை தங்களது முன்வாசல் வழியாக அனுமதித்து சாய்விருக்கையில் அமர விடுகிறார்கள் என்பதை அவர் அறிவார். ஆனால் மிகச்சரியாக வளர்க்கப்பட்ட அவரது மகளும் கூட அவர்களுக்கு அருகில் வசிக்கத் துணிவாளெனவும் அவர்களுடன் பழகுகிற அளவுக்கு இவர் அறிவற்றவராய் இருப்பாரென நினைப்பவளாகவும் இருப்பாளென அவர் எண்ணியிருக்கவில்லை. அதுவும் அவர்!
எழுந்துகொண்ட அவர் பக்கத்திலிருந்த நாற்காலியிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டார். மீண்டும் அவள் வரும்போது எதையோ வாசித்துக்கொண்டிருப்பதுபோல அவர் அவள் கண்ணில்பட வேண்டும். அவருக்கு அருகில் நின்றபடி அவருக்குச் சொல்ல வேண்டிய எதுவோ இருப்பதுபோல அவள் யோசித்துக்கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அந்தக்காகிதத்தின் மேலாக எதிர்தெருவிலிருக்கும் ஜன்னலைப் பார்த்தார். இன்னும் அங்கே ஜெரேனியம் வந்திருக்கவில்லை. ஒருபோதும் அது இவ்வளவு தாமதம் ஆனதில்லை. அதை முதன்முதலில் பார்த்த தினத்தில், எதிர் ஜன்னலைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அவர் காலை உணவு முடிந்து எவ்வளவு நேரம் ஆகியிருக்கிறது என்பதை அறிவதற்காக கைக்கடிகாரத்தைப் பார்க்கக் கீழே குனிந்தார். மீண்டும் அவர் நிமிர்ந்த போது அது அங்கே இருந்தது. அதிர்ந்துவிட்டார். அவருக்குப் பூக்களைப்பிடிக்காது, ஆனால் அந்த ஜெரேனியம் பூவைப்போல் தோன்றவில்லை. அது வீட்டிலிருக்கும் நோயுற்ற சிறுவன் க்ரிஸ்பியைப் போல் இருந்தது. அதன் நிறம் மூதாட்டிகள் தங்களது வரவேற்பறையில் தொங்கவிட்டிருந்த திரைச்சீலைகளை நினைவூட்டியது, அதன் மேலிருந்த காகித இதழ் லுதிஷ் ஞாயிறுகளில் அணிந்துகொண்ட சீருடையின் இடுப்புப்பட்டையின் பின்புறத்தில் இருப்பதைப்போல் இருந்தது. லுதிஷ்ற்கு கச்சைகள் என்றால் பிரியம். பெரும்பாலான கருப்பினத்தவருக்கும்தான் என முதிய டட்லி நினைத்துக்கொண்டார்.

மகள் மீண்டும் வந்தாள். அவள் வரும்போது காகிதத்தைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என அவர் நினைத்திருந்தார். அவரால் அவளுக்குச் செய்ய முடிந்த எதோ ஒரு உதவியைக்குறித்து அப்போதுதான் நினைவுக்கு வந்தது போல, “எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், சரியா?” என்றாள்.

அவரை மீண்டும் மளிகைக்கடைக்குச் செல்லுமாறு கூறிவிடமாட்டாள் என அவர் நம்பினார். கடந்தமுறை அவர் தொலைந்துவிட்டார். புதிதாகக்கட்டப்படுகிற அனைத்து கட்டடங்களும் ஒரே மாதிரியாகத் தோன்றின. சரி எனத் தலையசைத்தார்.
“கீழே மூன்றாம் தளத்திற்குச் சென்று திருமதி. ஸ்மித்திடம் அவள் ஜேக்கிற்கு உபயோகப்படுத்துகிற சட்டையின் மாதிரியை வாங்கிவாருங்கள்.”
அவரை ஏன் அவள் வெறுமனே அமர்ந்திருக்க அனுமதிக்கக்கூடாது? அந்தச் சட்டை மாதிரியெல்லாம் அவளுக்குத் தேவைப்படவில்லை. “சரி,” என்றார். “அந்த அறையின் எண் என்ன?”
“எண் 10 – இதே போலவே. மிகச்சரியாக நமக்குக்கீழே மூன்றாவது தளத்தில்.”
வெளியே இந்த நாய்க்கூண்டு அறைகளினூடாக நடக்கும்போதெல்லாம், திடீரென ஒரு கதவு திறந்து அதன் ஜன்னல் விளிம்பில் உள்ளாடையுடன் தொங்கிக்கொண்டிருக்கும் நீள்மூக்கு மனிதர்களுள் எவனாவது
‘இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என உறுமிவிடுவானோ என அவர் அஞ்சுவார். கருப்பினனது அறையின் கதவு திறந்திருக்க, உள்ளே ஒரு பெண் ஜன்னலருகே நாற்காலியிட்டு அமர்ந்திருந்தாள். “அமெரிக்கக் கருப்பர்கள்,” என முணுமுணுத்துக்கொண்டார். விளிம்பற்ற ஒரு கண்ணாடியை அணிந்திருந்த அவளது மடியில் ஒரு புத்தகம் இருந்தது. கண்ணாடி அணிந்துகொள்ளாவிட்டால் முழுமையாக உடுத்திக்கொண்டதாக கருப்பினர்களுக்குத் திருப்தி வருவதில்லை என முதிய டட்லி நினைத்துக் கொண்டார். லுதிஷ்ன் கண்ணாடியை நினைத்துக்கொண்டார். அதனை வாங்குவதற்காக அவள் பதிமூன்று டாலர்கள் சேமித்தாள். மருத்துவரிடம் சென்ற அவள் அவளது கண்களைப் பரிசோதித்து எவ்வளவு தடிமனான கண்ணாடியை அவள் அணிய வேண்டுமெனப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டாள். சுவர்க்கண்ணாடி வழியாக மிருகங்களின் படங்களைப் பார்க்கச்செய்த அவர் அடுத்து அவளது கண்கள் வழியாக ஒளியைச் செலுத்தி தலைக்குள் பார்த்தார். இறுதியில், அவளுக்கு கண்ணாடி எதுவும் தேவையில்லை எனச் சொல்லிவிட்டார். அவளுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சோளரொட்டியைக் கருக்கிவிட்டாள். பிறகு எப்படியோ பத்து-செண்ட் கடையில் ஒரு கண்ணாடியைத் தனக்கென வாங்கிக்கொண்டுவிட்டாள். அதற்காக அவள் வெறும் 1.98 டாலர் மட்டுமே செலவிட வேண்டியிருந்தது. அதை அவள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அணிந்துகொண்டாள். ”அதுதான் கருப்பினத்தவரின் குணம்” என முதிய டட்லி நகைத்துக்கொண்டார். தான் சத்தம் எழுப்பிவிட்டதை உணர்ந்தவர் கைகளால் வாயைப் பொத்திக்கொண்டார். ஏதேனும் ஒரு அடுக்ககத்தில் இருப்பவர்கள் அதைக்கேட்டுவிடக்கூடும்.

முதல் தொகுதிப்படிகளைக் கடந்து இறங்கியிருந்தார். இரண்டாவது தொகுதியில் இறங்கிக்கொண்டிருந்தபோது காலடி ஓசையைக் கேட்டார். கைப்பிடியினூடாகப் பார்த்த அவர் அது ஒரு பெண் என்பதைக்கண்டார் – மேல் அங்கி அணிந்திருந்த ஒரு தடித்த பெண். மேலிருந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த திருமதி. பென்ஸனைப் போல அவள் காட்சியளித்தாள். அவள் தன்னுடன் பேசுவாளோ என யோசித்தார். இருவருக்கும் இடையில் நான்கு படிகள் இருந்தபோது அவள் மீது அவர் ஒரு பார்வையை வீசினார், ஆனால் அவள் அவரைப் பார்க்கவில்லை. இருவரும் ஒரே படியில் இருந்தபோது விழிகள் படபடக்க நிமிர்ந்து அவர் அவளைப் பார்த்தபோது அவள் மிகவும் இறுக்கமான முகத்துடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதன்பிறகு அவரைக் கடந்து சென்றுவிட்டாள்.
வயிற்றில் கனமாக உணர்ந்த அவர், மூன்று தளங்களுக்குப் பதிலாக நான்கு தளங்கள் இறங்கிச் சென்றுவிட்டார். அடுத்து ஒரு தளம் மேலேறி எண் 10ஐக் கண்டறிந்தார். சரி, ஒரு நிமிடத்தில் சட்டை மாதிரியை எடுத்து வருகிறேன் என்று சொன்ன திருமதி. ஸ்மித் அதை ஒரு குழந்தையிடம் கொடுத்து அனுப்பினாள். அந்தக்குழந்தை எதுவுமே சொல்லவில்லை.

முதிய டட்லி மீண்டும் படிகளில் ஏறத்தொடங்கினார். அவர் அதை மிக மெதுவாகத்தான் கடக்க வேண்டியிருந்தது. மேலே ஏறுவது அவரைக் களைப்புறச் செய்கிறது. சொல்லப்போனால் எல்லாமே அவரைக் களைப்புறச் செய்கின்றன. இவருக்குப் பதிலாக ஓடவும் வரவும் ராபியை வைத்திருந்தது போல் இல்லை. லாவகமான கால்களைக்கொண்ட கருப்பினன் அவன். ஒரு கோழிக்கூண்டினுள் கோழிகளே அறியாதபடிக்குப் பதுங்கி நுழைந்து இருப்பதிலேயே கொழுத்ததை எந்தவொரு கிறீச்சொலியும் இல்லாமல் அவனால் பிடித்துவிட முடியும். வேகமானவையும் கூட. டட்லியின் அசைவுகள் எப்போதுமே மெதுவானவையாகத்தான் இருந்திருக்கின்றன. உடல் பருமன் உடையவர்களுக்குப் பொதுவாகவே அப்படித்தான். மால்டனுக்கு அருகில் இவரும் ராபியும் ஒருமுறை காடை வேட்டைக்குச் சென்றிருந்ததை நினைவு கூர்ந்தார். எவ்வளவு விரைவாகப் பறக்கின்ற காடைக்கூட்டத்தையும் கண்டுபிடித்துவிட முடிகிற ஒரு வேட்டைநாயை அவர்கள் வைத்திருந்தனர். அவற்றை வேட்டையாடித் திரும்பக் கொணருவதிலெல்லாம் அதற்குத் திறமையில்லை என்ற போதும், ஒவ்வொரு முறையும் அதைக் கண்டுபிடித்துக்கொடுத்து, இவர்கள் அதைக் குறிவைக்கிற போது உயிரற்ற கட்டை போல இருந்துகொள்ளும். இந்தக் குறிப்பிட்ட தினத்தில் அது அசைவேயில்லாமல் நின்றுகொண்டது. “மிகப்பெரியதாக இருக்கப்போகிறது இது,” எனக் குசுகுசுத்தான் ராபி, “என் உள்ளுணர்வு அப்படித்தான் சொல்கிறது.” நடந்துகொண்டே தனது துப்பாக்கியை மெல்ல உயர்த்தினார் முதிய டட்லி. பைன் முட்கள் குறித்து அவர் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. தரையெல்லாம் மூடிக்கிடந்த அவை வழுக்கின. பக்கவாட்டில் நகர்ந்து நகர்ந்து தனது எடையை நகர்த்திய ராபி வழுக்குகிற அந்த முட்கள் மேல் அனிச்சையான கவனத்துடன் கால்களை எடுத்து வைத்தான். தலைக்கு நேராக மேலே பார்த்தபடி வேகமாக முன் நகர்ந்தான். முதிய டட்லி ஒரு கண்ணை முன்னோக்கியும் மறுகண்ணைத் தரையிலும் பதித்திருந்தார். அது வழுக்கினால் அவர் அபாயகரமாக முன்நோக்கிச் சரிய வேண்டிவரும், அடுத்து அவர் தன்னை மேல்நோக்கி இழுத்துக்கொள்ள முயலும்போது மீண்டும் கீழே சறுக்க வேண்டி வரும்.
”இந்த முறை வேணும்னா நா அந்தப் பறவைகளைப் பிடிக்கட்டுமா மொதலாளி?” என வினவினான் ராபி. “திங்கள்கிழமைகளில் உங்களால் சுறுசுறுப்பாக செயல்படமுடிவதில்லை. ஏதாவது ஒரு சரிவில் நீங்கள் சறுக்கினால், உங்கள் கைகளில் மேல்நோக்கி இருக்கும் துப்பாக்கி அந்தப் பறவைகளை சிதறச்செய்துவிடும்.”
முதிய டட்லி தானே அந்தக் காடைகளைப் பிடிக்க எண்ணினார். அவற்றில் நான்கை அவரால் வெகு சுலபமாகப் பிடித்துவிட முடியும். “நானே பிடிக்கிறேன்,” என முணுமுணுத்தார். துப்பாக்கியை கண்ணருகில் உயர்த்தியவர் முன்னோக்கிச் சாய்ந்தார். காலடியில் ஏதோ சறுக்க அப்படியே பின்னோக்கிச் சரிந்தார். துப்பாக்கி வெடித்ததில் பறவைகள் காற்றில் பறந்தோடின.
‘சில நல்ல பெரிய பறவைகளை நாம் நமது கைகளில் இருந்து இன்று தப்பிக்க விட்டுவிட்டோம்,” எனப் பெருமூச்சு விட்டான் ராபி.
”வேறு காடைகளைப் பிடித்துக்கொள்ளலாம்,” என்றார் முதிய டட்லி. “முதலில் என்னை இந்தப் படுகுழியிலிருந்து வெளியே தூக்கு.”

கீழே விழாமல் இருந்திருந்தால் அன்று அவரால் ஐந்து பறவைகளைப் பிடித்திருக்க முடியும். வேலிமேல் வைக்கப்பட்ட பாட்டில்களென அவற்றைச் சாய்த்திருப்பார். ஒரு கையை காதருகில் பின்னோக்கிக் கொணர்ந்தவர் இன்னொரு கையை முன்னோக்கி நீட்டினார். களிமண் புறாக்களென அன்று அவரால் அவற்றை வீழ்த்தியிருக்க முடியும். படார்! படியில் கேட்ட ஒரு கிறீச்சொலி அவரை அப்படியே – கற்பனை துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடியே – விழுந்து உருளச்செய்தது. அவரை நோக்கி படிகளில் ஏறிக்கொண்டிருந்த அந்தக் கருப்பினனின் ஆச்சரியம் கலந்த சிரிப்பு அவனது நறுக்கப்பட்ட மீசையை விரிவடையச்செய்தது. முதிய டட்லியின் வாய் பிளந்துகொண்டது. சிரிப்பை மட்டுப்படுத்த முயல்வது போல அந்தக் கருப்பினனின் உதடுகள் கீழ்நோக்கி இழுத்துக்கொண்டிருந்தன. முதிய டட்லியால் நகரமுடியவில்லை. கருப்பினனின் தோலுக்கு எதிர்நிறத்தில் அவனது கழுத்துப்பட்டை வரைந்த கோட்டினையே அவர் வெறித்துக்கொண்டிருந்தார்.
“எதை வேட்டையாடிக்கொண்டிருக்கிறீர், பழங்காலத்தானே?” என வினவிய கருப்பினனின் குரல் ஒரு கருப்பினனின் சிரிப்பைப்போலவும் வெள்ளையனின் பரிகாசம் போலவும் ஒலித்தது.
விளையாட்டுத்துப்பாக்கியுடன் இருக்கிற ஒரு குழந்தையைப் போல உணர்ந்தார் முதிய டட்லி. அவரது வாய் பிளந்திருக்க மத்தியில் நாக்கு அசைவற்றுக் கிடந்தது. அவரது முழங்காலுக்குக்கீழே பாதாளம் போல் உணர்ந்தார். கால்கள் தடுக்க இன்னும் மூன்று படிகள் சறுக்கி கீழே சென்று அமர்ந்தார்.

”நீங்கள் கவனமாய் இருப்பதுதான் நல்லது,” என்றான் கருப்பினன். “இந்தப் படிகள் வெகு சுலபமாக உங்களைக் காயப்படுத்திவிடும்.” என்றபடியே கைகளை முதிய டட்லியை நோக்கி நீட்டினான். அது ஒரு மெல்லிய நீண்ட கை, அதன் நுனியில் இருந்த நகங்கள் தூய்மையாகவும் சதுரமாகக் கத்தரிக்கப்பட்டும் இருந்தன. அவை அரக்கப்பட்டதுபோலும் தோன்றின. முதிய டட்லியின் கைகள் அவரது முழங்கால்களுக்கு இடையில் தொங்கின. கைகளால் அவரைப் பிடித்து மேலே இழுத்தான். ”ஹப்பா!” என மூச்சிரைத்த அவன், “நீங்கள் சற்றுப்பருமனாய் இருக்கிறீர்கள். என்னுடன் கொஞ்சம் ஒத்துழையுங்கள்.” என்றான். முதிய டட்லியின் முழங்கால்கள் நீண்டுகொள்ள அவர் கடினப்பட்டு எழுந்துகொண்டார். கருப்பினன் அவரைக் கைகளில் சாய்த்துக்கொண்டான். “நான் எப்படியும் மேலேதான் செல்கிறேன்.” என்ற அவன், “நான் உங்களுக்கு உதவுகிறேன்.” என்றான். முதிய டட்லி பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார். அவருக்குப் பின்னால் இருந்த படிகள் மூடிக்கொள்வதைப்போல் தோன்றின. கருப்பினனோடு சேர்ந்து அவர் படிகளில் ஏறிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு படியிலும் அவருக்காகக் காத்திருந்து நகர்ந்தான் கருப்பினன். “அப்படியாக, நீங்கள் வேட்டையாடுவீர்கள்?” எனத் தொடங்கினான் கருப்பினன். “ம்.. பார்க்கலாம். நான் ஒரு முறை மான் வேட்டைக்குச் சென்றிருந்தேன். அவற்றைப்பிடிக்க நாங்கள் டாட்ஸன்.38ஐ பயன்படுத்தினோம் என நினைக்கிறேன். நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள்?”
முதிய டட்லி அந்தப் பளீரிடும் பழுப்புச் சப்பாத்துகளை வெறித்துக்கொண்டிருந்தார். “நான் துப்பாக்கியைப் பயன்படுத்தினேன்,” என முணுமுணுத்தார்.

”வேட்டையாடுவதை விட துப்பாக்கிகளைக்கொண்டு பயமுறுத்துவதையே நான் விரும்புகிறேன்.” என்றான் கருப்பினன். “எதையும் கொல்வதை எப்போதுமே அதிகம் விரும்பியதில்லை. வளங்களை அளிப்பது ஒருவகையில் அசிங்கம் எனத் தோன்றுகிறது. என்றாலும், பணமும் நேரமும் இருந்தால் நான் துப்பாக்கிகளைச் சேகரிப்பேன் என்பதில் ஐயமில்லை.” முதிய டட்லி ஏறும்வரை ஒவ்வொரு படியிலும் அவன் காத்திருந்தான். துப்பாக்கிகளைப்பற்றியும் அவற்றின் வகைகள் பற்றியும் அவன் விளக்கிக்கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த சாம்பல் வண்ணக்காலுறை கருப்புப் புள்ளிகளைக் கொண்டிருந்தது. அவர்கள் படி ஏறி முடித்திருந்தனர். இன்னமும் அவரது கைகளைப் பிடித்தபடியே அறைகளை நோக்கி நடந்து வந்தவனின் கைகள் அவரது கைகளில் இறுகப் பிணைந்திருந்தது போல் தோன்றியது.

நேராக முதிய டட்லியின் வாசலுக்கே அவர்கள் சென்றனர். “இங்கேதானே நீங்கள் வசிக்கிறீர்கள்?” என கருப்பினன் வினவினான்.

கதவைப்பார்த்தபடி தலையை ஆட்டினார் முதிய டட்லி. இன்னமும் அவர் கருப்பினனை நிமிர்ந்து பார்க்கவில்லை. படிகளில் ஏறியபோது ஒருமுறை கூட அவர் கருப்பினனை நிமிர்ந்து பார்த்திருக்கவில்லை. “சரி, பழகிவிட்டால் இது ஒரு அருமையான இடம்.” என்ற கருப்பினன் முதிய டட்லியின் பின்புறம் தட்டிவிட்டு அவனது அடுக்ககத்திற்குச் சென்றான். முதிய டட்லி தனது அடுக்ககத்திற்குள் நுழைந்தார். அவரது தொண்டையில் இருந்த வலி இப்போது முகம் முழுக்கப்பரவி கண்களின் வழியாகக் கசிந்துகொண்டிருந்தது.

ஜன்னல் அருகே இருந்த நாற்காலிக்கு நகர்ந்தவர் அதனுள் விழுந்தார். அவரது தொண்டை வெடித்துவிடும்போல் இருந்தது. ஒரு கருப்பினனால் – இவரது பின்புறம் தட்டி பழங்காலத்தான் என அழைத்த ஒரு கருப்பினனால் – அவரது தொண்டை வெடித்துவிடும்போல் இருந்தது. அப்படியெல்லாம் நடந்துவிட முடியாது என நம்பியிருந்த ஒருவருக்கு! ஒரு நல்ல இடத்திலிருந்து வந்திருக்கும் அவருக்கு. ஒரு நல்ல இடம். இதுபோன்றவையெல்லாம் நடந்துவிட முடியாத ஒரு இடம். அவரது கண்கள் அதன் குழிகளுக்குள் வித்தியாசமாக உணர்ந்தன. வீங்கிக்கொண்டிருந்த அவற்றிற்கு ஒரே நிமிஷத்தில் அதற்குள் இடமே இல்லை என்பதுபோல் ஆகிவிட்டது. கருப்பினத்தவர்கள் உங்களை பழங்காலத்தான் என அழைக்கமுடிகிற ஒரு இடத்தில் இவர் மாட்டிக்கொண்டுவிட்டார். அவரைச் சிக்கவைக்க முடியாது. இல்லை, அவரை இல்லை. புடைத்து அடைத்துக்கொண்டிருந்த கழுத்தை ஆசுவாசப்படுத்துவதற்காக நாற்காலியில் தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டார்.
ஒருவன் அவரைப்பார்த்துக்கொண்டிருந்தான். எதிர்த்தெருவில் இருந்த ஒருவன் அவரை நேராகப் பார்த்துக்கொண்டிருந்தான். இவர் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஜெரேனியம் இருந்திருக்க வேண்டிய இடத்தில் உள்ளாடையுடன் நின்றவாறு, இவர் அழுவதைப் பார்த்தபடி அவரது தொண்டை வெடிப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தான். முதிய டட்லி அவனைப் பார்த்தார். அங்கே ஜெரேனியம்தான் இருந்திருக்க வேண்டும். அது ஜெரேனியத்தின் இடம், அவனுடையதல்ல. “அந்த ஜெரேனியம் எங்கே?” என இறுகிய தொண்டையிலிருந்து குரல் எழுப்பி வினவினார்.
”நீ எதற்காக அழுகிறாய்? எனக் கேட்டான் அவன். “இப்படி ஒருவன் அழுவதை நான் ஒருபோதும் கண்டதில்லை.”

”அந்த ஜெரேனியம் எங்கே? முதிய டட்லியின் குரல் நடுங்கியது. “அதுதான் அங்கே இருக்க வேண்டும். நீ இல்லை.”

“இது என்னுடைய ஜன்னல்,” என்றான் அவன். “விரும்பும்போது அதை அங்கே வைப்பதற்கான உரிமை எனக்குத்தான் இருக்கிறது.”

“எங்கே அது?“ முதிய டட்லி வீறிட்டார். அவரது தொண்டையில் மிகக்குறைவான இடமே இருந்தது.
“அது கீழே விழுந்துவிட்டது. உனக்கு அதில் ஏதாவது பிரச்சனையா?” என்றான்.
எழுந்துகொண்ட முதிய டட்லி ஜன்னல் வழியாகக் கீழே பார்த்தார். தெருவில் கீழே, ஆறு தளங்களுக்குக்கீழே, உடைந்த ஒரு பூந்தொட்டி குப்பைகளுக்கிடையே சிதறிக்கிடப்பதையும் பச்சைக்காகித இதழினூடாக வெளிர்சிவப்பு நிறத்தில் எதுவோ நீட்டிக்கொண்டிருப்பதையும் காணமுடிந்தது. அது ஆறு தளங்களுக்குக் கீழே கிடந்தது. ஆறு தளங்களில் மோதிச் சிதறியிருந்தது.

ஊதி ஊதி உடைக்கிற சவ்வுமிட்டாயை மென்றபடி எதிர்த்தளத்தில் நின்றவாறே இவரது தொண்டை வெடிப்பதைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த அவனை நோக்கிய முதிய டட்லி, “அதை அவ்வளவு ஓரத்தில் வைத்திருக்கக்கூடாது,” என முணுமுணுத்தார். ”நீங்கள் ஏன் அதை எடுக்கக்கூடாது?”
“நீ ஏன் எடுக்கக்கூடாது?”
”ஜெரேனியம் இருந்திருக்க வேண்டிய இடத்தில் நின்றுகொண்டிருந்த அந்த மனிதனை வெறித்துப்பார்த்தார் முதிய டட்லி.

அவர் சென்றிருப்பார். கீழே இறங்கிச்சென்று அதை எடுத்திருப்பார். வேண்டுமானால் அதனைத் தனது ஜன்னலில் வைத்து நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டிருப்பார். ஜன்னலிலிருந்து திரும்பியவர் அறையிலிருந்து வெளியேறினார். மெதுவாக நாய்க்கூண்டுகளைக் கடந்து படிகளுக்கருகே சென்றார். தரையில் ஒரு காயம் போல படிகள் ஆழமாய்க் கீழிறங்கின. ஒரு துளையின் வழியாக குகையைப் போல மேலும் மேலும் திறந்துகொண்டே சென்றன. கருப்பினனின் துணையுடன் அதில் கொஞ்ச தூரம் அவர் மேலே ஏறியிருக்கிறார். தரையில் கிடந்த அவரை மேலே தூக்கி கைகளில் சாய்த்து மேலே ஏறிய கருப்பினன் மான் வேட்டையாடி இருப்பதாகவும் இவரை பழங்காலத்தான் என்றும் கூறினான். அவன் முன்னே கற்பனைத் துப்பாக்கியைப் பிடித்தபடி ஒரு குழந்தையைப் போல படியில் அவர் அமர்ந்திருந்தார். மின்னுகிற பழுப்புச் சப்பாத்துகளை அணிந்திருந்த அவன் சிரிக்காமல் இருக்க முயன்றான், ஆனால் அங்கே அனைத்து நகைப்பிற்குரியதாகத்தான் இருந்தது. காலுறையில் கருப்புப் புள்ளிகள் கொண்ட கருப்பினர்கள் இன்னமும்கூட சிரிப்பை அடக்கியபடி அங்கே இருக்கக்கூடும். படிகள் மேலும் மேலும் கீழிறங்கிக்கொண்டே சென்றன. கீழே சென்று கருப்பினர்கள் இவரது பின்புறம் தட்ட அவர் அனுமதிக்க மாட்டார். அறைக்குத் திரும்பிச் சென்ற அவர் ஜன்னலின் அருகே சென்று ஜெரேனியத்தைப் பார்த்தார்.

ஜெரேனியம் இருந்திருக்க வேண்டிய இடத்தில் அந்த மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தான். “நீ அதை எடுத்தது போல் தெரியவில்லையே,” என்றான்.
முதிய டட்லி அவனை வெறித்தார்.
“இதற்கு முன்பும் உன்னைப் பார்த்திருக்கிறேன்,” என்றான் அவன். “தினமும் அந்தப்பழைய நாற்காலியில் அமர்ந்தபடி என்னுடைய அடுக்ககத்தினுல் இருக்கும் ஜன்னலை வெறித்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய அடுக்ககத்தில் நான் என்ன செய்கிறேன் என்பது என் சொந்த விஷயம், புரிகிறதா? நான் என்ன செய்கிறேன் என்பதை அடுத்தவர்கள் நோட்டமிடுவது எனக்குப் பிடிக்காது.”

அது வேர்கள் காற்றில் பறக்கத் தெருவில் தரையில் கிடந்தது.

“ஒருவருக்கு ஒருமுறைதான் நான் சொல்வேன்,” என்றுகூறிய அவன் ஜன்னலை விட்டு நீங்கினான்.

***

தமிழில் :- இல.சுபத்ரா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *