நீல. பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். வாசித்து முடித்திருக்கிறேன் என்பதை விட வாழ்ந்து முடித்திருக்கிறேன் என்பது திருப்தியாக இருக்கிறது. இன்னொரு முறை இன்னொருமுறை என சில வார்த்தைகளை பக்கங்களை அத்தியாயங்களை அனுபவித்து வாசித்த நாவலிது. இப்படி இன்னுமொரு நாவலை வாசித்த ஞாபகம் இல்லை. இந்த நாவல் பேசும் வாழ்வியல் மொழியும் நான் வாழும் மலைநாட்டு மக்களின் நடைமுறை வாழ்வியல் மொழியும் சமன்.

மலைநாட்டு மக்களின் வாழ்வியலை இலக்கியத்துக்குள் புனைவுக்குள் பதிவு பண்ண விரும்புவோருக்கு இந்நாவலின் மொழி தனித்துவமானதாக நிச்சயம் உதவும். எத்தனையோ முறை நான் வாழும் சூழலில் ‘வாழும்’ வார்த்தைகளை, மொழிகள் சிலதை எழுத்துக்கு கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். சிரமப்பட்டிருக்கிறேன் ஆனால் அந்த எத்தனையோ முறைகள் சிரமப்பட்டு இருக்கும் எத்தனையோ மொழிகளுக்கான திறவு கிடைத்திருக்கிறது.

வாழ்க்கை மற்றொன்று புனைவு. இது இரண்டுக்குமான தொடர்பின் இயற்கையின் இயைபில் தான் ஒரு நாவலுக்கான வெற்றி தங்கியிருக்கிறது. எந்த நாவல் தான் சொல்ல வந்த மக்களின் வாழ்க்கைக்கும் புனைவுக்குள் இருக்கும் கதைக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து கொள்கிறதோ அப்படியான நாவல் வாசகனால் கொண்டாடப்படுகிறது. காலம் காலமாக நிலைத்து வாழ்கிறது.
அதாவது வாழ்க்கை வேறு கதை வேறல்ல என்ற துணிபே புனைவுக்கான உயர்ந்த பட்ச தரம், வெற்றி. ‘தலைமுறைகள்’ நாவலை வாசிக்கும் போது ஒரு கதைக்குள் செல்வதை விட வாழ்வியல் அனுபவங்களின் மீதான உணர்வு தடங்களை தீண்டுவதாக அமைந்திருந்தது.

‘பெண்ணினத்திற்கு ஒரு ஆண் இழைத்த அநீதியை,இன்னொரு ஆண் மகன் ஆணவத்தோடு- தலைநிமிர்ந்து நின்று சவால் விடுவதுதான் நாவல். சில முரண் பாத்திரங்கள் சம்பிரதாயங்கள் நம்பிக்கைகளையும் முட்டி மோத விடுவதன் ஊடாக மேற்சொன்ன சவால் வெற்றியடைந்ததா தோல்வியுற்றதா என்பதுதான் நாவலின் பயணப்பாதை. இன்னொரு வகையில் சொல்வதென்றால் சாதியக் கட்டமைப்பில் ஊறி திளைத்து வளர்ந்து வந்த ஒரு சமூகத்தின் பிறழ்வுகளை, மூடநம்பிக்கைகளை முட்டி மோதி உடைத்து விழித்தெழும் ஒரு தனித்த மனிதனின் 25 வருடகால வாழ்க்கை அனுபவம் தான் நாவல்.

தலைமுறைகள் கதை தாங்கி நிற்கும் கலாசாரம் பச்சை பசேலென நாவல் முழுதும் தென்படுகிறது. இந்த நாவலை சொல்ல கதை ஆசிரியர் கையாண்ட மிக முக்கியமான உத்திமுறையும் அந்த கலாசாரத்தை தாங்கி நிற்கும் நம்பிக்கை சடங்கு முறைகளில்தான் தங்கியிருக்கிறது. கதை செல்லும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதோ ஒரு வகையிலான சடங்கு அந்த சடங்கோடு ஒட்டியிருக்கும் பண்பாட்டு தடம், நம்பிக்கை என கதை நகரும். அந்த தடங்கள் நிஜமாகவே ஒரு திரைகாட்சியை பார்ப்பதாக அனுபவம் உள்ளதென்றால் நமக்கு கண்முன் நிகழ்வதாக இருப்பதற்கான எழுத்தை உயிரோட்டமாக கொடுத்திருப்பதுதான் நீல. பத்மநாதனின் தனித்துவ எழுத்து கலை.

புனைவுக்குள் சொல்லப்படுகின்ற சம்பிரதாயங்கள் சடங்குகளுக்காகவே நிகழ்வுகளும் பாத்திரங்களும் சம்பாசணைகளும் உருவாக்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்த பாரம்பரிய சமூக வாழ்க்கை முறையை பக்கத்தில் இருந்து பார்க்கும் உணர்வையோ அல்லது பங்குபற்றுதலால் ஏற்படும் அனுபவத்தையோ கதை கொடுத்திருக்கும். மனிதன் பிறக்கும் முன்பிருந்து அவன் இறந்து முடியும் வரையான காலப்பகுதியில் செய்யப்படுகின்ற சடங்குகள் சம்பிரதாயங்களின் அ முதல் ஃ வரையான தொகுப்பே இந்த நாவல். இந்த நாவல் இவ்வளவு நீண்டு செல்வதற்கும் இன்றளவும் வெற்றிபெற்று விளங்குவதற்கும் இந்த கதை சொல்லும் நுட்பமே தலை.

நாவலின் மொழி அசகு பிசகில்லாத அப்பட்டமான நிகழ் சூழலின் காட்சி படுத்தல் பாத்திரங்கள் பலதும் பத்தும் வந்து வந்து போனாலும் கதையை தாங்கி நிற்கும் சில பாத்திரங்களுடன் ஒவ்வொரு அத்தியாயத்திற்குமான ஊகிக்க முடியா திருப்பம் என்பன வாசகர்களுக்கு தடையற்ற வாசிப்பை முழுத்திருப்தியை கொண்டிருக்கிறது.

‘திரவி’ நாவலின் மூல கதாபாத்திரம். அவனோடு ஒட்டி பயணிக்கும் கூனாங்காணிப் பாட்டா,பொணமூ ஆச்சி,அணஞ்சிப்பிள்ள ஆச்சி,உண்ணாமலை ஆச்சி,தாயிச்சித்தி,செம்பி ஆத்தா,கோலப்பச்சித்தப்பா,நீலாப்புள்ளச் சித்தி,ஆண்டிப் பிள்ள மாமா, குற்றாலம், நாகு அக்கா,செவத்த பெருமால் போன்றவர்களின் வாழ்வியல் தடங்களோடும் அவர்கள் ஏற்படுத்தும் எதிரிடையான வாழ்க்கை முறைகள் உள்ளுணர்வுகளின் தளம்பல்கள் நுண்ணுணர்வுகளை மிக ஆழமாக பதிவு பண்ணி நாவல் முற்றுபெற்றிருக்கும். தலைமுறைகள் என்ற இந்த புனைவின் பெயருக்கும் மேற்சொன்ன பாத்திரங்களின் அறிமுகத்திற்கும் நாம் அறியக்கூடிய அல்லது ஊகத்தில் உணர்ந்துக் கொள்ளக்கூடிய தலை முறைகளை தாங்கி நிற்கும் அல்லது கடந்து வரும் பாரம்பரியங்களின் முதுமைகளை அல்லது மூதாதைகளை காணலாம்.

நாகு அக்கா, திரவியின் அக்கா அவளை சீரும் சிறப்புமாக கடனை உடனை பட்டு செவத்த பெருமாலுக்கு திருமணம் முடிந்து வைக்கிறார்கள். ஆனால் சில மாதத்திலே செவத்த பெருமாளாலும் மாமியாராலும் அடித்து துரத்தப்படுகிறாள். ஆண்மை குறை பாடான செவத்த பெருமால் தன் குற்றத்தை மறைக்க ஒரு அப்பாவி பெண்ணின் அப்பாவி குடும்பத்தின் நிம்மதியை கீறி கிளரிவிடுகிறார்கள். இதுதான் மூலக்கதை திரவி என்ற கதாபாத்திரம் செவத்த பெருமால் அத்தானோடு தன் அக்காவை சேர்த்து வைத்தானா இல்லையா என்பதுதான் நாவலின் பயண அளவு. இது சிறுவனான திரவிக்கு இருபத்தைந்து வயது வரைக்குள் நிகழக்கூடிய கதை.

நீல,பத்மநாபனின் எழுத்து நுட்பமும கதை சொல்லும் திறனும் திரவிக்கான இந்த இருபத்தைந்து வயதுக்கு இடைப்பட்ட அனுபவத்தைதான் தாங்கி நிற்கிறது இவனுக்கு இந்த வயதுகளுக்கு இடையில் அங்கு இடம்பெறும் சம்பிரதாயங்கள் சடங்குகளை அவன் வயதெல்லைக்கு அவனின் அனுபவத்தில் எட்டிய அளவான பார்வையில் பார்ப்பதுதான் நாவல். அந்த எட்டிய அளவில் விவரிப்பிலேயே நாவலின் மூல கதை அங்கு இருக்கக்கூடிய வாழ்வியல் முறைகள் சடங்கு சம்பிரதாயங்கள் காட்டப்பட்டிருக்கும். அதுவே தாராளமாக போதுமானதாக இருக்கிறது நாவல் வாசிப்பின் சுவாரஸ்யத்திற்கு.

இந்த நாவலில் கோடிட்டு காட்டக்கூடிய இன்னொரு முக்கிய அம்சம் நிறைய பாத்திரங்களின் அறிமுகமும் நனவோடையாக பயணிக்கும் அந்த பாத்திரங்களுக்கான கதையும் எந்த வகையிலும் மூல கதைக்கான கதாபாத்திரங்களை சிதைப்பதாகவோ மூல கதை கருவதை சிதைப்பதாக இல்லாமல் வலு சேர்ப்பதாக இருக்கிறது. புனைவை வாசித்து முடிக்கும் போது யார் யார் மனதில் ஆழப்பதிகிறார்களோ அவர்களே கதையின் மூல அல்லது முக்கிய கதாபாத்திரம். கட்டாயம் வாசித்து அனுபவிக்கக்கூடிய மிக அற்புதமான நாவலிது.

-V.M.ரமேஷ்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *