மசூதியில் மந்திரித்து அது போதாதென்று மலையாள மாந்திரீகன்  ஒருவனை அழைத்து வந்தார்கள். உருண்டையாக  சிறு பந்து போல சுற்றிக் கிடந்த கருப்புக் கற்றை முடிகளை வயிற்றில் இருந்து அவன் வெளியில் எடுத்ததாக தாழ்வான குரலில் அம்மாவிடம் ரவி மாமா சொன்னது கேட்டது. சத்தம் வராது சேலையால் வாய் பொத்திக் கேவினாள் அம்மா. இனி சரியாகிடுமில்ல சரியாகிடுமில்ல எனத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள்.
வெகு நேரமாக தூரத்தே தெரிந்த கிளைகளெங்கும் சிகப்புப் பூக்களாய்ப் பூத்திருந்த பூவரச மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தியின் சிகப்பு, வானமெங்கும் பரவிக் கிடந்ததன் பின்னணியில் இந்த மரம் தான் சூரியனைப் பிரசவித்தது போலிருந்தது. இன்னொரு பக்கத்திலிருந்து பார்க்கையில் சூரியனை மறைத்துப் பூத்திருந்த ஒரு மலர் கிளைகளில் அல்லாமல் வானத்தில் பூத்திருப்பதாய்த் தோற்றம் காட்டியது.
கோ எஜுகேஷன் பள்ளியில்  பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் பூவழகி. அவளுடைய வகுப்பில் படித்த குமுதா பள்ளியில் இருந்த எந்தப் பையன்களிடமும் பேசாத ராங்கிக்காரி எனப் பெயரெடுத்தவள்.  பூவழகியின் அம்மாவும் அவள் அப்பாவும் பக்கத்து ஊரின் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் என்பதே அவள் பூவிடம் பாசமாக பழகவும் ஒன்றாக பள்ளிக் கூடம் போய்வரவும் காரணம். அன்றைக்கும் வழக்கம் போல் ஒன்றாகத் தான் பள்ளிக் கூடம் போனார்கள். வழக்கம் போல தான் எல்லாமும் நடந்தது. அதாவது வீட்டுக்குத் திரும்பும் வழியில் ராயர் கடை முக்கருகே இருந்த மாமரம் வரும் வரை. ஏய் எனக்கு மாங்கா பறிச்சுத் தரியா எனக் கொஞ்சும் குரலில் கேட்டதும் சிறகு பொத்திய பச்சைக் கிளிகள் கிளைகளில் ஊஞ்சலாடுவது போலத் தொங்கிய மாங்காய்களில் ஒன்றைப் பறித்து அவளிடம் வீச அது நேராக அவள் நெற்றியில் போய் மோதியது. பதறிப் போன பூவழகி ஓடி வந்து பார்க்கும்போது கீழே விழுந்துவிட்டிருந்தாள். பயப்படாத குமுது ஒண்ணுல்ல ஒண்ணுல்ல என்று நெற்றியைத் தேய்த்துவிட்ட போது தான் கடல் மாதிரி ஆழமான அந்தக் கண்களை நன்றாகப் பார்த்தாள். திருத்தமான முகம். சிகப்பு வரிகளோடிய  உதடுகள். மெல்ல அணைத்துக் கொண்டாள். குமுதா “லூசு ஒழுங்கா போடறதுக்கென்ன”? எனத் திட்டியபடி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். இப்போது தான் அவளை முதல் முறையாக பார்ப்பது போலத் தோன்றியது பூவழகிக்கு. அப்படியே உட்கார்ந்திருந்தவளை “வா பூவழகி எழுந்து!” என்று கூப்பிட்டாள். எதோ ஒரு சொல்லத் தெரியாத புது உணர்வு அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்ற வைத்தது. “இருட்டத் தொடங்கிருச்சு. சீக்கிரம் வா பூவு” என்று வந்து எழுப்பி இழுத்துக் கொண்டு போனாள். அன்று மாறிப் போனது எல்லாம்.
கணக்கு வீட்டுப்பாடம் செய்யும் போது தப்பு தப்பு எனச் செல்லமாகத் தலையில் குட்டுவாள். அடி கிடி எதுவும் இல்லியே என்று நெற்றியை ஆசையாக வருடுவாள். வெய்ட் போட்டுட்ட என்று இடுப்பை அணைத்தபோது “ச்சீய். விடு. கூசுது!” என்று ஓடிப் போனாள் குமுதா. அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இரண்டு நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றதும் பூவைத் தேடி வீட்டுக்கே வந்துவிட்டாள். “எப்படி இருக்கே. ஜுரமாமே. நீ இல்லாம வகுப்பே புடிக்கல” என்று நெற்றியில் கைகளை வைத்து மெல்ல அழுத்தினாள். காய்ச்சல், அவளை இத்தனை நாள் பார்க்காத ஏக்கம் எனத் தடுமாற்றத்தில் இருந்த மனம் இப்போது முழுதும் கிளர்ச்சி அடைந்தது. பவுடரா பர்ஃப்யூமா எதோ ஒரு மணம், அவளுடைய கரிசனமான பார்வை, அந்த ஸ்பரிசம்…. பூவழகி தன்னிலை இழக்கக் துவங்கினாள். குமுதா போயிடு உடனே போயிடு என முணுமுணுத்தாள். “எதோ பேசற என்னனே கேக்கல” என்று தன் முகத்தை நோக்கி குமுதா குனிந்த நொடியில் கட்டுகளுடைத்து சடசட வெனச் சிறகுகள் அடித்து விர்ரெனக் கிளம்பியது சாம்பல் வண்ணப் புறா. வரி வரியாக மேலும் கீழும் குறுகியும் நீண்டும் தெரிகிற அவளுடைய உதடுளை தனக்கே தெரியாமல் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு நொடி. இல்லை அதற்கும் குறைவான நேரம். சட்டென பூவழகியின் முகத்தைத் தள்ளிவிட்டு அதிர்ந்து போய் கட்டிலில் இருந்து எழுந்தாள். அழுகையும் கோபமும் வேதனையும் கலந்து முகம் கோணியது. உவ்வேக் என்ற சத்தத்துடன் அறையை விட்டு வெளியே ஓடினாள் குமுதா.
மிகத் துல்லியமாக அப்போது உள்ளே நுழைந்த அம்மாவுக்கு எதுவும் புரியவில்லை. விழாமல் இருக்க கட்டிலைக் கெட்டியாக பிடித்துக் கொண்டாள். இது என்ன கருமம்? ஒத்தப் புள்ள னு பொத்திப் பொத்தி வளத்தனே! எனத் தலையிலடித்துக் கொண்டு அழுதாள். பூவழகி எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டாள். அடுத்த நாள் காலை விடிந்து கொஞ்ச நேரத்தில் அழுதழுது வீங்கிய முகத்துடன் வந்தவள், “எழுந்திரு. முட்டி போடு. இனி இப்படி செய்ய மாட்டேன் னு சொல்லு. நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வரும் வரை முட்டி போடணும்” என்றாள். எழுந்து முட்டி போட்டாளே தவிர இனி செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை. அம்மா எவ்வளவு திட்டியும் அடித்தும் அழுதும் சொல்லவில்லை. “எனக்கு அதான் பிடித்திருக்கிறது. ஏன் சொல்லணும்” எனப் பிடிவாதமாக இருந்தாள். “உங்கப்பன் கூடவே நீயும் செத்துத் தொலைய வேண்டியது தானே” என்று மறுபடி அழுதவள் அன்று வேலைக்கும் போகவில்லை. பித்துப் பிடித்தவள் போலிருந்தவள் இதற்கு என்ன செய்ய என்று ரொம்ப நேரம் யோசித்து தன் உதவாக்கரை தம்பியை ஃபோன் சேய்து கூப்பிட்டாள்.
ரவி மாமா. வேலை எதும் பார்க்காது ஊர் சுற்றுபவன். காசு வேண்டும் என்றால் அக்கா என்று பாசமாக கூப்பிட்டு கை நிறைய‌ அள்ளிக் கொண்டு போவான். பூவுக்கு இதெல்லாம் பிரச்சினை கிடையாது. வர வர அவன் பார்வையே சரியில்லை. “அக்கா நம்ம பூவு நல்லா வளந்துட்டா” என்று சொல்லிவிட்டு அவள் மாரையே பார்ப்பான்.  “உனக்காக ஆசாசையா வாங்கி வந்தேன்” என்று  கொலுசுகளைக் கொண்டு வந்து “நான் தான் எங்கக்கா மவளுக்கு போட்டுவுடுவேன்” என்று கெண்டைக் காலைத் தடவுவான். அம்மா இதைக் கவனிக்கிறாளா என்று பூவுக்குத் தெரியவில்லை.
அவனைத் தவிர தனக்கு உதவி செய்ய யாராலும் ஆகாது என திடமாய் நம்பிய அம்மா அவனிடம் இதற்கு பரிகாரம் கேட்ட நொடியே அவன் என்னைப் பார்த்தது இளித்த மாதிரி தான் இருந்தது. “நான் இதுக்கு மேல லீவு போட முடியாது நீ இவளைப் பாத்துக்க” என்று அம்மா தெரு முக்கு திரும்பியிருக்க மாட்டாள். மாமா பூவு படுத்திருந்த கட்டிலில் ஓரமாக உட்கார்ந்து “உனக்கு தான் நான் இருக்கேன் ல. கவலைப்படாத” என்று அவள் கழுத்தை வருடினான்.
 ” மரியாதையா கையை எடுத்துடு” எரிச்சலாகத் தட்டிவிட்டாள்.  “என் பொறுமைய சோதிக்காத. இப்ப ஊரு உலகத்துல இல்லாத அப்படி நான் என்ன செஞ்ட்டேன்” என்று மறுபடி அவன் கைகள் அவளை நோக்கி நீண்டன. “நீ போகல னா அம்மாகிட்ட சொல்லிடுவேன்” என்றதைக் கேட்டு அமைதியாக எதோ யோசித்துக் கொண்டே வெளியேறினான். அம்மா வந்த பிறகு அவளுக்குக் கேட்காத சன்னக் குரலில் எதோ பேசினான். அம்மாவின் முகம் வேதனையில் துவள்வது தெரிந்தது.  “மானம் மருவாதையெல்லாம்  போயிடும் ரவி. நீ எதுனா வழி சொல்லு” என்று அழுதாள்.  “சரிக்கா நீ அழுவாத. நான் நல்லா யோசிச்சு நாளைக்கு இதுக்கு ஒரு வழி சொல்றேன்” என்று
கிளம்பினான்.
போனவன் அதற்குப் பிறகு இந்தப் பக்கமே வராதது நிம்மதியாக இருந்தது. “நீ பாட்டுக்கு பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிடாதக்கா” என்றவனின் பேச்சை வேதவாக்காக எடுத்துக் கொண்ட அம்மாவை எதிர்த்து எதுவும் செய்யாமல் சமையலில் வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தாள். பூவுடன் பேசுவதை அறவே தவிர்த்ததைக் கூட தாங்கிக் கொள்ளலாம். அவளுடைய அருவருப்பான பார்வை தான் வேதனையாக இருந்தது. இப்படியே இரண்டு வாரங்கள் போன பின் ஒரு நாள் ரவி திரும்ப வந்தான். என்ன நடந்தது என்று தெரியவில்லை அம்மாவின் முகம் பேயறைந்தது போல இருந்தது. பேசிப் பேசி அவளை எதற்கோ சம்மதிக்க வைப்பது தெரிந்தது.
தூங்கி எழுந்த போது பூவழகியின் இடுப்பும் தொடைகளும் கனத்தன. கட்டிலில் இருந்து இறங்க முடியாமல் உடலெங்கும் வலித்தது. நைட்டி தோள் பக்கம் கிழிந்திருந்தது. பிறப்புறுப்பில் ரத்தம் திட்டாக உறைந்திருந்தது. பீரியட்ஸ் கூட இல்லையே என்ன ஆச்சு என்று யோசித்தபோது குப்பென்று அந்த வாடை அடித்தது. ரவி மாமாவிடம் வீசும் சிகரெட்டும் சாராயமும் கலந்த வாடை.  ஓ வென்று கத்தி அழுதாள். கட்டிலை விட்டு இறங்கவே முடியாது கனத்த உடலை கஷ்டப்பட்டு எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை வேகமாக சாத்தித் தாளிட்டாள். தேய்த்து தேய்த்து குளிக்கக் குளிக்க சோப்பில் அந்த வாடை ஒட்டிக் கொண்டதாகத் தோன்றியது. இத்தனை நாள் எவ்வளவு கெஞ்சியும் பேசாத அம்மாவிடம் இன்று பேசிவிட வேண்டும். இதைச் சொல்லிவிடலாம் என வந்தபோது சமையலறையில் அம்மாவிடம் ரகசியக் குரலில் ரவி மாமா பேசுவது கேட்டது ” இனி சரியாகிடுவாக்கா. இதான் அவளை நார்மலாக்க நமக்கிருந்த ஒரே வழி. உனக்காக தான்கா. நீ அழக் கூடாதுனு தான். கவலைப்படாதக்கா. உனுக்கு சம்மதம்னா நானே அவள ரெண்டாந்தாரமாக் கட்டிக்கிறேன். இல்ல வேணாம்னா கொஞ்ச நாள் போகட்டும். என் ஃப்ரெண்ட்ஸூங்க நெறய பேர் இருக்கானுங்க. அதுல நல்லவனா ஒருத்தனப் பாத்து கட்டி வச்சிரலாம். சரி! ஒரு 500 ரூவா இருந்தா குடுக்கா”.
-கயல்
Please follow and like us:

18 thoughts on “திரிபு

 1. அரிதாக தொடப்படும் டாபிக் அருமையாக எழுதியிருக்கீங்க கயல். இத்தகைய வன்முறை எல்லாம் நம்ம நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கிறது என்பது வேதனை. உவமை எல்லாம் அருமை. கதையின் முடிவு பெரிய சோகத்தை குடுக்குது.

 2. கதை, நமது சமூக அமைப்பின் இடுக்குகளுக்குள் நுழைந்து பார்க்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா? என்று சில நேரம் நம்மை சிந்திக்க வைத்து, இருண்டு கிடக்கும் உண்மைக்கு அருகில் கொண்டு போய் நிறுத்தி வைக்கிறது. சில அநியாயங்கள் நியாங்கள் போல் போலி வேடம் தரித்து விடுவது நம் சமூகத்தில் இயல்பாக நடந்து விடுகிறது. இந்த கதையின் முடிப்பு எதார்த்தம் தானா? சில நேரங்களில் அதிர்வுகள் நம்மை பெரும் அச்சத்தில் உறைய வைக்கிறது. கதையின் இறுதியில் இது தான் மிகவும் உறைய வைக்கும் இடம்.

  நன்றி கயல் ❤

 3. வித்தியாசமான கதை. இப்படிப்பட்ட கேவலமானவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

  கதை சொல்லும் உத்தி அருமை.

  கவிதைகள் எழுதியும் மொழிபெயர்ப்பும்செய்துவந்த கயல் சிறுகதையில் கால் வைத்திருப்பது மகிழ்ச்சி.

  இன்னும் நிறைய சிறுகதைகளை இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.

 4. விழி பிதுங்கம் விடளைகள்!

  உணர்வுகளை சிந்தனை ஓட்டங்களை முறையாக பெற்றோர்களிடம் தெரிவிக்கப்படும் முடியாத இறுக்கமான சூழ்நிலைகளுக்குள் அகப்பட்டு கிடக்கும் நம் பிள்ளைகளில் ஒருத்தி இவள்!
  விடலை விபரீதங்களை உணர்ந்து புரிந்து உடன்பட்டு
  கலந்து பேசி வாழிநடத்த
  இயலாமலும் எங்கே இழி பெயர் தனக்கு வந்து விடுமோ என்கிற சுயநலம் உள்ள பெற்றோர்.!!.
  கதையில் அடிக்கொடிட்ட ஒரு
  தகவல் இருக்கிறது !!…
  கல்வி பிள்ளைகளை விட
  பெற்றோருக்கு தேவையென்று!!

 5. சிறப்பு கண்ணம்மா .முதல் கதையிலே யாரும் பேசத் தயங்கும் கருவை கையில் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுகதையிலும் உச்சம் தொட மனம் நிறைந்த வாழ்த்துகள்.

 6. உண்மையில் இந்த தளத்தை தேர்ந்தெடுத்தமைக்கே ஒரு சபாஷ் !

  பதின்பருவ மனோநிலையை படம் பிடித்து காட்டியது இந்த கதை!

  எத்தனை எத்தனை குமுதாக்கள் மனதிற்குள் ஏராளமான விசயங்களை புதைத்துவிட்டு புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் !

  பூ, குமுதா , அம்மா , ரவி மாமா
  எளிய மக்களின் அறியாமை, அதில் இருக்கும் வக்கிரம், சுயநலம், இயலாமை , உடல் சார் புரிதல் , அழகியல் அருமைங்க கயல் !

  குமுதாவுக்கு பூவின் மீது ஈர்ப்பு ஏற்படுகின்ற பகுதி அருமையான இயல்பான எழுத்து நடை.

  இனி சிறுகதைகளிலும் களமாட

  வாழ்த்துகள்

  அன்புடன்
  செந்தில் பிரகாஷ்

 7. நெஞ்சடைச்ச மாதிரி ஆகிடுச்சு . இப்படியும் இருக்காங்க தான் … முதல் முயற்சியே வாசர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதியிருக்கீங்க. வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்து நிறைய எழுதுங்க.

 8. அரிதான அதிர்ச்சி தரும் கதைக் கரு வெகு இயல்பான கவித்துவமான உவமைகளுடன் சரளமான நடையில் சொல்லப் பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள். சிக்கனமான வாழ்த்தைகள், நேரான கதை சொல்லும் உத்தி, தெளிவான ஸ்டீரியோ டைப்பில்லாத பாத்திர வார்ப்புகள். பெண்கள் மீதான பாலியல் மீறல்களின் இருவேறு வடிவங்கள் செதுக்கப்பட்ட பூ . கதை உத்தேசிக்கும் அதிர்ச்சியை வாசக மனங்களில் துள்ளியமாக எழுப்புவதில் கலாபூர்வமாக வெற்றி பெற்று இருக்கிறது. பூவழகியின் அம்மா ஆசிரியர் என்பது முடிவின் நம்பகத் தன்மையை குறைக்கிறது. (அதை சமூக ஆசிரியர்களின் விவேகத்தின் மீதான எழுத்தாளரின் விமர்சனப் பார்வை எனக் கொள்ளலாம் எனினும்)

 9. கதையின் போக்கு இயல்பாக இருக்கு.பூவழகிக்கு குமுதா மேல் வரும் ஈர்ப்பு ,பூவை சூரியனோடு ஒப்பிடும் இடம் இதெல்லாம் சிறப்பாக வந்திருக்கு.
  ஒரு முறை வாசித்தவுடனே கதை மனதில் தங்கிவிடுகிறது.இன்னும் போக வேண்டிய கதையை நீங்களே முடிவை நோக்கி தள்ளியது போல் எனக்கு தோன்றியது.இன்னும் விரிவாக போய் இருந்தால் பல நுட்பமான இடங்களை கதை தொட்டு இருக்கும்.
  பூவழகியின் பாத்திரச்சித்தரிப்பு அவ்வளவு தெளிவு.
  பூவழகி?

 10. அன்பு தோழி கயல். உங்கள் கதையை வாசித்தேன். உண்மையில் ரொம்ப sensitive issues குறித்த கதை. நீங்க அதை சிறப்பாகவே சொல்லியிருந்திங்க. ஆனாலும், சட்டென முடிந்துவிட்ட ஓர் உணர்வு வந்தது. கதையை மூடித்து அந்த இறுதி நிமிடங்களில் பூவழகிக்காக மனம் சிந்திக்க தொடங்கியிருந்தது. பாவம் அவள். அவளின் அம்மாவும்கூடத்தான். சிறுகதை எழுத தொடங்கியிக்கும் உங்களின் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

 11. நல்ல முயற்சி. குமுதா-பூவழகிக்கான உறவு சொல்லப்படாத உலகம். உங்க எழுத்தில் அது நல்லா சொல்லப்பட்டிருக்கு. . முதல் கதையே இப்படியான ஒரு தளத்தில் எழுதுவது பாராட்டுகுரியது.அதுவே பெரிய எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது. அதன் அடிப்படையில் முடிவு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்க்லாம். அவர்களிருவரின் உறவை மட்டுமே மையப்படுத்தி விரிவாக எழுதினால் நல்லதொரு படைப்பாக வரும். .உங்களூடைய ஆரணயம் கவிதை தொகுப்பு எனக்குப் பிடித்த தொகுப்புகளில் ஒன்று. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

 12. நல்ல முயற்சி. குமுதா-பூவழகிக்கான உறவு சொல்லப்படாத உலகம். உங்க எழுத்தில் அது நல்லா சொல்லப்பட்டிருக்கு. . முதல் கதையே இப்படியான ஒரு தளத்தில் எழுதுவது பாராட்டுகுரியது.அதுவே பெரிய எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது. அதன் அடிப்படையில் முடிவு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்க்லாம். அவர்களிருவரின் உறவை மட்டுமே மையப்படுத்தி விரிவாக எழுதினால் நல்லதொரு படைப்பாக வரும். .உங்களூடைய ஆரணயம் கவிதை தொகுப்பு எனக்குப் பிடித்த தொகுப்புகளில் ஒன்று. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

 13. ஒத்துக்கொள்ள முடியவில்லை, வேற வழியே இல்லை? உணர்வுகளைப்புரிய அத்தனை கடுமையான நிலைப்படுத்தலுக்கு
  ஒப்புக்கொள்ளும் தாய்மையை
  ஏற்க மனம் பதருகிறது.
  குற்றமல்லாததனின் தீர்வு பொறுத்த குற்றமாகுமா என்ன? சடுதியில் மணமுடித்த என் சகோதரிகளின் தோழிகளை அவர்களின் பதின்ம வயதில் நடந்ததற்கு பின் பேசிக்கொண்டதை கேட்டிருக்கிறேன்…

  தீரா வலியோடு
  இப்படி அல்ல…

  இருக்கவும் உள்ளவர்களை
  எரிக்கவுமே சகோ

 14. முதல் சிறுகதைக்கு வாழ்த்துகள். நல்ல களம். சிறப்பான முயற்சி. இன்னும் நிறய சிறப்பான சிறுகதைகள் உங்களிடமிருந்து வரும் என எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்.

 15. வாசித்து விட்டேன். ஒர் பாலின ஈர்ப்பு அது ஏற்படுத்தும் பாதிப்பு என்று பொதுவாக யாரும் தொடத் தயங்கும் கதைக் கரு. அந்த வகையில் வாழ்த்துகள்.

  ஆனால் அந்த ஈர்ப்பு இன்னும் கொஞ்சம் விரிவாக உணர்த்தப்பட்டிருக்கலாம். குமுதாவுக்குமே அது அதிர்ச்சியாக இருந்ததென்பது ஒரு வரியில் முடிந்து விடுகிறது. ஒரு பக்க ஈர்ப்பு குமுதா மீது என்ன உளவியல் சிக்கல்களை உருவாக்கியிருக்குமென தீர்வெழுதாமல் பூவழகியின் தாயாரின் அறியாமையும் பி ற் போக்குத்தனமும் ரவி மாமா போன்றவர்களால் எவ்வாறு உபயோகப்படுத்தப்படுகிறதென்று போக்கை மாற்றி விட்டீர்கள் 🙂

  பூவழகியின் மனவோட்டங்கள் இன்னும் நன்றாக வெளிப்படுத்தப் பட்டிருக்கலாம். சீக்கிரம் கதைய முடிச்சுட்டு கிளாசுக்கு போகணும்ன்னு நெனச்சுட்டே எழுதுன மாதிரி ஓர் அவசர கதையில் கதை முடிவது போலத் தோன்றுகிறது.

  கதாசிரியராக மூக்கை நுழைத்து சம்பவங்களுக்குள் கருத்து மழை பொழியாமல் அதன் போக்கில் கதையைச் சொல்லி முடித்தது பெரிய ஆறுதல்.

  கதா பா த் தி ரங் களுக்கு இன்னும் கொஞ்சம் விரிவான ஸ்கெட்ச் கொடு த்திருக்கலாம்

  மற்றபடி உங்கள் உரைநடை வெகுஅழகு. இலகுவாக நகர்த்திச் செல்லும் உத்தியும்

  இவையே என் இரண்டணாக்கள்!!

 16. பதின்ம வயதிலிருக்கும் ஒரு பெண் தன் தோழியோடு புரிதலற்ற பாலியல் ஈர்ப்புக் கொள்கிறாள். இதை தெரிந்துகொண்ட தாய் தன் ஏற்கெனவே திருமணமான தன் தம்பியை விட்டு பாலியல் இராக்கம் செய்வதாய் நிற்கிறது. கதை . இங்கு எது தவறு என சுட்டப்படுகிறது? பதின்ம தோழியோடு ஏற்படும் பாலியல் ஈர்ப்பா? அதற்கு தம்பியை விட்டு பாலியல் அத்துமீறலை அனுமதிக்கும் தாயா? இரண்டுமே விதிமீறல்கள்தான். பதின்ம வயதில் ஏற்படும் பாலியல் குழப்பத்தை சரி செய்ய முயற்சி செய்யாமல் இப்படியா பிரச்சனைக்கு தீர்வு காண்பது?

 17. விடலை பருவத்திற்கான இயற்கையான பாலுணர்வு உந்துதல்….அதுவும் அது ஒரே பாலினத்தவர் மேலும் ஏற்படலாம் என்பதை போகிற போக்கில் சொல்லிவிட்டு, மகளின் உணர்வுகளை புரிந்து பேசி அவளுடன் நிற்காமல், இப்படி ஒரு இழிச் செயலுக்கு துணை நிற்கும் ஒரு அம்மாவை காட்டி பெற்றோர்களின் புரிதலின்மையை, தன் கௌரவம் காக்க வேண்டி பிள்ளைகளின் வாழ்வை நாசமாக்கும் பெற்றோர்களை இடித்துரைத்து செல்கிறது கதை!
  Hats off for the subject Kayak.

 18. துணிவான, திகைக்க வைக்கும் கருவைத் தேர்ந்தமைக்குப் பாராட்டுகள். முடிவை துவக்கத்தில் வைத்து கதையைத் துவக்கியிருக்கும் உத்தி சிறப்பு. கவிஞர் கயல் அவர்களின் கதைசொல்லும் தன்மையை ஏற்கனவே முகநூல் பதிவுகளில் கண்டிருக்கிறேன். கதையாசிரியர் கயல் அவர்களுக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *