டந்த 2000 ம் ஆண்டிற்குப் பிறகு இணையத்தின் தாக்கத்தால் ஊடகம், பதிப்பகம் ஆகிய துறைகளில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்தது. அப்போது சிறுபத்திரிக்கைகளில்  மட்டுமே எழுதி வந்த படைப்பாளிகள்  மாற்றத்திற்குத்தகுந்தாற்போல தங்களது எழுத்து வெளியீட்டு முறைகளை இணையவெளிக்குத் தகுந்தாற்போல மாற்றிக்கொண்டனர். இதனால் சில எழுத்தாளர்கள் பெரும் வாசகப் பரப்பை அடைந்தனர். பல புதிய வாசகர்கள் புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டனர். இது பரஸ்பர பண்டமாற்றுபோல நிகழ்ந்தது. ஆனாலும் சிறுபத்திரிக்கை தளத்தில் இயங்கிய பல படைப்பாளிகள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டாலும் அளவாக எழுதும் முறையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவில்லை.

  குறிப்பாக ஒரு சிறுபத்திரிக்கைக்கு கவிதை அனுப்பி அதில் கவிதை வெளியாக குறைந்தபட்சம் மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை ஆகக்கூடும். ஏறக்குறைய முன்று அல்லது நான்கு சிறுபத்திரிக்கைகளில் வருடத்திற்கு 20 கவிதைகள் மட்டும் எழுதி அதன் மூலம் வாசக கவனம் பெற்று (எழுத்தாளர்கள் மட்டுமே வாசகர்களாக இருந்த) வந்த கவிஞர்களின் வரிசையில் வந்தவர் ஸ்ரீநேசன்.

 பெரும் வாசக பரப்பினை எதிர் நோக்காத ஆனால் தீவிரமாக கவிதைகள் கவனிக்கப்பட்ட நேரத்தில் புதுஎழுத்து சிறுபத்திரிக்கை பதிப்பகத்தின் மூலம் “காலத்தின் முன் ஒரு செடி” தொகுப்பினை கொண்டுவந்தார். தற்போதும் தனக்குத் தோன்றும் போது எழுதிவருவராகவே உள்ளவர்.

 ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை தொடர்பாக எழுத்து, பேச்சு மற்றும் தொடர்ச்சியான இலக்கியம் மற்றும் பொது உரையாடல்களுக்கு களம் அமைத்து தமிழ் நவீன இலக்கிய இயக்கத்திற்கு தன் பங்களிப்பை கொடுத்துக்கொண்டிருப்பவர் ஸ்ரீநேசன்.

90 களின் மத்தியிலிருந்து தமிழ்க் கவிதைப்பரப்பில் தோன்றிய கவிகளில் முக்கியமானவர். தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்து வந்தபோதும் நவீன கவிதை மதிப்பீட்டிலும், அதன் வளர்ச்சியிலும் சிறுபத்திரிக்கையின் பங்கும் அதில் எழுதிய கவிகளின் பங்களிப்புகளிலும் மதிப்புகொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர். கவிதை குறித்த அவரது உரையாடல்கள் மற்றும் உரையாடல்களுக்கான களம் ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட தொடர்ச்சியான அவரது செயல்பாடுகளை நோக்கின் குறைந்த எழுத்துகளுக்கு சொந்தமானவராக இருப்பது வியப்புதான். அது மனநிலை தொடர்புடையதாகவும் சிறுப்பத்திரிக்கை இயக்கத்தின் மரபான சில குணாதிசயமாகவும் இதைக்கருதலாம்.

காலத்தின் முன் ஒரு செடி தொகுப்பின் சாரமாக மனிதன் இயற்கையிலிருந்தும், மரபான வாழ்வுமுறைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டது மையச்சரடாக இருந்தது. இத்தொகுப்பு வெளியான சமயத்தில்   எழுதிக்கொண்டிருந்த பல்வேறு கவிஞர்களின் கவிதைகளிலும், கவிதைத் தொகுப்புகளிலும்  அரூபத்தன்மை குறைந்து சற்று வெளிப்படையான குரல்கள் ஒலிக்கத்தொடங்கின. இதற்கு முன்பிருந்ததை விட சற்று கதைகலந்த பாங்கும் கவிதைகளில் தெரியத்தொடங்கின. போலியான படிம இறுக்கங்கள், அபத்தமான மொழித்திருகல்கள், வெறும் தட்டை மொழிக் கவிதைகளுக்கு மத்தியில் சில அற்புதங்கள் நிகழ்ந்தன. ஏறக்குறைய இருபதிற்கும் மேற்பட்ட கூட்டியக்கமில்லாத கவிகள் இதற்குப் பெரும்பங்களித்தார்கள்.

 இவ்வேளையில்தான் தத்துவ மேட்டிமைத்தனம் இன்றி இயல்பானதொரு தொனியில்,அதே வேளையில் தனித்த மொழிநடையுடனும் “காலத்தின் முன் ஒரு செடி” தொகுப்பு வெளியானது.

ஸ்ரீநேசன் கவிதைகளின் அடிநாதமாக நிலப்பரப்பும், அகவயமான தன்மையிலான அதேசமயத்தில் கைவிடப்பட்ட மனநிலையில் அமைந்த நெடிய குரலும் பாடுபொருட்களாக அமைந்தன. பாறைகள், புற்றுகள், ஏரிகள், செடிகொடிகள் என பரந்த நிலப்பரப்பும் அதனூடாக நுட்பமான வடிவம்கொண்ட புதிய நிலப்பரப்பும் அவரது கவிதைகளுக்கு புதிய துலக்கத்தைக்கொடுத்தன.

புற்றகம்

வசியக் கலைக் கறையான்

மனந்தொற்ற

மாரிக் கொண்டலெனப் பெருகி

என் புறத்தை உறிந்து

அகமென வளர்ந்து

அலமாரியைப் பற்றியது புற்றாய்

ஒருநாள்

வழிந்தது மேசை மேல்

விழுந்தது

வளர்ந்தது தரையெல்லாம்

பின்

அறையை மூடி

என்னைத் திறக்க

உள்ளிருந்து மீளும்

சீற்றத்தில் தோற்று

உட்சுருண்டு இருண்டேன்

புற்றோ

வெளியேறி நகர்கிறது.

இக்கவிதை ஒரு அன்றாட நிகழ்வல்லாத குறுகிய காலத்தின் வாழ்வை அதன் மனச்சித்திரத்தை வலியற்ற தோல்வியுடன் ஏற்றுக்கொள்வதாக முடிகிறது. இதே தொனியில் மாயமரம் கவிதை

மாயமரம்

அந்தரத்திலும் பூமியிலுமாக நிற்கிறது

ஒரு மரம்

ஒரே நேரத்தில்

அசைந்தும் அசையாமலும்

அதன் கிழக்கு முகமோ வெளிச்சத்தால்

பகல் அடைந்திருக்க

மேற்கின் கிளைகளிலோ

இருள் அடர்ந்திருக்கிறது

அதன் கூடுகளிலிருந்து பரவும்

குரல்களின் பிஞ்சுப் பட்சிகள்

பிரிவின் அவலத்தையும்

மகிழ்வின் உறவையும் எழுப்புகிறது

ஒரு பகுதி சருகாலும்

மறு பகுதி கனிகளாலும் நிரம்பியிருக்கும்

அதன் அடியிலிருந்து

குழந்தைகள் சில

ஏமாந்தும்

சில குதூகலத்துடனும் திரும்புகின்றன

காலத்தின் முன்னொரு

செடியாகவும்

பெரும் விருட்சமாகவும்

தோற்றமளிக்கும்

இந்த மரம்

தன்னைக் கடந்ததோர்

சிலருக்கு உள்ளேயும்

சிலருக்கு வெளியேயும்

தெரிகிறது.

  மேலிரண்டு கவிதைகளின் பொருண்மையும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. இவற்றின் காட்சித் தன்மைகளில் சற்று அருகருகாக இருக்கும் வாய்ப்புள்ளவை. ஆனால் இரண்டு கவிதைகளின் தலைப்புகளில் தொடங்கிய அரூபத்தன்மை கவிதையின் வடிவத்தில் படபடப்பற்ற எளிய அனுபவமாக நிற்கிறது. மாயமரம் கவிதையில் வரும் ’காலத்தின் முன் ஒரு செடியாக நிற்கும் மரமும்’. புற்றகம் கவிதையில் “என் புறத்தை உறிந்து அகமென வளர்ந்த புற்றகமும்” அகம் – புறம் என மனதின் இரண்டுபட்ட தன்மைகளை பேசுகிறது. இதில் அன்றாட சமூகத்திற்குத் தேவையான பொருண்மை இல்லை. ஆனால் மாசுபடாத இரண்டு கவிதைகளாக இரண்டும் வெளிப்பட்டிருக்கின்றன.

குரல்களின் பிம்பம்

தாவிய தவளைகள்

வானில் அமர்ந்து கொண்டன

அவற்றின்நட்சத்திரங்களோ

நீரில் குரல்

எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

மூடிய இரவுகள்

ஓர் இரவைத் திறந்தேன்

ஏகப்பட்ட மூடிய

விரல்கள்

அதிலொரு விரலைத் திறந்தேன்

ஏகப்பட்ட மூடிய இரவுகள்

போன்ற கவிதைகளை எழுதப்பட்ட காலத்தில் தெரிந்த வார்த்தை விளையாட்டு போன்ற தொனி, இன்று திரும்பிப்பார்க்கையில் அதன் அர்த்தமும்,கலைந்த அதன் ஞானமும் புதிய தரிசனங்களை வழங்குகின்றன. ஒரு கவிதையின் அர்த்தபூர்வமான செயல்பாடாக இதனைச் சொல்லலாம்.

ஏரிக்கரையில் வசிப்பவன்- கவிதையின் எளிமையும் ஆழ்மனத்தேடலும்.

 காலத்தின் முன் ஒரு தொகுப்பிற்குப் பிறகு அதன் மொழிக்கட்டமைப்பில் இருந்த கச்சித அமைப்பை மட்டும் எடுத்துக்கொண்ட கவிஞர் ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுப்பில் வாசக பரப்பிற்கு அணுக்கமான மொழிநடைக்குத் தாவிவிடுகிறார். முந்தைய தொகுப்பில் இருந்த பண்டிதத்தன்மையும், சிறிய அளவில் இருந்த மொழித்திருகலும் இத்தொகுப்பில் இல்லாமல் போகிறது.

  ஸ்ரீநேசனின் சமகாலக் கவிகள் தங்களது மொழி நடையை பிற்காலத்தில் மாற்றி அமைத்து எழுத தொடங்குகையில் தனது முதல் தொகுப்பிற்கு பிறகான கவிதைகள் அனைத்திலும் தனது அரூப மொழியை கைவிட்டதும், அந்த எளிமையின் வழியாகவே இவ்வுலகையும், நிலத்தையும், குடும்பத்தையும், கடவுளையும் காண்பதும், அதனூடாக நிகழும் ஆழ்மனத்தேடலும் கவிஞருக்கு இயல்பாக வாய்த்தது. உணர்ச்சிக்கொந்தளிப்பான வெளிப்பாட்டு முறைகளிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட  உணர்ச்சி மயமான தொனியில் அமைந்த கவிதைகள் இவை. எனவே புதிய வாசகன் எளிதில் இக்கவிதைகளுடன் ஒன்றவும், அவர் வாழ்நிலத்தின் தன்மையுடன் இயைந்த தத்துவார்த்த பின்னணியும் இக்கவிதைகளுக்கு மெருகூட்டுவதாக உள்ளன. வலிந்து எழுதப்பட்ட படிம அடுக்களிலிருந்து முற்றிலும் விலகியிருந்த பல கவிதைகளை ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுப்பில் காணலாம். உதாரணத்திற்கு , வள்ளாலார் தெரு கவிதையைச் சொல்லலாம்.

  ஒருமுறை மாவட்ட ஆட்சியரை  சிறிய அளவில் பேட்டி எடுக்கும் பணி எனக்கு வாய்த்தது. பணி முடிந்ததும் தேநீர் அருந்த வருமாறு அழைத்தேன். இன்று வியாழக்கிழமை சாய்பாபாவிற்கு விரதம் இருப்பதாக மறுத்துவிட்டார். எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஆட்சியர் அவர் வசிக்கும் ஊருக்கு அருகில் இருக்கும் வள்ளலாரைப் எட்டிப்பார்த்தாரா இல்லையா என எனக்குத்தெரியாது. இப்படி வள்ளலாரைப் பார்த்திருந்தவர் என்றால்  பாபாவை மனதில் ஏற்றியிருக்கமாட்டார். மெல்லத் தமிழ் பண்பாடுகளை, நம்பிக்கைகளை ஆன்மீகத்தின் பெயரில் மடைமாற்றம் நிகழ்த்தும்போது, படைப்பாளி நம்பிக்கை அல்லது அதற்கு அப்பாற்பட்டும் தமிழ் மண்ணின் சித்தர்கள், பட்டினத்தார், வள்ளலார் போன்ற நம் மண்ணின் மகான்களை வரைபடத்திற்குள் கொண்டு வருவது அவசியம். இவ்வகையில் வள்ளாலார் தெரு கவிதை இயங்கும் தளத்திற்கு வெளியிலும் அதற்கொரு இப்படியான முக்கியத்துவம் வாய்க்கிறது. அது காலத்தின் தேவையாகவும் உள்ளது. ஒரு நவீன கவி தன்னை நவீனத்தின் அடையாளமாக, ஜபர்தஸ்தாக அடையாளப்படுத்திக்கொள்ளாமல் ஏரிக்கரையில் வசிப்பவனாக அடையாளப்படுத்திக்கொள்வதில் உள்ள எளிமை இத்தொகுப்பின் பல்வேறு கவிதைகளில் உள்ளது. ஏழுபெட்டி ரயில், கடவுளின் தூளி, மேகங்களில் நடைபயில்பவன், கனவு மலை, உடலுறவு என நல்ல கவிதைகளின் தலைப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். இத்தொகுப்பின்  பல கவிதைகளில் பின்புலமாக மலையும், ஏரியும் கொண்டு எழுதியிருப்பார்.

யாருமில்லாத ஏரிக்கரை

இங்கிருந்து ரொம்ப தூரத்திற்கு அப்பால்

ஒரு கிராமம் இருக்கிறது

அந்த கிராமத்திற்கு மேற்கே  ஓர் ஏரி

ஏரிக்கரையில் வசிப்பவன் இப்போது அங்கில்லை

ஏரிக்கரையின் மீது ஆள் நடமாட்டமில்லாத

ஒரு மதிய தனிமை

வானில் வெட்டப்பட்ட ஆட்டுக்கிடாவின் தலை

யாருமில்லாத ஏரிக்கரையை வெறிக்கிறது

ஏரிக்குள் பரவியிருந்த மாபெரும் கண்ணாடியும்

கொஞ்ச காலத்திற்குமுன் புதைந்து போய்விட்டது

இப்போது

வெட்டப்பட்ட ஆட்டுக்கிடாவின் ரத்தத்தை

புதையுண்ட கண்ணாடி பிரதிபலித்துக்

கொண்டிருக்கிறது.

கிராமப்புற வாழ்வில் ஏரிக்கரையும், அதன் வெறுமையும், நீர் தளும்பும் கரையும் பல்வேறு அனுபவங்களை தரக்கூடியவை. இவ்வாழ்வை விட்டு அகலும்போது ஏரிக்கரை ஒரு அரூப சித்தனாக, தோழனாக காட்சி தருவதுண்டு. அதுவும் யாருமில்லாத ஏரிக்கரை எல்லாவற்றையும் வழங்கும்.

 இந்த நவீன வாழ்வு தரும் நம்பிக்கைகளுடன் மட்டும் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல், முன்பிருந்த தன் வாழ்வை அதன் உலகை அதன் வாழ்வியல்  காட்சிகளை அற்புதமான கவிதைகளாக்கியுள்ளார். பிறரது கவனத்தை ஈர்ப்பதற்கும், ரசனைகளை வெளிப்படுத்தவும், மேதமையைக் காட்டவும், வாழ்க்கைக்காக பயன்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவனுக்கு இக்கவிதைகளை எழுதத் தெரிந்திருக்காது. பெரும் காலவோட்டத்தில் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து எழுது என்ற புத்திமதிகளுக்கும் செவிசாய்க்காமல் தோன்றிய போது எழுதிக்கொண்டிருகிறார். இத்தன்மை கொண்டவர்கள் பெரும் படைப்பாக்கங்களுக்குப் பிறகும் அதிலிருந்து விலகி பிறிதொரு உலகிலும், தம்மை ஒப்புக்கொடுத்திருப்பார்கள். ஸ்ரீநேசன் அவர்களில் ஒருவர்.

ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுப்பு வெளியான ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்பு ஸ்ரீநேசனுடன் திட்டமிடாத திடீர்ப் பயணமாக நாங்கள் இருவர் மட்டும் குருவாயூர், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றோம். பயணத்தினிடையே அப்போதைய கவிதைகள் குறித்தும், புதிய கவிகளின் வரவுகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். திருச்சூர் வடக்குநாதர் கோவிலின் புல்வெளியில் அமர்ந்தப்படி மூன்று பாட்டிகள் தொகுப்பில் உள்ள “வாழ்வமைவு” கவிதையை  எனக்கு ஸ்ரீநேசன் வாசிக்கும்போது அதன் எளிமையின் மீது எனக்கு அவ்வளவாக உவப்பில்லை, இதுகுறித்து நேசனுடன் முரண்பட்டு பேசிய ஞாபகமும் உள்ளது. காலம் பல கடந்து இப்போது மூன்று பாட்டிகள் தொகுப்பை வாசிக்கும்போது என்னுடைய அப்போதைய போதாமையை உணர்ந்தேன். அந்த எளிமை கவிதையின் தன்மையில் இல்லை கவிஞரிடம் நிகழ்ந்த மாற்றம் என உணர பல ஆண்டுகள் ஆகியிருந்தது. வாழ்வனுபவமும், காலமும் ஒரு கைவிளக்கைப்போல கவிஞனின் மீதும், கவிஞனின் மனதின் மீதும் சிறு ஒளியைப் பாய்ச்சுகிறது. இதிலிருந்து கிடைக்கும் தெளிவை நோக்கி அவன் நகரத்தொடங்குகிறான். அது வாழ்வின் பாடம், வாழ்வின் அனுபவம், தெளிவு, புரிதல் என பல்வேறு பரிமாணங்களை வழங்குகிறது. கவிஞன் இத்தன்மையின் பால் தானாக ஈர்க்கப்படுகிறான் என்பதே நான் கண்டறிந்தது. இத்தகைய தன்மையினை மிகச் சமீபத்தில் “கல் முதலை ஆமைகள்” தொகுப்பில் சங்கர்ராமசுப்ரமணியனிடமும், ”கடலொரு பக்கம், வீடொருபக்கம்” தொகுப்பின் வழி லக்ஷ்மிமணிவண்ணனிடமும்,”கராதே” மற்றும் ”27 கவிதைகளில்” ராணித்திலக்கிடமும் ஸ்ரீநேசனின் ”மூன்று பாட்டிகள்” தொகுப்பிலும் காணநேர்ந்தது.

இவர்கள் தாங்கள் அறிந்தோ அறியாமலோ எழுத்தக்கூடியவர்கள் அல்ல, ஒருங்கிணைந்து திட்டமிடக்கூடியவர்களும்  அல்ல ஆனால் ஒரு காலகட்டத்தில்  கவிதையின் முக்கிய போக்கின் மைய அச்சாக இருந்தவர்கள். தற்போதும் புத்தம் புதிய படைப்புகளைக்கொடுத்து தங்களது இருப்பை பதிவு செய்து வருபவர்கள். இக்கவிதைகள் ஏன்  எளிமையை நோக்கி தள்ளப்பட்டது  என்ற கேள்வி தொடர்ச்சியாக என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது. ஒப்பீட்டளவில் இக்கவிதைகளின் மொழி மெய்யியல் நோக்கி நகர்வதாக நான் கருதினேன். ஆனால் ஸ்ரீநேசன் கவிதையில் இதனை உறுதியிட்டு சொல்ல முடியாத தொனியும், மொழிவளமும் நிறைந்துள்ளது. கவிதையின் எளிமை கவித்துவத்தை குறைக்குமா அல்லது அதன் வடிவத்தை குலைக்குமா என்ற எண்ணங்களின்றி எழுதப்பட்டதாக உள்ளது.

பட்சி கானம்

கரையேறியவுடன் என்னை வரவேற்பதாய்

ஏரியுள் புதர்களில்

ஒரே பறவை பலவிடங்களில் இருந்து பாடும்

இனிய கீதம்

உண்மையில் நரம்புகள் உணர்ந்த இசைமை

குயிலை நான் அறிவேன்

பாடியது அதுவல்ல

மீன்கொத்தி மரங்கொத்தி குரல்களையும் அறிவேன்

பாடியது அவையுமல்ல

நாகணவாய்ப் புள்ளான மைனாவோ

ஆனைச்சாத்தன் என வழங்கும் கரிச்சானோ கூட இல்லை

பாடியது ஒரு பட்சிதான்

சிட்டு தேன்சிட்டு காடை கவுதாரி கிளி கானாங்கோழி

செம்போத்து நீர்க்கோழி

என நானறிந்த பறவைகள் ஒன்றிலுமல்லாத

ஒரு பறவையின் இக்குரல்

இத்தனை இனிக்கும் என உணர

எனக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்தனவே

இன்னும் கானா முகமறிய

அது முழுப்பிறவியும் வேண்டுமோ.

ஐம்பதாண்டு கால வாழ்வும் அனுபவம் ஒருவனை எல்லாம் அறிந்தவனாக்கிவிடாது என்பது தெரிந்ததுதான். பறவைகள் திரியும் நிலப்பகுதியிலேயே  வாழ்பவனுக்கு, புதியதாக ஒலிக்கும் ஒரு பறவையின் ஒலி,  இதற்கு முன்னர் தானறிந்த எந்த பறவையொலிக்கும் பொருந்தாமல் இருப்பது பலநிலைகளிலும் கேள்விகளை உருவாக்குகிறது. அனுமானம், அனுபவம், விஷய ஞானம், ஞாபகம், இயற்கையை அனுபவித்தல் போன்றவற்றில் தொய்வு ஏற்பட்டுள்ளதோ என சந்தேகம் தோன்றுகிறது. இதற்கு முழுப்பிறவியும் தேவையா என்ற கேள்வியும் பின்னொட்டாக வருகிறது. இக்கவிதையின் முழுமை, கவிஞன் அறிந்த நிலத்தில் அவன் அறிந்த பறவைகளில் ஒன்று புத்தம் புதியதாக ஒலிப்பது, அந்த நிலத்தை, அந்த சூழலை புத்துணர்வுகொண்டதாக மாற்றுகிறது. எனவே அவனுக்கு அந்த பின்னொட்டான கேள்வியும் உண்டாகிறது.

  ஸ்ரீநேசனின் இம்மூன்று தொகுப்புகளின் வழியாகவும் அகம்-புறம் என இரண்டு வகையான நடைகளிலும் தனது கவித்துவத்தை கட்டமைத்திருக்கிறார். பின்னாட்களில் அகவயமான பார்வை நிலைத்து தெளிவான உருவகம், அழகியல் தன்மை மற்றும் காட்சிகளுடன் அவை பிசிறில்லாத கவிதைகளாகின்றன.”மூன்று பாட்டிகள்” என்ற தலைப்பையே விசேஷமாக எடுத்துக்கொள்ளலாம். மனதைக்காலத்தின் முன்னும் பின்னுமாக உருட்டித் தேர்ந்த அனுபவக் கவிதைகளாக இத்தொகுப்பு உருவாகியுள்ளது.

நாவௌவால்

கடைவீதியில் இரண்டு சித்தாள் பெண்கள்

சிக்கன் கடைகளைக் கடந்து போனார்கள்

வீட்டுக்குப் போய்வைக்கும் கருவாட்டுக்குழம்பை பேசியவாறு

கேட்டுக் கமகமக்கும் நினைவுக்குகைவாயில் ஊறும் சுனைநீரில்

தலைகீழாய்த்தொங்கும் நாவௌவால் மூழ்கித் திளைக்கும்

ஞாபக இருட்டறையில்

அரை நூற்றாண்டு பிரமீட்டுப் பழம்பானையில்

உணக்கலின் காத்திருப்பு

ஈருண்டைக் களிக்கு அடுப்பில் உளையேற்றி விட்டு

ஜடசியம்மாள் சென்னாக்குஞ்சுப் பொடியிடிக்கிறார்

தெங்கின் முற்றிய வில்லைகளோடு சட்டிக்கொதிக்குழம்பில்

நடனமிடும் வஞ்சரம் அவசர அசைவ விருந்தாளிக்கு

மருமகன் மெச்ச மாமியார் கைவண்ணத்தில்

எறா தொக்கு வஞ்சிர வறுவல் இல்லையெனினும்

சுட்ட ஒரு கானாங்கெளுத்தியோடு புளிரசம் போதும்

தாத்தாவுக்கு

ஏரியில் மீன் வளம் அதிகமானால் அவர் வலைப்பட்ட

குரவை உளுவை கெண்டை கெளுத்தியெல்லாம்

காய்ச்சி மாளாது சொந்தங்களுக்கு கொடுத்து தீராது

வாசனைப்பெருக்கும் வாசலில் காய்ந்து

கத்தரி வெண்டை கருணை உருளை மொச்சை கடலை

எச்சேர்க்கையானாலும் ருசியில் இதன் கை ஓங்கும்

முருங்கைக்கீரைப் பெரட்டலோடு

கூழும் நெத்திலிக்குழம்பும் எனப் படையலிட்டால்

மாரி மழையாய் வந்திறங்குவாள்

நோய் வடிவில் அதே அம்மை யார் வீட்டில் அடி வைத்தாலும்

தாளித்த கவுச்சியின் ஆவி நுகர்ந்தால்

சட்டென விட்டுக் கிளம்புவாள்

இறைச்சிக் கடைகள் அடைக்கப்பட்ட

விடுமுறைப் புனிதாநாள் ஒன்றில்

மாமிசமோகம் யாருக்கேனும் தலைவிரித்தாடினால்

தணிக்க

இம்மோகினி தவிர மாற்றாள் உண்டோ.

  இப்பூமியின் பெரும் நிலத்தை உழுது உழுது இந்நிலத்தை முளைவிடச்செய்த பெருநிலக்கிழவனின் குரலில் ஒரு கவிதை. இக்கவிதையில்  நாற்பதாண்டுகளுக்கு முந்தைய தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டத்தின் மண்ணும் மனிதர்களும், வாழ்வியலும் அதன் அழகிய அந்தியும் பழமையான சித்திரத்தைப்போல மனதில் விரிகிறது.

கார்தேவதை

மேலைவானின்

மின்னல் விளையாடும் மலைமீது

கோடைமழை கார்தேவதையாய்க் கருக்கிட்டு இறங்குகிறது

ஒருகணத்தில் இவ்வுலகின் தீமையெல்லாம்

கருந்தாரையாய்

வானேகித் திரும்பித் தொலைவதுபோல் பேருணர்வு

இந்த பரவசத்தை தரிசித்த கணமுதலாய்

தம் புன்னகையில் குத்துவாளை மறைத்து

அனுதினமும் வலம்வந்த

இப்பூவுலகின் வஞ்சக வீரர்கள்

ஒவ்வொருவர் கரங்களிலும் ஒளிரும் ஒரு தூயமலர்

மேற்கண்ட கவிதையை வாசிக்கையில் நேசனுடைய முதல் தொகுப்பில் இருந்த திருவண்ணாமழை என்ற கவிதையும் எனக்கு நினைவிற்கு வந்தது.

திருவண்ணாமழை

ஒவ்வொரு முறையும்

திருவண்ணா

மலையிலிருந்து திரும்பியபோதும்

மழை பெய்தது

இன்றும்

திருவண்ணா

மலையிலிருந்து திரும்புகிற போது

மழை பெய்து கொண்டிருக்கிறது

இனி ஒவ்வொரு முறையும்

மலையிலிருந்து திரும்பும் போதும்

திருவண்ணா மழை பெய்யும்.

   எனது சொந்த ஊருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலையை அடிக்கடி பார்த்து வருகிற எனக்கு, சிறு வயதிலிருந்தே திருவண்ணாமலை அக்னி வடிவமாகவே மனதில்  நிலைத்திருந்தது, குறிப்பாக எனது பதின்ம வயதில் வீட்டின் மொட்டை மாடியில் ஏறினால் திருவண்ணாமலை தெளிவாகவும் அங்கு கார்த்திகை மாதத்தில் நிகழும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியையும் கண்டுவிடமுடியும். பிற்காலத்தில்  நிகழ்ந்த வளர்ச்சி காரணமாக  அது சாத்தியமில்லாமல் போனது. ஆனால் நேசனுடைய திருவண்ணாமழை கவிதையை வாசித்த பிறகு நான் காணும் போதெல்லாம் மலையின் அக்னி சொரூபம் மறைந்து, பௌர்ணமி வலம் மறைந்து திருவண்ணாமலை திருவண்ணாமழையாவே மனதிற்குள்  நிறைகிறது. தட்பவெட்ப அளவில் வருடத்தின் குறைந்த அளவு மழை பெய்யும் பகுதியில் உள்ள மலை திருவண்ணாமலை. இதனைக் கவிஞர் ஸ்ரீநேசன் திருவண்ணாமழையாகச் சொல்லியதற்குப்பிறகு ஆம் அது நாம் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமழையாகத்தான் தெரிகிறது.

படைப்பாளிகளில் குறைந்த எண்ணிக்கையில் எழுதுபவர்கள், அதுகொண்டே தொகுப்பைக் கொண்டுவருபவர்கள், அன்றாட வாழ்வின் அர்த்தங்களுக்குள் வாழ்வைத் தேடுபவர்கள், வாழ்வின் அன்றைய தொனிக்கு முக்கியத்துவமளிப்பவர்கள், பொதுவெளியில் அகப்படாதவர்கள், வெறுப்பைச் சுமக்காதவர்கள், கிடைத்த வெளிச்சத்தில் நிறைவைக்காண்பர்கள், வாழ்வு முழுக்க வறுமையையும், உடல் நோய்மையையும் சுமப்பவர்கள், உள்ளார்ந்த அன்புகொண்டவர்கள் அதன்மூலம் வாழ்வெனும் நிறைவைக் காண்பவர்கள் எனச் சிலர் உள்ளனர் அவர்களில் ஒருவர் ஸ்ரீநேசன்.

***

 

-கண்டராதித்தன்.

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *