பின்போர்க்கால இலங்கையில் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகள், புதுப்புது வடிவமெடுத்து வருகின்றன.
2012 இற்குப் பின்னர் இஸ்லாமிய வெறுப்புணர்வும், வெறுப்புப் பிரச்சாரமும் வன்முறைத் தாக்குதல்களும் நன்கு திட்டமிடப்பட்டு,  தூண்டிவிடப்படுகின்றன.
வெறுப்புப் பேச்சு, உளவியல் தாக்குதல்கள்,  இனவாத பிரச்சாரங்கள், பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல்கள், அளுத்கமை- தர்கா நகர், அம்பாரை, கண்டி, குருநாகல், மினுவாங்கொடை இனக் கலவரங்கள் போன்ற பல்வேறு கசப்பான பக்கங்களைத் தாண்டி வந்துள்ளோம்.
அந்தத் தொடரில்தான், கொவிட் 19 தொற்றுக்கு
ஆளாகி இறந்தோரின் உடல்களை நல்லடக்கம் செய்ய முடியாது. அதைக் கட்டாயமாக எரித்தே ஆக வேண்டும் என்ற அரசாங்க ஆணையையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஆரம்பத்தில் புதைப்பது, எரிப்பது என்ற இரு வழிமுறைகளையும் ஏற்றுக் கொண்டே, இது தொடர்பான சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் வெளிவந்திருந்தது. எனினும், ஒருசில நாட்களின் பின்னர் இவ்வருடம் ஏப்ரல் 11 ஆம் திகதி வெளிவந்த மற்றொரு சுற்று நிருபம், கட்டாய எரிப்பை மட்டுமே அங்கீகரித்திருந்தது.
இந்த பலவந்த ஜனாஸா எரிப்பானது, முஸ்லிம் சமூகத்தினுள் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் பதகளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. .
ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டு உளவியல் மீது தொடுக்கப்பட்ட ஒரு போர் என்றே இதைக் கருத வேண்டியுள்ளது.
துறைசார் நிபுணர்கள் எவரையும் முறையாகக் கலந்தாலோசிக்காமலேயே, ஆரம்பத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனால்தான் நிபுணர் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கத்திற்கு பலமுனைகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
பின்னர் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நல்லடக்கம் செய்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. நிலக்கீழ் நீர் மூலம் கொரோனா வைரஸ் தொற்றக் கூடிய அபாயம் இருப்பதாக அவர்கள் கதை விட்டனர். இதனால் நிபுணர் குழுவின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகி விட்டது.
இந்தத் துறைசார் நிபுணர் குழுவில் வைரஸ் தொற்றுநோயியல் நிபுணர்கள் (virology experts) இல்லாமல் இருப்பதே இதன் பின்னே ஒளிந்திருக்கும் அரசியல் உள்நோக்கங்களைப் புலப்படுத்தப் போதுமானது.
இந்த அரசாங்கத்தின் பங்காளிகளுள் ஒருவரான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இத்துறை சார்ந்த நிபுணர்களுள் ஒருவராக இருந்தும், உரியவர்கள் தன்னைக் கலந்தாலோசிக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற வைரஸ் தொற்றுநோயியல் நிபுணரான பேராசிரியர் மலிக் பீரிஸ், புதைப்பதாலோ நல்லடக்கம் செய்வதாலோ, கொரோனா தொற்றாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் லங்காதீப பத்திரிகைக்கு விரிவான பேட்டியொன்றையும் வழங்கியுள்ளார்.
இத்துறை சார்ந்த இன்னொரு நிபுணரான Dr. நிஹால் அபேசிங்கவும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார். அவர் உலக சுகாதார நிறுவன வேலைத்திட்டங்களில் ஆலோசகராகப் பணிபுரிந்தவர். இப்படி பலரை மேற்கோள் காட்டிக்கொண்டு செல்லலாம்.
கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களைப் புதைத்தல், எரித்தல் – இரண்டுமே அனுமதிக்கப்பட்ட வழிமுறைகள்தான் என, உலக சுகாதார நிறுவனம் தெட்டத் தெளிவாக அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம்  உலகின் ஏனைய அனைத்து நாடுகளும் புதைப்பதை/ நல்லடக்கம் செய்வதை ஏற்றுக் கொண்டு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அதை நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கை அரசாங்கம் மட்டும்தான் இதில் விடாப்பிடியாக இருக்கிறது. அரசுக் கட்டமைப்பு எந்தளவு தூரம் இனவாத சிந்தனையின் பிடிக்குள் அகப்பட்டிருக்கிறது என்பதை இதன் மூலம் நன்கு உணர்ந்துகொள்ள முடியும்.
அரசின் இந்தக் கடும்போக்கிற்கு, இனவாத சக்திகள் ஒத்து ஊதுகின்றன. ஒரு இனத்திற்கு மட்டும் விசேட சலுகைகள் கொடுக்கத் தேவையில்லை. ஒரே நாடு ஒரே சட்டம், அடிப்படைவாதிகளுக்கு அடிபணியக் கூடாது என்று பேசும் பேரினவாதக் குரல்களுக்குப் பின்னே இருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொள்ள அணுவைப் பிளக்கும் ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை.
நிபுணர் குழுவின் ஆலோசனைக்கு அமையவே தாம் இயங்குவதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாதுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் கூறுகிறார். அரசின் இயலாமை குறித்து அவர் பேசுவது நகைப்பிற்கிடமானது. ஆனால், அவ்வப்போது இந்த நிபுணர் குழுவைக் கலந்தாலோசிப்பதை தொடர்ந்து செய்வோம் என்றும் அவர் கூறுகிறார்.
உலகின் வேறெந்த நாடுகளுக்கும் வாய்க்காத ஆச்சரியமான நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு வாய்த்திருக்கிறது. நிபுணர் குழுவின் பேரிலேயே அரசியல் காய் நகர்த்தப்படுகிறது. அரசிற்குத் தேவைப்படும்போது, நிபுணர் குழுவின் நிலப்பாடு மாறும். அவ்வளவுதான்.
மறுபுறம் முஸ்லிம் சமூகத்தினுள்ளே இது ஏற்படுத்தியிருக்கும் பதட்டநிலை கூர்ந்து அவதானிக்கத் தக்கது.
இனக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டபோதும், பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டபோதும் ஏற்பட்ட மனக்காயங்களை விட, ஜனாஸா எரிப்பின் பின்னர் தோன்றியிருக்கும் மனவடு ஆழமானதாக மாறியுள்ளது. ஒவ்வொரு முஸ்லிம் தனிநபரதும் சொந்தப் பிரச்சினையாக- உள்வீட்டுப் பிரச்சினையாகவே அது பொதுவில் உணரப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இது பாரிய உளவியல் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது நம்பிக்கைக் கோட்பாடு சார்ந்த விடயம். இவ்வுலக வாழ்க்கையிலிருந்து மறுவுலக வாழ்க்கைக்கான பயணத்தில் மரணம்தான் மிக முக்கியமான திருப்புமுனை என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை. மரணத்திற்குப் பிந்திய வாழ்க்கை பற்றிய ஆழமான நம்பிக்கை கொண்ட ஆபிரஹாமிய மத நம்பிக்கைப் பாரம்பரியமே இது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களின் மூலக்கோட்பாடு முன்வைக்கும் அடிப்படை அம்சம் இது.
இந்த சமய நம்பிக்கையானது, எரிப்பதை/ தகனம் செய்வதை ஆழமாக மறுக்கிறது. இதனால்தான் முஸ்லிம்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்; குழம்பிப் போயுள்ளனர்.
காலாகாலமாகப் பின்பற்றி வந்த பண்பாட்டு நடைமுறையின் கழுத்தை, அரச இயந்திரம் திருகத் தலைப்பட்டதானது, ஒரு வகையான பண்பாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால்தான் முஸ்லிம் சமூக வெளியில் எரித்தலிற்கெதிரான உணர்வுகள் வேகமாகவும் ஆழமாகவும் திரண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் ஒவ்வொரு ஜனாஸாவாக எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது பொறுமையாக இருந்தோர், வெறும் இருபதே இருபது நாள் குழந்தையான ஷாயிக் தீயில் சுட்டெரிக்கப்பட்போது பொறுமையின் எல்லையைக் கடந்தனர்.
திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த பச்சிளம் பாலகனின் உடலை தீயின் நாக்குகள் பொசுக்கியபோது, எல்லோருடைய ஆன்மாவும் துடிதுடித்தது.
இதுவே ஒரு திருப்புமுனையாக மாறிவிட்டது. இன, மத எல்லைகளைக் கடந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலரது கவனம் இங்கு குவியத் தொடங்கியது. அனுதாப அலை பரவத் தொடங்கியது.
இதன் இன்னொரு பரிமாணமாகவே, பொரள்ளை கனத்தை மயானத்தின் இரும்பு வேலிகளில் வெள்ளைத் துணி கட்டும் அடையாள எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தன்னெழுச்சியான இந்த நடவடிக்கை, காட்டுத் தீ போல எங்கும் பரவியது. இப்போது கபன்சீலைப் போராட்டமாக அது வளர்ந்து வியாபித்து நிற்கிறது.
நாட்டின் நாலா புறங்களிலும் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என்று எல்லாத் தரப்பினருமே வீதியில் இறங்கி கபன்சீலைப் போராட்டத்தின் பங்காளிகளாக மாறினர். வெள்ளைத் துணிகளை இறுக்கிக் கட்டி இந்த அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பி நியாயம் கேட்டனர். இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இது சொல்லும் பண்பாட்டு அரசியல் செய்தி மிகவும் அழுத்தமானது.
 பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்ப்பான், கட்டார், இந்தியா என்று பலநாடுகளிலும் இந்தப் போராட்டம் தீவிரம் பெறத் தொடங்கியது.
நீதி கோரும் போராட்டத்தின் எல்லை படிப்படியாக விரியத் தொடங்கி விட்டது. கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள், சிங்களவர், தமிழர், மலையகத் தமிழர், ஆண்கள், பெண்கள், இளைஞர் யுவதியர், சிறுவர்கள், வெளிநாட்டவர்கள் என்று பரவலான ஆதரவுத் தளமொன்று உருவாகியது.
சிவில் சமூக நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் இந்த அடிப்படை உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றன.
எதிரணி அரசியல் தலைவர்களும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தலைப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆளும் தரப்பில் இருந்து கூட மெல்லிய ஆதரவுக் குரல்கள் கேட்கின்றன. நீதியமைச்சர் அலி சப்றி நல்லடக்கத்தைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார். ஆளும் தரப்பிலிருந்து டிலான் பெரேரா கூட ஆதரவாகப் பேசியுள்ளார். ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பல்வேறு அரசியல் கட்சிகள் … இவ்வாறு ஒரு நீண்ட பட்டியலை சொல்லிக் கொண்டு செல்லலாம்.
இப்போது இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நல்லடக்க உரிமையை மறுக்கக் கூடாது என்ற குரல்களும் கோரிக்கைகளும் பல தளங்களிலிருந்தும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
அமரபுர-ராமாஞ்ஞ பௌத்த பீடம் புதைப்பதை- நல்லடக்கம் செய்யும் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இது  குறிப்பிடத்தக்க, கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய நகர்வாகும்.
ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, நல்லடக்கத்தை அனுமதிக்க வேண்டும், பாரபட்சம் காட்டக் கூடாது என அரசாங்கத்தை வேண்டிக் கொண்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனம்,, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) போன்றன இவ்விடயத்தில் தமது ஆதரவு நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி விட்டன. அரசாங்கத்தின் மீது, ஐ.நா. முதல் உள்ளூர் அமைப்புகள் வரை பல முனை அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
உச்சநீதிமன்றத்தில் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. காரணம் எதுவும் சொல்லாமலேயே அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இது  நீதித்துறையின் மீதான நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்து விட்டது. பெரும் ஏமாற்றமாக அமைந்து விட்டது. எது எப்படிப் போனாலும், இப்போது வெவ்வேறு நீதிமன்றங்களில், புதிய வழக்குகள் பல தொடுக்கப்பட்டுள்ளன.
இத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருக்கிறது. இன்னமும் தீர்வு வந்தபாடில்லை. என்றாலும், அரச தரப்பிலிருந்து சில எதிர்வினைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
இந்த அழுத்தங்களால், மாலைதீவில் நல்லடக்க ஏற்பாடுகளைச் செய்யம் விசித்திரமான நகர்வொன்று பரிசீலிக்கப்பட்டது. இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளை, நல்லெண்ண அடிப்படையில் தாம் சாதமாகப் பரிசீலிப்பதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் அறிக்கை சுட்டிக் காட்டியது.
சொந்த நாட்டில் நல்லடக்கம் செய்ய மறுக்கும் இத்த ஜனாஸா ஏற்றுமதித் திட்டத்திற்கு கடும் ஏதிர்ப்பு கிளம்பியதால் அது இப்போது கைவிடப்பட்டிருக்கிறது.
கொங்கிறீற் பெட்டிகளுக்குள் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாம் என்றார்கள். அதுவும் வரவேற்கத் தக்க ஆலோசனயாக நோக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் பிரதமர் தலைமையில் கூடி ஆலோசித்து விட்டு, வறண்ட நிலங்களைத் தேடி, அங்கே நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சரான வாசுதேவ நாணயக்கார, தனது  அமைச்சு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விட்டு, இதற்குப் பொருத்தமான இரு இடங்களை இப்போது பரிந்துரை செய்துள்ளார். மன்னார் மாவட்டத்திலுள்ள மறிச்சிக்கட்டி பிரதேசமும், அம்பாரை மாவட்டத்திலுள்ள இறக்காமம் பிரதேசமும் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இது ஒரு புறமிருக்க, அவ்வப்போது கூடும் அரசின் நிபுணர் குழுவானது,  ஒரே பாட்டையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறது.
இது போதாததற்கு, சமீப நாட்களில் இனவாத சக்திகளும் பெருந்தேசியவாதிகளும் சில மதகுருக்களும் தங்களது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
முஸ்லிம் மக்களும் சமூக நிறுவனங்களும் தொடர்ந்தும் தமது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளனர்.
கொவிட்19 ஆல் இறந்த ஜனாஸாக்களை எரிப்பதற்கு ஆதரவாக ஒப்பமிடுவதில்லை, எரிப்பிற்காகக் கோரப்படும் செலவிற்கு பணம் கொடுப்பதில்லை, மொத்தத்தில் எரிக்கின்ற ஜனாஸாக்களைப் பொறுப்பெடுப்பதில்லை என்றதொரு பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை, இறந்தோரின் குடும்ப அங்கத்தவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். கட்டாய ஜனாஸா எரிப்புப் பிரச்சினையில், இந்தப் பகிஷ்கரிப்புப் போராட்டம் மிகக் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகவும், அரசுக்கு நேருக்கடி தருவதாகவும் மாறியுள்ளது.
இப்போது பல வைத்தியசாலையின் பிணவறைகளிலும், இதற்கென்றே தருவிக்கப்பட்ட குளிரூட்டிகளிலும் ஜனாஸாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எப்போது தம்மைப் புதைப்பார்கள் என்ற கேள்விகளோடு அவை காத்திருக்கின்றன.
புதைப்பார்களா, எரிப்பார்களா என்று தெரியாமல் ஜனாஸாக்கள் காத்துக் கிடக்கும் இந்த அனுபவம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் புதியது; ஆழ்ந்த மனக்காயங்களைத் தருவது. சொந்த உறவுகள் கண்ணுக்கு முன்னே தீயில் கருகுவதை, சில ஜனாஸாக்களைத் தோழுவிக்க மறுத்ததை வரலாறு அவ்வளவு இலகுவில் மறந்து விடாது. இது அழியாத பெரும் மன வடு; தீராக் கறை; அழிக்க முடியாத வரலாற்றுக் காயம்; அடிப்படை உரிமையின் மீது, பண்பாட்டு மரபின் மீது, சமய நம்பிக்கையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர்.
ஆனால், கட்டுரை எழுதும் வரைக்கும் அரசாங்கத்திடமிருந்து சாதகமான எந்தப் பதிலும் இல்லை.
இந்த ஜனாஸாக்களுக்கு என்ன நடக்கும்? புதைப்பார்களா? எரிப்பார்களா? கேள்விகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
ஒருவேளை நல்லடக்கத்திற்கு அனுமதி கிடைத்தாலும் கூட,
அரச ஒடுக்குமுறையும் பாரபட்சமும் புதுப்புது வடிவம் எடுக்கும் என்பதை மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடிகிறது.
இருண்ட காலத்தை நோக்கியே இலங்கை நகர்கிறது என்பதுதான் கசப்பான யதார்த்தம். நம்பிக்கை வறண்ட எதிர்காலத்திற்குள்தான் நாம் நடந்து செல்கிறோம்.
இது ஒரு புறமிருக்க, திரும்பத் திரும்பக் கூடும்அரசின் நிபுணர் குழு ஒரே பாட்டையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறது. இனவாத சக்திகளும் பெருந்தேசியவாதிகளுமௌ சில மதகுருக்களும் தங்களது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
முஸ்லிம் மக்களும் சமூக நிறுவனங்களும் தொடர்ந்தும் தமது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளனர்.
கொவிட்19 ஆல் இறந்த ஜனாஸாக்களை எரிப்பதற்கு ஆதரவாக ஒப்பமிடுவதில்லை, எரிப்பிற்காகக் கோரப்படும் செலவிற்கு பணம் கொடுப்பதில்லை, மொத்தத்தில் எரிக்கின்ற ஜனாஸாக்களைப் பொறுப்பெடுப்பதில்லை என்ற பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை இறந்தோரின் குடும்ப அங்கத்தவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். கட்டாய ஜனாஸா எரிப்புப் பிரச்சினையில், இந்தப் பகிஷ்கரிப்புப் போராட்டம் மிகக் குறிப்பிடத் தக்க திருப்புமுனையாகவும், அரசுக்கு நேருக்கடி தருவதாகவும் மாறி.யுள்ளது.
இப்போது பல வைத்தியசாலையின் பிணவறைகளிலும், இதற்கென்றே தருவிக்கப்பட்ட குளிரூட்டிகளிலலும் ஜனாஸாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எப்போது தம்மைப் புதைப்பார்கள் என்ற கேள்விகளோடு அவை காத்திருக்கின்றன.
 புதைப்பார்களா, எரிப்பார்களா என்று தெரியாமல் ஜனாஸாக்கள் காத்துக் கிடக்கும் இந்த அனுபவம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் புதியது. ஆழ்ந்த மனக்காயங்களைத் தருவது. சொந்த உறவுகள் கண்ணுக்கு முன்னே தீயில் கருகுவதை, சில ஜனாஸாக்களைத் தோழுவிக்க மறுத்ததை வரலாறு அவ்வளவு இலகுவில் மறந்து விடாது. இது அழியாத பெரும் மன வடு. தீராக் கறை.
ஆனால், இப்போது கூட எந்தப் பதிலும் இல்லை. இந்த ஜனாஸாக்களுக்கு என்ன நடக்கும்? புதைப்பார்களா? எரிப்பார்களா? கேள்விகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
ஒருவேளை நல்லடக்கத்திற்கு அனுமதி கிடைத்தாலும் கூட,
அரச ஒடுக்குமுறையும் பாரபட்சமும் புதுப்புது வடிவம் எடுக்கும் என்பதை. மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடிகிறது.
இருண்ட காலத்தை நோக்கிய இலங்கை நகர்கிறது.
சிராஜ் மஷ்ஹூர்
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *