(தொகுப்பை தரவிறக்கி வாசிக்க : https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D )

 

இலங்கையின் அரசியல் சமூக வரலாற்றில், 1980கள் மிக முக்கியமான நிலைமாற்றுக் காலப்பகுதியாகும். இக்காலத்தில் பேரினவாத அரச வன்முறை உச்சம்பெறத் தொடங்கியதோடு இன விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக வடிவம் கொண்டது; தமிழ்த் தேசிய சிந்தனைகள் அதிக அழுத்தம் பெற்றன; இடதுசாரிய மார்க்சிய செயற்பாடுகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தன. மலையகத் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதைத் (1972) தொடர்ந்து தோட்டங்களைச் சிங்களவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்தலும் தோட்டக் காணிகளை ஆக்கிரமித்தலும் முனைப்பாக இடம்பெற்றன. பெருந்தோட்டத்துறையில் சிங்கள மேலாதிக்கம் பெருகியது; பெருந்தோட்டப் பகுதிகளில் பேரினவாதிகளின் வன்முறைகள் அதிகரித்தன; சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாயகம் திரும்புகின்றவர்களின் எண்ணிக்கை பெருகியது; மலையகத் தமிழர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் வடமாகாணத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். இத்தகைய காலச் சூழலிலேயே ‘மலையக மக்கள் இயக்கம்’ தீர்த்தக்கரை இதழை வெளியிட்டது. மலையக மக்கள் இயக்கத்தினர், இந்நெருக்கடி மிக்க வாழ்வியலை எவ்வாறு நோக்கினர் என்பதற்கும் அவர்கள் எத்தகைய மாற்றங்களை அவாவிநின்றனர் என்பதற்கும் அவ்விதழில் வெளிவந்துள்ள எழுத்துக்கள் சான்றாக அமைகின்றன.

பிற்போக்கு அரசியல் சமூக நடைமுறைகளை வன்மையாகக் கண்டித்த மலையக மக்கள் இயக்கம், வரட்டு மார்க்சிய சித்தாந்த நிலைப்பாடுகளில் இருந்தும் திரிபுவாதங்களில் இருந்தும் விடுபட்ட மார்க்சியத் தளத்தில் இயங்கியுள்ளது; குறிப்பிட்ட நாட்டின் யதார்த்த நிலைமைகளைக் கருத்திற்கொள்ளாது, மார்க்சிய சித்தாந்தங்களை வெறுமனே யாந்திரிகத்தனமாக அப்படியே பிரயோகிப்பதன் அபத்தங்களை வரலாற்றனுபவங்களின் அடிப்படையில் அழுத்தமாக உள்வாங்கி, வெளிப்படுத்த முனைந்துள்ளது. இவற்றின் ஒரு பகுதியாக இலங்கை முற்போக்கு இலக்கியப் போக்கின் சில பக்கங்களை அவ்வியக்கத்தினர் நிதானமாக மதிப்பிட்டுள்ளனர். சிவாராமநாதன் (சாந்திகுமார்), ஜோதிகுமார் ஆகியோரின் கட்டுரைகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரி அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் சிறுபான்மை மக்களின் தேசியத்தை நிராகரித்து அல்லது குறைத்து மதிப்பிட்டு, வர்க்க ரீதியான அணிதிரளல்களை முதன்மைபடுத்திய காலத்தில், மலையக மக்கள் இயக்கம் சிறுபான்மை இனங்களின் தேசியத்தையும் அதன் அவசியத்தையும் மலையகத் தமிழரை அடிப்படையாகக் கொண்டு வலியுறுத்தி வந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

மலையக மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ இதழாக விளங்கிய தீர்த்தக்கரை, எல். சாந்திகுமாரை ஆசிரியராகவும் எஸ்.நோபேட், எம். தியாகராம், எல். ஜோதிகுமார் ஆகியோரை ஆசிரியர் குழுவினராகவும் கொண்டு வெளிவந்துள்ளது. காலாண்டு இதழாக வெளிவந்த தீர்த்தக்கரை, எல்லாமாக ஐந்து இதழ்களே வெளிவந்துள்ளன. இதன் முதல் இதழ் 1980ஆம் ஆண்டு ஜுன்-ஆகஸ்ட் மாதம் வெளிவந்துள்ளது; இறுதி இதழ் 1982ஆம் ஆண்டு செப்டெம்பர்-நவம்பர் வெளிவந்துள்ளது.

தீர்த்தக்கரை வெளிவந்த எண்ணிக்கையும் காலமும் குறைவாக இருந்தாலும் தீர்த்தக்கரைக் கதைகள் என்று கூறுமளவுக்கு அதில் வெளிவந்துள்ள கதைகள் தனித்துவமிக்கவையாகவும் கனதியானவையாகவும் விளங்குகின்றன. தீர்த்தக்கரையில் வெளிவந்த சிறுகதைகளுள் பத்தினையும் நந்தலாலாவில் வெளிவந்த சிறுகதைகளுள் மூன்றினையும் (வெண்ணிறத் தாமரைகள், தூரிகை, சிறுவன்) இணைத்து ‘தீர்த்தக்கரைக் கதைகள்’ என்ற தொகுப்பு 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் 1980க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்தவை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தீர்த்தக்கரைக் குழுவில் இயங்கிய நண்பர்களே பின்னர் நந்தலாலா (1992) என்ற இலக்கிய வட்டத்தினை உருவாக்கி, நந்தலாலா சஞ்சிகையினையும் வெளியிட்டுள்ளதால் அவ்விதழில் வெளிவந்துள்ள கதைகளுள் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இத்தொகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன எனலாம்.

தீர்த்தக்கரைத் தொகுப்பில் உள்ள கதைகள், முற்போக்கு என்ற மகுடத்துடன் 1960, 1970களில் வெளிவந்த இலங்கைத் தமிழ்ச் சிறுகதைகள் பலவற்றிலிருந்து வேறுபட்டுள்ளமை தனித்துச் சுட்டிக்காட்ட வேண்டியதாகும். அவ்வேறுபாடுகளுக்கு முற்போக்கு இலக்கியக் கொள்கை குறித்து தீர்த்தக்கரைப் படைப்பாளிகள் கொண்டிருந்த புரிதல், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளின் முற்போக்கு இலக்கியப் போக்குக் குறித்து அவர்கள் கொண்டிருந்த மதிப்பீடு, அக்காலத்தில் இடம்பெற்ற, ‘முற்போக்கு இலக்கியத்தில் அழகியல் பிரச்சினைகள்’ குறித்த வாதம் முதலானவற்றின் தாக்கம் காரணமெனலாம்.

1960, 1970களில் வெளிவந்த சிறுகதைகள் உள்ளடங்களாக முற்போக்குப் படைப்புக்கள்மீது, அவை உள்ளடக்கவாதம் மிக்கவை; பிரசாரத் தன்மை மிக்கவை; படைப்பின் உருவம், அழகியல் தொடர்பாக அக்கறை கொள்ளாதவை முதலான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முற்போக்குக் கருத்துநிலைசார்ந்தவர்களில் ஒருபகுதியினரும் அத்தகைய சில பலவீனங்களைச் சுட்டிக்காட்டி, மார்க்சிய அழகியலின் அடிப்படைகள் குறித்து விவாதித்துள்ளனர். முற்போக்கு இயக்கம்சார் செயற்பாட்டாளர்களில் சிலர், குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்படுபவை அக்காலத்துத் தேவையின் வெளிப்பாடு எனக்கூறினாலும் அத்தகைய பலவீனங்கள் முழுமையாக மறுப்பதற்கு இல்லை.

முற்போக்கு என்ற அடையாளத்தில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க அளவான கதைகளில் உள்ளடக்கத்துக்கு மட்டுமே முதன்மை கொடுத்தல், கருத்துக்கோவைகளால் பிரசாரத்தை முன்னெடுத்தல், புரட்சிகளையும் சமூக மாற்றங்களையும் இயந்திரப் பாங்காகப் பதிவு செய்தல், கோட்பாட்டை அப்படியே இலக்கியமாக்க முயற்சித்தல், போராட்ட, புரட்சிகர செயற்பாடுகளைக் கதைநகர்வுடன் இணைத்து வெளிப்படுத்தாமல் திட்டமிட்டுப் புகுத்தல், நடைமுறை யதார்த்த வாழ்விற்கு அந்நியப்பட்ட வாழ்வைப் பேசுதல், அக உணர்வுகளைப் பேசாது தவிர்த்தல் முதலான பல பலவீனங்கள் காணப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். ஆனால், இப்பலவீனங்களை முற்போக்கு இயக்கத்தினதும் முற்போக்கு இலக்கியத்தினதும் பலவீனமாக வியாக்கியானம் செய்வது நியாயமானதாகத் தெரியவில்லை.

தமிழ்ச் சூழலில் முற்போக்கு இலக்கியச் செல்நெறியை எதிர்மறையாக விமர்சிப்பவர்கள், மேற்படி குறைபாடுகளை, அவற்றைப் படைத்த படைப்பாளிகளின் பலவீனமாகவோ முற்போக்கு இலக்கியக் கொள்கைகளை உள்வாங்கியதிலும் அதனை இலக்கியமாக்கியதிலும் அக்குறித்த படைப்பாளிகளிடம் காணப்பட்டுள்ள இடைவெளிகளாகவோ மதிப்பிடாமல், அவற்றை முற்போக்கு இயக்கத்தினதும் முற்போக்கு இலக்கியத்தினதும் பலவீனங்களாகக் கட்டமைத்து, ஒட்டுமொத்த முற்போக்கு இலக்கியங்களையும் அவ்விலக்கியங்கள் அவாவி நிற்கின்ற சமூக மாற்றங்களையும் பெரிதும் மறுதலித்து வருகின்றனர். அம்மறுதலிப்பு, இலக்கியம் அரசியலுக்கு அப்பாற்பட்டது எனக்கூறி, தமது அரசியலை நுட்பமாக முன்நகர்த்துபவர்களுடைய குறுகிய நிலைப்பாட்டின் வெளிப்பாடாக அமைந்திருப்பதைக் காணலாம்.

முற்போக்குப் படைப்பாளி என்ற அடையாளத்துடன் படைப்பிலக்கியத்துறையில் இயங்கிய படைப்பாளிகள் எல்லோரும் முற்போக்குக் குறித்த ஆழமான பிரக்ஞையுடன் படைப்பிலக்கியம் செய்துள்ளனர் என்று கூறுவதற்கில்லை. முற்போக்கு இலக்கியப் போக்கு செல்வாக்குமிக்கச் செல்நெறியாக விளங்கியதால் முற்போக்குக் குறித்த ஆழமான புரிதலற்று அதில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் முற்போக்கு இலக்கியக் கொள்கையை  வெவ்வேறு அளவுகளில் புரிந்துகொண்டவர்களும் சமூகத்தின் புரட்சிகர மாற்றங்களால் உடனடியாக ஈர்க்கப்பட்டவர்களும் முற்போக்குப் படைப்பாளி என்ற அடையாளத்துக்குள்ளேயே தம்மையும் இணைத்துக்கொண்டுள்ளனர். முற்போக்கு இயக்கத்தினரும் இந்தப் போக்குகளின் பலவீனங்களைக் களைவதில் அதிக அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை. அதேவேளை ஒரு பெரும் மக்கள் இயக்கமாக ஓர் அமைப்பு கட்டியெழுப்பப்படுகின்றபொழுது இத்தகைய பலவீனங்கள் தவிர்க்கமுடியாமல் மேலெழக்கூடியவையே. அதனால் இலங்கை முற்போக்கு இலக்கியம் குறித்த மதிப்பீட்டின்பொழுது இத்தகைய மட்டுப்பாடுகளையும் சிக்கல்களையும் கருத்திற்கொண்டே மதிப்பிடவேண்டிய தேவையிருக்கிறது.

தீர்த்தக்கரைத் தொகுப்பில் உள்ள அநேகமான கதைகள், முற்போக்கு அடையாளத்துடன் வெளிவந்துள்ள பலவீனங்களைக் கொண்ட சிறுகதைகள் போலல்லாமல், நடைமுறை யதார்த்த வாழ்வையும் அவ்வாழ்வை இயக்கும் சக்திகளையும் ஆழமாக உற்றுநோக்கி, அவற்றை அழகியல் பெறுமதிகளுடன் வெளிப்படுத்த முயன்றுள்ளதைக் காணமுடிகின்றது.

இத்தொகுப்பில் உள்ள கதைகளுள் பெரும்பாலானவை மலையகச் சமூக பண்பாட்டுப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றியதாகப் பிரான்சிஸ் சேவியரின் விடியாத இரவுகள், தடம் மாறும் சுவடுகள் ஆகிய கதைகள் அமைந்துள்ளன. இவ்விரு கதைகளும் 1980களின் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பிரதான வாழ்வியல் மாற்றங்களை ஆழமாகப் பதிவுசெய்வனவாக அமைந்துள்ளன.

பிரான்சிஸ் சேவியரின் இரண்டு கதைகளிலும் சாதியத்தின் உஷ்னம் வெவ்வேறு அளவுகளில் வெளிப்பட்டுள்ள அதேவேளை 1980களில் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட பேரினவாத அடக்குமுறை, அச்சாதிய இறுக்கத்தில் ஏற்படுத்தி வந்த மாற்றங்களும் வெளிப்பட்டுள்ளன. உதாரணமாக, ‘விடியாத இரவுகள்’ என்ற கதையில் சாதித் தூய்மையைப் பேண முனைந்த தாய், தன்னுடைய மகன் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு, இனந்தெரியாதவர்களால் கொல்லப்பட்ட பின்னர், தனது சாதித் தூய்மையில் இருந்து மெல்ல விடுபடுகிறாள்.

‘தடம் மாறும் சுவடுகள்’ கதையில் தாழ்ந்த சாதியாகக் கருதப்படும் மணியம், உயர்சாதிப் பெண்ணைக் காதலித்துத் தன்னுடன் கூட்டிச் சென்றதுக்காக, உயர் சாதியினரால் பொலிஸ் ஆதரவுடன் திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகின்றான். அதேவேளை அவனது தம்பி கமலன், திருகோணமலையில் பெருந்தேசிய அடக்குமுறையாளர்களுடன் முரண்பட்டபோது அவனுக்கான புகலிடமும் கல்வியும் உயர்சாதியினரால் யாழ்ப்பாணத்தில் ஒழுங்குசெய்து தரப்படுகின்றன. அத்துடன் அக்கதையில் கமலனைச் சந்திக்க வரும் உயர்சாதி இளைஞர்களுக்கும் கமலனின் தந்தைக்கும் இடையிலான உரையாடல், முன்னைய தலைமுறையின் சந்தேகங்களையும் புதிய தலைமுறையின் நிலைப்பாட்டையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக,

‘நீங்கள் பெரிய சாதியல். எங்கட வீட்டில சாப்பாடு, தண்ணி குடிக்கிறது தெரிஞ்சா உங்கட வீட்டில கோவிக்க மாட்டாங்களோ, நீங்க பெரிசா காதல், கீதல் என்று…. நீங்க முடியுமெண்டா ஆரும் குறைஞ்ச சாதி பெடிச்சிகள காதலிச்சு சடங்கு முடியுங்கோ பார்ப்பம்…’

என்ற கமலனின் தந்தையின் கூற்றும் அதற்குக் கமலனின் நண்பர்கள், ‘விடை கூறாமல் இருந்துவிட்டு ஒரு தலைமுறையின் கொடுமைகளை மனதுக்குள் சபித்து ஏக்கப் பெருமூச்சை விடுவதும்’ முன்னைய தலைமுறையின் ஐயம், புதிய தலைமுறையின் நடத்தை மாற்றம் என்பவற்றை வெளிப்படுத்தி நிற்பதைக் காணலாம். இலங்கையில் இடம்பெற்ற பேரினவாத அடக்குமுறை, யாழ்ப்பாணச் சாதிய இயங்குமுறையில் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடுகளாக இவை அமைகின்றன.

இக்கதைகளில் வரும் சந்திரன், கமலன் முதலான இளைஞர்கள், 1980களின் உத்வேகம் மிக்க போராட்ட குணம் நிறைந்த இளைஞர்களுக்குச் சான்றாக அமைகின்றனர். அவர்களின் போராட்ட முனைப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள அதேவேளை அப்போராட்டச் செயற்பாடுகளின் போக்குகளை உற்றுநோக்கி, அவை மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எடுத்துக்காட்டாக:

‘விடுதலை ஒரு நாளில் வந்திடாது. அது நீண்டநாள் போராட்டம். நாங்கள் அவசரப்படக் கூடாது. எங்கட பிழைகளத் திருத்த வேணும். எப்பவும் மக்களோட நிக்க வேணும்… சுயநலம் எங்குதான் இல்ல. உயிரை துச்சமாக மதிச்ச எங்கட இளைஞர்களே இண்டைக்கு மாலைக்கும் விளம்பரத்துக்கும் முந்துராங்கள்…’

‘என்ட மகன் வெள்ளாம் புள்ளையக் கட்டப்போறான் என்டதற்காக ஊரைக் கொளுத்தி பிறகு அவனையும் சாகடிச்ச நேரத்தில மௌனமா இருந்திட்டு இப்ப எல்லோரும் ஒரு இனம் என்றிரதுல என்ன அர்த்தம் இருக்கு. உதில என்ன நியாயமிருக்கு…’

முதலான பதிவுகள், தமிழ்த்தேசியத்தை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட புனித விடயமாகக் கட்டியெழுப்ப முனைந்த காலத்தில், அப்புனிதமாக்கலை உடைத்தெறிந்துள்ளதைக் காணலாம். நடைமுறை யதார்த்தத்தோடு தமிழ்த்தேசிய உணர்வலையை இணைத்து, அதனுள் இயங்கிய அக, புற முரண்பாடுகளை அப்பட்டமாகப் பதிவு செய்வதன் மூலம் தமிழ்த்தேசியக் கருத்தாக்கத்தின் அடித்தளம் இங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டினுடைய அரசியற் சூழலும் தமிழ்த் தேசியத்தின் பெருவளர்ச்சியும் இந்தப் போக்கினை வளரவிடாமல் தடுத்துவிட்டன.

விடியாத இரவுகள் கதையில் சந்திரனைக் கைதுசெய்த பொலிஸ், அன்று இரவே அவனை விடுதலை செய்ததாகக் கூற, விடியலில் அவனுடல் சந்தியில் பிணமாகக் கிடப்பது அரச பயங்கர வாதத்தின் கோரத்தை அழுத்தமாகப் பதிவு செய்வதாகவுள்ளது. அத்துடன் சந்திரனை இழந்த தாயின், ‘என்ற ராசா! ஆர் உன்னைக் கொண்டு போனது’ என்ற இரவு நேர புலம்பல்கள், அக்காலத்துப் பெரும்பாலான தாய்மார்களின் விடை காணாத கேள்வியாக அமைந்திருந்துள்ளதோடு அதன் தொடர்ச்சியான குரல்கள், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு தசாப்தம் கடந்த பின்பும் இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், நீதியின் கண்கள் தான் இன்னும் திறந்தபாடில்லை.

ஆனந்தராகவன் (எல். சாந்திகுமார்), தீர்த்தக்கரை சஞ்சிகையூடேயே சிறுகதையாசிரியராக அறிப்பட்டவராவார். மிகக்குறைவான கதைகளையே அவர் தந்துள்ளபோதும் அக்கதைகள் உருவ உள்ளடக்க செறிவு மிக்கவையாக அமைந்துள்ளன. அவருடைய உதயகாலத்து ஜனனங்கள், நண்பணே! என்றும் என் நினைவாக…, வீணையை மேவும் விரல்கள், நாகசேனை தோட்டத்து நரசிம்மன் கங்காணி ஆகிய கதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ளன.

1980களில் இலங்கையின் பிரதான நெருக்கடிகளுக்குள் சிக்குண்ட மனிதர்களின் வாழ்வனுபவத்தை, அக்காலத்துச் சமூக அரசியல் பின்னணியில் உயிர்ப்புடன் வெளிப்படுத்த முனைந்துள்ள ஆனந்தராகவன், நெருக்குவாரமிகுந்த வாழ்க்கைக் கணங்களிலும் மேலும் மேலும் மலர்ச்சியடையும் மனிதத்துவத்தின் மேன்மையை, வாழ்தலின் உயிர்ப்பை விரிந்த உலகப் பார்வையுடன் அழுத்தமாகப் பற்றியிருப்பதைக் காணமுடிகின்றது.

வெற்று விவரணைகளோ பிரசாரத்தொனியோ அற்று நகர்கின்ற அவரது கதைகளில் நடமாடுகின்ற பாத்திரங்கள், அக்கால நெருக்கடிமிக்க வாழ்வின் சாரத்தைத்திரட்டித் தருவனவாக அமைந்துள்ளன. உதய காலத்து ஜனனங்கள், நண்பனே! என்றும் உன் நினைவாக முதலிய கதைகளின் பாத்திர வார்ப்பும், கதை நகர்வும், மொழிச் செறிவும் ஆனந்தராகவனின் சிறுகதைத் தடத்துக்கு நிரந்தரமானதோர் இடத்தைத் தருவனவாக உள்ளன எனலாம்.

உதயகாலத்து ஜனனங்களில் அரச வன்முறை, அதிகார துஸ்பிரயோகம், பாலியல் பலாத்காரம் போன்ற வன்கொடுமைகளையும் அக்கொடுமைகளுக்கு உள்ளானவர்களிடையே மேலும் மேலும் விரிந்து செல்லும் மனிதத்துவத்தின் உயர்ச்சியையும் வெளிப்படுத்த முனைந்துள்ள ஆனந்தராகவன், தாய்மை, காதல், நட்பு முதலிய உணர்வுகளில் நிறைந்துள்ள உயிர்ப்பான நொடிகளை, நடைமுறை வாழ்வனுப பின்னணியில் வெளிப்படுத்தியுள்ளார்.

மக்களின் விமோசனத்துக்காகக் குரல் எழுப்பியவர்களைச் சிறையிலடைத்த அரசு, அவர்கள்மீது தீவிர வன்முறையைப் பிரயோகிக்கின்றது. அதன் ஓரங்கமாகச் சிறையிலடைக்கப்பட்டிருந்த கமலா என்ற பெண், பல நபர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுகிறாள். அதன் மூலம் அவள் கருவுருகிறாள். அவளின் உடல்நிலை பலவீனத்தின் காரணத்தினால் கருவைச் சிதைக்காமல் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அக்குழந்தைமீது அவளுக்கு எவ்வித வெறுப்பும் இல்லை. அவளது வாழ்வின் ஆதாரமாக அக்குழந்தை அமைகின்றது.

‘வெறுக்கத்தக்க மனித கொடூரங்களில் அது தோற்றம் கொண்டிருந்தாலும் தனது தாய்மையினூடே இவ்வுலகில் பிரவேசம் செய்திருக்கின்ற ஒரு மானுட உயிர் என்ற ரீதியில் அவள் அக்குழந்தையில் கொண்டுள்ள புனித உணர்வை அறிந்தும் அவர்கள் பிரிந்து இருப்பது தகாது என நினைத்தேன். சமூகத்தின் அவலங்களுக்காக உயிரியல் நியதிகளினூடே வந்து சேர்ந்த ஒரு ஜீவனைப் பழிவாங்குவது நியாயமில்லை என்பதையே அவள் தனது பல்வேறு கருத்துக்களால் நிரூபிக்க முயன்றிருக்க வேண்டும்’

என்பதே கதாசிரியரின் நியாயப்பாடாக அமைகிறது. பாரிய இனமேலாதிக்க வன்முறைகள் அரங்கேறிய காலத்தில் ஆனந்தராகவன் வந்தடைந்துள்ள மேற்படி புள்ளி சாமான்யமானதல்ல. அது வாழ்க்கைக் குறித்த தீராத தேடலின் விளைவான கண்டடைவாகவே நீட்சிகொள்கிறது.

நாட்டில் மேலோங்கிய இன வன்முறைகளையும் அது மலையகத்துள் நிகழ்த்திய அசம்பாவிதங்களையும் அதிலிருந்து தனது நண்பனின் குடும்பத்தினரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்த நண்பனையும், அந்நண்பனின் நினைவினைச் சுமந்து ஆராதிக்கும் குடும்பத்தையும் காணமுடிகின்ற, நண்பனே! என்றும் உன் நினைவாக… என்ற கதையிலும் ஆனந்தராகவன், மனிதத்துவத்தின் அடிநாதத்தையே பற்றியிருக்கிறார். சிங்களக் காடையர்களிடமிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிய நண்பன், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும்போதும்,

‘அவனது கைகள் இரண்டும் வெட்டப்பட்டுப் பக்கத்தில் கிடக்கின்றன. ஒரு கண் பாதி வெளியில் வந்த நிலையில் வெடுத்து நிற்கிறது, உடல் முழுவதும் குத்திக் குதறிய நிலையில். மானிடத்தின் உயிர்ப்பும் உயர்ந்த உள்ளமும் கொண்ட ஒரு உன்னத நிர்மாணம் என்னமாயக் கணப்பொழுதில் சிதைந்து சிதறுண்டுபோனது…’

என ஆனந்தராகவனின் தேடலும் விருப்பும் பெருகிவரும் மனித கொடூரங்களுக்கு மத்தியிலும் மானுட வாழ்வின் உன்னதத்தைத் தீட்டிக்காட்டுவதிலேயே மையங்கொண்டுள்ளதைக் காணலாம்.

கணவன், மனைவி ஆகியோரிடையே தொடர்ந்தும் இடம்பெறும் முரண்பாடுகளையும் கணவனின் வன்கொடுமைகளையும் அக்கொடுமைகளுக்கிடையே அப்பெண்ணுக்கும் இன்னொரு நபருக்கும் இடையே தோன்றும் காதலையும் பேசுவதாக அமைந்துள்ள வீணையை மேவும் விரல்கள் கதையிலும் மானுடத்தின் உயிர்ப்பைத் தீண்டும் அம்சமே முன்னிலை பெற்றுள்ளது. வழமையான தமிழ்ப் படைப்புக்களில் பேசப்படுவது போல அவர்களுக்கிடையேயான காதல் அனுதாபத்தினாலோ இரக்கத்தினாலோ, அல்லது அவர்களுக்கான உடல்சார் தேவையினாலோ ஏற்பட்டதாகச் சித்திரிக்கப்படவில்லை. அக்காதல் மனித உறவின் ஆரோக்கியமான உறுதிப்பாட்டிலே மலர்வை ஆனந்தராகவன் உணர்வுபூர்வமாகப் படைப்பாக்கியுள்ளார். இதுவே அவருடைய ஏனைய கதைகளினதும் மைய இழையாக உள்ளுறைந்துள்ளது எனலாம்.

ஆனந்தராகவனின் நாகசேனை தோட்டத்து நரசிம்மன் கங்காணி என்ற கதை, அவரது ஏனைய கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைந்துள்ளது. மலையகச் சமூக அசைவியக்கத்தின் பல பக்கங்களைக் கங்காணி ஒருவரின் கூற்றுக்கள் மூலமாகப் புறநிலையாக அணுகுவதாக அக்கதை அமைந்துள்ளது.

தீர்த்தக்கரைத் தொகுப்பில் கேகாலை கைலாயநாதனின் கதைகளே எண்ணிக்கையில் அதிகமாக இடம்பெற்றுள்ளன. கைலாயநாதன் பரவலாக எழுதாவிட்டாலும் அவரது கதைகள், மலையகத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் கலையியல் நேர்த்தியில் முதிர்ச்சி பெற்றவையாக  விளங்குவதைக் காணமுடிகின்றது. மலையகத் தமிழரின் சமூக வாழ்வியல் அசைவையும் அவ்வசைவில் தாக்கம் செலுத்தும் காரணிகளையும் புறவயமாக அணுகியுள்ள கைலாயநாதன், சொற்தேர்விலும் கதை சொல்லும் முறையிலும் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.

கைலாயநாதனின் ஐந்து கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் தண்ணீர் வற்றிடும் குளங்கள், மீண்டும் வசந்தம் வரும் ஆகிய கதைகள் மலையகத் தமிழரின் சமூக அசைவின் பல புள்ளிகளை அடித்தளத்திலிருந்து பதிவுசெய்துள்ளதோடு அச்சமூகத்தின் விழிப்பையும் எதிர்காலம்மீதான நம்பிக்கையையும் விதைத்துள்ளன. நாட்டில் இடம்பெற்ற இனமேலாதிக்கச் செயற்பாடுகள் சிங்களக் கிராமங்களுக்கு அருகில் வாழ்ந்த தோட்டத்து மக்களை எவ்வாறு பாதித்தன, அப்பாதிப்பலிருந்து அவர்கள் மீளும் போராட்ட வாழ்வு முதலானவை மிக யதார்த்தமாக இக்கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தண்ணீர் வற்றிடும் குளங்கள் என்ற கதையில், நட்சா திட்டத்தினால் தேயிலைத்தோட்டங்கள் பங்கிடப்பட்டுச் சிங்களவர்களுக்குக் கொடுக்கப்படுவதையும், தம் உழைப்பைக்கொண்டு செழிக்க செய்த இடத்திலிருந்து தொழிலாளர்கள் அகன்று செல்ல நிர்ப்பந்திக்கப்படுவதையும் அந்நிர்ப்பந்தம் தரும் அலைக்கழிப்பையும் உயிரோட்டமாக வெளிப்படுத்தியுள்ளதைக் காணலாம்.

ஒரு குறித்த நிலப்பரப்பில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த சமூகத்தை, அந்நிலப்பரப்பிலிருந்து சிதறடித்து வெளியேற்றுவது அம்மண்ணோடும் காற்றோடும் ஒட்டி உறவாடிய ஆன்மாக்களுக்கு ஏற்படுத்தும் அவஸ்தைகள், அவ்வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த என்ன செய்வதென்றறியாது தடுமாறும் தொழிலாளர்களின் உளக்கொதிப்பு முதலியன கலாபூர்வமாக அக்கதையில் வெளிப்பட்டுள்ளன.

குளத்தில் உள்ள தவளைக்குஞ்சிகள், அக்குலத்தின் நீர் வற்றினால் மடிந்துவிடுவது போல ஒரு குறித்த நிலப்பரப்போடு இணைந்துவிட்ட மக்களை, அந்நிலத்திலிருந்து வெளியேற்றினால் அவர்களின் வாழ்தல் வெற்றுடம்புகளாகவே கழியும் என்ற குறியீடு சிறப்பாகப் பொருந்திவந்துள்ளதோடு தவளைக் குஞ்சிகளுக்குக் கால் முளைத்தால் குளத்தில் நீர் வற்றிடும்போது போராடி உயிர்வாழ்ந்துவிடும் என அக்குறியீட்டுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்திருப்பது, அக்கதையை அடுத்த தளத்துக்கு நகர்த்துவதாக உள்ளது. இந்தக் கால் முளைத்தல், கைலாயநாதனின் மீண்டும் வசந்தம் வரும் கதையில் முழுவடிவம் பெறுவதைக் காணமுடிகின்றது. அக்கதையில் இடம்பெறும் கூட்டிணைந்த எதிர்ப்பும், இளைஞர்கள் கம்பு சுற்றி பழகுவதும் கால் முளைத்ததின் அடையாளங்களாகவே அமைந்துள்ளன.

சிங்களக் கிராமங்களுக்கு அருகில் வாழ்கின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கையில் இடம்பெறுகின்ற இனக் கலவரங்களில் முதற் தாக்குதலுக்கும் பெரும் இழப்புக்களுக்கும் உள்ளாகும் குழுவினராக விளங்கிவந்துள்ளனர். 1980களில் மலையகத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் சிங்களக் கிராமங்களின் எல்லைப்புறங்களில் வாழ்ந்தவர்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஒரு தோட்டத்தையும் அத்தோட்டத்தில் வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் அந்நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளையும் ‘மீண்டும் வசந்தம் வரும்’ கதையில் காணமுடிகின்றது.

மலையகத் தமிழரின் பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பாலான பொருளாதார நடவடிக்கைகளாக மாடு வளர்த்தல், விவசாயம் செய்தல் போன்றவற்றைச் செய்துவருகின்றனர். என்றாலும் மலையகத்துக்குள் இன வன்முறைச் செயற்பாடுகள் மேலோங்கும்போதெல்லாம் அருகிலுள்ள சிங்களக் கிராமங்களிலிருந்து வரும் காடையர்கள் தொழிலாளர்களின் மாடுகளையும் விவசாயப் பயிர்களையும் கொள்ளையிட்டுச் செல்கின்றனர். அதனால் விரக்தியுற்ற தொழிலாளர்கள் அத்தகைய மேலதிகப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகின்றனர். அவ்வாறு விரக்தியுறும் தொழிலாளர்களின் மனநிலையைப் பின்வருமாறு காட்டுகிறார் ஆசிரியர்:

‘இதுதான் மாஸ்டர் இங்க பிரச்சனையே. எந்த ஒரு காரியத்தையும் என்னா ஊக்கத்தோடு செஞ்சாலும் நாங்க பயந்து பயந்துதான் செய்யவேண்டி இருக்கு. எளவு சனியனுங்க! நாங்க என்னடா லயத்துக்குள்ள முத்தையா குமிச்சி வச்சிருக்கோம்? என்னமோ தேன்பூச்சி சேக்குற மாதிரி ஒவ்வொரு சொட்டா, ஒடம்ப முறிச்சி சேர்த்தாலும் அதையும் நக்கிட்டுப்போக வந்துட்றானுங்க. இதுதான் மாஸ்டர் அப்பவே சொன்னேன், தோட்டம் போட்றதெல்லாம் பொய்வேல…’

இச்சித்திரிப்பு மலையகத் தமிழரின் பொருளாதார விருத்தியைச் சிதைப்பதில் நாட்டில் மேலோங்கிய இன வன்முறைச் செயற்பாடுகள் எவ்வாறெல்லாம் இயங்கியுள்ளது என்பதைக் காட்டுகின்றது.

நாட்டில் உள்ள தொழிலாளர்களிலேயே மிகக்குறைந்த கூலி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கே வழங்கப்படுகின்றது; அவற்றைச் சமாளித்து மீண்டெழ, அத்தொழிலாளர்கள் மேற்கொள்ளும் மேலதிக வருமானச் செயற்பாடுகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கான சூழல் இல்லை; கொள்ளையிடலும் அழிப்பும் எப்போது வேண்டுமானாலும் இடம்பெறலாம். இந்நிலை அச்சமுதாயத்தின் மேல்நோக்கிய அசைவை வெகுவாகப் பாதித்தது. மலையகத் தமிழரிடத்தே ஏற்பட்டுவந்த விழிப்பானது இத்தகைய கொடுமைகளைச் சுமந்துதிரிந்த காலத்திலிருந்து விடுபட்டு, அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் ஒன்றுகூடி அவற்றை எதிர்த்துப் போராடவும் மனவுறுதியைத் தந்துள்ளது. இதனை,

‘அட தூத்தேறி! வாய மூடு. எதுலே பொய் வேல. எது பொய் வேல? தோட்டம் போட்றதுல்ல என்னா பொய் வேலைய கண்டலே. அவென் நக்கிட்டுப் போக நீ அவென் நாக்க வெட்டு…’

என்ற குரல் மூலம் பதிவுசெய்யும் ஆசிரியர், அதன் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து போராடுவதற்கு இளைஞர்கள் சிலம்படி முதலிய கலைகளைப் பயில்கின்றனர் என்பதைக் காட்டுகிறார். இந்த ஒன்றிணைவும் விரக்தியற்ற உழைப்பும், வன்முறைகளுக்கான எதிர்ப்பும், எதிர் போராட்டமும் அச்சமூகத்துக்கு வசந்தங்களைக் கொண்டுவரும் என நீட்சிகொள்ளும் இக்கதை, மலையகத்தின் புதிய விடியலுக்கான பாதையைத் திறப்பதாக அமைந்துள்ளது.

இலங்கைச் சமூக வரலாற்றின் 1980, 1990களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் கதைகளில் கேகாலை கைலாயநாதனின் வெண்ணிறத்தாமரைகள் என்ற கதைக்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு எனலாம். நாட்டில் மேலோங்கிய இன வர்க்க வன்முறைகளால் ஆட்கடத்தல், கொலை, கற்பழிப்பு என்பன மலிந்ததோடு மனிதவுரிமை மீறல்களும் கணக்கற்று இடம்பெற்றுள்ளன. அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அவற்றின் புள்ளிவிபரங்களைக் காலத்துக்குக் காலம் வெளியிட்டே வருகின்றன. ஆனால், அப்பாதிப்புக்களுக்கு உள்ளாகியவர்களின் குடும்பநிலை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் முதலானவை பற்றிய தகவல்களை அவற்றில் அறியக்கூடியதாக இல்லை. இந்நிலையில் அச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படைப்பிலக்கியங்களிலேயே அத்தகைய அசம்பாவிதங்களுக்கு உள்ளாகியவர்களின் குடும்பநிலை, குடும்பத்தவர்களின் அக, புறப்போராட்டம் முதலானவற்றை அறியக்கூடியதாக உள்ளது. ஓர் ஆட்கடத்தல் சம்பவம், கடத்தப்பட்டவரின் குடும்ப அலகை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெண்ணிறத் தாமரைகள் கதையில் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார், கேகாலை கைலாயநாதன்.

சமூக வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து விலகி, தனிமனித அகவுணர்வுசார் வெளிப்பாடாகக் காதலிலே இரு கண்கள், தூரிகை ஆகிய கதைகள் அமைந்துள்ளன. அந்த அகவுணர்வு தனிமனித நிலையில் சுருங்கியதாக, தனிமனிதர்களுக்குள்ளிருந்தே சுயம்புவாகப் பீறிட்டெழுவதாகச் சித்திரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வாழ்வியல் நடைமுறைகள் தனிமனித அகவுணர்வுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கே அக்கதைகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

காதலிலே இரு கண்களில் இயற்கையாய் காதல் உணர்வு கொள்ளும் இளைஞன், பொருளாதார சமத்துவமற்ற உலக நடைமுறையின் விரக்தியால் தன் காதலைத் தனக்குள்ளேயே புதைக்க முயல்கிறான். தூரிகையில் விரிந்த மானுட தேடலும் உழைக்கும் வர்க்க நேயமும் கொண்ட ஆசிரியன், தன் மனதுக்கு நெருக்கமான ஓவியங்களை வரைந்த பெண்மீது கொள்ளும் காதலை, அப்பெண்ணின் வாழ்க்கை நோக்கும் ஓவியங்களும் தன்னைவிட்டு அந்நியப்படும்போது, தவிர்த்துக்கொள்கிறான். ஒருவரின் காதல் பொருளாதார அசமத்துவத்தாலும் மற்றவரின் காதல், காதல் கொண்ட பெண்ணினுடைய வாழ்க்கை நோக்காலும் மறைக்கப்படுகின்றது. ஆனால், இதனை ஓர் பெரும் இழப்பாக, நம்பிக்கை வரட்சியாகச் சித்திரிக்காது, வாழ்வுமீதான ஆர்வம் குன்றாதவகையில் படைப்பாக்கியுள்ளார், கைலாயநாதன். இந்நோக்கு அவரின் சிறுகதைப் படைப்பாக்கத்தின் பிரதான பண்புகளுள் ஒன்றாக அமைந்துள்ளதைக் காணலாம்.

இவ்விரு கதைகளும் அகவுணர்வினை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அவை உழைக்கும் மக்களின் புதிய விடுதலையை அவாவி நிற்றலையே மையச்சரடாகக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆசிரியர், உழைக்கும் மக்கள்மீதான தனது நேயத்தை இக்கதைகளிலும் படரவிட்டுள்ளதோடு தான் சார்ந்த வர்க்கநிலைநின்ற தேடலைப் பாத்திரங்களின் ஒவ்வொரு அசைவிலும் கூர்மையாக நிகழ்த்தியுள்ளார். அத்துடன் தூரிகையில் மானுட நேயத்தின் உயர் வீச்சினைத் தரிசிக்க முயலும் நம்பிக்கைக் கீற்றை ஆழமாக விதைத்துள்ளார். உதாரணமாக,

‘…யார் தான் இந்த மூச்சுத் திணறலை அனுபவிக்கவில்லை. எவனெவனுக்கு மனித நேயம் தொடர்பான இதயத்துடிப்பு உண்டோ அவனுக்கெல்லாம் இந்த மூச்சுத் திணறல் அந்நியமானதல்லவே. ஆனால், பெண்ணே, உனது ஓவியங்கள் ஒன்றை எனக்குத் தெரிவித்து நிற்கின்றன. மூச்சை அடைத்துத் திணறடிக்கும் இந்தச் சுவாத்தியத்தில் தான் இதனையும்மீறி இயற்கை விரிக்கும் பலமான நுரையீரல்களும் ஜனனமாகின்றன என்ற சேதியை…’

என்ற வெளிப்பாடு தரும் நம்பிக்கை, ஊக்கம், மனித வாழ்வின் ஜீவ ஊற்று இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது, அதனை அரவணைக்க ஆர்வம்கொள் என்ற ஆரோக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொள்கிறது.

தீர்த்தக்கரைக் கதைகள் தொகுப்பில் உள்ள சிறுவன், என்று தணியும் இந்த… ஆகிய இரு கதைகளும் மலையகச் சிறுவர்களின் வாழ்நிலைமையைப் பேசுவதனூடாக அச்சமூகத்தின் அசைவியக்கத்தின் பல பக்கங்களைப் பதிவுசெய்துள்ளன. மலையகச் சிறுவர்களின் கல்விநிலை, கல்விமீதான சிறுவர்களின் ஆர்வம், அவர்களது திறமை முதலியனவும் கல்வியைத் தொடரமுடியாத நெருக்கடிகளும் அதனால் அச்சமுதாயத்தின் மேல்நோக்கிய எழுச்சியில் ஏற்படும் மட்டுப்பாடுகளும் அக்கதைகளில் சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ராமையா முருகவேளின் சிறுவன் என்ற கதையானது, மிகுந்த திறமையும் ஆர்வமும் உள்ள மாணவனது கல்வி, தோட்டங்கள் தனியார் மயமாகியதால் எவ்வாறு பாதிப்புற்றது என்பதைப் பதிவுசெய்கின்றது. பெருந்தோட்டங்கள் 1992ஆம் ஆண்டு தனியார்மயப்படுத்தலுக்கு உட்பட்டதும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் புதிய நெருக்கடிகள் ஏற்பட்டன. இலங்கையில் குடியேறிய காலம் முதல் தீவிர சுரண்டலுக்கு உள்ளாகிவந்த அச்சமூகத்தினர், பெருந்தோட்டங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டதும் இன்னும் அதிகமாக மேலதிக சுரண்டலுக்கு உள்ளாகினர்; தனியார் கம்பனிகளின் கோரப் பிடிக்குள் சிக்கி, அவர்களது வாழ்வு சிதையத்தொடங்கியது. இந்தத் தனியார்மயமாதல் ஏற்படுத்திய பாதிப்பின் ஓரிரு அம்சங்களை அடியொற்றியதாக, சிறுவன் என்ற கதை, 1994ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதும் தொழிலாளர்களின் உழைப்பு அபரிவிதமாகச் சுரண்டப்பட்டதையும், அவர்கள் வெறுமனே உழைக்கும் இயந்திரமாகக் கருதப்பட்டதையும் ஆசிரியர், பின்வருமாறு உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்:

‘நனைந்த கோழிக்குஞ்சை இறுகப் பற்றிப் பிடிக்கும் கழுகின் கரங்களாய் தோட்டத்து மக்களை நோக்கி கம்பனிகளின் வெற்றிக்கரங்கள் நீண்டன.

வேலைச்சுமை இரட்டிப்பாக்கப்பட்டது. வேலை நாட்களோ குறைக்கப்பட்டன.

மிகக் குறைந்த நாட்களில் மிகக்கூடிய லாபத்தை ஈட்ட, காய்ந்த மாடுகள் பயிரிடைச் சென்று விழுவது போல, கம்பெனிகள் அவசர அவசரமாய் தோட்டத்து மக்கள்மீது விழுந்து விழுந்து மேய முற்பட்டன.

தேயிலை அரைக்கும் உருளையில் வைத்துத் தோட்டத்து மக்கள் சக்கையாய் அரைக்கப்பட்டனர். என் கண் முன்னாலேயே திடகாத்திரமான உடல் கொண்டோரின் உடல்கள் எல்லாம் அதிகபட்சமான வேலைச்சுமையாலும் அதற்கேற்ற உணவின்மையாலும் சீர்குலைந்து ஒடிசலாகிக் குறுகக்கண்டேன்….’

இத்தகைய பணிச்சுமைக்கு மத்தியில் கற்கும் ஆர்வமும் திறமையுமிக்க மாணவனொருவனின் தந்தைக்குக் கிழங்குத் தோட்டத்தில் இரவு நேரக் காவல் வேலை வழங்கப்படுகின்றது. எவ்விதமான கருவிகளும் இல்லாமல் தனித்து காவலிருக்க வேண்டிய துர்பாக்கியமான நிலைமை. அதனால் பன்றிகளிடமிருந்து முழுமையாகத் தோட்டத்தைக் காவல் செய்ய முடியாமல் போகிறது. அதனால் அத்தொழிலாளிக்கு அபராதமிடப்படுகின்றது. அதனைச் செலுத்த முடியாத காரணத்தால் தொழிலிருந்தே நீக்கப்படுகிறார், அத்தொழிலாளி. இக்கராணங்களால் அச்சிறுவனின் கல்வி தொடரமுடியாமல் போகவே அவன் கடைச்சிப்பந்தியாகத் தொழிலுக்கு நகர்கிறான். இது தனியார் மயமாதல் மலையகச் சிறுவர்களின் வாழ்விலும் மலையகத் தமிழர் வாழ்விலும் ஏற்படுத்திய பாதிப்பின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றது.

இத்தகைய பாதிப்புக்கள் ஒரு புறம் இருந்தாலும் அவற்றை எல்லாம் அப்படியே தாங்கிக் கொள்ளும் சமூகமாக அவர்கள் இல்லை என்பதையும் பல்வேறு தளங்களிலும் அவற்றுக்கான எதிர்வினையை அவர்கள் நிகழ்த்திவருகின்றார்கள் என்பதையும் இக்கதையில் காணமுடிகின்றது. தனியார் தோட்டத்தின் துரைக்கு எதிராக இளைஞர்கள் திரண்டெழுந்து அவரது இருப்பிடம் சென்று தாக்குதல் நடத்தல், கடைச்சிப்பந்தியாகிய சிறுவன் தன் எதிர்ப்பைத் தொலைபேசி மூலம் பெரிய துரைக்கு வெளிப்படுத்தல் முதலான எதிர்ப்புச் செயற்பாடுகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இவையாவும் அச்சமுதாய மாற்றத்தின், எழுச்சியின் வெளிப்பாடுகளாகவே அமைகின்றன.

ஏ.எஸ். சந்திரபோஸின் ‘என்று தணியும் இந்த…’ என்ற கதையானது, மலையகச் சிறுவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் அச்சிறுவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தினரையும் தொழிலாளர்களின் அறியாமையும் காட்டுகின்றது. இக்கொடுமைகள் என்று தணியும் என்பதை வெளிப்படுத்துவதாக அக்கதை அமைந்துள்ளது.

தீர்த்தக்கரைத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள், 1980க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் அரசியல் சமூக அசைவின் பிரதான சில போக்குகள், அப்போக்குகள் மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் முதலானவைப் பற்றிய புரிதலை, தேர்ந்தெடுத்த சில பாத்திரங்கள் மூலம் பரந்த உலகப் பார்வையுடன் விரிவாக்குவதாக அமைந்துள்ளதைக் காணலாம். அக்கதைகளின் பிரதான பாத்திரங்கள், சமூக வாழ்விலிருந்து புறமொதுங்கி வாழும் விட்டேந்திகளோ பொது வாழ்லிருந்து ஒதுங்கி நடப்பவர்களோ குரூரமும் வக்கிரமும் நிறைந்த குறுகிய உலகங்கொண்டவர்களோ அல்ல. அப்பாத்திரங்கள் ஒரு சமூகத்தின் ஒரு காலட்ட மனித ஆன்மாவின் பிரதிபலிப்பாக, அச்சமூக வாழ்வியலின் அடி ஆழத்தைத் தீண்டும் பாத்திரங்களாக வார்க்கப்பட்டுள்ளனர். அப்பாத்திர உருவாக்கங்களே அக்கதாசிரியர்களின் வாழ்க்கை பற்றிய நோக்கையும் தேடலையும் காட்டுவதாக உள்ளன. சிறுமைகளிலும் வக்கிரங்களிலும் அவர்களின் பார்வை குவியவில்லை; வாழ்வின் உயிர்ப்பினை, விசாலமான மனித அனுபவத்தை விரிப்பதிலேயே அவர்களின் தேடல்கள் மையங்கொண்டுள்ளன.

இக்கதைகளில் வருகின்ற ‘ஆசிரியர்’ பாத்திர உருவாக்கங்கள் தனியே சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும். தண்ணீர் வற்றிடும் குளங்கள், மீண்டும் வசந்தம் வரும், சிறுவன் முதலிய கதைகளில் வரும் ஆசிரியர்கள், ஆசிரியத்துவம் என்பது வெறுமனே கற்பித்தலோடும் பாடசாலையோடும் மட்டும் சுருங்கியதல்ல. அதனுடைய ஊடாட்டம் மிகுந்த விசாலம் மிக்கது என்பதையும் மலையகத் தமிழர் போன்ற ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் சமுதயாத்தில் ஆசிரியர்களே விடுதலைக்கான ஒளிவிளக்காக விளங்குகிறார்கள்-விளங்க வேண்டும் என்பதையும் அழுத்தமாக உணர்த்தும் வகையில் வார்க்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் என்ற கதையின் முடிவில், பாடசாலைக் கல்வியைத் தொடரமுடியாத நிர்ப்பந்தத்தால் இடைவிலகிய மாணவனின் நினைவாகவே இருந்த ஆசிரியர், அம்மாணவனை நீண்ட நாட்களுக்குப்பின் சந்திக்கக் காத்திருக்கும்போது, அவர் எண்ணத்தில் தோன்றும், ‘மஞ்சல் மைனா தன் தோழர்களைத் தேடுகின்றது’ என்ற வரியும் அதனைத் தொடர்ந்து முடியும், ‘வானத்தை என் கண்கள் அண்ணாந்து நோட்டமிட்டன’ என்ற வரியும் ஆசிரியத்துவத்தின் விசாலத்தினைக் கண்முன் விரிப்பதாக அமைகின்றன.

இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் புதிய பரிமாணத்தைக் காட்டி நிற்கும் இத்தொகுப்பின் அநேக கதைகள், மானுட வாழ்வு குறித்த ஆழமான தேடலையும் அந்தத் தேடலால் விளைந்த மானுட நேயத்தின் உன்னதத்தையும் பற்றையும் அடிநாதமாகக் கொண்டுள்ளதைக் காணலாம். நடைமுறை யதார்த்த வாழ்வின் உள்ளடுக்கினை, அதனை நிர்ணயிக்கின்ற சூழலை ஆழமாக அவதானித்து, கலைமுழுமை குன்றாதவகையில் காட்சிப்படுத்த முயன்றுள்ள இக்கதைகளில் கடந்த காலம் குறித்த உன்னத மதிப்பீடுகளோ இலட்சிய மயப்படுத்தப்பட்ட எதிர்காலக் கனவுகளோ புரட்சி முழக்கங்களோ கட்டியெழுப்பப்பட்டில்லை. சமகாலச் சமூக யதார்த்தமும் அதனை எதிர்கொள்ளும் சமூகத்தின் எதிர்கால திசைவழிகளுமே அவற்றில் விரிவுபெற்றுள்ளன.

முடிவாக, இத்தொகுப்பிலுள்ள தூரிகை என்ற கதையில் வரும் ஆசிரியர், ஓவியக் கண்காட்சியின் குறிப்புப் புத்தகத்தில் எழுதும், ‘தேடலைக் காத்திரமாக்கு, சரியான கீற்றை நீ பற்றக்கூடும்’ என்ற குறிப்பினை நிதர்சனமாக்கும் வகையில், தீர்த்தக்கரை சிறுகதையாசிரியர்கள் சிலர் தமது தேடலைக் காத்திரமாக்கியுள்ளதைக் காணமுடிகின்றது. அந்தத் தேடலின் விசாலம், வாழ்வு பற்றிய ஆரோக்கியமான நம்பிக்கை ஒளியைக் கையளிக்கிறது.

***

-எம்.எம்.ஜெயசீலன்

பேராதனை

[email protected]

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *