நீயே என் மெழுகு
நீயே என் கூடும் குளவியும்
துளைகளில் பாகு திரண்ட தேனும்

குளக்கரையில் செந்தீவண்ண வாகையின் கிளைகளுக்குள்ளே சிவப்புத் தோலுடன் பௌர்ணமி பிறந்து வருவதைப் பார்த்திருந்தேன். மந்திரித்த முத்மொன்றின் வடிவமென இரவின் குளத்தில் பிரதிபலித்தது பௌர்ணமி.

பனியில் ஒளியினை கலந்து உறுஞ்சுகின்ற தரைப்புற்களின் இடுக்குகளிலும், வாகை சருகுகளின் மறைவிலும் மினுங்குகின்ற மின்மினிகளைப் பிடித்து உள்ளங்கைக்குள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் யட்சி.

குளத்தின் மீது காற்றின் சலனத்தையும், பௌர்ணமியை மூடி விலகும் மேகங்களின் அசைவையும் பார்த்தவாறு “ஒளிக்கொரு வாசனை இருக்கிறது…. மறைவான நினைவின் மணத்தைப் போன்றது…” என்றாள்.

இலைத் திரள்களால் பணிந்த வாகை மரக்கிளையின் அருகே என் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று நிறுத்தினாள். யட்சியை சூழ்ந்து மிதந்த ஈரப்பதமும் மென் குளிருமான மேகப்பஞ்சுக் குவியலை கைகளால் அள்ளி எடுத்து அண்ணார்ந்து மூடிய என் கண் இமைகளின் மேல் வைத்தாள். பறவையின் இதமான வயிற்றுப் பகுதியில் முகம் புதைந்திருப்பதாக உணர்ந்தேன். காட்சிகள் மறைந்து போயின. நெகிழ்ந்து, உடல் திரவமாக உருகுவதாகத் தோன்றியது.

கவிதையின் செம்புக் கோதுகளுக்குள் அடைபட்ட மௌனத்தின் கத கதப்பு உள் நுழைந்தது. புதிய புதிய வாசனைகள் அங்கு கமழ்ந்தன. மந்திரித்த முடிச்சுகள் அவிழ மஞ்சோணா மணிகள் சிதறிடும் ஒலி. என் புலன்கள் விலகுவதும் இணைவதுமாகச் சுழன்றது. வாசனைக்குள் நீர்த்துளி என தொலைந்து போகிறேன். காலம் மறந்து அந்நறுமண வெளியில் காற்றாகவும் கனவாகவும் உருமாறிக் கொண்டிருந்தேன்.

மேகமுருகி பிடி மழை இமைகளில் பொழிந்தது. கண்களுக்கு மட்டுமேயான ரகசிய மழை. மூடிய இமைகளை துடைத்துப் பார்த்தபொழுது, குளக்கரையில் யட்சி பெரிய மின் மினியாக ஒளிர்ந்து கொண்டிருந்தாள். இரு கைகளாலும் ஈரமணலை வாரிக் குவிப்பதை கண்டு அவளிடம் சென்றேன். அவளின் காதருகே குனிந்து மணலால் புற்றுக் கட்டுகின்றாயா… உன் புதிர்கள் ஒளிந்து கொள்ளும் குகையா…. என்றேன். இது சுவர்க்கத்தின் மணல், மயக்கும் கஸ்தூரியின் வாசனையை பூசிக்கொள் என்றாள்.

தொலைவுகளை வாசனையால் நெருங்கு. அரூபங்களின் மொழி அது. தேவதைகளின் முள்ளந்தண்டிலிருந்து கசிந்தபடி இருப்பது. நீ காண விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நறுமணம்.

உனக்காகவே இந்த மணக்கும் புதையலை செய்கின்றேன் என்றவள், ஒளி மணல் துகள்கள் படிந்த கைகளால் ஈரக் களியை என் கன்னங்களில் தடவியபடி, அதன் ரகசியம் காண கொஞ்சம் பொறுத்திருக்குமாறு வேண்டினாள்.

தாள முடியாத துயரமும் பரவசமுமாக யட்சியை பின் தொடர்ந்தேன்.

ஒற்றையடிப்பாதையில் நடக்கத் தொடங்கியிருந்தோம். மூங்கில் மரங்கள் அடர்ந்த புதருக்குள் வந்து சேர்ந்த பொழுது நம்பவேமுடியாத மின்மினிப் பூச்சிகளின் நடனம் ஒளிரும் வளைகோடுகளாய் எங்களைச் சூழ்ந்து பறந்தன. சிறு சிறு குட்டைகளின் தண்ணீரில் மாய ஒளிகளின் ஓவியங்கள் மிதப்பதை இருவரும் ரசித்தோம். லயிப்பில் கரைந்து அளவற்ற நேரம் கடந்து போனது. என் உள்ளங்கை பற்றிய யட்சி அப்போது உதடுகள் பொருத்தி முத்தமிட்டாள். நான் அதை மின்மினிகளோடு பறந்துவிடாதவாறு கையை இறுகப் பற்றி மூடிக் கொண்டேன்.

உனது கனவுகளில்
ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவினேன்
பிறகு நீ காணவே முடியாத
கனவாக மாறினேன்

எனக் கூறிச் சிரித்தபடி மெதுவாக தரையிலிருந்து உயர்ந்து ஓர் ஒளிப் பந்தைப்போல் ஆகினாள். வாகை மர உச்சியைக் கடந்த போது பௌர்ணமி நிலா பிளந்து துகள்களாய் சிதறியதைப் பார்த்தேன். அப்பேரொளிர்வு நீக்கமற இரவை வியாபித்தது.

தீராது கமழும் நறுமணங்கள் ஒளிர்வுத் தூவலாய்ப் பொழிந்தன. சட்டென என் உள்ளங்கையிலிருந்த யட்சியின் முத்தம், மின்மினியாகி இரவுக்குள் பறந்தது.

தன்னை ரகசியமாக் கருதாத
ஒரு ரகசியம் இருந்தது
பல்லாயிரம் ரகசியங்களுக்குள் மறைந்து
இருண்ட அறையில் விழும்
துண்டு நிலவு வெளிச்சம்போல
பளிச்சென்று……..

 

***

-அனார்

 

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.