நீண்டகால மௌனத்தின் நீண்ட நாவுகள் அபி கவிதைகளுடன் எளிய தரிசனம் – கண்டராதித்தன்

 

  கவிதை விஷயத்தின் ஒருமை, முழுமை எனும் வடிவத்தெளிவுகள் கவிதையின் அந்தகாரத்தில் காணாமல் போய்விடலாம். இன்னொன்று ; எந்த விஷயமும் மனசில் இல்லாமல்,அடிப்படைக் கவித்துவ உணர்ச்சியின் வேகச்சுழற்சியில்,; அந்த வேளையில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிக்கொண்டு கவிதை வெளியே வந்துவிடலாம்.முயற்சி, திட்டம், தீர்மானம் இல்லாமலும், அப்படி இருந்தால் அவைகளைத் தப்பியும் பிறந்துவிடும் ஒன்றை நேர்வது என்னாமல் எப்படிச் சொல்வது? மற்றபடி கவிதையின் எழுத்து வடிவாக்கத்தில் பிரக்ஞை மட்டத்தில் கவிஞனின் அடித்தல் திருத்தல் கூட்டல் குறைத்தல் நிகழ்கின்றன. இவை கவிஞனின் உழைப்பு அல்ல. பிறந்த கன்றை ரொம்ப நேரம் நக்கிக்கொண்டிருக்கும் பசு அவன்.

அபி

கவிஞர்கள் தத்துவ ஞானிகளுடனும், நாவலாசிரியர்களுடனும், சிறுகதையாசிரியர்களுடனும் தங்களை நெருக்கமாக உணர்திருப்பர். அந்த வகையில் ஹபிபுல்லா என்ற இயற்பெயர் கொண்ட அபி லா.ச.ரா மற்றும் மௌனி ஆகியோரை தன் அகநோக்கின் முன்னோடியாக இனம் காண்கிறார். இந்த இடத்திலிருந்து நாம் அபியின் கவிதையை அதன் பொருண்மையை, தீவிரத்தை, மொழியின் லகுவான மற்றும் தீவிரத்தன்மையான படிமத்தை பொருத்திப்பார்த்து தொடங்கலாம்.

    1967 ல் தன் முதல் கவிதையை எழுதத் தொடங்கிய அபி,1974 ஆண்டு மீராவின் அன்னம் பதிப்பகம் மூலம் தன் முதல் கவிதைத் தொகுப்பை கொண்டுவருகிறார். தற்போது அடையாளம் பதிப்பகம் அபியின் மொத்த கவிதைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

அபி தன்தொடக்கால கவிதைகளிலிருந்தே தமிழ் நவீன கவிதை இருந்த வடிவத்திலிருந்து மெல்ல விலகி முழுக்க முழுக்க அகவொளி தரிசனம் கூடிய மொழியுடனும், வரிகள் கலைந்தும் காலத்தையும் பொழுதுகளையும  சிந்தனையையும் மயக்க நிலையில் இருக்குமாறு எழுதி வருகிறார்.

பெரும்பாலான கவிதைகள் ஆழ்மனச்சிந்தையில் சென்று வாசிக்கும்படி இருப்பதும், நேரடியாக புலப்படாத அனுபவப்பங்கீடும் அவரது கவிதைகளின் மிகு சிறப்பெனக் கூறலாம்,

மாலை நேரம் சுறுசுறுப்படைகிறது

இருந்த இடத்தலேயே

முடிவின்மையின் சேமிப்புக்கு

ஒரு புள்ளியைப் பிரித்துக்கொடுக்கிறது

– என்ற வரியிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு கவிதையை வாசிக்கும்போது அந்த முழுநாளையும் ஒரு கௌரவமானதாக மாற்றும் தன்மை ஒருசில கவிஞர்களுக்கே உரித்தானது.அபி அந்த வரிசையில் வருபவர். தனது கவிதைகளின் மூலம் பொழுதை மிதக்கும் தண்ணீர்ப் பந்தைப்போல மாற்றித்தருபவராகவும் உள்ளார். “என்ற ஒன்று”, “மௌனத்தின் நாவுகள்”, அந்தரநடை, மற்றும் சில கவிதைகள், மாலைவரிசைக் கவிதைகள் என இருநூறுக்கும் குறைவான கவிதைகள் அடங்கியது அபியின் கவிதையுலகம்.

         சமகாலத்தை நேரடியாகப் பிரதிபலிக்காத மொழிநடையில், அபியின் படிம உத்திகள் கவிதையின் மைய அச்சிலிருந்து விலகிய பாவத்தில் அனுபவ விளைவுகளை ஏற்படுத்கிறது. உதாரணத்திற்கு மௌனத்தின் நாவுகள் என்ற தொகுப்பில் உள்ள “உள்பகை” என்ற கவிதையின் ஒருபகுதியை வாசிக்கலாம்.

இருட்டை மீறிச் சீறும்

விரலின் வெறிப்பில்

வெளிக்கோடுகள் மூட்டுவிட,

உள்ளிருக்கும் அலறல் எல்லாம்

அகண்டத்தில் தூசாய்ப் பரவும்; நான்

லேசாகிப் பறந்து

மௌனத்தில் விழிகளில்

பூவிழுவேன்; வேண்டாம், நீட்டாதே!

        –

  அபி தனது கவிதை உத்திகளை எளிமையாகத்தோன்றும் படிமத்திற்கும், நான் என்ற ஒருவனின் அகக்குரலுக்கும் அவனது அக உலகத்திற்குள்ளும் போக வர உள்ள வழியாக வைத்துக்கொண்டுள்ளார்.அதுவே பிசிறில்லாத அக, புறச்சித்திரங்களை வழங்குகிற கவிதைகளாகிறது.

இதனாலேயே அபியின் கவிதைகள் பொதுப்புத்தியில் ஏற்கனவே கவிதை குறித்து இருக்கின்ற மதிப்பீடுகளிலும்     குறியீட்டிலிருந்தும்,அதன் மனநிலைகளில் இருந்தும் விலகி நிற்கிறது.

   எழுத்து காலகட்டத்திற்கு முன்பாகவே நவீன கவிதை   உருவாவிட்டது. ஆனால் நவீன கவிதை தமிழில் உருவாவனதிலிருந்தே கவிதையின் உள்ளீடு, கருத்தியல், வடிவம் போன்றவை குறித்து தர்க்க ரீதியில் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

அழகியல் மற்றும் அகம் சார்ந்த கவிதைகளை மட்டும் விரும்புகிறவர்கள் ஒரு பிரிவாகவும் அதன் அரசிலயற்ற தன்மையை விமர்சனம் செய்கின்றவர்கள் ஒரு பிரிவாகவும் எப்போதும் உள்ளனர். நூற்றாண்டு காணவிருக்கும் தமிழ் நவீன கவிதை வடிவத்தில் இக்குரல்கள் அடங்கிவிடாது என்பதே உண்மை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு விதமான கருத்தியலுக்கும் ஏற்ற இறக்கங்கள் வந்துபோவதை நாம் காண்கிறோம்.

அபியின் கவியுலகம் அகம் சார்ந்த பாடுபொருட்களுடன் கூடுதலான அரூபத் தன்மையைத் தன்னகத்தே கொண்டதாகவும் உள்ளது. எளிதில் வாசிக்க முடிகிற நடையில் இருக்கிற அவரது கவிதைகள் எளிதில் அனுபவத்தைத் தருவதாக இருப்பதில்லை. அயர்ச்சி தராத அந்த மொழிப் பிரயோகத்தை கணக்கில் கொண்டால் அக்கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு தரிசனத்தைத் தருவதாகவும்  உள்ளது.

       ஒரு வசதிக்காக அபியின் மாலை வரிசைக்கவிதைகளை இங்கு எடுத்துக்கொள்ளலாம். இக்கவிதைகள் நாம் அன்றாடம் காணும் மாலைகள் அல்ல, இவற்றை வாசிக்கும்போது நாம் பிரத்யேகமான வாகனத்தில் அமர்ந்து அமைதியாக பயணிக்கும் உணர்வு மேலிடுவதை உணரமுடியும். மொத்தமாக இக்கவிதைகளை வாசிக்கும்போது இரண்டு விதமான உணர்வுகளும் வந்துபோகின்றன.

  அது மிக ஆத்மார்த்தமான மொழியும்,அதன் எளிமையும் பிரமிப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அதே சமயம் கவிதை வடிவத்தின் ஒழுங்கின்மை மீது லேசான விலகல் வந்துபோவதையும் தவிர்க்க முடியவில்லை.

                      மாலை – எது

தூசி படிந்த புளிய மர வரிசையை

வைதுகொண்டே

மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்

வண்டுகளும் பறவைகளும்

தோப்புகளுக்குள்

இரைச்சலைக் கிளறி

எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன

இருண்டு நெருங்கி வளைக்கும்

மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்

இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்

ததும்புகிறது

என்வலி

பொழுது நிரம்புகிறது

ஒரு இடுக்குவிடாமல்

00   000     00

தூசிபடிந்த இரைச்சலுக்கடியில்

சாத்வீக கனத்துடன்

இது எது

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்

இடறாத என் பாதங்களினடியில்

இது எது

என் சாரங்களின் திரட்சியுடன்

வலியுடன்

அலங்கரித்த விநோதங்களை

அகற்றிவிட்டு

எளிய பிரமைகளின் வழியே

என்னைச் செலுத்தும்

இது எது?

இக்கவிதை கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் நிகழ்வதாகவும் ஒழுங்கற்ற வடிவம் கொண்டதாகவும் உள்ளது. மேற்பூச்சாக இத்தன்மை கொண்டது எனலாமே ஒழிய அபியின் கவிதையைப் பொருத்தவரை இது சாதாரணமாக நிகழ்வதுதான்.

  தற்செயலாக அபியின் இக்கவிதைகளை பல்லவர்கால கோவில் உள்ள பனமலைப்பேட்டை என்ற ஊருக்குச் செல்லும் வழியில் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்து வாசித்தது ஞாபகத்திற்கு வருகிறது. எதிரில் ஒரே ஒரு பாறை  மலை அளவிற்கு நின்றிருந்தது. பின்புறத்தில் மிகப்பெரிய பனமலை ஏரி நீர் பாயும் பசுமையான வயல்வெளிகள், பக்கவாட்டில் சிதிலமான சாலை என அற்புதமான மனவெழுச்சியைத் தருகிற இடத்தில் இக்கவிதையை வாசிக்க நேர்ந்தது.

இக்கவிதையை வாசிக்கும்போது நம்முள் எழும் பேருணர்ச்சி

இருண்டு நெருங்கி வளைக்கும்

மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்

இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்

ததும்புகிறது

என்வலி

பொழுது நிரம்புகிறது

ஒரு இடுக்குவிடாமல்

  என்கிறபோது தீவிரமும், சாந்தமும், அமைதியும் ஒருங்கே நிகழ்கிறது. இப்போது ஆச்சரியமளிக்கிற ஒரு பெருவெளி, திரண்டதுக்கம், மகிழ்ச்சி, பெரும் பாறை தரிசனம் என பலதரப்பட்ட பேருணர்ச்சிகளுடன் நம் மனம் நிரம்பி வழிகிறது, அது அந்தியாகவே இருக்கும்போது இன்னும் கூடுதல் அழகியலைத் தருகிறது. அபியின் தன் கவிதைகளின் வழியாக நம்மை பூமியிலிருந்து பிரபஞ்ச வெளிக்கு அழைத்துச்செல்லும் ஊஞ்சலாட்டத்தை நிகழ்த்திக் காட்டுகிறார்.

       நாளின் இரண்டு பொழுதுகளுக்குச் சற்று  கூடுதலானஅழகுண்டு, இந்த மத்தியானமும், மாலையும் ஒரு நாளின் பல்வேறு பிரமாண்டங்களைக் கற்றுக்கொடுப்பவை அந்த இரண்டு பொழுதுகளின் அமைதியின் மீது மனித குலத்தின் ஆன்மாவை உணர முடியும்.

மாலை – பயில

உருவினில் மறைந்து

உருவிழந்த

மாலையைப்

பயின்று கொண்டிருப்பேன்

மணல் பிசைந்து

மாலையின் துடிப்பைக் கணிப்பேன்

பயில-

அரவமற்ற

என் மூலைகளினுள்

உறிஞ்சப்படுவேன்

சிடுக்கான இக்கவிதை மனதை மேலோட்டமாக வைத்துக்கொள்வதிலிருந்து விலகி இந்த மாலையைப் பார்ப்பதாகவும், விலகிய மனோபாவத்தில் பார்ப்பதாகவும், பின்னர் அதை உணர்ந்தும் பயின்றும் தன்னுள் தன்னை கரைத்துக்கொண்டதாகவும் உள்ளது.

        குழப்பமான, நிராதரவான, மகிழ்ச்சியற்ற, துயர் மிகுந்த காலத்தில் அபியின் கவிதைகளை  படிப்பது மனோதிடத்தை சோதிப்பதாகவே இருக்கும். வெகுஜனக் கவிதைகளிலும், சிறுபத்திரிக்கை கவிதைகளிலும் இருந்து தனித்த பென்சில் கோடு போன்ற ஒரு பாதையில் விலகிச் செல்லும் கவிதைகள் இவை.

  ஒரு பாமரத்தனமான  கவிதை வாசகனாகவே எப்போதும் அபியின் கவிதைகளை வாசிக்க முற்படவேண்டும். இதற்கு முன்  நம் வாசிப்பில் இருந்த கவிதைகளை இவை சற்று தள்ளி வைக்க முற்படும் அல்லது நாம் அபியின் கவிதைகளிடமிருந்து தள்ளி நின்று பார்த்துச் செல்லவே அக்கவிதைகள் கோரும். தெளிவற்ற மனநிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள  இசை, வாசிப்பு மற்றும் பயணம் என பல்வேறு விடுபடுதல்களை நோக்கி நாம் நகர முற்படுவோம். சிலருக்கு வாசிப்பும் எழுத்தும் குழப்பத்தை விடுவிக்கும். அபியின் கவிதையுலகு மனிதன் எப்போதும் கண்டிராத ஒரு மர்ம பிரதேசத்திற்குள் கைவிளக்கோடு நுழைவது போன்றது. அவை  தனித்துவமான எளிமையையும்,அரூபத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளவை, அபியின் கவிதைகளில் அதிராத இசைத்துணுக்குள் உண்டு,தத்துவ ஞானிக்கு இடமுண்டு, மனப்பிசகு கொண்ட மனிதனுக்கு இடமுண்டு இவற்றைக்கொண்டு பாலம் பாலமான வரிகள் இல்லாமல் மிகச்சாதாரணமாக மையத்தை விட்டு விலகிய தொனியில் நம் கைப்பிடித்துக் கரைசேர்ப்பார்.

”என் சொந்த சோதனைச்சாலைக்கு” என்ற கவிதையில் உள்ள சில வரிகளைப் பார்த்தால்

யுக முகடுகளுக்கே சென்று

அங்கிருந்து

நிமிஷநுரைகளோடு

நேரங்கள் சரிவதைப்

பார்த்துக்கொண்டிருப்பேன்

மௌனத்தின் பூமியைப்

பெருமூச்சுகளால் கீறி

துக்க விதைகளை இட்டு

உயிர் நிரம்பிய தாகங்களை ஊற்றிக்

கவிதைகளை வளர்ப்பேன்

மனித நெஞ்சினுள்

சந்தை கூடி நெரியும்

அந்த நிழல்களை

நினைத்துக்கொண்டிருப்பேன்

அங்கே அந்த இதயத்தில்

ஊமைகளின் தர்க்க மேடையை

ஒரு ஞானமின்னலால்

நொறுக்கிவிட்டு

அந்த இடத்தில்

னவுகளின் சொர்கத்தை அமைப்பேன் என்கிறார்.

இக்கவிதைமுழுவதும் தொடர்ச்சியான தனித்தனி அடுக்குகளாகவே சென்று கொண்டிருக்கிறது.

நமது இளம்பருவத்தில் நமக்கு ஏற்படும் தத்துவ சந்தேகங்களை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம், அவ்வாறு கேட்டுத் தெரிந்தது போக மீதமிருக்கிற சந்தேகங்களை அனுபவத்தில் பெற்றுக்கொள்வோம், மேலும் மீதமிருப்பதை வாசிப்பனுவத்தில் தெரிந்துகொள்வோம் என்றாலும் மேலும் மீதமிருக்கும் தத்துவக் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் முடிவில்லாத நிறைவடையாத மனதோடு தேடல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.அதுபோல இக்கவிதையில்

என் இதயத்திற்குள்

சீற்றத்தோடு எரிகின்ற நெருப்பை

அணைத்துவிட்டு

சிந்தனையோடு எரிகின்ற

சுடர்களை ஏற்றிவைப்பேன் என்கிறபோது வாழ்வென்பது அணையாத தீபமும்,தொடர் சோதனைக் கூடமுமாக உள்ளதைக் காணலாம்.

வியர்த்தம்

வெளியேற வழிதேடி

அலைவதிலும்

விளையுமொரு வட்டம்

நம் முயற்சிகளின்

உள் ஆவி

கெஞ்சி கூடவே வந்து

வியர்த் விளிம்புவரை

புலம்பிப்பார்த்து

முணுமுணுத்து

பிந்தங்கிப்

புள்ளியாய் மறையும்.

அபியின் கவிதைகளை வாசிக்கும்போது அதன் தீவிரத்தன்மை உடனடியாக வாசக மனதைத் திறப்பதில்லை, மாறாக அக்கவிதைகளில் இருந்து ஒருவித மன விலக்கம் ஏற்படுகிறது. தீராத தேடலுடன் அவற்றை மறுபடி வாசிக்கும் போது புதியதொரு நெருக்கத்தையும் தருகிறது. கூர்மையான எளிய சொற்கள், விலகலான மொழி அமைப்பு, கலைத்துப்போடும் கவிதையடுக்கு, தத்துவம், கேள்வி, ஞானம் என பலவிதமான மனமலர்ச்சிகளை உருவாக்குபவை அவரது கவிதைகள். நள்ளிரவில் ஆளற்ற பிரதேசத்தில் பெய்த மழையின் சப்தத்திற்குக்கொப்பானவை, அந்த ஓசைக்கும் அதன் குளிர்ச்சிக்கும் நம்மை ஒப்புக்கொடுத்தால் நம் அஞ்ஞானச் சூடுதணிவதை உணரலாம்.

 

***

– கண்டராதித்தன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *