தானே போய் கையுறைகளை வாங்கப் போவதாகச் சொன்னாள் திருமதி டேலோவே.

அவள் தெருவில் இறங்கி நடந்தபோது பிக் பென் ஒலிக்க ஆரம்பித்திருந்தது. பதினோரு மணி ஆகியிருந்தது. அடுத்த ஒரு மணிநேரம் புத்தம்புதியதாக, கடற்கரையில் விளையாடும் குழந்தைகளுக்கு கிடைத்த கூடுதல் பொழுதைப் போல இருந்தது. குறிப்பிட்ட இடைவெளியில் மேலும் கீழும் அசைந்து அது எழுப்பிய அடிப்பொலி கம்பீரமாக ஒலித்தது. பற்சக்கரங்களின் முணுமுணுப்பும் காலடிகளின் சரசரப்பும் உற்சாகம் ஊட்டியது.

எல்லோருமே மகிழ்ச்சியான வேலையைச் செய்வதற்காகத் தெருவில் நடக்கவில்லை என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. வெஸ்ட்மின்ஸ்டரின் தெருக்களில் நடக்கிறோம் என்பதை விடவும் எங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வதற்குப் பல விஷயங்கள் இருந்தன. மாட்சிமை பொருந்திய அரசரின் பொதுப்பணி அலுவலகத்தின் பராமரிப்பு இல்லையென்றால் பிக் பென் வெறும் துருப்பிடித்த இரும்புக் கம்பியாக மட்டுமே இருக்கும். திருமதி டேலோவேக்கு மட்டும் அந்தக் கணம் முழுமையானதாக இருந்தது, திருமதி டேலோவேக்கு ஜூன் மாதம் புத்துணர்ச்சியோடு இருந்தது. மகிழ்ச்சியான குழந்தைப்பருவத்தை அனுபவித்தார்—ஜஸ்டின் பாரி தன் மகள்களிடம் மாத்திரமல்ல, எல்லோரிடமும் பண்பானவராக நடந்தவர் (நீதிமன்றத்தில் வலிமை அற்றவராக இருந்தார் என்றாலும்). புகை மேலே எழும்பும் மாலை நேரத்து மலர்கள், அக்டோபர் மாதக் காற்றில் மேலே இருந்து கீழே விழுவது போலப் பறந்து வரும் காகங்கள் கரையும் ஓசை—வேறு எதனாலும் குழந்தைப் பருவத்தை ஈடு செய்யவே முடியாது. அதை நினைவூட்டுவதற்கு ஒரு புதினா இலையோ நீலக் கரை கொண்ட தேநீர்க் குவளையோ கூடப் போதும்.

பாவப்பட்ட மனிதர்கள் என்று பெருமூச்சு விட்டபடியே நடந்தாள். அட, குதிரையின் மூக்குக்கு நேர் கீழே நடக்கிறாயே, குட்டிப் பிசாசே. அவள் இன்னமும் நடைபாதையில் நின்றபடியே கையை நீட்டினாள். எதிர்ச் சாரியில் ஜிம்மி டாஸ் சிரித்தபடி நின்றான்.

அவசர அவசரமாகத் தன்னுடைய அலுவலகத்துக்குள் நுழைகையில் அவளைப் பார்த்தார் ஸ்கோப் பர்விஸ் (பாத் வீரமரபைச் சேர்ந்தவர்): வசீகரமும் வனப்பும் கொண்டவள், கம்பீரமானவள், ஆர்வமிக்கவள், தலை நரைத்துப் போயிருந்தாலும் கன்னங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது அதிசயம். டர்ட்நல்லின் வேன் கடந்து செல்வதற்காக காத்திருக்கையில் கொஞ்சம் விறைப்பாக நின்றாள். பிக் பென் பத்தாவது மணியை ஒலித்தது, பதினொன்றாவது மணியையும் ஒலித்தது. கனத்த வட்டங்களாக எழுந்த ஒலி அலைகள் காற்றில் கலந்தன. பெருமிதத்தோடு வளர்க்கப்பட்டவள் என்பதால் நேராக நின்றாள். கட்டுப்பாடும் கஷ்டமும் அவளுக்கு நன்றாகவே அறிமுகமாகி இருந்தது. மக்கள் எப்படிச் சிரமப்பட்டார்கள், என்ன விதத்திலெல்லாம் சிரமப்பட்டார்கள் என்று நினைத்தாள். முந்தைய இரவு வெளியுறவு அமைச்சகத்தில் அடுக்கடுக்காக நகைகளை அணிந்திருந்த திருமதி ஃபாக்ஸ்கிராஃப்ட் வயிறுமுட்டத் தின்றதை நினைத்தாள். அந்த அருமையான பையன் இறந்துவிட்டான் என்பதால் அந்தப் பழைய மாளிகை வீடு அவனுடைய உறவுக்காரனுக்குச் சொந்தமாகப் போகிறது (டர்ட்நல்லின் வேன் கடந்து போனது).

“நல்ல காலையாக இருக்கட்டும்!” பீங்கான் பொருட்கள் கடையருகே நின்றிருந்த ஹ்யூ விட்பிரெட் ஆரவாரத்துடன் தொப்பியை உயர்த்தி வணக்கம் சொன்னார். குழந்தைப்பருவ முதலே இருவருக்கும் பழக்கம் உண்டு. “எங்கே போகிறாய்?”

“இலண்டன் தெருக்களில் நடப்பது எனக்குப் பிடித்தமான விஷயம்,” என்றாள் திருமதி டேலோவே. “ஊர்ப்புறத்தில் நடப்பதை விடவும் நன்றாக இருக்கும்.”

“நாங்கள் இப்போதுதான் வந்தோம். மருத்துவர்களைப் பார்ப்பதற்காக,” என்றார் ஹ்யூ விட்பிரெட்.

“மில்லிக்கா?” என்ற திருமதி டேலோவேயின் குரல் நெகிழ்ந்திருந்தது.

“கொஞ்சம் உடம்பு சரியில்லை. அந்த மாதிரியானது. டிக் நன்றாக இருக்கிறாரா?” என்றார் ஹ்யூ விட்பிரெட்.

“அருமையாக இருக்கிறார்!” என்றாள் கிளாரிசா.

மில்லிக்கு என் வயது தான் இருக்கும்—ஐம்பது, ஐம்பத்தி இரண்டு—என்று நடந்தபடியே யோசித்தாள். அப்படியென்றால்அதுவாகத்தான் இருக்கும், ஹ்யூ பேசும் விதத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. பாவம் ஹ்யூ, கூச்சமிகுந்த ஒரு தமையனைப் போன்றவன் என்று ஆச்சரியத்தோடும் நன்றியோடும் உணர்ச்சிப்பெருக்கோடும் என்று நினைத்தாள் திருமதி டேலோவே. அதுகுறித்து ஒரு தமையனிடம் பேசுவதைக் காட்டிலும் இறந்துபோய்விடலாம். ஹ்யூ எப்போதுமே அப்படித்தான் இருந்திருக்கிறான். ஆக்ஸ்ஃபோர்டில் இருக்கும் போதும் இங்கே வந்த பின்னரும். இப்படி இருந்தால் பெண்களால் எப்படிப் பாராளுமன்றத்தில் உட்கார முடியும்? ஆண்களோடு சேர்ந்து எப்படிப் பணியாற்ற முடியும்? ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் மாறுப்பட்ட உள்ளுணர்வொன்று இருக்கிறது. அதை மறக்கவோ மறுக்கவோ முடியாது, முயற்சி செய்வதும் வீண்வேலை. ஹ்யூ போன்ற ஆண்கள் நாம் சொல்லாமலே அதை மதிப்பார்கள். ஹ்யூவிடம் மிகவும் மிகவும் பிடித்தது அதுதான் என்று நினைத்தாள் கிளாரிசா.

அட்மிரால்டி வளைவைக் கடந்ததும் வெறுமையாக இருந்த சாலையில் மெலிந்த மரங்கள் மட்டுமே இருந்தன. அதன் முடிவில் இருந்த வெண்ணிறக் குன்றைப் போன்ற விக்டோரியா அரசியாரின் நினைவுச்சின்னத்தைப் பார்த்தாள். அவரின் அலைபோல மேலெழும் ஆடையும் தாய்மையுணர்வும் பருத்த உடலும் எளிமையான தோற்றமும் நகைப்புக்குரியதாகத் தோன்றினாலும் கம்பீரமாகவும் இருந்தது என நினைத்தாள் திருமதி டேலோவே. கூடவே கென்சிங்டன் பூங்காவில் இருக்கும் கண்ணாடி அணிந்த பெண்மணியை நினைவுகூர்ந்தாள். அசையாமல் நின்று கீழே தாழ்ந்து அரசிக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று பாட்டி சொல்லிக்கொடுத்ததை நினைத்தாள். பக்கிங்காம் அரண்மனைக்கு மேலே கொடி பறந்தது. அப்படியானால் அரசரும் அரசியும் திரும்பிவிட்டார்கள். மதிய உணவு விருந்தொன்றில் அரசியைச் சந்தித்த டிக், மிகவும் அருமையான பெண்மணி என்றார். இது ஏழைகளுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது என்று நினைத்தாள் கிளாரிசா, இராணுவ வீரர்களுக்கும்தான். அவளுக்கு இடது புறத்தில் கையில் துப்பாக்கியைப் ஏந்தியபடி வெற்றியைப் பறைசாற்றும் ஆணின் வெண்கலச் சிலையொன்று இருந்தது—தென்னாபிரிக்கப் போர். அதுவும் தேவையானதுதான் என்று நினைத்தபடி பக்கிங்காம் அரண்மனையை நோக்கி நடந்தாள் திருமதி டேலோவே. நாற்சதுர வடிவில் எளிமையாக பளீரென்று வீசிய சூரிய ஒளியில் கம்பீரமாக நின்றது. உண்மையில் இந்த இனத்தின் உள்ளார்ந்த இயல்பும் பிறவிப்பண்பும் தான் இந்தியர்களின் நன்மதிப்பைப் பெற்றுத் தந்திருக்கவேண்டும் என்று நினைத்தாள். அரசி மருத்துவமனைகளுக்கு வருகை தந்தார். இங்கிலாந்து நாட்டின் அரசி மருத்துவமனைகளையும் கடைகளையும் திறந்துவைத்தார் என்று அரண்மனையைப் பார்க்கும்போது கிளாரிசாவுக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் அரண்மனையைவிட்டு வெளியே வந்த காரைப் பார்த்து இராணுவவீரர்கள் வணக்கம் தெரிவித்தார்கள். வாயிற்கதவு மீண்டும் அடைக்கப்பட்டது. கிளாரிசா நிமிர்ந்த நடையோடு சாலையைக் கடந்து புனித ஜேம்ஸ் பூங்காவுக்குள் நுழைந்தாள்.

மரங்களில் இருந்த எல்லா இலையையும் துளிர்க்கச் செய்திருந்தது ஜூன் மாதம். வெஸ்ட்மின்ஸ்டரைச் சேர்ந்த தாய்மார்கள் பழுப்புத் திட்டுக்கள் படர்ந்த மார்பில் பிள்ளைகளுக்குப் பாலூட்டினர். நல்ல மரியாதைப்பட்ட இளம்பெண்களும் புல்வெளியில் நீட்டிப் படுத்திருந்தனர். வயதான மனிதர் ஒருவர் தன் விறைத்துப் போன முதுகை வளைத்து கீழே கிடந்த கசங்கிய தாளை எடுத்து நீவிக் காற்றில் பறக்கவிட்டார். என்ன கொடுமை! நேற்றிரவு தூதரகத்தில் சர் டைட்டன் இப்படிச் சொன்னார். “யாரையாவது என் குதிரையைப் பிடித்துக்கொள்ளச் சொல்லவேண்டும் என்றால் என் கையை மட்டும் உயர்த்தினால் போதும்.” ஆனால் பொருளாதாரத்தை விடவும் மதம் குறித்த கேள்வி தீவிரமானதாக இருக்கிறது என்றும் சர் டைட்டன் சொன்னார். அவரைப் போல ஒருத்தர் அதுகுறித்துப் பேசுவது சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருப்பதாக நினைத்தாள். “ஓ, இந்தத் தேசத்துக்குத் தான் எதை இழந்தோம் என்பது தெரியப் போவதில்லை,” என்று ஜாக் ஸ்டூவர்ட்டைப் பற்றி நினைத்துக்கொண்டு தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

அந்தச் சின்னக் குன்றினை சிரமமின்றி ஏறினாள். காற்றில் ஆற்றல் துடித்தது. ஃப்ளீட் தெருவில் இருந்து அட்மிரால்டிக்குத் தகவல் பறந்துகொண்டிருந்தது. பிக்கடில்லியும் அர்லிங்டன் தெருவும் மாலும் பூங்காவின் காற்றை உரசிச் சூடேற்றி அங்கிருந்த இலைகளை அந்தத் தெய்வீகத் துடிப்பில் அழகாக மேலெழும்பச் செய்தது கிளாரிசாவுக்குப் பிடித்திருந்தது. குதிரையேற்றமும் நடனமும் அவளுக்கு ஆதர்சமானவை. ஊர்ப்புறத்தில் நீண்ட நடைப் பயணங்களை மேற்கொள்ளுவதும் புத்தகங்களைப் பற்றியும் வாழ்க்கையில் என்ன செய்வது என்பது பற்றியும் என்னவெல்லாம் பேசியிருக்கிறோம், இவற்றின்மீது திடநம்பிக்கை இருந்தது. ஆனால் இவையெல்லாம் இளைஞர்களுக்கு எரிச்சலூட்டியது. நடுத்தர வயது சைத்தானைப் போன்றது. ஜாக் போன்றவர்களுக்கு அது புரியாது என்று நினைத்துக்கொண்டாள்; ஏனென்றால் அவன் ஒரு முறைகூட மரணத்தைப்பற்றி நினைத்துப் பார்த்ததில்லை, தான் இறக்கப் போவது அவனுக்குத் தெரியாது என்றார்கள். தலையில் இருந்த முடி நரைத்தற்கு இப்போது துக்கப்பட முடியாது. அது எப்படி நடந்தது? அந்த மாபெரும் உலகப் போர் எல்லோரின்மீதும் கறையைப் பூசியது… இதற்கு முன் அவரவர் கோப்பையில் இருந்து ஓரிரு முறை அருந்தி இருக்கிறார்கள்… மாபெரும் உலகப் போர் எல்லோரின்மீதும் கறையைப் பூசியது. இப்போது நேராக நிமிர்ந்து நின்றாள்.

ஆனால் ஜாக் எப்படி கத்தி இருப்பான்! பிக்காடில்லியில், ஷெல்லியின் வரிகளை மேற்கோள் காட்டி இருப்பான்! “உனக்கு குண்டூசி வேண்டுமா?” எனக் கேட்டிருப்பான். உற்சாகமில்லாதவர்களை அவனுக்குப் பிடிக்காது. “கடவுளே கிளாரிசா! கடவுளே கிளாரிசா! – டெவென்ஷேர் இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் சில்வியா ஹன்டின் மஞ்சள் அட்டிகையையும் பழைய பாணி பட்டாடையையும் பார்த்து அவன் சொன்னது இன்னும் காதில் ஒலிக்கிறது. தான் வாய்விட்டுப் பேசியதை உணர்ந்த கிளாரிசா நிதானப்படுத்திக்கொண்டாள். இப்போது பிக்கடில்லியில் அகலம் குறைந்த பச்சை நிறத் தூண்களும் பலகணியும் கொண்ட வீட்டைக் கடந்துகொண்டிருந்தாள். உணவு விடுதிகளின் கண்ணாடி ஜன்னல் வழியாகத் தெரிந்த அடுக்கி வைக்கப்பட்ட நாளிதழ்களைக் கடந்தாள்; ஒரு காலத்தில் பளபளக்கும் வெண்ணிறக் கிளி உருவம் தொங்கிய வயது முதிர்ந்த பர்டட் கௌட் சீமாட்டியின் வீட்டைக் கடந்தாள். முலாம் பூசப்பட்ட சிறுத்தைகள் இல்லாத டெவென்ஷேர் இல்லத்தைக் கடந்தாள். “கிளாரிட்ஜ் ஹோட்டலில் திருமதி ஜெப்சனிடம் தன்னுடைய முகவரி அட்டையை மறக்காமல் கொடுத்துவிட்டு வா, இல்லையென்றால் கிளம்பி விடுவார் என்று டிக் சொன்னதை மறக்கக்கூடாது. பணக்கார அமெரிக்கர்கள் எவரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறார்கள். அதோ புனித ஜேம்ஸின் அரண்மனை, குழந்தை அடுக்கி வைத்த செங்கற்களைப் போல இருக்கிறது. பாண்ட் தெருவைக் கடந்து ஹட்ச்சர்டின் புத்தகக் கடையை நெருங்கினாள். மக்கள் கூட்டம் முடிவே இல்லாமல் வந்துகொண்டே இருந்தது, வந்துகொண்டே இருந்தது, வந்துகொண்டே இருந்தது. எங்கே இருந்து வருகிறது —லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானமா, அஸ்கோட் குதிரைப் பந்தயமா, ஹர்லிங்கம் விளையாட்டு மைதானமா?
கண்ணாடி ஜன்னலின் வளைவான திண்டில் காட்சிக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில தன்வாழ்க்கைப் புத்தகங்களின் அட்டைப்படத்தைப் பார்த்து எத்தனை மோசமான விஷயம் என்று நினைத்தாள். அவற்றுக்கான ஓவியத்தை வரைந்தது சர் ஜோஷுவாவாகவோ ரோம்னியாகவோ இருக்கலாம். துறுதுறுப்பான, அறிவுக்கூர்மையான, அடக்கமான பெண்ணாக, அவளுடைய எலிசபெத்தைப் போலவே, அவள் மட்டுமே உண்மையான பெண் என்பதைப் போல இருந்தாள். அப்புறம் அந்தப் பொருளற்ற புத்தகமும் இருந்தது—சோப்பி ஸ்பான்ஜ்—அதிலிருந்து முழ நீளத்துக்கு மேற்கோள் காட்டுவான் ஜிம். அப்புறம் ஷேஸ்பியரின் கவிதைகள்—அவளுக்கு மனப்பாடமாகத் தெரியும். ஒரு நாள் முழுக்க ஃபில்லும் அவளும் அவருடைய கவிதையில் வரும் கறுத்த சீமாட்டி (டார்க் லேடி) குறித்து விவாதம் செய்தார்கள். அன்று இரவு உணவின் போது அதுகுறித்து கேள்விப்பட்டதேயில்லை என்று சொல்லிவிட்டார் டிக். மில்லிக்கு ஏதாவது சாதாரணமான புத்தகத்தை வாங்கலாம் —க்ரான்ஃபோர்ட் தான் சரியானதாக இருக்கும்! பாவாடை அணிந்துகொள்ளும் பசுவைவிட மனதை மயக்கும் விஷயம் ஏதாவது இருக்கமுடியுமா?

இதுபோன்றதொரு நகைச்சுவை உணர்ச்சியோ தன்மரியாதையோ மக்களுக்கு இப்போது இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள் கிளாரிசா. அந்த அகலமான பக்கங்களையும் நீளமான வாக்கியங்களின் முடிவுகளையும் கதை மாந்தர்களையும் அதெல்லாம் உண்மை என்பது போலப் பேசுபவர்களையும் நினைத்தாள் கிளாரிசா. எல்லா நல்ல விஷயங்களுக்கும் கடந்த காலத்துக்குப் போக வேண்டியிருந்தது. அந்த மாபெரும் உலகப் போர் எல்லோரின்மீதும் கறையைப் பூசியது… சூரியனின் வெப்பத்தைக் கண்டு இனி அஞ்சவேண்டியதில்லை…. இனி ஒருபோதும் யாரும் துக்கப்பட முடியாது, துக்கப்பட முடியாது என்று பார்வையை ஜன்னலில் படரவிட்டபடியே சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது அது. அதுதான் சிறந்த கவிதைக்கான தகுதியாக இருக்கமுடியும். மரணத்தைப் பற்றி எவரும் படிக்க விரும்பும் ஒன்றை இந்த நவீன காலத்தில் யாரும் எழுதவில்லையே என்று யோசித்தபடியே திரும்பினாள்.

சிறிய பேருந்துகள் கார்களோடு சேர்ந்தன; கார்கள் வேன்களோடு; வேன்கள் டாக்சிக்களோடு; டாக்சிகள் கார்களோடு—மேற்கூரையில்லாத காரில் ஒரு பெண் தனியே சென்றாள். விடியற்காலை நான்கு மணி வரையிலும் கிளர்ச்சியுற்ற கால்களின் உந்துதலால் நடனமாடியிருப்பாள் என்பது எனக்குத் தெரியும், இப்போது சோர்வுற்று பாதி உறக்கத்தோடு காரின் மூலையோடு ஒட்டிக்கொண்டு உறங்குகிறாள் என்று நினைத்தாள் கிளாரிசா. இன்னொரு கார் வந்தது. இன்னொன்று. இல்லை இல்லை! இல்லை! க்ளாரிசா நல்லியல்போடு சிரித்தாள். அந்தத் தடிமனான பெண்மணி தன்னாலான எல்லா முயற்சியும் எடுத்திருந்தாள், ஆனால் காலை நேரத்தில் வைரங்களும் ஆர்கிட் மலர்களுமா! இல்லை! இல்லை! இல்லை! அந்த நேர்த்தியான செயல்செய்யும் போலீஸ்காரர் சரியான தருணத்தில் கையை மேலே உயர்த்துவார். இன்னுமொரு மோட்டார் கார் கடந்துபோனது. அழகற்று இருந்தது! அந்தப் பெண் இந்த வயதில் எதற்காகக் கண்ணைச் சுற்றிலும் கருப்பு வண்ணத்தை பூசிக்கொள்ளவேண்டும்? நாடு இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு பெண்ணுடன் அந்த இளைஞன் அதுவும் இந்த நேரத்தில்—அந்தப் பாராட்டத்தக்க போலீஸ்காரர் கையை உயர்த்தினார். அவருக்கு நன்றி செலுத்தியபடி மெதுவாகச் சாலையைக் கடந்து பாண்ட் தெருவை நோக்கிச் சென்றாள் கிளாரிசா. குறுகலான தெருவில் மஞ்சள் வண்ணப் பதாகைகள் தொங்கின. தடிமனான தந்திக் கம்பிகள் வானத்தில் விரித்து வைக்கப்பட்டது போல இருந்தன.

ஒரு நூறு வருடத்துக்கு முன்னால் கான்வேயின் மகளுடன் ஓடிப்போன அவளுடைய பாட்டனாருக்குப் பாட்டனாரான சீமோர் பேரி இந்த பாண்ட் தெருவில் நடந்தார். இதே பாண்ட் தெருவில் பேரி குடும்பத்தினர் ஒரு நூறு வருடங்களாக நடந்தபோது டேலோவே குடும்பத்தினரை (அம்மாவின் பக்கத்தில் லீ குடும்பத்தினர்) சந்தித்திருக்கக்கூடும். அவளுடைய அப்பா ஹில்லின் கடையிலிருந்து உடைகளை வாங்கினார். அங்கே ஜன்னலருகில் நீளுருளையில் சுருட்டப்பட்ட துணி வைக்கப்பட்டிருந்தது. இங்கே கரிய நிற மேசையின் மேல் இருந்த விலையுயர்ந்த கண்ணாடி ஜாடி மீன் கடையில் பனிக்கட்டியின் மேல் இருக்கும் இளஞ்சிவப்பு நிற சால்மோன் மீனைப் போல இருந்தது. அங்கிருந்த நகைகள் நுணுக்கமும் நேர்த்தியும் கொண்டவையாக இருந்தன—இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்த ஸ்பானிஷ் பாணி நட்சத்திரங்களும் பழைய தங்கத்தில் செய்யப்பட்டது போன்ற சங்கிலிகளும் உண்மையான தங்கமல்ல என்று நினைத்தாள். கடல் பச்சை நிற சாட்டின் உடையும் உயரமான தலையணியும் அணிந்த பெண்கள் தங்கள் ஆடைகளில் அணிந்திருந்த ஒளிவீசும் நட்சத்திர வடிவிலான அலங்கார ஊசிகளும் இருந்தன. எதுவும் அழகாக இல்லை. சிக்கனமாக இருக்கவேண்டியது அவசியம். கேளிக்கைக்காக இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த வண்ணத் துணுக்குகளை யாரோ எறிந்தது போன்ற வித்தியாசமான பிரெஞ்சு ஓவியம் தொங்கிய ஓவிய விற்பனையாளரின் கடையைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. வாழ்நாள் முழுவதையும் ஓவியங்களோடு கழித்தவர்களால் (புத்தகங்களும் இசையும் கூடத்தான்) இதை நகைச்சுவையென ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தபடியே இயோலியன் அரங்கை தாண்டிச் சென்றாள்.

பாண்ட் தெருவில் கூட்டம் முண்டியடித்தது. உயரமான இருக்கையில் விளையாட்டுப் போட்டிக்கு வருகை தந்த அரசியைப் போன்ற தோரணையில் அமர்ந்திருந்தார் பெக்ஸ்போரோ சீமாட்டி. குதிரைவண்டியில் தனியாக அமர்ந்துகொண்டு கண்ணாடியின் வழியாகப் பார்த்தார். வெள்ளைக் கையுறை மணிக்கட்டின் அருகே தளர்ந்திருந்தது. நேர்த்தியற்ற கறுப்பு நிற ஆடை அணிந்திருந்தார் என்றாலும் அவருடைய குடும்பம், வளர்ப்பு, தன்மரியாதை எல்லாவற்றையும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது. ஒரு வார்த்தை கூடுதலாகப் பேசியதில்லை, அடுத்தவர்கள் தன்னைப் புறணி பேசவும் அனுமதித்ததில்லை. மிகவும் ஆச்சரியமூட்டும் தோழி. இத்தனை வருடம் கழித்தும் யாரும் அவரைக் குறை சொல்ல முடியாது. வெள்ளை முகப்பூச்சு அணிந்துகொண்டு ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த அந்த கோமாட்டியைக் கடந்து சென்றாள். தானும் அவரைப் போல இருக்கவும் க்ளேர்ஃபீல்டின் எஜமானி என்று பெயரெடுக்கவும் ஓர் ஆண்மகனைப் போல அரசியல் பேசவும் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தாள் கிளாரிசா. ஆனால் அவர் எங்குமே போவதில்லை, அவரைக் கேட்டுப் பிரயோசனமில்லை என்று நினைத்தாள் க்ளாரிசா. பெக்ஸ்போரோ சீமாட்டியை அரசியைப்போல இட்டுச் சென்ற வண்டி கிளாரிசாவை கடந்தது. கணவர் நோய்வாய்ப்பட்டு வலுவிழந்து வருவதால் கோமாட்டி எதிலும் பிடிப்பில்லாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் நினைத்ததும் பொங்கிய கண்ணீரோடு கடைக்குள் நுழைந்தாள் கிளாரிசா.

“வணக்கம்.” இனிமையாகப் பேசினாள் க்ளாரிசா. “கையுறைகள்” என்று அற்புதமான நட்புணர்வு தோய்ந்த குரலில் சொன்னாள். கைப்பையைக் கடை மேசையின் மேல் வைத்துவிட்டு பொத்தான்களை மெதுவாக விடுவித்தாள். “வெண்ணிறக் கையுறைகள், முழங்கைக்கு மேலே நீள்வது,” என விற்பனைப் பெண்ணின் முகத்தைப் பார்த்தபடியே சொன்னாள். அவளுக்கு அறிமுகமான பெண்ணல்லவே இவள்? வயதானவளாக இருந்தாள். “இவை சரியாகப் பொருந்தவில்லை,” என்றாள் கிளாரிசா. “உங்களுக்குக் கைவளை அணியும் பழக்கமுண்டா?” என்றாள் விற்பனைப் பெண். கிளாரிசா விரல்களை விரித்து, “ஒரு வேளை மோதிரங்களால் இருக்குமோ.” சாம்பல் நிறக் கையுறைகளை எடுத்துக்கொண்டு விற்பனை பகுதியின் கடைசிக்குப் போனாள் கடைப்பெண்.

ஆமாம், முந்தைய பெண்ணை விடவும் இருபது வயது கூடுதலாக இருக்கும் என்று நினைத்தாள் கிளாரிசா. கடையில் அவளைத் தவிர வேறு ஒரு வாடிக்கையாளர் மட்டுமே இருந்தாள். விற்பனை மேசைக்குப் பக்கவாட்டில் திரும்பி அமர்ந்திருந்தாள். முழங்கையை மேலே வைத்து ஏதுமில்லாத வெற்றுக் கையைக் கீழே தொங்கவிட்டு உணர்ச்சியற்ற முகத்தோடு அமர்ந்திருந்தாள். ஜப்பானிய விசிறியில் வரையப்பட்ட ஓவியம் போல இருந்தாள் என நினைத்தாள் கிளாரிசா. உணர்ச்சியற்ற முகமாக இருந்தாலும் சில ஆண்கள் அவளைப் போற்றி வழிபடுவார்கள். அந்தப் பெண் தலையைச் சோகமாக ஆட்டினாள். கையுறை பெரியதாக இருந்தது. கொஞ்சம் திரும்பிக் கண்ணாடியில் பார்த்தாள். “முழங்கைக்கு மேலே நீள வேண்டும்,” என்று நரைமுடியோடு இருந்த கடைப்பெண்ணிடம் கடிந்துகொண்டாள், அவளும் ஒத்துக்கொண்டாள்.

அவர்கள் காத்திருந்தார்கள். கடிகார முள் நகரும் ஓசை கேட்டது. தூரத்தில் பாண்ட் தெருவின் உற்சாகமற்ற மெல்லிய முனங்கொலி கேட்டது. கையுறையை எடுத்துப் போனாள் கடைப்பெண். “மணிக்கட்டுக்கு மேலே” அவள் பின்னாடியே துயரம் தோய்ந்த தொனியில் உரத்துச் சொன்னாள் அந்தப் பெண். இன்னும் நாற்காலிகள், பனிக்கட்டி, மலர்கள், பொருள் வைப்பறை சீட்டுகள் என எல்லாவற்றையும் வாங்கவேண்டும் என்று நினைத்தாள் கிளாரிசா. யார் வரவேண்டாம் என்று நினைக்கிறாளோ அவர்கள் வருவார்கள், மற்றவர்கள் வரமாட்டார்கள். கதவருகே நின்றுகொள்வாள். கடையில் காலுறையும் விற்பனை செய்தார்கள்ーபட்டுக் காலுறைகள். ஒரு சீமாட்டி அவள் அணியும் கையுறைகளையும் காலணியையும் கொண்டே அறியப்படுகிறாள் என்று அவளுடைய வயதான மாமா வில்லியம் சொல்வதுண்டு. தொங்கிப்போன தோள்களும் துவண்டு விழும் கைகளும் சரிந்து விழும் கைப்பையும் நிலம் நோக்கிய வெற்றுப் பார்வையும் கொண்ட அந்தப் பெண்மணியை அங்கே தொங்கவிடப்பட்டிருந்த பட்டு காலுறைகளின் துடிக்கும் வெள்ளி நூலின் வழியாகப் பார்த்தாள். இப்படிக் களையிழந்த பெண்கள் விருந்துக்கு வந்தால் சகிக்கவே முடியாது.

சிவப்பு குறுங்காலுறைகளை அணிந்திருந்தால் கீட்ஸை எல்லோருக்கும் பிடித்திருக்குமா? அப்பாடா, விற்பனை மேசையின் அருகே சென்றதும் அந்த விஷயம் மனதில் மின்னலாக ஒளிர்ந்தது:

“போருக்கு முன்னர் முத்து பொத்தான்கள் கொண்ட கையுறைகள் உங்களிடம் இருந்தது நினைவிருக்கிறதா?”

“பிரெஞ்சு கையுறைகளா அம்மையீர்?”

“ஆமாம் பிரெஞ்சு கையுறைகள்தாம்,” என்றாள் கிளாரிசா. அந்த இன்னொரு பெண்மணி சோகமாக கைப்பையை எடுத்துக்கொண்டு எழுந்தாள். மேசையின் மீது இருந்த கையுறைகளைப் பார்த்தாள், அவை மிகவும் பெரியதாக இருந்தன, குறிப்பாக மணிக்கட்டில்.

“முத்து பொத்தான்களோடு இருப்பது,” என்ற கடைப்பெண் முன்பைக் காட்டிலும் வயதானவளாகத் தெரிந்தாள். மெல்லிழைத்தாளை மேசை மேல் பரத்திப் பிரித்தாள். முத்து பொத்தான்களைப் பொருத்துவது பிரெஞ்சுக்கார்களின் யோசனை, எத்தனை எளிமையானது என்று நினைத்தாள் கிளாரிசா.
“உங்கள் கைகள் மெலிதாக இருக்கின்றன,” கையுறைகளை அணிவித்து மோதிரங்களின்மீது இலாவகமாக நீவியபடி சொன்னாள் கடைப்பெண். கண்ணாடியில் கையைப் பார்த்தாள் கிளாரிசா. கையுறை முழங்கையை எட்டவில்லை. இன்னும் ஓர் அரை அங்குலம் நீளமாக இருக்கும் கையுறை இருக்கிறதா? ஏனோ மீண்டும் மீண்டும் கேட்பதற்குச் சலிப்பாக இருந்தது, ஒருவேளை நிற்பதே வேதனையாக இருக்கும் மாதத்தின் அந்த ஒரு நாளாக இன்று இருக்குமோ என்று நினைத்தாள் கிளாரிசா. “ஓ, நீங்கள் சிரமப்பட வேண்டாம்,” என்றாள். இருந்தாலும் கையுறைகள் வந்தன.

“நின்றுகொண்டே இருப்பது அயர்ச்சியாக இல்லையா?” என்று தன்னுடைய வசீகரமான குரலில் கேட்டாள். ” விடுப்பு எப்போது கிடைக்கும்?”

“அதிகக் கூட்டமில்லாத செப்டம்பர் மாதத்தில்.”

நாங்கள் கிராமத்தில் இருக்கும் சமயத்தில் என்று நினைத்தாள் கிளாரிசா. இல்லை வேட்டையாடும் போது. அவள் பிரைட்டனில் இரண்டு வாரம் தங்கியிருப்பாள். புழுக்கமான தங்கும் விடுதியொன்றில். விடுதியின் எஜமானி இனிமையானவர். கிராமத்தில் இருக்கும் திருமதி லம்லியின் வீட்டுக்கு அனுப்பி வைப்பது எளிதான காரியம். (நாக்கு நுனி வரை வந்துவிட்டது). தேனிலவில் டிக் சொன்னது நினைவுக்கு வந்தது. முன்யோசனையின்றி யாருக்கும் எதையும் கொடுக்கும் அவளது பழக்கம் தவறானது என்று சொன்னார். சீனாவோடு வியாபாரம் செய்வது அதைவிட முக்கியம் என்றார். அவர் சொல்வதும் சரிதான். அந்தப் பெண்ணுக்கு அடுத்தவர்களிடம் இருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் விருப்பம் இருப்பது போலத் தெரியவில்லை. அவள் இடத்தில் இருப்பதுதான் பிடித்திருந்தது. கையுறைகளை விற்பது அவளுடைய வேலை. அவளுடைய சோகங்கள் தனிப்பட்டவை. “இனி ஒருவரும் துக்கப்பட முடியாது, துக்கப்பட முடியாது,” என்ற வார்த்தைகள் அவளுடைய தலைக்குள் ஓடின. கையை விறைப்பாக வைத்துக்கொண்டு “அந்த மாபெரும் உலகப் போர் எல்லோரின்மீதும் கறையைப் பூசியது…” என்று நினைத்தாள். சில நேரங்களில் எல்லாமே வீண் என்ற எண்ணம் தோன்றியது (கையுறையைக் கழற்றிய கையில் தூள் அப்பியிருந்தது)—இப்போதெல்லாம் யாரும் கடவுளின்மீது நம்பிக்கை கொள்வதில்லை என்று நினைத்தாள் கிளாரிசா.

திடீரென போக்குவரத்து ஒலி உரத்துக்கேட்டது. பட்டுக் காலுறைகள் ஒளிர்ந்தன. புதிய வாடிக்கையாளர் உள்ளே நுழைந்தார்.
“வெள்ளைக் கையுறை வேண்டும்,” என்ற அந்தக் குரல் கிளாரிசாவுக்கு அறிமுகமானதாக இருந்தது.

எல்லாமே எளிமையாக இருந்த காலம் ஒன்று இருந்தது என்று நினைத்தாள் கிளாரிசா. காகங்கள் கரையும் ஓசை காற்றின் வழியே மிதந்து வந்தது. பல நூறு வருடங்களுக்கு முன்னர் சில்வியா இறந்த அந்த அதிகாலையில் தேவாலயத்தின் அருகே இருந்த செடிகளின் மேல் படர்ந்திருந்த பனித்துளிகள் வைர வலைகளைப் போல மின்னின. ஒரு வேளை டிக் இறக்க நேரிட்டால் கடவுள் நம்பிக்கை குறித்துーஇல்லை, குழந்தைகளுக்கு என்ன பிரியமோ அதைச் செய்யட்டும் என விட்டுவிடுவாள். அவளோ, பெக்ஸ்போரோ சீமாட்டியைப் போல, ஒரு கையில் அவளுக்குப் பிரியமான ரோடேன் கொல்லப்பட்டான் என்ற செய்தியைத் தாங்கி வந்த தந்தியை பிடித்தபடியே கடையைத் திறந்துவைத்தது போல, வாழ்க்கையை நடத்துவாள். ஒருவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் என்ன, அடுத்தவருக்காகச் செய்யலாம், என்று நினைத்தபடியே கையுறையை எடுத்தாள். அவளுக்கு நம்பிக்கை இல்லை என்றால் இந்தப் பெண் துயரப்படுவாள்.

“”முப்பது ஷில்லிங்,” என்றாள் கடைப்பெண். “மன்னித்துவிடுங்கள், முப்பத்தைந்து. பிரஞ்சு கையுறைகளுக்கு விலை அதிகம்.”

யாரும் தனக்காக மட்டுமே வாழ்வதில்லை என்று நினைத்தாள் கிளாரிசா.

அந்த இன்னொரு வாடிக்கையாளர் கையுறையைப் போட்டு இழுத்துவிட்டதும் கிழிந்துபோனது.

“இங்கே பார்!” என்று கூக்குரலிட்டாள்.

“தோல் சரியில்லை,” என்று வேகவேகமாகச் சொன்னாள் நரைத்த முடி கடைப்பெண். “சில நேரம் தோலைப் பதனிடும்போது பயன்படுத்தும் அமிலத்தால் இப்படி ஆகிவிடும். இந்த ஜோடியை அணிந்துபாருங்கள், அம்மையீர்.”

“ஆனாலும் இதற்கு இரண்டு பவுண்டு விலை சொல்வது ஏமாற்று வேலை!”

கிளாரிசா அந்தப் பெண்மணியைப் பார்த்தாள். அவளும் கிளாரிசாவைப் பார்த்தாள்.

“போருக்குப் பிறகு கையுறைகளின் தரம் சரியாக இல்லை,” என்று கிளாரசாவிடம் மன்னிப்புக் கேட்பதைப்போல சொன்னாள் கடைப்பெண்.

இந்தப் பெண்மணியை எங்கோ பார்த்திருக்கிறேனே? முதிய வயதினள், தாடைக்கு கீழே மடிப்பு, தங்க சட்டம் போட்ட கண்ணாடிக்கு கருப்பு ரிப்பன் அணிவித்திருந்தாள். சார்ஜென்டின் ஓவியத்தைப் போல உணர்ச்சிமிக்கவளாகவும் புத்திசாலியாகவும் இருந்தாள். அடுத்தவர்களை அடிபணிந்து நடக்க வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதை அவர்களின் குரலை வைத்து கண்டுபிடித்துவிட முடிகிறதே என்று நினைத்தாள் கிளாரிசா. கொஞ்சம் இறுக்கமாக இருக்கிறது—சொல்வதைச் செய். கடைப்பெண் போய்விட்டாள். கிளாரிசா காத்திருந்தாள்.

இனியும் பயப்படாதே என்றபடி மேசையின் மீது விரல்களால் தாளமிட்டாள். சூரியனின் வெப்பத்தைக் கண்டு இனியும் பயப்படாதே. இனியும் பயப்படாதே என்று மீண்டும் சொன்னாள். அவள் கையில் சின்ன பழுப்புத் திட்டுக்கள் இருந்தன. அந்தப் பெண் நத்தை போல ஊர்ந்தாள். இந்த உலகத்தில் உன் வேலையை முடித்துவிட்டாய். உலகம் இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிரை இழந்திருந்தார்கள். ஒரு வழியாக வந்தாள்! முழங்கைக்கு மேலே அரை அங்குலம் நீளமான, முத்து பொத்தான்களோடு, ஐந்தேகால் பவுண்ட் விலையில். எனதருமை மெதுவாகப் பணியாற்றுபவளே, இந்த நாள் முழுவதும் நான் இங்கேயே உட்கார்ந்துகொண்டு இருக்கமுடியும் என்று எண்ணுகிறாயா என்று நினைத்தாள் கிளாரிசா. எனக்கான மீதப் பணத்தை எடுத்துவர இன்னும் இருபத்தைந்து நிமிடங்கள் ஆக்குவாய் என்று நினைக்கிறேன்!

தெருவில் பயங்கரமான வெடிச் சத்தம் கேட்டது. கடைப்பெண்கள் எல்லோரும் மேசைக்குக் கீழே ஒளிந்துகொண்டார்கள். கிளாரிசா நிமிர்ந்து நேராக உட்கார்ந்தபடியே அந்த இன்னொரு பெண்மணியைப் பார்த்து புன்னகைத்தாள். “செல்வி அன்ஸ்ட்ருதர்!” என்று கூக்குரலிட்டாள்.

***

ஆங்கிலத்தில்: வர்ஜினியா வுல்ஃப்
தமிழில்: கார்குழலி

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *