ஒரு நாவலை வாசகன் அணுகும்போது மூன்றுவித பார்வைகள் கிடைக்க வாய்ப்புண்டு.  அது நாவலோ, நாவலாசிரியரோ – பிடித்தது பிடிக்காதது –எனும் வாசக ருசிக்கு அப்பால் நிற்பவை. தவிரவும், பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பவை வாசக ருசி என்றாகிய பிறகு மேற்கொண்டு சிலாகிக்க தேவைகள் இருப்பதில்லை.

இதை தாண்டிப் பார்க்கும்போது – முதலாவதாக நாவலின் பேசுபொருள் மற்றும் சாரம் தனது புரிதலுக்கு / அனுபவத்துக்கு இணங்கியிருந்து அவற்றை தொடர்பு படுத்திக் கொள்வது. இதுவே பெரும்பாலும் நிகழவல்லது.

இரண்டாவது, தான் இதுவரை அறிந்திராத அம்சங்கள்/ பரிமாணங்கள் / பார்வைகள் போன்றவற்றை நாவல் மூலமாக இனம்காணும்போது, மன விரிவும், நாவல் சொல்லும் புரிதல் தளமும் ஒரே சமயத்தில் விரிவுகொள்கின்றன – மழை ஈரத்தரையில் விழுந்த டீசல் சொட்டு போல.

மூன்றாவது, நாவலில் புதிய புள்ளிகள் நமக்கு கிடைக்கின்றனவா என வாசகன் தனது அறிதல் மூலம் கொள்ளும் எண்ண நடை. ஆனால் அதற்கு நாவல் அனுமதிக்கவேண்டும். நமக்குத் தெரிந்தவற்றை நாவலுக்குள் திணித்து அதன் கையை முறுக்கி நம் பக்கமாக திருப்பக் கூடாது.எதைச் சொன்னாலும் அது நாவலுக்குள் செல்லுபடியாகும் அம்சமாக இருக்க வேண்டும்.  ஏனென்றால் நாவல் நம்முடையதல்ல.

# # # # #

அஜிதன் எனும் புதிய, இளைய நாவலாசிரியரின் முதல் நாவல் மைத்ரி. இமாலய வெளியை, பயணத்தை, கண்ணுறும் இயற்கையை நுணுக்கமான அவதானிப்புகளுடன், பயணிக்கும் ஹரனின் மனவோட்டத்துடன் இணையாக வைத்து பயணிக்கும் நாவல். எப்போதுமே நாவலுக்காகத்தான் எழுத்தாளன். எழுத்தாளனுக்காக நாவல் அல்ல. இதை வாசகன் நம்பும்போதே நாவலின் முழுமை அவனுக்கு கிடைக்கக் கூடும்.

நாவலில் இமாலயம் எனும் பரப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் அழகானது. அசலானதகவும் சொல்லப்படுகிறது.  பொதுவாக எதிர்பார்க்கப்படுவது போல, அதன் மேல் புனிதப் பூச்சுகள் இல்லை. சொல்லப்போனால் பரவசங்கள் கூட இல்லை. விகசிப்புகளே அதிகம். அவை, புலன்வழி அனுபவப் பதிவுகள் மட்டுமே. மிகச் சில இடங்களில் வெளிப்படும் இயல்பான, ஆன்மீக உணர்த்துதல்கள் அல்லது உணர்தல்கள் உண்டு.

புலன்கள் மூலமான அனுபவம் என்பது உணர்ச்சி. அதைத் தத்துவத்தின் தர்க்கம் மூலம் துலக்கி பெறும் அனுபவப் பரிமாணம் -ஆன்மீகம். கடல், மலை, வானம், வனம், பள்ளத்தாக்கு உள்ளிட்டவை இயற்கையின் பெருவீச்சு கொண்ட பேரின்பங்கள்.  பேரின்பம் என்ற சொல்லே புலன்களை மீறி அதன் மேலெழுபவை. செம்பருத்திப்பூவின் ஐந்து இதழ்களைக் கொண்டு, அதன் நடுவே மலர்ந்தெழும் மகரந்த நீட்சி.

மலரின் முழுமை அது.

அல்லது அது மலரை மலராக ஆக்குவது.

பேரியற்கை, சுயம் இரண்டும் எதிரிடையானவையல்ல. பறவையின் சிறகுகள் அவை.

புரிதல் வசதிக்காக, இயற்கை மற்றும் சுயம் என்ற இரு புள்ளிகளில் ஒன்றை வட்ட மையமாகவும், மற்றொன்றை பரிதிப் புள்ளியாகவும் கொண்டால், அவற்றின் தொடர்புதூரம் ஆரம் ஆகும்.  அதுதான் ஆன்மீகப் பரிமாணமம். ஆரத்தின் நீட்சி, வட்டத்தின் பரப்பை நிர்ணயிப்பதாகும்.  வட்டம் சுருங்கி மையமிட்டுக் கொள்வது முழுமையின், தன்னுணர்தலின் மையமாகும். சரியாக சொன்னால், அகம் ஒடுங்கும், மையமற்ற மையம்.

ஹரன் தனது பயணத்தில் கண்டுகொள்வது, பெருவியாபகத்தின் தனது மிகச்சிறிய இருப்பையே. பெருமலைகளிடையே, தேவதாரு மரங்களின் பிரம்மாண்டத்துக்கு கீழே எறும்பைப்போல மக்கள் நடந்துபோவதாக உணர்கிறான். பயணம் என்பது அழுத்தங்களை கரைக்கவல்லது. மாற்றமற்ற அயர்வூட்டும் நிகழ் பெரும்பாரம், ஆனால் பயணங்கள் நிகழ் என்பதன் பருண்மையை அதிசொற்பமாக்கி விடுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் முந்தைய நிமிடம் போலிருப்பதில்லை.  இடமும் அது சார்ந்த வாழ் நிமிடங்களும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பதால், பயணம் அலுப்பையும், அழுத்தத்தையும் நீக்கக்கூடியது. மேலும், நாம் உழன்று கொண்டிருந்த புள்ளியிலிருந்து வெகு தூரமாக விலகிக் கொண்டிருக்கிறோம் எனும் மானசீக உணர்வே மனதை லேசாக்கவல்லது.

//நான் ஏன் கேதார்நாத் போகிறேன் என்று தெரியவில்லை? நிச்சயமாக ஆதிசிவனைக் பார்க்க இல்லை. எங்கேயாவது இண்டு இடுக்களில் ஒளிந்து கொள்வதற்காகத்தான்’//என்கிறான் ஹரன். ஆனால் அந்த அச்ச உணர்வு மலையடிவாரம் வரைதான்.  மந்தாகினி அலகானந்தா சங்கமத்தைக் காண்பது முதல் மனம் லேசாகிப்போகிறது.  அதற்குப் பிறகும் மந்தாகினியை தொடர்ந்தபடியே நோக்கமற்று பயணப்படுகிறான்.

# # # # #

காதல் பிரிவின் வருத்தத்துடன், ரிஷிகேஸ் பயணம் செல்லும் ஹரன், பயணத்தில் மைத்ரியிடம் புதுக் காதலைக் கண்டு, அவளுடன் சில நாட்கள் நட்பும், காதலும், காமமுமாக அனுபவத்தபின், அவளும் அவனை நீங்குகிறாள் என்பது அல்ல இந்த நாவல்.

நாவலில் இரண்டு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று விரிந்த அளவில் சொல்லப்படும் பயண அனுபவம், காட்சிகள் மற்றும் விவரணைகள். பயணம் என்பது நகர்வும் நிலவியலும் இணைந்த ஒன்று. அது அழகாக விரிவாக வெளிப்பட்டிருக்கிறது.

மற்றொன்று காதல்கள். அதனுடைய இடம் மிகவும் சொற்பமானது. ஹரன், கௌரியிடமிருந்து பிரிந்ததற்கான காரணம் என்று எதுவும் நாவலில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.  சொல்லப்போனால் அந்த பிரிவே தற்காலிகமானது என்றே கருத இடமிருக்கிறது.  ஏனென்றால் நாவலின் மையம் அதில் இல்லை.

ரிஷிகேஸிலிருந்து ருத்ரப்ரயாக், குந்த், கௌரி குந்த், சோன்ப்ரயாக் என்ற பயணத்தில் – நிலப்பரப்புகள் மாறிக்கொண்டே இருக்க, ஹரனுடைய மனமும் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகிறது.  கழிவிரக்கத்தோடும், சிதறியவனாகவும் அடிவாரத்தில் கிளம்பியவன், அலகாநந்த்தாவும், மந்தாகினியும் இணையும் பரப்பில் ஆசுவாசத்தை உணருகிறான். போகப்போக சோன்பிரயாக்கில், கோவேறு குதிரை பயணத்தில் செல்லும் கிராமத்தில். இறுதியாக வெந்நீர் ஊற்றின் மூழ்கி எழுதலில் – என சின்னசின்ன மாற்றங்கள் அவனுக்குள் நிகழ்கின்றன.

பயணப்பரப்பு மற்றும் இமாலய மலைச்சூழல் மிக விரிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.  அந்த நிலவகையின் கருப்பொருட்கள் பொதிந்திருப்பதை நாம் கவனிக்க முடியும்.

நிலவியல் – மலைகள், பள்ளத்தாக்குகள், காடுகள்; மந்தாகினி, சோன்கங்கா உள்ளிட்ட ஆறுகள்.

தாவரங்கள் – தேவதாரு மரங்கள், இளைய மரத்தை முதுமரத்தின் தங்கை என்று ஒரு இடத்தில் மைத்ரி குறிப்பிடுவாள். சௌலாய் தானியம். மார்ச்சு வயல்கள்.

விலங்குகள் – ப்ஹரல் வரையாடுகள், கஸ்தூர் ம்ருக் எனும் வினோத விலங்கு; செம்மறிகள், சிவப்பு மஞ்சள் நிறப்பறவைகள், மோனல் பறவைகள்; கோவேறு கழுதைகள் கச்சர், போட்டியா நாய்கள், உள்ளூர்வகை மாடுகள்.

உணவுவகை –  ரோட், ஃபானு, தெச்வானி வகை கூட்டுக்ள், பட்ஹூ எனும் சமையல் அண்டா. சௌலாய் லட்டு.

தட்பவெப்பம் –கடும் குளிர், வெப்பமான பகல், மழை.

இசைக்கருவி –கட்வாலி பாடல்கள், மஸக்பீன், துடிவகை தோற்கருவி.

வீடுகள் அமைப்பு, மக்கள், சடங்குகள், பழங்குடி நம்பிக்கைகள், சிறுதெய்வங்கள். இவ்வாறாக நிலப்பரப்பும் வாழ்வியலும் நாவல் போக்கில் நுணுக்கமாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.

# # # # #

ஹரன் தனது பயணம், தனது காதல்கள் குறித்து சொல்லுவதால் – அதுவே நாவலின் குரலாக இருப்பதால் – பெருமளவும் அவனுடைய பார்வை மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. ஹரன் சொல்லும் விதமாக மட்டுமே கௌரி, மைத்ரியை நாம் அறிகிறோம். ஆகவே அதை வைத்துத்தான் நாவலை நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

‘ஹரன் மூலமாக ஹரன்’ பற்றிக் கிடைக்கும் தற்சித்திரம் – அவன் இளைஞன்; பயணத்தை விரும்புபவன்; இசை மீது ஆர்வமிருக்கிறது; காதலையும் காமத்தையும் குறித்த பரிச்சயம் கொண்டிருக்கிறான்; நெகிழ்ச்சியும், வாலிப உணர்ச்சிப்பெருக்கும் கொண்டிருக்கும் இளம் வயதினன்.

இதில் அவனிடம் நாம் காணும் தடுமாற்றங்கள் அனைத்துமே அந்த வயதுக்குரியவன் கொள்ளும் தடுமாற்றங்களே.  முதிர்ச்சியானவனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் முனைப்பு அவனிடம் தென்படுகிறது.  உதாரணமாக – சில தத்துவார்த்தமான பார்வைகளை வெளிப்படுத்தும்போதும், சிலரை அவதானித்து அதன் மூலம் அவர்களைப்பற்றி கணிக்க முயலும்போதும் அது தெரிகிறது. குறிப்பாக மைத்ரிக்கு இது முதல் காதல் என்று இவன் நிர்ணயிக்கும் அளவுக்கு அவன் காதல் குறித்த நீண்ட அனுபவம் பெற்றுவிட்டவன் போல பேசுகிறான்.

மேலும் அவன் தனது ஊரை, சென்னை என்று ராணுவ ஆளிடமும், கன்னியாகுமரி என்று தேநீர் கடைக்காரரிடமும், தஞ்சை என்று மைத்ரியிடமும், தென்னிந்தியா என்று விடுதியாளரிடமும், வெவ்வேறு நபர்களிடம் வெவ்வேறாக மாற்றிச் சொல்கிறான். பொதுவாகவே அவனிடம் ஒரு திட்டக்கணக்கு இருக்கிறது. அனைத்தையும் எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்ளும் குணம், காரணார்த்தமான பார்வை இருக்கிறது.  நாவலில் அவனது சுட்டுவிரல் காட்டும் ஏறக்குறைய அனைத்திலுமே இதைக் காண முடியும்.

ஹரன் ஒரு ஆண்மைய மனம் கொண்டவனாகவே வெளிப்பட்டிருக்கிறான். அது ஒரு இடத்தில் கௌரியின் குற்றச்சாட்டாகவும், இவனே தன்னைப்பற்றிய மதிப்பீடாக சந்தேகிக்கும் ஒரு இடத்திலும் வெளிப்படுகிறது. // கௌரி சொன்னது சரிதான். நான் அன்பைத் தேடவில்லை, எப்போதும் எனக்கு சொந்தமாக என் இச்சைக்கு வழங்கும் ஒருவள் அழகாக  இருப்பது.  நான் இல்லாமல் ஒரு கணமும் அவள் முழுமை கொள்ளக்கூடாது.  அப்படி நிறைவடைவதை என் தோல்வியாக மட்டுமே என்னால் காண இயலும் (ப-30)//.

காடெல்லாம் சுற்றும் தேனீ போல, ஒருவன் எவ்வளவு அறிந்தாலும், அத்தனை அறிவும் அனுபவத்தின் எச்சில் படாமல் தேனாவதில்லை. ஹரனுக்கு நிகழ்வது அதுதான்.  அறிவு முதிர்ச்சி கொண்டிருக்கும் அவனுடைய இளைஞன் பிம்பம் நீர்க்கும் இடத்தை. சற்று கவனித்தால் பார்த்துவிட முடியும்.  மைத்ரியின் நட்பு, நாணம், ஆசை, காமம், முதல் காதல் அனுபவத்தின் நெகிழ்வு, பார்வை மற்றும் பதட்டம் இவற்றைப்பற்றி எல்லாம் நுட்பமாக கவனிக்கிறான். அவை அனைத்துமே அவள் செயல்பாடுகள் சார்ந்தவை.  செயல்பாட்டைக் கவனித்து அவன் கொள்ளும் யூகங்கள். ஆனால் அவளது மனம் என்ன என்பதைப்பற்றி அவனால் பெரிதாக எதுவுமே சொல்ல முடிவதில்லை. செயல்கள் மூலம் அவளது உணர்வுகளைக் கணிக்க முடிபவனுக்கு, மனதை எட்டிப்பார்க்கவோ, கணிக்கவோ முடிவதில்லை. அத்தகைய ஆவல் கூட அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘நீ இல்லாமல் வாழவே முடியாது’ எனும் வழக்கமான வாலிப வேகம் தவிர வேறெதுவும் அங்கே இல்லை.

அதனால்தான் இறுதியாக மைத்ரி ‘உன்னோடு உன் அறையில் இருக்கவேண்டும். நாளை வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு மறுநாள் வருகிறாள். அவள் வரும்வரை இவனது வாலிப உடல் துடித்துக் கொண்டே இருக்கிறது.  முந்தையநாளின் மலைப்பயணத்தினால் உண்டான கடும் கால்வலியால் நடக்கமுடியாவிட்டாலும் அவளுக்காக வெளியே சென்று காத்திருக்கிறான்.

ஹரனுடைய அறைக்கு வந்தபிறகு, அவள் நடந்து கொள்வதிலும், பேசுவதிலும், அவனை அணுகுவதிலும், அனுமதிப்பதிலும், நெருக்கத்தை உணரவைப்பதிலும், பிரிவதிலும் அவள் காட்டும் நிதானமும், முதிர்ச்சியும் இவனுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கிறது. கலவிக்குப் பிந்தைய நிறைவெய்திய நிலையில் “நான் இன்று வந்ததே உன்னிடம் சொல்லி விடைபெறத்தான்” என்று பிரிவை அறிவிக்கிறாள்.

ஒருவனோடு உறவுக்குட்பட்டிருக்கையில், வெட்கம், தயக்கம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக அமைதி குலைந்திருக்கும் பெண், அவனிடம் நிதானமாக நடந்துகொண்டு, அமைதியாக தலையசைத்தபடி வார்த்தைகள் இல்லாமல் கண்களைப் பார்த்தபடியே அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தால் அதுவே அவளது கடைசி சந்திப்பு என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு.

நாவலின் முடிவில் இந்த இடத்தில் ஹரன் ஒரு சராசரி இளைஞனாகவும், மைத்ரி அனுபவ முதிர்ச்சி கொண்ட பெண்ணாகவும் நமக்குத் தெரிகிறார்கள். அதுவரை ஹரன் குறித்தும் மைத்ரி குறித்தும் நாமறிந்த பிம்பம் தலைகீழாக மாறுகிறது.  மற்றொருவிதமாக சொல்வதானால், ஹரன் நினைத்துக்கொண்டிருந்தமாதிரி அல்ல அவள்.

மைத்ரி நாவலில் நாவலழகின் அம்சம் என்று இதையே சொல்லலாம்.

ஹரனுடைய ஸ்பரிசங்கள், முத்தங்கள், மென் அணைப்புகள் போன்றவற்றின் மூலம் மைத்ரி, அவனுடைய மனத்தை, வேட்கையை எளிதாக அறிகிறாள். ஆனால் அவனை எல்லைக்கு வெளியிலேயேதான் நிறுத்துகிறாள். அதைத்தாண்டி அவனும் எதையும் கேட்பதில்லை. ஆனால் மறுநாள் கால்வலியால் துடிக்கும் அவனைக்காண, அவனே ஆச்சரியப் படும்படி அறைக்கு வந்து அவனைச் சந்திக்கிறாள்.  மறுநாள் உன்னோடு இருக்கவேண்டும் என்று அவனது வேட்கைக்கான பதிலை, அவன் கேட்காமலேயே தந்துவிட்டுப் போகிறாள்.

அவன் முன்னெடுக்கத் தடுமாறிக் கொண்டிருக்கும் காமத்தை, அவள் ஒரு கருவியை சரியான இடத்தில் பிடித்து தூக்குவதுபோல, கையிலெடுக்கிறாள். அவனது மறுவினைக்கான இடமே அங்கு இல்லை.  தீர்மானமான இந்த விழைவு ஆச்சரியமூட்டுவது. ஏனென்றால் அவளுக்கு உள் கணக்கீடுகள், திட்டங்கள் எதுவும் இல்லை.

மற்றொன்றும் உண்டு.  ஹரன் தனது காதல், தோல்வி, தனது துக்கம் என்று மையம் கொண்டு நகரும் நாவலில், மீண்டும் ஒரு புது காதல் காமம் என்று அவனுக்கு அமைகிறது.  அதற்கு துணை செய்யும் மைத்ரி பாத்திரம், தனது காதல் என்பதாக இல்லாமல் காதல் என்ற ஒட்டுமொத்த உணர்ச்சிக்கே, உறவுக்கே ஒரு புது அர்த்தத்தை தருகிறாள். அது ரிது பெரியம்மாவிடமிருந்து அவள் பெற்றது.  தருவதற்கே நாம் இருக்கிறோம். எதையும் வசப்படுத்திக் கொள்வதற்கு அல்ல என்று உச்சமான ஒரு புள்ளியைத் தொடுகிறாள்.

மைத்ரியின் மனவமைப்பு, தோழிபோல பழகும் ரிது பெரியம்மாவைப் பார்த்து உருவாக்கிக் கொண்டது. ரிது பெரியம்மா, பெரியப்பாவின் மேல் காதல் கொண்டு, ஆனால் அவரை திருமணம் செய்துகொள்ளாமல் போய், அவரும் யாரையுமே திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதும், இந்த வயதிலும் அந்த நீறுபூத்த காதல் பொறிகளற்று ஊமையாக இருப்பதையும் மைத்ரி அறிவாள். காதல் என்பது வயப்படுத்திக் கொள்வது அல்ல. காதலுறுவது மட்டுமே என்று மைத்ரி உறுதியாக நம்பி இருக்கக் கூடும். இளமையில், ரிது பெரியம்மா மிக நீண்ட தூரம் நடந்து வந்து பெரியப்பாவை பார்த்துப்போக வருவது போலவே, மைத்ரியும் ஹரனை பார்ப்பதற்காக நெடுந்தொலைவு நடந்து வந்து பார்க்கிறாள். ஏதோ ஒருவிதமாக ரிது பெரியம்மாவின் தாக்கம் மைத்ரி மேல் இருக்கிறது.  வாழ்க்கையின் கனம் மிகுந்த கணங்களை எதிர்கொள்ள அவை உதவுகின்றன. அதனால்தான் மைத்ரி ரிது பெரியம்மாவிடம் போய் அழுகிறாள்.

மேலும், கௌரியின் காதல் குறித்து அவள் ஹரனிடம் தெரிந்துகொள்ளும்போதும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. ஏனென்றால் அவள் அர்த்தம் கொள்ளும் அல்லது அனுமதிக்கும் காதலுக்கு உரிமைகள், பழங்கணக்குகள் போன்றவை ஒரு பொருட்டே அல்ல.

காதல் என்பதை காமத்துக்கு நகர்த்தி அதன்மூலம் சேர்ந்துவாழும் லௌகீக தேவைகளுக்கு உட்படாத புதியதொரு இடத்துக்கு காதலை கொண்டு நிறுத்துகிறாள் மைத்ரி. அவள் உணர்த்தும் காதலை புரிந்துகொள்ள வழமையான புரிதல் அளவீடுகள் போதாமல் போகின்றன.

மேலோட்டமாகச் சொல்வதானால் – மைத்ரி ஹரன்மேல் மையல் கொள்கிறாள். உள்ளார்ந்த நட்பு கொள்கிறாள். பயணிக்கிறாள். அவன் விரும்பும் காமத்தை தானும் விரும்பிப் பரிமாறிக் கொள்கிறாள். ஆனால் அந்த இடத்தில் அவனுடனான உறவை, தனது காதலுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் நிறுத்திக் கொள்கிறாள். துண்டித்துக் கொள்வதில்லை. ஆனால் ஹரனுக்கு அவளை பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. அதனால்தான் அவனுக்கு பிரிவு என்பது காயத்தையும் சோகத்தையும் தருகிறது. ஆனால் அவளுக்கு சோகத்தைத் தருவதில்லை. என்றுமிருக்கும் பூரணத்துவ மனநிலையை தருகிறது.

மைத்ரி அறிமுகப்படுத்திய காதலை, அவனுக்கு இனி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கப்போவது அவளது பெண்மை சார்ந்த அழகோ, காமமோ அல்ல. அவள் தீர்மானமாக மென்மையாக கையளித்துவிட்டுச் சென்ற பிரிவுதான். காதலைப் பிரிவது என்று கிளம்பியவன், இனி பிரிவைக் காதலித்துக் கொண்டே இருப்பான்.

வலிமையுள்ளவனான அவனது மனம், நைந்துபோகும்பொதெல்லாம் ஒரு பெண்வடிவ ஆறுதலை நாடுகிறது.வலிகளால் அவதியுறும்போது கூட இறந்து போன அம்மாவை நினைத்துக் கொள்கிறான்.

இன்னொரு விதத்தில் பார்த்தால், ஹரன் மைத்ரியிடம் காண்பது தன்னைவிட்டு விலகிப்போன கௌரியின் நீட்சியைத்தான்.  அவன் விலகி வந்தவன் அல்ல. கைவிடப்பட்டவன். அவள் பிரிந்த துக்கத்தை பயணம் மூலம் நிவர்த்திக்க முயலும்போது, அவன் பேருந்தில் காணும் மைத்ரி ஆசுவாசமாகிறாள். அவளைப் பார்க்கும் முதல் நொடியில் இருந்தே அவனிடம் வெளிப்படுவது காமம்தான். பொதுவாக ‘கண்டநொடியிலேயே’ காதல் எல்லாம் வருவதில்லை. காமத்தின் குருத்து அதில் உண்டு. அவளது வனப்பு, கூந்தல், கண்கள், வாசனை, கைக்குட்டையின் மிருது, ஸ்பரிசம் என்று பலவகையிலானஈர்ப்புதான். ஆழமான பொழுதுகளில் அவனுக்கு கௌரியின் நினைவு வருகிறது. அதையும் நிகழ் காதலின் அங்கமாகவே கரைத்துக்கொள்கிறான்.  

ஹரனுடைய இளம்பிராய சோகம், தாயின் மரணம் போன்ற துக்கங்களை அவன் அவளிடம் சொல்லி உறவுக்கான நெகிழ்ச்சியைச் சொல்லிச் செல்வதால் நட்பு தாண்டிய நெருக்கம் உருவாகிறது. (அது திட்டமிட்டு செய்யும் தந்திரமாக இல்லை). அதனால்தான் மைத்ரி ஒரு சமயத்தில் அவனை ‘நீ என் குழந்தையல்லவா” என்று அணைத்துக் கொள்கிறாள். மைத்ரி விலகிப் போனபிறகு  ‘கௌரி கௌரி என்று அரற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் மைத்ரி நிலைக்குத் திரும்பும் ரதம் போல ‘ நான் ஹரித்வார் போகிறேன்’ என்று கம்பீரமாக எதிர்த்திசையில் நடந்து விலகிப் போய்க்கொண்டே இருக்கிறாள். இவன் பிரமித்துப் போய், பிறகு அவளை துரத்திக்கொண்டு சென்று பார்க்க செல்லும்போது அவள் அந்த பிரதேசத்தை விட்டே நீங்கி இருக்கிறாள்.

கௌரியை விட்டு விலகி வரும்போது இருந்த ஆற்றாமையும் ரணமும், மைத்ரியின் சொற்பகால காதலுடன் கிடைத்த தெளிவு, அவன் ஆற்றில் மூழ்கி எழும்போது கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. கடும்குளிர் பிரதேசத்தில் நடுவில் இருக்கும் வெந்நீர் ஊற்றின் கதகதப்பு, புதிய அர்த்தங்களின் வெம்மை. அவனது இறுகிய எண்ணங்கள் உடைந்து கரைவது அதில்தான். நாவலின் இறுதியில் வரும் இந்த இடம் அவனளவில் உருவாகும் மாற்றம். அவன் இனி வேறொரு ஹரனாக இருக்கும் சாத்தியங்களே அதிகம்.

ஹரனோடு காதல்வயப்பட்டிருந்த, கௌரிக்கும் மைத்ரிக்கும் ஆளுமை வேறுபாடுகள் உண்டு. கௌரி கலகலப்பானவள் நாகரீக உலகை சார்ந்தவள்.அவளுக்கு ஏற்கெனவே ஒரு காதல் இருந்தது. நண்பர் ஒருவன் மூலம்தான் ஹரன் அறிமுகம் ஆகிறான். அன்பு என்பதில்லாமல், புலன் மூலம் பெண்ணை அணுகுபவன் என்பதால் ‘நடுவிரலை’ உயர்த்திக்காட்டி சமிக்ஞை செய்தி அனுப்பிவிட்டு பிரிந்துபோகிறாள்.

மைத்ரி உத்தர்காண்ட் மலைப்பகுதி சார்ந்தவள் என்றாலும் கல்லூரி மாணவி. மரபின் வேர்களை இன்னும் பற்றிக்கொண்டிருப்பவள். தன்னை இந்த மலைதேசத்தின் மகள் என்றே உணர்பவள். முயக்கத்தின் போது ஹரனிடம் ‘நான் உன் திருட்டு மலைப்பெண்தானே’ என்று கேட்டுக்கொள்கிறாள்.

ஹரனுக்கு காமம் என்பது இருவரிடமிருந்தும் கிடைக்கிறது. இரண்டிலும் பிரிவு இருக்கிறது. ஆனால் மைத்ரியின் பிரிவு பிணக்கினால் அல்ல.  காமத்தின் மூலம் கௌரி உணர்த்த முடியாத ஒருவித காதலை, மைத்ரி உணர்த்திவிடுகிறாள். ஆனால் அந்த காதல் சராசரியான ஒன்றில்லை.

சிறுமியாக இருந்தபோது நீலக்கண் கொண்ட ‘கஸ்தூரி ம்ருக்’ என்ற வினோத மிருகத்தை பாத்த அனுபவத்தைச் சொல்லி, அதைப் பார்த்தவர்களுக்கு சீதையைப்போல பிரிவுத் துன்பம் நேரும் என்ற பழங்குடிகளின் நம்பிக்கையை சொல்லும்போது, குறிப்பறிதாலாக ஏதோ நமக்கு தோன்றுகிறது.  இறுதியில், மைத்ரியைக் கூடிய பிறகு, மலைப்பாங்கின் அத்தனை வாசனைகளையும் மைத்ரியின் ஒவ்வொரு அங்கத்திலும் நுகர்கிறான். நீலக்கண்களைக் கனவைப்போல பார்க்கிறான்.  

இப்படியான வெளிப்படையாக சொல்லப்படாமல்  சில மென் புள்ளிகள், உள்ளன.

‘நான் எதையும் இழக்கப்போவதில்லை ஹரன்”, “நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். அன்பை மட்டுமே கொடுத்தபடி” என்று சொல்லிப் பிரிகிறாள். பொதுவாக பலரும் சேர்ந்து இருப்பதற்காக சொல்லும் வார்த்தைகளை, பிரியும் ஒருத்தி சொல்கிறாள் என்ற முரணில்தான் அவள் நம்பும் காதல், உணர்த்த விழையும் காதல் இருக்கிறது. அதாவது, காதல் என்பது வயப்படுத்திக் கொள்ளுவதல்ல. காதலில் இருப்பது.

இவள் ஹரனோடு செல்வதோ, ஹரன் இங்கேயே இருப்பதோ சாத்தியமில்லை என்று அவர்களே உணர்ந்தே இருக்கின்றனர். இந்நிலையில் அழுது  தீர்க்கும் மைத்ரியிடம், ரிது பெரியம்மா //தேவி நமக்கு அன்பு, கோபம், துக்கம், ஏக்கம் எல்லாம் தாங்கிக் கொள்வதற்கு ஒரு துளி மேலாகவே கொடுக்கிறாள்// என்கிறாள்.

மேலும் கனவில் வரும் பெண் //‘நீ கொடுப்பதற்கு மட்டுமே பிறந்தவள். எதையும் எதிர்கொள்ளாதே.  எதையும் பற்றிக்கொள்ளாதே. நீ என்னுடையவள்// என்கிறாள். கனவில் வருவது யார்? வனதேவதையா? ரிது பெரியம்மாவா? இவளது ஆழ்மனமா?  எதுவாயினும், அதனால்தான் விலகுவது என்றொரு முடிவை அவள் எடுக்கிறாள். அவள் துண்டித்துக் கொள்வதில்லை. பதியனிட்ட செடிபோல தனிக்கிறாள்.

அவள் நீங்கி விட்டிருக்கிறாள் என்றுணர்ந்த ஹரன் அழுது தீர்த்த  பின்னர், தட்டு தடுமாறி மலையுச்சிக்கு ஏறிச் சென்று முன்னிருளில் வெந்நீர் ஊற்றில் இறங்கி மூழ்கி எழுந்தபின் வானமெங்கும் விண்மீன்கள் இருப்பதை பார்க்கிறான். //லட்சம் கோடி விண்மீன்கள் அணிந்து அவள் என்னைச் சூழ்ந்திருந்தாள்//என்பது நாவலின் கடைசி வரி. அவள் சொன்னதை அவன் உணர்ந்ததாகவே நாவல் தெரிவிக்கிறது.

நாவலின் களத்துக்குத் தேவையான மொழி நன்றாக வந்திருக்கிறது. ஆனால் காதல் பரவசங்கள், பல இடங்களில் தமிழின் வழமையான ரொமண்டிக் கதைகளைப்போலவே உள்ளன.  ‘அவள் என் மேய்ச்சல் நிலம்’ போன்ற’ சாமானியமான வரிகள் உட்பட.

ஒரு நாவல் என்பது சம்பவங்களின் கோர்வைகள் மூலமோ,  வாழ்வியல் அனுபவங்களின் கூறுகள் மூலமோ, பாத்திரங்களின் அனுபவங்கள் சொல்லப்படுவதன் மூலமோ, நீண்ட கதையின் அடுக்குகளாகவோ உருக்கொள்கிறது. மைத்ரி-யில் நாவலின் வழக்கமான கதையம்சம் என்பதாக மட்டுமே பார்த்தால், ஏமாற்றம் தரக்கூடும். ஆனால், பாத்திரங்களின் குணங்களுக்குள் சென்று காணும்போதுதான் நாவல் அம்சம் கிடைக்கிறது.  

இந்த நாவல் ஒரு நல்ல முயற்சி.  ஒரு மலைப்பயணம் – அதிலும் இமாலயம் – மனதின் கனங்களை லேசாக்கிவிடும் கூறுகளுடன், பயணப் பரிமாணத்துடன் நாவலில் வெளிப்பட்ட அளவுக்கு, காதல் மற்றும் பிரிவு உள்ளிட்ட அம்சங்கள் தரும் புதிய அர்த்தங்கள்,புதியதொரு கண் திறப்பு போன்றவற்றைச் சொல்லத் தேவைப்படும் அழுத்தம், மேலும் சற்று செறிவாக வெளிப்பட்டிருக்கலாம். அவரது மொழி எளிதாக அதை செய்யக்கூடியதுதான். அவ்வித அர்த்தங்களை, உரையாடல்களில் இருந்து பிரித்தெடுத்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் நிச்சயமாக அதற்கான ஆழ்தடங்கள் பதிந்திருக்கின்றன.

***

– ரமேஷ் கல்யாண்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *