நான் தூக்கத்தில் இருக்கும் போதே இந்த கதையைப்பற்றிய எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

நான் இதற்கு முன் ஒரு தரம் பெரிய தந்தையின் ஜனாஸா தொழுகையில் நிற்கும் போதே இந்த ஈமக்கிரிகைகளை கதையாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஏன் அப்படி நினைத்தன் என்று தெரியவில்லை. அன்று உணர்வு பூர்வமான நாளாக இருந்ததால் நான் நினைத்திருக்கக் கூடும். அன்று காலையில் என் தந்தை வந்து அழைத்து வாசலில் நின்றபடியே “பெரியப்பா மௌத்தா பெய்த்தார் வா மகன் நான் அங்கே இருந்துதான் வாரேன்” என்றார். வழக்கத்திற்கு மாறாக வாப்பா பள்ளிக்கு போகும் தொப்பி போட்டிருந்தார்.

“நான் எந்த பெரியப்பா” என்றேன்.

“காதர் பெரியப்பா” என்றார்.

நான் கொஞ்சம் அதை புரிந்து கொள்ள நேரம் எடுத்தது. அதை பார்த்த வாப்பா “எங்கிட மூத்த காக்கா” என்று திரும்பவும் விளக்கினார். உண்மையில் அந்த உறவு அவ்வளவு தூர்ந்து போய் இருந்தது.

நான் பெரியவாப்பாவை கடைசியாக எப்போது பார்த்தேன் என்று சரியான நியாபகம் இல்லை. அவர் தெருவில் கடந்து போகும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் என் தம்பி மகன் என்று அடையாளம் காணமுடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் கண்டேன்.

அவர் என்னை எப்படி மறந்தார். நான் தான் அவரை இந்த ஊரில் இருந்தவரை பாக்கவே போகவில்லை. அவருக்கு எத்தனை குழந்தைகளின் வழி எத்தனை உறவுகள் கிளைவிட்டு இருக்கும் போது என்னை ஏன் நியாபகம் வைத்திருக்க போகிறார;. அவர் மறக்கக் கூடிய தூரத்தில் தான் இருக்கிறார். ஆனால் நான் சிலவருசங்களாக இந்த ஊரில் தான் இருக்கிறேன். போய் பார்த்ததில்லை அவருக்கு நாங்கள் எப்போதும் ஒரு பொருட்டே இல்லை. என்பதனால்தான் நான் போய் பார்க்கவில்லையா? அப்படி சொல்ல முடியாது என் தந்தை வழி உறவுகள் யார் வீட்டுக்கும் நான் கடந்த 20 வருடங்களாக போனதாக ஞாபகமில்லை. அவர்கள் எப்போதும் மூன்று நான்கு கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில்தான் இருந்தாலும் நான் யாரையும் பார்ததில்லை. 07 வருடங்களுக்கு முன் என் திருமணத்திற்கு கூட சொல்ல போனதில்லை. வீட்டில் “நாங்க சொல்லிக்கிறோம். நீ போக தேவையில்லை”என்று சொன்னார்கள். என் திருமணத்தில் எங்கள் வாசலில் வைத்து அவரைக் கண்டதுதான். அவர் எனக்கு ஸலாம் சொன்னார். அதான் நானும் அவரும் சந்தித்த கடைசி சந்திப்பு. அதற்கிடையில் நாங்கள் இந்த உலகில் பல தடவைகள் கடந்து போயிருக்கிறோம். அவர் என்னை அடையாளம் கண்டாரா என்று தெரியவில்லை. மையத்து வீட்டுக்கு நான் போனபோது கிட்டத்தட்ட எல்லோரும் வந்து விட்டார்கள். நான் தான் கடைசியாள் போல் இருந்தேன். அவர் பேத்தியின் வீட்டில் தான் மையம் வைக்கப்பட்டிருந்தது. வழக்கமான அவர் தோற்றத்தில் மாற்றமில்லாமல் இருந்தது. அவ்வளவு மோசமான உடல் நலக் கேடுல்லாமல் மௌத்தாகி இருப்பார் எனத் தோன்றுகின்றது. ஏதோ காய்ச்சல் வந்து நன்று பேசிக் கொண்டிருந்துதான். கலிமா சொன்னபடிதான் மௌத்தானதாக சொன்னார்கள்.

அவர் எலும்பு முறிவு வைத்தியர் கோப்பிரட்டியில் மெனஜராகவும் இருந்தார். அவர் தப்லீக் ஜமாத்தில் முழு நேர ஊழியராகவும் இருந்தார். இதில் எது ஒன்றிலும் இருந்து பிரிக்க முடியாத படி அவர் மூன்றாகவும் முழுவதுமாகவும் இருந்தார். அவர்  முறிவு வைத்தியரானது அவரது சிறு வயதில் கால்கள் உடைந்திருக்கிறது. அதற்கு வைத்தியம் பார்க்க போனபோது. 06 மாதம் வைத்தியர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். அவர் இருந்த பாயில் 06 மாதத்திற்கு பிறகு நகர்த்திய போது பாம்பு இருந்ததாக சொல்வார்கள். பின்னர் அப்படியே முறிவு வைத்தியமும் கற்றுக் கொண்டு வந்திருந்தார். எனக்கு முழங்கையுடைந்த போது நான் வீட்டில் தெரிந்தால் ஏசுவார்கள் என்று கட்டிலிக்கடியில் போய் படுத்துக் கொண்டேன். என்னை தேடிப்பிடித்து அவரிடம் கொண்டு போனார்கள். மூட்டு விலகி இருப்பதாக சொன்னார். அவர் வீடு பெரிய வைத்தியசாலை போல ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்தது. அன்றுதான் பத்து போடுவதற்காக கூட்டம் அலைமோதியது. முதலில் உடைந்த கைகளுக்கு பச்சை மூலிகைகளை சிறுசிறுதாக உடைத்து கையில் தூவி பத்திரிகைத்தாளால் சுற்றி கட்டி வைப்பார்கள். பெரியம்மாதான் பத்து போடுவதற்கான மருந்துகளை அரைப்பார். மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத இடத்திற்கு நான் போவேன் அவர் அம்மியில் வைத்து பத்துக்கு தேவையான பொருட்களை அரைத்துக் கொண்டிருப்பார். அவருடைய மூக்கு மிக நீளமாக அழகாக இருக்கும். அவரின் முகத்தில் சிறுதாக கரும்புள்ளிகள் தெரியும். அவர் அரைத்துக் கொண்டிருக்கும் அம்மியின் அருகே உடைத்து ஊற்றி அரைத்த முட்டைகளின் கோதுகள் அங்கே சிதறி கிடக்கும். சில டப்பாக்கள் கறுப்பாக நிறைந்து இருக்கும் அது முட்டைபத்து. அம்மியில் கெட்டியாக திரவம் போல் கரும்சிவப்பாக இருக்கும் அது வைரப்பத்து. வீடு முழுவதும் அங்கே சிறிய மண் மூட்டைகள் கிடந்தது. அது எழும்பு முறிந்து பிசகி கொண்டவைகளையும் ஏறிக் கொண்டவைகளையும் இழுத்து வைப்பதற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். உத்தரத்தில் கையிறு தொங்கியது. அதில் தோள் பட்டை சரிந்தவர்கள் கையிற்றில் தொங்கி சரிசெய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். பெரியப்பாவுக்கு என் முறிவு விளையாட்டாக இருக்கும். இதெல்லாம் ஒரு முறிவா என்பது போல. எங்கள் அக்காவுக்கு காலில் அலமாறி குப்பிற விழுந்து கெண்டயால் மொளி விலகியபோது ஆங்கில வைத்தியம் பார்க்க பலர; சொன்னபோது அதெல்லாம் வேணாம் நான் பார்க்கிறேன் என்று வீட்டுக்கு வந்து வைத்தியம் பார்த்தார். அவள் காலும் சரியானது அப்பேர்பட்ட திறமைசாளி அவர். தப்லீக் ஜமாத்தில் மனைவிக்கு முகத்தை மறைத்து இஸ்லாமிய பணிகென்று கிளம்பி போவது எங்கள் வீட்டில் எல்லாம் கடுப்பாக இருந்தது. எங்கள் அக்காவின் திருமணத்தன்று பெரியம்மா இறந்து போனார். கல்யாணம் நடந்து முடிந்தது. உம்மா வாப்பா எல்லாரும் மையத்து வீட்டிற்கு போய் வந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் கல்யாணத்தை பண்ணுவதா என்ற ஒரு சலசலப்பு இருந்தது. காலப்போக்கில் அதை ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை அந்த மையத்து வீட்டிற்கு நான் போகவில்லை.

அதன் பிறகு நான் கூரையில் இருந்து மணலில் குதிப்பதாக நினைத்துக் கொண்டு மணல் பரப்பி இருந்த சீமெந்து அத்திவாரத்தின் மீது பாய்ந்து விட்டேன். உச்சம் தலையில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு வலி. இரண்டு பாதங்களையும் நிலத்தில் வைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. கடைசில் அவரிடம் தான் ஓடினோம். அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை எண்ணை மருந்து எதுவும் தேவையில்லை. செங்கல்லை நெருப்பில் சூடாக்கி அதாவது குப்பையை பற்ற வைத்து அதற்குள் கல்லை போட்டு சூடாக்கி அந்த கல்லில் எரிக்கிலையை வாட்டி கால் பாதங்களில் ஒத்தடம் கொடுத்து அப்படியே இரவைக்கு கட்டி வையுங்கள் என்றார;. அப்படியே செய்தோம் காலையில் எந்த வலியும் இல்லை ஏதோ மாயம் செய்தது போல இருந்தது. எனக்கு ஒரு ஆசை இருந்தது இந்த வேலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆனால் பெரியம்மா இறந்த பிறகு பெரியப்பா மெதுவாக அதை கைவிட ஆரம்பித்து விட்டார். ஜமாத்து போவதையும் அதிகமாக்கி ஹஜ்ஜூக்கும் போனார். முழுசாக கைவிட்டு விட்டார். ஒரு கட்டத்தில் கோப்பரிட்டி வேலையில் இருந்து ஓய்வுபெற்றதும் பள்ளியில் மோதினாராகி கடமை செய்ய ஆரம்பித்து விட்டார். பொதுவாக நல்ல பொருளாதார நிலமையில் இருப்பவர்கள் பள்ளியில் கடமை செய்வது இல்லாதிருந்த கால கட்டத்தில் அப்படி செய்வது கிட்டத்தட்ட துறவு நிலைதான். ஆனால் அவர் திரும்பவும் ஒரு திருமணம் செய்து கொண்டார்.

மையத்து வீட்டின் முன்னே மரத்தாலும் தகடாலும் கட்டப்பட்ட வீடு இருந்தது. அதில்தான் கட்டிக்கிட்டவங்க இருக்காங்க சீதேவி மனிசி என்று அவருடைய மதினியின் பையன் சொல்லிக் கொண்டிருந்தான். காலையில் ஒரு மணிக்கு மரணித்திருப்பார். பதினொரு மணிக்கல்லாம் அடக்கம் செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். குளிப்பாட்டி கபனிட்டார்கள். சந்துக்குள் வைத்ததும் பக்கத்தில் இருந்தவர்கள் இவ்வளவு தூரம் தூக்கிட்டு நடந்தா மையத்துக்கு வலிக்கும் அல்லவா? சவுதியிலே வாகனத்தில் வைத்துக் கொண்டு போகிறார்கள் நம்ம ஆக்கள் தான் இன்னும் தோளில் சுமந்து செல்கிறார்கள். நமக்கும் கஸ்டம் அவர்களுக்கும் கஷ்டம்.

முதலில் அவரின் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பள்ளிக்கு போனோம். போகும் போது அவரின் மதினியின் மகன் அவர் கடமை செய்த பள்ளியில் தான் தொழுவிக்கும் படி வொஸியத் சொன்னதாக சொன்னார். கூட வந்தவர் அதை பொருட்படுத்த தேவையில்லை என்று தட்டிவிடுவது மாதிரி ஏதோ சொல்லிக் கொண்டு வந்தார். வெயில் யாருக்கும் பக்கத்தில் இருக்கும் பள்ளியை விட்டு இன்னும் 400மீற்றர் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு போய் திரும்பி வர விருப்பம் வராதுதான். பள்ளிவாசலுக்குள் வேறு மையத்தை கொண்டு சென்று உள்ளே வைத்து விட்டார்கள். நான் வுழு செய்வதற்காக வரிசையில் காத்துக் கொண்டிருந்தேன். பக்கதில் பெரியப்பாவின் மகன் வுழு செய்வதற்காக காத்திருந்தார். “என்ன காக்கா?” என்று கையை தொட்டேன். ஏதோ நினைவு வந்தவர் போல நான் வீட்ட போய் வுழு செய்து விட்டு வாறேன் என்று போனார். நான் வுழு செய்து கொண்டு பள்ளிக்குள் நுழையும் போது தொழுகை நடாத்த முன் வந்த இமாம் “ஜனாஸாவானவரின் வொஸியத் பிரகாரம் அவருடைய மையத்தை அவர் கடமை செய்த பள்ளியில் தொழுகை நடத்தப்படும்” என்று அறிவித்தார். அப்போது மௌலான மௌஃதூதி விமானத்தில் எடுத்து செல்லப்பட்டு வேறு வேறு கண்டங்களில் தொழுகை செய்தார்கள் என்றது நியாபகத்திற்கு வந்தது. திரும்ப தோளில் தூக்கி செல்லும் போது கைமாறி கைமாறி மூன்று சந்தர்ப்பங்களில் எனக்கு அவருடைய மையத்தை தூக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அவர் கடமை செய்த பள்ளிவாசல் சிறியதாகவும் கூட்டம் அதிகமாகவும் இருந்ததால் மிக நெருங்கமாக தொழுகைக்கான வரிசையில் நெருக்கமாக நின்றார்கள். அப்போது யாரோ ஒரு இளைஞ்சன் வலிப்பு நோய் வந்து விழுந்தான். அவன் சுவாசிக்க வைக்க கூட முடியாத அளவில் நெரிசலாக இருந்தது. கொஞ்சம் அசைவு குறைந்ததும் அவனை வெளியே கொண்டு சென்று விட்டு தொழுகையை நடாத்தினார்கள்.

மையவாடிக்கு போகும் தூரம் ரொம்ம அதிகமாக இருந்தது. வண்டியை வைத்து விட்டு போனார்கள். எல்லோரும் நடந்துதான் வரவேண்டும் என்பதால் நான் திரும்பவும் மையத்தை வீட்டை கடக்கும் போது நின்று வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். என்னுடைய அண்ணன்கள் இருவரும் வாப்பாவும் கூட்டத்தில் தென்பட்டார்கள். இளைய சகோதரன் கூட சந்தூக்கை சுமந்து சென்றார். அவனுடைய சுபாவத்திற்கு அவன் அப்படி செய்தது அவரின் மீது அவனுக்கு அவரிதமான அன்பு இருக்க வேண்டும் என்று தோன்ற செய்தது. மூத்த சகோதரரும் தூக்கிக் கொண்டு வந்தார். வாப்பாவை பார்த்தேன் அவர் கொஞ்சம் கலங்கித்தான் போயிருந்தார். ஐந்து பெண் குழந்தைகளுக்கு பிறகு தவம் இருந்து பெற்ற ஆண் குழந்தை என்பதால் பெரியப்பா மீது மாமிமார் அனைவரும் பேரன்பு கொண்டிருந்தார்கள். அவருக்கு பிறகு என் தந்தையுடன் சேர்த்து இரண்டு ஆண் குழந்தைகள் வெள்ளிக்கிழமைகளில் பிறந்ததால் மூன்று குழந்தைக்கும் ஓரே பெயர்தான். உலகில் முதல் மனிதனின் பெயர் அவரும் வெள்ளிக்கிழமைதான் பிறந்தார் அல்லவா?

மணலில் குழி தோண்டி இருந்தார்கள். நீள் சதுரமாக ஒரு பக்கம் ஒடுங்கிய நிலையில் மரப்பலகையால் அடிக்கப்பட்ட மச்சுப் பொட்டி அங்கே குழிதோண்டிய மணல் குவித்து வைத்திருந்த இடத்தில் இருந்தது. சந்துக்கில் இருந்த பாயில் சுற்றி வைக்கப்பட்டிருந்த மையத்தை எடுத்தார்கள். குழியில் பத்திரமாகி இறக்கி மக்காவின் திசையை பார்த்த படி முகத்தை வைத்து உடலை கிடத்தினார்கள். முதலில் மகனும் பிறகு விரும்பியவர்களும் மணலை அள்ளி கொடுத்தார்கள். எத்தனை பேரை சாப்பிட்ட மண் அது வப்பாவும் மண்ணை அள்ளிக் கொடுத்தார். அவர் அதற்கெல்லாம் ஆர்வம் காட்டும் ஒருத்தரும் அல்ல. மணலை வாரிப்போட்டு மூடினார்கள். என் சகோதரர் உட்பட எல்லோறும் குழியை மூடிய இடத்தில் பக்கத்தில் கீழே கிடந்த மண்ணை தள்ளி சிறு மேட்டை உருவாக்கினார்கள். அதில் பதியம் போல் செய்து ஆமணக்கு மரத்தை நட்டு வாளி நிறைய தண்ணீர் எடுத்து ஊற்றினார்கள். கப்ர்ஸ்தானம் தயாராகி விட்டது. நான் கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டிருந்தேன். இமாம் அவருக்கு பிராத்தனை செய்வதற்காக தயாரானார். “இவர் ஜனாஸாவில் கலந்து கொண்டதற்காக நான் சந்தோசப்படுகிறேன். சீதேவி மனிசன் யாரையும் தொந்தரவு செய்யாத மனிசன் பள்ளியை அவர் பாத்துக்கொள்ளும் விதம்” என்று அவர் செயல் மனமத்துகள் என்று ஏராளமாக சொல்லி பின்னர் பிராத்தனையாக மாறி அவர் செய்த அமல்களை இறைவனிடம் ஏற்றிக் கொள்ள செல்லி கண்கலங்கியதும் வாப்பாவும் குலுங்கி அழுவது தெரிந்தது. என்னுடை கண்களும் கலங்கியது.

நான் நிழலில் போய் அண்ணன் வருவார் என்று கூட்டிட்டு போகலாம் என்று காத்திருந்தேன். அவர் எல்லோரும் முஸாபாக செய்து கட்டித் தழுவி போய்க் கொண்டிருந்தார்கள். கடைசியாகத்தான் வந்தார். அண்ணனை ஏற்றிக் கொண்டு நான் செல்லும் போது அவர் சொன்னார்.
“அவர் நல்ல மனிசன்’’
நான் சொன்னேன் “எனக்கு அவரை பிடிக்காது’’ என்றேன்.
“ஏனென்றால் சின்ன வயசில் அவர் வந்தார் என்றால் நம்ம பெரியப்பா தானே நம்ம வீட்டுக்கு வருவார் என்று காத்திருப்பேன். பக்கத்து வீட்டில் இருக்குற மச்சான் வீட்டிற்கு மட்டும் வந்துவிட்டு போயிருவார். அனேகமான நேரம்”.
அண்ணன் உடனே சொன்னான் “நம்மலும் வந்தவர சரியா கவனிச்சமோ என்னமோ தெரியாது’’

– ஹஸீன் ஆதம்

 

Please follow and like us:

1 thought on “பெரியப்பா

 1. நேரம் 12 மணி 22 நிமிடம்,
  நள்ளிரவு தொடங்கி நகர்கிறது.
  ஹசீனின் “Uncle “சிறுகதையை வாசித்து முடித்திருக்கிறேன்.

  ஜனாசாக்களை, பாரம்பரிய முஸ்லிம் இலங்கையர், வெறுமனே புதைப்பதில்லை ;அவர்கள் அவற்றை நல்லடக்கமே செய்கின்றார்கள். புதைத்தலில் பிணைந்து நிற்கின்ற பிரிக்கமுடியா மகோன்னதமும், புனிதம் மிகுந்த வழக்காறும்தான் இக்கதையின் கரு.

  ‘முறிவு மருத்துவம்’ பற்றிக் கூறுவதெல்லாம் கதைக்கான அணி. அற்புதமான காட்சிப்படுத்துகை. கலப்பே இல்லாத அப்பட்டமான நிஜத்தின் பிரதிமை.

  அருகிருந்தும் கிட்டாமலேபோன உறவுகள் குறித்த ஏக்கத்தின், களையவேமுடியா சோகம்; ஒரு பின்னணி இசை போல் கதை முழுதும் விரவிக்கலந்திருப்பது Marvelous.

  தன்னால் வாழும்போது சாதித்துவிடாத அன்பை, பெரியப்பாவின் (Uncle) கதையில் சமர்ப்பணமாக்கி நிறைந்துவிடுகிறார் ஹஸீன்.

  கதையில், சில இடங்கள் இப்படிச் சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் அது அவருடைய கதை என்பதால் அதை அவருக்கு மட்டுமே சொல்லிவிட்டேன்.

  ஆங்கிலப் பொது மொழியில்
  கிடைக்கப்பெற்ற இக் கதையில், ஹஸீனும் ஒரு பாத்திரமாக உள்ளிருந்தாலும்; அவர் வெளியேதான் இருந்து கதையை கவனித்திருக்கிறார் என்பது சிறப்பு.

  கதை – காலத்தே பேசியிருக்கிறது.

  ———————————
  அஸ்வர் மொஹிடீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *