அறிமுகம் :

 

பின்நவீனத்துவம் என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் உருவாகிய கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனை சார்ந்த போக்காகும். நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதிய சிந்தனைப் போக்கு நவீனத்துவம் என்றால் அந்தப் போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் சிந்தனையே பின்நவீனத்துவம்  என்று பெயர் பெற்றது.

 

இவ்வாய்வைப் புரிந்து கொள்ள முதலில் நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவம் சார்ந்த சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். நவீனம் என்ற சிந்தனை தொழில்நுட்பங்களைப் பெருக்கி உலகை ஒன்றாக்கியது| அனைத்தையும் இணைத்தது| தொழிற்சாலைகள், பள்ளிகள், நவீன போக்குவரத்துகள், உலகளாவிய ஊடகங்கள் ஆகியவற்றை உருவாக்கியது| அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண், இருமை பார்ப்பது போன்றவற்றைத் தோற்றுவித்தது. இதன் வழியே புரிந்து கொள்ளப்பட்டதுதான் நவீன சிந்தனையாகும்.

 

ஆனால் இதனைத் தொடர்ந்துவந்த பின்நவீனத்துவம், நவீனத்துவத்தினை பிரதான நான்கு அடிப்படைகளில் மறுத்துரைக்கிறது.

 

  1.  அது எதையும் உலகளாவியதாகப் பார்ப்பதில்லை                                                                                            ஒவ்வொன்றையும்  தனித்தனியாக ஆராய்கிறது.                                                        வட்டாரப்படுத்துகிறது.
  2. அது வரலாற்றை ஒரு அர்த்தபூர்வமான ஓட்டமாக பார்ப்பதில்லை. ஆகவே வரலாற்றை தர்க்கபூர்வமாக அலசும் வரலாற்றுவாதத்தை நிராகரிக்கிறது.
  3. அது இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண் இருமைகளை அது மறுக்கிறது மையநோக்கைஏற்பதில்லை. மையம் அதிகாரம் மூலம் உருவாக்கப்         படுவது என நினைக்கிறது.
  4. எல்லாவற்றையும் முழுமையாகத் தர்க்கப்படுத்தமுடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை என்று அது உரைக்கிறது.

 

பின்நவீனத்துவம் என்ற பதம் முதன்முதலில் 1870 களிலேயே பாவிக்கப்பட்டது. மெய்யியலாளர் நீட்சேயின் நம்பிக்கை இழப்பு அணுகுமுறைகளின் இருப்பிலிருந்து பின்நவீனத்துவம் வேர்கொள்வதாக  அறியக் கிடைக்கிறது. இவர் அறம், ஒழுக்கம் போன்றவற்றின் வன்முறைகளையும் அவற்றினுடைய இருப்பின் அவலங்களையும் வெளிப்படுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தோன்றிய சமூகத் தோற்றப்பாடுகளை விளக்குவதற்குப் எழுந்த புதிய எண்ணக் கருக்களின் பின்னணியில் பின்நவீனத்துவம் பல அறிவுப் புலங்களில் வீச்சாகப் பயன்படுத்தப்பட்டது. பல்துறைசார்ந்த தொடர் சிந்தனையாளர்களின் தோற்றமும் இங்கு நிகழ்ந்தது. பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத் தொடர்ந்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோரின் சிந்தனைகள் இக்கொள்கைக்கு மேலும் உரமூட்டின. வளர்ச்சியடைந்து வந்த மெய்யியல், சமூகவியல், கல்வியியல், கட்டடக் கலையியல், கலை இலக்கியச் சிந்தனைகளை ஒன்றிணைத்து 1970 களில் இஹாப் ஹஸன் பின்நவீனத்துவம் என்ற சிந்தனைக்கு முழுமையான வடிவத்தை வழங்கினார்.

 

தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரையில் 1980 களிலேயே பின்நவீனத்துவம் தீவிர வாசிப்புக்குட்பட்டது. இது குறித்துக் கூறும் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள்,

 

“மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய எதிர்ப்பு நுண்மதியாளர்களுக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற்போன்று இந்நிலையில் பின்னவீனத்துவக் கருத்துக்கள் கிடைக்கப்பெற்றன” (2006:11)

 

என்கிறார். தமிழவன், நாகார்ஜூனன், பிரேம், ரமேஷ் பிரேதன், க பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக் குமாராசாமி, கோணங்கி, ச. ராஜநாயகம், எம். ஜி. சுரேஷ் போன்றவர்கள் பின்நவீனம் சார்ந்து படைப்பாக்கங்களையும் விமர்சன முறைகளையும் முன்வைத்தனர். இதனை எதிர்த்து எஸ்.வி.ராஜதுரை, எம்.ஏ. நுஃமான் போன்ற மார்க்சியவாதிகளும் சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி போன்ற அழகியல்வாதிகளும் எழுதினர். ஞானி போன்றோர் அதை மார்க்சியத்துடன் இணைத்து சிந்தனை செய்தனர்.

 

இலங்கைச் சூழலில் பின்நவீனத்துவம் 

 

இலங்கைச் சூழலில் பின்நவீனத்துவம் பரவலான வாசிப்பைப் பெற்றது 2000 ம் காலப்பகுதிகளிலேயே என்று குறிக்கலாம். கல்வித்துறைப் பின்புலங்கள் மற்றும் இலக்கியத் துறைகளில் இதற்கான அறிமுகங்கள் பரவலாக நிகழ்ந்தன. தீவிர வாசிப்பும் தேடலுமுள்ள இளைய தலைமுறையினரின் எழுத்துச் செயற்பாட்டில் பின்நவீனம் பன்முகம் பெறலாயிற்று. சமகாலத்திற்கு சற்று முன்னர் கோட்பாட்டு அடிப்படை யிலன்றி உதிரிகளாக எழுதப்பட்ட பின்நவீனக் கூறுகள் கொண்ட படைப்புக்களும் இக்காலப்பகுதியிலேயே உற்றுநோக்கப்பட்டன.

 

யுத்தமும் அதனுடனான வாழ்வியல் விசாரங்களும் படைப்பிலக்கியங்களான நிலையில் பின்நவீனச் சிந்தனைகளை உட்செரித்துக் கொள்வதில் இங்கு பாரிய முரண்பாடுகள் தோன்றிருக்கவில்லை. ஆனால் படைப்புக் களைப் புரிவதில் உள்ள பிரச்சினைகள் பற்றியே அதிகம் சிலாகிக்கப்பட்டன. தீவிர சிக்கல் தன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்ற பின்நவீனத்துவ சிந்தனைகள் படைப்புகளில் பல்வேறு வெளிப்பாட்டு உத்திகளுடன் வெளிப்பட்டன. அரசுகளின் எதேச்சதிகாரங்களில் இருந்து தப்புவதற்கும், தமது வீறார்ந்த எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் இங்கு பின்நவீன சிந்தனை பெரும் துணையாயிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

 

பிரதேச ரீதியான வகைப்பாட்டிற்குள் அடங்கும் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பின்நவீனம் சார்ந்த படைப்புக்கள் பலவும் வெளிவந்தமை முக்கியமாக நோக்கப்படவேண்டியதாகும். கவிதையைப் பொறுத்தவரை அது ஏலவே உருவச் சிதைவு, எதிர்ப்புணர்வு, விளிம்புநிலை அவதானம், சிதறுண்ட வடிவம் கொண்ட பல வகைமாதிரிகளைக் கொண்டு இங்கு வேரூன்றியிருந்தது. பின்நவீன கோட்பாட்டு உந்துதல் இன்றி இவைகள் எழுதப்பட்டாலும் இவற்றில் பின்நவீன கூறுகளை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்பதில் தவறுகள் ஏதுமில்லை. பின்நவீனத்துவத்தின் மீது மறுவாசிப்பைக் கோரும் சோலைக்கிளி, என். ஆத்மா போன்றோரின் கவிதைகளிலும் இப்படியான பின்நவீனக் கூறுகளைக் கண்டறியலாம் என்பதும் நோக்கத்தக்கது.

 

மஜீத், த. மலர்ச்செல்வன், றியாஸ் குரானா போன்றோர் பின்நவீனத்துவப் பிரக்ஞையுடன் கவிதைச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். ‘ஏறுவெயில்’, ‘வாழ்வின் மீதான எளிய பாடல்கள்’, ‘ஒரு இலையின் மரணம்’, ‘புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன’, ‘யாரோ ஒருத்தியின் டையரி’ போன்ற தொகுதிகளினூடாக வெளிவரும் மஜீத், இருப்பும் இருப்பின்மையும் சார்ந்த சிறுபான்மைக் கதையாடல்களை உச்சதொனிப்பொருளாகக் கொண்டு தனது செயற்பாடுகளைத் தொடர்ந்தவர். எதிர்ப்பின் குரல் இவரது கவிதைகளில் உரத்தொலிப்பதையும் நாம் கண்டுகொள்ளலாம்.

 

‘தனித்துத் திரிதல்’ கவிதைத்தொகுதி, த. மலர்ச்செல்வனை பின்நவீனத்துவக் கூறுகளோடு அடையாளம் காட்டியதில் முக்கியமானதாகும். சமூக இயக்கத்திற்கு எதிரான தனித்தலைதல் என்பது இவரது கவிதைகள் சொல்லும் சேதியாகும். காலத்தின் கொடூரத்தை தன் கவிப்பிரதிகள் மீதேற்றி வாசிக்கையில் பின்நவீன ‘அந்நியமாதல்’ கூறு மலர்ச்செல்வனின் கவிதைகள் முழுக்க வியாபித்து நிற்கின்றன.

 

பின்நவீன அழகியலை இங்கு முறைப்படுத்தியவர் என றியாஸ் குரானாவைக் குறிக்க முடியும். கட்டுடைத்தல், வடிவமாற்றம் என பல இயங்குதளங்களில் இவர் இயக்கம் கொள்கிறார். ‘வண்ணத்துப் பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம்’, ‘ஆதி நதியில் இருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை’ போன்ற தொகுதிகள் இவரது அரசியல் வாசிப்பின் புதிர் விளையாட்டுகளான எழுத்து முறைமையாகும்.

 

தொடர்ந்தும் எழுதுகின்றவர்களில் றஷ்மியினுடைய கவிதைகளில் பின்நவீனத் துவத்தின் உட்சாய்வுகள் உண்டு. ‘ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு’ இவ்வகையில் முக்கியமான தொதியாகும். கடலின் பல்வேறு முகங்களைத் தரிசிக்கும் யதார்த்த – மீயதார்த்த எழுத்து முறைகளுக்கு இடைப்பட்ட அனுபவத்ததை இவர் தருகிறார். பெண்கள் பற்றிய பல்வேறு கற்பிதங்களை கட்டுடைக்கும் பாங்கு குர்ஷித்திடம் இருந்து வெளிப்படுகிறது. பெண் உடல், மனம் சார்ந்து கேள்விகளை எழுப்பும் அனார் கவனிப்புக்குரியவர். சிறுவர் உளவியலை பல்வேறு புனைவுகளாக்கும் உத்தியை ஜமீல், ஏ.எம். சாஜித் அவர்களின் தொகுதிகள் தருகின்றன. அ.ச. பாய்வாவின் கவிதைகள் பின்நவீன உத்திகளை இழைகளாகக் கொண்டு பின்னப்பட்டவையாக தோற்றம் காட்டுகின்றன. இவர்களோடு அனார், உருத்திரா, ஸர்மிலா செய்யித், டீன்கபூர், அலறி, நபீல், ஜிப்ரி ஹாஸன், ஜெம்சித் ஸமான், அத்னான், பிரகாசக்கவி, றபியுஸ், எஸ். நளீம் போன்றோரின் கவிதைகளில் பின்நவீனத்துவத்தின் பல்வேறு கூறுகள் வெளிப்படுகின்றன.

 

பின்நவீனத்துவத்தின் மீபுனைவான (மெடபிக்ஸன்) கதைகளை எடுத்துக் கொண்டால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. நவீனத்துவம் கூறும் நாவல் என்ற வடிவத்தை இப்புனைவுகள் கட்டுடைப்புச் செய்கின்றன. அவ்வகையில் திசேரா, மஜீத், ஏ.எம். சாஜித் ஆகியோரை முக்கியமானவர்களாகக் குறிப்பிட முடியும். 2004ல் இலங்கையைத் தாக்கிய சுனாமி தொடர்பான தொடர்பறு கட்டுடைப்புச் சித்திரங்களாக திசேராவின் ‘ஏவி விடப்பட்ட கொலையாளி’ அமைகிறது. மஜீதின் ‘கதை ஆண்டி’ சமகால அரசியல், பாலியல் பற்றிய பல்வேறு கதையாடல்களை கட்டுடைப்புடன் விபரித்துத் செல்கிறது. ஏ.எம். சாஜித் அஹமட் இன் ‘பஞ்சபூதம்’ இயற்கையும் மனிதனும் இணையும் புள்ளிகளை முடிவும் தொடக்கமுமற்று சூட்சுமமாக விபரிக்கிறது. ‘இது புத்தன் காலம்’ புத்தரை பல்வேறு கோணங்களில் மறுவாசிப்புச் செய்கிறது.

 

இனப்பிரச்சினையை மையப்படுத்தி சண்முகம் சிவலிங்கம் எழுதிய ‘காலடி’ என்ற குறுநாவலும் பின்நவீனக் கூறுகள் கொண்டமைந்ததாகும். கதைசொல்லல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி எம். அப்துல் றஸாக் எழுதிய ‘வாக்குமூலம்’, புனிதங்களைத் தகர்த்து சுய வாக்குமூலங்களை ஒப்புவிக்கும் பாணியில் அமைந்ததொன்று.

 

மேற்குறித்த மீபுனைவுகள் மொழியைச் சிதைப்பதும், கதைகளைச் சிதைப்பதும், மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவதும் ஆன புதிர்த்தன்மை கொண்டவையுமாக அமைந்திருக்கக் காணலாம். ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாகப் பின்நவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது எனின் இங்கு எழுந்த இப்படைப்புக்களுக்கும் இது நன்றாகவே பொருந்தும்.

 

பின்நவீன சிறுகதைப் புனைவுகளைப் பொறுத்தவரையில் முக்கியமான பல பரிசோதனை முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதனை நோக்கலாம். ஜிப்ரி ஹாஸனின் ஒரு கூற்று பின்வருமாறு அமைகிறது.

 

“இலங்கையைப் பொறுத்தவரை வடக்கு – கிழக்குப் படைப்பாளிகளே பின்னவீனச் சிறுகதைகளை பரிசோதனை முயற்சிகளாக எழுதத் தொடங்கினர். கிழக்கிலங்கையில் பின்னவீனச் சிறுகதை முயற்சிகள் இரண்டாயிரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே நவீன தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் ஓரிரு சிறுகதைகள் பின்னவீனத் தன்மை கொண்ட கதைகளாக தோற்றங்கொண்டிருந்தன. எஸ். நஸிருத்தீன், தீரன் ஆர். எம். நௌஸாத் போன்றோரின் கதைகளிலும், உமாவரத ராசனின் எலியம் போன்ற கதைகளிலும் இந்தப் பண்பு அப்போதே வெளிப்படத் தொடங்கி இருந்தது….. இரண்டாயிரம் காலப்பகுதியில் அதிகமாக எழுதப் புறப்பட்ட கிழக்குப் படைப்பாளிகளே கூடுதல் பின்னவீனத் தன்மை கொண்ட கதைகளை கிழக்கிலங்கையில் எழுதினர்.

 

அக்கரைப்பற்றிலிருந்து வெளிவந்த ‘பெருவெளி’ என்ற சஞ்சிகை இதற்கான களத்தை தீவிரமாக படைப்பாளிகளுக்கு உருவாக்கிக் கொடுத்தது. பெருவெளியிலும், பெருவெளிக்கு வெளியிலும் இரண்டாயிரத்துக்கு பின்னர் கிழக்கில் தமிழ்ச்சிறுகதைகளின் ஒரு புதிய அலையாக பின்னவீனச் சிறுகதைகள் எழுச்சியுறத் தொடங்கின” (2018:49)

 

மஜீத், மிஹாத், எம். அப்துல் றஸாக், ஏ.எம். சாஜித் அஹமட், றபியுஸ், பர்ஸான் ஏ.ஆர், ஜிப்ரி ஹாஸன் போன்றோர் பெருவெளியின் வருகையுடன் பின்நவீனக் கூறுகள் கொண்ட சிறுகதைகளை எழுதினர். ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டம், பரவலான எதிர்ப்புணர்வு, சிறுபான்மைக் கதையாடல், இலக்கிய அரசியலை கட்டுடைக்கும் வாதங்கள் என்பன இவர்களின் கதைகளில் பொதுவாக வெளிப்படும் கூறுகளாக இருந்தன.

 

பெருவெளிக்கு வெளியேயும், பெருவெளிக்கு முன்னரான காலத்திலும் பின்நவீனம் சார்ந்து எழுதியவர்களுள் திசேரா, த. மலர்ச்செல்வன், அம்ரிதா ஏயெம், கௌரிபாலன், ஹஸீன் போன்றோர் முக்கியமானவர்கள். ‘கபாலபதி’, ‘வெள்ளைத் தோல் வீரர்கள்’, ‘யோவான் 14:2’ போன்ற தொகுதி களினூடாக வெளிவரும் திசேரா இன்றுவரையும் பல பரிசோதனை முயற்சிகளை தம் கதைகளில் மேற்கொண்டு வருபவர். ‘பெரிய எழுத்து’ த. மலர்ச்செல்வனை அடையாளம் காட்டிய தொகுதியாகும். மாய யதார்த்த கதைகளின் நீட்சியாக இவர்களின் கதைகள் அமைகின்றன என்ற பொதுவான கருத்தும் உண்டு. ‘விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்’ மூலம் வெளிவந்த அம்ரிதா ஏயெம் பல கதைகளின் மூலம் பின்நவீனச் சிந்தனைகளை உள்வாங்கியவராகின்றார். கௌரிபாலனின் சில கதைகளிலும் பின்நவீனத்துவத்தை நாம் வாசிப்புச் செய்யலாம். ஹஸீனின் பிற்கால சிறுகதைகள் சிலவற்றில் பின்நவீன எழுத்து முறையைத் தரிசிக்கலாம். அ. ச. பாய்வாவின் கதைகளும் பின்நவீன உத்திகளைக் கொண்டு உருபெற்றுள்ளன. மூன்றாவது மனிதன், மறுகா, சரிநிகர், புதிசொல் போன்ற இதழ் இயக்கங்கள் இவர்களின் எழுத்துக்களை பிரசுரித்து ஊக்கப்படுத்தின.

 

நவீன தமிழ்ச்சிறுகதையின் புதியதொரு கிளையாக எம்.எம். நௌஷாட்டின் சொர்க்கபுரிச் சங்கதி சிறுகதைத் தொகுதியை வாசிப்புச் செய்யலாம் என்கிறார் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா (2016:16) கதைசொல்லல் முறை, களத்தேர்வு, பாத்திர உருவாக்கம், கதைத்தலைப்புக்கள் என்பவற்றில் பாரம்பரியமான கதைமரபுக்கு எதிராக நௌஷாட் இத்தொகுதியில் இயக்கம் கொள்வது முக்கியமானது. இவரது கதைகள் பற்றிக் கூறும் கலாநிதி க. இரகுபரன் (2016:XXV),

 

“இக்கதைகளில் வரும் களங்கள் பல அன்னிய மானவை. (உ-ம்: கோவண தேசம், வெள்ளிக்குற்றி நாடு) பாத்திரங்கள் அன்னியமானவை. அல்லது இன்ன இனம், இன்ன மதம் என்று இனம் காணமுடியாதவை. (உ-ம்: பிர்வா நப்லா, டாக்டர் யுக்ஸியி, ஸைமினா) மொழி கூட அன்னியமானதே. தற்கால தமிழ் புனைகதைச் சூழலுக்கு உரியது அல்ல. செந்தமிழ் பாங்கானது. ஆயினும் இச்சிறுகதைகளில் கூற முற்படும் விடயங்கள் அன்னியமானவை அல்ல. நமது பிராந்தியங்களுக்குச் சிறப்பானவையாகவும் உலகப் பொதுமையானவையுமான பல விடயங்கள் இவற்றிலே பேசப்படுகின்றன. ஆனால் புதுவிதமாகப் பேசப்படுகின்றன. அல்லது மறைமுகமாகப் பேசப் படுகின்றன. சில கதைகளில் விலங்குகள்தான் கதாபாத்திரங்களாக வருகின்றன. ஆனால் அவை மனிதரின் குறியீடுகளாகவே கொள்ளத்தக்கன. ஜோர்ஜ் ஓர்வல் (George Orwell) எழுதிய விலங்குப் பண்ணையில் வரும் விலங்குகள் போல” என்கிறார்.

 

“பின்நவீனத்துவ அம்சங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து புதியதோர் கலகக்குரலுடன் இத்தொகுதி யானது இத்தால் தலை நிமிர்கின்றது”

 

என்று மன்சூர் ஏ. காதிர் (2016:XXViiii) குறிப்பிடுகின்றபோதும் இத்தொகுதியானது பின்நவீன அம்சங்களைக் கொண்ட மைந்த தொகுதி என்பதும், இதில் வரும் பல கதைகளுக்கான வியாக்கியானம் பின்நவீன ஒளியிலேயே நிகழ்த்தப்பட வேண்டும் என்பதும் குறிக்கத்தக்கது.

 

மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் மேற்கொள்ளப் பட்ட பின்நவீன படைப்பாக்கச் செயற்பாடுகளோடு இங்கு தோன்றிய பின்நவீன திறனாய்வு அணுகுமுறைகள் பற்றியும் நாம் மனம்கொள்ள வேண்டும். படைப்புக்களை பின்நவீன நோக்கில் வாசிக்கவும் அவற்றை மதிப்பீடு செய்யவுமான முறையியல் இதனோடு தோற்றம் பெற்றது. இவ்வகையில் றியாஸ் குரானா, எம். அப்துல் றஸாக், ஜிப்ரி ஹாஸன், மிஹாத், ஜெஸ்மி எம். மூஸா, அம்ரிதா ஏயெம் போன்றோர் படைப்புக்களில் பின்நவீனக் கூறுகளை அடையாளம் கண்டு புதியதொரு விமர்சன முறையியலை வளர்த்தெடுக்க முனைந்து வருகின்றனர்.

 

முடிவுரை :

 

ஈழத்து இலக்கியச் செல்நெறியைப் பொறுத்தவரையில் கிழக்கிலங்கை – குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் பின்நவீன இலக்கியச் சிந்தனைகளை பெருவாரியாக உள்வாங்கி  படைப்பாக்கங்களை நிகழ்த்தியதோடு மட்டுமன்றி பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் அறிய முடிகிறது. குறிப்பாக இளம் தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் பின்நவீனத்துவ வாசிப்பு முறைகளை ஆர்வத்துடன் பயில்கின்றனர். படைப்பாக்கங்களையும் மேற்கொள்கின்றனர். இதனோடு ஒன்றிணைந்ததான பின்நவீனத்துவ ஆய்வு முறையியல் ஒன்றும் இவர்களால் உருவாகி வருகின்றது. இது இப்பிராந்தியத்தின் இலக்கிய வளர்ச்சியை கட்டியம் கூறும் முன்னறிவிப்பாகும்.

 

உசாத்துணைகள் :

 

  1. கலாநிதி சபா ஜெயராசா, (2006) பின்னவீனத்துவத்தைவிளங்கிக் கொள்ளல்,  இலங்கை முற்போக்கு கலை    இலக்கியப்பேரவை, கைலாசபதி ஆய்வு வட்டம்.

 

  1. ஜிஃப்ரி ஹாஸன், (2018) விரியத் துவங்கும் வானம், எதிர்ச்சொல் பதிப்பகம், கே.கே. வீதி, வாழைச்சேனை – 05

 

  1. எம்.எம். நௌஷாட், (2016) சொரக்கபுரிச்சங்கதி, தேசியகலை இலக்கியத் தேனகம்,                 சம்மாந்துறை

 

  1. றமீஸ் அப்துல்லா, (2016) பிரவாகம், தொகுதி 1, மொழித்துறை, தெ.கி.ப.க.

 

  1. www.djthamilan.blogspot.com,. எஸ். சுதர்சன்.

 

***

 

-எம். அப்துல் றஸாக்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *