ஆம்பல் குளம். குளத்தின் முகப்பில் பதினாறு அடுக்குப் படித்துறை. ஆனால் கொஞ்சப் படிகள் தான் தெரிந்தது. மீதி மூழ்கியிருந்தது. பின்னில் வயல் வரப்பைத்தாண்டி மேகஞ்சூழ்ந்த மலை அமைப்பு. மழை தருவித்த மேகங்கள் அங்கே அந்த மலைகளில் தஞ்சம் கொண்டு விட்டது போல. மழைப் பெய்து அடங்கிய வானிலை. மண்ணைவிட்டு எழுந்த வாசம் மித வெயிலால் அடங்கிக் கொண்டிருந்தது. ஆனால் காற்றில் ஈரம் கொஞ்சம் எஞ்சியிருந்தது. தடாகத்தில் நீர் ததும்பி நின்றது. நீரின் நிறம் பச்சை என்றளவிற்கு அந்த தடாகம் முழுதாக பச்சை வனப்பு. தனித்தனித்தீவுகளாய் நின்றிருந்த செவ்வல்லி இலைகளும் வெங்காயத் தாமரைகளும் அடர்ந்து அந்த தடாகத்தை தனதாக்கிக்கொண்டு ஆக்கிரமித்திருந்தன. மழை அடங்கியதனால் தடாகத்தைச் சுற்றித் தட்டான்கள் பறந்தன. செவ்வல்லிக் கூம்புகளில் தனக்கான புகலிடத்தைத் தேடி அமர்ந்தபடி இருந்தன. அக்குளத்துக்கு இடப் பக்கமாக கைவிடப்பட்ட நிலையில் தூண்களோடு நின்றிருந்த ஒரு பண்டைக்கால மண்டபம். முன்னொரு காலத்தில் எப்போதோ இக்குளத்தைச் சுற்றியும் அந்த மண்டபம் இருந்திருக்க வேண்டும். இப்போதும் அது இருந்ததற்கான தடயமாக அதன் தரைத்தளம் இடிந்த சிதிலங்களாக அக்குளத்தை சுற்றி ஆங்காங்கே தென்படும். ஆனால் இன்று குளத்தைச் சுற்றி நாலாப்பக்கமும் நாணல் மண்டி கோரை ஏறி கிடக்கிறது. வெறும் இந்த படித்துறை மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது.
அப்போது தான் அவள் வந்தாள். பச்சை நிற பார்டரில் தங்கச் சரிகை இழையோடியிருந்த மஞ்சள் நிறச் சேலை அணிந்திருந்தாள். ரவிக்கையும் அதே பச்சை நிறப் பட்டையின் நிறம் தான். ஆனால் வேறு வித வேலைப்பாட்டோடு இருந்தது. தலைக்கு குளித்து கூந்தலில் இழைந்த அரை ஈரத்தோடு இருந்தாள். இன்று காலை தான் இரயிலில் ஊருக்கு வந்து இறங்கியிருக்கிறாள். சனி ஞாயிறு விடுப்புக்கு வந்திருக்கிறாள்.

அவளது அப்பா தான் “நான் அவன பாக்கணும்பா” என்று கேட்டவளிடம் “இத சாக்கா வச்சுட்டு, அவனப் போய் பார்த்துத்துட்டு வந்துடு” என்று அனுப்பிவைத்திருந்தார். அவனுக்கு தொலைபேசியிலும் குறுஞ்செய்தியிலும் அவள் முன்பே அழைப்பை விடுத்திருந்தாள். அதற்கு அவனது எதிர்வினை “ஹ்ம்ம் பாக்கலாம்” அவ்வளவு தான். இப்படி ஒரு ஜீவன். “இப்படி ஒரு ஜீவன். ஆனாலும்…” என்று அவள் ஏற்றுக்கொண்டவன் தான் அவன்.
அந்தச் செவ்வாம்பல் குளம் அவளுக்கு என்றுமே அணுக்கமானது. அவனிடம் குறுஞ்செய்தியில் தான் அங்கே தான் காத்திருக்கப் போவதாகச் சொல்லியிருந்தாள்.
அன்று முதன்முதலாக குளத்தை எதிர்க்கொண்ட போது அவளுக்கு ஒரு ஏமாற்றம். அவளுக்கு அது வாடிக்கையான ஏமாற்றம் தான். ஆனால் இன்றாவது அது வேண்டாமே என்று எண்ணினாள். இன்றும் அந்த செவ்வல்லி மலர்கள் ஏன் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்? இதழ் விரித்து நின்றிருந்தால் என்ன கேடு இவற்றுக்கு?
அப்பாவுடன் சிறுவயதில் அந்த தடாகத்தில் நீந்தி விளையாடியிருக்கிறாள். நன்றாகவே நீந்தக்கூடியவள். அப்பா தான் அவளுக்கு நீச்சல் கற்றுத்தந்தார். சற்று பெரிய பெண் ஆன பிறகு, படியேறித் தலையை துவட்டிக் கொண்டிருந்த அப்பாவிடம்,
தானாகவே நீந்தி சென்று தூரத்தில் இருந்த அல்லி மொட்டுகளைத் தண்டோடு பறித்து வந்து தருவாள். அப்பாவும் அவளைக் கட்டி அணைத்து முத்தமிடுவார்.
இன்று அவனுக்காக காத்திருக்கிறாள். “திருவாளத்தான். இவன் எப்பயுமே இப்டி தான் லேட் பண்ணுவான். அடுத்தவங்க காத்திருப்பு’ல அப்படியொரு சுகங்காணற ஜென்மம்” என்று அவனை ஒருமுறை திட்டிக்கொண்டாள்.
இன்றும் அல்லி அந்த தடாகத்தில் வழிந்து கிடக்கிறது. அவளுக்கு அதே போல மீண்டும் நீந்திச் சென்று அல்லி மொட்டுக்களைப் பறித்துக்கொண்டு வந்து வரப்போகிறவனிடம் தரலாம் என்றெண்ணம் இருந்தது. ஆனால் மாற்றாடை இல்லையே. இருந்தாலும் இறங்கி விடலாம் என்று தோன்றியது. ஆனால் அவனை முழு ஈரத்தோடு எப்படி எதிர்கொள்வது?
படியில் இறங்கப் போனவளின் பார்வை இடப்பக்கமாய் திரும்ப சிதிலமடைந்து நின்றிருந்த அந்த மண்டபத்தை ஏறிட்டாள். அங்கு சென்று விட்டு வரலாம் என்று அந்த ஒத்தையடிப்பாதையைத் தேடினாள். அப்படியொன்றை கண்டடைந்து விரைவாக நடந்தாள். ஆனால் அது எங்கோ மண்டபத்தின் பக்கவாட்டுச் சுவரை முட்டி நின்றது. மண்டபத்தின் முகப்போ குளத்தை நோக்கி இருந்தது. ஆளுயரப் புதரைத் தாண்டி அவளால் போக முடியாமல் போனது.
மீண்டும் துவங்கிய இடத்துக்கே வந்தாள். அருகில் ஒரு ஆலம் விழுது தரை வரை தொங்கிக் கொண்டிருந்தது. அதை இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு கரைமேட்டில் ஒரு காலைப் பதித்து வைத்துக் கொண்டு நின்று அந்த மண்டபத்தின் முகப்பை எக்கிப்பார்த்தாள்.
மண்டபத்தின் மேல்தளத்தில் எல்லாம் செடிகளும் கொடிகளுமாக மண்டிக்கிடந்தன. அருகில் இருந்த ஆலமரத்தின் விழுதொன்று அந்த மண்டபத்தின் பின்சுவரை முட்டி விரிசலிட்டு ஊடுருவி அதன் வேர்நுனி கரைப்பக்கம் விளிம்பு வரை தெரிந்தது. அந்த இடிந்த சிதிலத்தை அப்படியே தூக்கி அப்புறப்படுத்தவிடுமோ அது?
பின்னர் ஒன்றைக் கவனித்தாள். அந்த வேர் பரவலில் இருந்த ஒற்றை வேர் அந்த மண்டபத்தை தாங்கி நின்ற ஒரு தூணில், அந்த தூணில் வடிக்கப்பட்ட ஆடலழகியின் இடையை தழுவிச் சென்றது . அதற்கு அடுத்திருந்த ஐந்தாறு தூண்களைப் பார்த்தாள். அதிலிருந்த அழகிகளும் ஒவ்வொரு ஆடல் நிலையில் தான் இருந்தார்கள். அவர்களை அக்காக்கள் என்று தான் இவள் அழைப்பாள். சிறுவயதில் எதிர்வீட்டு கனிமொழியோடு சேர்ந்து இங்கே ஒளிந்துபிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் போது அவள் இவர்களை இப்படித்தான் அழைத்தாள். அப்போதிலிருந்தே அவர்கள் இவளுக்கு அக்காக்கள் தான்.
இப்போதும் அவர்கள் அக்காக்களாகவே நீடிக்கின்றனரே எப்படி? அவர்களின் நேரும் கண்களும், நெற்குவை மார்களும், துடிஇடை அகல்வும் தூய்மணிச் சதங்கைகளும் கூட அப்படியே தான் நீடிக்கின்றன. கல்லுக்கு காலம் இல்லை. அதனால் வயதில்லை. ஒருவேளை அதனாலோ?
குளத்தைப் பார்த்த போது அதன் பச்சைப் பரப்பில் அந்த மண்டபத்து பிம்பம் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்தாள். காற்றில் நீர்ப் பரப்பு நெளியும் போது அந்த பிம்பத்தில் அக்காக்கள் மெலிதாக ஆடத்துவங்கினார்கள். அவர்கள் எதனாலோ விடுவிக்கப்பட்டதாகத் தெரிந்தார்கள். ஆனால் அந்த ஒரு அக்காவால் மட்டும் ஆட இயலவில்லை. அந்த வேர் அவளை கட்டி அவளது ஆடலை இப்படி நிறுத்தி வைத்திருக்கிறதே? அந்த வேரின் மேல் கோபம் எழுந்தது அவளுக்கு. பிறகு அந்த விழுதின் மேல். அது அப்படியே நீண்டு அந்த மரத்தின் மேலும் மொத்தக் கோபமும் வந்தது. ஒரு கணத்தில் தான் பற்றி இருப்பதும் அதே அந்த மரத்தின் விழுதொன்றை தான். தனது இந்தப் பிடி தான் அந்த அக்காவை மேலும் இறுக்குகிறதோ என்னவோ என்று எண்ணி திடுக்கிட்டு அவ்விழுதைப் பற்றின கையை விலக்கினாள். அவளுக்கு அவள் மேலேயே கோபம் வந்தது.
நிலை மீண்டு மீண்டும் படித்துறைக்கே வந்து படித்துறையின் பக்கவாட்டு சுவரில் சாய்ந்து நின்றுப் பார்த்தாள். அட இங்கிருந்து கூட அந்த மண்டபத்தின் முகப்பு நன்றாகவே தெரிந்தது. கண்களை இடுக்கி மெலிதாக தலையில் அடித்துக்கொண்டாள். பின்னர், கைகளைக் கட்டிக்கொண்டுப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.
நீர்த்திரையில் அக்காக்களின் பிம்பம் இன்னும் நெளிந்து கொண்டிருந்தன. அவர்கள் நீரின் தாளத்திற்கு இணங்க ஆடிக்கொண்டிருந்தனர். செவ்வல்லி இலைமடல்களும் ஆகாயத்தாமரைக் கொடிகளும் அவர்களோடு இணைந்து கொண்டன. ஆனால் அல்லி மொக்குகள் மட்டும் ஆடாமல் நின்று அதன் விருந்தாளிகளான தட்டான்களைத் தன்னை விட்டு அகலாமல் பார்த்துக்கொண்டன. அது மட்டும் எப்படி?
அவள் தன்னையே மறந்து அங்கு நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு எப்போதோ அவளுக்கு அவளையும் அவற்றோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியிருக்க வேண்டும். தன்னிச்சையாகவே சுவரை விட்டு இரண்டடி பின் நகர்ந்தாள். கைகளை தளர்த்திக்கொண்டு அவளது சேலையின் தலைப்பை துழாவி பின்பக்கமாய் கொண்டு வந்து தன் இடப்பக்கம் இடையில் சொருகிக்கொண்டாள். அவள் பாதங்கள் தெரியும்படி சேலையை சற்று உயர்த்தி கட்டிக்கொண்டாள். தன் வலக்கால் கட்டைவிரலைக் கொண்டு படியோடு படியாக தீற்றி அக்காலை தன் இடக்காலுக்குப் பின்னால் கொண்டு சென்றாள். பின்னர் தன் இருகைகளையும் மேலே உயர்த்தி விரல் கோர்த்து இடை சரித்து நின்றாள்.
அவளுக்கு காற்சதங்கைகளின் ஓசை கேட்க ஆரம்பித்தன. அந்த ஓசையில் தன் பங்கும் இருப்பது போல அவளும் தொடர்ந்து ஆடினாள். மேனி வியர்த்தது. ஆனால் காற்றின் ஓட்டம் அறுபடாது இருந்ததால் அவளும் நிறுத்தவில்லை. தெளிந்த வானம் இவர்களைப் பார்த்து களித்துக்கொண்டிருந்தது. அதன் தெளிந்ததன்மையே அதன் களிப்பைக் காட்டிக்கொண்டிருந்தது.
மெல்ல காற்று தன்னை அங்கே நிறுத்திக்கொண்டது. நீர் நெளிவும் அலைகளும் அடங்கிய போது தன்னை யாரோ பார்ப்பது போல தோன்றியது. சட்டென உதறலெடுத்தவள் போல தன் ஆடலை அவள் நிறுத்திக்கொண்டாள். அந்த அக்காக்களும் ஆடலை நிறுத்திக்கொண்டுவிட்டார்கள்.
ஒருவேளை அவன் தான் வந்துவிட்டானா? சுற்றியும் முற்றியும் பார்த்தாள். வெட்கம் உடலேறத் தொற்றிக்கொண்டது. இருகைகளைக்கொண்டு கண்களைப் பொத்தி நின்றாள். விரலிடுக்கால் பார்த்தாள். ஆனால் எவரும் வரவில்லை. வேரால் கட்டிப் போடப்பட்டிருந்த அக்காவைப் பார்த்தாள். மற்றவர்களையும் பார்த்தாள். அவர்களும் உறைந்து போய் தான் இருந்தனர். ஆனாலும் அவள் மேல் இன்னும் எவருடைய பார்வையோ படுவது போல உணர்ந்தாள். எச்சரிக்கை உணர்வோடு இன்னும் கொஞ்சம் படியிறங்கினாள்.
நீரில் தன் மஞ்சள் பிம்பம் தெரிவதைக் கண்டுகொண்டுவிட்டாள். அது தான் காரணம். அது தான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. சர சர வென்று இறங்கி தன் இடக்கால் பாதத்தினால் அந்த நீர் தடத்தைத் தீற்றினாள். அவள் பிம்பம் கலைந்துச் செல்வது வரை அப்படிச் செய்தாள்.
நூல் கட்டி இழுக்கப்பட்டது போல எங்கிருந்தோ ஒரு மேகக் கூட்டம் வானத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. வெயில் சற்று தாழ்ந்தது. ஒளி கொஞ்சம் மங்கியதில் அவளது பிம்பத்தின் இடத்தை பச்சையம் மீண்டும் எடுத்துக்கொண்டது. வலக்கையை தன் மாரின் நடுவில் வைத்து அப்பாடா என்பது போல நீள் மூச்சுவிட்டாள். அது அவளைக் கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளச் செய்தது.
பின்னர் கீழிருந்தவாறு படிக்கட்டுகளை விரல்சுட்டிச்சுட்டி எண்ணினாள். எட்டாம்படி வரை நீர் நிரம்பி இருக்கிறதென ஒருமுறை ஊர்ஜிதப்படுத்திகொண்டாள். அதற்கு கீழே இன்னும் எட்டுப் படி ஆழம். மேலும் சென்றால் சகதியில் சிக்குறலாம்.
படிக்கட்டில் நின்றுகொண்டே தனக்கு இரண்டடி தூரத்தில் குளத்துப் பரப்பில் இருந்த பிளவுண்ட அல்லியின் இலை மடல்களில் நின்று நலுங்கும் நீர்த்துளிகளைக் கண்டாள். அவற்றை அப்படியே ஒருசேரக் கோர்த்து தன் கழுத்தில் கட்டிக்கொண்டுவிட்டாள் என்ன?
அந்தத் திவலைகளின் மிணுக்கம் இல்லை நலுங்கல் தான் அவளை இன்னும் ஈர்த்தது. தான் அணிந்திருக்கும் முத்துமாலையை எடுத்துப்பார்த்துக்கொண்டாள். அதில் அந்த நலுங்கலை வரவழைக்க முடியாது தான். முகம் சுருங்கினாள்.
அந்த இலை மடல்கள் ஏன் அவற்றை இப்படி விட்டுவிடுகின்றன? நீரின் பரப்பின் மேல் தான் அவையே நின்றிருக்கின்றன. ஆனால் அவை ஏன் அந்த நீரின் அச்சிறு துளியை பாரமாகக் கருதுகின்றன? அந்த வேண்டாவெறுப்புத் தனத்தை அவளால் புரிந்துமுடியவில்லை.
அவள் நினைத்துக்கொண்டிருக்கும் போதே எதிரில் இருந்த இலைமடல் தன் மேல் மினுங்கிய ஒரு துளி நீரை குளத்தில் நழுவவிட்டது. அவள் கையை நீட்டி, மனதிற்குள்ளேயே “வேண்டாம், வேண்டாம்” என்று அரற்றிக்கொண்டிருந்தாள். இனி அந்தத் தனித்துளியை இந்த மொத்தப்பெருக்கில் எப்படி கண்டடைவது என்கிற வருத்தம் அவளிடம் தென்பட்டது.
இது அந்த பிளவுண்ட இலைமடலின் அகங்காரம் தான். நீர்த்துளி சிறிதினும் சிறிதெனினும் தன்னளவில் முழுமையானது. ஆனால் இந்த பிளவுண்ட மடலால் அந்த முழுமையை அடையவே முடியாது தான். முழுமையின்பால் ஏற்படும் முழுமையடைய முடியாமையின் வன்மம் தான் இது. வேண்டுமென்றே அந்த இலைத் தளத்தின் மேல் கைகளைக்கொண்டு அளைந்து குளத்து நீரை அள்ளித் தெளித்தாள்.
சலனம் அடங்கியதும் அப்பச்சை நீர்பரப்பின் மேல் தளும்பி தன் மஞ்சள் பிம்பம் மீண்டும் தெளிந்து வருவதைப் பார்த்தாள்.
தான் பிம்பப்படும் அக்கணங்களை சிதறலுறாமல் கூர்ந்து கண்காணித்து வந்தாள். அப்போதெனப் பார்த்து நீரில் அலைகளே எழவில்லை. சில கணங்களிலேயே அந்த நீர்ப்பரப்பு அவளை முழுதுமாக பிம்பப்படுத்திக் காட்டியது. அதனைக் கண்டதும் அவள் இதழில் ஒரு மர்மப் புன்னகை எழுந்தது. அவள் அந்தப் புன்னகையினை எப்படி மர்மமாய் வைத்துக்கொள்ள முயற்சித்தும் பயனில்லை. பிம்பமும் அப்புன்னகையை அவளுக்கு திருப்பி வழங்கியது.
தான் முழுமையுற்றதாக உணர்ந்தவள் நீரில் தெரிந்த தன் பிம்பத்தை குனிந்து பாந்தமாய் தொடச்சென்றாள். பின்னர் தொடாமல் விலக்கிக்கொண்டாள்.
“நானே தான் நீ” என்றாள்.
“எழுந்து வா” என்றாள், புன்னகை மாறாமல்.
இதே புன்னகையுடன் தான் வருபவனையும் எதிர்கொள்ள வேண்டும் என்று அவளுக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.
உட்கார வேண்டுமென்றிருந்தது. அந்த எட்டாம் படியின் பாசியிலேயே தன் கால் பாதங்களை நன்றாக பதித்துக் கொண்டு பின்னிருந்த படிக்கட்டில் தன்னை அமர்த்திக்கொண்டாள்.
தூரத்தில் இருந்த அல்லிமொட்டுகளையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அக்கூம்புகளில் அத்தனைத் தட்டானும் அமர்ந்து தேனுறிந்தன. அந்தக் கூம்புத் தட்டான்களை அவள் வந்தபோதிலிருந்தே கவனித்து வந்தாள். நீர்ப்பரப்பின் மேல் ஏற்பட்ட அத்தனை சலனங்களினாலும் அவற்றை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவையும் சிறகோட்டாமல் கூம்பு முனைகளில் அசையாமல் நின்று தேனுறிந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் ஒரு தட்டான் மட்டும் தனக்கு இடமில்லாமல் அலைந்து கொண்டே இருப்பதைக் கண்டாள். ஒருமுறை அவளையும் சுற்றிப் பறந்தது அது.
நீர்ப்பரப்பிலிருந்து குளிரை ஏற்றிக்கொண்டு குளக்கரைக் காற்று மீண்டும் ஒருமுறை அவளைத் தழுவியது. இடப்பக்க காதோர மயிர் பிசிறல் காற்றில் அளவளாவியது. எடுத்து காது மடலுக்குப் பின் சொருகிக்கொண்டாள்.
நீர் சலனித்து அல்லி மடல்களின் மேல் நீர்த் துளிகளை வீசியது. அத்துளிகளில் உயிர் குடிகொண்டு விட்டதா என்ன? அந்த உயிர்த்தனத்தால் தான் அவை கிடந்து துடித்துடிக்கிறதா என்ன? மீண்டும் கூம்புத் தட்டான்களை ஒருமுறைப் பார்த்தாள். அவற்றை யாரோ அம்மலர்களோடு ஒட்டிவைத்துவிட்டார்களா என்ன? அசைவிலிருந்து அசைவின்மைக்கும் அசைவின்மையிலிருந்து அசைவுக்குமான இந்தப் பரிமாற்றம் எப்படி நிகழ்ந்தது? ஒன்றை மற்றொன்று நிறைக்கிறது. காற்று தந்தியை மீட்டுவது போல அந்த குளத்தை மீட்டிக்கொண்டிருந்தது.
நீரின் அலைவட்டங்கள் தன் காலைத் தழுவித் தழுவிப் போவதை அவள் கவனித்தவளாகவே இல்லை. ஏதோ ஒரு யோசனையில் தன்னை ஒளித்துக்கொண்டவள் போலத் தெரிந்தாள். அக்குளத்தில் தளும்புவதும் தான் தான் அந்தத் தளும்பல் தீண்டிக் கலைக்கப்படுவதும் தான் தான் என்று அவள் உணர்ந்துகொண்ட போது அவளுக்குள் அக்கேள்வி எழுந்தது.
இவையெல்லாம் எதன் நிமித்தம் நிகழ்கிறது? ஆனால் அவளுக்கு அந்த நிமித்தம் வேண்டியதாகவே படவில்லை. இந்தத் திளைப்பு அது மட்டுமே போதுமாக இருந்தது. தானும் இல்லை தன்நிமித்தமும் இல்லை ஆனால் திளைப்பு மட்டுமே எஞ்சியிருக்கக் கூடுமோ? ஞாலப்பெருந்திளைப்பு. அதுவே நீர்த் துளியில் உயிர் ஏற்றியும் தட்டானில் உயிர் இறக்கியும் ஜோடித்துக் காட்டுகிறதா?
காலில் ஏதோ ஒரு வித குறுகுறுப்பினை உணர்ந்தாள். அவள் வந்தமர்ந்த அடுத்த நொடியிலிருந்தே குளத்து மீன்கள் அவள் பாதவிரல்களை வட்டமிட்டிருக்கவேண்டும். அல்லித்தண்டை உறிஞ்சுவது போல அவை அவள் பாதங்களைச் சுற்றி உறிஞ்சுக்கொண்டிருந்தன. அம்மெல்லுறிஞ்சலின் நாழிகையில் அவள் தன் பாதங்களில் பதிந்துகொண்டிருந்த அத்தனை மீன்வாய்களையும் தனித்தனியாய் உணர்ந்து கொண்டிருந்தாள். அலாதியான கூச்சம். விட்டு அகன்று சென்றுவிடக்கூடாதது என்பது போல. கண்கள் தளர்ந்து சொருகி இமைகள் சரிந்தன. அவளுக்காவது பரவாயில்லை. அல்லிக்கு மீனால் தண்டிலும் உறிஞ்சல். தட்டானால் கூம்பிலும் உறிஞ்சல்.
அவளுக்கு சிறுவயது முதலேயே அந்த ஏக்கம் உண்டு. அதாவது அந்த தடாகத்தில் உள்ள அல்லிகளை அவள் வெறும் மொட்டுகளாகவே தான் கண்டிருக்கிறாள். மலர்ந்து பார்த்ததே இல்லை. ஒருமுறை அப்பாவிடம் அதைக் கேட்க “அல்லி நிலவொளியில், இரவில் தான் இதழ் திறக்கும். மலரும்” என்று அவளை சமாதானப்படுத்தியிருக்கிறார். ஒருமுறை பறித்துக்கொண்டு வந்த அல்லி மொட்டுக்களை வீட்டில் கொண்டு வந்து இரவில் மலரச் செய்து காண்பித்து இருக்கிறார். அவள் அதை ஏற்கவில்லை. தடாகத்திலேயே அல்லி மலர்ந்திருப்பதைக் காண வேண்டும் அவளுக்கு. ஒருமுறை பெளர்ணமி இரவில் மகளும் தந்தையும் சேர்ந்து கொண்டு அல்லியை காணச் செல்கிறோம் என்கிற பெயரில் ராத்திருடர்களைப் போல் நழுவிச் சென்றார்கள். அப்பொழுதும் பாச்சா பலிக்கவில்லை. வீட்டிற்குத் திரும்பி வருகையில் இருவரும் அம்மாவிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டனர். இன்றும் எப்போதாவது அம்மா அதனைச் சொல்லிக்கொண்டிருப்பாள். இன்று வரை அது அப்படியே தான் நீடிக்கிறது.
முதல் நாள் இரயிலில் சரியாக தூங்காததால் பின்னம்படியில் ஒருபக்கமாய் தலை சாய்த்து கண் அயர்ந்துவிட்டாள். தொட்டிலிக்குள் ஒரு ஓரமாய்த் துயிலும் குழந்தை போல அக்குளக்கரையில் அவள் துயின்றிருந்தாள்.
ஒரு மணி ஆயிற்று அவள் வந்திருந்து. ஏதோ ஒரு சலசலப்பு கேட்க விழித்துக்கொண்டாள். குளத்து நீரை முகத்தில் அவசர அவசரமாகத் தெளித்துக்கொண்டாள். அப்போது அவளது வலது கண்மை கலைந்திருந்தது. அது அவளை இன்னும் நெருக்கமானவளாக காட்டியது.
‘ஏன் இவ்ளோ லேட்டு’னு கேட்டால் அவன் எந்த ஒரு நொண்டிச் சாக்கும் சொல்லமாட்டான். ‘சாரி’யும் கேட்கமாட்டான். பின்ன எதுக்கு அவன்ட கேட்டுகிட்டு? அழுத்தக்காரன். அப்படியேதான் இருப்பான்.” என்று மனதில் சோழி உருட்டிக்கொண்டிருந்தாள். எனவே அந்த கேள்வியை அவனிடம் அவள் கேட்பதாயில்லை.
படித்துறையில் சரசரக்க இறங்கிய அவன் அவளருகினில் வந்து அமர்ந்துகொண்டான். அவளின் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்துக்கொண்டான். அவள் சற்று சிணுங்கலோடு திரும்பினாள்.
அவன் அவளது முகவாயில் கைவைத்து மறுகையால் அவளது கண்ணிமைகளிலும் புருவ இழைகளிலும் நின்றிருந்த நீர்மைகளை தன் மோதிர விரலால் வான் நோக்கிச் சுண்டிவிட்டான். பிறகு இவ்வாறு ஆரம்பித்தான்.
“வஞ்சியேன் என்றவன் தன் ஊர்உரைத்தான் யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்” என்று இழுத்தான்.
பின்னர் “வஞ்சியான்” என்று ஆரம்பிக்கும் போது அவளும் அவனோடு சேர்ந்துகொண்டாள்.
“வஞ்சியேன்! வஞ்சியேன்! என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வாஞ்சியார் கோ” என்று இருவரும் அழகாய்ச் சேர்ந்து முடிக்கும் போது அவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“யாப்பருங்கலக்காரிகை இல்ல. பன்னண்டாங்கிளாஸ் மனப்பாடச் செய்யுள். மார்க்குக்காக மக்கடிச்ச தமிழ். அப்பலாம் புரியல” என்றாள்.
சட்டென்று அவன் நெஞ்சை விட்டு எழுந்து, தன் இரு கரங்களையும் கொண்டு அவன் கழுத்தை இறுக்கினாள். ஒரு ஆடவன் தான் பத்திரப்படுவதாய் கருதும் தருணமது. ஒரு பெண்ணின் உள்ளங்கை இறுக்கச் சூட்டில் அவன் அடங்கிப்போகிறான்.
“வராம போயிருந்த மவனே உன்ன கொன்னே போட்டிருப்பேன்” என்று அவள் அதரங்கள் அனுசரணை இல்லாமல் எச்சரிக்க அவள் விழிகளோ அவனைக் கிழித்துக் கிடத்தின. சின்ன ஊடுருவல். அவள் சொல்லின் கூர் அவள் விழிகளிலும் தென்பட்டது அவனுக்கு மலைப்பாய் தான் இருந்தது. அந்த விழிகளின் தீட்சண்யம் அவனுக்கே உகந்த ஒன்று என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். பின்னர் வெகுநேரம் அவள் கண்களைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
“என்ன, அப்படிப் பாக்குற?” என்றாள்.
“இருமா, கொஞ்சம் பாத்துக்குறேன்.” என்றான்.
“ம்ம்.. இப்பயாவது சொல்லு” என்றாள் சிறிது நேரத்திற்குப் பிறகு.
‘வாட்டடங்கண் மாதரை நீத்து’ னு எங்கயோ கேள்விப்பட்டா மாதிரி ஞாபகம் அதான் கொஞ்சம்… யோசிக்கிறேன்” என்றான் குறுமுறுவலோடு தலையைத் திருப்பி.
“அப்டீன்னா?”
“இந்த மாதிரி பெரிய பெரிய கண்ணு இருக்குற பொண்ணலாம் தவிர்க்……கணும்…..னு….அர்த்….தம்” என்று சொல்லி முடிப்பதற்குள்
அவன் சட்டை காலரை இழுத்து “கொன்றுவேன்” என்றவள் அவனைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டாள்.
அவனும் “ஒருத்தன இப்படியும் கொல்லலாம், கொள்ளலாம்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே சரிந்தான். சுழன்று கொண்டிருந்த அந்த ஒரு தட்டானும் அதன் அல்லியைக் கண்டுக்கொண்டு அமர்ந்தது. தட்டான் அமரப்பெறாத அல்லி ஒன்று அத்தடாகத்தில் அதுவரை மறைந்து இருந்துகொண்டிருக்கிறது போலும்.
அன்றைய இரவில் அவள் உறங்கவே இல்லை. அவள் வீட்டு விட்டத்தின் ஒளிப்புகும் சட்டகத்தின் வழியாக தெரிந்த நிலவையே பார்த்துக்கொண்டிருந்தாள். நிலவொளியில் அவள் இன்னும் அழகாய் விரிந்திருந்தாள்.

***

-லோகேஷ் ரகுராமன்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *